Friday, May 02, 2008

இன்றே இப்படம்(படங்கள்) கடைசி:-))))

இன்னிக்கு நாம் இங்கே இருந்து கிளம்பறோம். டூர் முடியப்போகுது. இந்த ஆத்தையும் அதுலே படகுகள் மிதக்கறதையும் பார்த்தா...... ஹூம்ம்ம்....... என்னிக்கு நம்ம 'கூவம்' இப்படி ஆகப்போகுதுன்ற பெருமூச்சுதான் வருது.







இங்கேயும் ஏழ்மை இல்லாமல் இல்லை.





நதிக்கரையின் ஓரங்களில் நடைபாதை மாதிரி இருக்கும் இடங்களில் நிதியில்லாதவர் வசிக்கிறாங்கதான். சின்னச்சின்னதா வியாபாரமும் இருக்கு. ஆனாலும் கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்கு எல்லாம். ஏன் நம்மூர்லே கொஞ்சமாவது சுத்தம் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க
மாட்டேன்றோமுன்னும் மனசு அடிச்சுக்குது.





பாலத்துக்குமேல் கார் ஓடும் அதிர்வைத் தடுக்கவா இந்த ரப்பர் விரிப்பு போட்டுருக்கு?


ஈ மொய்க்காத பண்டம் வேணுமா?










பருந்துப் பார்வையில் 'பறக்கும் ரயிலடி'.


















புத்தருக்கு ஏந்தான் முட்டைகளா வச்சுப் படைக்கிறாங்கன்னு தெரியலையே.....

பாவம் இவரும் இப்படித் தோலுரிஞ்சு கிடக்கறார்.








போயிட்டு வரோம் பூதகணங்களே..... பொழைச்சுக்கிடந்தா இன்னொருக்கா வந்து போறோம். டாடா பைபை

Thursday, May 01, 2008

மரகத புத்தர் கோயில்

இவர் கதை பெரிய கதையா இருக்கு. சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன். சரித்திர டீச்சரா இருந்தா இதுதான் சங்கடம். சரித்திரமுன்னு தெரிஞ்சுக்கிட்டதைச் சொல்லாம இருக்க முடியலை.
Jade ஜேடு என்னும் பச்சைக்கல்லில் செதுக்கி இருக்காங்க இவரை. பெரிய அளவிலான ஒரே கல்.









சமீபத்தில்(!) 1434 இல் செடி என்ற இடத்துலே(தாய்லாந்தின் வட பகுதி) மின்னல் வெட்டுன ஒரு சமயம் இவரைக் கண்டு பிடிச்சிருக்காங்க. 34 வருசம் அங்கே இருந்துருக்கார். அதுக்கப்புறம் ச்சியாங்மாய் என்ற இடத்துக்கு அப்போதிருந்த மன்னர் இவரைக் கொண்டு போயிட்டார். அங்கேயே 1551வது வருசம் வரை வாசம்.



அப்போ அங்கே ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த மன்னருக்கு ஆண் வாரிசு இல்லை. ஒரே ஒரு மகள்தான். லாவோஸ் நாட்டு மன்னருக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. அவுங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். இளவரசர் பேர் செய்செத்தா. இவருடைய (அம்மாவின் அப்பா)செத்தபிறகு பேரனுக்கே பட்டம் கட்டுனாங்க. அப்ப இவருக்கு வயசு வெறும் பதினைஞ்சுதான். சிலவருசங்களுக்குப் பிறகு லாவோஸ்லே இவருடைய அப்பா இறந்துட்டார். அங்கேயும் அரியாசனம் காத்துக்கிடக்கு.(கொடுத்து வச்ச வர்) செய்செத்தா, லாவோஸ்க்குக் கிளம்பிப்போனப்பக் கையோடு மரகத புத்தரை எடுத்துக்கிட்டுப் போயிட்டார். போறப்பக் கட்டாயம் ஒரு நாள் இங்கே மறுபடி வருவேன் புத்தரோடுன்னு சொல்லிட்டுப் போனாராம். ஆனால்.....வார்த்தை தவறிவிட்டார் இந்தக் கண்ணப்பர்.ஆச்சு 12 வருசம்.


