திருமங்கை ஆழ்வாரால் மங்களசாஸனம் செய்யப்பட்ட கோவில். ஆனால்... முதல்லே ஒரே ஒரு பாட்டுதான். இதுக்கும் ஒரு விளக்கம் இருக்கு. திருமங்கை ஆழ்வார் இங்கே வந்து தரிசனம் செஞ்சுக்கிட்டு ஒன்னும் சொல்லாமக் கிளம்பிப்போயிட்டார். தாயாருக்கோ...தாங்கலை. இது என்ன நியாயம்? அவராண்டைபோய் ஒரு பாட்டெழுதி வாங்கிட்டு வாருமுன்னு ரங்ஸை விரட்டுனாங்க. பெருமாள் கிளம்பி வெளியே வர்றதுக்குள்ளே திருமங்கை ஆழ்வார் கிடுகிடுன்னு ஸ்தலசயனப் பெருமாளைப் பார்க்க மல்லைக்குப் போயிட்டார். இவரும் விடாம பின்னாலேயே துரத்திக்கிட்டுப்போய் மல்லையில் அவரைப்பிடிச்சு, 'அதென்ன ஒன்னும் பாடாம வந்துட்டீர். ஏற்கெனவே சண்டையில் கோவிச்சுக்கிட்டு இங்கே வந்து நின்னவளை சமாதானப்படுத்தப் போதும் போதுமுன்னு ஆகிப்போச்சு. இப்ப நீர் ஒன்னும் பாடாம வந்ததுக்குக் கோவிச்சுக்கிட்டு என்னை அனுப்பி இருக்காள் ஒரு பாட்டு வாங்கிவாருமுன்னு. சீக்கிரம் பாடுனா எழுதிக்கிட்டுப் போயிருவேன்'ன்னார்.
கருவறை விமானம், உத்பல விமானமாம்
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்நூலை மெய்நூலென்று மோதி
மாண்டு அவத்தம்போகா தேவம்மின் எந்தை
எண்வணங்கப்படுவானை கணங்களேத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லை தலசயனத்தே'
ஓக்கேன்னு பாட்டோட திரும்பி வந்தா, தங்க்ஸிடம் பாட்டுக் கேக்க வேண்டியதாப் போயிருச்சு. அங்கங்கே அஞ்சு பத்துன்னு பாட்டுகள் பாடிக்கிட்டே போறவர், இங்கே வந்து ஒன்னும் சொல்லாமப்போனாரேன்னு நாமே பாட்டு கேட்டனுப்பினா இப்படித்தான் ஒரே ஒரு பாட்டை என்னமோ போனாப்போகுதுன்னு பாடறதா? சொல்லிக் கோவிச்சதும் இன்னும் என்ன ஆகுமோன்னு பயந்துக்கிட்டே பெருமாள் மறுபடி இவரைத்தேடி ஓடினார். அதுக்குள்ளெ ஆழ்வார் திருக்கண்ணமங்கைக்குப் போயிட்டார். அங்கே போய் அவரைப் பிடிக்கலாமுன்னு போனா, அப்பத்தான் திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலனைப் பாட வாயைத் திறக்கிறார் திருமங்கை. இந்த பக்தவத்சலன் வந்து நிற்பதை ஓரக் கண்ணால் பார்த்துக்கிட்டே, பாடினாராம் இப்படி.
ஏற்றினை இயமயத்துளெம்மீசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை,
ஆற்றலை அண்டத்தப்புறத் துய்த்திடும் ஐயனைக்
கையிலாழியொன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர்நின்ற நித்திலத்தொத்தினை,
காற்றினைப் புனலைச்சென்று நாடிக்
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.(கோவிலில் மணவாளமாமுனிகள் சந்நிதிக்கு மேலே இந்த ரெண்டு பாட்டையும் எழுதி வச்சுருக்காங்க)
ஆமாம். ஏன் இப்படிப் பண்ணினாராம் திருமங்கை ஆழ்வார்? திருநின்றவூர் போய் தரிசனத்துக்கு நின்னப்ப, பெருமாள் கொஞ்சம் பிஸியாக இருந்துட்டாராம். இவரைக் கவனிக்கலையாம். அதான் கோச்சுக்கிட்டுப் பாடாமப் போயிட்டார். .
