Monday, September 06, 2010

கருவறை நோக்கி............(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 5 )

வலம் வரும் வழியிலே.......கிழக்குப்பக்கம் முடிஞ்சு தெற்குக்கரைக்கு வர்றோம். வடக்குலே நாம் நுழைஞ்ச பகுதியும் இந்தத் தென்பகுதியும் ஒரே மாதிரி டிஸைனில் தலையில் மணிக்கூண்டோடு நிக்குது. இங்கே தனியா ஒரு சந்நிதி இருக்கு. பாபா தீப் சிங் சந்நிதி. பாபா தீப் சிங் மிகப்பெரிய வீரர். மொகலாய மன்னர்கள் தைமூர் ஷாவும் ஜஹான் கானும் இந்த குருத்வாராவை இடிச்சு, குளத்தை நாசம் செஞ்சுக்கிட்டு இருக்கும் சேதி கேட்டு, அவுங்களைக் கொல்லாமல் விடுவதில்லைன்னு தன்னுடைய (தள்ளாத) 76 வது வயசில் பதினாறு கிலோ எடையுள்ள ரெண்டுபக்கமும் கூர்மையுள்ள வாளை ஏந்திவந்து அவுங்களைப் போட்டுத்தள்ளியவர். இந்த சண்டையில் அவரும் கொல்லப்பட்டார். நடந்த வருசம் 1757. இங்கேயும் மக்கள் பூக்கள் போட்டு வணங்கிட்டுப்போறாங்க. ஒரு தட்டு நிறைய ரோஜா இதழ்களை அங்கேயே வச்சுருக்காங்க.
பாபாவின் வாள், உடை எல்லாம் சந்நிதிமேல் கண்ணாடி ஜன்னலில் காட்சி அளிக்குது.

வடக்குபோலவே தெற்கு வாசல் மணிக்கூடு
நாமும் வணங்கிட்டு நேராப்போய் தெற்கில் போய் மேற்கே திரும்பறோம்.
இடது பக்கம் ஸ்ரீஅக்கல்தகத் ஸாஹிப் (Akal Takhat)னு ஒரு பெரிய கட்டிடம் கொஞ்சம் தள்ளி நிக்குது. கருவறைக்குச் சமர்ப்பிக்கக் காணிக்கைப் பிரசாதம் விற்கும் இடம் ஒன்னு நாம் நடந்துபோகும் பாதையிலே இடதுபக்கம்.

வலதுபக்கம் பிரமாண்டமான நுழைவு வாசல். இதுக்குள்ளே போனால் குளத்துக்கு மேலே இருக்கும் பாலம். பாலத்தின் கடைசியில் கருவறை. தங்கத்தகடுகள் போர்த்திய கர்ப்பக்கிரஹம் இதுதான்.

ஸ்ரீஅக்கல்தக்த் சாஹிப் கட்டிடம்


பிரசாதம் கவுண்டர். நம்ம கோவில்களில் பிரசாதம் வாங்கி நாமே சாப்புடுவோம். இங்கே பிரசாதம் வாங்கி அதைக் கடவுளுக்குப் படைச்சுடணும்.


பாலத்துக்கு நுழைவு வாசல்


நாமும் போய் வரிசையில் நின்னுக்கிட்டோம். பாலத்து ரெண்டு பக்கமும் பளிங்கு அலங்காரத்தூண்களின் தலையில் தங்கவிளக்குக் கூடுகள். பாலத்தை ரெண்டாத் தடுத்தது போல் அகலமா ஒரு வரிசை இடப்புறம். வலப்பக்கம் ரெண்டாள் நிற்கும் அகலத்தில் ஒரு கம்பித்தடுப்பு வரிசை. அதுக்கு அந்தப்பக்கம், தரிசனம் முடிஞ்சு மக்கள் திரும்பி வரும் வழி.
பாலத்துக் கைப்பிடிச் சுவர்கள் (பளிங்கு) மொகல் மன்னர் ஜஹாங்கீர் சமாதிக் கட்டிடத்தில் இருந்து மகாராஜா ரஞ்சீத் சிங் கிளப்பிக்கிட்டு வந்தது.
படம்: வெளியில் வாங்கினேன். இது கொஞ்சம் பழைய படம். ஆனால் விவரங்கள் நல்லாத் தெரியுது.

