நெசமாவா சொல்றாய்ங்க? ரொம்பப் பெருசாம். ஒரு ரவுண்டுலே உடம்பு மூச்சு வாங்கிறப்போகுது! கைடு(புத்தகம்) சொல்வதை நம்பலாமா வேணாமா? அனுபவிச்சுப் பார்த்துடலாம். கிளம்பு......செக்டர் 3. போகெய்ன்விலா தோட்டம். கார் பார்க்கிங் இடத்தைப் பார்த்ததும் 'சட்'னு எங்க நியூஸி நினைவு வந்துச்சு.(ஏன்?!!!!) சுழல்கேட் வழியா நுழையணும். 34 வயசாகுது. மொத்தம் 20 ஏக்கர். மெது ஓட்டத்துக்குத் தனிப்பாதை ,வளைஞ்சும் நெளிஞ்சும். நம்மைப்போல உள்ளவர்களுக்கு 'எம்மாந்தூரம் வந்துட்டோமோ'ன்னு பதைபதைக்காமல் இருக்க அங்கங்கே மைல்க்கல். 20 கிராம் இளைப்பது உறுதி! ஆரம்பத்துலேயே வெள்ளையும், ஆரஞ்சும், மஜெந்தாவுமா சில கண்ணில் பட்டன. பாதையோடு போனால்.....ஒரு காங்க்ரீட் அமைப்பு. என்னதான் எழுதி வச்சுருக்கு பார்க்கலாமே..... மனசு அப்படியே கல்லை முழுங்குனாப்போல ஆயிருச்சு.
நம்ம அப்துல்கலாம் ஐயா, தலைவரா இருந்தப்ப வந்து திறந்து வச்சுருக்கார், போர் (கால) நினைவகம். நாட்டின் சுதந்திரத்துக்குப்பிறகு வந்த போர்களில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் ப்ரதேஷ் அண்ட் சண்டிகர் மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான நினைவகம்.
ஏப்ரல் 28. 2004 வது வருடம் அடிக்கல் நாட்டி, ஜூன் 11, 2005 நினைவுக் கட்டிடம் எழுப்ப ஆரம்பிச்சு, ஆகஸ்ட் 17, 2006 வது வருடம் கலாம் ஐயா திறந்து வச்சுருக்கார். J & K operations 1947-48 தொடங்கி வீரர்களின் பெயர்கள் அகரவரிசையா சலவைக்கல்லில் பொறிக்கப்ப்ட்டு இருக்கு. இந்தியா-சீனா போர் 1962, இந்தியா-பாக் போர் 1965, ஆப்பரேஷன் பவன் 1987-89, ஆப்பரேஷன் விஜய் 1999, எல்லையில் நடந்த சண்டைகள், உள்நாட்டுப் பாதுகாப்புக்காக நடந்த சண்டைகள், ஐக்கியநாடுகளுக்காப்போய் பங்கேற்ற வகைகள், ஆப்பரேஷன் கோவா 1961, இந்தியா-பாக் சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் INS KHUKRI யில் இருந்த கப்பல்படை வீரர்கள் இப்படி வரிசைவாரியாப் பார்த்தப்ப....... இத்தனை உயிர்கள், இத்தனை குடும்பங்கள், குழந்தைகுட்டிகள்.......
நாம் இப்படிச் சொல்றோமே.... எதிரி நாட்டுலேயும் எத்தனை மனிதர்கள் அழிவுகளைச் சந்திச்சு வீரமரணம் அடைஞ்சுருப்பாங்கன்ற எண்ணமும் வந்துச்சு. எதுக்குப் போர் வந்து உயிர்களை காவு வாங்குதுன்னு.... கலக்கம்தான்.
இதோடு நின்னுடாது.... இன்னமும் போர்கள் வரத்தான் போகுது, வீரர்கள் மரிக்கத்தான் போறாங்கன்றதுபோல வரிசை நீண்டு நீண்டு போய் இன்னும் புதிசா சலவைக்கல் வைக்க ஏதுவான அமைப்பு.....வளைஞ்சு வளைஞ்சு போகும் வெற்றிடங்கள்.
