Showing posts with label பூரி ஜகந்நாத் கோவில். Show all posts
Showing posts with label பூரி ஜகந்நாத் கோவில். Show all posts

Friday, October 18, 2019

இன்னொருக்கில்கூடி.... !!!! (பயணத்தொடர், பகுதி 157 )

மேற்கு வாசலில் இருந்து கிளம்பி நடந்த கொஞ்ச தூரத்திலே கோவிலின் வெளிப்புற மதில் சுவர் நமக்கிடதுபக்கம் திரும்பிடுது.  தெற்குத்திசை.....  குதிரை  வாசல் இங்கேதான் இருக்கு. கருப்புக்குதிரையில் வெள்ளை நிற வீரரும், வெள்ளைக் குதிரையில் நீலநிற வீரருமா  போரிடத்தயாரா ஆயுதபாணியா வில் அம்புகளுடன்  இருக்காங்க!   யாராம்? நம்ம பலராமரும் கிருஷ்ணரும் !  நம்ம படம் ஒரே ஃப்ரேமுக்குள் வரலை. ரொம்பக் கிட்டக்க இருக்கோமே.... அதான்  கூகுளார் அருளிய படம் ஒன்னும் போட்டுருக்கேன்.  அப்பெல்லாம்  வாசலுக்கு சன்ஷேட் கிடையாது.


ஒவ்வொரு  நுழைவு வாசலுக்குப் பக்கத்திலும் சனம் கைகால் கழுவிட்டுக் கோவிலுக்குள்ளே போக குழாயடிகள் வச்சுருக்காங்க. அதே போல பெரிய பெரிய தகவல் பலகைகள், செல்ஃபோனைக் கொண்டுவந்தால் பிடுங்கிக்குவோம். திருப்பித்தரமாட்டோமுன்னு எச்சரிக்கை செஞ்சுக்கிட்டே இருக்கு! மத்தபடி கேட் வாசலில் இருக்கும் சிற்பங்களோ,  எந்த கேட் இது என்ற விவரங்களோ ஒன்னுமே இல்லை...... செல்ஃபோன் மட்டுமே நிகழ்கால முக்கியம் !


வெளிப்புற மதில் சுவர்களையொட்டியே வெவ்வேற மடங்கள்  அவுங்கவுங்க சாமிகளுக்கான சந்நிதிகளைக் கட்டிக்கிட்டு இருக்காங்க.   முதலில் கண்ணில் பட்டவர் நம்ம ஆஞ்சிதான்! ( இல்லே  போல இருக்கே.....   மூக்கைப் பார்த்தால் சுகர் மாதிரி இல்லே?  சுகப்ரம்மம்....இல்லே   என் கண்ணுதான் ரிப்பேரா....  கோவில் முகப்புலே  வனவாச ராமர்தான் இருக்கார்....  அப்டீன்னா....   ஆஞ்சிதானோ?  )
 அவருக்கு முன்னால் ரெண்டு பக்கங்களிலும் நம்ம துள்ஸிதாஸும், சைதன்யமஹாப்ரபுவும் உக்கார்ந்துருக்காங்க.  சந்நிதிச் சுவரின் ரெண்டு பக்கங்களிலும் தாடி மீசையோடு இடுப்பில் கத்தி வச்சுக்கிட்டு வால்நீட்டி நிற்கும் புலிகள் !   த்வாரபுலீஸ் :-)

அந்தாண்டை இன்னொரு  தனியாரிடத்தில் சிம்ஹவாஹினிக்கு ஒரு சந்நிதி.... இங்கிருந்தே ஒரு கும்பிடு.
இந்தத் தெருமுழுக்க நடக்க இடமில்லாமல் சிறுவியாபாரக் கடைகள். கோவில் பிரஸாதம், நெய் (!!!) விளக்கு எல்லாம் விக்கறாங்க.


சாமிக்கு நைவேத்யம் பண்ண சனம் வாங்கிட்டுப் போகறதுக்குன்னு இனிப்பு மிட்டாய்கள் சின்ன ஓலைக்கூடையில் வச்சு விக்கறாங்க. 'ப்ரஸாத் ச்சடாவோ' னு கூப்பிடும் வியாபாரிகள்.....   ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்குதே  அது இங்கே காஜா ன்னு நினைக்கிறேன். இல்லே   இதுவும் ப்ரஸாதமா?  எங்கெ பார்த்தாலும் தட்டு நிறையக் காஜாக்கள்.  (அங்கே தினம் தினம் அம்பத்தியாறு வகை முழுங்கிட்டு, சிறுதீனியா இதுவும் வேண்டி இருக்கோ?  டைம்பாஸ் இல்லே?  )


வேடிக்கை பார்த்துக்கிட்டே தெற்குப்பக்கம் முடிச்சுக் கிழக்கு வாசலாண்டை போயிருக்கோம். உண்மையில் இதுதான் கோவிலுக்குள்  போக வேண்டிய  முக்கிய நுழைவு வாசல். ரெண்டு பக்கங்களிலும் சிம்ஹங்கள் இருக்கும்  சிம்மவாசல். சுவரில் இருக்கும் தூண்களில் ஜயவிஜயர்கள் !
இந்த வாசலுக்குப் பக்கத்திலும் ஒரு தனியார் மடத்தின் கோவில் இருக்கு. முகப்பில் ஆஞ்சிதான் இருக்கார். நாம் உள்ளே போகலை....


