Wednesday, September 29, 2010

அம்மம்மாவின் அழகுசாதனங்கள். ( அ.க.ஆ.ஐ. 1)

யதேச்சையாக் கடையில் பார்த்த மார்கோ ஸோப், அம்மம்மாவின் நினைவைக் கொண்டுவந்துச்சு. என்னமோ அம்மம்மாவையே வீட்டுக்குக் கூட்டி வந்த மாதிரி இருந்துச்சு மார்கோவை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தப்ப.

மறுநாள் குளிக்கும்போது அந்த மார்கோவைப் பிரிச்சதும்........ ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்முன்னு அம்மம்மா வாசனை. உடம்பு தேய்ச்சுக்கும்போது நுரைச்சுக் கையில் வழுவழுத்துத் துள்ளி கீழே விழப்பார்த்த சோப்புக்கட்டி கைக்கு அடங்கியும் அடங்காமலும் இருக்கு. அம்மம்மா வீட்டுலே இப்படி ஒரு முழு சோப்பை கையில் பிடிச்ச அனுபவமே எங்க யாருக்கும் இருக்கச் சான்ஸே இல்லை.
மளிகை சாமான்கள் மாசத்துக்கொருமுறை வந்து வீட்டில் இறங்குனதும் மத்த சாமான்களையெல்லாம் சித்தியைப் பார்த்து எடுத்துவைக்கச் சொல்லிட்டு ஒரு கத்தியைத் தூக்கிட்டு வருவாங்க அம்மம்மா . பைக்குள் துழாவி மார்கோக்களை எடுப்பாங்க. மொத்தம் மூணு கட்டி. ஒரு மரஸ்டூலின் மேல் வச்சு, மார்கோவின் ஆடையைக் களைந்து அம்மணமாக்கி குறுக்கும் நெடுக்குமா, வெட்டு ரெண்டு . துண்டு நாலு . இப்படியே மத்த ரெண்டு கட்டிகளையும். பன்னெண்டு துண்டுகளையும் ஒரு பாரீஸ் மிட்டாய் தகர டின்னுக்குள்ளே எடுத்து வச்சதும் முதல் வேலை அந்த மர ஸ்டூலை வெளியே கொண்டுபோய் கழுவி வெயிலில் காயவைப்பாங்க. கண்ணைச் சுழட்டி நாங்க யாராவது இருக்கோமான்னு பார்க்கறதுக்கு முன்னே, எங்கே இந்த வேலை நமக்கு வந்துருமோன்ற பயத்துலே நாங்க எல்லோரும் 'எஸ்' ஆகிருவோம்.

இந்த மர ஸ்டூல் மட்டும் இல்லேன்னா அம்மம்மாவுக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது. ரொம்ப உயரம் குறைவான அகலமான ஸ்டூல் இது. அம்மம்மாவுக்குன்னே , சில வேலைகள் வீட்டுலே அலாட் ஆகி இருக்கும். அதுலே ஒன்னு அரிசியில் கல், நெல் எல்லாம் பொறுக்குதல். கண்ணாடி போட்டுக்கிட்டுக் காலை ஒரு பக்கம் நீட்டிக்கிட்டு, காப்படி ஒன்னுலே அரிசியை வாரி எடுத்து அந்த ஸ்டூலின் மேலே குவிச்சு வச்சு, கொஞ்சம் கொஞ்சமா, முன்னுக்குத் தள்ளிவிட்டு சொத்தை அரிசி, கல், நெல் எல்லாம் பொறுக்கி வாசலில் வீசுவாங்க. சட்னு பார்த்தால் இந்த வேலைக்காகவே ஜென்மம் எடுத்து வந்தாங்களோன்னு தோணும். அவ்வளவு கவனம். நேரம் ஆக ஆக கண்ணாடி கொஞ்சம் கொஞ்சமா நழுவி மூக்கு நுனிக்கு வந்துரும். அப்பப் பார்த்து சித்தி எதாவது கேக்கவோ, இல்லை சாதம் வெந்துருச்சான்னு கேக்க ஜல்லிக்கரண்டியில் நாலு பருக்கைகளை ஏந்தியோ வந்து நிக்கும்போது, தலையைக் கொஞ்சம் கூட நிமிர்த்தாம கண்ணைமட்டும் உசத்தி ஒரு பார்வை பார்ப்பாங்க...... எனக்கு ஒரே வேடிக்கையா இருக்கும்.

