"இப்போ சமயபுரம் போறோம். தரிசனம் முடிச்சுட்டு வேறெங்கேயும் நிக்காம நேர சிங்காரச் சென்னைதான். வேறெங்கேயும் உனக்குப் போகவேணாம்தானே? " யப்பாடா.... என்ன முன்னெச்சரிக்கை. நான் வாயைத் திறக்குமுன் அடுத்த வரி வருது." நாளைக்கு ராத்திரி ஃப்ளைட் இருக்கு, ஞாபகம் இருக்குல்லே?"
அறையைக் காலி செஞ்சுக்கிட்டுக் கிளம்பும்போது மணி ஒரு ஒன்பது இருக்கும். கொள்ளிடம் பாலம் கடந்து போறோம். இருக்கும் இத்துனூண்டு தண்ணியில் துவைச்சுக் காயப்போட்டுக்கிட்டு இருக்காங்க 'ஈரங்கொல்லிகள்'! வண்ணமயம்தான் போங்க!
அரைமணி நேரப்பயணத்தில் சமயபுரம் வந்தாச்சு. அலங்கார வளைவுக்குள் நுழைஞ்சு போறோம். கொஞ்சம் தூரத்தில் தெப்பக்குளம்! நல்லா சுத்தமா இருக்கே!!! கோவிலை விட்டுக் கொஞ்சம் தள்ளி இருக்கு பாருங்க அதான் சுத்தமா இருக்குன்ற ரகசியம் புரிஞ்சது:-)
கலகலன்னு ரெண்டு பக்கமும் பூஜைப்பொருட்கள் விற்கும் தெருவுக்குள் போனால்.... (வழக்கம்போல) வண்டி இதுக்குமேல்போகாது. இங்கேயே நிறுத்தணுமுன்னு தடாலடியா சொல்லும் சிலர். காதுலே விழாதமாதிரி சீனிவாசன் போய்க்கிட்டே இருக்கார். கோவில் வாசலைத் தாண்டி இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தினார். இறங்கும்போதே கூட்டமா வந்து மொய்ச்சுக்கறாங்க வியாபாரிகள். கையில் நேர்த்திக்கடனுக்குரிய கண், முகம், கை காலுன்னு உடல் பாகங்கள் நிறைஞ்ச தட்டு.
கோவில் மண்டபம் நிறைய ரெண்டு பக்கமும் கடைகளே கடைகள். கடை வாசலுக்குக் கோலம் போட்டு வச்சுருக்காங்க. பெருக்கித்தள்ளின குப்பைகள் மண்டபம் முழுசும் பக்தர் காலடிகளில் ஒட்டிக்கிட்டு இங்கும் அங்குமாப்போகுது:( ஆரஞ்சும் மஞ்சளுமாத் தாலிக்கயிறு ஒரு கடை முழுசும். விதானத்துலே வரைஞ்சுருக்கும் சித்திரங்களை நின்னு ரசிக்க விடாமல் கடைக்காரர்கள் கூவி அழைக்கிறார்கள். நிக்கவே கூடாது போல:(
நல்ல நீண்ட மண்டபத்தின் பாதியில் நிக்கறாள் சுமி! பெயர் சுமித்ராவாம்! நல்ல அழகிதான்! கடமையே கண்ணாக, காசு வாங்கி ஆசி வழங்கிக்கிட்டு இருக்காள். காவாசிக்கூட்டம் இவளைச் சுத்திதான். மண்டபத்தின் கடைசிக்குப்போறோம்.
நல்ல கூட்டம், தரிசனத்துக்குக் காத்திருக்கு. ஸ்பெஷல்தரிசன வரிசைக்குள் நுழையறோம். டைம் ஈஸ் மணி! கம்பித்தடுப்புகளா நட்டு வச்சுருக்காங்க. கோவில் அர்த்த மண்டபமுன்னு நினைக்கிறேன். தேங்காய் உடைக்க ஒரு அமைப்பு. கோவில் பூஜாரி ஒருத்தர் நின்னு அர்ச்சனைத் தட்டுத் தேங்காய்களை உடைச்சுட்டு தட்டில் போடறார்.
