Showing posts with label Canterbury Museum NZ. Show all posts
Showing posts with label Canterbury Museum NZ. Show all posts

Thursday, January 29, 2009

குழந்தைங்க..... படு ஸ்மார்ட்.

இன்னும் நாமெல்லாம் இங்கே அருங்காட்சியகத்தில்தான் சுத்திக்கிட்டு இருக்கோம்,நினைவிருக்குல்லே? பாவாச் சிப்பி சேகரிக்க இவ்வளோதூரம் வந்தது வந்தோம். இன்னும் ஒரு எட்டுவச்சா அண்டார்ட்டிக்காவுக்கே போயிறலாம். ஹைய்யோ.......... இப்படி ஒரு குளிரா?குளிர் கூடுதலாத்தான் இருக்கும். அதுக்கு நாம் என்ன செய்யறது? அது அப்படித்தான். போற வழியிலேயே கடல் சிங்கங்கள், கடல்புறாக்கள், அல்பட்ராஸ், பெங்குவின் வகைகள் எல்லாம் பார்த்துக்கிட்டே போகலாம். ஓமரு என்ற ஊரில் பெங்குவின் பறவைகள் காலனி இருக்குன்னாலும் அதெல்லாம் நம்மூர்க் கோழி சைஸில் இருக்குதுங்க. அண்டார்ட்டிக் பகுதிகளில் எம்பரர் பெங்குவின்கள் ஆளுயரத்தில் கம்பீரமா நிக்குதே. பேரரசர் என்ற பட்டம் பொருத்தம்தான். 'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்' இங்கே இதுக்குப் பொருத்தமா இருக்காது. துயரமான வாழ்க்கைன்னா இதைத்தான் சொல்லணும். ஒருமுறை இந்தப் பறவைகளின் விவரணப்படம் ஒன்னு பார்த்துட்டுப் பெருகிவந்த கண்ணீரை அடக்கவே முடியலை. இயற்கையின் படைப்பில் உள்ள விசித்திரத்தில் இதுவும் ஒன்னு.

இந்தப் பகுதிக்குப்போகும் வழியில் தாற்காலிகக் கண்காட்சியா உள்ளூர் பத்திரிக்கை ஒன்னு ஒரு முப்பதுவருசக் கணக்கைக் காமிச்சுக்கிட்டு இருந்துச்சு. ஆடுவாங்கி மேய்ச்சு ஒரு பண்ணை உண்டாக்கணுமுன்னு ஆசையோடு இங்கே வந்த ஒருத்தர் ஆடுவாங்கக் காசு இல்லாமப் பப்ளிஷரா தினசரிப் பத்திரிக்கை ஒன்னை, The Press ஆரம்பிக்கவேண்டியதாப் போச்சு. 1861லே.. ஒரு கம்பெனியா, வெறும் 500 பவுண்டு காசு முதலீடு செஞ்சு ஆரம்பிச்சது இன்னிக்குக் கணக்குக்கு 148 வருசமாகுது. காலைப் பத்திரிக்கையா இருக்கு. இப்போ இந்த ப்ரெஸ் அலுவலகத்தில் 'த மெயில்' ன்னு ஒன்னு வாரம் ரெண்டு முறை வெளிவரும் மாலைப் பத்திரிக்கையும் நடத்தறாங்க. இந்த மெயில் பத்திரிக்கை முற்றிலும் இலவசமா எல்லா வீடுகளுக்கும் வந்துருது. காலைப் பத்திரிக்கை மட்டும் காசு கொடுத்து வாங்கிக்கணும். நானோ கருமி நம்பர் ஒன்னு. எல்லா சேதிகளும், வலையிலும், ஓசிப் பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியில் மூணு நாலு சானலில் ஒரு பத்துப் பதினைஞ்சுமுறையும் வந்துருதே...எதுக்குக் காசை தேவையில்லாமச் செலவு செய்யணுமுன்னு வாதிப்பேன்.

