Wednesday, October 27, 2010

கூலி மிகக் கேட்பார்.........

நேத்து கர்வா ச்சவுத் பண்டிகையாம். நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரும் சரோஜ், முந்தாநாள், பண்டிகை எப்ப? ன்னு கேட்டதும் நான் நம்ம தமிழ் நாள்காட்டி பார்த்து சதுர்த்தி புதன்கிழமைன்னு சொன்னேன். ஆனா பாருங்க நேத்து (செவ்வாய்)தான் அதுக்கான நாளுன்னு திங்கள் மாலை கடைக்குப் போனப்பத் தெரிஞ்சது.

ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸை ஒட்டி இருந்த இடத்தில் தாற்காலிகமா ரெண்டு கூடாரங்கள் முளைச்சுருக்கு. 'சௌபாக்கியச் சின்னங்களா' வளையல், பொட்டு, மருதாணின்னு அலங்காரச்சாதனங்கள் விற்பனை ஜரூரா நடக்குது. லேடீஸ் ப்யூட்டி பார்லர் மெஹந்தி போட்டு விட்டுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு கைகளும் நீட்டி உக்கார்ந்திருக்கும் மங்கையர். மருதாணி நிறைச்ச கூம்புகளை கொஞ்சமாக் கத்தரிச்சு, நூல்போல வரும் பசையைப் பரபரன்னு கைகளில் கோலமா வரைஞ்சுகிட்டு இருக்காங்க. கொஞ்சநேரம் நின்னு பார்த்தேன். என்ன ஒரு வேகம்! என்ன ஒரு டிஸைன்!!!! சூப்பர்! அம்பதே ரூபாய்தானாம்! போட்டுக்கயேன்னார் கோபால். ஆக்கிப்போட்டாப் போட்டுக்கறேன்னேன். ஆக்குனா மட்டும் போதாது. ஊட்டியும் விடணும் ஆமாம்:-)))
நாலைஞ்சு வீடுகளில் வேலை செய்யும் சரோஜுக்கு அஞ்சு குழந்தைகள். புருஷனுக்கு வேலை வெட்டி ஒன்னும் கிடையாது. வீட்டிலே 'சும்மா'தானாம். இதுலே வேலைக்கு வரும்போது அப்பப்ப மூத்த பொண்ணைக் கூட்டிக்கிட்டு வரும் வழக்கம்வேற. 'பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு. சின்னக் குழந்தையை வீட்டு வேலைக்கு வச்சுக்கறது சட்டப்படி குற்றம்'னு மிரட்டி வச்சேன்.

'வேற எங்கேயும் கூட்டிப்போக மாட்டேன். உங்க வீடுன்றதால் கூட்டிக்கிட்டு வந்தேன்.எனக்கு உதவியா இருக்குமே' ன்னு பதில். ட்ரெய்னிங் கொடுக்கறமாதிரி இருக்கே! தரை நோகாம துடைப்பத்தைப் பிடிச்சுப் பெருக்குனதுலே தெரிஞ்சது. இங்கெல்லாம் உக்கார்ந்துக்கிட்டே, நகர்ந்து நகர்ந்து பெருக்கறாங்க.
வேலை செய்யறதில் படு உஷார் நம்ம சரோஜ். வீடு பார்க்க வந்தப்பவே முன்னே இருந்த மிஸஸ். பானர்ஜியிடம் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த சரோஜ், நாம்தான் இந்த வீட்டுக்கு வரப்போறோமுன்னதும் 'நானே உங்களுக்கு வேலை செய்யறேன்' னு கேட்டுக்கிட்டதும் ஓக்கேன்னுட்டேன். புது இடத்திலே யாராலே உதவியாளர்களைத் தேடிக்கிட்டு ஓட முடியும்? எனக்கோ நியூஸி வாழ்க்கையில் உதவியாளர் இல்லாமலேயே எல்லா வேலைகளும் பழகிப்போச்சு. இங்கேயும் பெருக்கித் துடைக்க மட்டுமே உதவி தேவை. எங்கூர் மாதிரி வாரம் ஒரு முறை வீடு முழுக்கச் சுத்தம் செஞ்சாப் போதாது. மார்பிள் தரையெல்லாம் ஒரே தூசியும் அழுக்கும். எங்கெ இருந்துதான் வருதோ!

