நம்ம கோபாலுக்கு மிருதங்கம் கத்துக்கணுமுன்னு முந்தியெல்லாம் ஒரே ஆசை.
சும்மாத்தட்டும் சமாச்சாரமில்லை. சுமார் ஏழு வருசமாவது கத்துக்கிட்டால்தான் வாசிக்கமுடியுமுன்னு சொன்னதுக்கு மனுசர் திகைச்சுப்போய், 'அப்ப சுலபமாக் கத்துக்கும் இசைக்கருவி இருக்கா? எது'ன்னார். 'இருக்கே! ஜால்ரா' :-))))
தஞ்சாவூர் சந்திரா, கலியாணம் கட்டி இங்கே சண்டிகர் வந்தது 2002 வது வருசமாம். மாலை நேரங்களில் சங்கீதம் சொல்லிக் கொடுக்கறாங்க . 15 மாணவமணிகள் தற்சமயம். கணவர் கார்த்திக் மிருதங்கக் கலைஞர். இவரும் மிருதங்கம் வாசிக்கச் சொல்லிக்கொடுக்கறார்
தஞ்சை சந்திரா
கார்திக்
கோவிலில் நவராத்திரிக்கான இன்றைய ஸ்பெஷல், கர்நாடக சங்கீதம். சந்திராவும் அவர் மாணவிகளும் பாடுறாங்க. மிருதங்கம் வாசிக்கிறார் கார்த்திக்.. இவருக்கு ஒரு சிஷ்யப்பிள்ளை. வயசு ஒரு நாலு இருக்கும். சின்னதா ஒரு மிருதங்கத்தை ஒரு தோளிலும் சின்னப்பொடியனை இன்னொரு தோளிலுமாச் சுமந்து வந்தாங்க பொடியனின் அம்மா.
கச்சேரிமேடையில் கலைஞர்கள் வந்து உக்கார்ந்தாங்க. குட்டிப்பையனும் வந்து கம்பீரமா அமர்ந்தார். விநாயகர் துதியோடு பாட்டு ஆரம்பிச்சது. ஒரு சில பாட்டுகளைத்தவிர மீதியெல்லாம் பஜன் ஸ்டைல். குட்டிப்பையன் அபிநவ், சின்னக்கையால் விரல்தொட்டு தாளக்கட்டு சொல்லி வாசிக்க ஆரம்பிச்சார்.
பஜனைப்பாட்டுகளை எல்லோரும் நல்லாவே பாடுனாங்க. அப்புறம் சில கீர்த்தனைகள் சந்திரா பாடுனாங்க. ஆனாலும் இன்னிக்கு 'நிகழ்ச்சித் திருடர்' அபிநவ்தான்னு தனியாச் சொல்லணுமா என்ன:--))))
பங்கேற்ற கலைஞர்களுக்கு மாலை மரியாதை எல்லாம் 'பெரியவர்கள்' கையால் ஆச்சு. 'ஆலை இல்லாத ஊரின் இலுப்பைப் பூக்கள்.' கூட்டம் வேற அதிகமில்லை. பூஜை முடிஞ்சு முருகன் போட்ட சாப்பாடும் ஆச்சு.
குருக்கள் பிரகாஷ் தினமும் கிருஷ்ணமாரியம்மனுக்கும் விஷ்ணு துர்கைக்கும் விதவிதமா அலங்காரம் செய்யறார். எல்லாமே ஒவ்வொரு அழகு.
முழு விழாவையும் கவர் பண்ணிக்கணுமுன்னு நினைச்சதுலே, ஒரு நாளை மிஸ் பண்ணவேண்டியதாப்போச்சு:( அன்னிக்கு ஹிந்தி பஜன் இருந்துருக்கு.
உள்ளூர் தென்னிந்திய மக்களில் (முக்கியமா ஆந்திரர்கள் )பலர் தினமும் ஒன்பது சிறுமிகளுக்கு காலில் மஞ்சள் தடவி நவராத்திரி தேவியரா அவுங்களை வணங்கிப் பரிசுகள் கொடுப்பது தனி ஆவர்தனமா தினம்தினம் நடக்கும் நிகழ்ச்சி. சிலசமயம் தேவியரின் எண்ணிக்கை குறைஞ்சுருது. அதனால் என்ன..... கார்த்திகைப்பெண்கள். சப்த கன்னியர், அஷ்டலக்ஷ்மி, நவநாயகின்னு சந்தர்ப்பத்துக்குத் தகுந்தமாதிரி வச்சுக்கலாம்.