1564லே பர்மாக்காரங்க இவுங்களோடு யுத்தத்துக்கு வந்துருக்காங்க. தாக்குப்பிடிக்க முடியாம வேற இடத்துக்குப் போய் தலைநகரம் அமைச்சுக்கிட்டார். நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்னு புத்தரும் கூடவே போயிருக்கார். .214 வருசம் ஆயிருச்சு. இதுக்குள்ளே பல மன்னர்கள் வந்து போயிருப்பாங்கதானே? மாறாதவர் புத்தர் மட்டுமே.

1778லே முதலாம் ராமா என்ற அரசர் ( பாங்காக் ஆளு) புத்தர் இருந்த ஊருக்குப் படையெடுத்துப் போயிருக்கார். அங்கே இருந்து நம்ம புத்தரை இங்கே கொண்டுவந்துட்டார். தொன்புரி என்ற கோயிலில் வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தார். (இங்கத்து ராஜாக்களுக்கு பட்டம் கட்டுனவுடன் ராமா என்ற பட்டப் பெயர் கொடுக்கறாங்க. இப்போ இருக்கும் ராஜா 9 வது ராமா. ராம ராஜ்யம்தான், இல்லே)



அப்புறமாக் கொஞ்சநாளில் (1784 மார்ச் மாசம் 22 தேதி) இவருக்குத் தனியா ஒரு கோயிலை அரண்மனை வளாகத்துக்குள்ளேயே கிழக்கில் கட்டி அங்கே பிரதிஷ்டை பண்ணிட்டார் ராஜா ராமா. இதுதான் இப்ப நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் மரகதப் புத்தர் வரலாறு. இந்தக் கோயிலை Wat Phra Kaew ன்னு தாய் மொழி யில் சொல்றாங்க. உங்களுக்காவது உச்சரிக்க முடியுதான்னு பாருங்க.



பர்மாக்காரர்களொடு நடந்தச் சண்டையில் ஏற்பட்ட களேபரத்தில் இவர் எங்கியோ மண்ணில் புதைஞ்சு மறைஞ்சுட்டார்.அப்புறம் ஒரு பேய்மழையில் இவர் மேலே இருந்த மண்ணெல்லாம் மறைஞ்சுபோய் ஜொலிச்சுருக்கார். கண்டுபிடிச்சு வச்சுக்கிட்டாங்க. (கதை 1)




முதல்லே மண்ணால் ஆன சிலைன்னு நினைச்சு எடுத்துப்போய் வச்சுக் கும்பிட்டுருக்காங்க. ஒரு நாள் மூக்காண்டை இருந்த மண்கட்டி பெயந்துபோச்சு. உள்ளே பார்த்தால் பச்சையா மினுங்கிச்சு. அதுக்கப்புறம் அடையா ஒட்டியிருத மண்ணை எல்லாம் எடுத்துட்டாங்க. (கதை 2)

இப்படி இவருக்கும் ரெண்டு மூணு கதைகள் இருக்கு.



இவரை ஒரு சமயம் வேற இடத்துக்கு மாற்றலாமுன்னு நினைச்ச ராஜா, சிலையைத் தூக்கிவர ஒரு யானையை அனுப்புனாராம். அந்த யானை போகும் வழியில் ஒரு முச்சந்தியா ரோடு கிளை பிரியும் இடம் வரை பேசாமல்(?) வருமாம். அங்கே வந்தபிறகு சிலை இருக்கும் ஊருக்குப் போகும் பாதையை விட்டுட்டு வேற சாலையில் போச்சாம். இதே மாதிரி மூணு முறை நடந்துச்சாம். அப்போதான் ராஜா உணர்ந்தாராம், மரகத புத்தரை இடம் பெயர்க்க விடாமல் சில சக்திகள் காவலா இருக்குதுன்னு. (கதை 3)


சிலை ரொம்பப் பெருசு கிடையாது. ஒரு 66 செ.மீ நீளம்தான். சப்பணம் போட்டு அமர்ந்திருக்கும் கோலம். ரெண்டு கால் முட்டிகளுக்கிடையில் உள்ள தூரம் 48.3 செ.மீ. புத்தர் சிலைகளில் அவர் எந்தக் கையை எப்படி வச்சுருக்கார் என்றதுக்கெல்லாம் கூட எதேதோ பொருள் சொல்றாங்க. இவர் வலது கையை வலது முழங்கால் முட்டியில் வச்சுருக்கார். இப்படி கை இருந்தால் ஒரு தீர்மானத்தோடு இருக்கார் என்று பொருளாம்.