தோட்டத்துக்குப் போன உற்சாக மூடு அப்படியே கழண்டுக்கிச்சு. ச்சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் . 20 கிராம் இளைக்கலைன்னா பீடை போச்சு போங்க. அங்கங்கே நீர் ஓடை போல ஒன்னு வெட்டி வச்சுருக்காங்க. தண்ணீர்தான் இல்லை. அது பக்கத்துலே மூங்கில் புதர்கள். காகிதப்பூக்கள் செடிகள் மட்டுமில்லாமல் அங்கங்கே சில பூக்கும் மரங்கள் இப்படி இருந்த ஒரு இடத்தில் பெரிய ஞானி ஒருத்தர் கம்பீரமா தலை உயர்த்தி, தன் அன்புக் கரங்களை நீட்டி அழைப்பது போல ( அச்சச்சோ...எனக்கு என்னமோ ஆகிருச்சு!) ஒரு பெரிய மாமரம். பிஞ்சுகளா நிறையத் தொங்குது. தொரட்டி ஒன்னைக் கட்டி யாரோ வேலையைக் காமிச்சுருக்காங்க போல. நிறைய இலைகள் கொத்துக்கொத்தா தரையில். கூடவே உடைஞ்சுபோன மூங்கில் தொரட்டி:(வட்டமான சுற்றுச்சுவர் கட்டி உள்ளே இருக்கைகள் போட்டுருக்க, குடை பிடிச்சதுபோல வட்டத்தைக் கவிழ்ந்து பார்க்கும் போகன்வில்லாச் செடிகள். சூப்பரா இருக்கு. உள்ளே கொஞ்சம் இருளோன்னு இருப்பதுதான் யோசனை.
வரிசைகட்டி நிற்கும் அசோகமரங்கள். பெரிய பெரிய புல்வெளிகள். காலார நடக்கவரும் மூதாட்டிகள் (80+) டர்பன் தலைகளோடு பேசிக்கிட்டே நடக்கும் ஆண்கள் யாரைப்பார்த்தாலும் கோபாலுக்கு ரிட்டயர் மிலிட்டரிக்காரர்கள்தான்:-))) இவ்வளவு குள்ளமா இருக்காங்களே ஆர்மிக்காரர்களா எப்படி இருக்க முடியும்? அளக்கும்போது அரையடி டர்பனையும் கணக்குலே சேர்த்துக்குவாங்களோ ? 'ஙே' ன்னு முழிச்சவர்.
'அப்டீங்கறே? சரி. ரிட்டயர்டு சிவில் சர்வீஸ் மக்கள்னு மாத்திக்கோ'ன்னார்.'ஆங்.... அது!' இருக்கும், இருக்கும். நம்மூர் மெரினாவில் இப்படி ஒரு க்ரூப் தினமும் வந்து சந்திக்குமாம். ஒரு நாளொருத்தர் வரலைன்னா..... மத்தவங்களுக்கு அடி வயித்துலே திக்!..... எங்கே போனாலும் லீவு சொல்லிட்டுப் போகணும்.
ஆமாம். நம்ம பதிவர் உலகில் எப்படி? லீவு சொல்லாம, வலையிலும் காணலைன்னா தேடுவீங்களா?சில பேர் சீரியஸ் வாக்கர்ஸ். பச்சை சுடிதார் ஒன்னு நான் (பெஞ்சுலே உக்கார்ந்து) பார்க்கும்போதே பத்து தரம் குறுக்காலே வந்து போச்சு.
'நல்ல' போட்டோக்ராஃபர் ஒருத்தர் கஷ்டப்பட்டு மண்டி போட்டுப் படங்கள் எடுத்துக்கிட்டு இருந்தார். வணங்காமுடியாட்டம் நான் ஒரு பக்கம் ஜஸ்ட் எய்ம் & ஷூட்.
தோட்டத்தின் ஆரம்பத்திலும், கடைசியிலுமா ரெண்டு கழிப்பறைகள். அங்கங்கே குடிநீர் குழாய்கள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. தோட்டத்துக்கு எதிர்ப்பக்கம் ஹரியானா மாநில எம் எல் ஏ ஹாஸ்டல் இருக்கு. ஆளுயர டிஃபன் கேரியரை 'ஏகே 47' வச்சவரின் காவலோடு ஒருத்தர் தூக்க முடியாமத் தூக்கிட்டுப்போனார். இதுலே மட்டும் மாநிலங்களுக்குள் பேதமே இல்லை:-)
அங்கிருந்த நேரத்தில் ,கணிசமான அளவில் மக்கள் வந்து போவதைப் பார்த்தேன். எல்லோருக்கும் பயனா ஓரிடம் இருக்கு. மக்களும் கண்டதைப் போட்டு அசிங்கமாக்காமல் சுத்தமாக வச்சுருக்காங்க.
