Showing posts with label kumbashi sun temple. Show all posts
Showing posts with label kumbashi sun temple. Show all posts

Tuesday, April 20, 2010

விண்ணைத்தாண்டி வரவா?

ம்ம்ம்ம்ம்ம்ம் வாங்க. நேத்து எங்கெ விட்டேன்? ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரைப் பற்றி நிறைய பாடல்கள் ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் இயற்றி அவைகளைப்பாடி வழிபட்டுக்கிட்டு இருந்தார். நைவேத்தியம் செய்ய இவர் கடலைகளை வேகவச்சுத் தலையில் தூக்கிவச்சுக் கொண்டு போகும்போது நைஸாப் பின்னால் வந்து அந்த ஹயக்ரீவரே அபேஸ் பண்ணிருவாராம். இப்படியாக ஹயக்ரீவருக்கு கடலைன்னு போட்டுருக்கு.

பொதுவாச் சொன்னால் கொள்ளுதான் குதிரைக்கு உணவு. இங்கே கடலைன்னு ஆனது ஒருவேளை 'நம்ம வசதி'க்காக இருக்கலாமோ? கடலையிலும் கொத்துக்கடலை, நிலக்கடலைன்னு ஆகி இருக்கலாம். அதானே...என்னதான் கோவில் ப்ரஸாதமுன்னாலும் நொச்சு நொச்சுன்னு கொள்ளை யாராலே தின்ன முடியும் வாயெல்லாம் வலிக்காதா? ஃபாலோயர்ஸ் ஆஃப் சம்ப்ரதாயம் கோச்சுக்காதீங்க ப்ளீஸ்.. கொஞ்சம் மாத்தி யோசிச்சால் தப்பா?


ஆமாம், இந்த ஹயக்ரீவருக்கு அப்படி என்ன விசேஷம்? அச்சச்சோ... கன்னத்துலெ போட்டுக்குங்க. இவர்தான் கல்வி அறிவுக்கான கடவுள். அது எப்படி? அதான் இதுக்குன்னே கலைமகள் ஒருத்தர் கையில் வீணையும், ஓலைச்சுவடியுமா இருக்காங்க. அவுங்களைக் கும்பிட்டு பொரிகடலை(ஹா...மறுபடியும் கடலை!) நம்ம புஸ்தகம் எல்லாம் வச்சுக் கும்புடறோமே. அதுவும் ரொம்பச் சரி. கல்விக்கான தேவியின் குருதான் இந்தப் பரிமுகர். இவரைக் கும்பிட்டா, டைரக்ட்டா சரஸ்வதியின் அருள் கிட்டும். பரிட்சை சமயத்தில் பார்க்கணுமே இவர் கோவிலில் இருக்கும் கூட்டத்தை:-)

அது இருக்கட்டும். இந்த வாதிராஜர் கடந்து போன ஒரு ஜென்மத்துலே நம்ம ருக்மிணிக்கு உதவி செஞ்சுருக்காராம். ருக்குவின் அண்ணன் ருக்மன், தன்னுடைய தங்கை ருக்குவை, சேதி தேசத்து ராஜாவான சிசுபாலனுக்குக் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகள் செஞ்சுட்டான். ருக்குவோ, நம்ம க்ருஷ்ணனின் புகழைக் கேட்டு, அவனை மனதால் வரிச்சுக் கல்யாணமுன்னா அது அந்தக் கண்ணனோடுதான்னு முடிவு செஞ்சுட்டாள். ஒருதலைக்காதல். இங்கேயோ கல்யாண ஏற்பாடுகள் மும்முரமா நடக்குது. எப்படிக் கண்ணனை 'காண்டாக்ட்' செஞ்சுக் காதலைச் சொல்லலாமுன்னு ருக்குவுக்குப் புரியலை. ரொம்ப யோசனைக்குப்பிறகு ஒரு கடிதம் எழுதி அதை நம்பிக்கையான ஒருத்தர்மூலம் கொடுத்தனுப்புனாள். க்ருஷ்ணாவுக்கு அதைக் கொண்டுபோய்க் கொடுத்தார் அந்த ஒருத்தர். ஆஹா.... நம் மேல் இப்படி ஒருத்தி உயிரை வச்சுருக்காளேன்னு க்ருஷ்ணனுக்குப் புல்லரிச்சுப் போயிருச்சு. தேரை ஓட்டிக்கிட்டு வந்து, கல்யாணப்பொண்ணு சாமி கும்பிடக் கோவிலுக்கு வந்தப்பக் கடத்திக்கிட்டுப்போய் தானே கண்ணாலம் கட்டிக்கிட்டான். இதெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சுதான் இருக்கும். இப்ப எதுக்கு இதைக் கோடி காட்டுறேன்னா.... அந்த கடிதம் கொண்டு போன 'அந்த' ஒருத்தர் இந்த வாதிராஜர்தானாம்!