பாலத்தின் அகலம் 21 அடி. நீளம் 202 அடி. கீழே அழகான டிஸைன்கள் உள்ள பளிங்குத்தரை. அதையெல்லாம் மறைச்சு ஜமக்காளம் விரிச்சு வச்சுருக்காங்க. இல்லேன்னா வெய்யில் நேரத்தில் எல்லோரும் தீ மிதிச்சுக்கிட்டே நிக்கணும். நாங்கள் இடப்புறம் இருந்த அகலவரிசையில் போய் நின்னோம். ரெண்டு நிமிசத்துலே நமக்குப்பின்னே அடைசலா மக்கள். முன்னாலும் ஒரு அடைசல். நல்லவேளை கம்பிக்கூண்டு ஒன்னும் இல்லை. நம்ம வரிசை அசையாமல் நிக்கும்போது, பக்கத்து ரெண்டாள் வரிசை மட்டும் நகர்ந்து போய்க்கிட்டே இருக்கு. திரும்பிப்போய் அங்கே சேர்ந்துக்கலாமுன்னா...... பின்னால் இருக்கும் ஜனக்கூட்டத்தை எப்படித் தாண்டிப்போவது?
கடும் வெயிலுக்குப் பாதுகாப்பா தலைக்குமேல் வெள்ளை நிற ஷாமியானா முழுப்பாலத்துக்கும் போட்டு ஒன்னரை மீட்டர் இடைவெளியில் வரிசைக்கு நாலா மின்சாரவிசிறி ரயில்பெட்டிகளில் இருப்பது போல போட்டு வச்சுருக்காங்க.


பத்து நிமிசத்துக்கு ஒரு முறை நம்ம வரிசைக்கு உயிர் வருது. நாலு எட்டு எடுத்து வச்சுட்டு நின்னுரும். இதுக்கு நடுவில் ஆரஞ்சு வண்ண கொடியோடு ஒரு சின்னக்குழு நம்மையெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி இடம்விடுங்கன்னு விண்ணப்பிச்சுக்கிட்டே ஓரமா வருது. நாமெல்லாம் 'இடமே இல்லாத இடத்தில்' ஒரு பக்கமா சாய்ஞ்சோம். எப்படியோ அவுங்க போனபோது கூடவே கொஞ்ச ஆட்கள் ஒட்டிக்கிட்டே போயிட்டாங்க.!!! நாட்டின் வெவ்வேற பகுதிகளில் இருந்து வந்தவுங்களுக்கு இந்த 'ட்ரிக்' எல்லாம் எப்படி உடனே பிடிபட்டுருது!!!

தப்லா, ஹார்மோனியம் இசைக்கப் பஜனைப்பாடல்கள் இடைவிடாமல் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. கிட்டத்தட்ட ஒரு முக்கால்மணி போல வரிசையில் இருந்துருப்போம். வரிசை நகர்ந்து கருவறை உள்ளெ காலடி வச்சோம். நல்ல சம்கி வேலைப்பாடுகள் செய்த பட்டுத்துணிகளின் மேல் குரு க்ரந்த் சாஹிப். சாமரம் வீசிக்கிட்டே இருக்காங்க. சின்னதா உடலை முன்னும் பின்னும் ஆட்டிக்கிட்டே பெரியவர் ஒருவர் கிரந்தப்புத்தகத்தை வாசிக்கிறார். இடதுபக்கம் ஒரு ஏழெட்டுப்பேர் இசைக்கருவிகளோடு பஜனை பாடிக்கிட்டே இருக்காங்க. வலப்பக்கம் கொஞ்சம் வயசான முதியவர்கள் (எல்லோருக்கும் வெண்தாடி) உக்கார்ந்து சிரத்தையோடு வாசிப்பைக் கேக்கறாங்க.