தோட்டங்கள் நிறைய இருக்கும் மாநிலமாம் இந்த சண்டிகர். நானோ நியூஸியின் தோட்டநகரமான 'கிறைஸ்ட்சர்ச்'சில் இருந்து வந்துருக்கேன். நேச நாடுகளின் தோட்டத்துக்கு நேசம் காமிக்காமப் போகலாமா? (இந்த ஊரில் கிறைஸ்ட்சர்ச் என்ற பெயரில் ஒரு சர்ச் இருக்காம்!) நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு தோட்டமாகப் போய்ப்பார்த்து எழுதும் உத்தேசம் உண்டு. இதைப்போலவே இங்குள்ள கோவில்களையும்.
காலநிலை: பயங்கர வெய்யில். 47 டிகிரி செல்ஷியஸ். ஈரப்பதம் 17% அதனால் வேர்ப்பது இல்லை.(சென்னையில் 53%) உடலெங்கும் எரிச்சல் உணர்வு.
Monday, May 24, 2010
அதுலே, அறுபத்தியஞ்சு வகை இருக்காமே......
Posted by
துளசி கோபால்
at
5/24/2010 01:57:00 PM
21
comments
Friday, May 21, 2010
வேடிக்கை VS வாழ்க்கை
ஒரு ஊரையோ நாட்டையோச் சும்மாச் சுத்திப் பார்ப்பதைவிட அங்கேயே போய் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம்தான், இல்லையா? நிறைய நாட்களுக்குப் பிறகு சரியாச் சொன்னால் 35 வருசத்துக்குப்பிறகு சென்னையில் 'குப்பை கொட்ட' வந்தேன். கல்ச்சுரல் ஷாக்ன்னு சொல்வோம் பாருங்க. அதுதான் உண்மையில் ஏற்பட்டுச்சு. நகரம் வளர்ந்துருக்கு. கூடவே கூட்டமும் குப்பையும்.
அங்கங்கே தெரு முனைகளில் சின்னதா ஒரு குப்பை சேகரிப்புக்கான செவ்வகத் தொட்டி. உண்மையைச் சொன்னால் இந்த அளவுள்ள குப்பைத் தொட்டி ஒரு நாலு வீடுகளுக்கு மட்டுமே போதுமானது. அப்போ மீதி இருக்கும் வீடுகளுக்கு? பிரச்சனையே இதுதான். செய்வாங்க.ஆனா போதுமான அளவான்னு பார்த்துச் செய்ய மாட்டாங்க...... அதில் எப்போதும் நிறைந்து வெளியே வழிந்து தெருமுழுக்கப் பறக்கும் குப்பைகூளங்கள். தெருநாய்களும், குப்பையில் இருந்து காசு பண்ணக்கூடியப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் மனிதர்களும் சேர்த்து மிச்சம் மீதி உள்ளே இருக்கும் குப்பைகளையும் வெளியே இழுத்துப்போட்டுவிட்டுப் போய்விடுவதையும் பார்க்கிறேன். நாய்கள்....பாவம் நாய்கள். வெளியே இழுத்துப் போட்டவைகளை மீண்டும் அள்ளிப்போடத் தெரியாத ஜென்மம். ஆனால்....மனுஷன்? அப்படியே விட்டுவிட்டுப்போய் விடும் வெறும் ஜென்மம். (செனடாப் ரோடு மட்டும் விதிவிலக்கு. நோ குப்பை. எல்லாம் பளிச்!!!)
தெருவோரங்களை கக்கூஸாக மாற்றி வரும் ஆண்கள் (ஒரே சமத்துவம்தான். கோட்டு சூட் போட்டுக்கிட்டவங்களுக்கும் போற போக்கில் அடக்கமுடியாம அசுத்தம் செஞ்சுட்டுப் போறாய்ங்க) தாறுமாறாய் தெருவெங்கும் ஓடும் ஏகப்பட்ட வண்டிகள். சாலைகளில் நடக்கவே முடியாத நிலை. இருக்கும் கொஞ்சநஞ்ச இடங்களையும் அபகரிக்கும் ப்ளாட்பாரக் கடைகள் ...அடப் போங்கப்பா....எதைச் சொல்ல எதைவிட?