அந்த ஏரியா முழுசும் தேங்காய்த் தண்ணீர் விழுந்து பாசி புடிச்சுக்கிடக்கு. வெறுங்காலை வச்சு அதைக் கடந்து போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன பயம். வழுக்........ சுத்திவர கல்தரை. ஒரு தேங்காய்நார் நடை விரிப்பு போட்டு வச்சுருக்கலாம். வரிசை வலமும் இடமுமா இருக்க நடுவில் நீண்ட இடம் முழுக்க உண்டியல்களே! சட்னு பார்த்தால் ஏர்லைன்ஸ் கேட்டரிங் தள்ளுவண்டி மாதிரியே இருக்கு! அதே பளபள ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்! ஒன்னு ரெண்டு இருந்தால் சரி. இதென்ன வரிசையா இத்தனை? காணிக்கை போட மறந்துடப் போறாங்களே மக்கள்ஸ்ன்னு நினைவூட்டுறாங்க போல!வலப்பக்கமா சிறப்பும் இடப்பக்கமா பொதுவுமா மெள்ள நகர்ந்து போறோம்.
பக்தர்களுக்கு உதவி வேண்டும் சமயம் டாண்னு வந்து காப்பாற்றும் தேவி என்பதால் சமயபுரம் மாரியாக இங்கே இருக்காள். முன்பொரு காலத்தில் மாரியம்மன் 'அண்ணன் 'வீட்டோட இருந்ததாகவும், இவளுக்கான தனிப்பட்ட பூஜைகளை அங்கே நிறைவேற்ற முடியாமல் இருந்ததாகவும், அதனால் கோபமாவே எப்போதும் இவள் இருந்ததாகவும், இவளைச் சமாதானப்படுத்த அப்போ இருந்த ஜீயர் கொடுத்த ஐடியாவின் படி இவளை இங்கே தனிக்கோவிலில் வச்சதாகவும் ஒரு கதை உலவிக்கிட்டு இருக்காம்.
நம்மூரில் கதைகளுக்கா பஞ்சம். இதோ இன்னொன்னு கேளுங்க.....தில்லிப்படைகளிடம் இருந்து மாரியம்மனின் உற்சவரைக் காப்பாற்ற தூக்கிக்கொண்டு போன சமயம் களைப்பு மிகுதியால் ஓரிடத்தில் இறக்கி வச்சுட்டு பக்கத்தில்ஓடும் கால்வாயில் இறங்கி கைகால்முகம் கழுவிட்டுத் திரும்ப வந்தால் சிலை மாயமாய் மறைஞ்சு போயிருக்கு. தேடிப்பார்த்தும் கிடைக்கலை. ரொம்ப காலம் கழிச்சு ரெண்டு சிறுவர்கள் கண்ணில் பட்டுருக்கு. சேதி தெரிஞ்ச ஊர்ப்பெரியவர்கள் வந்து சேரவும் சிலையை வேறு இடத்துக்குக் கொண்டுபோக உத்தரவாச்சு. யானை மேலே வச்சுக் கொண்டு போறாங்க. ஒரு இடம் கடக்கும்போது யானை நகர மறுக்கவே அங்கேயே அந்தச்சிலையை பிரதிஷ்டை செஞ்சதாகவும் அது ஆதி மாரியம்மன் கோவிலென்றும் சொல்றாங்க.
நதி மூலம் ரிஷி மூலம் மாதிரி இங்கே மாரி மூலமும் கேக்கப்டாது கேட்டோ!
எது எப்படியோ மாரியம்மன் கோவில் கொண்டு, மக்களுக்கு அருள் பாலிக்கிறாள். அதுதான் முக்கியம். இந்தக்கோவில் ஆதியில் நம்ம ரெங்கனின் நிர்வாகத்தில்தான் இருந்தது. அவன் ஒன்பது கோவில்களைக் கட்டிக் காப்பாத்தி வந்துருக்கான். நாம் முந்தி பார்த்த காட்டழகிய சிங்கர் கோவிலும் நம்ம ரெங்கனுடைய அரசாட்சியில்தான். 1984 ஆம் ஆண்டு முதல் சமயபுரம் கோவில் தனியாப் பிரிஞ்சு வந்து தனி ராஜாங்கம் செய்ஞ்சுக்கிட்டு இருக்கு. ஆனாலும் இந்த மாரி, ரெங்கனின் சகோதரியான மாஹாமாயாதேவி என்பதால் இன்றைக்கும் தைப்பூசம் தீர்த்தவாரி சமயம் உடன்பிறந்தாளுக்கு பட்டும் பூவும் தளிகையும் பொறந்த வீட்டு சீர் என்று அனுப்பி வைக்கிறான் நம்ம ரெங்கன்.
கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவர், குழந்தைக் கண்ணனை கோகுலத்தில் வச்சுட்டு யசோதையின் குழந்தையான மாயாவைக் கொண்டு வந்து இதுதான் எட்டாவது குழந்தைன்னு கம்சனிடம் சொன்ன கதை அநேகமா எல்லோருக்கும் தெரிஞ்சுதான் இருக்கும் இல்லையா? தில்லியில் கூட கல்காஜி கோவில் என்று ஒரு கோவிலுக்குப் போனேன். அது(வும்) மஹாமாயாவின் கோவில்தான். அப்போ அது தெரியாது எனக்கு. சக்திபீடக் கோவில் என்று நினைச்சேன். அதுக்கு வந்த பின்னூட்டங்களால்தான் தெளிவு கிட்டியது.
வரிசை நகர்வது போலவே தெரியலை. பயங்கர சூடு வேற! இத்தனைக்கும் காலை பத்து மணிதான் ஆகி இருக்கு. சூடுன்னதும் ஞாபகம் வருது. சிவன் மன்மதனை எரிச்சார் பாருங்க அந்த சூடு லோகங்கள் முழுசும் பரவி தேவர்களும் கூட சூடு தாங்க முடியாமல் சீதளா தேவியிடம் அபயம் தேடி ஓடி வர்றாங்க. எல்லா சூட்டையும் தானே உள்வாங்கிக்கிட்டாளாம் அம்மன். அதனால் அவள் கருவறையில் எப்போதும் ஈரம் தேங்கிக் குளிர்ச்சியா இருக்கும்படியா அமைச்சுருக்காங்க. காலடியில் தண்ணீர் ஸ்பரிசம் நமக்கும் கிடைக்குது.
ஒரு வழியா கருவறைக்குச் சமீபம் போனது வரிசை. உள்ளே சிவாச்சாரியார்கள் பூஜை செய்யறாங்க. அம்மனின் முகம் சாந்தமா இருக்கு. உக்ர ரூபத்தின் கோரைப்பற்களைப் பிடுங்கி இவளைச் சாந்தப்படுத்திட்டாங்களாம். மூத்த பிள்ளையைக் கூட்டி வந்து கருவறைக்கு ரெண்டு பக்கமும் வச்சவுடன் கோபம் மறைஞ்சே போயிருக்கு! அமைதியான முகத்துடன், எட்டுக் கைகளுடன் இடது காலை மடிச்சு, வலதுகாலைத் தொங்கப்போட்டு அரக்கர்களின் தலையில் வைத்தபடி உக்கார்ந்து இருக்காள். முன்னொரு காலம் நாங்க இங்கே வந்தப்ப அம்மன் காதில் அழகான நட்சத்திர வடிவக் கம்மல் பார்த்துருக்கேன். பளிச்ன்னு ஸ்டார் ஜொலிக்கும்! அதைத் தேடிய என் கண்கள் ஏமாந்து போச்சு. இப்ப வேறென்னமோ நகை போட்டு வச்சுருக்காங்க:( போகட்டும் புது மோஸ்தர் நகை அவளுக்கும்தானே வேணும்!
வலையில் சுட்ட படம்.
மாரியம்மனை கும்பிட்டு விட்டு பக்கவாட்டு கம்பித்தடுப்பு வழியா வெளியே வந்தோம். இப்ப அதிக அளவில் கூட்டம் வருது . என் முன்னொரு காலப்பயணத்தில் நேரா உள்ளே வந்து அம்மனை வெகு கிட்டக்கப் பார்த்த நினைவு. கோவிலுக்கு வயசு ஆயிரத்துக்கும் மேலேன்னுசொல்றாங்க. ஆனால்..... தில்லிப்படைகள் காலக் கட்டம் பார்த்தால்.... அப்படித் தோணலை. போகட்டும் சாமி வயசையே கோவிலுக்குச் சொல்வாங்களா இருக்கும். ஆனா....சாமிக்கு வயசு எவ்ளோன்னு யாரு கணக்குப் போடமுடியும்?
காலையில் அஞ்சு மணியில் இருந்து இரவு ஒன்பது மணிவரை கொஞ்சம்கூட அசராமல் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் அம்மா. எனக்கு இது ரொம்பப் பிடிச்சுருக்கு. நம்மையெல்லாம் காப்பதைவிட அவளுக்கு வேறு என்ன வேலை இருக்காம்? கவர்மெண்ட் ஆஃபீஸ் எம்ப்ளாயியா என்ன? டாண் டாண்ணு காபி ப்ரேக், லஞ்ச் ப்ரேக்ன்னு தவறாமல் எடுத்துக்கிட்டு சாயங்காலம் அஞ்சானதும் கிளம்பிப்போக? பொதுவா எல்லாக் கோவில்களுமே இப்படி பகல் பொழுது முழுசும் திறந்திருந்தால்தானே மக்களுக்கு நல்லது! அர்ச்சகர்களுக்கு ஓய்வு வேணுமுன்னா ஷிஃப்ட் ட்யூட்டி போட்டுக்கலாம்தானே?