ஹரிஹரனைச் சேவிச்சுக்கிட்டு வெளியே படியேறி வந்தால் லக்ஷ்மிநாராயணனுக்கு ஒரு சந்நிதி வெளிமண்டபத்துலே இருக்கு. கொஞ்சம் தள்ளி சூர்யநாராயணன் கோவிலுக்குப் போகும் வழின்னு அம்பு சொல்லுது. அச்சச்சோ.....நாம் இங்கே வந்ததே அதைப் பார்க்கத்தானேன்னு ஓடுனேன். மண்பாதையா ஒரு ஏத்தம் போகுது. ரொம்ப தூரம் ஏறணுமோன்னு தயக்கம். போகத்தான் வேணுமான்னு ஒரு எண்ணம் எட்டிப் பார்த்துச்சு. கொஞ்சம் 1 ஏறிப்பார்க்கலாம். முடியலைனா.....விட்டுறவேண்டியதுதான். முயற்சி செய்யலைன்னு அவப்பெயர் வந்துறக்கூடாது பாருங்க!

அஞ்சு நிமிசம் ஏறுனதும் முன்னே போய்க்கிட்டு இருந்த கோபால் என் காதில் தேன் ஊத்துனார்.

"இதோ இருக்கு கோவில்"

எதிர்பார்த்தமாதிரி இல்லை. ஆனா அழகா சின்னதா ஒரு சந்நிதி. முன்னால் ஒரு மண்டபம். கோவிலைப் பெருக்கிக்கிட்டு இருந்தாங்க. எட்டிப் பார்த்துச் சேவிச்சுக்கிட்டு வந்தோம்
நேரம் ஆகிக்கிட்டே போகுது. எங்கேயும் நிக்காம நேராப் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே குந்தபுரா (குந்தவர்மா ஆண்ட தேசம்) என்ற ஊரைக் கடந்து 'விர்'னு போனோம். அரபிக் கடலை ஒட்டிப்போகும் சாலையில் ஒரு இடத்தில் நமக்கு இடது பக்கம் கடற்கரை ( கல்லு போட்டு வச்சுருக்கும் பீச்) வலது பக்கம் நதி! சூப்பரா இருக்கு.

கடற்கரையில் ரெண்டு மூணு இடத்துலே பொட்டிக்கடைகள். தண்ணீரில் கால் நனைக்கும் பத்துப்பதினைஞ்சு மக்கள். அம்புட்டுதான். இந்தப் பொட்டிக்கடைகளை அப்புறப்படுத்தினா வருங்காலத்துக்கு நல்லது. வரும்வழியில் இதுக்குள்ளே ஏழெட்டு நதிகளைக் கடந்து வந்துருந்தோம். பாலங்களின் ரெண்டு பக்கமும் அசோகர் ஸ்தூபியில் இருக்கும் சிங்கங்கள் சிரிச்ச முகத்தோடு நிக்குதுகள். நெடுஞ்சாலைத் துறை உபயம்.

நினைச்சது போல நடக்குதா என்ன?