(இதுவும் வெளியில் வாங்கிய படமே)

ஜனக்கூட்டம் ரொம்ப அருகில்போக முடியாதபடி க்ரந்த்சாஹிப் முன் கொஞ்சம் இடம்விட்டுக் கயிறு கட்டிவச்சுருக்காங்க. காணிக்கைகளா கரன்ஸிகளையும் சில்லறைகளையும் பொதுவா குருத்வாராக்களில் முன்புறம் இருக்கும் விரிப்பில் குனிஞ்சு வைத்து வணங்கி எழுவதைப்போல் இங்கே செய்ய இடமில்லை. கயிற்றுக்கிடையில் காசை தூக்கிப்போடறாங்க.

அங்கே சிலர் கையில் ரூலர் மாதிரி வச்சுக்கிட்டு ஃபேன் காற்றில் பறக்கும் கரன்ஸிகளையும், அங்கங்கே சிதறிவிழும் நாணயங்களையும் அந்தப் பக்கமாத் தள்ளி குவிச்சுக்கிட்டே இருக்காங்க. யாரும் நம்மை நகருன்னு சொல்லாட்டாலும் பின்னால் வரும் கூட்டத்தை உத்தேசிச்சு சில நிமிசங்கள் மட்டுமே நின்னு வணங்கிட்டு இடதுபுற வாசல் வழியாக அந்தக் கூடத்தை விட்டு வெளியே வர்றோம். இதே போல இன்னொரு வாசல் வலது பக்கம் இருக்கு. வேகமாக நகர்ந்த ரெண்டு பேர் நிற்கும் வரிசை அந்த வாசலுக்கு வெளியில் இருந்து தரிசனம் செஞ்சுட்டு அப்படியே பின்பக்கம் போய் குளத்து நீரைக் கையில் எடுத்து குடிச்சுட்டுத் திரும்பிடறாங்க. நல்லவேளை நாம் அங்கே போக நினைச்சுப் போகாமல் இருந்தது!

உள்ளே எல்லா இடங்களிலும் சுவர்களில் தங்கத்தகடுகளில் பஞ்சாபி எழுத்துக்களில் க்ரந்தத்தின் முக்கிய ஸ்லோகங்கள் எம்போஸ் செஞ்சுருக்கு. சந்நிதிக்குப் பின்புறமா ஒரு வெராந்தா போல் இருக்கு. அங்கே ஒரு மாடிப்படிகள். மேலே ஏறிப்போனோம். அங்கேயும் அலங்கார மேடையில் சிகப்புப் பட்டில் குருகிரந்த் சாஹிப் வச்சுக் கீழே இருப்பதுபோலவே வாசிச்சுக்கிட்டு இருக்காங்க. இங்கே முன்னால் விரித்துள்ள துணியில் நாம் மண்டியிட்டு வணங்க முடிகிறது.

மாடியில் இருந்து கீழே (புனித நூல் வாசிக்கும் கூடத்தை) கருவறையை சுற்றிவர உள் பக்கத்துலே இருக்கும் மாடங்கள் வழியே பார்க்க முடியுது. எல்லா மாடங்களிலும் ரெண்டுமூணு பேர் இடம்பிடிச்சு உக்கார்ந்து கீழே பார்த்துக்கிட்டு இருக்காங்க. சுத்திவர வெளிப்புறம் பார்க்கும் ஜன்னல்கள். ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு மாடமுன்னு இருக்கு. நமக்கும் ஒரு மாடத்தில் இடம் கிடைச்சது. கொஞ்ச நேரம் அங்கே உக்கார்ந்து தியானம் செஞ்சோம். பஞ்சாபி மொழியில் நிறைய ஸ்லோகப் புத்தகங்கள் அங்கங்கே அடுக்கி வச்சுருக்காங்க. மக்கள் எடுத்து வாசிச்சுட்டுத் திருப்பி வச்சுட்டுப்போறாங்க. மாடியில் நடமாட்டம் அதிகமா இருந்தும் சத்தமே இல்லை!!!!
நடுவில் இருக்கும் சின்ன மாடம் போன்ற ஜன்னலில் உக்கார்ந்தோம்

