Thursday, September 09, 2010

'வ' வுக்கு வந்த கதி 'ட' வுக்குமா? .......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 8)

சனிக்கிழமை இரவு கிட்டத்தட்ட நள்ளிரவான சமயம் குருத்வாராவில் இருந்து திரும்பும்போது கடைத்தெருவில் ஒரு கடையில் அப்படி ஒரு கூட்டம். என்னதான் விக்கறாங்க? சென்னையில் டாஸ்மாக் வாசலில்தானே இப்படி ஒரு கூட்டம் பார்த்திருக்கோம். தூக்கக்கலக்கமோன்னுக் கரகரன்னு தேய்ச்சுக்கிட்டுப் பார்த்தால் அது ஒரு கோவில். அது குருத்வாராவில் இருந்து ஒரு ஒன்னரை நிமிச நடை தூரத்தில் இருக்கு.

அது என்னன்னு கண்டுக்கலாமுன்னு போனால் சனி! 'ப்ராச்சீன் ஷனி பக்வான் மந்திர்'. நம்ம தெற்குலே, சனிக்குன்னு திருநள்ளார்லே மட்டும் தனிச்சந்நிதி. மத்தபடி நவகிரகங்களோடு சேர்ந்துதான் கோவில்களில் இருக்கார் இவர்.

வடநாட்டுலே இதுவரை பல கோவில்களில் 'ஷனி' பகவானுக்கு மட்டுமேன்னு தனிச் சந்நிதிகள் தனியா நிறையப் பார்த்தாச்சு.
செவ்வக வடிவமான அறையில் இடது பக்கம் கருப்பு நிற டைல்ஸ் எல்லாம் வச்சுக் கட்டி, சனிபகவானுக்குத் தனிச்சந்நிதி. வலதுபக்கம் ஒரு ஏழெட்டுப் படங்களையும் (ஹனுமன், பிள்ளையார், காளின்னு) சில சிலைகளையும் வச்சுருக்காங்க. சனியைச்சுற்றி வலம் வர சின்னதா வழிகூட இருக்கு. கோவிலுக்கு வயசென்னன்னு கேட்டேன். பதில் வந்தது. ப்ராச்சீன்!

'சக்தி அதிகமுள்ள சாமி. நீங்க நேத்து(சனிக்கிழமை) வந்திருந்தா உள்ளே காலடி எடுத்து வச்சுருக்க முடியாது'ன்னார்.

சனியனோட சக்திக்குக் கேட்பானேன். வேண்டாத வேளைகளில் நாக்குலேல்ல வந்து உக்காந்து ஆடறான்.

'ஆமாம். நேத்து இரவு இந்தப்பக்கம் போனபோது பார்த்தேன்'னு சொன்னேன்.
இந்த ஊர்ப்பக்கம் கடைகள் இருக்கும் பகுதிக்குள் நேத்து முதல்முதலில் வந்ததில் இருந்து 'ஸ்பெஷல் பப்பர் வரியம். உலகப்புகழ் பப்பர் வரியன்' னு அங்கங்கே பார்த்ததில் இருந்து, அது என்னன்னு 'பார்க்கலைன்னா' தலை வெடிக்குமோன்னு இருந்துச்சு. சனீஸ்வரன் கோவிலுக்கு எதிரில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளே முதல் கடைக்குள் போய் பப்பர் வரியனைப் 'பார்க்கணும்' என்றதும் புன்னகையோடு எடுத்துக் கையில் கொடுத்தார்.

அர்ரே.............ஓ பா......படு.!!! இதுதானா விஷயம்!!!!

ஆஹா..... பஞ்சாபிகளுக்கு வ தான் வராதுன்னா.......... ட வும் வராதா!!!!

