Showing posts with label நவராத்ரி நியூஸிலாந்து. Show all posts
Showing posts with label நவராத்ரி நியூஸிலாந்து. Show all posts

Friday, October 03, 2014

அஞ்சஞ்சா..... மும்மூணா.... இப்படி இருந்தால் தப்பா?

முதலில்  அனைத்து வாசக நண்பர்களுக்கும் விஜயதசமிக்கான இனிய வாழ்த்து(க்)கள். நவராத்ரின்னு ஒன்பது நாட்களும், தசரான்னு  மொத்தமாச் சேர்த்தால்  பத்து நாட்களுமா  இருக்கும்  விழாக்காலம், இந்த வருசம் , ஒன்பது நாட்களிலேயே  தசராக் கொண்டாட்டமா ஆகி இருக்கு.  நவமி தினத்தில் பாதியை தசமி எடுத்துக்கிச்சு! பதிவராக ஆனபின் இப்படி வருவது ரெண்டாம் முறைன்னு நினைக்கிறேன். (அதெல்லாம் பழசை எடுத்துப் பார்த்துட்டோம்ல!)
இந்த அழகில், நம்ம வீட்டுலே வழக்கமா தசராவையொட்டி வரும் வார இறுதியில் நடக்கும் விஜயதசமிக்கான(!) பூஜை,   இந்த முறை இன்னும் கூடுதலா எட்டு நாள் தள்ளிப்போய் இருக்கு.  இடும்பியின் கொலுக் கொண்டாட்டம்  அதுவரை தொடரும்.  சுண்டலுக்கு பயந்தோ என்னவோ, நவராத்ரி விழா சமயம் மூணாம் நாளிலிருந்தே  கோபால் 'எஸ்' ஆகிட்டார்!  அதுக்காக அப்படியே விட்டுற முடியுதா?
.
இந்த ஒன்பது நாட்களும், நம்ம வீட்டுச் சாமிகள் (கொலுச்சாமிகளையும் சேர்த்துத்தான்)  ஆரோக்கியமான நிவேதனங்களை மட்டுமே சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. அவுங்களுக்கு மட்டும் கலிகால ஹெல்த் கான்ஷியஸ், கவனத்துக்கு வந்துருக்காதா என்ன?  கோபால் எஸ்ஸாகுமுன் ஒருநாள்  சுண்டல் செஞ்சது  உண்மை!

கேஸட் வச்சு அஞ்சு படிகள் கட்டுன காலம் போய், நிரந்தரக் கொலுப்படி  போனவருசம் வந்துட்டதால்,  கொலுப்படிச் சமாச்சாரம் இப்ப கொலுவறை சமாச்சாரமா மாறிப்போச்சு. உண்மையைச் சொன்னால் நிரந்தரக்கொலு!  போன வருசம், படிகள் கிடைச்ச முதலாண்டு.  கொலு முடிஞ்சதேன்னு  பொம்மைகளை எடுத்துட்டோம். ஆனால்  காலிப் படிக்கட்டுகளை, கராஜ்லேயோ, தோட்டத்தில் இருக்கும் ஷெட்லேயோ கொண்டு போய்ப் போட மனசு வரலை. உண்மையைச் சொன்னால் பொம்மைகளை விட அழகா அம்சமா இருப்பது இந்தப் படிக்கட்டுகளே:-)  அழுக்குப் படிஞ்சு வீணாகிடுமோன்னு ஒரு பயம் வேற.  சாமி அறையிலேயே இருக்கட்டுமுன்னு விட்டு வச்சோம்.

எதாவது ச்சும்மாக் கிடந்ததாக சரித்திரம்  உண்டா?   ஒன்னு ரெண்டு குட்டி பொம்மைகளை வச்சுருந்தேன்.  இந்தப் படிகள் கிடைக்குமுன்  எங்கேயாவது  அஞ்சடுக்கு,மூணடுக்குன்னு  ஷெல்ஃப்களைப் பார்த்தால் ஒருவேளை கொலுவுக்குச்   சரிப்படுமோன்னு  வாங்கி வந்து  வைக்கிறதுண்டு.  அதுவும் கொலு வரும்வரை  ச்சும்மாக் கிடக்குமோ?