பொற்கோவில் கருவறைக் கட்டிடம் ரெண்டு செவ்வகக்கட்டிடமா நடுவில் சின்ன இடைவெளியோடு இருக்கு. ஒரு மாடி உயரம் விட்டுட்டு அதுக்கு மேலே இருந்துதான் தங்கத்தகடு போர்த்தி இருக்காங்க. நல்ல மார்பிள் கட்டிடம். பளிங்கில் 'இன்லே' வேலைப்பாடுகள் அழகாச் செஞ்சுருக்காங்க. தாஜ்மஹாலில் இருப்பது போல!. மாடியில் இருக்கும் இன்லே வேலைப்பாடுகள் உள்ள சுவர்களில் அழுக்குப் படியாமல் இருக்கக் கண்ணாடிக்கவசம் போட்டுவச்சுருக்காங்க.
கீழே ஆரத்தி எடுப்பதுபோல் தெரிஞ்சதால் உள்மாட ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து வணங்கிட்டுக் கீழே வந்தோம். கருவறைக்கு நேராப்பின்புறம் குளத்துத் தண்ணீரைத் தொடும்விதமா கம்பித்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. ஜனங்க தீர்த்தமா எடுத்து வாயில் விட்டுக்கிட்டுப் போறாங்க. கீழே சிந்தும் புனித நீரை சேவார்த்திகள் துடைச்சுக்கிட்டே இருக்காங்க. நாமும் தண்ணீரைக் கொஞ்சம் அள்ளித் தலையில் தெளிச்சுக்கிட்டு பாலம் வழியாக வெளியே வந்து பாலத்துக்கான நுழைவு வாயிலுக்குள்ளில் வந்ததும் கோவில் ப்ரசாதமுன்னு ஒரு வகை கேசரி தர்றாங்க. இது எப்பவும் 'முழங்கை நெய் வார' ன்னுதான் இருக்கும். குருத்வாராக்களில் பிரசாதமோ, இல்லை உணவு சமயத்தில் . ரொட்டி/சப்பாத்தியோ விளம்பும்போது இருகைகளை ஏந்தி வாங்கணும். தட்டைக் காமிச்சு இதுலே போடுன்னு சொல்லப்பிடாது. உணவுக்கு மரியாதை தரணும் என்ற தத்துவம்தான்.

எதிரில் இருந்த ஸ்ரீஅக்கல்தக்த் சாஹிப் கட்டிடத்துக்குள்ளே நுழைஞ்சோம். அங்கே மாடியில் புனித நூலை வாசிச்சுக்கிட்டும், சாமரம் வீசிக்கிட்டும் இருக்காங்க. ஒரு மூலையில் முரசு ஒன்னு இருக்கு, அதே கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் ரெண்டு இடங்களில் புனிதநூலுக்கான சந்நிதிகளில் வாசிப்பு நடக்குது. கொஞ்சம் தள்ளி இன்னொரு தனிச்சந்நிதியில் புனித நூல் வாசிப்பு.
இப்படி அஞ்சாறு இடங்களில் ,நம்மூர்க் கோவில்களில் மூலவரைத்தவிர மற்ற தெய்வங்களுக்கு அங்கங்கே சந்நிதிகள் இருப்பது இங்கே இருக்கு. என்ன ஒன்னுன்னா எல்லா சந்நிதிகளிலும் ஒரே சாமியா, குரு க்ரந்த் சாஹிப் மட்டுமே. வெவ்வேறு காலக்கட்டத்தில் இருந்த குருஜிக்கள் தொகுத்த கிரந்தங்கள் . அந்தந்த குருஜிக்களின் பெயரிலேயே அந்தச் சந்நிதிகளும்.
அப்போ பல்லக்கு ஒன்னு பாலம் வழியா உள்ளே போச்சு. இரவில் பத்தரை மணி அளவில் கருவறையில் இருக்கும் புனித நூலைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டுவந்து இங்கே ஸ்ரீ அக்கல்தக்த் சாஹிப் கட்டிடத்தில் ஒரு அறையில் உள்ள பெரிய கட்டிலில் வச்சுருவாங்க. மறுபடி அதிகாலை அஞ்சு மணிக்கு அதே பல்லக்கில் ஏற்றிக் கொண்டுபோய் கருவறையில் வச்சுப் பூஜைகள் செய்து படிக்க ஆரம்பிப்பாங்க. இது இங்கே தினசரி நிகழ்ச்சி.

