Friday, October 01, 2010

பங்காரக்கா ( அ.க.ஆ.ஐ. 1. தொடர்ச்சி)

பங்காருவுக்கு ஆறுவயசானதும் அந்தக்கால ஊர் வழக்கப்படி கல்யாணம். அதுக்குள்ளே நாகரத்தினத்துக்கு இன்னொரு பையன் பிறந்து மூணாவது வயத்துலே! ஊரே மெச்ச அஞ்சுநாள் கல்யாணம் நடந்துச்சு. அக்கம்பக்கத்து வீட்டுப் பெண் குழந்தைகளுடன் பல்லாங்குழி ஆடிக்கிட்டு இருந்த பங்காரு.....திடீர்னு அழுகுரலோடு அங்கே ஓடிவந்த அம்மாவைப் பார்த்ததும்....என்ன ஏதுன்னு தெரியாம முழிச்சதும்,. அடிப்பாவி உன் நிலைமை இப்படியாச்சேன்னு கட்டிப்பிடிச்சு அம்மா அழுததும் பார்த்து அங்கிருந்த மற்ற பெண்களுக்கு என்னமோ விபரீதம் நடந்துருக்குன்னு புரிஞ்சுபோச்சு.

எண்ணி ஏழாம் மாசம் பங்காருவின் கணவன் போய்ச்சேர்ந்தாச்சு:(


இதை ஒரு நாள் விவரிச்ச அம்மம்மாவிடம், தாத்தா(???) ஃபோட்டோ இருக்கான்னு அசட்டுத்தனமாக் கேட்டுவச்சேன். முகம்கூட நினைவில்லைன்னு சொன்னாங்க. போட்டோ புடிச்சுக்கிட்டால் ஆயுசு கம்மியாகிருமுன்னு ஒரு நெனப்பு இருந்த காலமாச்சே!

ஊரே கூடி மேற்கொண்டு ஆகவேண்டியதையெல்லாம் செஞ்சு, கடைசிக் கட்டமா..... தலையை மழிக்கணுமுன்னு கத்தியோடு நின்னப்ப............. பங்காருவின் அப்பாவுக்கு மூச்சே நின்னுபோகுமோன்னு ஆகி இருக்கு. முடியவே முடியாதுன்னுட்டார். அவருக்கு சப்போர்ட்டா மூத்த மருமகன் ராஜகோபால் இருந்துருக்கார்.

சின்னப்பிஞ்சுக்கு விதவைக்கோலமான்னு நெஞ்சுகிடந்து அடிக்குது. இதுக்கு முன்னால் இதெல்லாம் வேற வீடுகளில் நடந்தப்பத் தோணாத ஒரு உணர்ச்சிப்பெருக்கு, இப்போ தன்னுடைய வீட்டுலேயே நடந்துட்ட சோகத்தால் மனசுலே பாறையைத் தூக்கி வச்சது.

மாமனாரும் மருமகனுமா சேர்ந்து, இந்த அநியாயம் நடக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டாங்க. ஊர்கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கே. பெரியதலைகள் எல்லாம் வைத்தியரைக் கூப்புட்டு என்னென்னவோ சொல்லிப் பார்த்துருக்காங்க. சாஸ்த்திரம் சம்பிரதாயத்தை மீறி நடக்கும் குடும்பத்தை ஊர் ஒதுக்கி வச்சுருச்சு. இவுங்க நிலத்துலே யாரும் இறங்கி வேலை செய்ய வரலை. வைத்தியம் பார்த்துக்கன்னு பொழுதுவிடிஞ்சதும் வரும் கும்பல் சுத்தமா நின்னு போச்சு.

மனுசன் சக மனுசனுக்குச் செய்யும் பெரிய கொடுமை இது. யாரும் பேச்சுவார்த்தை வச்சுக்கமாட்டாங்க. நேரில் பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போயிருவாங்க. முதுகுக்குப் பின்னால் கேலி பேசும் கூட்டம். வைத்தியரின் பால்யகால நண்பர்கள் கூட முகம் முறிச்சுக்கிட்டுப் போயிருக்காங்க. வெளியே போனால் இப்படி. வீட்டுக்குள்ளெ இருந்தால் வாழ்க்கையைப் பறிகொடுத்த குழந்தையின் முகம்.

அப்பதான் ராஜகோபால் ஒரு ஐடியாக் கொடுத்துருக்கார். பேசாம ஊரைவிட்டுத் தொலைதூரம் போயிறலாமுன்னு. சின்ன ஊரில் இருந்தா கடைசிவரை இப்படியேதான் இருக்கவேண்டி இருக்கும். பேசாமப் பட்டணம் போயிட்டா, அங்கே யாரும் யாரைப்பத்தியும் கவலைப்படமாட்டாங்கன்னு.

