எச்சரிக்கை: இது சமையல் பதிவு:-)
எங்க பாட்டி அடிக்கடி சொல்லும் பழமொழி. ஏன் எதுக்கு,எப்படின்னு பிச்சுப்பிடுங்குவேன் சின்ன வயசுலே.(பதிவர் ஆகும் லக்ஷணம் அப்பவே வந்துருக்கு. ஆனா யாரும்தான் கண்டுபிடிக்கலை இன்க்ளூடிங் மைசெல்ஃப்)
பாலைக் காய்ச்சுனா அப்படியே சுண்டிபோயிரும். ஒரு சொம்பு காய்ச்சுனா முக்காச் சொம்புதான் கிடைக்குமுன்னு சொல்வாங்க. சொம்புக் கணக்குத்தான் அவுங்களுக்கு. பழையகாலத்து ஆளுல்லே! ஆழாக்குலே அளந்து வாங்கிப் பழக்கமில்லை.
அப்ப மீனு? பக்கத்துவீட்டுலே போய்ப் பாருன்னுருவாங்க. பச்சம்மாக்கா வீட்டுலே மீன் கழுவும்போது போய்ப் பார்த்தேன்.(அப்புறம் இதுவே பழக்கமாகி அங்கே மீன் வாங்குனதும் சொல்லி அனுப்புங்கக்கா. வந்து வேடிக்கை பார்க்கணும் என்ற அளவுக்குப் போயிருச்சு. சிமிட்டாமப் பார்க்கும் அந்தக் கண்ணைப் பார்க்க எனக்கு ரொம்பவே பிடிக்கும்) அதை செதிள் நீக்க அருவாமணையிலே இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமா இழுத்துத் தேய்ச்சதும் சட்னு இளைச்சுப் போயிருச்சு. அப்புறம் தலையையும் வாலையும் வெட்டுனதும் மீனோட நீளம் பாதி காலி. வயித்தை அறுத்து உள்ளே சமாச்சாரங்களை வெளியே இழுத்துக் கடாசுனதும் புள்ளைப்பெத்த வயிறுமாதிரி பொசுக்ன்னு ஆகிருச்சு. பச்சமக்கா வூட்டுக்காரர் ரெண்டடி நீளத்துக்குக் கையில் புடிச்சுக்கிட்டுக் கம்பீரமாக் கொண்டு வந்த மீனு, இப்போ ஏழெட்டுத் துண்டாச் சட்டிக்குள்ளே கிடக்குது. அதை உப்புக்கல்லு போட்டு உரசி அந்தக் கவுச்சை எடுப்பாங்க அக்கா. நாந்தான் அடுப்படி ஜாடியிலே இருந்து உப்பள்ளியாந்து கொடுப்பேன். சட்டி உள்ளே அடுக்களைக்குப் போகும், நம்ம வேடிக்கையும் இத்தோடு முடிஞ்சுரும்.
இந்த மீன் & பாலோடு இன்னொரு ஐட்டத்தையும் புதுசாச் சேர்க்கணுமுன்னுதான் இதை இங்கே பதியறேன். பொல்லாத புடலங்காய்...என்னத்தை எழுதப்போறேன்னு கூவாதீங்க மக்கள்ஸ். எஸ்.... எஸ். அதே புடலங்காய்தான்!
எங்கூர்லே எல்லா இண்டியன் வெஜீஸ்-ம் ஃப்ரீஸர் ஐட்டமாத்தான் கிடைக்கும். புடவல்னு இருக்கும் பேக்கட்டைப் பிரிச்சால் 2 x 2 அளவுலே வெட்டுன துண்டுகள் கிடக்கும். Dடீஃப்ராஸ்ட் செஞ்சுட்டுச் சின்னதா வெட்டலாமுன்னா நழுவல். செய்யாம வெட்டலான்னா கையிலே பிடிக்க முடியாம ஐஸ். ப்ச்... அப்படியே தூக்கிப் பருப்புலே கடாசி, கூட்டுன்னு 'கதை' பண்ணிறலாம். இப்போ சி.செ.வில் இருப்பதால் கண்ணில் பட்ட காய்கறியை ஒரு கை பார்க்காம விடுவதில்லை. அதான் ஃப்ரெஷா(?) கிடைக்குதே.