சிலசமயம் சித்திக்கு வேலை ஒன்னும் இல்லைன்னா அவுங்க அம்மம்மாவுக்கு எதிரில் உக்காந்து மடியில் ஒரு முறத்தை வச்சுக்கிட்டு ஸ்டூலின் மறுபுறம் அரிசியைப் பொறுக்கிக்கிட்டே எதாவது பேசிக்கிட்டு இருப்பாங்க.

அம்மம்மா வீட்டுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை அரிசிக்காரர் ஒருத்தர் நெல்லூரில் இருந்து, அரிசி கொண்டுவந்து தருவார். குடும்பம் பெரூசா இருந்த தாத்தா காலத்தில் மாசாமாசம் அரிசிக்காரர் வருவாராம். அப்போ மூட்டையா வாங்குவாங்களாம். அரிசி தீர்ந்து போச்சேன்னு சிலசமயம் உள்ளுரில் கடையில் கிடைக்கும் அரிசியை வாங்கி சோறாக்குனா தாத்தாவுக்குச் சாப்பிடவே பிடிக்காதாம். சொத்து சுகம் எல்லாத்தையும் உதறித்தள்ளிட்டு ஊரைவிட்டு வரமுடிஞ்ச தாத்தாவால் சோத்து ருசியை மட்டும் தள்ளமுடியலைன்னு அம்மம்மா சொல்வாங்க.

தாத்தாவுக்குப் பூர்வீகமே நெல்லூர்தான். அவருடைய மாமனார் ரொம்ப செல்வாக்கானவராம். நிலம் நீச்சுன்னு லட்சுமி கடாக்ஷம் நிறைஞ்ச குடும்பமாம். மூலிகை மருந்துகளில் ஆர்வம் அதிகமா இருந்ததாலே அவரே இதையெல்லாம் அங்கங்கே சாதுக்களிடம் போய்த் தெரிஞ்சுக்கிட்டு ஊருக்கே வைத்தியம் பார்ப்பாராம். ஒத்தைக்காசை நோயாளிகள்கிட்டே இருந்து வாங்க மாட்டாராம். யாராவது காசை நீட்டுனா..... 'நேராப்போய் கோயில் உண்டியலில் போட்டுப் போ' ன்னுருவாராம். பொம்பளைங்க வைத்தியம் பார்த்துக்க வந்தால் ஒரு பட்டுத்துணியைக் கை மேலே போட்டு நாடி பிடிச்சுப் பார்ப்பாராம். அப்படி ஒரு கற்புக்கரசன் அவருக்கு ரொம்ப நாளாக் குழந்தைங்களே இல்லை. நாகதோஷம் காரணமாம்.

அவருடைய முன்னோர்கள் காலத்துலே ஒரு சம்பவம் நடந்து போயிருக்கு. அந்தக் காலத்துலே வீட்டுவீட்டுக்கு பசுக்களை வச்சு போற்றிக்கிட்டு இருந்தாங்களாம். இவுங்க வீட்டுலேயும் ஆறெழு மாடுகளாம். பாலைக் கறந்ததும் பெரிய மண்பானையில் ஊத்திக் காய்ச்சுவாங்களாம். காய்ச்சுன பாலைப் பத்திரமா சாமி அறையிலே கொண்டுபோய் வைக்கறதுதான் வழக்கமாம். யாரும் தப்பித்தவறி அதுமேலே விழுந்தோ, இல்லை கைபட்டோ கால் பட்டோ பானை ஒடைஞ்சு போச்சுன்னா?