'இங்கெல்லாம் இப்படித்தான் இருக்கும். கொஞ்சநாளைக்கு வந்து இருந்துட்டுப்போற நீ இப்படியெல்லாம் அலட்டிக்கக்கூடாது' ' அண்ணியின் அருள் வாக்கு.
மனசுக்கு ஆசுவாசமா இருந்தது நண்பர்களின் அருகாமை மட்டுமே. இது இப்படி இருக்க, இடப்பெயர்ச்சி மறுபடியும் வந்துச்சு. பத்தே மாசத்தில் ரெண்டாவது முறையாக மூட்டை கட்டினோம். முற்றிலும் புது இடமாச்சேன்னு ஊருளவாரம் பார்க்க ஒரு ரெண்டு மாசம் முன்னால் வந்துட்டுப் போனேன். வீடு கிடைச்சது. ச்சும்மா வேடிக்கை பார்க்க வந்தப்ப ரொம்பவே நல்லா இருந்த இடத்துக்கு இப்போ 'குப்பை கொட்ட' வந்தபின் இண்டு இடுக்குகளில் ஒளிஞ்சுருந்த எல்லாம் கண்ணுலே பட ஆரம்பிச்சுருக்கு. நம் எண்ணங்கள் நேர்மறையா இருக்கணும். அதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதுன்ற கொள்கையைக் கடைப்பிடிக்கலைன்னா.... .... மனசை ஒருமுகப்படுத்திக்கிட்டு இருக்கேன்.
முதல்லே குப்பையையே எடுத்துக்கலாம். இந்த நகரில் இதுவரை தெருமூலைக் குப்பைத் தொட்டிகளைக் காணோம். வீட்டுக்குக் குடிவந்த நாள், வீட்டு ஓனர் சொல்லியபடி ஒரு குப்பைத்தொட்டி (20 லிட்டர் கொள்ளும் மூடியோடுள்ள ப்ளாஸ்டிக் வாளி) வாங்கி நம்வீட்டு கேட்டுக்கு உட்புறம் ஒரு மூலையில் வச்சாச்சு. தினமும் காலை எட்டரைமணி அளவில் ஒரு நபர் கேட்டைத் திறந்து உள்ளே வந்து அதை எடுத்துக் காலி செஞ்சு, குப்பையை அவர் கொண்டுவரும் வண்டியில் போட்டுக்கறார். திரும்ப நம் வாளியைக் கொண்டுவந்து உரிய இடத்தில் வச்சுட்டுக் கேட்டைச் சாத்திக்கிட்டு போறார். எல்லார் வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவர் இருக்கு. மாசம் 25 ரூபாய் சிட்டிக் கவுன்ஸிலுக்கு நாம் கொடுக்கணும். ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை 50 அடைச்சால் போதும். வீட்டுக்கு ஆள் வந்து காசையும் கலெக்ட் செய்யறார்.ஒவ்வொரு வகைப் பொருட்களுக்கும் ஒவ்வொரு செக்டரில் விசேஷக் கடைகள் இருக்குன்னு முந்தி சொல்லி இருந்தேன் பாருங்க. அது உதவியாவும் அதேசமயம் உபத்திரவமாவும் இருக்கு. வீட்டுலே ஒரு ஆணி அடிக்கணும். ஆணி வாங்க இந்த எண் உள்ள செக்டர் போகணும். காய் வாங்க இந்த எண், பூ வாங்க இந்த எண், உப்புப்புளி மொளகாய் வாங்க இந்த எண் இப்படி வெறும் எண்களையே மனப்பாடம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இன்னும் ஊர் சரியாப் பிடிபடலை. ஊர் முழுக்கக் கோவில்கள் இருக்கு. அதுக்கும் செக்டர் எண்களை நினைவில் வச்சுக்கணும். 'எண்ணும் எண்ணும் கண்ணெனத் தகும்' நம்பர் மறந்தால் போச்சு:(
வீடுன்னா ரெண்டு செடிகள் இருக்கணுமேன்னு நாலு செடிகளை வாங்கிவந்து மொட்டைமாடியில் வச்சுருக்கேன். அடுக்கு மல்லி ச்சும்மா ஜமாய்க்குது வாசம். மற்றவை செத்திப்பூ, அப்புறம் பெயர் தெரியாத ஒன்னு ஆரஞ்சுப்பூ பூக்குது.