சிம்ஹவாசலுக்கு வெளியே பதினொரு மீட்டர் உயரக் கல்த்தூண், அருணஸ்தம்பம். உச்சியில் நம்ம அருணன் உக்கார்ந்துருக்கார். சூரியனின் ஏழுகுதிரை பூட்டிய ரதத்தின் ஸாரதி இவரே!   இந்தக் கல்மரம் ஆதியில் இங்கில்லை. கொனார்க் என்னும் ஊரில் இருக்கும் சூரியக் கோவிலில் இருந்து கொண்டு வந்து இங்கே வச்சுருக்காங்க. ஆச்சு மூணு நூற்றாண்டு!


சிங்க வாசலின் ரெண்டு பக்கங்களிலும் சிரிச்சமுகத்தோடு சிங்கங்கள் :-)  பயங்கரக்கூட்டம்.  உள்ளே நுழைஞ்சதும் வலதுபக்க மாடத்துலே ஜகந்நாத்  'வா வா'ன்னு சொல்றாப்போலே இருக்கார்.  நேரா படிவரிசைகள் ....  22 படிகளாம். ரொம்ப விசேஷமானவை.... சனக்கூட்டம் படிகள் நிறைச்சுப் போய்க்கிட்டு இருக்காங்க.
இப்பக் கோவிலுக்குள் என்னென்னன்னு ஒரு மாதிரி தெரிஞ்சுபோச்சுல்லே.....  இனி ஒருக்கா நாம் தனியா வந்து சுத்திப் பார்க்கணுமுன்னு 'நம்மவரிடம்' சொன்னதுக்கு 'ஆமாம்'ன்னார் :-)

சிங்கவாசல் இருக்குமிடத்தில் உள்ள சாலைக்குப் பெயர் க்ராண்ட் ரோடு.  பெயருக்கேத்தாப்பல ரொம்ப அகலம்.....  வாசலுக்கு முன்னாடி இருக்கும் வெளிமுற்றத்தில்  மூணு ரதங்கள்,  அலங்காரம் களைந்த நிலையில்.....
மூலவர் உள்ளே உக்கார்ந்துண்டு, எதுக்கெடுத்தாலும் உற்சவரை ஊர்சுத்த அனுப்பும் பம்மாத்துவேலை எல்லாம் இல்லையாக்கும்.... இந்தக் கிருஷ்ணனுக்கு   :-) கோவிலில் நடக்கும் எல்லா உற்சவங்களுக்கும்  டாண்னு அண்ணன் தங்கச்சியோடு வெளியே வந்து  கலந்துக்கிட்டுத் திரும்ப உள்ளே போய் உக்காந்துருவாராக்கும் :-)

சித்திரை தொடங்குனதும் சந்தன யாத்ரா, வைகாசி மாசம், ஸ்நான யாத்ரா, ஆனி மாசம் ரத யாத்ரா, மாசி மாதம் டோலா யாத்ரா ன்னு அப்பப்ப கருவறையை விட்டு வெளியே வந்து கொண்டாடிட்டுப்போறதுதான். இதுலே இந்த ரத யாத்ரான்னு நடக்கறதுதான் ரொம்பவே பெரிய விழா!

இதைத்தவிர சங்கராந்தி, நவராத்ரி, தீபாவளின்னு   ஒரு ஹிந்துப் பண்டிகையையும் விடறதில்லை.... கூடவே ஏகாதசி, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமின்னு ஏகப்பட்ட கொண்டாட்டாங்கள்.

ரதயாத்திரை ஒன்பதுநாள் திருவிழா.  இதுக்காகவே மூணு பெரிய ரதங்களை வருஷாவருஷம் பெரிய அளவில் அலங்கரிக்கிறாங்க.  மூணு ரதங்களின் அடிப்பகுதியும், ரதங்களின் கூடுகளுமாத்தான் இப்போ வெளியே நாம் பார்க்கிறோம்.

