என்னதான் டேட்லைனில் உக்கார்ந்திருந்தாலும், இப்படியா ஆறுநாளைக்கு முன்னாலே சுதந்திர தின விழாக் கொண்டாடுவது? முந்திரிக் கொட்டை!!!!
மூணே மூணு நடனம். கதக். கடைசி மட்டும் ஒரு 11 நிமிசத்துக்குப் போச்சு. முதல் இரண்டு நடனத்துக்கும் மூணாவதுக்கும் தேவைப்பட்ட இடைவெளியில் 'உள்ளூர் மணிகள்' ஒலிக்கணும்தானே? ராஜஸ்தானி நடனம். எஷா ( Esha) சின்னப் பொண்ணுதான். வயசு 9. என்னா ஆட்டம், என்னா ஆட்டம். இதுவும் ஒரு ஏகலைவி. பாட்டு பால்குணி பதக். ரெண்டு பதின்மவயதுப் பொண்கள், தில் ஹை ஹிந்துஸ்தானி பாட்டுக்கு ஆடுனாங்க. பஞ்சாப் சிங்கம் ஒருத்தர் வந்து பாங்ரா ஆடுனார். கேரளா க்ளப்பின் கோல்டன் வாய்ஸ் ஆலன் ஒரு மலையாளப் பாட்டு.
முதலில் வந்தே மாதரம் பாட்டுக்கு அபிநயம், ரெண்டாவது ந்ருத்யா, மூணாவது தரானா. ஆடுனது பூஜா பட்நாகர். சொந்த ஊர் டில்லியாம். இவுங்க இந்தோனேஷியா, ஜகர்த்தா நகரில் இண்டியன் கல்ச்சுரல் செண்டரில் கதக் நடனம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர். அப்படியே தேவைப்பட்டால் மேடை நிகழ்ச்சிகளும் அப்பப்ப நடத்துறாங்களாம்.
(வந்தே மாதரம்.....)
நம்ம இந்தியத் தூதரகம், சுதந்திர தின விழாக்களுக்காக பூஜாவை இங்கே நியூஸிக்கு வரவழைச்சுருக்காங்க. நம்மூர் விழாவுக்கு நம்ம ஹைகமிஷனரைக் கூப்பிட்டு இருந்தோம். வெலிங்க்டன், ஆக்லாந்து நகரில் எல்லாம் நடக்கப்போகும் விழாக்களுக்கும் அவர் போகணும் என்றபடியால் நாங்க ஒரு ஆறு நாளைக்கு முன்னாலேயே விழாவை வச்சுக்கிட்டோம். நமக்கு சனிக்கிழமையாவும் இருக்கணும் என்ற நிர்ப்பந்தம் ஒன்னு இருக்கே.
ஏழுமணிக்குன்னு (ச்சும்மாச்) சொல்லிவச்சு மக்களை இழுத்துவந்து சரியா எட்டுமணிக்கு விழா ஆரம்பமாச்சு. முதலில் இந்திய நாட்டு தேசியகீதம், அதைத் தொடர்ந்து நியூஸியின் தேசீய கீதமுன்னு ரெட்டை நாயனம். இந்திய ஹைகமிஷனர் மனைவியுடன் வந்துருந்தார். இந்த இந்தியன் க்ளப்பின் பிதா(??)வுடன் சில நிமிட உரையாடல். க்ளப் ஆரம்பிச்சுச் சரியா 11 வருசம் ஆகுது.
இப்போதைய தலைவர் மேடை ஏறுனதும் 'சட்'னு ஒரு காந்திக் குல்லாய் எடுத்துத் தலையில் அணிஞ்சுக்கிட்டார். குஜராத்தியா இருந்துக்கிட்டுக் குல்லாய் இல்லேன்னா எப்படி? பேச்சை முடிக்கும்போது 'ஜெய் ஹிந்த்'ன்னு சொல்லி கெத்தாய் முடிச்சுருக்கக்கூடாதோ? மறந்துட்டார் போல!
'காந்தி பார்த்த கதக்'ன்னு கூடத் தலைப்பு வச்சுருந்துருக்கலாம் இல்லே? கெமெராவுக்கு முன்னாலே குறுக்கும் நெடுக்குமாப் போய்க்கிட்டு இருந்தார்(-:
மேடையில் நம்ம இந்திய ஹை கமிஷனர் சின்னதா, அருமையா பேசுனார். இவருக்கு ஒரு கோயிலே கட்டிறலாம்.எங்களையெல்லாம் இதுவரை நாலைஞ்சுமுறை சந்திச்சிருக்கார். கேரள நாட்டுக்காரர். சந்தடி சாக்குலே அடுத்த மாசம் நடக்கப்போகும் ஓணம் விழாவுக்கு வரமுடியுமான்னு கேட்டேன். 'நியூஸி அமைச்சர்கள் இந்தியா போகும் திட்டம் இருக்கு, நானும் கூடப்போகணும். அதனால் விழாவுக்கு வந்து கலந்துக்க முடியாது. நல்லபடியாக் கொண்டாடுங்க'ன்னு சொன்னார். . இதுக்கு முன்னாலே இருந்த ஹைகமிஷனர் எப்படியெல்லாம் நம்ம நாட்டை அசிங்கப்படுத்திட்டு போனார் என்ற நினைவு வேணாமுன்னாலும் மனசில் வந்து போச்சு.