எவர்க்ரீனா ஒன்னு இருக்கட்டுமுன்னு கள்ளிவகையில் சக்கூலண்ட் வாங்கி வந்துருக்கேன். செடி வாங்க ஒரு செக்டர், அதுக்குண்டான தொட்டி வாங்க இன்னொரு செக்டர்:-)))))
ஊரெங்கும் பசுமையான மாந்தோப்புகள் & மஞ்சள் மரங்கள். இப்போ சரக்கொன்றை பூக்கும் காலம்.
அநேகமா இங்கே இந்த ஊரில் ஒரு பத்து மாசம் இருக்கவேண்டி இருக்கலாம். சண்டி(ந)கரில் காலூன்றிய ஒரு புதிய சண்டியின் கண்ணோட்டத்தில்......அப்பப்பக் 'கண்டதை' இங்கே போட்டுவைக்க உத்தேசம்.
காலநிலை: வெய்யில் சக்கைப்போடு போடுது. 44 டிகிரி செல்ஷியஸ். வீட்டுக்குள்ளே 36
Posted by
துளசி கோபால்
at
5/21/2010 05:57:00 PM
41
comments
Labels: அனுபவம் Chandigarh
Wednesday, May 19, 2010
ஏன்றி, ஸொல்ப மூடுபிட்றி
கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு வர்றியான்னு, ' யாரோ..... யாரையோ' கேக்குறமாதிரி இருக்குல்லே?
புலம்பல்ஸ் டே ஆகிப்போச்சே.... சாப்பிட ஏதுவான ஒரு இடமும் பெல்தங்காடியில் கண்ணில் படலை. இன்னும் கொஞ்சம் போய்ப் பார்க்கலாமுன்னு இவ்வளவு தூரம் வந்துருந்தோம். ஒரு காண்டினெண்டல் ரெஸ்டாரண்டு பெயரைப் பார்த்து அங்கே போனால்.... ஏர் கண்டிஷன் அறையிலே நம்மளை இருத்தி, ஏஸி போட்டுவிட்டுட்டு ஆர்டர் எடுத்துக்கிட்டுப் போனாங்க. ரெண்டு பரோட்டா, ஒரு வெஜிடபிள் கறி. 'நான் வெஜ்' வேணாமா வேணாமான்னு பத்து முறை கேட்டுட்டுப்போன சப்ளையர் நம்மைச் சுத்தமா மறந்துட்டார். ஒரு இருவது நிமிஷம் போயிருக்கும். என்னதான் ஆச்சுன்னு கேட்டுட்டுவரப்போன கோபால், 'இப்போ கொண்டு வர்றாராமு'ன்னு சொல்லி இன்னும் அஞ்சு நிமிசம் ஆச்சு. ஊஹூம்...... நோ ஸைன்!
இனி காத்திருக்க முடியாது போய் ஆர்டரைக் கேன்ஸல் செஞ்சுட்டுக் கிளம்பலாமுன்னு ரெண்டு பேருமா கல்லா இருக்கும் அடுத்த வாசலுக்குப் போனால்....அடுத்திருந்த ஹாலில் நிறைய ஆட்கள் இருந்து சிக்கனும் மட்டனும் மீனுமா வெட்டி விழுங்கிக்கிட்டு இருக்காங்க. சுடச்சுடப் பரோட்டா அடுக்கைக் கொண்டுவந்து அங்கே விளம்பறார் ஒரு பணியாளர்.
நாம் வெஜ் என்றபடியால் மெனெக்கெடலை போல இருக்கு. கல்லாவில் இருந்தவரிடம் ஆர்டரைக் கேன்ஸல் செஞ்சுருங்க. நேரமில்லை காத்திருக்கன்னா...அவர் அதெல்லாம் முடியாது. இதோ வந்துருதுன்றார். சரி. இதுக்குண்டான காசையாவது வாங்கிக்குங்க. எங்களுக்கு ஒன்னும் வேணாமுன்னா முடியாதாம். காசை வாங்கிக்க மாட்டாராம். பரோட்டாவை நம் வாயில் திணிச்சுட்டுத்தான் காசு வாங்கிப்பாராம். அந்த ஆள் பணியாளரை நோக்கிக் கத்துனதும்தான் தெரிஞ்சது ஆயாள் ஒரு சேட்டனாணு. சரியான இடத்துலே நான் தலையிட்டேன். 'தீரே சமயமில்லா. இனியும் ஒருபாடு தூரம் யாத்ரை பாக்கி உண்டு. நேரத்தே போயில்லெங்கில் ப்ளேன் போய்க்கழியும்.'
