Showing posts with label Te Anau. New Zealand. Show all posts
Showing posts with label Te Anau. New Zealand. Show all posts

Wednesday, June 11, 2008

தண்ணிக்குள்ளே என்னைப்பாரு

"நெசமாவா சொல்றாங்க?"


ஒவ்வொருபடியாக் கவனமா இறங்கிக்கிட்டே கேட்டேன்..

"இல்லியா பின்னே அதான் அச்சடிச்சுக் கொடுத்துருக்குல்லே?"

எதாவது சொன்னா, மொதல்லே வர்ற பதில் ' எங்கே போட்டுருக்கான்?'

ஏன் எவனாவது போட்டாத்தானா? நானே சொன்னேன்னா நம்ப முடியாதா?

"ஐய்யே......அச்சுலே இருப்பதெல்லாம் அப்படியே உண்மைன்னு நினைக்கும் ஒரு அப்பாவி மனுசன்."

எங்க வீட்டுலே...... எங்க தெருவுலே, எங்க பேட்டையிலேன்னு போயிப்போய் இப்ப எங்கநாட்டுலே ன்னு இருந்ததைத் தூக்கிச் சாப்பிடுறமாதிரி 'உலகத்துலேயே இது ஒன்னுதான் இருக்கு'ன்னு விளம்பரம் பார்த்தா சந்தேகம் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க.

என்னத்தைப் பத்திச் சொல்லிக்கிட்டு இருக்கேன்னு புரியலைதானே?

ஆ..........ங்.......

நம்மூர் திரைப்படங்களிலே ( எந்த மொழிப்படம் என்றது பிரச்சனையே இல்லை) வெளிநாட்டுப் படப்பிடிப்புன்னு இங்கே நியூஸிலாந்து வர்றவங்க எதுக்கு ஆளரவம் இல்லாத நடுத்தெரு, மக்கள் கூட்டமாப் போய்வந்துக்கிட்டு இருக்கும் ஷாப்பிங் மால், மிஞ்சிப்போனா ஏரிக்கரை, பனிமலை இதைமட்டும் படம் புடிச்சாந்துக் காமிச்சுடறாங்க இல்லை!

உண்மையான இயற்கை அழகுக் கொட்டிக்கிடக்கும் இடங்கள் ஏன் இவுங்க 'கேமெராக் கண்களுக்கு'த் தெரிவதில்லை? கிறைஸ்ட்சர்ச் பன்னாட்டுவிமான நிலையத்தில் வந்து இறங்குனவுடனே.... குவீன்ஸ் டவுன் என்ற ஊர்வரை மட்டுமே இவுங்க பயணம்& படப்பிடிப்பு இருக்கும். போற வழியில்தான் போன பாராவில் இருக்கும் இடங்களில் நாவ்வாலு வரிகளுக்கு ஆடி படம் புடிச்சுக்குறது.

நான் உங்களை அந்தக் குவீன்ஸ் டவுனில் இருந்து இன்னும் கொஞ்ச தூரம் கூட்டிப் போகலாமுன்னு இருக்கேன். அங்கிருந்து வடமேற்கு நோக்கிப் போகலாம். இதுவே உழக்கு மாதிரி சின்ன நாடு. இதுலே கிழக்காவது மேற்காவதுன்னு நினைச்சுக்கிட்டீங்களா?