சிலை அமைப்பைப் பார்த்தால் தென்இந்தியாவிலோ இல்லை இலங்கையிலோ செஞ்சுருக்குமோன்னு கூடச் சில ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்களாம்.



இப்ப இருக்கும் கோயில் ரொம்ப அருமையாக் கட்டி இருக்காங்க. இங்கே மூணு வாசல் இருக்கு. நடுப்புறம் இருக்கும் ஆடம்பரம் அதிகம் இல்லாத சின்னூண்டு வாசல் வழியா வரும் உரிமை அரச குடும்பத்துக்கு மட்டும்தானாம்.


புத்தருக்கு ஒரு கோடைகால உடை, ஒரு மழைக்கால உடைன்னு மன்னர் செஞ்சு கொடுத்துருக்கார். அதுக்கப்புறம் வந்த மன்னர் குளிர் காலத்துக்குன்னு இன்னொரு உடை செஞ்சு கொடுத்தாராம். இப்ப மூணு உடைகள். வருசம் மூணு முறை உடை மாற்றம். இது ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுவாங்களாம். அந்தக் காலத்தில் இந்தப் பூசை முடிஞ்சதும் புனித நீரை அங்கே மண்டபத்தில் கூடி இருக்கும் அதிகாரிகள், முக்கியஸ்த்தர்கள் மீது தெளிப்பாங்களாம். இந்தப் பழக்கம் இப்பக் கொஞ்சம் மாறி இருக்கு. சாதாரண மக்களுக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்கணுமுன்னு அன்றைய தினம் கோயிலுக்கு வெளியே & உள்ளே கூடி இருக்கும் மக்கள் மீது தெளிக்கிறாங்களாம். பன்னீர். ஒரு துளியாவது நம்ம மேலே விழாதான்னு மக்கள் ஆர்வமாக் காத்திருக்காங்களாம். அப்படி விழுந்துச்சுன்னா, அந்த வருசம் எல்லாம் மங்களகரமாத் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்ற நம்பிக்கை.












இவரைத்தவிர, ஒவ்வொரு மன்னர்கள் ஆட்சியின் போதும் அவுங்க செஞ்சு வச்ச புத்தர் சிலைகள் ஏராளமா இங்கே வச்சுருக்காங்க. சுவரில் ராமாயணம், புத்தர் சரித்திரம் வாழ்க்கை வரலாறுன்னு அட்டகாசமான, பிரமாண்ட அளவிலான ம்யூரல் ஓவியங்கள். இதையெல்லாம் கவனமாப் புதுப்பிக்கும் பணி இப்ப நடந்துக்கிட்டு இருக்கு.






















கருடனுக்கும் நாகத்துக்கும் ஆகவே ஆகாது. இங்கே இதைப்போல 112 கருடன் &
நாகம் சிற்பம் இருக்கு.

















கோயில் மணி ஓசை ஒன்றைக் கேட்டதாரோ?





















கர்ப்பகிரஹத்துக்குள்ளே போகலாம் வாங்க.

















படிக்கட்டு இருக்கும் இடங்களில் ரெண்டு பக்கமும் கைப்பிடியில் கை வச்சுறாதீங்க. அஞ்சுதலை நாகம் உக்கார்ந்துருக்கு.












தந்தையும் மகனுமா தரிசனத்துக்கு வந்துருக்காங்க போல:-)))

















சாமிக்குப் படையலைப் பாருங்க.
அதென்ன எமவாகனம் இங்கே?













எங்கெங்கு காணினும் ஸ்தூபியடா.....











அதோ அங்கே உசரத்துலே பொன் ஆசனத்தில் இருக்கார் பாருங்க மரகத புத்தர்.