பாபட் வடியம் ( பப்படம், வடாம்)
போதுண்டா சாமி! எத்தனை பாக்கெட்டுன்னார். தலையை ஆட்டிட்டு அங்கிருந்த மாம்பழ பாபரை வாங்கிவந்தேன். மாம்பழக் கூழைக் காயவச்சது. அப்படியே வாயிலே போட்டுக்கலாம். கொஞ்சம் மற்ற கடைகளை நோட்டம் விட்டதில் பொம்மைக் கடை ஒன்னு கண்ணில் விழுந்துச்சு. 'பல்லே பல்லே பல்லே பலே'னு ஒரு மூணு பொம்மைகளை கொலுவுக்குன்னு வாங்கிக்கிட்டேன்.
இப்பெல்லாம் பயணம் போகுமுன் கொஞ்சம் ஹோம்வொர்க் செஞ்சுக்கிட்டுப் போறது பழகிருச்சு. எதுவும் தெரிஞ்சுக்காம க்ளீன் ஸ்லேட்டா, ஓப்பன் மைண்டாப் போகும்போது த்ரில் கூடுதல்தான். ஆனா வயசான காலத்துலே த்ரில்லைமட்டும் பார்த்தால் ஆகுமா? இம்மாந்தூரம் போயிட்டு முக்கியமான, சுவாரசியமான இடங்களைக் கோட்டை விடக்கூடாதில்லையா?

ஆண்டவரைக் கேட்டு அக்கம்பக்கம் இருக்கும் கோவில்களின் விவரங்களைக் குறிச்சுக்கிட்டுப் போயிருந்தேன். ஒரு மீட்டர் முதல் 20 மீட்டர் சுற்றளவில் ஒரு பத்து கோவில்கள் தேறுச்சுன்னு வையுங்க. .இந்த முறை மூணே நாள் என்பதால் லேப்டாப் வேணாமுன்னு முடிவு ஆகி இருந்துச்சு.

என் மனக்குறை ஒன்னை இங்கே சொல்லிக்கிறேன். நம்ம நாட்டுலே சுற்றுலாத்துறை, பயணிகளுக்கு விவரம் சொல்ல மெனெக்கெடறதில்லைங்க:( நம்ம செந்திலே சொல்லி இருக்காரு இன்பர்மேசன் வெல்த் ன்னு.

எங்க நாட்டுப்பக்கம் சின்னச்சின்ன ஊரா இருந்தாலும் அங்கொரு இன்ஃபர்மேஷன் செண்டர் இருக்கும். அந்த ஊரில் உள்ள முக்கிய விவரங்களை ப்ரிண்ட் செஞ்சு வச்சுருப்பாங்க. கூடவே சின்னதா ஒரு ஏரியா வரைபடமும். அப்படி ஆஃபீஸ் வைக்க முடியாத அளவு சின்ன ஊரா இருந்தால் ஒரு ஃபோன் பூத் போல மாடம் கட்டி அதுலே நிறைய ப்ரோஷர்களை வச்சுருப்பாங்க. நாமே ஒன்னு எடுத்துக்கிட்டுப் போகலாம். மேலும் ஆட்டோமொபைல் அசோஸியேஷன்களில் (AA) அங்கமா இருந்தோமுன்னா நம்ம ஊரில் இருந்து கிளம்பும் முன்னமே விவரங்கள் அடங்கிய வரைபடம் எல்லாம் கிடைச்சுரும்.

இங்கே பாருங்க.... இந்தியாவில் ஏகப்பட்ட இடங்கள் சரித்திர, ஆன்மீக, பூகோளப் பயணங்களுக்கு ஏற்றதா இருக்கே. அந்தந்த ஊர்களில் குறைஞ்சபட்சம் பெரிய ஊர்களில் விவரங்கள் ஏதும் வச்சுருக்கக்கூடாதா?

என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் குஜராத் & உடுப்பிப் 2 பயணத்தில்தாங்க சுற்றுலாத்துறை இந்த வசதிகளை ஏற்படுத்தி இருந்துச்சு. கையிலே மேப் வச்சுக்கிட்டு எளிதா நிறைய இடங்களைச் சுற்றிப்பார்க்க முடிஞ்சது. அதிலும் மங்களூர் மற்றும் சவுத் கன்னடா, உடுப்பி மாவட்டங்கள் தந்த விவரங்கள் சூப்பர்ங்க.