(திருக்கண்ணமங்கை பக்தவத்சலனை 14 பாசுரம் பாடி மங்களாசாசனம் பண்ணி இருக்கார்.)
ஆளாளுக்குக் கோச்சுக்குங்க.....பாவம் பெருமாள். நல்லவேளை....அம்மா 'இன்னும் போய் வாங்கிவா' ன்னு விரட்டாம விட்டுட்டாங்க.
இந்த ரெண்டு பாடல்களுக்கும் நம்ம தேசிகன் அவர்பக்கத்தில் கொடுத்த விளக்கம் இது. நன்றி தேசிகன்.
1. வீண் செயல்களை மேற்கொண்டு, தாழ்ந்தோர்க்கு அடிமை செய்யாதீர். பொய்யான நூல்களைக் கற்று, மெய் என நம்பி வீணாகாமல், உய்வடய வாருங்கள். ஞானிகளால் துதிக்கப்படும் தந்தையான மேகவண்ணன், திருநின்றவூரில் முத்துத் திரளாய் நிற்கிறான். பூஞ்சோலைக் காண்டவ வனத்தைத் தீயின் வாயில் இட்டு அழித்த எம்மானை, நான் கடல்மல்லைத் தலசயனத்தில் கண்டேன்.
2. காளை போன்றவன்; இமயத்திருப்பதியில் எழுந்தருளிய என் இறைவன்; இம்மை மறுமைக்கு மருந்தானவன்; மிடுக்குடன் உலகங்களையும் பரமபததையும் ஆள்பவன். கையில் சக்கரம் ஏந்திய என் ஐயன் பகைவருக்கு எமன் ஆவான். நீலமணி போல் உள்ள அவன் திருநின்றவூரில் எழுந்தருளினான். முத்துக் குவியல் போன்றவன். காற்றாகவும் நீராகவும் உள்ள இப்பெருமானை நான் சென்று நாடித் திருக்கண்ணமங்கையில் கண்டு கொண்டேன்.பாதியில் பார்க்காம விட்டதைத் தொடர்ந்தோம். கருவறைக்கு வெளியே பின்பக்கமா சேனை முதலியாரை மறுபடி சேவிச்சுக்கிட்டுப் போனால் ஆதிசேஷனுக்குத் தனியா ஒரு சந்நிதி. சர்ப்ப தோஷம், ராகுகேது பரிகாரமெல்லாம் இங்கே செஞ்சுக்கறது விசேஷமாம். அதுக்கு அடுத்து கருவறைக்கு இடப்பக்கமா ஆண்டாளம்மாவுக்குத் தனிச் சந்நிதி. (வழக்கம்போல்) சரியான கவனிப்பு இல்லை:(
ஆண்டாளைச் சுற்றிக் கிறுக்கல்
வெளிப்பக்கச் சுவர்களில் நம்ம மக்கள்ஸ் ஆட்டோக்ராஃப் போட்டு வச்சுருக்காங்க. 'சுத்தமா வை' ன்னு நிர்வாகம் சொல்லுச்சேன்னு கொதிச்சுப்போயிட்டாங்க போல. இல்லே சுத்தமா வைக்கலைன்னு கொதிச்சுப்போய் நிர்வாகம் இப்பச் சொல்லி இருக்கோ? எல்லாம் அந்த ஆண்டாளம்மாவுக்கே வெளிச்சம். பிரம்மோத்ஸவ சமயத்துலேயாவது இதுக்கு ஒரு வெள்ளை அடிச்சுருக்கக்கூடாது? அந்தக் கோபுரத்துக்கு அடிச்சதுலே மீதி இல்லாமப் போயிருச்சா? என்னவோ போங்க.......
'ஹெல்ப்லெஸ்ஸாக் கிடக்கேன்'னு சொல்வதுபோல் காலொடிஞ்ச குதிரைவாகனம் ஒன்னு ஆண்டாள் மண்டபத்தில். ஐயோ...பாவம்:(
ஆழ்வார்கள் சந்நிதி, மணவாளமாமுனிகளுக்குத் தனிச்சந்நிதி, பரமபதவாசல் கருவறை விமானம் எல்லாம் பார்த்துக்கிட்டே வெளியே வந்தோம். சுத்தமாத்தான் இருக்கு பிரகாரம். தாயார் சந்நிதிக்கு அருகிலே ஆன்மீகப்புத்தகங்கள், டிவிடி, விசிடின்னு விற்கும் ஒரு ஸ்டால். பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் இதைக்கடந்த பத்து வருசங்களா நடத்தறாராம்.