ஒவ்வொன்னும் நல்ல உயரம். சாமியே தெரியலைன்னு யாரும் சொல்லிடமுடியாது..... உச்சியில் ஏறி உக்கார்ந்து உலகையே பார்த்துக்கிட்டுப் போறதுதான் வழக்கம் :-)

 பலராமர் ரதம் நாப்பத்திமூணேகால் அடி, 14 சக்கரம், பெயர் தாளத்வஜா. சிகப்பும் பச்சையுமா  துணிகள்  அலங்காரம். நாலு கருப்புக்குதிரையுடன் மாதிலிதான் தேரோட்டி. தேர்வடம் யார் தெரியுமோ? நம்ம வாசுகி.  கயிறு ரோலுக்கு ஏற்கெனவே  எக்ஸ்பீரியன்ஸ்ட்தான். திருப்பாற்கடல்....

சுபத்த்ராவின் ரதம் நாப்பத்திரெண்டேகால் அடி உயரமும், 12 சக்கரங்களுமா.... பெயர்  தேவதலனா.  சிகப்பும் கருப்புமா அலங்காரம். நாலு ப்ரவுன் நிறப் பெண்குதிரைகளுடன்,  ஸ்வர்ணசூட நாகினிதான் தேர்வடம். தேரோட்டி ?  ஹாஹா... வேற யார்? அர்ஜூனன்தான் :-)

நம்ம ஸ்ரீ ஜகந்நாத்தின் ரதம்தான் ஏற்றவும் உயரமானது. நாப்பத்திநாலு அடிகளும் கொசுறா கூடவே ரெண்டு இஞ்சும் . சக்கரங்களின் எண்ணிக்கையும் 16. சிகப்பும் மஞ்சளுமா அலங்கரிப்பு. நாலு வெண்குதிரைகளும், தாருகன் என்னும் தேரோட்டியும், சங்கசூடநாகர் தேர்வடமுமாய்.....  ரதத்தின் பெயர் நந்திகோஷ் !

முதலில் பலராமர், அடுத்து சுபத்ரா கிளம்பிப்போனதும்  கொஞ்ச நேரம் கழிச்சுதான்  ஜகந்நாத் கிளம்புவார்.
தேர்களையெல்லாம் மரக்குதிரைகள், மரச்சிற்பங்கள், மரப்படிகள் எல்லாம் வச்சு  அலங்கரிச்சு முடிச்சதும்  கருவறையில் இருந்து மூலவர்களைத் தூக்கி வந்து அவரவர் ரதத்தில் ஏற்றி உக்கார வைப்பாங்க.

பூரி அரசர் கஜபதி திவ்ய சிங் தேவ் / புருஷோத்தமர், நடமாடும் ஜகந்நாதர் பல்லக்கில் வந்து கோவில் வாசலில் இறங்கி, ரதங்களின் மேலே ஏறி, பண்டா சந்தன நீர் தெளிக்க, ரதங்களின் தரையைத் வெள்ளித்துடைப்பத்தால் சுத்தம் செய்வாராம். ஆதிகாலத்தில் தங்கத்துடைப்பமா இருந்ததாம்....  பிறகு பூஜைகள், ஆரத்தி எல்லாம் முடிச்சுட்டு அவர் இறங்கினதும்  ஒவ்வொரு தேர்களா நகர ஆரம்பிக்கும். மக்கள்தான் இழுத்துக்கிட்டுப் போவாங்க.

தேர்களில் பிடிப்பிச்சுருக்கும் மரக்கட்டைகள்,  படிகளுக்கான மரத்தடிகள் எல்லாம் சேர்ந்து பயங்கர கனமா இருக்குமாம். பகல் மூணுமணிக்குக் கிளம்பினால்  பொழுது சாயறதுக்குள்ளே  குன்டிச்சா கோவிலுக்குப் போயிடணும். சூரியன் அஸ்தமிச்சுட்டால் தேர் நின்ன இடத்தில் நிக்க வேண்டியதுதான்.


உண்மையில் நம்ம பயணத்திட்டத்தின்படி  இங்கத்து நியூஸி குளிரில் இருந்து தப்பிக்கும் விதமா ஜூன் ஜூலையில் இந்தியாவுக்கு வந்துட்டு,  அப்படியே கொல்கத்தா, பூரி, காசின்னு சுத்திட்டு வரவேண்டியது.  விவரங்கள் சேகரிச்சப்ப,  ரதயாத்ரா நடக்கும் சமயமுன்னு தெரிஞ்சதும் திட்டத்தை மாத்திக்கிட்டோம்.