சொந்தப் பட்டியலை எடுத்து வச்சுக்கிட்டுக் கோவில் விவரம் கேட்டால் யாருக்குமே சரியாச் சொல்லத்தெரியலை. இத்தனைக்கும் கோவில் பூசாரிகளிடம்தான் கேட்டோம். அவுங்கவுங்களுக்கு தங்கள் கோவிலைப்பற்றி மட்டுமே தெரியுது:(

அப்படியும் விடாம அங்கங்கே சைக்கிள் ரிக்ஷா ஓட்டிகளிடம் கேட்டுக்கிட்டே போனோம். அப்படி ஒரு ஹனுமன் கோவில் கடைத்தெருவுக்குள்ளில் கிடைச்சது. வடக்கே சிவன், விஷ்ணு, காளின்னு பிரிக்காம அநேக கடவுளர்களின் சிலைகளை ஒரே கோவிலில் பிரதிஷ்டை செஞ்சுடறாங்க. இதெல்லாம் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்டவை. யாருக்கு எது இஷ்ட தெய்வமோ அவுங்களைக் கும்பிட்டுக்கலாம்.
இவர் ஹனுமன் கோவில் ஹனுமன்


சுருக்கமாச் சொன்னாத் தமிழ்சினிமா மாதிரி. குடும்பம், பாசம், காதல், சண்டை பாட்டு, ஃபாரீன்லே கனவு சீன், நகைச்சுவைக் காட்சி, தாலி செண்டிமெண்ட் இப்படி கலந்துகட்டி இருக்குது பாருங்க ரசிகர்கள் விரும்புறாங்க, பலதரப்பட்ட ரசிகர்களைத் திருப்தி செய்யணும் என்ற பெயரில்!

ஹனுமன் கோவிலில் மற்ற சந்நிதிகள்

கொள்ளை அழகான முகத்தோடு ராம் & கோ


இந்தக் கோவிலிலும் வெண்பளிங்குச்சிலைகளா ஹனுமன், காளி, சிவன், ராதா கிருஷ்ணா, லக்ஷ்மி நாராயணன், ராமர் அண்ட் கோ எல்லோரும் இருக்காங்க. எல்லோருக்கும் பச்சை நிற உடுப்பும் அலங்காரமும். ராமர் க்ரூப்தான் என் கருத்தைக் கவர்ந்துச்சு. இங்கே வழக்கமா ராம லக்ஷ்மணர், சீதா, ஹனுமானுடன் பரத சத்ருக்கனர்கூட வரிசையில் நிக்கறாங்க. மொத்தம் ஆறு பேர்!

துர்கை கோவிலைத் தேடுனப்ப ஒருத்தர் சொன்ன இடத்துக்குப் போனால்...அது நாம் தேடும் பட்டியலில் இல்லாதது. தனித்தனி சாமியார்கள் மடங்களில் ப்ரைவேட் கோவில்கள் வச்சுருக்காங்க. அதுலே ஒன்னு இது. ஸ்ரீ லோங்காவாலி தேவி மந்திர்.


இங்கேயும் எல்லா சாமிகளும் இருக்காங்க. துர்கைக்கு பித்தளைச் சிங்கம்(பெண் சிங்கமுன்னு நினைக்கிறேன். பிடரிமயிரைக் காணோம்) இருக்கு! சுயம்புன்னு சொல்லி ஒரு ஹனுமனைக் காமிச்சாங்க. வெள்ளிக்கவசத்தோடு வெண் பளிங்கு சிவலிங்கம். ஸ்தல விருக்ஷமா மேடை கட்டி வச்சுருக்கும் பழைய மரம், தனிச்சந்நிதியில் எட்டு கைகளுடன் லோங்காதேவியின் தங்க முலாம் பூசிய படமுன்னு இருக்கு.

லோங்காவாலி கோவிலில் சுயம்புவாக ஹனுமன்
லோங்காவாலி கோவில்

கும்பிட்டுக்கிட்டுக் கிளம்பினோம்.

தொடரும்................:-)

25 comments:

said...