சரியா என் உசரம் இருக்கும் புடலங்காய் ஒன்னு வாங்கியாந்தேன்.(அதெல்லாம் புடலை நிக்கவச்சு அளந்தாச்சு) எங்க பாட்டி வீட்டுலே செய்யும்(போச்சுடா...மறுபடி பாட்டியா!!!)புடலங்காய் வதக்கலை நம்ம முறைப்படி( அதான் எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்கு வேற வழியாச்சே)செஞ்சுறணுமுன்னு.
புடலங்காய் வதக்கல்:
தேவையான பொருட்கள்:
உங்கள் உயரத்துக்கு ஒரு புடலங்காய்
உப்புத்தூள் 3/4 தேக்கரண்டி.
தாளிக்க:
எண்ணெய் 4 தேக்கரண்டி அல்லது 2 மேசைக் கரண்டி.
கடுகு அரைத்தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 4 (துண்டுகளா ஒடிச்சுக்கணும்)
பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி
கருவேப்பிலை ஒரு இணுக்கு
தேங்காய்த் துருவல் 2 மேசைக்கரண்டி (ஆப்ஷனல்)
மஞ்சள் பொடி ஒரு அரைக்கால் தேக்கரண்டி (இதுவும் விருப்பப்பட்டால் மட்டும்)
செய்(ஞ்ச)முறை:
முழுசா வீட்டுக்குக் கூட்டியாறமுடியாதுன்னு கடையிலேயே நாலா உடைக்கும்படி ஆயிருச்சு. எடைவேற போடணுமாமே (-: புடலங்காய்த் துண்டுகளை ஒருமுறை கழுவிட்டு நீளவாக்கில் ரெண்டா வெட்டணும். குடலை(?) உருவி (மாலையாக)போட்டுறணும். இப்ப இன்னும் ரெண்டாக் கீறிட்டு படத்தில் இருப்பதுபோல மெலிசா வெட்டணும்."ஏம்மா.....எல்லாப் புடலங்காயும் இன்னிக்கே செய்யப்போறியா?" கேட்டது யாருன்னு தெரியுதுல்லே? கண்டுக்காதீங்க. அதென்ன எல்லாப் புடலங்காயும்? வாங்குனதே ஒன்னுதான்.
நறுக்குன துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துவச்சு, கொஞ்சம் உப்புப்போட்டுக் கலந்து ஒரு பக்கமா மூடி வச்சுட்டு மத்தவேலைகளைப் பார்க்கலாம். ஒரு மணி நேரம் ஊறட்டுமே........அதுபாட்டுக்கு!
ஃப்ரீ டைம் கிடைச்சதும் அடுப்பில் ஒரு கடாய்/வாணலி வச்சு எண்ணெய் ஊத்திக் காய்ஞ்சதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ஞ்ச மொளகாய், கருவேப்பிலை போட்டுத் தாளிச்சுட்டு, புடலைத்துண்டுகளை பிடிப்பிடியா எடுத்து ஒட்டப் பிழிஞ்சுட்டு வாணலியில் போட்டு வதக்கணும். கொஞ்சம் சிறு தீயாக இருக்கட்டும். தண்ணியெல்லாம் சேர்க்காதீங்க. ஏற்கெனவே அதுவே தண்ணிவிட்டுக் கிடக்கும். அத்தைப்போயி.....வாணலி நிறைய இருக்குமே! மெதுவா வதங்க வதங்க ,சுருங்கிச் சுருங்கி..... இப்பத்தான் எங்க பாட்டி சொன்ன பழமொழி இங்கே வருது!
