Thursday, September 07, 2006

யுகா

ஆமாம். வெளி உலக ஆட்கள்(??) அதாங்க ஏலியனுங்க எப்படி இருப்பாங்க? பெரிய மண்டையும், கண்ணும், குச்சிபோல கையும் காலும் வச்சுக்கிட்டு இருப்பாங்களா?யார் இந்த உருவத்தை மொதல்லே நமக்கு அடையாளம் காமிச்சாங்க? எப்படி நாம் எல்லோரும் இப்படித்தான் இருக்குமுன்னு ஒத்துக்கிட்டோம்?


செத்துப்போனவுங்க எல்லாம் என்ன ஆவாங்க? பேய் பிசாசுங்க எப்படி இருக்கும்? வெள்ளைச்சீலை, வெள்ளைவேட்டி மட்டும்தான் கட்டுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விஎன் மனசுலே அப்பப்ப வந்து போகும்.


இதுக்கெல்லாம் விடை கொடுக்கறமாதிரி ஒரு படம் வந்துருக்குன்னு சொன்னா, நீங்க நம்புவீங்களா?


உலகத்துலெ அநியாயம் நடக்குதேன்னு பதறிக்கிட்டு, அங்கங்கே மக்களைக் கூட்டம்கூட்டமா அழிச்சுடலாமுன்னு ப்ளான் போடுதுங்க அகோரர்கள்னு சொல்லிக்கிற ஆவிகள்.


இந்தப் படத்துலெ நம்ம நாஸர் பெரிய விஞ்ஞானி. அவருக்கு ஒரு இளமையான(?) அசிஸ்டெண்ட்இருக்கணுமே? யெஸ். யூ அர் ரைட். இருக்காங்க, ஸ்வர்ணமால்யா.


ஆகாயத்துலே இருந்து நட்சத்திர ரூபத்துலே பூமிக்கு அழிவு வந்துக்கிட்டு இருக்கு. இன்னொரு எழுத்தாளர்( வலைப்பதிவாளர் ? ) அகோரர்களைப் பத்தி விரிவா எழுதி வச்சிருக்காங்க. (இப்பத்தான் தமிழ்ப்புத்தகப் பதிப்புலகம் நல்லா இருக்கே. )



இதைப் பத்தி ஆராயப் போகுறதுக்கு முந்தி அப்பாகிட்டே டாடா சொல்லிட்டுப் போகலாமுன்னு, நாயகிவீட்டுக்கு வந்தா.................. அப்பாவே ஒரு அகோரர்னு தெரிய வந்துச்சு. சீனியர்கிட்டே இதைச் சொல்லலாமுன்னு போனா அவர் எழுத்தாளரைப் பத்திச் சொல்றார். ரெண்டு பேரும் எழுத்தாளர் அம்மா வீட்டுக்குப் போனா...........


அம்மாவை ஏற்கெனவே அகோரர்கள் தூக்கிட்டுப் போயாச்சு. அங்கே ஒரு கெமரா கிடைக்குது. அதுவழியாப் பார்த்தால் அருவமா இருக்கும் அகோரர்களைப் பார்க்க முடியுது. விஞ்ஞானிகள் ரெண்டு பேரும் அகோரர்களைத் தேடிக்கிட்டுக் காட்டு பங்களாவுக்குப் போயிடறாங்க.


கல்லூரி மாணவர் & மாணவிகள் கொஞ்சம்பேர் விஞ்ஞானியைத் தேடி ஆராய்ச்சி (????) செய்யறதுக்காக காட்டுபங்களாவுக்கு வராங்க. நீங்க யூகிச்சது போலவே அங்கெ இருக்கும் சமையல்காரர் அச்சுபிச்சுன்னு மர்மமாப் பேசுறார்.