நாம் போனது வருஷம் 2018 (நாந்தான் பதிவை ரொம்ப நாள் கழிச்சு எழுதிக்கிட்டு இருக்கேன்) அப்போ ரதயாத்ரா ஜூலை 14 ஆரம்பிச்சு, ஜூலை 22 தேதிக்கு முடிஞ்சது.  உலகம் முழுவதிலும் இருக்கும்  பக்தர்களில் பலரும் இந்த சமயத்துக்குப் பூரிக்கு வந்துடறாங்க. அந்த வருஷம் மட்டும் ஏழு லக்ஷம் பேர் வந்துருந்தாங்களாம்.  எல்லா ஹொட்டேல்ஸும் ஃபுல்லி புக்டு. கூட்டம் சேரும் சமயம் சுகாதாரக்கேடும் கூடவே வந்துருமே..... இதன் காரணமாத்தான் நாம்  விழா முடிஞ்ச  ரெண்டாம்  வாரம் வந்தோம். இப்ப என்னன்னா.... நல்லமழையில் மாட்டிக்கும்படியா ஆச்சு...ப்ச்....
ராஜா இந்த்ரத்யும்னன் மனைவி   ராணி   ( Gundicha  ) Gகுன்டிச்சா  தேவிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறாமல்  தானே கிளம்பிப்போய் ராணியம்மா கட்டிவச்ச கோவிலில் எட்டுநாள் இருந்துட்டுத்தான் வர்றார் வருஷத்துக்கொருக்கா. இதுதான் இந்தப் புகழ்பெற்ற ரதயாத்திரை !

ராணியம்மா, இவருக்காக தன் அரண்மனையில் ஒரு கோவில் கட்டிட்டாங்க. ஸ்ரீ ஜகந்நாத் கோவிலில் இருந்து சுமார் மூணு கிமீ தூரம்தான்.  Gகுன்டிச்சா கோவில் என்றுதான் பெயரே !  அங்கே ரதங்கள் போய் வரத்தான் இத்தனாம் பெரிய அகலமான சாலை இந்த  க்ராண்ட் ரோடு. (வேற மாநிலத்தில் இருக்கும் இதே பெயருள்ள சாலையோடு குழப்பிக்க வேணாம், கேட்டோ !  )  Grand  Road / Bada Danda ன்னு   சொல்றாங்க.க்ராண்ட் ரோடு பெயருக்கேத்தாப்டி ரொம்ப அகலமா க்ராண்டாவே  இருக்கு ! ரதங்கள் போற வழியாச்சே !   வருஷா வருஷம் ரத உத்ஸவத்துக்கு  வரும் மக்கள் கூட்டம் அதிகரிச்சுக்கிட்டே போகுதாமே!   இந்த வருஷம் ஏழு லக்ஷம் பேர் வந்தாங்களாம். !
'ராணியம்மாவின்  கோரிக்கையை நிறைவேத்தறேன்'னு சொன்ன  ஸ்ரீ ஜகந்நாத்,  ராஜா இந்த்ரத்யும்னனிடம் ' உமக்கு என்ன வரம் வேண்டுமோ.... கேளும்' என்றதும்,  என்னோடு இந்த அரசவம்சம்  முடிஞ்சுடணும் என்று கேட்டாராம்.

ஏற்கெனவே குழந்தை இல்லாத தம்பதிகள்தான் இந்த அரசரும் அரசியும்.  வேற சொந்தபந்தம் வந்து ஆட்சியை எடுத்துக்கிட்டு, 'இது நாங்க கட்டுன கோவிலு'ன்னு உரிமை கொண்டாட வேண்டாமுன்னு நினைச்சுருக்கார்.

பிள்ளை வரம் கேட்பாருன்னு நினைச்சுருந்த ஜகந்நாதருக்குப் பெரிய ஷாக்காப் போயிருச்சு.   உமக்குப் பிள்ளையா இருந்து நானே, நீர் போனபின் திதி கொடுக்கறேன்னு சொல்லிட்டாராம்.   (குடந்தைக் கோவில் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல! ) அப்படியே இதுநாள்வரை நடந்துக்கிட்டுத்தான் இருக்கு !

ரதங்களைப் பார்த்ததும்..... அப்புறம் சொல்லலாமுன்னு மனசுக்குள் வச்சுருந்த விவரங்கள் தானே வந்துருச்சு பாருங்க....
மழை கொஞ்சம் விட்டுருந்தாலும்..... தரையெல்லாம் ஒரே நசநசப்பு.   குறுக்குத்தடுப்பு வரை நடக்கணுமேன்னு நினைக்கும்போது  க்ருஷ்ணன், பிக்கப் வண்டியை அனுப்பிட்டான்.
நால்கோ கம்பெனி, முதியவர்கள், நடக்க முடியாதவர்கள் இப்படியான சனத்துக்காக  இலவச சேவையா  அஞ்சு வண்டிகளை( Battery carts )  விட்டுக்கிட்டு இருக்கு. அந்த  வருஷம் ரதயாத்ரா சமயம்தான்  ஆரம்பம். மூணுவாரம் தான் ஆகி இருக்கு!  வண்டி ஓட்டும் இளைஞர், அவர் வச்சுருக்கும் நோட்பேடில்  நம்ம பெயர், ஃபோன் நம்பர் எழுதித்தரச் சொன்னார். பயணிகள் விவரம்தான்.  வேற ஒரு முதியவர், பெயர் கேட்டதுக்குக் கோச்சுக்கிட்டு வண்டியில் ஏறமாட்டேன்னுட்டார். இலவச வண்டி என்றதும் ஒருமாதிரி சந்தேகம் வேற....'கித்னா ருப்யா'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தார்.