கூடுதல் உப்பு தேவை இருக்காது. ஏற்கெனவே உப்புப்போட்டுப் பிசறி வச்சதுதானே? வேணுமுன்னா கொஞ்சம் சுவை பார்த்துட்டு காலோ அரைக்காலோ ஸ்பூன் உப்புத்தூள் சேர்த்துக்குங்க. ஆனா கவனமா இருங்க. கூடுதல் உப்பு உடலுக்குக் கேடு.வதங்கிச் சுருண்டு, வாணலியை எட்டிப் பார்த்தா எங்கியோ கிடக்கும் அந்த வதக்கலில் கொஞ்சம் தேங்காய்த் துருவல் சேர்த்துக்கலாம் உங்களுக்கு விருப்பம் இருந்தால். நான் கொஞ்சம் சேர்த்தேன். (அளவு தெரியாம பிசறி வைக்கும்போதே தாராளமான கையாக இருந்ததை வேறு எப்படி சமாளிக்க? ஆனா ஒன்னு. இங்கே இந்தியாவில் 'தேஜ்' கொஞ்சம் கூடுதல்தான். உப்பாகட்டும், மிளகாய் ஆகட்டும், சக்கரை ஆகட்டும் எல்லாமே அதனதன் குணத்தில் தூக்கலாத்தான் இருக்கு. இதுமட்டுமா? சோப் தூள்? அதுவும்தான். மைல்டா இல்லேப்பா. ஸ்ட்'ராங்'கு காமிக்குது.)
நம்ம வீடுகளில், சமையலில் ஒரே ஒரு குறை என்னன்னா, மாய்ஞ்சு மாய்ஞ்சு சமைச்சுட்டு அதை பரிமாற எடுத்து வைக்கும்போது 'ப்ரஸண்டேஷன்' பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அப்படியே கிண்ணத்தில் எடுத்துவச்சு உணவு மேசைக்கு வந்துரும். அதை இன்று ஒரு நாளாவது மாற்றலாமேன்னு (அதான் ஃபோட்டோ புடிக்கறமுல்லெ) ஒரு தட்டில் எடுத்து வச்சேன். கண்ணாடித்தட்டோ பாத்திரமோ இருந்தால் நல்லா இருக்கும். தாற்காலிக வசதிகளால் இது ஒன்னும் இல்லை. காண்ட்ராஸ்டா எதாவது நிறம் இருக்கான்னு தேடுனா.... ஆரஞ்சு ஒன்னு கண்ணில் பட்டது. அப்படியே உரிக்காம வச்சுருக்கலாம். விதி யாரை விட்டது?
இப்படியாச்சு!
சாப்பிடும்போது...........
"என்னம்மா புடலங்காயில் உப்பு கொஞ்சம் கூடுதலா இருக்கே..."
"எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க"
(இப்படித்தான் சாப்பிடணுமுன்னு சொல்லி இருக்கலாமோ!)
பி.கு: பாட்டி வீட்டில் வதக்கல் கொஞ்சம் கருப்பா இருக்கும். இங்கே நம்ம வீட்டில் கருநிறம் வரவே இல்லை. நானே 'யோசிச்சு'ப் பார்த்ததில் காரணம் புரிஞ்சுருச்சு. பாட்டி காலத்தில் நான்ஸ்டிக் ஏது? இரும்பு வாணலிதானே!!!!
Sunday, January 03, 2010
காய்ச்சாத பாலும் கழுவாத மீனும் ஆம்புளெ கண்ணுக்கு அதிசயமாம்.
Posted by
துளசி கோபால்
at
1/03/2010 09:55:00 PM
39
comments
பயbபிராந்தியால் விஸ்கி விஸ்கி அழுதா எப்படி?
'சொய்ங்'ன்னு 'தோசையின் ஓசை'யும் , 'ட்ரிங் ட்ரிங்'ன்னு தொலைபேசியின் ஒலியும் ஒரே சமயத்தில். எதை முதலில் கவனிக்கணுமுன்னு ஒரு .0001 விநாடி 'யோசிச்சு (ஃபயர் எஞ்ஜினுக்கு மாடி ஏறிவர முடியுமோ?) சட்டுவத்தை ஒரு கையிலும் கார்டுலெஸ்ஸை மறுகையிலுமா பிரச்சனையைத் தீர்த்தேன்.