Teacher,

Entha episode bonus, porkovil suthi nella coverage. North India'la ella hindu swamiyumm onnuthaan. Swami difference'ellam namma thamizh naatulathaan jasthi.

Tourism pathi yarumae namma oorlae realize pannalae, basic problems ennum yerukku. Like you said, not much of information, lack of security for tourists, lack of basic hygiene / transport. Neriya foreigners namma oorukku varthukku munadi bayathulae vaccination pottukaranga.

Namma Govt. as usual nella thoonguthu. We are so pathetic that we get to know more about ourselves only when Foreigners talk about us. Namma koodave yerukkara nella vishayangalai nama notice panrathae ellai.

-Sri

Anonymous said...

சூப்பர்.அருமையான இந்த அனுபவங்கள் பலருங்கள் பலருக்கும் பயன்படக்கூடியது.

said...

//எங்க நாட்டுப்பக்கம் சின்னச்சின்ன ஊரா இருந்தாலும் அங்கொரு இன்ஃபர்மேஷன் செண்டர் இருக்கும்.//

எங்க நாட்டுல அவ்வளவு வசதியெல்லாம் இல்லீங்கோ. ஏழை நாடுங்க.

said...

பஜ்ரங்க்பலிக்கு ஜேய்..

:) மாம்பழக்கூழ் உங்களுக்கும் பிடிக்குமா. ? உங்க அண்ணாச்சிக்கும் பிடிக்கும்.. நானும் அவனும் போட்டிப்போட்டு காலி செய்வோம்.

said...

சுருக்கமாச் சொன்னாத் தமிழ்சினிமா மாதிரி. குடும்பம், பாசம், காதல், சண்டை பாட்டு, ஃபாரீன்லே கனவு சீன், நகைச்சுவைக் காட்சி, தாலி செண்டிமெண்ட் இப்படி கலந்துகட்டி இருக்குது பாருங்க ரசிகர்கள் விரும்புறாங்க, பலதரப்பட்ட ரசிகர்களைத் திருப்தி செய்யணும் என்ற பெயரில்!



.......செம..... உங்கள் டச்!

said...

//கொள்ளை அழகான முகத்தோடு ராம் & கோ//

கொஞ்சம் கதகளி மாதிரி தெரியுதில்ல?

said...

நாம் அம்ரிஸ்தர் போக வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் தயவில், உங்கள் பதிவை வாசிப்பதன் மூலம் ஒரு பயண அனுபவம் கிடைக்கிறது.

said...

//இங்கே பாருங்க.... இந்தியாவில் ஏகப்பட்ட இடங்கள் சரித்திர, ஆன்மீக, பூகோளப் பயணங்களுக்கு ஏற்றதா இருக்கே. அந்தந்த ஊர்களில் குறைஞ்சபட்சம் பெரிய ஊர்களில் விவரங்கள் ஏதும் வச்சுருக்கக்கூடாதா?
//

கிலோவுக்கு இம்புட்டுன்னு பேப்பருக்கு தாள்களுக்கு காசு கிடைப்பதால் சுற்றுலா தளங்களில் குறிப்பேடு அடித்து வைத்திருந்தால் அதனை மொத்தமாக எடுத்து எடைக்குப் போட்டுடும் ஜனங்க. என்னச் செய்வது வறுமையை ஓட்டாமல் எந்த நாடும் முன்னேறவே முடியாது. 30 ஆண்டுக்கு முன்பு மணியார்டர் பாரம் 5 பைசாவுக்கு கிடைக்கும், பணம் அனுப்புகிறவர்கள் வாங்குறாங்களோ இல்லையோ ஊறுகாய் போட்டு கடைக்குக் கொடுப்பவர்கள் மொத்தமாக வாங்கிப் போய் அந்த பாரத்தில் ஊறுகாய் பாக்கெட்டுகளை பின் செய்து விற்பனைக்கு அனுப்புவாங்க. ஏனென்றால் மற்ற அட்டைகளை விட மணி ஆர்டர் அட்டை விலை மிகக் குறைவாம்.
:)

