அந்த வீட்டுலே இருந்து சாமான்களைக் கொண்டுவந்து புது இடத்துலே நமக்கு ஏத்தாப்போல அடுக்கமாட்டாங்களாம். அந்த வீட்டையே பெயர்த்து எடுத்துக்கிட்டு வந்து வச்சுருவாங்களாம். பிரமிப்புதான்.
எங்க பக்கத்துலே ஒரு அபூர்வமான கடல் சிப்பி கிடைக்குதுங்க. உலகத்துலே அழகான வர்ணங்கள் உள்ளதுன்னு இதை எல்லோரும் நம்ம விக்கிபீடியா உள்பட புகழுறாங்க. நியூஸியின் தெற்குத் தீவில் கட்டக் கடைசி வால் இருக்குபாருங்க, அந்தப் பாகத்துலே இருந்து அண்டார்ட்டிக் வரைக்கும் இடைப்பட்டக் கடல் பகுதிகளில் உயிர்வாழும் ஒரு சிப்பி இனம் பாவாச் சிப்பிகள். Paua shells. நல்லா விரிச்சுவைச்ச உள்ளங்கை அகலத்துக்கு இருக்கு. ச்சும்மாப் பார்த்தீங்கன்னா அழுக்கு வெள்ளை நிறத்தில் மொத்தையா இருக்கும். எல்லாம் அதுமேலே ஒட்டிப் பிடிச்சிருக்கும் கால்சியம், கடலுப்பு சமாச்சாரங்கள். வெளிப்புறமாச் சுரண்டி எடுத்தீங்கன்னா...... நம்ம ஆரெம்கேவி, சென்னைசில்க்ஸ் எல்லாம் தோத்துச்சு. அப்படி ஒரு நிறம். மயிலை நினைவுபடுத்தும் வண்ணம்.
நம்ம வீட்டுலே ஒரு காலத்துலே வாங்கிவச்சது. இன்னும் முழுசாச் சுரண்ட நேரம் கிடைக்கலை(-:
சிப்பிகளைக் கண்டமானம் தேய்ச்சுறமுடியாது. கொஞ்சம் மென்மையான வகை. அப்படியே நொறுங்கிப்போயிரும் சில சமயம். இதுக்குன்னே காரையைச் சுரண்டி எடுக்கப் பயன்படும் கருவிகள் இருக்கு. எல்லாத்தையும் செவ்வனே செதுக்கி, பாலீஷ் செஞ்சீங்கன்னா.....வச்ச கண்ணை எடுக்க முடியாது. இந்தச் சிப்பித் துண்டுகளை வச்சு நகை நட்டெல்லாம் செய்யறாங்க.
நியூஸி நாட்டின் தென்கோடியிலே (Bluff) ப்ளஃப்ன்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே ஒரு ஜோடி. ஐயா பெயர் Fred அம்மா பெயர் Myrtle. ஃப்ரெட் அங்கே துறைமுகத்தில் கட்டட வேலை. இந்த பாவாச் சிப்பிகள் மேலே ஒரு ஈடுபாடு. மனைவிக்கும் இதே மாதிரி. கல்யாணம் கட்டுனது 1930லே. சிப்பிகளைச் சேகரிச்சு, வீட்டு வரவேற்பறை முழுக்கப் பரத்தி வச்சுத் தரையில் நடக்கவே முடியாம இருந்துச்சாம். 27 வருசமா இந்த அறையைப் வீட்டைப் பெருக்கவே இல்லையே. கொஞ்சம் இதையெல்லாம் நகர்த்தி வையுங்கன்னு அம்மா சொன்னதுதான் ஒரு டர்னிங் பாய்ண்ட்.
Fred & Myrtle Flutey
'இதோ.... இப்பப் பாரு'ன்னு நல்லாச் சுத்தம் செஞ்ச பாவாச் சிப்பி ஒன்னை, வீட்டுச் சுவத்துலே ஆணி அடிச்சு மாட்டுனாரு ஐயா. ஆஹா.... ஐடியாக் கிடைச்சிருச்சு. இது நடந்தது 1961 வது வருசம். அப்ப நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க வீட்டுச் சுவர் முழுக்க ஆணியாலே நிரம்பப் போகுதுன்னு!!!!! உள்ளங்கை அகலச் சிப்பிகள் ஏறக்குறைய 1200.
ஆர்வம், அதீத ஆர்வம் பயங்கரமாப் பெருகி வீட்டு வரவேற்பு அறை முழுசும் பாவா(ய்) பாவா(ய்) கூடவே திமிங்கிலத்தில் பற்கள், கொஞ்சம் வெவ்வேற வகையான சங்கு, சிப்பின்னு மனுசர் கால் வைக்க இடமில்லாம எங்கெங்கு காணினும் சிப்பிகள். வேடிக்கை பார்க்க ஊர் ஜனம் வர ஆரம்பிச்சு , வெளிநாட்டு மக்கள் கூடத் தேடிவந்து பார்த்துட்டுப்போனாங்க. அந்த ஊருக்கு ஒரு ஐகானா மாற ரொம்ப நாள் எடுக்கலை. எண்ணி ரெண்டே வருசம். தினம் தினம் வீட்டைப் பொதுமக்கள் பார்வைக்கு விடறதுன்னா ச்சும்மாவா?