கோபுரவாசலுக்கு நேரா'
அனுமன் சந்நிதி
கோபுரவாசலுக்கு நேர் எதிரா அந்தப்பக்கம் குறுக்கே ஓடும் வீதியைக் கடந்து இருக்கும் கல்மண்டபத்துக்குள்ளே ஆஞ்சநேயருக்கு ஒரு சந்நிதி இருக்கு. புதுசா வர்ணம் அடிச்ச தேர் ஒன்னும் பக்கத்துலே நிக்குது. ரொம்ப சிம்பிள் டிசைன். ரொம்பப்பணிவா கூப்பிய கைகளுடன் நிற்கும் நேயுடு. மண்டபத்தில் சுற்றிவர சுவர்களில் அழகிய வர்ணங்களுடன் பெருமாளையும் தாயாரையும், ராம் & கோவையும் வரைஞ்சு தள்ளி இருக்காங்க. கூடவே திவ்யப் பிரபந்தப் பாசுரப்படி ராமாயணம் முழுசும் எழுதிவச்சுருக்காங்க. நேரம் இருந்தால் ஆற அமர உக்கார்ந்து வாசிக்கலாம். நமக்கோ?????
போனவழியாகவே திரும்பிவந்தோம். ஸ்டேட் ஹைவே 50. மெயின்ரோடில் வந்து சேர்ந்த கொஞ்ச தூரத்தில் பேசும் ஆஞ்சநேயர் கோவில் (இவரும் எட்டடிக்குக் குறைவில்லை) சாலையைப் பார்த்தபடி கோவில் கொண்டுள்ளார். எப்படிப் பேசுவார்? கண் ஜாடை கை ஜாடையா? இல்லே....மீடியம் மூலமாகவா? அப்படித்தான் இருக்கணும். விவரம் கேட்க வண்டியை நிறுத்தலாமுன்னா அதுக்குள்ளே சீறிப்பாய்ஞ்சு நூறு மீட்டருக்கு மேலே ஓடிருச்சு. அப்படி என்னதான் அவசரமோ........
பேசும் ஹனுமன்
சரி போகட்டும். நம்ம அடுத்த ஸ்டாப் அந்த 'வால்' விசாரணை.
Friday, June 11, 2010
என்னைப்பாடு. என்னைப்பாடுன்னா. என்ன ஒரு பாடு எம்பாடு
Posted by
துளசி கோபால்
at
6/11/2010 02:51:00 AM
23
comments
Labels: Thirunindravur, அனுபவம்
Thursday, June 10, 2010
எட்டடியாமே!!!!!!!!
பக்தவத்ஸலா...பரமானந்தான்னு பாடலாமுன்னா தொண்டை சரி இல்லீங்க. இவனைப்பார்ப்பதைவிட அவனை அதான் அந்த 'எட்டடிக்காரனை'ப் பார்க்கணுமுன்னுதான் மனசுலே ஒரே ஆவல். விவரம் சொன்ன தோழியைக் கூப்பிட்டு. போலாமா?'ன்னால் அவுங்களுக்கு வரமுடியாதாம். வேறொரு எங்கேஜ்மெண்ட். திடீர்ன்னு ப்ரோக்ராம் போட்டால்தான் வேலையே நடக்குது நமக்கு.