இப்படி ஒரு நாள் பாலைக் காய்ச்சி, அது சூடா இருக்கக்கொள்ளவே வீட்டில் இருந்த பாட்டியம்மா பானையைத் துணிவச்சுத் தூக்கியெடுத்து சாமு ரூமுக்குள்ளே போய் அங்கிருந்த பிறிமணையில் வச்சுட்டு வந்துருக்காங்க.

கொஞ்ச நேரத்துலே என்னவோ பொசுங்குற மணம் லேசா வந்துருக்கு. முதல்லே அவ்வளவாக் கண்டுக்கலைன்னாலும், நேரம் போகப்போக என்னவோ ஒரு மணம் ரொம்ப வருதேன்னு என்ன ஏதுன்னு தேடிப் பார்த்துருக்காங்க.

அந்த வீட்டுலே ஒரு மனைப்பாம்பு இருந்துருக்கு. யாரையும் தொந்திரவே செய்யாதாம். தானுண்டுன்னு இருந்துருக்கு. அதுதான் அன்னிக்குச் சாமி அறையில் சுருண்டு படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்துருக்கு. பாட்டியம்மாவுக்கோ பார்வை கொஞ்சம் மட்டு. பிறிமணைன்னு நினைச்சுப் பானையைப் பாம்பு மேலே வச்சுருக்காங்க:(

பாவம், பாம்பு தப்பிச்சு ஓடாம அப்படியே கருகி உசுரை விட்டுருக்கு:(


விஷயம் தெரிஞ்சதும் ஏதேதோ பரிகாரமெல்லாம் செஞ்சும், அந்தக் குடும்பத்தை நாகதோஷம் பிடிச்சுக்கிச்சாம். இனி உங்க பரம்பரையில் பெண்குழந்தைகளே பிறக்காதுன்னு நாகம் சாபம் விட்டதா ஒரு பேச்சு.

கனவுலே வந்து சொல்லி இருக்குமோ என்னவோ? எப்பவும் சாமிங்க எல்லாம் கனவுலே தானே வந்து நான் இங்கே இருக்கேன். இப்படி இருக்கேன், இங்கே கோவில் கட்டுன்னெல்லாம் கட்டளை போடுது, இல்லையா?


அது போகட்டும், குழந்தைகளே பிறக்காதுன்னாலும் ஏதோ பொருள் இருக்கு. அதைவிட்டுட்டுப் பொண்குழந்தைங்க பிறக்காதுன்னா என்ன அர்த்தம்? இந்தக் காலமா இருந்தா நல்லதாப்போச்சுன்னு மக்கள்ஸ் நிம்மதியா இருப்பாங்க. ஒருவேளை அந்தக் காலத்துலே பெண் குழந்தைகள் மஹாலக்ஷ்மிக்குச் சமானமுன்னு நினைப்பு இருந்துருக்கலாம்.

இவுங்க வீட்டுலேயும் நாலைஞ்சு தலைமுறைக்கு பெண் வாரிசுகளே இல்லை. பரிகாரம், பூஜை, தீர்த்தயாத்திரை, காசிக்குப்போய் பாவம் தொலைச்சுட்டு வர்றதுன்னு பல உபாயங்களும் செஞ்சுக்கிட்டே இருக்க இருக்க...சாபம் நீர்த்துப்போய், வைத்தியர் வீட்டுலே ஒரு பொண் குழந்தை பொறந்துருக்கு. நாக தேவதையை வேண்டிப் பூஜையெல்லாம் செஞ்சு குழந்தைக்கு நாகரத்தினம் னு பெயர் வச்சு வளர்த்துக்கிட்டு இருக்காங்க.

அந்தக் கால வழக்கப்படி அஞ்சு வயசுலே கல்யாணம். மாப்பிள்ளை பெயர் ராஜகோபால். உள்ளூர்க்காரர். ஏதோ சொந்தமும் கூட. வீட்டுக்கு ஒரே புள்ளை. அப்பா அம்மாவைச் சின்னவயசுலேயே இழந்துட்டாராம். அதனாலே மருமகனும் ஒரு மகனா இருக்கட்டுமுன்னு மாமனார் வீட்டோடவே வந்துட்டார்.