ஆறாம் நாளுக்கு அய்யப்ப சமாஜ பஜனை கோஷ்டி. ஏழுன்னா ஏழுக்குத் தொடங்கிட்டாங்க. ஒவ்வொரு பாட்டுக்கிடையில் 'ஸ்வாமியே சரணம் ஐயப்பா' கோஷம் மேடையிலே முழங்குனதால் நம்ம 'வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா' மிஸ் ஆகிருச்சு. ஹரிஹரபுத்திரனுக்குள்ள கோஷமே ஹரன் புத்திரனுக்கும் ஆச்சுன்னு வச்சுக்கணும். கூட்டம் ரொம்பவே கம்மி. பார்வையாளர்களைவிட மேடையில் பாடகர்கள் கூட்டம் அதிகம்.
ஆறாம் நாள் (கேமெராக் கொண்டு போக மறந்துட்டேன்!) கோபாலின் செல்லில் எடுத்தவை.
சப்தமிக்கு சீதாலக்ஷ்மி பாட்டி (வயசு 80) நடன நிகழ்ச்சிக்கு முன்னால் கடவுள் வாழ்த்தா நாலு பாட்டுப் பாடினாங்க.
ஏழாம்நாளுக்கு ஒரு ஸ்பெஷல் ஷோ. சுசித்ரா மித்ரா அவர்களின் நடனம். கலாக்ஷேத்ரா மாணவி. கொல்கத்தா கலாமண்டலத்திலும், நம்ம பத்மா சுப்ரமணியம் அவர்களிடமும் படிச்சுருக்காங்க. ரபீந்த்ரபாரதி சர்வகலாசாலையில் நடன விரிவுரையாளரா வேலை பார்த்துருக்காங்க. சங்கீதமும் படிச்சவுங்க. தூர்தர்ஷனின் 'ஏ' கிரெடு ஆர்டிஸ்ட். சுருக்கமாச் சொன்னாச் சகலகலா வல்லி. இந்தியாவின் பல இடங்களிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ச்சி கொடுத்துருக்காங்க. நம்ம தமிழ்நாடு அரசும் இவுங்களை கௌரவிச்சு இருக்கு. இப்போ சண்டிகரில் 'பதம்' என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தறாங்க. இவ்வளவு இருந்தும் 'டவுன் டு எர்த்' பெர்ஸன். மேலே வளரவளர பணிவும் அடக்கமும் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமாச்சே! இந்த குணங்கள் இருப்பவர் மிகச்சிலர் என்பதுதான்.... நிதர்சனம்.
சட்புட்டுன்னு மாணவிகளை அரங்கற்றமேடை ஏத்திவிட மாட்டாங்க. 100 சதமானம் நேர்த்தி வந்தபிறகுதான் அரங்கேற்றம் என்பதில் கவனமாக இருப்பதால் நாட்டியத்தில் ஒரு பர்ஃபெக்ஷன் வந்துருது. கண்டிப்பான ஆசிரியை.
இன்னிக்கு அவுங்க மாணவர்கள் சிலருடன் மேடை ஏறினாங்க. மூணு க்ரூப்பா அறிமுகம் ஆச்சு. இந்த ஒருசில வருசமாப் படிக்கும் மாணவிகள், ஏழெட்டு வருசமாப் படிக்கும் மாணவிகள். அப்புறம் ஸீனியர் மோஸ்ட் என்ற வகையில் அரங்கேற்றம் செய்தவர்கள். 'நான் நிறைய மேடை நிகழ்ச்சிகள் நடத்தியாச்சு. என் மாணவர்கள் திறமையோடு வருங்காலத்தில் மேடையில் ஜொலிச்சு நல்ல பெயர் வாங்கணும் என்பதுதான் என் குறிக்கோள்' சுசித்ரா சொன்னதும் நாங்கள் ஜோரா ஆமோதிச்சு தட்டோ தட்டுன்னு தட்டுனோம் எங்கள் கைகளை.