இந்த ப்ரெஸ் பத்திரிக்கையைத் தவிர்த்துக் 'கிறைஸ்ட்சர்ச் ஸ்டார்'ன்னு ஒன்னு மாலை நேரத்துப் பதிப்பா ஒரு 20 வருசம் முந்திவரை வந்துக்கிட்டு இருந்துச்சு. விற்பனை சரி இல்லாம அதை மூடிறலாமான்னு நினைச்சப்ப, புதுசா ஒரு உத்தி கண்டுபிடிச்சப் புண்ணியவானுக்கு நன்றி சொல்லி மாளாது. இதையும் இலவசப் பத்திரிக்கையாவே ஊர் முழுசும் விநியோகிக்கறாங்க. அப்ப வருமானம்? எல்லாம் விளம்பரம்தான். ஒவ்வொரு வீட்டுக்குள்ளிலும் போகமுடியுதேன்னு இதுலே விளம்பரம் கொடுக்குதுங்க அநேகமா எல்லா நிறுவனங்களும். தவறாமல் புதனும், வெள்ளியும் வந்துருது. . பேப்பர் போடும் பசங்க சிலநாள் சோம்பேறித்தனமா இருந்துட்டு, மறுநாள் காலையில் போட்டுட்டுப் போவாங்க. தொலையட்டுமுன்னு விடறதுதான். ஆனா சில நாள் வராமலேயேப் போனா ஓசிப் பத்திரிக்கைதானேன்னு.... , இருக்கமாட்டேன். போன் அடிச்சுச் சொல்லி அதெல்லாம் கறாரா வாங்கிருவேன்:-) எனக்காகவா இதெல்லாம்? நெவர்! பாவம், கோபால். பேப்பர் படிக்கணுமுன்னா உசுரு. (அதென்ன, ஆம்பளைங்களுக்குத்தான் இப்படிப் பேப்பர் பைத்தியம் இருக்கோ?
'ஆண்களும் தினசரிகளும்' என்ற தலைப்பில் ஒரு பதிவாப் போடுமளவு விஷயம் இருக்கு. ஒருநாள் எழுதுனால் ஆச்சு. இப்போ ப்ரெஸ்ஸைக் கவனிக்கலாம்)


1940 முதல் 1970வரை இருந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள், சேதிகள் வாழ்க்கை நிலவரம், அப்போ வெளியான பதிப்புகள்ன்னு ஒரு சின்ன ஹால் முழுக்க வச்சுருந்தாங்க. நம்ம கன்னிமாராலே இருப்பது போல தினசரிகளை பைண்ட் பண்ணி வச்சுருந்துச்சு. (இப்பெல்லாம் சேமிப்புகளைத் தாளா வைக்காம எல்லாத்தையும் மைக்ரோ ஃப்லிமா மாத்தி ரீல்ரீலா வச்சுருக்காங்க. நம்ம ப.மு. (பதிவராகுமுன்) காலத்தில் ஒரு நாள் பத்திரிக்கை அலுவலகம் இயங்கும் முறையைப் பார்த்துருக்கேன்.)
வால் பேப்பர் மாதிரி முதல் பக்கத்தைப் பெரூசாக்கி ஒட்டிவச்சுருந்தது படிக்கச் சுலபமா இருந்துச்சு. இங்கே ஹைலைட் என்னன்னா கண்காட்சி வைக்கும் காலம் முழுக்க, அன்றன்று வெளியாகும் தினசரியை ஒரு இடத்தில் ( ஒரு 100 காப்பி இருக்கும்) வச்சுட்டு, இலவசமா எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு கெஞ்சறதுதான்:-) ஒருத்தர் மனம் நோகப் பொறுக்கமாட்டார் எங்க கோபால். பேப்பரை எடுத்த கையோட ஒரு இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டார். திருத்தவே முடியாது(-:
இந்தக் கண்காட்சி இருக்கும்வரை சோம்பல் பார்க்காம தினம் ஒருநடை வந்து தினசரியை எடுத்துக்கிட்டுப்போனா நல்லா இருக்குமுல்லே? நான் மட்டும் 'பறவைகளைப் பிடிச்சுக்கிட்டு' அடுத்தபகுதிக்குப் போனேன்.