1963 முதல் 2000 வருசம்வரை தினம் காலை 9 முதல் மாலை 5 வரை 37 வருசம். இவுங்களோட 70 வருசத் திருமணவாழ்க்கையில் கடைசி 37 வருசம் கோலாகலமா, புதுசுபுதுசாச் சந்திச்ச மக்கள் மட்டும் 10 லட்சத்துக்கும் கூடுதலாம். இங்கே வேணுமுன்னாப் போய்ப் பார்த்துட்டு வாங்களேன்.
சாதாரணமா ஒரு சிப்பியைச் சுத்தம் செஞ்சு பாலீஷ் செய்ய ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் எடுக்குமாம். இந்த ஐயா ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் இதே வேலையா இருப்பாராம்!!!
சுற்றுலாத் துறை, இவுங்க சேவையைப் பாராட்டிப் பத்திரமெல்லாம் வழங்குச்சு. நியூஸியில் தொலைக்காட்சி ஆரம்பிச்சக் காலக்கட்டங்களில் அம்மாவும் ஐயாவும் ஐஸ்கிரீம், ப்ரெட் இதுக்கெல்லாம் மாடலிங் செஞ்சு விளம்பரப்படங்களில் வந்துருக்காங்க. ரொம்ப ஜாலியான தம்பதிகள்.
மே மாசம் 2000 வருசம், அம்மா தன்னோட 89 வயசுலே இறந்தாங்க. அதுக்குப்பிறகு ஒன்னரைவருசம்தான் ஐயா தாக்குப் பிடிச்சார். பல்லைக் கடிச்சுக்கிட்டு இன்னும் ரெண்டுவருசம் இருந்துருக்கலாம், நூற்றாண்டைக் கொண்டாடி இருப்பார்(-:. வீட்டை அப்படியே ஒரு ம்யூஸியமா வைக்கணுமுன்னு அவுங்களுக்கு ஆசை இருந்துருக்கு. ஆனா வாரிசுகளுக்கு வேற ஆசைகள் இருந்துருக்குமில்லே?
shells inside house
உயில்படி வீட்டுக்குச் சொந்தக்காரனான பேரன், ஒருநாள் ராவோட ராவா வந்து எல்லாச் சிப்பிகளையும் கழட்டி எடுத்துக்கிட்டு வீட்டை விக்கப் போட்டுட்டார். எங்க ஊர் மியூஸியத்துக்கு அந்தச் சிப்பிகளை 10 வருச ஒப்பந்தத்துக்கு விட்டுருக்கார் பேரன்.
இதுதான் ப்ளஃபில் இருந்த ஒரிஜனல் வீடு
எங்க மியூஸியம் ஆளுங்க என்ன பண்ணாங்கன்னா...... ஐயா & அம்மா வீட்டை அப்படியே பெயர்த்துக் கொண்டுவந்தமாதிரி அதே டிஸைனில் இங்கே மியூஸியத்துக்குள்ளேயே ஒரு ஹாலில் வீட்டைக் கட்டிட்டாங்க. வரவேற்பு அறை அங்கே எப்படியோ அதே போல. கூடவே ஒரு குட்டித் தியேட்டர் (20 பேர் உக்காரலாம்) அதுலே ஐயா அம்மா இதை எப்படி ஆரம்பிச்சாங்கன்னு எடுத்த குறும்படம் போட்டுக் காமிக்கிறாங்க. சின்னக் குழுவா உள்ளே அனுப்புறாங்க. 10 நிமிசப் படம். அது முடிஞ்சதும் வெளியேவந்து 'பாவா' வீட்டுக்குள் போறோம். தொடர்ந்து காலை 9 முதல் 5 வரை இங்கே பார்வையிட முடியும். எனக்கு அவ்வளவா மன சம்மதம் இல்லாமப்போனது ஒரே ஒரு விஷயம்தான். குறும்படம், நியூஸி தேசீய கீதத்துடன் ஆரம்பிக்குது. காலநேரம் இல்லாம தினமும் 9 மணிநேரம் ஒவ்வொரு 20 நிமிசத்துக்கும் தேசிய கீதம் ஒலிப்பது சரின்னு எனக்குப் படலை. தேசிய கீதம் இசைக்கும்போது அதுக்குரிய மரியாதை காமிக்கப்படவேணாமா? இதைப் பத்தி ம்யூஸியத்துக்கு ஒரு கடிதம் எழுதணுமுன்னு இருக்கேன்.
வீட்டைக் கட்டி......
ஆணிகள் அடிச்சு.........
காட்சிக்கு வச்சாச்சு!!!!
இதுவரை 75,000 பேர் வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்க. நமக்கும் 609 கிலோமீட்டர் பயணம் மிச்சம்:-)
என்னதான் இந்த விசேஷச் சிப்பிகள் அழகுன்னு சொன்னாலும்................ வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரே ஒரு பழமொழிதான் மனசுக்குள்ளே வந்தது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்........................
Showing posts with label Paua shell. Show all posts
Showing posts with label Paua shell. Show all posts
Tuesday, January 27, 2009
வீடு மாத்திக்கிட்டு வர்றதுன்னா இப்படியா?
Posted by
துளசி கோபால்
at
1/27/2009 10:26:00 PM
32
comments
Labels: New zealand, Paua shell, அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