நானூறு பதிவைக் காணோ(மா)ம்!!! குரல் தழுதழுத்து ஒரே அழுவாச்சிக் காவியமாப் போச்சு. யார் திருடிட்டாங்க? என்னடா பதிவுக்கு வந்த சோதனை? எல்லாம் இருக்கும் கவலைப்படாதீங்க. தோ...போய் பார்க்கிறேன். சமீபத்துலேகூட ரெண்டு மூணுபேர்களோட தளத்தைத் திருடிட்டாங்கன்னு சேதிவந்து லபோதிபோன்னு அடிச்சுக்கிட்டு அதுக்கு முன்னெச்சரிக்கையா என்ன செய்யலாமுன்னு கேட்டு, 'பேக்கப்' வச்சுக்கோ. செட்டிங்ஸ்க்குப் போய் ப்ளாகை இறக்கிவச்சுக்கோ ன்னு சொன்னதைக் கடைப்பிடிக்க அங்கே ஓடி, (அடுப்பிலிருந்து) 'இறக்க முடியாம' அவஸ்தைப் பட்டதெல்லாம் மூளையில் ஓடி மறைஞ்சது.
கரையண்டா.....கரையாதே கேட்டோ....பொம்மனாட்டிகள் கரஞ்சால் எனக்காகாது கேட்டோ........ (ஐயோ...இது ஒன்னு, வேளைகெட்ட வேளையில்)
"இதுவரை எழுதுனதெல்லாம் 'ஸேவ்' பண்ணி வச்சுருக்கீங்கல்லே? "
"இருக்குன்னு நினைக்கிறேன்"(போச்சுரா?) அடுத்துவந்ததுதான் எனக்கு ஒரே ஷாக். "என்னமாவது ஆட்டும். நான் போய் கொஞ்சநேரம் படுத்துக்கப்போறேன்"
ஹாஆஆஆஆ ஹௌ cகுட் யூ??????
இதுக்குள்ளே நம்மாளு பதறிப்போய், வைரஸா இருக்கும் நியூ இயருக்கு வைரஸ் விட்டுருப்பானுங்க. (பட்டாசா என்ன, பண்டிகைக்கு விட?) உன்னது என்னாச்சோ......உள்ளே ஓடறார்.
"அங்கே என்னோடதைத் தொடாதீங்க...." அலறல்
"நான் உன்னதை என்னோடதில் பார்க்கிறேன்"
'பார்த்தா......? என்ன தெரியுமாம்? என்னோட விசாரம்!
தோசையை அவசரவசரமாத் தொட்டுக்கக்கூட இல்லாமப் பிச்சு வாயிலே போட்டுக்கிட்டு கணினிக்கு ஓடுனேன். ஸோ & ஸோவின் பக்கத்தைத் திறந்தால் எல்லாமே சமர்த்தா லோடு ஆகுது. ஆர்க்கைவ்ஸ் விவரம் வாரக் கணக்கு. அது அனுமார் வால்போல நீளமாக் கிடக்கு. இதுலே எந்த 400 ஐக் காணோம்?
ராண்டமா அங்கங்கே க்ளிக்குனா வந்துக்கிட்டுத்தான் இருக்கு. கண்டேன் சீதையை'' மாதிரி ரெண்டே சொற்களில் 'எல்லாமே இருக்கு' ன்னு அழுவாச்சியை ஃபோனில் கூப்பிட்டுச் சொன்னேன்'
"இல்லேப்பா. நானூறு பதிவுகள் காணாமப்போயிருக்கு. 889 லே இப்போ 489தான் இருக்குன்னு சொல்லுது"
அடுத்த ஷாக் எனக்கு. என்ன எண்ணூத்தி............ எம்பத்தி........................ஒம்போதா.....................................?