திருநின்ற ஊருக்குப் போகலாமுன்னா ட்ரைவர் முழிக்கிறார். தின்னனூர் போலாமான்னதுக்கு 'ஓ' ன்னு ஜோராத் தலை ஆட்டிக்கிட்டே எங்கே இருக்குன்னு சொல்லுங்க, போயிறலாமுன்னார். நாம்தான் முன் ஜாக்கிரதை முத்தண்ணியாச்சே. கூகுளாரிடம் கேட்டு விவரம் வாங்கி வச்சுருந்தேன். 'மவுண்ட் பூனமல்லி ஹைரோடுலே போ'ன்னு சொல்லி இருந்தாங்க. அதேபடிக்குப்போய் திருமழிசை தாண்டிப்போகும்போது ஒரு கோவில்வளாகத்துக்குள்ளே 'வால்' மட்டும் தெரியுதேன்னு பார்த்துவச்சுக்கிட்டேன். வரும்போது என்னன்னு பார்க்கணும்.ஒரு இடத்தில் மட்டும் வழி தவறி ( ரைட் எடுக்காம விட்டுட்டார்னு வழியில் விசாரிச்சப்போத் தெரிஞ்சது)சரியான வழிக்குத் திரும்பிப்போகும்போது ....'அட! நாத்து நடறாங்க! இன்னும் கிராமம் இருக்கா? சென்னையில் இருந்து வெறும் முப்பத்திஆறே கிலோமீட்டர் தூரம்தான்! ஊருக்குள்ளே நுழைஞ்சோம். கொஞ்சதூரத்தில் வலப்பக்கம் திரும்பணும். கோவில் மதில் சுவர் 'கண்ணிலே' விழுந்தது.அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோவில். வளாகத்துக்குள்ளே நுழைஞ்சோம். கல்மண்டபம் ஒன்னு கோபுரவாசலுக்கு முன்னால். காலை ஒம்பதேகால் மணிக்கு நண்பரும் நண்பருமா ஆழ்ந்த உறக்கம். துளசி மாலை கட்டிக் கொண்டிருக்கும் சில 'பூக்காரிகள்'.
அஞ்சு நிலைக்கோபுரம் பளிச்சுன்னு ஆஃப் ஒயிட்டில் நிக்கும் கோபுரவாசல் கடந்து உள்ளே போனால் 'பளிச்'க்கு விவரம் கிடைச்சது. ப்ரம்மோத்ஸவம் முடிஞ்சு இன்னும் ஒரு வாரம்கூட ஆகலை. கோவிலின் சிறப்புகளைக் கல்லில் பொறிச்சு வச்சுருக்காங்க. ஒரு பக்கமாக சாய்ச்சு வச்சுருக்கும் கோவில் குடைகளைப் பார்த்தால் மனசுக்கு இதமா இருந்துச்சு.
வலம் வரும் வழி முழுக்க நூற்றியெட்டு திவ்யதேசங்களில் அருள்பாலிக்கும் பெருமாளின் விவரங்கள் பெயர்கள் அடங்கிய போஸ்டர்கள். உபயதாரர்களின் பெயர் அரைவாசி அடைச்சிருந்தாலும் மீதி இடம் பளிச்சுன்னுதான் இருக்கு. இந்தக் கோவிலும் அந்த 108 இல் ஒன்னு. அங்கங்கே நம்ம யானைச்சிற்பங்களும், யானை வாகனங்களும். ஐராவதம்கூட இருக்கு!!!!
திருமங்கை ஆழ்வார், ராமானுஜர், ஆதி சேஷன், சமுத்திர ராஜன், தியாகப்பிரம்மம், ராகவேந்திரர் இப்படி பெரியவர்கள் வந்து தரிசிச்ச கோவில்.
தொட்டில் போன்ற ஒரு மர அமைப்பில் செதுக்குச்சிற்பங்கள் சூப்பர். ரெண்டு பக்கம் இருக்கும் பெரிய இரும்பு வளையங்களைப் பார்த்தால் இது நிஜமாவே தொட்டில்தான் போல! பின்னால் பசுமாடு நிக்க குழலூதும் வேணுகோபாலனின் சிற்பம் அழகோ அழகு. பிரகாரத்தின் இடது மூலையில் தாயார் சந்நிதி. 'என்னைப் பெத்த அம்மா' ன்னு என்னமாப் பெயர் வச்சுருக்காங்க பாருங்களேன்.