ரொம்ப வருசங்களுக்குப்பிறகு வைத்தியர் ஐயா வீட்டுலே ரெண்டாவது குழந்தை. அதுவும் பெண். ஸோ சாபம் முற்றிலும் தீர்ந்தே போயிருச்சு. ஜெயம்மாள்ன்னு பேர் வச்சுக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. வீட்டுலே கூப்புடும் பேர் பங்காரு. அப்படின்னா தங்கம்ன்னு பொருள்.

நாகரத்தினம், ராஜகோபால் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தப்ப நம்ம பங்காருவுக்கு வயசு மூணு. ரெண்டு குழந்தைகளும் ஒன்னா வளர்ந்து வீட்டுலே எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

சரி....மீதிக்கதையை நாளைக்குச் சொல்றேன்.PIN குறிப்பு: நாள் இன்னிக்கு நல்லா இருக்கேன்னு நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரத்து ஐநூறு' வுக்கு அடிக்கல் நாட்டியாச்சு. எதுவுமே வீட்டில் இருந்தே ஆரம்பிக்குது என்றதால் அம்மம்மா முதலில் வர்றாங்க.

உங்க அன்பும் ஆதரவும் தொடரும் என்ற நம்பிக்கையுடன்.
43 comments:

said...

Madam, well;at last you have seen my comments and thank you. I like your way of describing the events like using Soap.My sister's Daughter used to call me as AMMAMMAAA. So I like your A.K.AA.I.--Padma Sury.

said...

இந்த மாதிரி வீட்டு கதைகளை கேட்டு ரொம்ப நாளேச்சே டீச்சர்....அசத்துங்க.

said...

படிக்க ரொம்ப ஆர்வமா இருக்குக்கா..எனக்கும் மார்கோ சோப் ரொம்ப பிடிக்கும்,அதன் வாசனையே தனிதான்...

said...

Dear Madam, At last you have seen my first comments for your Ever Green Thulasi Thalam.I like your way of narrating even about a soap.My sister's Daughter calls me as AMMAMMAA;so I like This.A.K.AA.I.1-Padma Sury

said...

நல்லா இருக்கு கதை.

பாட்டிஅம்மா பாம்பு..வியப்புடன் ஆ என்றுவிட்டேன்.

said...

இந்த நாள் இனிய நாள். துளசி கதை ஆரம்பிச்ச நாள் அப்டீனு ஒரு பாட்டு ஆட்டமே போட்டாச்சு. நன்றி நன்றி நன்றி. அருமையான் அம்மம்ம்மாவுக்கு ஒரு கட்டி முத்தம். மார்கோ எல்லாப் பெரியவங்களுக்கும் பிடிச்ச சோப் போல. கமலம்மா,ஆஜி ரெண்டு பேரும் மார்கோதான்:))

said...

ஒரு சோப்பை 4 துண்டாவா...? எங்கம்மா பரவால்ல போல, 2 துண்டாத்தான் வெட்டுவாங்க. ஒருவேளை மார்கோ ரொம்பப் பெரிசாருக்குமோ?

வீட்டுக்குள்ள பாம்பா?!! ஆடு வளப்பாங்க, கோழி வளப்பாங்க, பாம்புமா??!!ன்னு கேக்கத் தோணுது. பாவம் அதுவும் நன்றியோட உசிரையே கொடுத்திருக்கு!! :-))))

said...

ஆகா அப்பறம் கதை ஆரம்பிச்சிடுச்சா.. சூப்பர்..

அதும் அம்மம்மா கண் உயர்த்தி பாக்கற ஸ்டைல் சூப்பரோ சூப்பர்.

சுவாரசியம் தொடர்கிறோம். விரிவா எழுதுங்க..

said...

ஸ்கூல் படிக்கும் போது மார்கோ தான் ..

said...

ஆஹா இந்த பிரிமனை பாம்பு கதை எங்க வீட்டுலயும் சொல்வாங்களே!!! (அப்ப நாம ரிலேஷனோ??!!!) நாக தோஷம், வம்சமே இல்லாம போகும் எக்ஸ்ட்ரா...அதனால வீட்டுல பிறக்கற மூத்த பிள்ளைக்கு/பொண்ணுக்கு நாகம்/சுப்ரமணியர் சம்பந்தமா பேரு வைக்கிறது வழக்கம்.