ஏகாந்தமா நாங்க மட்டும் உக்கார்ந்துருந்தோம். போகும் வழியில் சின்னதா ஒரு வீடியோ க்ளிப்பும் எடுக்க முடிஞ்சது.

ஒரு ஒன்னரை கிமீ  தூரத்தில்  அவுங்க  பார்க்கிங் இருக்கு.  அங்கே இறங்கி , அவுங்க சேவையைப் பாராட்டி ஒரு பின்னூட்டம் எழுதிக்கொடுத்துட்டு இன்னொரு ஆட்டோ பிடிச்சு ஜமீந்தார் மாளிகைக்கு வந்து சேர்ந்தோம்.


கொஞ்சம் ஓய்வுக்குப்பின் ஒரு எட்டரைக்குக் கீழே  ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் ராச்சாப்பாடு.  பனீர் கொஃப்தா, சாதம், என்னவோ ஒரு கூட்டு,   ஃப்ரூட் லஸ்ஸி.  சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே, பெருசா  மழை பெய்ய ஆரம்பிச்சது.

மழையை  வேடிக்கை பார்க்கப்பிடிக்கும் என்றாலும்,  பால்கனிப்பக்கம்  ரொம்ப நேரம் உக்காராமக்  கால் வலியா இருக்குன்னு சீக்கிரம் தூங்கப் போயிட்டேன்.

தொடரும்......... :-)


Wednesday, October 16, 2019

கைப்பிடிக்குள் மஹாலக்ஷ்மி !!!! (பயணத்தொடர், பகுதி 156 )

ஏகப்பட்ட சந்நிதிகள் அங்கங்கே..... சிதறிக்கிடக்கும்  சந்நிதிகளில்  முக்கியமானவைகளைப்.... போற போக்கில் பார்த்துக்கிட்டே போறோம்.
ஜலக்ரீட மண்டபம் தாண்டி ரோஹிணி குண்ட்.  தீர்த்தம். பக்கத்துலே பிமலா மந்திர்.  சக்திபீடம். சதியின் இடதுகால் பாதம் விழுந்த இடமாம்.  உள்ளே போய் கும்பிட்டுக்கிட்டோம். நல்ல பெரிய  உருவச்சிலை. நாலடி உயரம் இருக்கலாம். தினமும்  மூலவர் ஜகந்நாத்துக்கு பகல் சாப்பாடு (அதுதான் அந்த 56 வகை! ) விளம்பினபின் அதே ப்ரஸாத  உணவை பிமலாவுக்கும் படைக்கிறாங்க. அதுக்குப்பின்தான் அந்த மஹாப்ரஸாதம்,   ஆனந்தபஸாருக்கு வருது!   முழுக்கோவில் பாதுகாப்புப் பொறுப்பும் பிமலாவுக்குத்தான் !  (லேடி, சீஃப் செக்யூரிட்டி ஆஃபீஸர்! )

உக்ர தேவி என்பதால்  இங்கே மட்டும் வருஷத்துக்கொருமுறை துர்காஷ்டமி இரவு  மிருகபலி (ஆண் மே....மே.... ) கொடுக்கறாங்க.  அந்தக்கால தாந்த்ரிக் முறைப்படி  ராத்ரி வேளையில் யாருக்கும் தெரியாமல் நடக்கும் பூஜையாம்!  மீன் குழம்பும் உண்டாம் !
பொதுவா இந்த ஸ்ரீ ஜகந்நாத் கோவில், காலை அஞ்சு மணிக்குத் திறந்து, இரவு பதினொரு மணிக்குத்தான் மூடறாங்க.   பலி கொடுக்கும் இரவு பூஜைகள் எல்லாம்  இரவு ஒருமணிக்கு ஆரம்பிச்சுக் காலை நாலு மணிக்குள் முடிச்சு, இடத்தை எல்லாம் சுத்தப்படுத்திருவாங்களாம்.  காலை கோவில் நடை அஞ்சு  மணிக்குத் திறக்கும்போது, ராத்ரி நடந்ததின் சுவடுகூடத் தெரியாதாம் !!!!