ஆல்பி பாப்பா

அடுத்த ஹாலில் 'ஆசியக் கலைகள்'ன்னு சீனப் பொருட்கள். ரெண்டு பெரிய சிங்கங்கள் வரவேற்கும் முகமா எதிரும் புதிருமா. அதுக்குள்ளே இவரும் வந்து சேர்ந்துக்கிட்டார். இந்த ஹாலை முந்தி எப்பவோ அவசர அடியில் பார்த்தேன் இன்னிக்குக் கொஞ்சம் விலாவரியாப் பார்க்கணுமுன்னு இருந்தேன், அதுக்கே பொறுக்கலை போல.
ஒரு சின்னப் பொண்ணு மூணு மூணரை வயசு இருக்கும் அழுதுக்கிட்டே வந்து கோபால் பக்கத்துலே நிக்குது. இந்தியக் குழந்தைதான். பெயர் சுஜாதாவாம். அம்மா, காணாமப் போயிட்டாங்களாம். கோபாலின் இளகுன மனசுக்கு வந்த சோதனை......குழந்தையை ஒரு கையில் பிடிச்சுக்கிட்டு அது காமிச்ச திசையில் ஓடிக்கிட்டு இருக்கார். ஏழெட்டு ஹாலைத் தாண்டி, மாடிப்படிகளில் இறங்கி கீழ் தளத்தில் ரெண்டுபேரும் ஓடறதை வேடிக்கைப் பார்த்துக்கிட்டேப் பின் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கேன். கடைசியா அவுங்க போய் நின்னது கட்டிடத்தின் மறு கோடியில் இன்னொரு மாடிப் படிக்கட்டின் அருகே. நீங்களே ஏறிப்போங்கன்னு நான் நின்னுட்டேன். ஏன்? இந்தப் படிக்கட்டுப் போய்ச் சேரும் இடம் அந்தச் சீனச் சிங்கம் பக்கத்துலேதான். அம்மா, அங்கே இருந்த ரெஸ்ட் ரூமுக்குள்ளே நுழைஞ்சதைப் பொண்ணு கவனிக்கலை. திடுக்கிட்டுப்போன குழந்தை, கரெக்ட்டா ஒரு(அப்பாவி) இந்தியனை வந்து பிடிச்சுச்சு பாருங்களேன். இப்பத்துக் குழந்தைகள் படு ஸ்மார்ட்!!!!
மூச்சு வாங்கிக்கிட்டு நிற்பவரைப் பார்த்தால் பரிதாபமா இருந்துச்சு. 'ஆறு பிள்ளைங்களோட என்னையும் ஒருசமயம் இதே மியூஸியத்துலே தொலைச்சுட்டாங்க'ன்னு சொன்னதும் இவருக்கு ஆச்சரியமாப் போச்சு. 'கண்டுபிடிச்சுட்டாங்களே கடைசியில்' ன்னு இவரோட உள்மனசுலே ஒரு துக்கம் இழையோடுனதா எனக்கு தோணுச்சு.

Saturday, January 24, 2009

எங்க மம்மிக்கு சி டி ஸ்கேன் எடுத்தோம்......

(பதிவைப் படிக்காமல் பின்னூட்டமிடும் வகுப்புக் கண்மணிகளுக்கான டெம்ப்ளேட்:
(பதிவைப் படிக்காமல் பின்னூட்டமிடும் வகுப்புக் கண்மணிகளுக்கான டெம்ப்ளேட்:

1.விரைவில் மம்மி குணமடைய வேண்டுக்கின்றோம்.