நிஜத்துல என் பேரு நாகலட்சுமிதான். ஹை நீங்களும் அம்மம்மா பிச்சியா இருக்கீங்க. சேம் ப்ளட்.

said...

ஆஹா டீச்சர்..
நான் ரொம்ப நாளாக் கேட்டுட்டிருந்த அப்புறம் கதைகள ஆரம்பிச்சாச்சா?
ஆரம்பமே சூப்பர்..அசத்துங்க டீச்சர் :-)

(அந்த மார்கோ சோப் படம் போட்டிருக்கலாமே..என்னமோ டீச்சரோட பதிவுகள்ல படம் பார்த்துக் கதை கேட்டே பழக்கமாயிடுச்சு :-) )

said...

அப்ப்ப்ப்பாடா!!! இத இத இத தான் நான் எதிர்ப்பாத்தேன்! ஒரு வழியா நிஜமாவே ஆரம்பிச்சுட்டீங்க!!! :)))) கதை சூப்பரா இருக்கு! ப்ளீஸ் வீக் எண்ட்லயும் போடுங்களேன்!

பி.கு.: என்ன தான் கேள்விப்பட்ட கதைன்னாலும், "வந்தாங்களாம், போனாங்களாம், ..ளாம்" ‍ கொஞ்சம் ஜாஸ்தியா இருக்காப்புல இருக்கே டீச்சர்? அதான் கேக்க நல்லாருக்குன்னாலும், ரொம்ப கேட்டாலும் ஒரு மாதிரி இருக்கு.. :‍|

said...

ஆரம்பமே அம்மம்மாவுடன் நல்லா இருக்கு டீச்சர்:))))

said...

துளசி, இதே கதைய பிரபஞ்சனும் ஒரு முறை எழுதியிருந்ததா நினைவு... இது போன்ற கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே சாயலில் பல வெர்சன்கள் உலவும் போல..... நீங்க ஒரு பிறவி கதை சொல்லி.. எனவே இந்த தொடரும் அசத்தலா இருக்கும்ன்றதுல டவுட்டே இல்லை. கலக்குங்க. :)

said...

எந்திரன் ஆரம்பக்கதைகளை விட சூப்பரா ஆரம்பிச்சாச்சு. அது ஓடுதோ என்னவோ உங்க கதை 100 நாள் தாண்டி ஓடும்.

மார்கோ சோப் நல்லாருக்கு. அப்போ ஆளுக்கு ஒரு பீஸா?

அம்மம்மா...சூப்பரம்மம்மம்மா.....!!

said...

Dear Author,
well narrated (ammammavin alzhugu sathanangal)..a story that finds- occurring events in our day- to- day life.The way of telling may be very simple and nice.We shall probate you as an omniscient narrator and wish you all the success in this thread.Thanx
sivashanmugam.

said...

அமர்க்களமாக ஆரம்பித்து இருக்கிறீர்கள்.கொஞ்ச நாள் வெளியூர் போகாமல் வீட்டுக்கதைகள் சொல்லவும்...;-)

- ப்ரியா.

said...

வாங்க பத்மா சூரி.

அம்மாவின் அம்மா அம்மம்மான்னு சொல்றது எவ்வளவு சுலபமா இருக்கு பாருங்க.

சின்னச்சின்னப் பொருட்களோடுகூட நம் நினைவுகள் எப்படிப் பின்னிப் பிணைஞ்சுருக்குன்றதுக்கு இந்த சோப் ஒரு எடுத்துக்காட்டு!

said...

வாங்க சிந்து.

சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வந்துருக்கீங்க!!!!!

கொஞ்சநாளுக்கு வீட்டுக்கு முன்னுரிமை கொடுக்கலாமுன்னுதான்.....

said...

வாங்க மேனகா.
400க்கு வாழ்த்து(க்)கள்.