ஏகப்பட்ட சந்நிதிகள் சின்னதும் , ரொம்பச் சின்னதும், கொஞ்சம் பெருசுமா இறைஞ்சு கிடக்குன்னுதான் சொல்லணும். சில சந்நிதிகள் எல்லாம் தனிக்கோவிலாவே இருக்கு!  பேணுமாதவ், மூலவர் க்ருஷ் மாதிரியே அதே உயரத்தில்  அப்படிக்கப்படியே இருக்கார்.

ருக்மிணி சந்நிதிக்குள் போறோம். பட்டமகிஷி இவள்தான். ஆனாலும் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை.....  த்வார்காவில் தனியாளாக பனிரெண்டு வருஷம் அத்வானக்காட்டிலே தவம் செஞ்சதை நினைச்சா எனக்கு இப்பக்கூடக் கண்ணீர் வந்துருது.... ப்ச்...

பட்டர் / பண்டா 'உள்ளே வா'ன்னு கருவறைக்குள் கூப்புட்டார்.  ஒரு விநாடி யோசிக்கப்டாதோ  நான்..... ?  ருக்மிணியின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டேன். 'கையை நீட்டு' ன்னார் பண்டா! துளசியாக இருக்கணுமுன்னு கையை நீட்டினேன்.  பச்சைத் துணியில் ஒரு சின்னப் பொதி என் உள்ளங்கையில். நல்ல கனம் வேற ! 'பாஞ்ச் சௌ டாலோ' தட்டைக் காமிக்கிறார்.  பச்சைத்துணிக்குள் தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மி!  ஒரு விநாடி ஆடிப்போயிட்டேன்!  எவ்ளோ அதிர்ஷ்டம் பாருன்னு.....  ஆனால் பலிக்கடா யாருன்னு அவுங்களுக்குச் சட்னு தெரிஞ்சுருது இல்லே ?

கையில் இருக்கும் மஹாலக்ஷ்மியை வேணாமுன்னு சொல்ல முடியுமா?  சென்டிமென்ட்டாலே அடிச்சுடறாங்க ! 'நம்மவர்'  சட்னு  காசை எடுத்துத் தட்டில் போட்டார்!  பண்டா ஆசிகளை அள்ளி வீசினார்!  ஆச்சு....   இனி  செல்விருந்து ஓம்பி....வருவிருந்து பார்த்திருப்பார், பண்டா :-)
வெளியே யாருடனோ பேசிக்கிட்டு இருந்த  ஹரிஷங்கரிடம்  மஹாலக்ஷ்மியைக் காமிச்சு விவரம் சொன்னபோது.....  'அடடா.... சந்நிதிகளில் இப்படி  ஏதும் கொடுத்தால் வாங்கிக்கவேணாமுன்னு சொல்ல மறந்துட்டேனே'ன்றார்.

காஞ்சி கணேஷ்னு ஒரு பெரிய புள்ளையார் சந்நிதி!  கலிங்க அரசர்,  காஞ்சிபுரத்துப் போரில் (???) ஜெயிச்சு, அங்கிருந்து கொண்டு வந்தாராம்!   (எப்படி..... இப்பக் கையில் வச்சுருக்கும் மஹாலக்ஷ்மி நியூஸிக்குப் போவதைப் போலவா? ஙே..... ) 

இதுக்குள்ளே  ஒரு சந்நிதி முன்னால் இருக்கும் மேடையையொட்டி  மக்கள் கூட்டம் அங்கங்கே பரவலா.... நிக்க,  மேடையில் இருக்கும் சில பண்டாக்களின்  மடிகளிலும், முன்னாலும்  கலர்த் துணிகள் சுருளைகளாச் சுத்தி வச்சுருக்காங்க. சனம் பூராவும் அப்பப்ப அண்ணாந்து ரேகாவைப் பார்க்கறாங்க.  கொடிமாத்தப் போறாங்களாம்!

தினமும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு இந்த வைபவம்.  கோடைக்காலத்தில் மட்டும் ஆறுமணிக்கு நடக்குமாம்.  திரும்பத் துவார்கா கோயில் கொடிமாற்றம் நினைவுக்கு வந்தது.

நாங்க பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  பக்கத்துக்கோவில் ஜகமோஹனாமேலே  தாவிக்குதிச்சு ஏறிப்போறாங்க மூணு பேர். முதுகில்  ஒரு மூட்டை போல கொடிகள்..  எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் சரசரன்னு  பெரிய விமானத்துலே வரிசையா பிஸ்கெட் போல அடுக்கி இருக்கும் அமைப்பைக் கையால் பிடிச்சபடி  போய்க்கிட்டே இருக்காங்க.