2. எங்கள் கண்ணீர் அஞ்சலி. மம்மியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்)


எங்கூர் பப்ளிக் ஆஸ்பத்தியில்தான் நடந்துச்சு. ரிப்போர்ட்டை வேணுமுன்னா ஸ்கேன் செஞ்சு போடவா?
உயரம் அஞ்சடிக்கும் குறைவு. அவுங்க எடை அம்பது அம்பத்தியஞ்சு கிலோதான் (ஹைய்யோ தாஜ்மஹால்!!) சரியாச் சாப்புடாமக் கொள்ளாம உடம்பைக் கெடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க. இருபத்தியஞ்சு வயசுலேயேப் போய்ச் சேர்ந்துட்டாங்க. ஹூம்........ சாகற வயசா? ஆயுசு என்னவோ அவ்ளோதான் விதிச்சிருந்துருக்கு(-:

இன்னிக்கான சர்க்யூட்க்கு எங்கே போகலாம்? அதுவும் காசே செலவு பண்ணாம..... ஆ............. ஆப்டுக்கிச்சு. நான் ஒரு ஏழெட்டு வருசமா இங்கே வரவே இல்லை. உள்ளூர் சமாச்சாரமுன்னா இவரைக் கிளப்பிக்கிட்டு வர்றதே பெரும்பாடு.

ஆர்ட் காலரி அனுபவத்துக்குப் பிறகு, நாமும் கொஞ்சம் சூதானமா இருக்கணும்தானேன்னு வரவேற்பு மேசையில் இருந்தவர்கிட்டே, படம் புடிச்சுக்கலாமான்னு கேட்டால்........ எவ்வளோ வேணுமுன்னாலும் புடிச்சுக்கோன்னுட்டார். இந்த கோடை காலத்துக்குன்னு என்னென்ன ஸ்பெஷல் போட்டுருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் கொடுத்தார். எங்கெங்கே என்னென்ன என்ற விலாவரியான விவரமும் கூடவே கிடைச்சது.
அப்படியே கொஞ்சூண்டு சரித்திரத்தையும் சொல்றேன் ( இது பரிட்சைக்கு வரும் பகுதி)

1867 வது ஆண்டு நமக்குன்னு ஒரு ம்யூசியம் கட்டணுமுன்னு பொதுமக்கள் கேட்டுக்கிட்டதுக்கு இணங்க எந்த இடம் வாகா இருக்குமுன்னு ஆராய்ஞ்சு தாவர இயல் பூங்காவை ஒட்டுன இடம் சரியா இருக்குன்னு தீர்மானிச்சு( இதுக்கே ரெண்டு வருசம் ஆயிருச்சு. எது செய்யணுமுன்னாலும் இங்கிலாந்துக்குச் சேதி அனுப்பி அங்கிருந்து அனுமதி வாங்கணுமே. இமெயிலா பாழா அப்போ!!! )உள்ளுர் பத்திரிக்கையில் கட்டிடம் கட்ட ஒரு டெண்டர் அறிவிப்பு செஞ்சாங்க.
பொல்லாத கட்டிடம்...... ஒரே ஒரு ஹால். 70 அடி நீளம் 35 அடி அகலம்.

கட்டிடத்தைக் கட்டி முடிச்சு திறப்புவிழா செஞ்சது 1870 வது வருசம். அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா விஸ்தரிச்சுப் புதுசா மாடியெல்லாம் வச்சுக்கட்டி (107 வருசத்துக்குப் பிறகு) அண்டார்டிக் கண்டத்துக்குன்னு உண்டானத் தனிப்பட்ட சுவையான விஷயங்களையெல்லாம் சேர்த்துத் தனி ஹாலில் வச்சாங்க. அதுக்கு நம்ம எடின்பரோக் கோமகனார் (Duke of Edinburgh) இங்கே வந்துருந்தப்ப அவர் கையால் முன்னாள் அருங்காட்சி இயக்குனர் Roger Duff என்பவர் பெயரை அந்த ஹாலுக்குச் சூட்டினார்.( என்னத்தைக் கோமகனோ, தன் பெயரை வச்சுக்கத் தெரியலை போங்க)