இந்த முடிவுக்கு வந்ததும் எல்லா காரியங்களும் மளமளன்னு நடந்துருக்கு. ஊர் நாட்டாமைகிட்டே போய் ஊரைவிட்டுப் போறோம். எங்க நிலம்நீச்சை விக்கணுமுன்னு சொன்னதும், அடிச்சது அதிர்ஷ்டமுன்னு அடிவிலைக்கு வீட்டையும் நிலத்தையும் வாங்கிக்கிட்டாங்க.

எத்தனையோ தலைமுறைகளா வாழ்ந்த சொந்த ஊரைவிட்டு மதராஸ் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தாங்க. ராயபுரத்துலே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் போட்டு, அப்புறம் ஒரு பெரிய வீட்டை வாங்குனாங்க. வருமானத்துக்கு எதாவது தொழில் வேணுமே..... ராஜகோபால் ஒரு பொடிக் கம்பெனியை ஆரம்பிச்சார். கலப்படமே இல்லாத தரமான நயம் பொடி. லட்சுமியின் பார்வை இந்தப் பக்கம் பார்த்துச்சு. தொழில் நல்லா முன்னேறி அந்தக் காலத்துலேயே லண்டனுக்கு ஏற்றுமதியாச்சு. உள்ளுரிலும் அங்கே இங்கேன்னு நாலைஞ்சு கடைகள் ஆரம்பிச்சுச் சில்லரை யாவாரம். வேலைக்கு ஆட்களை வச்சு ஒரு முப்பது நாப்பதுபேருக்கு வேலையும் கொடுத்து நல்லாவே நடக்குது எல்லாமே.

பங்காரு பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சதும் பத்தாப்பு முடிச்சதும், இதுக்கிடையில் வீட்டுலே வந்து சொல்லிக்கொடுத்த பாட்டு டீச்சரிடம் பாட்டுக் கத்துக்கிட்டதுமா வருசங்கள் ஓடிப்போச்சு.

மகளைப் பத்துன கவலையிலேயே அப்பா கண்ணை மூடிட்டார். தாயார் சின்னம்மாவோட கவனிப்பிலும் அக்கா நாகரத்தினத்தின் பிள்ளைகளோடும் நல்லா வளர்ந்துட்டாங்க பங்காரு. நாகரத்தினம் அண்ட் ராஜகோபால் தம்பதிகளுக்கு 'ஆண்டவன்' புத்திரபாக்கியத்துலே குறை ஒன்னும் வைக்கலை. வரிசையா ஏகப்பட்டது. எண்ணிவச்சதுபோல ஆணும் பொண்ணும் ஆறாறு. ஆனால் அதுலே அல்பாயுசுலே போனது மூணு.

பங்காருவுக்கு தன் வாழ்க்கையில் நடந்த எதுவுமே மனசில் நிக்கலை. எல்லாரையும் போலவே இருந்துருக்காங்க. ராஜகோபாலும் எல்லாரையும் நல்லாப் படிக்கவைக்கணும் என்றதையே குறிக்கோளா வச்சுருக்கார். இருப்பது பெரிய பட்டணம் என்பதால் பெண்கள் கல்வி கற்கவும் பள்ளிக்கூடம் போகவும் தடை ஏதுமில்லை. சொல்லிவச்சதுபோல பெண்குழந்தைகள் எல்லோருமே நல்லாவும் படிச்சாங்க.

பங்காருவுக்கு ஒரு கலியாணத்தைச் செஞ்சு வச்சுருக்கலாம். ஆனால்..... என்னதான் இவுங்க புறச்சூழ்நிலையில் மாறினாலும் உள்மனசுலே 'விதவை விவாகம்' தப்புன்னு இருந்துருக்கும் போல. படிச்ச பெண்கள் அப்பெல்லாம் டீச்சர் வேலைக்கு போவாங்களாம். பங்காருவையும் டீச்சரா ஆக்கிடலாமுன்னு காஞ்சீபுரத்துலே இருந்த பயிற்சிப்பள்ளியில் கொண்டுபோய் சேர்த்துருக்காங்க.

(ஏன்? மதராஸ் பட்டணத்துலே பயிற்சிப்பள்ளிகள் இல்லையா ? குறுக்குக்கேள்வி கேட்ட எனக்குச் சரியான விவரம் கிடைக்கலை. இப்ப எழுதிக்கிட்டு வர்றதெல்லாம் அப்பப்பக் கிடைச்ச விவரங்களை மனசில் சேர்த்து வச்சுன்னு வச்சுக்குங்க)

குடும்பத்தில் வேலைக்கு போன முதல் ஒர்க்கிங் லேடி பங்காருதான். இதே பேட்டையில் எதோ ஒரு பள்ளிக்கூடத்துலே வேலை கிடைச்சது. முதல் சம்பளம் ரெண்டு ரூபாய்!