ஒரு மாணவன் காணாமப் போறது, மாணவிகள் கதிகலங்கி நடுங்கறது எல்லாம் இருக்கு. நமக்கும் ஆயாசமா இருக்கு.அப்புறம் என்ன ஆச்சு? 'கொட்டாவி வந்துச்சு'ன்னு யாருங்க அங்கெ காமெண்ட் விடறது?
அகோரர்களொட ப்ளான் என்னன்னு கண்டு பிடித்தல், அதிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றுதல்னு 'விறுவிறுப்பா'சொல்றாங்க.


ஆனா ஒண்ணுங்க......... 'இப்படியும்கூட இருக்கலாமே, ஏன் இருக்கக்கூடாது?'ன்னு ஒரு நிமிஷம் நினைக்க வைக்கறாங்க பாருங்க அதுதான் டைரக்டருக்குக் கிடைச்ச வெற்றி.


ஆமாம் டைரக்டர் பேரைச் சொல்லலியே..... 'யார் கண்ணன்'


ம்யூ'சிக்' தீனா

Tuesday, September 05, 2006

மாவேலி வருந்ந திவசம் .........


மாவேலி வருந்ந திவசம் மனுஷ்யரெல்லாம் ஒண்ணு போலே.


வாமன ஜெயந்திதான் மாவேலி ( மகாபலி) வர்ற நாள். எல்லாருக்கும் வாமன அவதாரமும், மகாபலிச் சக்ரவர்த்தியின் வருஷாந்திர விஜயமும் தெரிஞ்சிருக்கும் தானே?
அது இன்னிக்குத்தான். ஓணம் பண்டிகை.


இந்த பண்டிகையை விவரிச்சுச் சொல்லணுமுன்னா இது 10 நாள் கொண்டாடற பண்டிகை.கடைசி நாள்தான் ஓணம்.
சிங்க மாசத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரைஇருக்கும் 10 நாட்கள்தான் விழா நாட்கள்.


நம்ம தமிழில் சித்திரை முதல் பங்குனி ன்னு தமிழ் மாசங்கள் பெயர் இருக்குல்லையா.அதேதான் கேரளத்தில் 12 ராசிகளை வச்சு மலையாள மாசங்களா வரும். மேஷம்தொடங்கி மீனம் வரை. அந்தக் கணக்கில் சிம்மராசி மாசம்தான் சிங்க மாசம். தமிழில் ஆவணி.


சுமார் 1200 வருஷங்களுக்கு முன்னே இந்த விழா ஆரம்பிச்சதுன்னு சொல்றாங்க.அப்பெல்லாம் ஒரு மாசம் கொண்டாடுனாங்களாம். இப்ப சொல்றமே 10 நாள் கோலாகலம்ன்னு,இதுவே இப்ப ஒரு நாளா சுருங்கிப்போச்சு.


ஒருவிதத்தில் இது கேரளத்தில் கொய்த்து காலம். அறுவடையெல்லாம் முடிஞ்சு ஜனங்கள் நிம்மதியா இருக்கற சீஸன்.


மகாபலியை வரவேற்க வாசலில் போடும் பூக்களம்ன்னு சொல்ற அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் முதல்நாளே ஆரம்பிக்குமாம். குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்னும் பூவை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம். அதைத்தான் பூக்களத்துலே முதல்லே வைக்கணும். அப்புறம் தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரிச்சு அலங்கரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் பெரூசா இருக்குமாம்.


ஓணத்தினத்தில் காலையிலே புது அரிசியை இடிச்சு மாவாக்கி இலையில் எழுதிய அடை, ஆவியில் புழுங்கிஅதைப் பாயாசம் செஞ்சு கடவுளுக்குப் படையல் வைப்பாங்க. இது அந்தக் காலத்தில். இப்பவோ? காலம் நேரம் எல்லாம் சுருங்கிப் போனதுனாலே என்னென்ன தில்லுமுல்லு பண்ணலாமோ அத்தனையும் செஞ்சு சடங்கு நடந்துருது.