தயை உள்ள பார்வையை நம் பக்கமும், அக்னிப்பார்வையைப் பணியாளரிடம் ஒரே சமயத்தில் வீசினார் சேட்டன். தடதடன்னு ஆடும் கையால் ரெண்டு தட்டுகளில் வெறும் பரோட்டா வருது. 'பார்ஸல் ஆய்க்கோட்டே'ன்னு நாங்க சொன்னதும் திரும்ப உள்ளெ எடுத்துக்கிட்டு ஓடப்பாக்கிறார். சேட்டன் இன்னொரு முறைப்பை அனுப்புனதும் ஒரு ப்ரவுன் கவரில் போட்டுக் கொடுத்தார். 24 ரூபாயைக் கொடுத்துட்டு அதை எடுத்துக்கிட்டு 'கறி கறி' ன்னு பின்னால் இருந்து வந்த கூச்சலைக் கண்டுக்காம hurry hurry ஓடுனோம்.
தர்மஸ்தலாவில் இருந்து 53 கி.மீ. தூரத்தில் இருக்கும் மூடபிட்றிக்கு வந்து சேர்ந்தாச்சு. வண்டியில் வரும்போதே பசிப்பிணியைத் தீர்க்க ஒவ்வொரு பரோட்டாவை சின்ன ரோலாச் சுருட்டி வக் வக்ன்னு தண்ணீரைக் குடிச்சுக்கிட்டே தின்னோம். வாயே சரி இல்லை. மொழுக்ன்னு இருக்கு. ஸ்ரீராமர் கோவில் புள்ளையார் கொடுத்த லட்டு கைவசம் இருக்கேன்னு நினைவு வந்துச்சு. அதை மூணாப் பகிர்ந்துக்கிட்டோம். ப்ரசாதமாச்சே.... தனியாத் திங்கலாமா?
சின்னத்தெருக்களில் நுழைஞ்சு ஆயிரம் தூண் பஸாடிக்குப் போறோம். இந்த மூடபிட்றிதான் சமண மதத்தினரின் காசி. நம்ம அதிர்ஷ்டம் பாருங்க...... 'உத்திர காசி'க்குப் போகணுமுன்னு ஆசைப்பட்டதுக்கு 'தக்ஷிண் காசின்னு கோகர்ணாவையும் ஜைன காசி'ன்னு இங்கேயும் வந்துக்கிட்டு இருக்கேன். வரும்வழியில் சமண மடங்கள் சில இருக்கு. சமண மத சம்பந்தமான ஸ்ரீமதி ராமராணி ஆராய்ச்சி மையம் இங்கே இருக்கு. கையால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் பெரிய தொகுப்பு இங்கே இருக்காம். உலகம் முழுவதிலும் இருந்து ஜைனமத ஆராய்ச்சியாளர்கள் வந்து போகும் இடமாம். காசி என்ற பெயரும் இருப்பதால் சமணர்கள் வருசம் முழுசும் யாத்ரீகர்களா வந்துக்கிட்டே இருப்பாங்களாம். இங்கே அப்படி வரும் மக்களுக்குத் தங்கும் வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க.கோவில் இருக்கும் தெருவுக்குள் திரும்பினால் கண் எதிரே சுமாரான அளவில் முகப்போடு 'த்ரிபுவன திலக சூடாமணி' பஸாடி. அஞ்சாம் நூற்றாண்டு சமாச்சாரம். தெருவின் இரண்டு பக்கங்களிலும் திண்ணைவச்ச அழகான சின்ன அளவிலான வீடுகள். பளபளன்னு மின்னும் கதவுகள் வா வான்னு கூப்புடுது. கோவிலுக்குள்ளே நுழைஞ்சால் தேருக்கு நடுவில் என்னமோ மரக்கம்பம் வச்சுக்கிட்டு இருக்காங்க. திருவிழா வரப்போகுது போல!