வேலையில் உஷார்னு சொன்னது நாம் பார்த்தா ஒரு மாதிரி பார்க்காமல் விட்டால் ஒரு மாதிரி. வேறு ஏதோ செய்யும் பாவனையில் வேலை நடக்கும் இடத்துக்கு அருகிலேயே நாம் நின்னோமுன்னால் கை கொஞ்சம் அழுத்தித் துடைக்கும். குனிஞ்சிருக்கும் தலையைத் தூக்காமலேயே அப்பப்ப ஓரக் கண்ணால் நம் இருத்தலை உறுதி செஞ்சுக்கும் ஒரு நோட்டம்! முதலில் சில மாசங்கள் நான் கவனிக்காம விட்டுட்டேன். வேலையைச் செஞ்சுட்டுப் போனால் சரின்னு. அப்புறம் பார்த்தா....... கை தொட்ட இடங்களில் எல்லாம் ஒரே அழுக்கு!

இங்கே பெருக்கித் துடைக்க, வீட்டில் ஜன்னல் கதவு எல்லாம் டஸ்ட் பண்ண, துவைக்க, பாத்திரம் தேய்க்க, காய்கறிகள் நறுக்கிக் கொடுக்க, சமையல் செஞ்சு வைக்க இப்படி ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாச் சம்பளம். அடிஷனல் சர்வீஸா...... எண்ணெய் மாலீஷ் வேற இருக்காம்!!!!!

நாம் வந்த புதுசுலே ரெண்டு பேரா வேலைக்கு வருவாங்க. ஒருத்தர் வீட்டை டஸ்ட் பண்ண. மற்றவர் பெருக்கித் துடைக்க. வேற ஒரு வேலைக்கும் உதவி வேணாம். நான் செஞ்சுக்குவேன். எல்லா மாசமும் நல்லா வேலை செய்தால் கூடுதலாக ஒரு சின்ன ஊக்கத்தொகையும் கொடுத்துக்கிட்டு இருக்கேன். ஒரு மாசத்துலே டஸ்ட் பண்ணும் பொண்ணு கலியாணமுன்னு வேலையை விட்டு நின்னதும், அந்த வேலையையும் தானே செய்வதாக சரோஜ் சொன்னதும் கவலை விட்டதுன்னு இருந்தேன். காசு வாங்குவதில் உள்ள கவனம் வேலை செய்யறதில் இல்லை என்பதுதான் .......

அந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் இருக்குன்னு முண்டாசே சொல்லிவச்சுப் போயிருக்காரே! 'கூலி மிகக் கேட்பார்.........'

ஒன்னும் சொல்லாம திடுக் திடுக்குன்னு வேலைக்கு மட்டம் போடும் பழக்கம் வேற! காரணம்? வேலைக்கு வரச் சோம்பலா இருந்துச்சாம்!!!!! இது வேலைக்காகாதுன்னு ....... லீவு வேணுமுன்னா முன் அனுமதி வாங்கிக்கணும். சொல்லாமல் மட்டம் போட்டால் சம்பளம் அந்த நாளைக்குக் கட்! இது இப்ப நல்லா ஒர்க்கவுட் ஆகுது.

எப்பப் பார்த்தாலும் கணினியில் தட்டிக்கிட்டே உக்கார்ந்துருக்கறதைப் பார்த்து சரோஜுக்கு ஆச்சரியம். என்ன செய்யறேன்னு தெரிஞ்சுக்கணுமாம். இது என்னோட 'தொழில்'ன்னு சொன்னதும் 'காலி பைட்கி பட்டன் தபானா. இத்னாயிஹி!!!' பொட்டி தட்டறோமுன்னு தெரியுது பாருங்களேன்:-))))

இப்ப என்ன திடீர்னு வேலைக்காரர்கள் புராணம்? கர்வா ச்சவுத் கதை ஏத்திவச்சக் கொசுவத்தி:-)

நியூஸியில் ஒரு சமயம் இந்தப் பூஜைக்குப் போனது இங்கே இருக்கு பாருங்க. அஞ்சு வருசம் கழிச்சும் அதே கதைதான்:-)))))
ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் தீனிக்கடைகளில் கூட்டமான கூட்டம். சுடச்சுட 'ஆலு டிக்கி' தயாராகுது! பாத்திரக்கடையை எட்டிப்பார்த்தால் ஒரு ஜோடி, ஜல்லடை வாங்கிக்கிட்டு இருக்காங்க. புதுக்கல்யாணமா இருக்கும்! முதல் பண்டிகை.

'உனக்கும் ஒன்னு வேணுமா, விரதம் இருக்க'ன்னார் கோபால்.

'நகைக்கடைக்குப் போய் தங்கத்துலே இருக்கான்னு பாருங்க. விரதம் இருக்கறேன்'னேன்!25 comments:

said...

அட இன்றைக்கு நான் தான் முதல் ஆளா? மறுபடியும் வருகின்றேன்.

said...