சொந்த ஊரைவிட்டு பலநாடுகளில் போய் வசிக்கும் நமக்கெல்லாம் வார இறுதியை விட்டா நேரம் கிடைக்கறதில்லையே.அதனாலே சனிக்கிழமையன்னிக்கே இங்கே எங்க ஊர்லெ வாமன ஜெயந்தியும், மகாபலி( மாவேலி) யின் வருஷாந்திர விஸிட்டும்நடத்தி முடிச்சுட்டோம்.


மொத்தம் 100 பேர் பங்கெடுக்கறாங்கன்னு தெரிஞ்சது. வழக்கம்போல் ஓண சத்யா( ஓணம் விருந்து)வுக்கு மெனு போட்டோம். ஒண்ணு விடலை. அவியல், ஓலன், காளன், எரிசேரி, பருப்பு& நெய், சாம்பார், ரஸம், மோர், இஞ்சிக்கறி,தோரன், பப்படம், பழம், பாயாஸம்(பருப்புப் பாயாசம் & அடைப் பிரதமன்னு 2 வகை), வெண்டைக்காய் கிச்சடி, மெழுக்குபுரட்டி, சோறு, உப்பேறி, சர்க்கரைவ(பு)ரட்டின்னு சம்பிரதாயமான விருந்து.



எனக்குக் கிடைச்சது பாயாஸத்தில் ஒரு வகை. அடைப் பிரதமன். அரைக்கிலோ முந்திரிப்பருப்புப் போட்டு அடிச்சு தூள் கிளப்பியாச்சு.


இந்த வருஷம் நம்முடைய சிட்டிக் கவுன்சில் & கேண்டர்பரி பவுண்டேஷன் சேர்ந்து மூணாயிரம் டாலர்கள் எங்களுக்கு மொய் எழுதியிருந்தாங்க. எல்லாம் நம்ம காசுதான். வரியாக் கட்டறோம் இல்லையா? ஆனாலும் நம்முடைய நன்றியைக் காமிக்கணுமுன்னு நகரத் தந்தையைக் கூப்புட்டு இருந்தோம். வரேன்னு சொல்லி இருந்தார்.


சனிக்கிழமையன்னிக்குக் காலையிலே ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தேன். (பாயாஸம் எடுத்துக்கிட்டுத்தான்) அங்கே அலங்கரிக்கும் பூக்களம் பொறுப்பு என்னோடது. இந்த வருஷம் இங்கே குளிர் ரொம்பக் கடுமையா இருந்ததாலே நம்ம வீடுகளில் எல்லாம் பூக்கள் ஒண்ணும் சரியா இல்லை. முதல் முறையா காசுக்குப் பூ வாங்கும்படி ஆச்சு.அதுலேயும் நல்ல கலர்களா அமையலை. ஒரு விதமா 'உள்ளது கொண்டு ஓணம்'னு சொல்ற பழமொழிக்கேற்பப் பூக்களம் போட்டு முடிச்சோம். உதவிக்குத்தான் யாரையும் காணலை. அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா? அங்கே கலை நிகழ்ச்சியில் ஆடவந்த பிள்ளைகளின் அம்மாக்கள் ரெண்டு பேர் இருந்தாங்க.( பாவம், இந்தியன் பங்சுவாலிட்டி தெரிஞ்சுக்காம வந்துட்டாங்க!) ஒருத்தர் இலங்கை, இன்னொருத்தர் ராஜஸ்த்தான். அவங்க ரெண்டு பேரும் பூக்களம் போட படிச்சுக்கிட்டுப் போனாங்க நம்ம புண்ணியத்துலே.


கறுப்புப் பூனைகளோ, கார்களின் வரிசையோ, அடிப்பொடிகளோ,அணிவகுப்போ இல்லாம தனியா வந்து சேர்ந்தார் நகரத் தந்தை. அவர் மனைவி எங்கேன்னு கேட்டதுக்கு, அவுங்க நர்ஸ் வேலை செய்யறாங்களாம். ஏற்கெனவே யார்யார் என்னிக்கு வேலை செய்யணுங்கிற பட்டியல் போட்டுட்டதாலே இவுங்களுக்கு லீவு கிடைக்கலையாம். வார இறுதியாச்சே.( டாய்..... யாருடா அது அண்ணிக்கு லீவுகொடுக்கலே......... எட்றா சைக்கிள் செயினை........ கிளம்புங்கடா....... கீசிறலாம் கீசி.....)


