Friday, September 03, 2010

சூடுபட்ட பூனை.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 4)

கைப்பையால் மீண்டும் கஷ்டம் வரக்கூடாதுன்னு 'ரொம்ப புத்திசாலித்தனமா' அறையிலே வச்சுட்டு எட்டரைக்குக் கிளம்பி கோவிலுக்குப் போனோம். மத்யானம் போனப்பக் 'கோவிலை வெளியே இருந்து பார்க்கலாமுன்னு நினைச்சு விட்டுப்போச்சே'ன்னு சின்னதா புலம்புன என்னைப் பார்த்து, 'அதான் பார்த்தமே'ன்றார் கோபால்.

எங்கே? எப்போ?

ஜாலியன்வாலா பாக் விட்டு வெளியில் வந்ததும் குல்ஃபி வண்டியைப் படம் எடுத்தியே அப்போ இந்தப் பக்கம் கோவிலைப் பார்க்கலையான்றார். அட ராமா? கண்ணுலே படாத அளவுக்குச் சின்னதா என்ன? இருக்காதே!!!!

கோவிலுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போதே 'வண்டியை தெரு உள்ளே விடமாட்டோம். இங்கேயே பார்க்கிங் போட்டுட்டுப் போங்க'ன்னு ட்ராஃபிக் போலீஸ்காரர் சொல்றார். மத்தியானம் உள்ளே போனமே...........

நம்ம வண்டி வேற ஸ்டேட்னு நம்பரைப்பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டு உள்ளே விடமாட்டேன்றார் - ட்ரைவர்

பெரிய வண்டிகளை விடமாட்டாங்கம்மா - கோபால்.

ஆளாளுக்கு யூகங்கள்!

பார்க்கிங்லே வண்டியைப் போட்டுட்டு, ட்ரைவரையும் கோவிலுக்கு வரச்சொல்லிட்டு நடந்தோம்.; சுற்றுலாப்பயணிகள் ஏராளமா வரும் இடம் என்பதால் எங்கே பார்த்தாலும் அழுக்கு. தாவித்தாவி போறதுக்குள் விடிஞ்சுருச்சு. தெருமுனைவரை போய் வலதுபக்கம் திரும்புனதும், நமக்கிடதுபுறம் ஜாலியன் வாலா பாக் இருக்கு. நேராப் பார்த்தால்..... கொஞ்ச தூரத்தில் வெள்ளையா ஒரு பிரமாண்டமான பறவை நிற்பதுபோல் கோவில்! ஹர்மந்திர் சாஹிப்! ஹரிமந்திர் சாஹிப்ன்னும் சிலர் சொல்றாங்க! ஆனால் ஹர் மந்திர் என்பதுதான் பொருத்தமா இருக்கு. ஹர் ஏக லோகோங் கா மந்திர். அனைத்து மக்களுக்குமான திருக்கோவில்!