சமணமதம் இந்தப் பக்கங்களில் தழைத்திருந்த காலக்கட்டங்களில் இங்கே கட்டப்பட்ட 18 பஸாடிகளுக்கும் தலைமையா இருந்தது இதுதான். அலங்காரமும் அளவும் இங்கேதான் பிரமாதம். விதவிதமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ள தூண்கள் ஏராளம். எண்ண முடியலைன்னோ என்னவோ இதுக்கு ஆயிரம் தூண்கள் பஸாடின்னு பெயர் வச்சுட்டாங்க.
வழக்கம்போல் ரெண்டு பக்கமும் யானைகள் நிற்கும் படிகள். மகாஸ்தம்பம், கொடிமரம் கடந்து, கோவிலைப் பார்த்துக்கும் ட்யூட்டியில் இருந்தவரிடம் ஒரு தொகையை கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுத்து ரசீது வாங்கிக்கிட்டோம். படம் எடுத்துக்க அனுமதி கிடைச்சதோடு அவரே வந்து ஒவ்வொன்னையும் உடைஞ்ச தமிழில் விளக்கிச் சொன்னார். நம்ம சென்னை 'பாம்க்ரோ ஹொட்டேலில்'' அஞ்சு வருசம் வேலை செஞ்சுருக்காராம்!
முகப்பு வாசக் கதவில் இருந்தே அற்புதமான சிற்ப வேலைகள் ஆரம்பிச்சுருது. முன்மண்டபத்துலே ஒவ்வொரு தூணும் 'ஆ'ன்னு வாயைப்பிளக்க வைக்குது. ராமாயணக் காட்சிகள் அற்புதம். சேது கட்டுவதற்கு சுக்ரீவனோட சேனைகள் கல்லைச் சுமந்து கொண்டு போய்க் கடலில் போடும் சிற்பம் சூப்பர்.
பாம்க்ரோவ்காரர் இல்லைன்னா இதைக் கவனிச்சுப் பார்த்திருக்க முடியாது. இங்கேயும் மண்டபத்தில் சிலர் கடலை வறுத்துக்கிட்டு இருந்தாங்க. கல்லைக் கடைஞ்செடுத்த தூண்களும் சிற்பங்களும். நம் கை நுழையும் விதத்தில் பெரிய தூண்களில் சுத்திவரச் சின்னதாக் குட்டிக் கணுக்களாத் தூண்கள். வெறும் தூண்களுக்கே தனியா ஒரு ஆல்பம் போடத்தான் வேணும். நேரம் கிடைக்கட்டும்
தூரத்தே இருக்கும் கருவறையில் மூலவர் ஜொலிக்கிறார்.தவழும் கண்ணன் வெண்ணை சுவைக்கிறான். நாட்டிய மங்கைகளும் யானைகளும் அலங்காரக் கதவுகளும் அழகழகான சிற்பங்கள் உள்ள தூண்களுமா எதைச்சொல்ல எதை விட? இண்டு இடுக்கு விடாமல் எப்படித்தான் செதுக்குனாங்களோ!!!!
மண்டபத்தின் உள்ளே இருந்து அண்ணாந்து பார்த்தால்.... வெறுங்கல்லால் எப்படியெல்லாம் உள்கூரை அமைச்சுருக்காங்க!!! எப்படி எதுக்கும் அசையாமல் 1500 வருசங்களா நிக்குது!!!!
வெளிப்புறம் ப்ரகாரம் சுற்றிவரத் திண்ணைமேடை இருக்கு. அங்கேயும் மூணு வரிசைகளில் தூண்களோ தூண்கள். நமக்கு ஆறு பக்கமும் கற்களைத்தவிர வேறொன்னுமே இல்லை. கேரளபாணியில் மேல்மாடம் உள்ள கூரை. அங்கேயும் சிற்பவேலைப்பாடுகள். திருவிழாவுக்குக் கொளுத்தும் தீவட்டின்னு ஏகப்பட்டவை.
கோவில் இருக்கும் அடி பீடத்தையும் விட்டுவைக்கலை. அங்கே ஒரு தீ உமிழும் சீன ட்ராகனைப் பார்த்து அசந்து போயிட்டேன்.
யானைக்கும் குதிரைக்கும் குரங்குக்கும் சிம்மத்துக்கும் அளவே இல்லாம எல்லா இடங்களிலும் நீக்கமற!!!!
