Showing posts with label 1000. Show all posts
Showing posts with label 1000. Show all posts

Friday, April 16, 2010

ஆயிரத்தில் ஒருத்தியின் அபூர்வ வாசகி

ஒரு மூணு வருசம் இருக்கும். ஜூன் அஞ்சு. ஃபோன் அடிக்குதேன்னு எடுத்தால்... திருமணநாள் வாழ்த்துச் சொல்லும் புதிய குரல் யாருன்னே தெரியலை. நம்ம நம்பர் எப்படிக் கிடைச்சதாம்? துப்பறிஞ்சு கண்டு பிடிச்சவங்க அமெரிக்காவில் இருந்து பேசறாங்க. துளசிதளத்தின் வாசகி(யாம்) ஆனா பின்னூட்டமாட்டாங்க. அக்கவுண்டு எடுத்துக்கலை(யாம்). நம்ம வீட்டிலோ அனானிகளுக்குத் தடா. ஓசைப்படாமல் வந்து வாசிச்சுட்டுப்போவாங்க(ளாம்) பூனையைப்போல:-)

அறிமுகம் எல்லாம் ஆயிருச்சேன்னு, தனி மடலிலும் சாட் லைனிலும் வந்து அப்பப்ப 'நான் இருக்கேன்'னு சொல்வாங்க. போனவருசம் இந்தியா போறேன்னு சொன்னதும்

"'பச்சை கலர்; எடுக்காதே. பார்த்துப் பார்த்து அலுத்துப்போச்சு"

த்தோடா..... பச்சை ரெண்டோ மூணோதான் இருக்குமுன்னு அடிச்சுச் சொல்லிட்டு உள்ளே நம்ம வார்ட்ரோபைப் பார்த்தால் ரொம்பச் சரி. ரெண்டோ மூணோதான் பச்சை இல்லாமக் கிடக்கு:(

வீட்டுலே அண்ணன் அண்ணிகிட்டே சொல்லிக்கிட்டு இருந்தேன். துணிக்கடைக்குப் போனால் கை என்னையறியாமலேயே பச்சையை எடுப்பதும், அண்ணனோ இல்லை அண்ணியோ 'பச்சை பச்சை'ன்னு அலறுவதுமா அந்தப் பயணத்துலே ஷாப்பிங் எபிஸோடு பேஜாராப் போனதுதான் உண்மை. இப்படி அவுங்க பெயர் நம்ம ஹௌஸ்ஸோல்ட்லே புழங்குனது அதிகம். கோபாலுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். பச்சை இல்லை என்பதால் நம்பர் ஆஃப் ஐட்டம்ஸ் குறைஞ்சு போச்சு. ஆனா அதை வெளியே காட்டிக்காம இருக்க அவர் பட்ட பாடு இருக்கே...........

"ஏம்மா.... ஒன்னுமே எடுக்கலை. இது போதுமா? அந்த பச்சை ரொம்ப நல்லா இருக்கு. உனக்குப் போட்டால் அருமைதான். ஆனா வேணாங்கறியே......"

போன ஜூனில் சென்னைக்கு வந்து, கொஞ்சநாள் இருக்கும் வாய்ப்புக் கிடைச்சது. நானும் விட்டதைப் பிடிக்கிறேன்னு ஓடி ஓடிக் காணாததையெல்லாம் கண்டுக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் மடல் வருது. சென்னைக்கு வந்துருக்கேன். உங்களை நேரில் சந்திக்கணும். 'வாங்க. இன்ன இடம் இன்ன நேரம்' எல்லாம் சொல்லிட்டு ஓடிப்போய் அலமாரியைத் திறந்து, முதல்லே கண்ணில் பட்ட பச்சையைத் தள்ளிட்டு ஒரு சிகப்பை எடுத்து வச்சேன்.

மகளையும் கூட்டிக்கிட்டு வந்தாங்க. 'நான் சொன்னேனில்லை இவுங்கதான் அந்த யானை ஆண்ட்டி'


ஓ மை காட்!!!!!!!!!!!!! நான் பூனைச்சட்டைதான் போட்டுருந்தேன்:(

சூட்டிகையான பொண்ணு. பாட்டெல்லாம் கத்துக்கறாங்க. பாடுன்னதும் தாளம்போட்டு நல்லாப் பாடுனாங்க. இந்த வருசம் வர்ற கொலுவுக்கு அந்தப் பாட்டை எடுத்து வச்சுக்கிட்டேன்.

புதுசா சந்திக்கிறோமேன்ற எண்ணமே இல்லாம பேசிக்கிட்டே இருந்தோம்.
'நீங்க மட்டும் துளசிதளத்துலே பரிட்சை வச்சா நாந்தான் முதல் மார்க் எடுப்பேன். அப்படி எல்லாமே உருப்போட்டு வச்சுருக்கேன்'னதும் 'ஆஹா..... துளசிக்கொரு தேசிகி கிடைச்சுட்டாங்க'னு மனசு கூத்தாடுனது என்னவோ உண்மை.

ஆயிரம் வரப்போகுதேன்னு அவுங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அதுக்காக எனக்கு அனுப்புன பரிசுதான் இது. நானும் பத்திரமா எடுத்து வச்சு இன்னிக்கு விளம்பியிருக்கேன்.


ஆயிரம் பதிவுகள் இட்டாய்
பல்லாயிரம் புண்ணியம் பெற்றாய்

காவியம் பல சொன்னாய்
ஓவியம் போல் மனதில் பதிந்தாய்

நெஞ்சம் வாடிய போது தேற்றினாய்
அஞ்சும் போது துணை நின்றாய்

வாய் விட்டு சிரிக்க வைத்தாய் - என்
தாய் போல அறிவுருத்தினாய்

எழுதிய சொல்லினால் கட்டி இழுத்தாய்
நல்கிய நெஞ்சத்தில் ஆட் கொண்டாய்

டீச்சரும் ஆனாய் - நல்ல
ப்ரீசரும் ஆனாய் - என் => Preacher here (you are cool too - may be freezar is also good)
தோழியும் ஆனாய்
வாழி நீ பல்லாண்டு !!!

குறைவில்லாத கோபாலனோடு
வரைவில்லாத மகிழ்ச்சியோடு
அளவில்லாத நெஞ்சங்களோடு
வாழி நீ பல்லாண்டு !!!

கலைமகளின் பிம்பமே
வலைமகளின் சின்னமே
விஜியின் "துல்ஸ்"யே
வாழி நீ பல்லாண்டு !!!


என் எழுத்துகளுக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், பின்னூட்டம் இட்டும் இடாமலும் என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும்,
நம்மாழ்வார் ரேஞ்சுக்குப்போய் பல்லாண்டு பாடுன என் அபூர்வவாசகி விஜிக்கும் என் அன்பையும் நன்றியையும் இங்கே பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.