சல்லடை வைரம் பதிச்சது உபயோகப்படுத்தினா, பூஜைக்கு ரெட்டிப்பு பலனாம். அண்ணா கிட்ட சொல்லுங்க.. இதெல்லாம் நமக்காகவா கேக்கிறோம், அவங்களோட நலனுக்காகத்தானே செய்யறோம் :-)))))))

said...

\\அவங்களோட நலனுக்காகத்தானே செய்யறோம் :-))))))//

ஒருத்தருக்கு ஒருத்தர் மேலாவுல்ல இருக்காங்க.. ;)

said...

எங்க வீட்டுல ரெண்டுவேளை வந்து பாத்திரம் தேய்க்க பேசி வச்சது.. 2 மணி ஒருமணியாகி ஒருமணி 12 ஆகி இப்ப பதினொன்றரைக்கே வந்தா நான் இவங்களளக்காக மதிய சாப்பாடை இப்பவே செய்து வச்சிட்டு
கட்டி கட்டியாத்தான் எடுத்து போட்டுக்கனுமா..?

திரும்பல்லாம் வரமுடியாது உங்களுக்காக் நான் என்ன பார்க் பென்ச்லயா உக்காந்திருக்கிறதுன்ன்னு
கேக்கறாங்க, எல்லாரும் வேலைக்கு போறதால் ஒருமுறை வந்தாப்போதும்ன்னன இருக்கறதல் எங்களை போல வீட்டுப்பெண்களை
மதிக்கமாட்டேங்கறாங்க..:(

said...

வைரச் சல்லடையா. இதுக்காகவே ரெண்டு நாள் விரதம் இருக்கலாமே:)
ரெண்டு மணிக்கொரு தடவை ஒரு மினி மீல்:)
இன்னிக்கு எங்க வீட்ல யாருமே வேலைக்கு வரவில்லை. நிம்மதி. நாளைக்கும் வரவில்லைன்னால் கஷ்டம் தான்:)
ஆனால் எல்லா இடத்திலேயும் இதே கதையா என்றால் அதுதான் இல்லை. வேலை வாங்கத்தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். அதுக்கெல்லாம் தனி ட்ரெயினிங் வேணும்.

said...

மெஹந்தி போட்டாச்சு :)
சல்லடையும் பார்த்தாச்சு :)

said...

மருதாணி என்றால் எனக்கும்,என் பெண்ணிற்கும் மிகவும் பிடிக்கும் டீச்சர்.ஆனால் மெகந்தியில் மருதாணி வாசனை இருப்பதில்லை டீச்சர்.வேலைக்காரர்களை பற்றி என் அம்மாக்கூட இப்படித்தான் சொல்கிறார்கள் டீச்சர்:))))

said...

அம்மா இரண்டு கைகளில் மருதாணி வைத்து ஊட்டியும் விடுவார்கள்.அம்மாவின் நினைவு வந்து விட்டது.

சாரை ஆக்கிபோடவேண்டும்,ஊட்டிவிட வேண்டும் என்றதற்கு என்ன சொன்னார்கள் அதை சொல்லவே இல்லையே.

said...

ஒரு வேலைக்காரி போயிட்டா இன்னொரு வேலைக்காரி கிடைக்கறதுலே இருக்க கஷ்டம் இருக்கே!!!! சொல்லி முடியாது...பி.எஃப் ஒண்ணுதான் இல்லே மற்றபடி எல்லாம் கவர்ன்மென்ட் ரூல்தான்!!!!

said...

தீபாவளியை முன்னிட்டு இங்கையும் டி.நகர்ல ரெண்டு பக்கமும் இந்த மாதிரி மருதாணி ஆளுங்க கூட்டம் டீச்சர். ;))

said...

வீட்டுக்கு வீடு வாசப்படி...

said...

வேலையில் உஷார்னு சொன்னது நாம் பார்த்தா ஒரு மாதிரி பார்க்காமல் விட்டால் ஒரு மாதிரி. வேறு ஏதோ செய்யும் பாவனையில் வேலை நடக்கும் இடத்துக்கு அருகிலேயே நாம் நின்னோமுன்னால் கை கொஞ்சம் அழுத்தித் துடைக்கும். குனிஞ்சிருக்கும் தலையைத் தூக்காமலேயே அப்பப்ப ஓரக் கண்ணால் நம் இருத்தலை உறுதி செஞ்சுக்கும் ஒரு நோட்டம்! முதலில் சில மாசங்கள் நான் கவனிக்காம விட்டுட்டேன். வேலையைச் செஞ்சுட்டுப் போனால் சரின்னு. அப்புறம் பார்த்தா....... கை தொட்ட இடங்களில் எல்லாம் ஒரே அழுக்கு!//

இது மலேஷியாவிலுள்ள என்னுடைய மூத்த மகள் தன்னுடைய கம்போடிய பணிப்பெண் செய்யும் வேலையப் பற்றி சொன்னதை போலவே உள்ளது. ஆக, எந்த நாடு, மொழியானாலும் பணிப்பெண்கள் இப்படித்தான் போலிருக்கிறது!!

said...