இந்தப் புனித நூலை, உயிருள்ள மதகுருவுக்கு ஈடா வச்சு சாமரம் வீசுவது, பிரசாதங்கள் படைப்பது, பல்லக்கில் தூக்கிக்கொண்டு போவது, பள்ளியறையில் உறங்க வைப்பதுன்னு எல்லாமே செஞ்சு வழிபடறாங்க. புத்தகமும் நமக்கு சாமிதானே? சரஸ்வதி இல்லையோ அது?


படம் சரியா வருமான்னு தெரியாத நிலையில் ரெண்டு முறை க்ளிக்கிட்டு
குளக்கரையில் போய் கொஞ்சநேரம் கோவிலைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்துருந்தோம். பல்லக்கு வெளியில் வரட்டும் பார்த்துட்டுப் போகலாம்.

வானத்தில் க்ருஷ்ணபட்ச நிலா. பௌர்ணமி முடிஞ்சு நாலு நாள்தான் ஆகி இருக்கு. அந்த வெளிச்சத்தில் தண்ணீர் ததும்பும் குளக்கரையில் இருந்தப்ப மனசுக்கு அமைதியா இருந்துச்சு. நிறையப்பேர் குளக்கரையில் படுத்து தூங்கிக்கிட்டு இருந்தாங்க. நல்ல ஆறேழடி அகலக்கரை. வசதியாத்தான் இருக்கு. பேசாம இங்கேயே படுத்துத் தூங்கிட்டுக் காலையில் நிர்மால்யம் பார்க்கலாமான்னுகூட மனசுக்குத் தோணிப்போச்சு.
அரைமணி நேரத்தில் பல்லக்கு வெளியே வந்துச்சு. உள்ளே பட்டுத்துணியில் சுற்றிய புனிதநூல். ஆங்கில C மாதிரி வளைஞ்சு இருக்கும் கொம்பு வாத்தியம்போல் ஒன்னை அப்பப்ப ஊதுனாங்க. சங்கொலி மாதிரி கேக்குது. எதிரில் இருந்த கட்டிடத்துக்குத் தூக்கிப்போனாங்க. அங்கே இருந்த முரசு ஒலிக்க ஆரம்பிச்சது. மாடியில் ஒரு அறையில் கட்டிலில் புனித நூலை வச்சுட்டு இரவு விளக்கைப் போட்டுட்டுக் கதவைச் சாத்துனாங்க. பல்லக்கின் கூடவே பின்னால் வந்த பக்தர்கள் கண்ணாடிக்கதவின் வழியா சேவிச்சுக்கிட்டுக் கீழே விழுந்து வணங்குறாங்க. பள்ளியறை நிகழ்ச்சி முடிஞ்சது.( படம் கீழே)
நாங்களும் கிளம்பினோம். வளாகம் முழுசும் மக்கள் நடமாட்டம், தூக்கம் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கு. வெளிச்சுற்றில் கோவில் ப்ரசாதம் கிடைச்சது. வெண்பொங்கல் மாதிரி ஒன்னு. வாங்கி விழுங்கிட்டுக் காலணிகளை வாங்கிப் போட்டுக்கிட்டோம். இப்போ.... கார்பார்க் வரை நடக்கணுமே! வாசலில் கிடைச்ச சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி வண்டிவரை வந்தோம். அறைக்கு வந்தப்ப நள்ளிரவு.

நாளைக்குக் காலை மறுபடி குருத்வாரா போகலாம். இந்த மதம் வந்த கதையை அப்பச் சொல்றேன்,


தொடரும்....................:)

14 comments:

said...

வாஹே குரு!
மீண்டும் வரேன்.கண்ணைப் பறிக்கிறது படங்கள். நன்றிமா துளசி.

said...

76 வது வயசில் பதினாறு கிலோ எடையுள்ள ரெண்டுபக்கமும் கூர்மையுள்ள வாளை ஏந்திவந்து அவுங்களைப் போட்டுத்தள்ளியவர். இந்த சண்டையில் அவரும் கொல்லப்பட்டார். //
இவரைப் போல வீரம் ,ரௌத்ரம் இப்பொழுது நினைத்துக் கூட பார்க்கமுடியாது துளசி.

said...

மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு துளசி. எல்லோருக்கும் ஒரு இறைவன், ஒருதலைவன், வணங்க பூஜிக்க ஒரு வேதம்,பிரகாரச் சுற்று,ஏகாந்த சேவை எல்லாமே இருக்கு. மனசு ஒன்றுபட்டால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது. இந்தப் பதிவு என்னை ரொம்பவே உணர வைக்கிறது.

said...

Teacher,

Aanmeega payanam seia kuduthu vechuyerukkanum. Ungaloda varnanai arumai, ungalukku kedaicha mana neraivai padikaravangalum kedaikara madhari ezhudhinathukku nandri.

Waiting for the story.

-Sri

said...

\\மக்கள் எடுத்து வாசிச்சுட்டுத் திருப்பி வச்சுட்டுப்போறாங்க. மாடியில் நடமாட்டம் அதிகமா இருந்தும் சத்தமே இல்லை!!!!//

அங்க பக்தியோட படிச்ச இளையவர்களையும் , தரையை ஈரம்போக துடைத்துக்கொண்டிருந்த இளையவர்களையும் பாக்க ஆச்சரியமா இருந்தது.. தில்லியில் இவங்க ஊர்வலம் போனா.. முன்னாடி ஒரு 5 ஆறு பேரு ரோட்டை கூட்டிக்கிட்டே போவாங்க.. அதுவும் இளைஞர்கள் தான் ..டிப் டாப் இளைஞர்கள்.

said...

நல்ல படங்கள். தங்கம் கண்ணைப்பறிக்குது.

said...

வாங்க வல்லி.

ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுருக்கீங்களேப்பா. இப்பத்தான் உங்களை இப்படி முதல்முறையாப் பார்க்கிறேன்.

இந்தக் கோவில்களில் 'பரிக்ரமா' ரொம்ப விசேஷமாம்.

அதிகாரம் இருக்குன்னு யாரும் யாரையும் விரட்டறதில்லை!

பல்லக்கு போய்க்கிட்டு இருக்கும்போது சிலர் அங்கங்கே வழியில் படுத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களைக்கூட நகருன்னு சொல்லலைப்பா!!!!

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

'கண்டதை' அப்படியே சொல்வதில் எனக்கென்ன சிரமம்?

காரியங்கள் அதுபாட்டுக்கு நடக்குது!

எதுவும் நம் கையில் இல்லைன்னு புரிஞ்சபிறகுதான் இப்படிப் பயணங்கள் வாய்க்குது!

said...

வாங்க கயலு.

இளைஞர்கள் வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்யறாங்கப்பா. எனக்கும் ஆச்சரியமாத்தான் இருந்துச்சு.

said...

வாங்க சின்ன அம்மிணி.

தங்கத்தின் குண விசேஷமே கண்ணைப் பறிப்பதுதானேப்பா:-)))))

said...

குளக்கரையில் நிலவுவெளிச்சம் நீங்கள் சொல்லும்போதே மனது அந்த காட்சியை ரசிக்க ஆர்ம்பித்து விட்டது டீச்சர்.படங்கள் பார்க்க நன்றாக உள்ளது டீச்சர்:))))

said...

இன்னிக்கு பாடம் முடிச்சிட்டேன்...நாளைக்கு வரேன் டீச்சர் ;)

said...

வாங்க சுமதி.

இப்படி இரவில் கமலாலயக் குளக்கரையில்தானே காதாநாயகனும் நாயகியும் சந்திச்சுப்பேசுவாங்க ஒரு நாவலில்? கல்கியில் வெகுகாலத்துக்கு முன்னே வந்த தொடர். நீங்கெல்லாம் பொறந்துகூட இருக்கமாட்டீங்க அப்போ:-))))

said...

வாங்க கோபி.

உங்க கடமை உணர்ச்சி புல் அரிக்க வைக்குது.

குருபக்தியைப் படிக்கவும். அதுதான் இன்றையப் பதிவு.