சமீபத்தில் 1995 வது ஆண்டு ஒன்னேகால் நூற்றாண்டு விழா அமோகமா நடந்தது. நாலு மாடிக் கட்டிடமுன்னு சொன்னாலும் ரெண்டு மாடி முழுக்கத்தான் காட்சிக்கு இருக்கு. மத்த மாடிகளில் அலுவலகம், சேமிப்புக் கிடங்கு, அது, இது கிடக்கு. இயக்குனர்கள், நிபுணர்கள் எலோரும் ரொம்ப நட்பாவே இருக்காங்க.

ஒருமுறை மகள் பள்ளிக்கூடச் சுற்றுலான்னு Fossil ஃபொஸில் இருக்கும் ஆற்றங்கரைப் பகுதிக்குப் போனப்ப, அங்கிருந்து ஒரு கல் போல ஒன்னைக் கொண்டுவந்துருந்தாள். ரெண்டுபக்கம் ஒரே அளவா, அமைப்பா நடுவில் அரைவட்டக் குழியோடு ஒரு ராட்சஸப் பறவை மூக்குபோல இருந்துச்சு. அது என்னவா இருக்கும்முன்னு கேட்க ம்யூஸியத்துக்குப் (Curator)போன் பண்ணிக்கேட்டு, அவர் கொண்டுவரச் சொன்னாரே போய்ப் பார்த்தோம். அதை என்னவோ பரிசோதனையெல்லாம் செஞ்சுட்டு, 1.25 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்ததுன்னு ஒரு சர்ட்டிஃபிகேட்டும் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆற்றுப்படுகையில் இருந்தப்பத் தண்ணீர் அதை மெதுவா அரிச்சு ஓட்டைவிழுந்து அதுவழியா நீர் போயிருக்குன்னார்.

உள்ளே நுழைஞ்சதும் நம் கண்ணில் விழுவது உள்ளூர் மவோரிகள் அந்தக் காலத்தில் (வெள்ளையர்கள் இங்கே வந்து சேர்ந்த காலக் கட்டம்) எப்படி இருந்தார்கள், அவுங்க வாழ்க்கை முறை என்ன? என்பதெல்லாம் அப்படியே விவரிச்சு இருக்கு. நிஜ ஆள் அளவிலான உருவப் பொம்மைகள்.

ஐயோ.... அப்பவும் சமையல் செய்வது பொம்பளை வேலை தானான்னு மனசுக்குப் பட்டுச்சு.
மீன் பிடிக்க உதவும் தூண்டில்முள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க சில ஆண்கள்.

அட! சுரைக்குடுக்கை இருந்துருக்கு. (அப்போ ஏன் சுரைக்காய் இங்கே கிடைக்கலை???)

குளிருக்குப் பயனாகும் உடை இந்த ஃப்ளாக்ஸ் என்னும் நாரில் உண்டாக்குன கோட்.


கிவிப் பறவைகளின் சின்னச்சின்ன இறகுகளைக் கொண்டு உண்டாக்குன உடை, அவர்கள் பயன்படுத்துன படகு, மரச்சிற்பங்கள், அவுங்களுடைய வீடுகள் இப்படி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது.

'எதையும் தொடாதே' என்ற அறிவிப்பைப் பார்த்தவளுக்கு இந்தக் கல்லைத் தொட்டுப் பாருன்னு ஒரு அறிவிப்பு வச்சுருந்தது..... ...
நியூஸிலாந்து ஜேடு எனப்படும் பச்சைக் கல். மவோரிகளுக்கு ரொம்பப் புனிதமான கல்.

மோஆ என்ற பறவை இனம். முற்றிலும் அழிஞ்சு போச்சு. இப்படிப் பார்த்தால்தான் உண்டு.