இதுக்கிடையில் நம்மூரில் புதுசா ஒரு  LED lights மட்டுமேயான  ஒரு  கடை வந்துருச்சு. கடைக்காரர்  ஒரு இந்தியர்.  போய்ப் பார்த்துட்டு,  ரெண்டு  விளக்குகள்  வாங்கியாந்தோம்.  அஞ்சு மீட்டர் நீளமுள்ள ஸ்ட்ரிப் லைட்ஸ்  ஒன்னு கொலுப்படிக்கட்டுகளுக்காகன்னு  வாங்கியாந்தது,  அதுக்குச் சரிப்படலை:(  சாமிக்குக்கொடுத்துட்டேன்.  இன்னொன்னு க்றிஸ்டல் வகை.  ரிமோட் கண்ட்ரோலோடு இருக்கு.  பதினாலு வகை நிறங்களை மாற்றிமாற்றிக் காட்டும். நமக்கு விருப்பமுன்னா  நமக்குப் பிடிச்ச ஒரு நிறத்திலேயும்  எரியவிடலாம்.



கிறிஸ்டல் கனம் அதிகமா இருக்கேன்னு அதுக்கு  வேற மாதிரி  (சொந்தமா யோசித்து!) ஒரு ஐடியா செஞ்சேன்.  அதை நிறைவேற்றிக் கொடுத்தார் நம்ம கோபால். இப்ப அதை எங்கே வைக்கலாமுன்னு யோசனை. நம்ம ராஜலக்ஷ்மி (ரஜ்ஜூ) தான்  சரியான இடத்தைக் காமிச்சுக்கொடுத்தாள். என் செல்லம்!  அங்கே வச்சதும் படு பொருத்தமா அமைஞ்சு போச்சு.  'ஆசையே கூடாது'ன்னு சொன்னவரை அப்படியே விடமுடியலை பாருங்களேன்!  அத்தனைக்கும் ஆசைப்பட வச்சுட்டோம்ல:-)

இன்னொரு ஹோம் ஷோவில் புகையில்லா மெழுகுவத்தி கிடைச்சது.  இதுவும் நிறம் மாறும் வகையே!

இன்னொரு குழுவில், கொலு வைக்கும்போது  பல்லாங்குழி சோழிகளுடன், கோலாட்டக் குச்சிகள், அம்மானை ஆட  சின்ன உருண்டைக் கற்கள் இப்படி சில சமாச்சாரங்களைக் கட்டாயம் வைக்கணும் என்று சொல்லி இருந்தார்கள்.
அட! அப்படியா!  செஞ்சுருவொம்லெ:-) நம்மூட்டுக் கோலாட்டக் குச்சிகளுக்கும், பல்லாங்குழிக்கும்  மறுவாழ்வு  கிடைச்சது.


இந்தக் கொலுவுக்கு, கொலுவுக்குன்னே  நினைச்சு இப்ப ஏகப்பட்ட அலங்காரங்கள்  சேர்ந்துதான் போச்சு.  அதனால்....  இனி  வரும் கொலுக்களுக்குப் புதுசா அலங்காரங்கள் ஒன்னும் வாங்க வேணாமுன்னு  இந்த வருசம், (இப்போதைக்கு ) முடிவு செஞ்சுருக்கேன். (இதை வாசிக்கும் கோபால் மனம் மகிழட்டும்!)

போகட்டும், இப்பச் சொல்லுங்க.... அஞ்சஞ்சா..... மும்மூணா.... இப்படி இருந்தால் தப்பா?



சாமி அறை சின்னதா இருக்குன்னு இப்பத்  தோண ஆரம்பிச்சு இருக்கே... என்ன செய்யலாம்?


அனைவருக்கும் இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.