தலவிருட்சம் இருக்கும் மேடை வெளிப்பிரகாரத்துலே. கோவில் படு சுத்தம். மாடி ஏறிப்போய்ப் பார்க்க அனுமதி கிடைக்கலை. சந்நியாசிகள் சிலர் தங்கி இருக்காங்களாம்.சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அருமையான கோவிலைப் பார்த்த மனத்திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பி பாஜ்பே விமான நிலையம் வந்து சேர்ந்தோம். இருபத்திமூணே கிமீதான். அரைமணியில் கொண்டுவந்து தள்ளிட்டார் ப்ரஷாந்த். இது அவரோட ஏரியாவாச்சே! சிட்டிக்குள்ளே போகாததால் 20 கிமீ தூரம் மிச்சமாச்சு.
கிங் ஃபிஷர் பணியாளர்கள் ஓடோடிவந்து விசாரிச்சுச் சாமான்களை ட்ராலியில் ஏற்றி 'செக் இன்' செய்யும் கவுண்டருக்கு அழைச்சுக்கிட்டுப்போய் போர்டிங் பாஸ் வாங்கும்வரை எல்லா சேவைகளையும் இனிய முகத்தோடு செஞ்சாங்க. சிகப்புக் கம்பளமும், வெத்திலை பாக்கும்தான் பாக்கி. இதென்னடா நாம் எந்த லோகத்தில் இருக்கோம்னு நினைச்சேன். இதுவும் பார்ட் ஆஃப் இண்டியாதானே!!!!!!
ப்ரஷாந்துக்கு நன்றி சொல்லிட்டு அப்படியே நம்மாலான உபதேசம் ஒன்னும் செஞ்சேன். சின்ன வயசுக்குள்ள வேகம் இருக்கும். ஆனால் மலைவளைவுப் பாதைகளில் வேகமாப் போகாமல் கவனமாக வண்டி ஓட்டணும். வாழ்க்கை இன்னும் ரொம்ப இருக்கு உமக்கு. இருந்து எல்லாத்தையும் வாழ்ந்து பார்க்கவேணாமா?சரின்னு தலை ஆட்டுனவரின் கண்களில் என்னமோ இருந்தமாதிரி (எனக்கு) தோணுச்சு. விடுங்க......... ப்ரமை .....
'தீர்த்தயாத்திரை' முடிச்சவளுக்குப் போனஸா போனால் போகட்டுமுன்னு சாமி பிஸினெஸ் க்ளாஸ்லே ஸீட் போட்டுருந்தார். ஏற்கெனவே நெட் மூலம் ஸீட் தெரிவு செஞ்சுருந்தோம். வழக்கமான விமானம் இல்லாமல் ஸ்ரீலங்கா போகும் விமானம் வந்துருக்காம். சென்னையில் நம்மை இறக்கிட்டு இலங்கை போகுதாம். எப்படியோ நல்ல இருக்கை கிடைச்சது. பெண்களூர் வந்து ஒரு மணி நேரம் கழிச்சுக் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.
'சரியாக் கணக்குப்போட்டுச் சொன்னால்' மங்களூர் வந்து இறங்கியதில் இருந்து திரும்ப மங்களூர் விமானநிலையம் வரை 'ஏறக்குறைய' 100 மணி நேரம் ஊர்சுற்றிப் பார்த்ததில் நான் அனுபவித்த எல்லாக் காட்சிகளையும் ப்ளஸ் & மைனஸ் உட்பட 32 பதிவுகளா எழுதி இருக்கேன். ஆரம்பம் முதல் கூடவே வந்தவர்களுக்கும் இடையில் வந்து கலந்துக்கிட்டவர்களுக்கும், பின்னூட்டம் இட்டும் இடாமலும் ஆதரவு தந்த அனைத்து வாசக நண்பர்களுக்கும், நம் சரித்திர வகுப்புக் கண்மணிகளுக்கும் என் இனிய வணக்கங்களும் நன்றிகளும்.
மீண்டும் சந்திக்கும் வரை,
என்றும் அன்புடன்,
உங்கள் துளசி டீச்சர்.
Posted by
துளசி கோபால்
at
5/19/2010 02:06:00 PM
32
comments
Labels: moodabidri, அனுபவம்