"ப்ரஷாந்த், ஸ்டாப் ஸ் டாப் ஸ்டாப்"
'நிறுத்து'ன்னதும் சுமார் கால்கிலோ மீட்டர் போய்த்தான் நிறுத்தும் வழக்கம் இங்கே நம்ம ப்ரஷாந்துக்கு. இதுக்கெல்லாம் கலங்கினால் ஆகுமா? யூ டர்ன் எடுத்து மெதுவா கீழே போகும் மண்பாதையில் போனோம்.
உசரமா இருக்கும் சாலைக்கு இந்தப் பக்கம் கீழே ஒரு கோவிலும் கொடிமரமும். லக்ஷ்மி வெங்கடேஷ்ன்னு பெயர் இருக்கு. எட்டிப் பார்த்துட்டே போகலாம். சாலையில் இருந்து இறங்கிவர படிகளும் இருக்கு. ஊருக்கு பெயர் ஷிராலி. பங்களா டைப்லே கோவில். சும்மா ஒரு பத்து நிமிஷம் ஏகாந்த தரிசனம் செஞ்சுட்டுக் கிளம்பினோம். பெருமாள் நிற்க, அவருக்கு முன்னால் உக்கார்ந்துருக்கும் லக்ஷ்மி. பொதுவா வாசலுக்கு நேரா முன்னாலே மூலவர் இருப்பதால் அங்கங்கே எடுத்த படங்களில் மூலவர் மசமசன்னு தெரியறார்.
பொழுதோடு போய்ச் சேரணும். இன்னிக்கு ஏராளமான இடங்களைப் பார்த்தாச்சு. 'திடுக் திடுக்' ன்னு போகும் வழியில் முளைச்சுருக்கும் கோபுரங்களுக்கு வண்டிக்குள் இருந்தே ஒரு 'ஹை' சொல்லிட்டே போகவேண்டியதுதான். தேசிய நெடுஞ்சாலை 17 இல் சரேல்னு இடது பக்கம் பிரிந்த மண் சாலையில் வண்டி நுழைஞ்சது.. ஒரு ஒன்னேகால் கிலோமீட்டர் வந்துருப்போம்.
அட! இது யாரு நம்ம எல் ஐ சி பில்டிங்கை எடுத்து இங்கே கொண்டுவந்து நட்டது? கோபுரமா? உசரத்துக்குத் தகுந்த அகலம் இல்லையே!!! கோவிலை ஒட்டியே நாம் தங்கப்போகும் ஹொட்டேல் இருக்கு. கடலைப் பார்த்தபடி நிற்கும் கட்டடம்.
"ரூம் வித் அ வ்யூதானே?"

"ஆமாம். "

பால்கனி கதவைத் திறந்ததும் காற்று பிச்சுக்கிட்டுப் போகுது. சின்னச்சின்ன படகுகளை கடலில் அங்கங்கே தூவி வச்சுருக்காங்க. கரை ஓரம் இடுப்பளவு தண்ணீரில் நின்னு உற்சாகத்தால் கூச்சலிடும் கூட்டம். கடலுக்குள் ஒரு ரவுண்ட் போய்வர ஆட்களை ஏத்தும் பெரிய படகு, தண்ணீருக்கு எதிர்ப்புறம் கோட்டைச்சுவர் போல அடர்த்தியா நிற்கும் தெங்கின் கூட்டம். தூரக்கே வெள்ளையா ஒரு கோவில் கோபுரம். பின்புலத்தில் ஓடும் மலைத்தொடர்! வலது பக்கம் தலையைத் திருப்புனால் அந்த எல் ஐ சி.
இன்னும் சீசன் ஆரம்பிக்காததால் ஒரு நாலைஞ்சு அறைகளில் மட்டுமே பயணிகள். இன்னிக்குப் பயணம் செஞ்சது கிட்டத்தட்ட 180 கிலோமீட்டர்தான். ஆனாலும் பத்து மணி நேரம் எடுத்துக்கிட்டுச் சுத்தி இருக்கோம். ( ஒரு பத்து இடுகைகள் வேற!) கொஞ்சம் ஃப்ரெஷ்அப் பண்ணிக்கிட்டு கீழே போனோம். நம்ம ப்ரஷாந்திடம் போய் சாப்பிட்டுட்டு வந்து நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லிட்டு அந்த எல் ஐ சியை நோக்கி நடந்தோம். அட்டகாசமான ரெண்டு கொம்பன் யானைகள் வாசலில் நின்னு வரவேற்க முருதேஷ்வரர் கோவிலுக்குள் நுழைஞ்சோம்..
நெடுநெடு வானத்துக்குன்னுப் போகும் ஏணிபோல 249 அடி உயர ராஜகோபுரம். விண்ணைத்தாண்டி வரட்டுமான்னு 'தேவர்களை'க் கேக்குதோ!!!!