//சுருக்கமாச் சொன்னாத் தமிழ்சினிமா மாதிரி. குடும்பம், பாசம், காதல், சண்டை பாட்டு, ஃபாரீன்லே கனவு சீன், நகைச்சுவைக் காட்சி, தாலி செண்டிமெண்ட் இப்படி கலந்துகட்டி இருக்குது பாருங்க ரசிகர்கள் விரும்புறாங்க, பலதரப்பட்ட ரசிகர்களைத் திருப்தி செய்யணும் என்ற பெயரில்!//

எங்கேயாவது முருகன் என்கிற சுப்ரமணியனை வடநாடுகளில் கண்களில் தென்படும் அளவுக்கு பார்த்திருக்கிறீர்களா ?

said...

முருகன் தான் கார்த்திகேயேன் ஆச்சே!
ஆனாலும் சாமிகள் ஒத்துமையா இருக்கறது நல்லாவே இருக்கு.
ராமர் ராமர் கலரிலியே இருக்காரே!! மாம்பழம் போய் மாம்பழக் கூழுக்கு வந்துட்டீங்களா. நடக்கட்டும் நடக்கட்டும்:)

said...

பொம்மைகடை படத்தில் அந்த கத்தி வகைகளின் அணிவகுப்பு நன்றாக உள்ளது டீச்சர்.இங்கு கூட கோவில்களில் அனைத்து சாமிகளும் ஒன்றாகவே உள்ளன டீச்சர்:))))

said...

நம்மூர் கருங்கல் சாமிகளையே பார்த்துவிட்டு வட இந்திய சாமிகளை பார்க்கும் பொம்மை மாதிரி இருக்கு...ஒரு ஃபீலிங் மிஸ்ஸிங்.

said...

என்னடா இன்னும் சாப்பாட்டு ஐட்டங்கள் வரவில்லையேன்னு நினைத்தேன்,

அப்புறம் கையெழுத்து ரொம்ப அற்புதம்,

எப்படி மனசு வந்துச்சு?

தமிழ் உதயம் சொன்னது தான் ஒவ்வொரு முறையும் படித்து முடித்தவுடன் நினைத்துக் கொள்கின்றேன்,

என்னுடைய முக்கிய ஆசையில் ஒன்று இந்ததங்க கோவில்,

பல சுதந்திர புத்தகங்கள் படித்த காரணத்தால்,

கண்காட்சி உள்ளே வைத்து இருப்பார்களாம்? உண்மையா?
ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்த காட்சிகள் அத்தனையும் இருக்கும் என்று படித்து உள்ளேன்,

said...

என்ன கண்ணன் இடுகை அளவிற்கு யோசிக்க வைத்து விட்டார்?

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

சுற்றுலாத்துறையையும் வசதிகளையும் இன்னும் நல்லா ஒழுங்குபண்ணா பணத்தை அள்ளிறலாம். இப்பெல்லாம் உள்ளூர் மக்களே வெவ்வேற மாநிலங்களுக்கு பயணம் நிறைய போறாங்க.

இதனால் அங்கங்கே வியாபாரமும் செழிக்கும். நல்ல சுத்தமான உணவு விடுதி, ரெஸ்ட் ரூம்ஸ் இருந்தா யாரும் காசுச்செலவைப் பொருட்படுத்தறதில்லை.

என்ன ஒன்னு..... ஏமாத்துவேலை கூடாது.

said...

வாங்க சதீஷ்குமார்.

முக்கியமா ஆர்ம் சேர் ட்ராவலர்ஸ்க்கு:-))))

said...

வாங்க டாக்டர்.

ஏழைநாடா?

நகைக்கடையிலும் ஜவுளிக்கடையிலும் பார்த்தா அப்படியா இருக்கு?

குடும்ப விழாக்களுக்கு, ஏன் துக்க நிகழ்ச்சிக்குக்கூட போஸ்டர்களும் ப்ளெக்ஸ் பேனர்களும் செலவு செஞ்சு வச்சு அட்டகாசமாக் கொண்டாடுவதைக் கவனிச்சேன்.

ஏழைநாடுன்னா சொல்றீங்க!!!!!

said...