தெருவின் வலது பக்கம் ஓரமா நடைபாதியில் ஏறிப்போகலாமுன்னு போனால் அங்கே ஒரு ராதா கிருஷ்ணா கோவில்.! பெரிய கோவிலெல்லாம் இல்லை. கடை மாதிரி ஒரு இடத்துலே சுவரோடு சுவரா நிக்கறாங்க ரெண்டு பேரும். ஒரு கும்பிடு போட்டுட்டு மேலே நடந்தோம். வடக்குப் பார்த்தபடி நல்ல அகலமான குருத்வாராக் கட்டிடம். உள்ளே போக நிறைய வாசல்கள் .
சீக்கியர்களின் கோவிலுக்குள் போக சில நியதிகள் இருக்கு. அதில் முக்கியமானது தலையைப் போர்த்திக்கொண்டு போகணும். எங்க நியூஸியில் அடிக்கடி குருத்வாரா போகும் பழக்கம் இருந்ததால் எனக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லை. அதான் துப்பட்டா இருக்கே:) ஆண்களுக்கு தலையில் கட்டிக்கொள்ள சிலபல ஆரஞ்சு நிறத்துணிகளை எங்கூரில் ஒரு தட்டில் போட்டு வச்சுருப்பாங்க. அதுலே ஒன்னு எடுத்துக் கட்டிக்கலாம். இல்லைன்னா பெரிய கைகுட்டை இருந்தாலும் போதும். இங்கே தினசரி வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவிலில் தலைத்துணி வச்சா ஆகுமா? வெளியில் வித்துக்கிட்டு இருந்த ஒன்னைப் பத்து ரூபாய்க்கு வாங்கினோம்.
வளாகத்துக்குள்ளே நுழையும்போதே பெரிய பெரிய பாத்திரங்களில் சமையல் என்னவோ நடக்குது. கல்சா அங்கத்தினர் சிலர் நீண்ட வாளைத் தோளில் தொங்கப் போட்டுக்கிட்டுச் சமைச்சுக்கிட்டு இருக்காங்க. படிகள் இறங்கி பக்கத்திலே இருக்கும் 'ஜூத்தா கர்' போய் காலணிகளைக் கொடுத்துட்டு டோக்கன் வாங்கிக்கிட்டோம். ஏராளமான கவுண்ட்டர்கள். இது 24 மணி நேரமும் திறந்தே இருக்குமாம். பொதுவா இரவில் குருத்வாராக்களைப் பூட்டுவதில்லை.
வளாகத்தில் இடப்பக்கம் கடைகளா இருக்கு. கோவில் சம்பந்தப்பட்ட நினைவுப்பொருட்களை விற்கும் கடைகள். சீக்கியர்கள் கையில் போடும் கரா (வளையல்) ஏராளமாக் கொட்டி வச்சுருக்காங்க. எல்லாம் எவர்சில்வர். தங்கத்துலே போடக்கூடாதோ?????
வலப்பக்கம் நடந்தால் கோவிலுக்குள் நுழையும் வாசல் வருது. கால் நனைக்கும் விதமா கால்வாய். கடந்து உள்ளே வெராந்தாவில் நுழைஞ்சோம். அலங்கார வளைவுக்குள்ளில் அதோ தெரியுது பொற்கோவில்.
தொட்டுத்தடவலோ, கைப்பைகளை பரிசோதிப்பதோ, இந்த எலெக்ட்ரானிக் கேட்டுகளோ ஒன்னுமே இல்லை!!!! படங்கள் எடுக்கவும் தடை ஒன்னும் கிடையாது. நாம்தான் நம்ம வழக்கப்படி மூலவரை தரிசிக்கும்போது படம் எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இருந்தோம்.
படபடன்னு படிகள் இறங்கிக் கீழே போனால் மெல்லிய வெளிச்சத்தில் துல்லியமா ஜொலிக்குது! ப்ரமாண்டமான குளம். சுத்தி வர அகலமான பளிங்குத்தரைகள், நல்ல கூட்டம். ஜனங்கள் நின்ன இடத்தில் இருந்தே விழுந்து கும்பிட்டுச் சேவிச்சுக்கிட்டு இருக்காங்க. மூலவரை தரிசிக்கத் தங்கக்கோவிலுக்குள் போகணும். குளத்தின் ஒரு பக்கத்தில் இருந்து கோவில்வரை ஒரு பாலம் இருக்கு. பாலம் முழுசும் மக்கள் தலைகளாத் தெரியுது.
ஜொலிக்கும் கோவிலை நாலு படம் எடுத்தவுடன்.....பேட்டரி லோன்னு சொல்லுது. சார்ஜ் செஞ்சு ரெடியா வச்ச எக்ஸ்ட்ரா பேட்டரி...... ஐயோ.... என் கைப்பைக்குள்ளே வச்சுருந்தேனே............ பையைக் கொண்டுவராமப் போயிட்டேனே..... அறையில் இருக்கே:( அட ராமா....... வாகாவில் சுட்டுக்கிட்டா இங்கேயும் சுடுமுன்னு நினைச்ச அப்பாவி ஆனேன். உங்க கேமெரா எங்கேன்னா இவர் நான் கொண்டுவரலையேன்றார்:(

இறைவனின் திருவுளம் இப்படி இருக்கு! நாளைக்குப் பகலில் ஒருமுறை வந்து நல்லாக் கோவிலைச் சுத்திப்பார்த்துப் படம் எடுக்கணும்.