இந்த வம்புக்குத்தான் நான் வேலைக்கு ஆள் போடவில்லை

said...

வாங்க ஜோதிஜி.

போணிய்யா!!!! நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

இந்தமாதிரி நல்லதை, நாலு பேர் எடுத்துச் சொன்னா 'அண்ணா' கேப்பார்:-))))

said...

வாங்க கயலு.

நமக்குத் தெரியாத விஷயத்தை இப்படி நாலு பேர் சொன்னாக் கேட்டுக்கணும்ப்பா!!!

உழைப்பு அதிகம் கூடாது.. ஆனா சம்பளம் நிறைய வேணும் என்பதுலே இப்ப எல்லோரும் கவனமா இருக்காங்க..

said...

வாங்க வல்லி.

சொன்னீங்க பாருங்க ஒரு சொல்லு....
'வேலை வாங்கத் தெரியணும்' இது தெரியாமத்தான் இப்படி இருக்கோம்.
இதுலே பாருங்க....

கடுமை காட்டும் வீட்டில் ஒழுங்கா வேலை செய்யறாங்க.

சுதந்திரம் கொடுக்கும் வீட்டில் பட்டை நாமம்.

said...

வாங்க மாதேவி.

வைரம் பதிச்ச தங்க சல்லடைதானே பார்த்தீங்க????

said...

வாங்க சுமதி.

வீட்டுலே அரைக்கும் மருதாணிக்குத்தான் நல்ல ஃப்ரெஷ் வாசனை இருக்கும். மருத்துவ குணம் நிறைஞ்சுருக்கும்.

கடையில் விற்கும் கோன் ஒரு அழகுசாதனம் மட்டுமே.

said...

வாங்க கோமதி அரசு.

நாங்க சின்னப்புள்ளைகளா இருந்த சமயம் ராத்திரி சாப்பாடெல்லாம் ஆனபிறகுதான் மருதாணி வச்சு விடுவாங்க.

அதனால் ஊட்டிக்கும் ச்சான்ஸ் கிடைக்கலை.

இப்ப? சாருக்கு நாலு கை இருந்தாலும் போதாது. ப்ளாக்பெர்ரிச் சனியனைக் கட்டி அழுதுக்கிட்டு இருக்கார். வேணுமுன்னா நமக்கு கஞ்சி நாமே காய்ச்சி வச்சுட்டால்.... அதுக்கு ஒரு ஸ்ட்ரா வேணுமுன்னால் போட்டுத் தரலாம்.

said...

வாங்க அன்புடன் அருணா.

சென்னையில் ஞாயிறு லீவு. வேலைக்கு வரமாட்டாங்க. இங்கே சண்டிகரில் இன்னும் சண்டே லீவ் ரூல்ஸ் வரலை. நாம் போனாப் போகுதுன்னு லீவு விட்டாலும் மற்ற வீடுகளுக்கு வந்துதானே ஆகணும்.

இங்கே கொஞ்சநாள் இருக்கப்போகும் நாம் ஊரைக் கெடுக்க வேணாமுன்னு இருக்கேன்:-)

அப்படியும் நாம் வெளியூர் போகும்போதெல்லாம் லீவு கிடைச்சுருதே!

said...

வாங்க கோபி.

பனகல் பார்க் கிட்டே பார்த்தேன். ரோடைக் கடந்து போக முடியாம அப்படி ஒரு ட்ராஃபிக். அதான் கிட்டப்போய்ப் பார்க்க முடியலை:(

said...

வாங்க கலாநேசன்.

இது ஒரு யுனிவர்ஸல் ப்ராப்ளம். நம்ம நாட்டுலே இருந்து வீட்டு வேலைக்காக மத்தியகிழக்கு நாடுகள் போறவங்க...அங்கே தண்டனைக்குப் பயந்து ஒழுங்கா வேலை செய்வாங்க போல!

said...

வாங்க டி பி ஆர்.

தேசங்கள் தோறும் பாஷைகள் மட்டுமே வேறு!

said...

வாங்க பத்மா சூரி.

எனக்கும் இந்தியாவில் இருக்கும்வரைதான். நியூஸி போயிட்டால் எல்லாம் நாமே.

இங்கேயும் வீடும் வெளியும் பெருக்க மட்டுமே!