கடைசி நடனத்தில் சுசித்ராவே பங்கெடுத்தாங்க. மகிஷாசுர மர்த்தனம்! கல்கத்தா காளியா வந்தது ரொம்பவே பொருத்தம்.
இன்னிக்கும் கோவிலில் சாப்பாடு ஆச்சு. 'ஃபீட்பேக் தாங்க மேடம்'ன்னு கேக்கறாங்க. (யாரைப்பார்த்து என்னா கேள்வி கேட்டீங்க? நான் போடாத பின்னூட்டமா? ஹாஹா....) வலையில் பாருங்கன்னு சொன்னேன். சுண்டல், சக்கரைப்பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் இப்படி நாலு வகை தினமும் விளம்புனாத் திங்கக் கசக்குமா??? அந்த மெயின் ஐட்டம் மட்டும் புளியோதரை, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம்ன்னு தினத்துக்கு ஒன்னா மாறுது. அப்பப்ப சக்கரைப்பொங்கலுக்கு ரீப்ளேஸ்மெண்ட்டா பால்பாயஸம்.
தமிழன் வந்த இடத்துக்கு முருகனும் வந்து இப்படி நம்மையெல்லாம் கூப்புட்டுக் கொண்டாடுறான். நடக்கட்டும் நடக்கட்டும்! நடத்துறவன் இருக்க நமக்கென்ன கவலை. இல்லீங்களா?
எட்டு ஒம்போதை அடுத்த பதிவில் தொடரலாம்.
Friday, October 15, 2010
நவராத்திரி 4 6 7 ஆம் நாட்களில்
Posted by துளசி கோபால் at 10/15/2010 04:46:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
"எட்டு ஒம்போதை" அடுத்த பதிவில் தொடரலாம்.//
டீச்சர் நீங்களுமா. ஒன்பதை என்று எழுதி இருக்கலாம்.
வாங்க தமிழ் உதயம்.
ஆமாம்..... இருக்கலாம். ஆனால் எல்லாமே பேச்சு நடையில் இருக்கும்போது....இதுதான் சரியாவரும் என்ற 'என் கணக்கு'க்குக்காக.
நவராத்திரி நல்லவிதமாய் போவதில் சந்தோஷம்.
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்
கலை நிகழ்ச்சிகளென்ன, சாப்பாடென்ன,பரிசு வழங்குதலென்ன.. என்ன!! என்னன்னு உங்க நவராத்திரி களைகட்டிடுச்சு.. :-)))
நல்ல கவரேஜ் மற்றும் ஃபீட் பேக் ;))
அடடா,சண்டிகர் நவராத்திரி இந்தப் போடு போடுதே!!
திறமை இருக்கிறது பத்தாது துளசி. பாராட்டறதுக்கு உங்களை மாதிரி ஆளும் வேணும்.
நான் அந்தக் கல்கத்தா சுசித்ராவைச் சொல்கிறேன்.
நீங்களும் கோபாலும் அந்தப் பிள்ளைக்குப் பரிசு கொடுக்கும் போட்டோ மனசை என்னவோ செய்துவிட்டது. ரொம்ப சந்தோஷம் துளசி.
வாங்க புதுகைத் தென்றல்.
இந்தப் பண்டிகை பாருங்க ..... நாடு முழுசும் வெவ்வேற காரணத்துக்காக ஒரே சமயத்துலே கொண்டாடறாங்க.
வருசப்பிறப்பு மட்டும் இப்படி வரலைன்றதைக் கவனிச்சால் வியப்புதான் எனக்கு,
வாங்க அமைதிச்சாரல்.
ஒன்னுமில்லாம நாலைஞ்சு மாசம் போனதுக்கு இந்த ஒன்பது நாள் ஈடு கட்டுது போல:-)))))
வணக்கம்! சீதா பாட்டியின் பாட்டையும் போட்டால் நன்று.பத்மா
வாங்க கயலு.
ஃபீட்பேக் கேட்டதும் அப்படியே திகைச்சுட்டொமுல்லெ:-)))))
வாங்க வல்லி.