குளத்தின் வலப்பக்கமாகவே நடந்தோம். வலம் வந்த புண்ணியம் கிடைக்கட்டுமே! மேற்கூரை இருக்கும் அகலமான வெராந்தாக்களில் ஏகப்பட்ட சனம். பலர் ஓய்வாப் படுத்துக்கிட்டு இருந்தாங்க. குளத்துக்கும் வெராந்தாவுக்கும் இடையே ஒரு பத்துமீட்டர் அகலம் இருக்கு. நாலு மூலைகளிலும் குடிதண்ணீர் கிடைக்கும்படியா ஏற்பாடு. கொஞ்சம் அகலமான கிண்ணத்தில் தண்ணீர் தர்றாங்க. குடிச்சுட்டு வச்சுட்டா, பயன்படுத்திய கிண்ணங்களைக் கொண்டுபோய் ஒருவித மண் வச்சுத் தேய்ச்சு, பிறகு ஒரு பக்கெட்டில் போட்டு நல்லாக் கழுவித் துடைச்சு திரும்பவும் தண்ணீர் விநியோகம் செய்யுமிடத்துக்கு வந்துருது. எல்லாருமே தன்னார்வலர்கள். கடவுளுக்குச் செய்யும் சேவையாக இதைச் செய்யறாங்க.
தங்கக்கோவிலின் பின்புறம் இருக்கும் கிழக்குக் கரைப்பக்கம் நெடுநெடுன்னு மினாரா ஸ்டைலில் ரெண்டு கோபுரங்கள் நிக்குது. புங்கான்னு இதுக்குப் பெயர். BUNGA என்றால் மாளிகை என்று பொருளாம். ( பங்களா என்ற சொல் இதிலிருந்து வந்துருக்குமோ?) ஜஸ்ஸா சிங் ராம்கரியா என்ற சீக்கியத் தலைவர்களில் ஒருவரால் 1794 இல் கட்டப்பட்டது.
மொகலாயர்கள் ஆண்ட காலத்தில் இந்த குருத்வாராவை பலமுறை தகர்த்துப் பாழாக்கி இருக்காங்க. ஒவ்வொருமுறையும் மீண்டும் சீர் செய்து கட்டிக்கிட்டே இருந்துருக்காங்க சீக்கியர்கள். அப்போதான் கல்ஸா வீரர்கள் இனி கோவிலின் பாதுகாப்புக்கு இங்கேயே தங்கணுமுன்னு முடிவெடுத்து இந்த புங்காக்களைக் கட்டுனாங்களாம். உசரே இருக்கும் கோபுரத்தில் வீரர்கள் அல்லும் பகலுமா இருந்து காவல் காத்து நின்னுருக்காங்க அந்தக் காலத்தில்.

இந்த சீக்கியர்களின் கட்டடக்கலையில் சிறப்பு அம்சமா இருக்கும் புங்கா இப்போ இது மட்டும்தானாம். மூணு அடுக்குக்கட்டிடம். ரெட்டை கோபுரத்தின் உயரம் மட்டும் 46 மீட்டர்கள். முதல்லே நாலு கோபுரம் கட்ட ஒரு திட்டம் இருந்துச்சாம். கடைசியில் கட்டுனதென்னவோ இந்த ரெண்டும்தான். 1903 வது வருசம் வந்த நிலநடுக்கத்தில் கோபுரத்தின் மேல் இருந்த கிண்ணக்கூரை உடைஞ்சுருச்சுன்னு அதை சரி செஞ்சு புதுப்பிச்சுருந்தாங்க. அதன்பிறகு தங்கக்கோவில் ஆக்ரமிப்பு (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்ஸ்) 1984 இல் நடந்தப்ப இன்னொருமுறை பழுதாகிருச்சுன்னு திரும்பவும் ஒருமுறை சரி பண்ணி இருக்காங்க.