ஒரு கசப்பு கலந்த தனி வாசனை மார்கோவுக்கு. ஒருவேளை அதான் காரணமோ?

said...

வாங்க பத்மா சூரி,

துளசி பச்சைப்பசேலுன்னு இருந்தாத்தானே அழகு?

மார்கோ சோப் கூட பச்சைதான்:-)

said...

வாங்க மாதேவி.

பாம்புக்கதை இதேமாதிரி பல இடங்களில் இருக்காமே. நம்மாட்களுக்கு அப்போ புனைவு எழுத வராது போல:-) ஒரே வறட்சி!

said...

வாங்க வல்லி.

ஆட்டம் பாட்டம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது;-)

ஏம்ப்பா.... ஒருவேளை அந்த வேப்பெண்ணெய் வாசனைதான் காரணமா இருக்குமோ? ஒரு காலத்துலே வேப்பெண்ணெய் அதிகமாப் புழக்கத்தில் இருந்துச்சாமேப்பா!

said...

வாங்க ஹுஸைனம்மா.

மனைப்பாம்புன்னு இன்னும்கூட சில கிராமத்து வீடுகளில் இருக்குதுங்க.

நானே வீட்டுக்குள்ளே கூரையைத்தொடும் அளவுள்ள புத்து ஒன்னு பார்த்துருக்கேன் வீட்டுக்குள்ளே.

புள்ளைகுட்டிகளொடு அங்கே எப்படித் தூங்குவாங்கன்னு இன்னும் வியப்புதான்.

அப்போ சோப் கட்டிகள் கொஞ்சம் பெரிய சைஸில்தான் இருந்தன. இப்போ கிடைக்கும் மார்கோவை நாலா வெட்டினா..... வெறும் தூள்தான் மிஞ்சும்.

said...

வாங்க கயலு.

ரொம்ப காலத்துக்கு மார்கோதான் மார்கெட்டுலே நிலைச்சு இருந்துச்சுப்பா அப்பெல்லாம்.
அதைவிட்டா..... சினிமா நட்சத்திரங்களின் அழகு தரும் சோப் லக்ஸ்.
சந்திரிகான்னு ஒன்னு தோல் வியாதி வராமல் இருக்க.

லைப்பாய்க்கு பேர் சிரங்கு சோப்பு:-)

said...

வாங்க நாகலட்சுமி:-)

நாகரத்தினம் அம்மம்மாவுக்கு நீங்க ரொம்ப க்ளோஸ் ரிலேடிவ்:-)))))

கதைகள் எல்லாம் சுத்திச்சுத்தி வந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம்.

நாக தோஷமுன்னு புத்துக்குப் பால் ஊத்துவாங்க. எல்லாப்பாலும் புத்து மண்ணுலே ஊறிக்கிடக்கும். எறும்புகளுக்கு மஜா..

said...

வாங்க ரிஷான்.

அட! ஆமாம்ல்லெ!!! படங்கள் இல்லாம மொட்டையாத்தான் கிடக்கு.
சோப் உறையைக் குப்பையிலே வீசிட்டேன். பேசாம ஸ்கேன் பண்ணி போட்டுருக்கலாம்.

said...

ரிஷான்,

ஆண்டவரிடம் கேட்டதும் சோப்பு தந்துட்டார்;-)

said...

வாங்க பொற்கொடி.

ஆமாம்ப்பா.... 'ளாம்' அதிகமாத்தான் இருக்கு. ஆனால் என்ன செய்ய'லாம்' சொல்லுங்க!

பேசாம அம்மம்மாவை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்துற'லாம்'

said...

ஆஹா நன்றி டீச்சர்.. இந்த சோப் இலங்கையில் இல்ல..

முன்னாடி இங்கு ரெக்ஸோனான்னு ஒரு சோப் பாவனையில் இருந்தது..இந்த சோப் உறை, அதை ஞாபகப்படுத்துது டீச்சர் :-)

said...

வாங்க சுமதி.