மச்சினியை கரை ஏத்திட்ட நிம்மதியோ என்னவோ ராஜகோபால் கண்ணை மூடிட்டார். ஆண்பிள்ளைகள் ஒன்னும் சரியில்லை. கவனிச்சு வழிநடத்த தலைவன் இல்லாமப்போனதும் வியாபாரம் படுத்துருச்சு. இப்போ இருக்கும் வீடு ஒன்னுதான் பாக்கி.

சேமிப்பை வச்சுக்கிட்டு நாகரத்தினம் குடும்பத்தை நிர்வாகம் செஞ்சு, பெண்களை நல்லாவே படிக்க வச்சுட்டாங்க. கடைசிப்பொண்ணுங்க ரெண்டும் உயர்நிலைப்பள்ளியில். இவுங்க கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சால் பாரதம்போல கிளைக்கதைகள் ஏகப்பட்டது ஆகிரும். பின்னொருநாளில் பார்க்கலாம். இப்போ நம்ம கதையின் நாயகி பங்காரு:-)

ஒரு சமயம் 'சொந்த ஊருலே' இருந்து வந்த சொந்தக்காரங்க ஒருத்தர் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாமப் பழங்கதைகளைப்பேசி மூக்கை உறிஞ்சிக்கிட்டு பிலாக்கணம் பாடுனப்ப, பங்காருவுக்குத் தெரிஞ்சுபோச்சு தன் பழைய வாழ்க்கைச் சம்பவம். (இதுக்குத்தான் சிலரை வீட்டுப்படி ஏற விடக்கூடாதுங்கறது)

மனசுலே என்ன தோணுச்சோ..... பொட்டு வைக்கறதையும் தலையிலே பூ வச்சுக்கறதையும் விட்டுட்டாங்க பங்காரு. வெறும் பவுடர் மட்டும் உண்டு. அதுவும் 'குட்டிக்கூரா' மட்டுமே. கொஞ்ச தூரத்துலே இருக்கும் இன்னொரு பேட்டையில் வேலை இருக்குன்னு தெரிஞ்சப்ப, அங்கே வேலை வாங்கிக்கிட்டு அந்த ஊருக்கே தாயும் மகளுமா போயிட்டாங்க.

நாகரத்தினம் குடும்பத்துலே மூத்த பொண்ணு டாக்குட்டர் வேலைக்குப் படிச்சாங்க. மத்த பொண்ணுகளிலே ஒருத்தர் மேல் படிப்பு படிக்க விரும்பலை. மூணு பேர் கல்லூரிப்படிப்பை முடிச்சு டீச்சர் வேலைக்கும் படிச்சு முடிச்சாங்க. இப்போ குடும்பத்துலே நாலு டீச்சர்மார். கடைசி பொண்ணைத்தவிர மத்த எல்லோருக்கும் கல்யாணம் ஆச்சு. சேமிப்பு முழுசும் கரைஞ்சு போன நிலையில், இருக்கும் வீடு ஒன்னுதான் மிச்சம். அந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. 'வீட்டை வித்துட்டு நாங்க பங்கு போட்டுக்கறோமு'ன்னு மூத்த மகன் சதா தொல்லை. பொறுக்கமுடியாம 'என்னவோ செஞ்சுக்குங்க'ன்னு சொல்லிட்டு, நாகரத்தினம் தங்கை பங்காரு வீட்டுக்கே வந்துட்டாங்க.

மூணு பெண்களிடமும் கொஞ்சநஞ்சம் இருந்த நகைநட்டைல்லாம் வித்து, ஒரு இடம் வாங்கி வீடு ஒன்னு கட்ட ஆரம்பிச்சது அப்போதான். நாகரத்தினத்துக்கு நிர்வாகம் நல்லாவே தெரியும். எல்லாம் வாழ்க்கைக்கல்வி. புருசனைப் பார்த்துக் கத்துக்கிட்டதுதான்.

நாகரத்தினத்தின் வாரிசுகள் எல்லாருக்கும் பங்காரு அக்காதான். சித்தின்னு கூப்பிட்டுப் பழகவே இல்லை.

அந்த அக்கா எப்படி அம்மம்மா ஆனாங்கன்னு அடுத்த பதிவில் பார்க்கலாம்..சரியா?







20 comments:

said...

Teacher,

Heart touching kadhai, Bangaruakka kadhai rombave urukkama yerunthathu. Nella kaalam, pattinam vandhu sernthathu, ellainna ennum avangalai kashtapaduthiyerupanga, thaanga mudiyale. Entha madhari kashtapattavangakitta neriya potentional yerukkum, mathavanga ellarukkum vazhikatiyae irupanga.