சரி. அழுகையை நிறுத்துங்க. ஒவ்வொன்னாச் செக் பண்ணலாம். 889ன்னு எப்படித் தெரியும்?
"டாஷ் போர்டுலே வருதே"
"ஓக்கே. இப்ப அந்த டேஷ் போர்ட் பக்கத்தைத் திறந்துவையுங்க. இப்போ என்ன சொல்லுது?
"489. அதான் 'அப்போருந்து' சொல்றேனே 400ஐக் காணோமுன்னு....."
"எடிட் போஸ்ட்லே போய் ஆரம்பகாலத்து போஸ்ட் பேர் என்ன இருக்கு பாருங்க. ஸ்ரீ கோதா ஆஃப் ஸ்ரீவில்லிபுத்தூர்...(இங்கிலிபீஸு) இருக்கா?"
"இருக்கு."
கடைசியாப் போட்டது 'சென்னையில் பசுமை தேடி' இருக்கா?
"இருக்கே! நடுவிலேதான் நானூறைக் காணோம்!"
"சரி, அழுகையை நிறுத்திட்டு, நான் சொல்லச் சொல்ல, இருக்கான்னு சொல்லுங்கோ"
"இருக்கா?"
" இருக்கு"
சின்னப்பசங்க விளையாட்டில் ரைட்டா ரைட்டு ன்னு விளையாடுவோம். தப்பா இருந்தா அது கொய்ட்டு! ரைட்டுக்கு எதிர்ப்பதம்!
அது எந்த நானூறு................ தலையைப் பிச்சுக்கிட்டுத் தேடினேன். சிலதில் தலைப்புக்கு முன்னால் 183, 190, 243 ன்னு நம்பர்ஸ். அதை அப்படியே மெயிண்டெய்ன் பண்ணி இருந்துருந்தா இந்தத் தொந்திரவே இருக்காது. மறுபடி க்ளிக்கிக் கிளிக்கித் தேடிக்கிட்டே இருக்கேன்.
" எடிட் போஸ்ட்லே வரிவரியா பதிவின் (சரியாச் சொன்னா இடுகை.ஆனா பழக்கதோஷம்) தலைப்பு, அடுத்த காலத்தில் தேதி வருதுல்லே. அதைக் கீழே இருந்துக் பார்த்துக்கிட்டே வாங்க. தேதிகளுக்கிடையில் நீண்ட கேப் வருதா? "
" அதெல்லாம் இல்லை. நானூறைக் காணோம்."
"போச்சுடா...... ஷ்யூராத் தெரியுமா? 889? "
"ஆமாம். நேத்துக்கூடப் பார்த்தேன். 889தான். அதுலேதான் நானூறைக் காணோம். அதைத்தானே அப்போலே இருந்து சொல்றேன் பெருமாளே காப்பாத்து....."
ஒரு க கை நா இன்னொரு க கை நாவுக்குப் புரியவைப்பதில் உள்ள சிரமத்தை எழுதுனா அது அந்த ஆர்க்கைவ்ஸாட்டம், ராவணன் தர்பாரில் அனுமார் வால்...........
"முதல்லே இந்த ஆர்கைவ்ஸ் வாரப்பட்டியலை மாத்துங்கோ. மாசப்பட்டியலா வச்சா, அட்லீஸ்ட் பார்க்க ஈஸியா இருக்கும். "
"அப்படித்தான் இருந்தது. நாந்தான் வாரமாக்கினேன்" (என்னே ஒரு பெருமிதம்!!!!!)
திரும்பத் திரும்ப மண்டையில் ஓடுது அந்த 889. அட! ஆமாம். எப்படி?
நெசமாவா?
"அது 889தான். ஐநூறு கூட வந்ததே ."
பிடிகிடைச்சமாதிரி இருக்கு எனக்கு.
"அப்போ அந்த ஐநூறாவது பதிவுன்னு எழுதுனீங்களா?