பாதுகாப்புக்கு இடுப்பில் ஒரு பெல்ட்டும், சங்கிலி போலக் கயிறுமா சேர்த்துப் போட்டுக்கிட்டுத்தான் நியூஸியில்  'வால் க்ளைம்பிங், மலை க்ளைம்பிங்' எல்லாம் பார்த்துருக்கேன். இங்கே அதெல்லாம் ஒன்னுமே இல்லை....  கரணம் தப்பினால்....  ஐயோ....    க்ருஷ்ணார்ப்பணமுன்னு போய்க்கிட்டே இருக்காங்க.  ரொம்பச் சின்ன வயசுப் பையன்கள் கூட இல்லை.  அநேகமா முப்பதுகளில் இருக்கக்கூடியவர்கள்தான்.

ஆ......ன்னு வாய் பிளந்து பார்த்துக்கிட்டு இருக்கும்போதே இன்னொரு இளைஞர்  மேலே ஏற ஆரம்பிச்சார்.
இந்த ரேகா/ விமானம் 214 அடி உயரம்!  முக்கால் வாசி போனதும் அங்கே ஒரு சந்நிதியில்  விமானப் பாலகர் சந்நிதின்னு நினைக்கிறேன். அங்கே விளக்கேத்தி வச்சுக் கும்பிட்டார் நாலாவதாக ஏறிப்போன இளைஞர்.
இன்னும் மேலேறிப்போக இரும்பு வளையங்கள் தொங்க விட்டுருக்காங்க. அப்புறம் ஏணி போல  ஒரு அமைப்பு.
உச்சியில் ஒரு பெரிய சுதர்சனச் சக்கரம் இருக்கு. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், பாதரசம்,  இரும்பு, துத்தநாகம்னு  எட்டு உலோகக் கலவைகளில் செஞ்சதாம்.

 பக்கத்துக்கு நாலா  எட்டுக் கைகள் போன்ற அலங்கார விளிம்புகளுடன் இருக்கும் இதன் உயரம் பதினோரு அடியும் எட்டு அங்குலமும்!  எடை அதிகமொன்னுமில்லை..... ரெண்டாயிரத்து இருநூறு கிலோ !  வெளிப்புற சுற்றளவு முப்பத்தியாறு அடி.  வட்டத்துக்குள் வட்டமுன்னு உள்ளே இன்னும் ஒரு சின்ன வட்டம் இருக்கு. அதன் சுற்றளவு மட்டும் இருபத்தியாறு அடி! ரொம்ப உயரத்தில் இருப்பதால் நமக்குச் சின்னதாத் தெரியுது.
நீலச்சக்ரம் என்று இதுக்குப் பெயர். கருவறையில் நாம் தரிசிக்கும் மூணு மூர்த்திகளோடு இந்த நீலச்சக்ர சுதர்ஸனரும் நாலாவது மூர்த்தியாக இருக்கார் என்ற ஐதீகம்.  உள்ளே இருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணரின் கையில் இருக்க வேண்டியவர் இவர், பிரமாண்டமான அளவில்  வெளியே கோபுர உச்சியில் நின்னு  ஊரையே பார்த்துக்கிட்டு இருக்கார். (உள்ளே ஸ்ரீ கிருஷ்ணரின் மேற்கையில்  ஒரு மரக்கட்டைதான் சுதர்ஸனரா இருக்கு. அதான்  பிடிச்சுக்கறதுக்கு எந்த மூர்த்திகளுக்கும் விரல்கள் ஒன்னும் இல்லையே   )
நீலச்சக்ர சுதர்ஸனரில் ஒரு முப்பத்தியெட்டு அடி மூங்கில் கழி கட்டி விட்டுருக்காங்க.  இதில் பறக்கும் கொடியை உருவி  எடுத்துட்டுப் புதுக்கொடியை மாட்டி விடணும்.  இந்தக் கழியைக் கீழே இறக்கும் விதமா அமைச்சு இருப்பதால் சக்கரத்தில் நின்னபடியே கீழே இறக்கி கொடி மாத்திட்டுத் திரும்பவும் உயர உயர்த்திப் பொருத்தணும்.  சக்கரத்தின் மேல் முனையில் இருந்து இருபத்தியஞ்சடி உயரத்தில் பறக்குது முக்கோணக் கொடி. இதன் நீளம் பனிரெண்டு முழமாம் !  இருபது அடி!  அவ்ளோ உயரத்தில் வீசும் காத்துக்குப் படபடன்னு நீளமாப் பறக்குது !   கட்டி முடிச்சதும்  நின்னு கும்பிட்டுட்டுக் கீழே இறங்கி வர்றாங்க.

இந்தக் கொடி மட்டுமில்லாமல்  தோரணம் போல் இருக்கும்  கொடிகளையும்  விமானத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் கட்டித் தொங்க விடறாங்க. பக்தர்கள்  வேண்டுகோளுக்காக கோவில் ஆஃபீஸில் பணம் அடைச்சுட்டால் போதும்.
கீழே கொண்டு வரும் பழைய கொடிகளை பக்தர்கள்  விரும்பினால் ஒரு பெரிய தொகை கொடுத்துட்டு  வாங்கிக்கலாமாம். கோவிலே வித்துருது.  இதுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.  கிடைப்பதே அபூர்வம் என்றார் ஹரிஷங்கர்.