Nalaikku varaikkum wait panna mudiyalae, micha kadhaiyai innikae yezhudhidunga please.

-Sri

said...

மனுசன் சக மனுசனுக்குச் செய்யும் பெரிய கொடுமை இது. யாரும் பேச்சுவார்த்தை வச்சுக்கமாட்டாங்க. நேரில் பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போயிருவாங்க. //

ஊர் கட்டுப்பாடுங்கற பேர்ல இன்னமும் இந்த மாதிரி கொடுமைங்க சில கிராமங்கள்ல நடந்துக்கிட்டுத்தான இருக்கு :(

said...

பங்காரு எந்தப் பொண்ணைக் கூட்டிக் கிட்டு ஊருக்க வந்துட்டாங்க?
will read and come back.

said...

ஊர்விட்டு கிளம்புவது சங்கடம் தான்
ஆனா மதிக்காதவங்களை தூக்கிப்போட்டு
முன்னேறியதற்கு மனதைரியம் இருந்தது நல்லதா போச்சு..

said...

அந்தக்காலத்திலும் எல்லோரையும் படிக்க வைத்திருகிறார்கள் என்பதே மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது டீச்சர்.

said...

பங்காரக்காவை பத்தி படித்ததும் மனசு கஷ்டமா இருக்கு.. ஊர்விட்டு வருவது மிகவும் கொடுமையானதுதான்..ஆனால் இப்படிப்பட்டவங்கக்கிட்டயிருந்து விலகி வந்து முன்னேறியது நல்லது...

said...

மார்கோ சோப்பு அம்பாசடர் ஆயிட்டீங்களோனு நினைச்சு படிச்சா ரொம்ப மனதை உருக்கும் கதை. பங்காரு எப்படி அம்மம்மா ஆனாங்க ?

said...

தொடக்கமே மனசுல என்னமோ தாக்கத்தை உண்டுபண்ணிடுச்சு டீச்சர்.

பங்காரான்னா கன்னடத்தில தங்கம்னு அர்த்தம்...அவங்களும் அப்படியா டீச்சர்?

said...

(இதுக்குத்தான் சிலரை வீட்டுப்படி ஏற விடக்கூடாதுங்கறது)

-----------

நிஜம்...

said...

வாங்க ஸ்ரீநிவாஸன்.

ரொம்பச்சரி. எங்களுக்கெல்லாம் பங்காரக்காதான் ரோல் மாடல்!

said...

வாங்க டி பி ஆர்.

ஊர்க்கட்டுப்பாடுன்னு நடக்கும் கொடுமைகளை எப்பதான் ஒழிக்கப் போறோமோ:(

said...

வாங்க வல்லி.

மருந்து மாறி இருக்கா? என்ன கன்ஃப்யூஷன்?

said...

வாங்க கயலு.

தாத்தா எடுத்த தீர்க்கமான முடிவு அது. இல்லேன்னா என்னென்ன நடந்துருக்குமுன்னு நினைச்சாலே பயமா இருக்கு.

said...

வாங்க சுமதி.

கல்வி முக்கியம். அதுவும் பெண்குழந்தைகள் கட்டாயம் படிக்கணுமுன்னு நினைச்ச தாத்தாதான் க்ரேட்!

said...

வாங்க மேனகா.

அந்தக் காலத்துலே ஊரை எதுத்து நின்னு கஷ்டப்பட்டுருக்காங்க. பின்னால் உணர்ந்துதான் கிளம்பிட்டாங்க.

said...

வாங்க விருட்சம்.

இந்த பதிவுக்குப் பதில் உடனே போட முடியாம சில தடங்கல்கள்.

எப்படி ஆனாங்கன்னு இப்போ தெரிஞ்சுருக்குமே, மூணாவது சாப்டரில்!

said...

வாங்க சிந்து.

தெலுங்குலேயும் தங்கம்தான்.

said...

வாங்க ஈரோடு தங்கதுரை.

அடிபொளின்னு சொல்லணும் உங்க பேச்சை. விசுவே ஆன்னு பார்த்தாரே!

சில சொற்கள் சொல்லக்கூடாதுன்னாரு பாருங்க. அது எப்பவும் நம்ம எல்லார் மனசுலேயும் இருக்கணும்.

said...

வாங்க மிஸ்டர் கேநாட்டி!!!

என்னங்க பேரு இது!! நல்லா...... இருக்கு போங்க:-)

said...

வாங்க சாந்தி.

ஆமாம்ப்பா. சிலர் வந்தாங்கன்னா..... நிம்மதியா இருக்கும் மனசைக் கஷ்டப்படுத்திட்டுத்தான் கிளம்புவாங்க:(