இத்தனைவருசமும் இதெல்லாம் நடந்துதானே இருக்கும்? ஆனாலும் நம் மக்களுக்கு விளக்கிச் சொல்ல என்னைவிட்டா வேற யாரு இருக்கா?:-))))
முருகன் நம்மை செலக்ட் செஞ்சுட்டான்ப்பா.
இதுலே நம்ம ராஜசேகர் வேற.... சபைக்கு நம்மை அறிமுகம் செய்யும்போது 'பெரிய எழுத்தாளர்'ன்னார். ஜனங்க அப்படியே நம்பிட்டாங்க!!!!
ஹாஹாஹாஹா
ஐ வாஸ் ச்சோஸன்.......( இப்படித்தானே சொல்லணும்?)
ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடி வீட்டுக்கு முன்னால் தான் இருக்குது. தேவியர் இல்லத்தின் பலமே துளசி தளம் தான். ஆனா ஒவ்வொரு போட்வுல ஏன் பின்னால போய் நிக்குறீங்க(?)
வாங்க பத்மா.
பாட்டியின் பாட்டை ரெக்கார்ட் செய்யலைப்பா :(
இந்த வயசுக்கும் பாட முன்வந்தாங்களே அதுதான் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
வாங்க ஜோதிஜி.
நெருங்கிய தோழி வீட்டில் பின்பக்கம் துளசி மாடம் இருக்கு:-)
தேவியர்கள்ன்னு தட்டச்சும்போது நம்ம வீட்டு தேவியர்களை நினைச்சேன். மூவரும் நலம்தானே?
பாட்டு கச்சேரி,நடனம்,சாப்பாடு அனைத்தும் அருமை டீச்சர்:))))
நன்றாக இருக்கு விபரங்கள்.
எல்லாமே அருமை.
சாமி அலங்காரம் எல்லாம் ரொம்ப நேர்த்தியா இருக்கு. எவ்வளவு பொறுப்பா நிகழ்ச்சி எல்லாம் நடத்தறாங்க. பாராட்ட வேண்டிய விஷயம்.
வாங்க சுமதி.
வருகைக்கு நன்றிப்பா.
தினம் சமைக்காம இருந்ததுகூட நல்லாத்தான் இருந்துச்சு:-))))
வாங்க குமார்.
இந்தக் கோவில் மட்டும் இல்லைன்னா நம்ம சண்டிகர் வாழ்க்கை காய்ஞ்சுகிடந்துருக்கும்.
வாங்க ராம்ஜி_யாஹூ.
தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிங்க.
வாங்க விருட்சம்.
நம்ம குருக்கள் இருப்பதை வச்சே நல்லா அலங்கரிக்கறார்.
சண்டிகரில் 9 நாளும் தொடந்து கலைநிகழ்ச்சிகளை நடத்துனது நம்ம கோவிலில்தான்.
நவராத்திரி பண்டிகை கோலாகலம்.
வாங்க மாதேவி.
கோலாகலம் எல்லாம் முடிஞ்சு கொலுவை எடுத்தப்ப மனசுக்குக் கொஞ்சம் வெறுமையா இருந்துச்சுப்பா.
இனி அடுத்த வருசம் வரை ஓய்வு, பொம்மைகளுக்குத்தான்:-))))
வித விதமான சாப்பாடோட டீச்சரின் வர்ணனை சூப்பர்.
பாட்டு, நடனம் எல்லாம் நவராத்தியை பிராமதப்படு்த்துது.
நம்ம கோபாலுக்கு மிருதங்கம் கத்துக்கணுமுன்னு முந்தியெல்லாம் ஒரே ஆசை.
-----------------------------------------------------------------------------
என்னுடைய தகப்பனார் நான் சிறுவனாக இருந்த போது எனக்கு மிருதங்கம் கற்பிக்க ஆசை. ஆனால் எனக்குத் தான் விருப்பமில்லை. விருப்பமில்லாமல் 3,4 வருடங்கள் சென்று கற்றேன்.
வாங்க சிந்து.
விருந்து ரொம்ப பலம். அதான் பதில் சொல்ல இத்தினிநாள் ஆகிருச்சு:-)))
வாங்க அரவிந்தன்.
//விருப்பமில்லாமல் 3,4 வருடங்கள் சென்று கற்றேன்.//
அப்ப அரை வித்துவானா ஆகி இருப்பீங்களே!!!!!
Post a Comment