"இல்லேப்பா. எல்லோரும்தான் ஐநூறு ஆயிரமுன்னு போடறா. நான் பேசாம இருந்துட்டேன்"
"இப்போ மாசாமாசம் எத்தனை பதிவு போடறீங்க? ஏழெட்டு? "
"நோ நோ. பத்துப் பதினைஞ்சு"
" அப்ப அந்த ஐநூறு வந்தப்பக் குறிப்பிடவே இல்லையா? "
"அதெப்படி அது ஒரு அச்சீவ்மெண்ட் ஆச்சே. கடசியில் ஒரு வரி எழுதி இருப்பேன். "
(அப்படிப் போட்டது நானில்லையோ!!!)
"அது என்ன பதிவு? எப்போன்னு ஞாபகம் இருக்கா? "
"பேர் ஞாபகம் இல்லை. ஆனா போன வருசம் ஆரம்பத்திலே"
ஆஆஆப்ப்டுடுத்து
ஜனவரின்னே வச்சுக்கிட்டாலும் இன்னிக்குத் தேதிக்கு ஒரு வருசம் .அப்ப 389 பதிவு இந்த வருசத்துலே எழுதி இருக்கணும். தினத்துக்கு ஒன்னு! அப்படியும் மிச்சம் வரும்.
லாஜிக்காலே ..... அடிக்கணும்.
"தினமுமா பதிவு போட்டீங்க? "
"அதெப்படி முடியும்? வேற வேலை இல்லையா?"
"போகட்டும். பதிவெழுத ஆரம்பிச்சுச் சரியா 45 மாசம் ஆகுது. மாசம் பத்துன்னாலும் 450. ஆர்வக்கோளாறில் கூடுதலா 39 . நடுவிலே உடம்பு சரியில்லை, ஊருக்குப் போயிருக்கேன்னு எத்தனை இடைவெளிகள்! அப்ப ப்ளொக்கர் சொல்லும் 489தான் சரி. "
"ஒருவேளை கண்ணாடியை மாத்தணுமோ? எல்லாம் என்னவோ ரெண்ட்ரெண்டாத் தெரியறது! பயந்துட்டேன். என்னவேணா ஆகட்டும். நான்போய் படுத்துக்கப்போறேன்."
என்னது ரெண்டு ரெண்டா? அப்ப அந்த நாலு மட்டும் ரெண்டு நாலாத் தெரியாம, ரெண்டாலே பெருக்கிக்கிட்டுத் தெரியுதா................. அட ராமா. நாலுக்குப் பக்கத்துலே தெரிஞ்சுருந்தா என்னா கதி! 4489..................நாலாயிரம் பதிவைக் காணோமுன்னு ............ பிரபந்தமா என்ன? .பெருமாளே நீ என்னக் காப்பாத்திட்டே.!!!
"ஒன்னும் காணாமப்போகலை. எல்லாம் அப்படியே இருக்கு. பயப் பிராந்தியிலே விஸ்கி விஸ்கி அழாம போய் தாச்சுக்குங்கோ. "
Posted by
துளசி கோபால்
at
1/03/2010 12:11:00 AM
46
comments
Labels: அனுபவம் பதிவர் வட்டம்
Friday, January 01, 2010
அட! சொல்லவே இல்லை!!!
புதுவருசத்தைப் 'புக் ஃபேரில்' இருந்து ஆரம்பிக்கலாம். நம்ம பதிவர்கள் பதிப்பகம் வச்சுருக்காங்கன்னு அங்கே போனதும்தான் தெரிஞ்சது. அஞ்சு ரூபாய் நுழைவுச்சீட்டு. புதிய தலைமுறை,கண்களில் இருந்து தப்பவே முடியாதபடி அமர்க்களமா விளம்பரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.கடைசியில் இருந்து ஆரம்பிச்சோம். விஸ்தாரமான இடம். பார்க்கிங் மோசமில்லை. தெருவிலிருந்து உள்ளே போகும் வழியெல்லாம் தோரண வாயில்கள் சிலபல. பாதையின் ரெண்டு பக்கத்திலும் பதிப்பகங்கள் அவுங்க புத்தகங்களை விளம்பரப்படுத்தி பேனர் வச்சுருக்காங்க. எல்லாமே ஒரே அளவுலே என்பதால் கண் உறுத்தாமல் இருந்துச்சு.