இப்படி மேலே ஏறிப்போய் கொடி மாத்தும்  நபர்களை கருட சேவார்த்தின்னு சொல்றாங்க. சின்னப் பையனா இருக்கும்போதே இதுக்கான  பயிற்சி கொடுப்பாங்களாம். ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள்தான் இதைச் செஞ்சு வர்றாங்களாம்.  இதெல்லாம் ஆரம்பிச்சு ஒரு எட்டு நூற்றாண்டுகளா நடக்குதுன்னதும்  அதிசயிச்சுத்தான் போனேன்!

கோவில் பூஜை புனஸ்காரங்கள் செய்யும் பண்டாக்கள்  மட்டும் ஆறாயிரம் பேராம்!  இவுங்களும் ஒரு குறிப்பிட்ட இனமக்களே!    ஆதிகாலத்துலே  நீலமாதவரை  வச்சுக் கும்பிட்டக் காட்டு ஜனங்களின் வழித்தோன்றல்கள்தானாம். நீலமாதவரைக் கண்டுபிடிக்கப்போன உளவாளி, அந்தக் காட்டுத்தலைவனின் மகளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, மனைவி மூலமாக ரகசியத்தைத் தெரிஞ்சுக்கிட்டு வந்துதான்  உத்கல அரசர் இந்த்ரத்யும்னனுக்கு சேதி சொன்னதாக ஒரு சேதி.  அவரின் வழித்தோன்றல்கள்தான் இந்தக் கோவில் பூஜைக்குப் பாத்யப்பட்டவர்கள்.

கெமெராவுக்கு அனுமதி இல்லைன்னதும் எப்படித் துடிச்சுப்போயிருப்பேன் என்றதை உங்கள்  அனுமானத்துக்கு விட்டுட்டேன்.....

இந்தக் கொடி மாற்றுவதை யாரோ வேறே ஒரு உயரமான இடத்தில் இருந்து வீடியோ எடுத்து யூட்யூபில்  போட்டுருக்கார்.  இங்கே  நான்  அதைப் போட்டுருக்கேன். அன்னாருக்கு என் மனம் நிறைந்த நன்றி !  கொஞ்சம் பெரிய வீடியோ க்ளிப்தான். ஆனால் காணக்கிடைச்சது நம்  கண்கள் செஞ்ச புண்ணியமுன்னு நினைச்சுக்கணும்.

ஒருவேளை  இந்த வீடியோ க்ளிப் வேலை செய்யலைன்னா.... இந்தச் சுட்டியில் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=NcjN_96jKIM

இறங்கி நம் பக்கம் இருந்த மேடைக்கு வந்து சேர்ந்த கருட சேவார்த்திகளைக் கைதட்டி வரவேற்று, யாரும் கேக்காமலேயே பக்தர்கள் அவரவர்  அன்பளிப்பை வாரி வழங்கியது பிடிச்சுருந்தது!

முக்கியமான நிகழ்ச்சியை நமக்குக் காண்பிச்சதோடு  ஹரிஷங்கரின்  கைடு வேலை முடிஞ்சுருச்சு. நாமும் அவரைத் தொடர்ந்து பிஷ்ணு லாட்ஜுக்குப் போனோம்.
இவருக்கு  கைடு சர்வீஸுக்கான பணம் எவ்வளவுன்னு கேட்டதுக்கு, உங்க இஷ்டமுன்னுட்டார்.  அப்படியே ஆச்சு :-) பிஷ்ணு லாட்ஜ் வாசலில் இருந்து ரேகாவை க்ளிக்கினேன்.  கொடி படபடன்னு பறக்குது !
நம்ம செல்ஃபோன்கள், பர்ஸ், குடை, தண்ணீர்பாட்டில் எல்லாம்  இருக்கும் பையை எடுத்துக்கிட்டு நன்றி சொல்லிட்டு நாங்கள் கிளம்பினோம். வாசலில் இருந்து இடப்புறம் நோக்கி ஒரு க்ளிக்.
இப்பதான் நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அதான் கையில் செல் கெமெரா இருக்கே.... ஒரு பத்தடி இடப்புறமா நடந்துபோய் மேற்குவாசலை நல்லபடி நாலு படம் எடுத்துருக்கலாம் இல்லையா?  கோட்டை விட்டுட்டு, வலப்புறம் திரும்பி நடக்க ஆரம்பிச்சோம்.... ப்ச்....

(மேலே படம்: ஆண்டவர் அருளியது)

தொடரும்.......:-)