விழா ஆரம்பிச்சது ஒரு சூரிய நமஸ்கார ஸ்லோகத்தோடு. பாடியது பீட்டர். அருமையான குரல். அதுக்கப்புறம் சங்கத்தலைவர் பேசுனார். அதுலே எனக்குப் பிடிச்ச ஒரு பாயிண்ட் அவர் பூக்களத்தைப் பற்றிச் சொன்னது. பொதுவா மகாபலியை வரவேற்கத்தான் இது போடறதுன்னு சொல்வோம். ஆனா இவர், பூக்களத்துலே இருக்கும் பூக்கள் நிறம், மணம் இதுவெல்லாம் வேறுபட்டு இருந்தாலும் ஒண்ணோடொண்ணு சேர்ந்து இணைஞ்சு அழகா இருக்கறதுபோல பலவித மனிதர்கள் நாம் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையா இருக்க வேணுங்கறதுக்கான ஒரு அடையாளம் இதுன்னார்.


நகரத் தந்தை ஓணம் விழாவுக்கான குத்து விளக்கேற்றி வைத்துவிட்டு அவருடைய பங்குக்கான பேச்சைப் பேசினார்.இந்த நகரத்தில் 150 வெவ்வேறு இன மக்கள் இப்ப இருக்காறாங்கன்னு நம்ம விஜயகாந்த் போல புள்ளிவிவரம் கொடுத்தார். எப்படி எல்லாரும் ஒரு டேப்பஸ்ட்டிரி போல இணைஞ்சு வாழணுங்கற அவசியத்தையும் சொன்னார்.இங்கே புதுசா குடியேறிவரும் மக்களுக்கு உதவி செய்ய ஒரு விசேஷ சேவை இருக்குன்னு சொல்லி, அதுக்குத் தலைவரானவரையும் ( சீனர்) அறிமுகம் செய்து வச்சார்.


கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பற்றி அவருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டே இருக்கும் படி ஆச்சு.பக்கத்து இருக்கையில் இருந்தாரே. பரதநாட்டிய நிகழ்ச்சியில் தில்லானாவை வெகுவாகப் பாராட்டினார். அப்புறம்ஒரு ச்சின்னப் பிள்ளையின் பாலிவுட் நடனம். பாட்டு என்ன? 'பண்ட்டி அவுர் பப்ளி'லே வர்ற 'கஜுராரே' பாட்டு.'க்ளாப் க்ளாப்'ன்னு கையை எல்லாம் தட்டிக்கிட்டுத் தாளம் போட்டு ரசிச்சார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தின்னுபாட்டுக்கள் & நடனங்கள். எனக்குத்தான் நிம்மதியா நிகழ்ச்சியைப் பார்க்க முடியலை. ஒண்ணொண்ணும் என்ன பாஷை,இந்தியாவில் எந்தப் பகுதியிலே பேசறாங்க, அந்தப் பாட்டுக்களுக்கு என்ன அர்த்தம்னு 'தொண தொண'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரே.


இதுக்கப்புறம் ஓண சத்யா. இதையும் வெகுவா ரசிச்சார். அவர் மக்களுக்கும், மனைவிக்கும் இந்த மாதிரியானசாப்பாடு ரொம்பப் பிடிக்குமாம். வாயைத் திறந்து சொன்னப்புறம் ச்சும்மா விட முடியுமா? பார்ஸல் செஞ்சு கொடுத்தோம். விருந்தோம்பல்?