சில ஸ்டால்களைத் தவிர்த்து பல இடங்களில் குறைஞ்சது ரெண்டு பேராவது புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரிசையின் கடைசியில் ஒரு ஜூஸ் ஸ்டால். நல்லது! அதேபோல கூடாரத்தின் மறுகோடியில் குடிநீர் விற்பனை. இதெல்லாம் இல்லாமல் எக்கச்சக்கமா பபுள் ரீ ஃபில் கேன்கள் ஒரு பக்கம்.
பெரிய நிறுவனங்கள் ரெண்டு வாசலும் திறந்து வச்சுருக்கு. அப்படியே நுழைஞ்சு அடுத்த தெருவுக்குப் போயிறலாம்!!!தெருவில் வரிசைக்கு நடுவில் இருக்கும் குறுக்குச் சந்துபோல் இங்கேயும் இடம் விட்டுருக்காங்க. நல்லாத்தான் இருக்கு குறுக்குத்தெரு.
மலையாள மனோரமா, விசாலாந்திரா ன்னு மலையாளம் தெலுகு ஸ்டால்கள். இன்னும் ஹிந்திக்கு ரெண்டும் சமஸ்கிரதப் புத்தகங்களுக்கும் ஒன்னும் கூட இருக்கு.
மக்கள் தொலைக்காட்சி, பொதிகையும் துண்டு போட்டு இடம் பிடிச்சு வந்துருக்கு. பொதிகையில் நல்ல கலெக்ஷன்ஸ் வச்சுருக்காங்க.
இன்னிக்குச் சும்மாப்பார்க்கணும். இன்னொருநாள் நிதானமா வந்து வாங்கணுமுன்னு தான் திட்டம் 'தீட்டி' இருந்தேன். ஆனால்.....கோபால் வேணுமுன்னா வாங்கிக்கோன்னு பர்ஸை வெளியில் அப்பப்ப எடுத்ததால் ஒன்னு ரெண்டுன்னு கொஞ்சம் வாங்கினேன். கிழக்கில் கூட்டம் அம்முது. எனக்கும் ஒரு 'அடியாள் '
காலச்சுவடில் 'ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள்'.
உணவுக்குன்னே ஒரு ஸ்டால். எனக்கென்னமோ...ஒரு சிலர் நினைவு வந்தது:-))) சாப்பிடாமல் பதிவு எல்லாம் எழுத முடியுமா? யோகா, சமையல் ஆன்மீகம்ன்னு எக்கச்சக்கம். கணினி சம்பந்தமா ஒரு ஏழெட்டு.
கார்ப்பரேட் சாமியார்களின் 'கடைகள்' அமோகப் பளபளப்பில்.
நாலைஞ்சு நிறுவனங்கள் வீதிக்கு ஒன்னா நாலைஞ்சு வீடுகள் வச்சுருக்கு!
இஸ்கானில் கண்ணன்லீலைகள் பாலர் படப்புத்தகம் கிடைச்சது. படங்கள் அருமை. சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லணுமுன்னு ஆசை. நியூஸி போனதும் பிள்ளைகளைத் தேடணும். ஒரே கண்டிஷன் 7 வயசுக்குள்ளே இருக்கணும். அப்பத்தான் ஏன்னு கேக்காது:-)))) போர்ட் புக் இருக்குமான்னு தேடினேன். கிடைக்கலை.தெரிஞ்சமுகங்கள் ஒன்னும் கண்ணுக்குத் தெம்படலை. கடைசியில் வெறுத்துப்போனபோது ஞாநியைப் பார்த்தேன். நாலாம்தேதி புதுப்புத்தகம் ஒன்னு வருதாம். 'என் வாழ்க்கை என் கையில்'னு சொன்னார். ஆமாமாம்.