ரங்ஸ்க்கும் தங்க்ஸ்க்கும் சின்னச் சண்டை. புருசன் என்னதான் பரந்தாமனா இருந்தாலும் குடும்பமுன்னா சண்டை சச்சரவு வராமலா இருக்கும்? கோச்சுக்கிட்டு தாய்வீட்டுக்கு வந்துட்டாங்க மகாலட்சுமி. அவுங்க வந்து நின்ன ஊர் என்பதால்தான் ஊருக்கே திரு(வந்து)நின்ற ஊர்ன்னு பெயர். சொல்லிச்சொல்லிப்பாருங்க...... அதே அதே....தின்னனூர்ன்னு வழக்கில் வந்துச்சு. ரொம்பநாள் இப்படி இருந்து அப்புறமா அரசு ரெக்கார்ட்களில் திரு நின்ற ஊர்ன்னு மாத்தி இருக்காங்க. ஆனாலும் பெரும்பாலான பழைய தலைமுறை மக்களுக்கு இன்னும் இது தின்னனூர்தான்.
சமுத்திர ராஜன் மகளாச்சே மகாலட்சுமி. பாற்கடலைக் கடைஞ்சப்பத்தானே இவுங்க அதுலே இருந்து வெளிவந்தாங்க. பொண்ணு இப்படிக் கோச்சுட்டுவந்தா எந்தத்தாய்தகப்பனுக்குத்தான் பொறுக்கும்? நம்மூடுகளிலும் கோச்சுக்கிட்டு பிடிவாதம் பிடிக்கும் புள்ளைகளை 'என்னைப்பெத்த ராசா, வாய்யா,,வந்து சோறு துன்னு'ன்னு கூப்புடறதுண்டா இல்லையா? 'எங்கம்மா இல்லே.... என் தங்கம் இல்லே.... என்னைப்பெத்த ராசாத்தி வாம்மா'ன்னு கொஞ்சிக் கெஞ்சிக் கூப்புடுவோமில்லே? அதேதான்......
'என்னைப்பெத்த தாயாரே, நன்னு கன்ன தல்லி (தெலுங்குலே) கோவிச்சுக்கிட்டு இங்கே ஏம்மா நிக்கறே? வாம்மா ஸ்ரீ வைகுண்டம் போகலாம். அதுதான் உனக்கு வீடு'ன்னு கெஞ்சிக்கூப்புடறார் அவளைப் 'பெத்த' அப்பா. 'மாட்டேன். போ. இனிமே இங்கேதான் நிக்கப்போறென்......' அசைஞ்சு கொடுக்காத மகளை என்ன செய்யலாமுன்னு தெரியாம மாப்பிள்ளையைப் பார்க்க ஓடுறார். 'த... பாருங்க மாப்பிளே. நீங்களே வந்து கூப்புட்டாத்தான் வருவா போல இருக்கு. எனக்காகவாவது உடனே நீங்க கையோடு வரணும். உங்களைப் பார்த்தாக் கோவம் அடங்கிரும்'னு கெஞ்ச (பாவம், பொண்ணைப் பெத்தவன் வாழ்நாளெல்லாம் கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சிக்கிட்டே இருக்கணும் போல!) பக்தனுக்காக மனம் இரங்கி பெருமாளே வைகுண்டத்துலே இருந்து இறங்கி வந்தார். அவர் கிளம்புனதும் அவருடைய படுக்கையும் கூடவே கிளம்பி வருது. ஆதிசேஷன் நினைச்சுருப்பார் அவர் இங்கே படுக்கை போடப்போறாருன்னு. இப்படியாக எல்லாரும் வந்து, தாயாரைச் சமாதானமாக்கிட்டாங்க. ஆனாலும் பக்தர்களுக்கு இங்கேயும் இருந்து காட்சி கொடுக்கணும் என்ற நியமப்படி அருள்பாலிக்கிறாங்க.