வாங்க கயலு.

எனக்குப்பிடிச்சது அண்ணாத்தைக்கும் பிடிச்சுத்தானே ஆகணும். குடும்பமுன்னா சும்மாவா? :-))))

said...

வாங்க சித்ரா.

யாரும் கவனிக்கலையேன்னு இருந்துச்சு.

ரசிப்புக்கு நன்றிப்பா.

said...

வாங்க தருமி.

சிரிச்சமுகம் உங்களுக்குக் கதகளியை நினைவு படுத்திருச்சு:-)))

அழகியராவணன் னு கதகளியில் ஒரு வேஷம் இருக்கு. சும்மா அட்டகாசமா இருக்கும். பார்த்துருக்கீங்களா நிகழ்ச்சியை எங்காவது?

said...

வாங்க தமிழ் உதயம்.

நமக்குக் கிடைக்கணும் என்றது கிடைக்காமல் போகாது:-)

நானும் வருசக்கணக்கா ஆசைப்பட்டு இப்போதான் இந்த வயசில் வாய்ச்சது.

said...

வாங்க கோவியாரே.

ஏழ்மையை அவ்வளவு சீக்கிரம் போக விட்டுருவாங்களா அரசியல் வியாதிகள்?

வட இந்தியாவில் முருகன் என்ற பெயரில் அவ்வளவா சாமி இல்லை. நாம் முருகா முருகான்னா அவுங்க சிக்கனைச் சொல்றோமுன்னு நினைச்சுக்குவாங்க.

கார்த்திகேயன் என்ற பெயரில் கோவில்கள் இருக்கு. சண்டிகரிலும் ஒரு கோவில் உண்டு. தமிழ்க்காரர்கள் கோவில். அப்புறம் ஹரியானாவில் ஒரு கோவிலில் 'பாலக் பாபா' Balak Baba ன்னு ஒரு சந்நிதி. என்னன்னு கிட்டே போய்ப் பார்த்தால் நம்ம வீடுகளில் முருகன் சிறுவனா பின்புலத்தில் தோகை விரிச்ச மயில் இருக்க காட்சியளிக்கும் படம்தான் அங்கே இருந்துச்சு!!!!

said...

வாங்க வல்லி.

மாம்பழ சீஸன் முடிஞ்சே போச்சு:(

அதான் மாம்பழ பாபடு!

பூனாவில் இருக்கும் கார்த்திக் ஸ்வாமி கோவிலுக்குப் பெண்கள் நுழைய அனுமதி இல்லை. சின்னதா ஒரு குன்றின் மேல் இருக்கான்.

பெண்கள் ஆகாதாம். காரணம் அவன் பிரம்மச்சாரியாம்!!!!

எங்க பக்கம் வந்து பாருங்க, இவனுக்கு ரெண்டு பெண்டாட்டின்னு அப்போ சொல்லிட்டு வந்தேன்.

said...

வாங்க சுமதி.

தெற்கேதான் தனித்தனிக் கோவில்கள்ப்பா.

திநகர் சிவாவிஷ்ணு கோவில் கட்டுனப்ப அது ஒரு அதிசயமா இருந்துச்சு.

அந்தக் கத்திதான் சீக்கியர்களின் ஒரு k.

said...

வாங்க குமார்.

எல்லாம் ஒரு பழக்கதோஷம்தான்!

said...

வாங்க ஜோதிஜி.

வந்தேமாதரம்தான் கையெழுத்துப்போடச் சொல்லிக் கொடுத்தார்:-)

கோவில் வளாகத்தில் மாடியில் இருக்கு இந்த ம்யூஸியம். இங்கே ஆங்கிலேயர் கொடுமைகளைவிட மொகலாய ஆட்சியின் கொடுமைகளைச் சித்தரிக்கும் படங்கள்தாம் 90 சதமானம்.

இந்த மதம் ஆரம்பிச்ச சமயம், ஆங்கிலேயர் நுழைஞ்சிருக்கலை.

கோவியார் நுட்பமான கேள்விகளை வைப்பதில் வல்லவர்!