இதைக் கடந்தவுடன் குளத்தின் கரையை ஒட்டி வலப்புறமா 'துக் பஞ்சனி பேர்' (Dukh Bhanjani Ber Tree)என்று பெயருள்ள ஒரு பெரிய இலந்தைமரம் நிக்குது. அங்கேதான் பக்தர்கள் புனிதநீரில் முங்கி எழ ஒரு ஸ்நான்கட் இருக்கு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் படித்துறை. அறுபத்தியெட்டுப் புண்ணீய தீர்த்தங்கள் இந்த திருக்குளத்தில் வந்து சேருவதாக ஒரு ஐதீகம்.

குளத்துக்கு ஒரு கதை இருக்கு. முன்னொரு காலத்துலே பீபி ரஜனினு ஒரு ராணி இருந்தாங்க. அவுங்க கணவருக்கு குஷ்டரோகம் வந்துருச்சு. ஒரு சமயம் காட்டுக்குள்ளே இருந்த நீர்நிலையில் அவர் முங்கிக் குளிச்சுருக்கார். நோய் போயிருச்சாம். இந்த அதிசயத்தைப்பற்றிக் கேள்விப்பட்ட குரு ராம் தாஸ், இந்த குளத்துக்கு விசேஷ சக்தி இருக்குன்னு இதை பக்தர்கள் குளிக்கும் ஸ்நானகட்டா விஸ்தரிச்சுக் கட்டித்தந்தாராம். குளக்கரையில் இருந்த மரத்துக்கும் துக் பஞ்சனின்னு பெயர் கொடுத்துட்டார். பளிங்கு மேடை கட்டி அந்த மரம் இன்னும் இங்கே இருக்கு. இங்கே மூழ்கி எழுந்தா நம் துக்கங்கள் விலகும் என்று ஒரு ஆழ்ந்த நம்பிக்கை. முடமான இளைஞர் ஒருவருக்கு இங்கே மூழ்கி எழுந்தபின் கால்கள் சரியாச்சுன்னும் சொல்றாங்க. அற்புதங்கள் நிறைந்த நாடல்லவா நம் புண்ணிய பூமி. (சொன்னாக் கேட்டுக்கணும். அம்புட்டுதான் சொல்வேன்)
நமக்கு மூழ்க வசதி இல்லை என்பதால் தண்ணீரை அள்ளித் தலையில் தெளிச்சுக்கிட்டோம். கொஞ்சம் துக்கம் விலகுனாச் சரி. இதைத்தொட்டடுத்து மேடைபோல் கட்டிஇருக்கும் சந்நிதிக்குள் போய் நமஸ்கரிச்சுட்டு வர்றாங்க. 68 புண்ணிய ஸ்தலங்களைத் தரிச்சிச்ச பலன் கிடைக்குமாம்.
மக்கள் குளத்தில் இறங்கி வெளிவரும்போதெல்லாம் சிந்தும் தண்ணீரையும் ஈரத்தையும் சேவை செய்பவர்கள் துடைச்சுக்கிட்டே இருக்காங்க.

கோவிலின் அளவையும் முக்கியத்தையும் கருதி மூணு இடுகைகள் குருத்வாரா ஸ்பெஷலா வரப்போகுது. நின்னு நிதானமாப் பார்க்கலாம். வாழ்நாளில் ஒரு முறை வந்து போகவேண்டிய இடமல்லவா?


தொடரும்...............................:-)

PIN குறிப்பு: படங்கள் ஒரு இரவிலும் ஒரு பகலிலும் எடுத்தவை.

16 comments:

said...

அடுத்தது ஆரம்பிச்சிட்டீங்களா?

நல்லது. சுத்திக்கிட்டே இருக்கீங்க :)

said...

//எல்லாருமே தன்னார்வலர்கள்.//

நல்ல பழக்கம். தமிழகத்திலும் சிவ ஆலயங்களில் பார்த்திருக்கிறேன்.

அடுத்த பகுதிக்கு waiting. :-)

said...

பொற்கோவிலை பகலிலும்,இரவிலும் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது டீச்சர். இந்த அளவு மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது திருப்பதி நினைவு வருகிறது டீச்சர்:)))))

said...

கோவில் எல்லாம் நல்லாப் பராமரிக்கிறாங்க. சாப்பாடு போடறாங்க. அங்கயும் இரண்டு பிரிவா துளசி? சீக் சீக்,இந்து சீக்கியர்னு...?
பிரம்மாண்ட,மா இருக்குப்பா.எப்பவோ இந்திராகாந்தி இந்தக் கோவிலுக்கு வந்தபோது டிவில பார்த்த நினைவு.