மாடி ஏறிப்போனால் மம்மி படுத்துருந்தாங்க.. ஒரு ரெண்டாயிரத்து நூத்து அறுபது வருசமா இப்படிப் படுத்த படுக்கைதான். இந்த ம்யூஸியத்தின் தந்தை(???) ரெண்டு மம்மிகளை கெய்ரோ நகரில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்கு வரவழைச்சார். அவுங்க வந்து சேர்ந்தது 1888. இவருக்கு என்ன அவசரமோ, காத்திருக்காம அவுங்க வர்றதுக்குக் கொஞ்சம் முன்னாலேப் போய்ச் சேர்ந்துட்டார். பாவம்..... வந்தவங்க ரெண்டு பேரும் ம்யூஸியத்துலே தங்கி இருந்தாங்க. 1957 இல் ஒருத்தரை ஆக்லாந்து ம்யூஸியத்துக்கு அனுப்புனாங்க. இங்கேயே தங்கிட்டவங்க பெயர் டாஷ் பென் கொன்சு Tash Pen khonsu (ஹைய்யோ பேருலேயே கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சறாங்கப்பா)

மம்மியோட மர்மத்தைத் தெரிஞ்சுக்க மம்மியை எக்ஸ்ரே எடுத்து, சி டி ஸ்கேன் எல்லாம் செஞ்சு பார்த்தோம். பொட்டிக்குள்ளே அமுக்கிவைக்கணுமுன்னு இடுப்பைக் கொஞ்சம் உடைச்சுப்புட்டாங்கப்பா(-:
' பாடம்' எப்படி பண்ணுவாங்கன்னு விலாவரியா பக்கத்துலே எழுதி வச்சுருக்கு. உள் உறுப்புகள் சிலதைத் தனியா எடுத்து ஒரு ஜாடியில் போட்டு மம்மிகூடவே வைப்பாங்களாம். அந்த ஜாடிகளில் ஒன்னு பபூன் வேஷம் கட்டிக்கிட்டு இருக்கு. ஹைய்யோ..... பபூன் மூஞ்சு செல்லம்போலப் பார்க்கவே ஆசையா இருந்துச்சு.

மம்மி, எகிப்து இந்த விசயங்கள் எல்லாம் எப்பவுமே ஒரு அபூர்வ ஆசையைத் தூண்டும் சமாச்சாரமுல்லே? ரகசியம் புதைஞ்சு கிடக்கும்னு சொன்னாவே போதாதா? போதாக்குறைக்கு இவுங்களுக்குப் பூனை சாமி. நான்கூட போன நாலைஞ்சு பிறவிக்கு முன்னே எகிப்துலே (கிளியோபாட்ராவுக்கு வேலைக்காரியாவா? ) பொறந்துருப்பேன் போல. பழைய ஜென்ம வாசனை விடலை இன்னும். இதை எழுதிட்டு நம்மாளைத் திரும்பிப் பார்த்தேன். ஒத்தைப் பல்லாலே சிரிப்புக் காட்டிக்கிட்டு இருந்தான் ஜிகே சாமி!
நம்மூரு பசங்க மம்மிபைடு பண்ணிவச்சுருக்கு பாருங்க. என்னவா இருக்குமுன்னே தெரியலைப்பா:-))))



ஒருமுறை பிரிட்டிஷ் ம்யூஸியத்துலே இருந்த கடைகளில் மம்மி மாதிரி லெட்டர் செட் கிடைச்சதேன்னு ரெண்டு செட் வாங்குனேன். மகள் மம்மி பைத்தியம். அவளுக்கு ஒன்னும், பயணத்துலே அடுத்துப்போகும் சென்னையில் உள்ள உறவினர் மகனுக்கு ஒன்னுமா. ஆனா உறவினர் இதைப் பார்த்துட்டு மம்மி படம் வீட்டுலே வச்சாக் குடும்பத்துக்கு ஆகாதுன்னு திருவாய் மலர்ந்தாங்க. டபக்னு எடுத்து பைக்குள்ளே வச்சுக்கிட்டேன். அவரவருக்கு ஆயிரம் நம்பிக்கைகள்!!!!