அம்மா அம்மம்மா....ன்னு ஒரு பாட்டு, அப்புறம் அம்மம்மா காற்று வந்துன்னு ஒரு பாட்டு. இதெல்லாம் ரேடியோவில்வரும்போது, அம்மம்மா உங்களைப்பத்தி சினிமாவில் பாட்டு வந்துருக்குன்னு கலாட்டா செய்வோம்:-)

said...

வாங்க லக்ஷ்மி.

ரொம்ப நாளுக்குப்பிறகு உங்களை இங்கே பார்க்கிறேன். நலமா?

கிராமத்துக்கதைகளில் ஒரே கதைக்குப் பல வெர்ஷன்கள் இருக்கும்தான்.

பிரபஞ்சன் என்ன சொல்லி இருக்காருன்னு தேடணும். கதை நினைவு இருக்கா உங்களுக்கு?

ஏம்ப்பா.... மை.ம.காமராஜன் நினைவுக்கு வருது..... மனோரமா டயலாக்...
பிறவிக் குருடு, பிறவி நொண்டி, பிறவிப் பைத்தியம்.

இந்த வரிசையில் நானும் பிறவிக் கதை சொல்லி:-))))

said...

வாங்க நானானி.

அய்ய.... ஆளுக்கு ஒரு பீஸ் எல்லாம் இல்லை. வீட்டுக்கே ஒரே ஒரு பாத்ரூம்.
அதுலே மாடத்துலே இருக்கும் சோப் துண்டு தீர்ந்தால்தான் இன்னொன்னு வந்து உக்காரும்.

அங்கே அந்த வீட்டுலே மூணு பேர்தான் வழக்கமா வசிச்சாங்க. நாங்கெல்லாம் விருந்தாளிங்க.

said...

வாங்க சிவஷன்முகம்.

ஆஹா.... இவ்வளோ நம்பிக்கையா!!!!!

நன்றி. நன்றி.

said...

வாங்க ப்ரியா.

பண்டிகைக் காலங்கள் அடுத்து வந்தாச்சு. இனி கொஞ்சநாள் வீடேதான்:-))))

said...

எங்கூட்ல ரங்க்ஸுக்கு, இன்னிக்கும் இந்த சோப்தான் வேணும். அவ்வளவு பிடித்தமானது :-))

said...

எனக்கும் மார்கோ சோப் ரொம்ப பிடிக்கும்,அதன் வாசனையே தனிதான்...
It is true.

said...

அன்பின் துளசி

அப்புறம் கதைகள் ஆயிரத்து ஐநூறா .... அது சரி - எழுதுவீங்க - படிக்கறோம் - நல்லாவே எழுதி இருக்கீங்க - அக்கால நினைவுகள் - வாழ்க - நீளளளளளமா எழுதி இருக்கீங்க - படிச்சிட்டேன் - ம்துவா நெநெச்சி - ரசீச்சி - மகிழ்ந்து எழுதி இருக்கிங்க - அசாத்திய பொறுமை - ம்ம்ம்ம்ம் -

நல்வாழ்த்துகள் துளசி
நட்புடன் சீனா

said...

வாங்க அமைதிச்சாரல்.

நல்ல வாசனை. அதான் அசராம இன்னும் அடிச்சு ஆடுது போல!

said...

வாங்க விஜி.

நமக்குள்ளே இன்னும் பழங்காலத்து மணம் மூளையில் பதிவாகி இருக்கு போல. வேப்பெண்ணெய்:-)

said...

வாங்க சீனா.

வயசாகுதுல்லே...... கொசுவத்தி தானே பத்திக்குது:-)))))

said...

சோப்புக்கெல்லாம் ஒரு கதையா னு நெனச்சேன்..

அனுபவங்கள் அலாதி ...உங்கள் `எழுத்து நடை அருமை..!

said...

வாங்க திருப்பூர் மணி.

முதல்முறை இங்கே வந்துருக்கீங்க போல!
வணக்கம். நலமா?

உங்க பின்னூட்டம் பார்த்துட்டு, கோபால் ஒரு கதை ஆரம்பிச்சார். அதையும் முழுசாக் கேட்டு வலை ஏத்தணும்:-)))))


வருகைக்கு நன்றி.