பூஜா முதல்முறையா நியூஸிக்கு வந்துருக்காங்க. வெள்ளிக்கிழமை சிட்னி வழியா இங்கே கிறைஸ்ட்சர்ச் வந்து இறங்குனாங்க. குவாண்டாஸ் ஏர்வேஸ் வழக்கப்படிப் பொட்டி தொலைஞ்சு போச்சு. நாட்டியத்துக்கான உடைகள் எல்லாம் அந்தப் பொட்டியில். நல்லவேளையா சனிக்கிழமைக் காலையில் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தாங்களாம். 'இந்த கிறைஸ்ட்சர்க் நகரம் ரொம்ப அழகா இருக்கு, சப்தமே இல்லை. இந்தியாவைப்போலவே விருந்தினரை உபசரிப்பதில் நீங்கள் முன்னணியில் இருக்கீங்க'ன்னெல்லாம் வானளாவப் புகழ்ந்தார். எனக்குக் கொஞ்சம் வெக்கமாப் போச்சு. பாட்லக் டின்னருக்கு நான் புளிசாதம்தான் கொண்டுபோயிருந்தேன்:-)
ஞாயிறு காலை வெலிங்க்டனுக்கு நம்ம ஹைகமிஷணர் கூடவே போயிருவாங்க. ஒரு வாரம் வடக்குத்தீவில் அங்கங்கே நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு அடுத்த ஞாயிறு ஜகர்த்தாப் பயணம். கணவர் அங்கே ஒரு கம்பெனியில் வேலையாம். ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டும் நடத்துறாங்களாம்.
கதக் நடனம் ஆடத் தெரிஞ்ச உள்ளூர்த் தோழியிடம், பூஜாவின் நடனம் பற்றிய செகண்ட் ஒப்பினியன் கேட்டேன். நமக்குத்தான் எப்படி ஆடுனாலும் நல்லா இருக்கே. காய்ஞ்ச மாடுகள் இல்லையோ? :-)
'ரொம்ப நல்லா ஆடுனாங்க. எல்லாம் அதுக்கேத்த பத்ததி பிரகாரம் இருந்துச்சு' ன்னாங்க. இவுங்க நடனம் ஒன்னு மிட்விண்டர் விழாவுலே இருந்துச்சாம். ஏன் வரலைன்னு கோச்சுக்கிட்டாங்க. 'நீங்க ஆடறேன்னு தெரிஞ்சதாலே வரலை'ன்னேன்:-))))
சரி, பூஜாவின் நடனத்தைச் சொல்றேன். ந்ருத்யாவில் முக்கியமானது கால்களில் தாளமிட்டு ஆடுவதுதானாம். ஃபுட் வொர்க். கடைசியாக ஆடுன தரானாவில் அந்தப் பாட்டு பதிமூணாம் நூற்றாண்டில் ஒரு ஒரு சூஃபி எழுதுனதாம். கவாலி இசையும் சேர்ந்துருக்குன்னு சொன்னாங்க. ஓ...அப்படியா?
நான் பெற்ற இன்பம் (தமிழ்கூறும்) நல்லுலகமும் பெறட்டுமேன்னு யூட்யுபில் போட்டுவச்சேன். எல்லாம் ரெண்டு, மூணு நிமிசப் படங்கள்தான்.
'ஆடமாட்டாதவனுக்கு அறுபத்தெட்டு அரிவாள்'னு சொல்றாப்போல ஆளுக்கு ஒரு கேமரான்னு தூக்கிக்கிட்டுப் போனோம். யார் கை நடுங்காம இருக்குன்னு பார்த்தே ஆகணும்:-))))
படங்கள் வீடியோ எல்லாம் சுமாராத்தான் வந்துருக்கு. கேமெரா சரியில்லைப்பா. அதுக்கு நாமென்ன செய்ய முடியும், இல்லே?
தலைப்பைத் தமிழில் வைக்காத காரணத்தை யாராவது ஊகிச்சுச் சொல்லுங்க:-)
பங்குபெற்ற கலைஞர்களுடன் நம் இந்தியத் தூதர்.
அனைவருக்கும் இந்திய சுதந்திரத்தின் 61 வருசத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.
ஜெய்ஹிந்த்!!
பி.கு: வெலிங்டன் பதிவர் கவனத்துக்கு:
தவறாமல் விழாவுக்குப் போய் வாங்க.