ஒரு மூணு மணிநேரம் (172 கி.மீ) பயணம் செஞ்சு டெ அனா(வ்) என்ற இடத்துலே கேம்ப் போட்டுக்கலாம். சுத்துப்பக்கம் எல்லா இடம் பார்க்கவும் இது நடுசெண்டர்:-) இந்த ஊரே ஒரு ஏரிக்கரையில் தான் இருக்கு. இந்த ஏரியின் பெயரேதான் ஊருக்கும். 300 சதுர கி.மீ. பரப்பு உள்ள நீர்நிலை.இது நியுஸியின் ரெண்டாவது பெரிய ஏரி. ( முதலாம் ஏரி வடக்குத்தீவில் இருக்கும் Lake Taupo டா(வ்)போ ஏரி. 616 சதுர கி.மீ. இதுக்கு இன்னொரு நாள் போனாப் போச்சு) இங்கிருந்து மில்ஃபர்ட் சவுண்டு என்ற இடம் போறோம். 121 கி.மீ தூரம். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பாமப் போனா ரெண்டரை மணி நேரம். ஆனா.... கண்ணைக் கட்டிக்கிட்டுப் போக முடியுதா என்ன? போற வழியெல்லாம் மாயாஜாலம் மாதிரி அற்புதமா இருக்கு. போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு சுற்றுலாப் பயணிகளுக்காகவே போற வழியில் என்னென்ன இருக்குன்னு பட்டியல் போட்டு அச்சடிச்சுக் கையில் கொடுத்துருவாங்க.

கண்ணாடி ஏரி ( Mirror lake) The Chasm, இப்படி 11 இடங்கள். எங்கே இடத்தைத் தவற விட்டுருவோமுன்னு அங்கங்கே அறிவிப்புப் பலகைகள். வரும்போது இருட்டிப்போகும். களைப்பா இருக்கும். அதனால் போகும்போதே முடிஞ்சவரை பார்த்துக்கிட்டே போகணும். பாதுகாப்பான பாதைகள். பயமில்லாமப் போகலாம்.

ரோடு நேராப்போய் ஒரு மலை அடிவாரத்துலே முட்டி நிக்கும். நாம் போகவேண்டிய இடம் இந்த மலைக்கு அப்பால். குகை ஒன்னு வெட்டி வச்சுருக்காங்க. இதுக்குப்பெயர் ஹோமர் டன்னல். 1.2. கி.மீ.நீளம். இருட்டுக்குகை. ஒரு பேருந்துலே போனமுன்னா மேற்கூரையை எங்கே இடிச்சுருமோன்னு பயம் வந்துரும்.
இந்தக் குகை இப்ப ஒரு 55 வருசமாத்தான் புழக்கத்தில் இருக்கு. 20 வருசம் கஷ்டப்பட்டுத் தோண்டுன குகைப்பாதை. ஏற்கெனவே மெதுவா நடந்துக்கிட்டு இருந்த வேலை, ரெண்டாம் உலகப்போர் வந்த சமயம் ஆள், பொருள் வசதிகள் சரியாகி கிடைக்காமப் பாதிக்கப்பட்டுச்சு. 1953 லே குகைவழி திறந்தாங்க.

இருட்டு முடிஞ்சு வெளியே வந்தால் ரொம்பக் கீழே சரிவா அடுத்தபக்கம் தெரியும். அதான் நம்ம வந்தவழி கடல் மட்டத்துலே இருந்து 945 மீட்டர் உசரத்துலே இருக்கே! இப்ப ஒரு அஞ்சாறு வருசம் முன்னே ஒரு விபத்து நடந்துபோச்சு. சிங்கைச் சுற்றுலாப்பயணிகள் வந்த பேருந்தில் தீப் பிடிச்சுக்கிட்டு, புகையும் இருட்டுமாச் சேர்ந்து குழப்பம். நல்லவேளையா ஒரு 150 மீட்டர் போனதும் இது நிகழ்ந்ததால் பயணிகள் இறங்கி திரும்ப வந்தவழியாவே வெளியே ஓடிவந்துட்டாங்க. ரெண்டு பேர் மட்டும் இருட்டுலே எந்தப் பக்கம் போறதுன்னு தெரியாம எதிர்ப்புறமா ஓடியிருக்காங்க. ஒருகிலோமீட்டருக்கும் அதிகமா ஓடுனவங்க வெளியே வந்தது மில்ஃபர்ட் பக்கம். யாருக்கும் உயிர் இழப்பு இல்லாமத் தப்பிச்சாங்க.
இந்த சம்பவத்துக்குப்பிறகு அங்கங்கே தீயணைப்புக் கருவிகளைப் பொருத்தி இருக்கு. சாடிலைட் ஃபோனும் வச்சுருக்காங்க. குகையின் மேற்கூரையில் சின்ன விளக்குகளையும் போட்டுருக்காங்க.
வெறும் க்ராவல் பாதையா இருந்ததையும் தார் ஸீல் செஞ்சு, டபுள் லேனாவும் கொஞ்சம் பெருசு பண்ணி இருக்காங்க. ஒத்தைப் பாதையா இருந்தப்ப ரொம்ப பேஜார். அங்கே இருந்து ஒரு வண்டி வந்தா, இங்கே இருந்து ஒன்னு போகும். இருட்டுக்குகையில் தப்பித்தவறி ரெண்டுவண்டி எதிரும் புதிருமா வந்துட்டா.....கதை கந்தல்தான்.

குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்போது குகை அப்படியே மூடிரும். அப்பப் பார்த்துப் பயணம் பண்ணா.... நாம எந்தப் பக்கமும் போகாம மாட்டிக்குவோம். கால நிலை, அங்கங்கே இருக்கும் அறிவிப்புகள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டுப் போகணும். அதெல்லாம் தகவல்கள் பக்காவா இருக்கும். உள்ளூர் ரேடியோவிலும் அறிவிப்புகள் தொடந்து வந்துக்கிட்டே இருக்கும்.

டெ அனா(வ்) லே இருந்து கிளம்பும் முன் வண்டியில் பெட்ரோல் இருக்கான்னு பார்த்து முழு டேங்க் நிரப்பிக்கணும். குளிர் காலமுன்னா( மே மாதம் முதல் நவம்பர் வரை) ஸ்நோ செயின் எடுத்துக்கிட்டுப் போகணும். பனி படர்ந்த ரோடுகள் வழுக்கி விட்டுருமுல்லே? இந்தச் சங்கிலிகள் பெட்ரோல் பங்குகளில் வாடகைக்குக் கிடைக்கும். குகை வாசலில் ட்ராஃபிக் லைட்ஸ் இருக்குன்னு போர்டு இருக்கே..... ஆஹான்னு நினைச்சீங்கன்னா இது கோடையில் மட்டுமே பயனில் இருக்கும். குளிர்காலத்துலே இது வேலை செய்யாது. பனிப்பெயர்வு ( அவலாஞ்ச்- இதுக்கு தமிழாக்கம் சரியா?) எப்ப நடக்குமுன்னு சொல்ல முடியாதுல்லே? பெருசா நிகழ்ந்துச்சுன்னா ஒரு 17 கிலோ மீட்டர் தூரம்வரை பனி விழுந்து ஒரு சுவர்மாதிரி அடைச்சுக்கும்.

குகை முடிஞ்சு 11 மைல் பயணிச்சால் மில்ஃபர்ட் சவுண்டு வந்து சேருவோம். இவ்வளவுக் கஷ்டப்பட்டு இங்கே வரணுமா?ன்னு கேட்டால்........

பின்னே? வராம? அற்புத உலகம் பார்ப்பது எப்படி?

தொடரும்......

கேபின் முன்னே மகளும் கோபாலும்.

நாங்க மானாபுரி ( நம்மூர் அம்புலிமாமா கதைகளில் வரும் பெயர் போல இருக்குல்லே? ) என்ற இடத்தில் தங்குனோம். இது டெ அனா(வ்) லே இருந்து 20 நிமிச ட்ரைவ் தூரம். இங்கே இருக்கும் மோட்டார் கேம்ப் மானாபுரி ஏரிக்கு முன்னாலே இருக்கு. நாம் தங்கியிருந்த கேபின் கூட அம்புலிமாமா ஸ்டைல்தான். ஏகாந்தமா ஏரிக்கு முன்னாலே உக்கார்ந்து தியானம் செய்யத் தோதான இடம்.