ஆமாம் 'ரத்னகோஸின்' என்ற ஊருக்குப் போயிருக்கீங்களா? இல்லையா?
அட! இப்படிச் சொன்னா எப்படி? இங்கேதானெ இப்பச் சுத்திக்கிட்டு இருக்கோம்.
இதுதாங்க பாங்காக்கின் பழைய பெயர்:-)





வாயு தொல்லை..... அவசரச் செய்தி

இன்னிக்குக் காலையில் நண்பரிடமிருந்து வந்த ஒரு மடல் இந்த விவரங்களைச் சொல்லி இருக்கு. வலைகூறும் நல்லுலகத்துக்காக இதைத் தமிழ்ப் 'படுத்தி' இங்கே போட்டிருக்கேன்.

உங்கள் வீட்டின் பாதுகாப்புக்காக:


இன்னிக்கு நம்ம வீட்டாண்டை போய்க்கிட்டு இருந்தப்ப தெருவில் கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்யும் ஒருவரைப் பார்த்தேன். அவர் வச்சிருந்த வண்டியில் சில சிலிண்டர்கள் 'தேமே'ன்னு உக்கார்ந்துருச்சு.
ஒரு படம் புடிச்சு இங்கே போட்டுருக்கேன் பாருங்க.


இதுலே A07 இருக்கு, கவனிச்சீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்?


' A' இது வருசத்தை நாலாப் பிரிச்சு முதல் கால் பகுதியைக் குறிக்குது. ஜனவரி முதல் மார்ச் வரை

'07 ' இது வருசம் . 2007

இது இந்த சிலிண்டரின் காலாவதியைக் குறிப்பிடும் சொல். அதாவது 2007 மார்ச் வரைக்கும்தான் இந்த சிலிண்டருக்கு ஃபிட்னெஸ் இருக்கு. இதுக்கப்புறம் அதுலே உள்ள பாகங்கள் ஏதாவது பழுதடையும் வாய்ப்பு இருக்கு. பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை.

காலாவதியானவைகளை இன்னொருக்கா அதுக்குண்டான பரிசோதனைகளைச் செய்து சரியாக்கி மறுபடி புது அட்டையுடன் பயனுக்கு விடலாம். இதைச் செய்ய எதாவது திட்டம் & குழு இருக்கணும் இல்லே?

இது எதையும் செய்யாம 'இருந்துட்டுப்போகுது கழுதை'ன்னு இருந்தா விபத்து ஏற்படும் சான்ஸ் நிறைய இருக்கு. சில விபத்துக்கள் இப்படி ஏற்பட்டு இருக்கு.
சிலிண்டர் வெடித்து மரணம் என்றெல்லாம் பத்திரிக்கைச் செய்தி வர்றதை நாமும் எத்தனை முறை வாசிச்சு இருக்கோம்.

இதுவரை இப்படி சிலிண்டருக்கு ஒரு காலாவதி இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்களில் சிலருக்குத் தெரியாம இருந்திருக்கலாம்.

சரி, எப்போ இது காலாவதின்னு தெரிஞ்சுக்கறதாம்?

இங்கே பாருங்க எப்படின்னு ஒரு சுலப வழி.

The alphabets stand for quarters -
-- A for March (First Qtr)
-- B for June (Second Qtr)
-- C for Sept (Third Qtr)
-- D for December (Fourth Qtr)

அடுத்து வரும் 08, 07, 06 இதெல்லாம் வருசம். 2008, 2007, 2006

இனிமேப்பட்டு வீடுகளுக்கு சிலிண்டர் மாத்தும்போது, நமக்கு வர்ற சிலிண்டரில்
இந்த விவரத்தைக் கவனிச்சுப் பாருங்க. காலாவதியானதை 'வேணாம்'ன்னு கண்டிப்பாச் சொல்லுங்க.

இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.

விபத்து, மரணம் இவைகளைத் தடுக்க, ஏதோ நம்மால் ஆன ஒரு காரியம்.
நமக்கு இவ்வளோ விவரம் தெரிஞ்சுபோச்சுன்னு கேஸ் சப்ளையருக்குத் தெரிஞ்சுருச்சுன்னா...... ஒருவேளை இந்த tagஐ எடுத்துட்டு அனுப்புவாரோ என்னமோ(-:

எதுக்கும் எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க.


மெயிலில் சேதி சொன்ன நண்பருக்கு மெத்த நன்றி