தாயார் சந்நிதியின் மண்டபத்தில் ஒரு துலாபாரம் வச்சுருக்காங்க. சட்னு பார்த்தால் விறகுக்கடை நினைவுக்கு வருது. தாயாரைச் சேவிச்சுக்கிட்டு வலம்வந்து சேனை முதலியாரையும் கண்டுக்கிட்டு மூலவரை தரிசிக்கப்போனோம். பக்தவத்சலப்பெருமாள் ஜம்முன்னு நின்ற கோலத்தில். நெடுநெடு நின்ற மால், கொஞ்சம் உசரம் கூடுதலோன்னு ஒரு தோணல். உத்ஸவருக்கு பத்தராவிப் பெருமாள்ன்னு பெயராம். சடாரியும் தீர்த்தமும் கிடைச்சது. அங்கிருந்த பட்டரிடம் ராமர் சந்நிதியைத் திறக்கணுமுன்னு கோரிக்கை வச்சோம். (தோழி சொன்னாங்க. எப்பவும் பூட்டியே இருக்கும். தரிசனம் செய்யணுமுன்னு சொன்னால் பட்டர் சாவி கொண்டுவந்து திறப்பார்) 'இப்பத்தான் நிவேத்யம் காமிக்கப் பட்டர் போயிருக்கார். சீக்கிரமாப் போங்கோ. அங்கே போயிட்டு வந்து இங்கே நிதானமாச் சேவிக்கலாம். இப்படியே லெஃப்ட்லே போங்கோ. கார் இருக்கா?' ன்னார். 'இருக்கு'ன்னுட்டு அடிச்சுப்புடிச்சுக் கிளம்பினோம். எவ்வளவு தூரமோ என்னவோன்னு பதைச்சேன். இடதுபக்கம்தான் நாம் இங்கே கோவிலுக்குத் திரும்பின வழி. அதுலேயே போய் குறுக்கிடும் ரோடில் திரும்பாம நேராப் போகனும். கண்ணெதிரே ஏரிகாத்தராமர் கோவில். கூடிவந்தால் இந்தக் கோவிலுக்கும் அந்தக் கோவிலுக்கும் ஒரு 400 மீட்டர் தூரம் இருக்கலாம்.பார்த்தவுடனே தெரிஞ்சது ரொம்பவே பழைய கோவிலுன்னு. இடப்பக்கம் ஒரு பதினாறு கால் கல்மண்டபம். அங்கே பிரம்மோத்ஸவம் நடந்தப்ப, இங்கேயும் கொஞ்சம் பராமரிப்பு செஞ்சிருக்கலாம். ஆனால்........ விட்டுட்டாங்க. சின்ன மதில் சுவரைக் கடந்தால் கோவில். சந்நிதிக்கு முன்னால் ஆஞ்சநேயர். பசேல்னு வாடாத துளசி மாலையுடன் கம்பிக்கதவுக்குள் இருந்தார் நேயுடு .
கோவிலுக்குள் நுழைஞ்சால் ஆஜானுபாகுவா மூலவர் எட்டடி உசரம். லக்ஷ்மணனுடனும் சீதா பிராட்டியாருடனும் கம்பீரமா நிக்கறார். கையில் கோதண்டம் ஒரு வளைவுமில்லாமல் குச்சிபோல நேரா இருந்துச்சு. எப்படித்தான் வளைப்பாரோன்னு என் கவலை. இவருக்கு தனியா ஆர்டர் கொடுத்துதான் வேட்டி நெய்யணுமாம். சாதாரண அளவு வாங்குனா அது இடுப்புத் துண்டுதான். வெளிச்சம் குறைஞ்ச ட்யூப்லைட்டில் சாந்தமான முகம் அழகாத் தெரிஞ்சது. இப்படி உள்ளே பூட்டியே வச்சால் இவருக்கு போரடிக்காதா?
வெளியே வந்து அவர் காத்த ஏரியைத் தேடினேன். ஆக்ரமிப்புக்கு ஆளாகி சின்னதாத் தண்ணீர் தேங்கின குட்டையா அது கிடக்கு. ஹூம்......
திரும்ப இங்கே பக்தவத்சலனிடம் வந்தோம். சந்நிதியில் பிரஸாத விநியோகம் நடக்குது. சீக்கிரம் போய் வாங்கிக்குங்கோன்னு விரட்டுனார் ஒரு பட்டர். உள்ளே போய் கூட்டத்தில் இடிபடாமல் ஓரமா நின்னோம். நம்மையும் இந்தப் பக்கமா வாங்கோன்னு கூப்பிட்டுக் கைநிறைய ததியன்னம் கொடுத்தார் பட்டர். கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது.
பதிவின் நீளம் கருதி பாக்கி நாளைக்கு:-)
Posted by
துளசி கோபால்
at
6/10/2010 03:12:00 PM
35
comments
Labels: Thirunindravur, அனுபவம்