மற்றவிவரங்களை எதிர்ப் பார்த்திருக்கிறேன்.

said...

Are you fine? Everyone fine? Just read about the earthquake near christchurch. :-(

said...

Thulasi aunty! Sorry for jumpinig in after long. Have you heard from your friends in New Zealand. Hope they are safe. Yahoo News on Earth quake 7.4 magnitude.

said...

வாங்க யாசவி.

காலுள்ளவரை சுத்தல் நிக்காது போல!!!!நீங்க நக்கலாக் கேக்குறீங்கன்னு கோபால் சிண்டு முடியப் பார்க்கிறார்ப்பா:-))))

said...

வாங்க நன்மனம்.

அடியவருக்குச் செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்வது போலன்னு ஒரு நம்பிக்கை மக்கள் மனசுலே இருக்கே!

ஏனோதானோன்னு செய்யாம மனப்பூர்வமாச் செய்யறதைப் பார்த்து வியப்பாதான் இருந்துச்சு.

அடுத்த பகுதி திங்களன்றுதான்.

said...

வாங்க சுமதி.

இவ்வளவு கூட்டம் இருந்தும் கோவில் பளிச்ன்னு சுத்தமா இருக்கு. சத்தம்கூட அவ்வளவா இல்லை.

யார் மேலேயும் இடிச்சுக்காம ந்டமாடமுடியுது.

முக்கியமாக் கோவில் ஊழியர்கள் என்ற பெயரில் மக்களை மாடுகளைப்போல் விரட்ட யாரும் இல்லை!!!!!

said...

வாங்க வல்லி.

இந்து சீக்ன்னு பிரிவொன்னும் இல்லைப்பா. ஆனால் சீக்கியர்கள் இந்துக் கடவுளரையும் வழிபடறாங்க.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்தான் அவுங்க முக்கிய கொள்கை.

சாதி என்ற விஷயத்தை ஒழிச்சது இந்த மதம்.

said...

வாங்க குமரன் தம்பி.

நலமே.

கிறைஸ்ட்சர்ச் நிலநடுக்கத்தில் நல்லவேளையா எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை.

நண்பர்களின் பரிவு மனசுக்கு ஆறுதலாக இருக்கு. சின்னதா ஒரு பத்துவரி பதிவு போட்டுருக்கேன்.

said...

வாங்க இலா.

மகள் அங்கே அதே ஊரில்தான் இருக்காள்ப்பா.

தொலைபேசினோம்.

நலமாக இருக்காள்.

விசாரிப்புக்கு நன்றி இலா.

said...

துல்லியமான விவரங்கள் எல்லாம் சொல்லிட்டு வர்ரீங்க ..

ஜனாதிபதி வரார்ன்னு ஊரில் பல கோயில்களில் கெடுபிடியா இருக்க .. இவங்க மட்டும் வழக்கம் போலயே கண்டுக்காம உள்ள எல்லாரையும் விட்டாங்க.. எல்லாம் அந்த கத்தி பிடிச்சிட்டு நிக்கிற அவர்கள் சொந்த வீரர்களின் மேல் இருக்கும் நம்பிக்கை தான் போல..

said...

வாங்க கயலு.


கடவுளுக்கு முன் எல்லோரும் சமம் என்பதால் ஜனாதிபதியும் நம்மில் ஒருவர்தானே?

நம்ம கோவில்களில்தான் அட்டகாசம் கூடுதல். ஒரு கார்ப்பரேஷன் கவுன்ஸிலர் வந்தாக்கூட அல்லகைகளின் ஆர்பாட்டம் கோவிலுக்குள்ளிலும் வந்துருதே:(

நம்ம பயணப்பதிவுகள் எல்லாம் ஃபார் ஆர்ம் சேர் ட்ராவலர்ஸ் ஸ்பெஷல். அதான் விவரங்கள் கூடிப்போகுது.:-)

said...

பொற்கோயில் அழகிய படங்கள், விபரங்களுடன் அருமை.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.