அம்புலிமாமா இளைச்சுக்கிடந்தார். யாரோ மும்பைப் பார்ட்டி நடத்துறாங்களாம் இப்போ. மராத்தி, ஹிந்தி, தெலுகு விற்பனை நல்லாவே இருக்காம். ஆனால்...தமிழ்தான்.....புள்ளைங்க அவ்வளவா.... சரி. விடுங்க. புதுவருசம், நல்ல நாளு. புலம்பலை இன்னொருநாள் வச்சுக்கலாமே108 வருசம் கழிச்சுப் பொங்கலுக்குக் கங்கண கிரகணம் வருதாம். நம்ம கண்ணு கெட்டுறக்கூடாதே என்ற கவலையில் சீனாக்காரன் பத்தியமாச் செஞ்சு அனுப்புன கண்ணாடி. 20 ரூபா.
நாங்கள் போனபோது பகல் மணி மூணு. பரவாயில்லாமல் நல்ல கூட்டம்தான்.
மொத்தம் 466 ஸ்டால்களுக்கான இடங்கள். இதுலே ரெவ்வெண்டு வீட்டை பலர் எடுத்துருந்தாங்க.பெரிய குடும்பமுன்னா இடம் வேணும்தானே?செக்யூரிட்டி! கண்காட்சி நடப்பைக் கேமெராவால் கவனிக்கிறாங்க.
வசதிகள் பரவாயில்லை. நாலைஞ்சு இடத்தில் க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி செஞ்சு வச்சுருந்தாங்க. பாக்கெட்டில் பணம் தீர்ந்து போச்சுன்னு சால்ஜாப்பு சொல்ல முடியாது:-)சிவசங்கரிக்கருகில் யாருன்னு ஒரே குழப்பம்! விசாரிச்சேன். சுதா சேஷன். ஆடியோ புக். எம்பி3யாம். தன்னம்பிக்கை தருவாங்களாம்.
ஏற்பாடுகளைப் பார்த்தால் எல்லாம் பக்கவா அமைஞ்சுருக்கு. 33 வருச அனுபவங்கள். லைட்வெளிச்சம் நல்லாவே இருக்கு. அங்கங்கே மின்விசிறிகள் சுழன்றாலும் வேர்க்கும் அளவுக்குச் சூடாவே இருக்கு. ஃப்ரெஷ் காற்று உள்ளெ வர அவ்வளவா ஏற்பாடில்லை போல!ஷுகர் செக்கப்
வெளியில் சிரிச்சுக்கிட்டே வாங்க சீனி இருக்கான்னு சொல்றோம்னு ஒரு இலவச சேவை. அதுக்கு எதிரில் ரத்தவங்கி. ஆம்புலன்ஸ் ஒன்னு நின்னது. அட்டகாசமா இருக்கு டிஸைன்.மாலை நிகழ்ச்சிகளுக்கு மேடையும் எதிரில் இருக்கைவசதிகளும் நல்லாவே இருக்கு. இன்னிக்கு இறையன்பு நடத்தும் பட்டிமன்றமாம்.
கைமுறுக்கை அடுக்கிவச்ச அழகும். தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலும்
ரெண்டு வருசத்துக்கு முன்னே இருந்ததைவிட இப்ப நல்ல முன்னேற்றம் தெரியுது. எது? சுண்டலான்னு கேக்கப்பிடாது.ஆமாம். நாம இப்போ புத்தகத் திருவிழாவைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம்.
நம்ம புதுகைத் தென்றலும் பரிசிலும் போட்டுருக்கும் ஸ்டால்களைப் பார்த்தேன்.
அட! சொல்லவேயில்லை!!!!
Posted by
துளசி கோபால்
at
1/01/2010 06:45:00 AM
86
comments
Labels: BookFair2009, அனுபவம் புத்தகத்திருவிழா