இந்த வருஷம் ஓணம் பண்டிகை சிறப்பா நடந்துச்சு. அசல் பண்டிகை என்னவோ இன்னிக்குத்தான். பாலக்காட்டுத் தோழி ஒருத்தர் வீட்டுலே மத்தியானம் ஓண சத்யா. அவர் ப்ரத்யேகம் வராம் பரஞ்ஞு க்ஷணிச்சிட்டுண்டு. போகாதிருக்கான் நிவர்த்தியில்லா. ஞானொண்ணு போயி உண்டுவரட்டே?


அனைத்து வலைப்பதிவர்களுக்கும், கேரள நண்பர்களுக்கும் இனிய ஓணம் பண்டிகைக்கால வாழ்த்து(க்)கள்.

Monday, September 04, 2006

க.க.க.கா x 2


மக்கள்ஸ் வேண்டுகோளுக்கிணங்கி நேத்துத்தான் நம்ம Baywatch பிள்ளையாரைப்படம் பிடிக்கப் போனோம். வசந்தம் தொடங்கி மூணாவது நாள். 17 டிகிரி வெய்யில்.ஆனா தெந்துருவக்காத்து வீச ஆரம்பிச்சதில் கொஞ்சம் 'சில்ன்னு ஒரு காத்து.'


வெய்யில், ஞாயித்துக்கிழமை & பகல்.இது மூணும் சேர்ந்த ஒரு சூப்பர் காம்பினேஷன்.கடற்கரை முழுசும் கூட்டமோ கூட்டம். ( நாலு பேருக்கு மேலே இருந்தால் அது கூட்டம் என்று கொள்க)


புள்ளையாரை மட்டும் புடிக்காம அந்த கேவ்ராக், குகை, அதை ஒட்டுனதண்ணி, பாறைகள், அதுலே ஒட்டிப்பிடிச்சு வளர்ந்துக்கிட்டு இருக்கற ச்சிப்பியினம்(mussels) அலை கொண்டு வந்து சேர்க்கிற(???) மீன்களைத் தின்ன வட்டம் போடும் ஸீ கல் கடல் காக்காய்கள், அதுகளைத் துரத்தும் அல்பட்ராஸ் என்னும் தாதாக்கள்,கடற்கரையில் ஓடவும் இன்ன பிற விஷயங்களுக்காகவும் வந்திருக்கும் நாய்கள், மேற்படி விஷயங்களைப்ப்ளாஸ்டிக் பையில் வாரி எடுத்துக்கிட்டுப் போகும் அப்பா அம்மாக்கள்( அட... நாய்ச் சொந்தக் காரர்கள்) எந்த ஜாதி, எந்த சைஸ் நாயைப் பார்த்தாலும் ஓடிப்போய் குசலம் விசாரிக்கும் லாஸி என்னும் வகை நாயக்கா,குளிர் காத்து அடிச்சாலும் கொஞ்சம்கூட அசராம ஈர உடையிலே கனூ (Canoe)வைத் தலையிலே சுமந்துக்கிட்டுவந்த பையன்னு கோலாகலமா இருந்துச்சா, அதையெல்லாம் முடிஞ்சவரை கேமராவுலே அடக்கிக்கிட்டு வந்தோம்.


எத்தனை படம் போட ப்ளோக்ஸ்பாட் விடுமுன்னு தெரியலை. அஞ்சோ ஆறோ?


சொல்லி முடிக்கலை. ப்ளோக் ஸ்பாட் ஒரே ஒரு படத்தை மட்டும் ஏத்துக்குமாம்.


போட்டும், இருக்கவே இருக்கு நம்ம ஃப்ளிக்கர். அதுலே நிறையப் படத்தைத் தூவி விட்டுருக்கேன்.


புள்ளையாரைப் பாத்துக்குங்கப்பா எல்லாரும்.


மதி, இப்படி முன்னாலே வந்து மொத ஆளா நில்லுங்கப்பு.


அதென்ன க.க.க.கா x 2?


கல்லைக் கண்டால் கடவுளைக் காணோம்
கடவுளைக் கண்டால் கல்லைக் காணோம்.