தேர்த்திருவிழா,தெப்பக்குளத்திருவிழான்னு விழாக்கள் பல நடந்தாலும் பூச்சொரிதல் விழா ஒன்னு சிறப்பா நடக்குதாம். அப்ப அம்மனே மக்களுக்காக விரதம் இருக்காளாம். கேக்கவே ஆசையா இருக்கு. ஒரு திருவிழா வந்து பார்த்தால் நல்லா இருக்கும். ஆனால் கூட்டத்தை நினைச்சாலே பகீர்:(
மாரியம்மன் கோவில்களில் வழக்கமா மக்கள் நேர்ந்துக்கும் பிரார்த்தனைகள் எல்லாம் இங்கேயும் நடக்குது. குழந்தை வரம் வேண்டும் மக்கள் பிரார்த்தனை நிறைவேற்ற கரும்புத்தொட்டிலில் குழந்தையைக் கிடத்திக் கோவிலைச் சுற்றி வந்து கும்பிடறாங்க. அக்கம்பக்கம் பதினெட்டுப்பட்டிக்கும் ஆத்தாதான் குலதெய்வம்!
இவ்ளோ புகழ் பெற்ற கோவிலை இன்னும் சுத்தமா வச்சுருக்கலாம். ஆனால் எங்கே:(
அசுத்தம் போதாதுன்னு பிச்சைக்காரர்கள் தொல்லையும் அதிகமா இருக்கு. அதிலும் சின்னக்குழந்தைகள் கையேந்தி நிற்பதைப்பார்த்தால் ..........ப்ச். என்னவோ போங்க:( ஒருத்தருக்கு கொடுத்தவுடன் ஒரு படையே திரண்டு ஓடி வருது:(
வண்டியைத் திருப்பி சென்னைக்குப்போகும் ஹைவேக்குக் கொண்டுவந்துட்டார் சீனிவாசன். பரவாயில்லை ஒன்னரை மணி நேரத்தில் தரிசனம் முடிச்சுட்டோம். ஆனால் கோவிலைச் சுத்திப் பார்க்கலை. எல்லா இடத்திலும் கம்பித்தடுப்பு, தூண்களைச் சுற்றிக் கும்பல் கும்பலா மக்கள்!
டோல்ரோடு. அங்கங்கே காசு கட்டிட்டுப் பயணம் தொடர்கிறோம். எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு இடத்தில் கட்டிட்டுப் போகும் வசதி ஏன் வைக்கலை? இந்த அழகிலே பாக்கிச் சில்லறை கொடுக்கவே மாட்டேங்கறாங்க:( முண்டியம்பாக்கம், திண்டிவனம் எல்லாம் கடந்து ஆர்யாஸ் கார்டன் என்ற ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடு. பரோட்டாதான். சுமாரா இருந்துச்சு. ஓய்வறையும் சுமார் ரகம். அதாவது இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கணும்!
இப்போ பகல் ஒன்னரை மணி ஆச்சு. கிளம்பினோம்.
கொஞ்ச தூரத்தில் ஒல்லியா ஒரு ஹனுமனைப் பார்த்தேன். ஒரு சின்னக்குன்றின் மேல் ஒரு கோவில்கண்ணில் பட்டது. அப்புறம் இன்னும் கொஞ்ச தூரத்தில் தவம் செய்யும்சிவன். ஏதோ ஆஸ்ரமமாம்.
புது ஹைவே தரமா இருக்குன்னு வண்டி பறக்குது. நின்னு விசாரிக்கமுடியாதபடி ஒரு வேகம். மேல்மருவத்தூரைக் கடந்தோம். ஊரே கலகலன்னு இருக்கு. மதுராந்தகம் தாண்டும்போது... 'ராமா.... உன்னைப்பார்க்க இன்னும் வேளை வரலை'னு முனகினேன். கோவில் சாத்தி இருக்கும் நேரம் இப்போ:( எத்தனை முறை இந்தப்பக்கம் போய் வந்திருப்போம்! ஹூம்....
தாம்பரம், தி. நகர் னு அறைக்கு வந்துசேர்ந்தோம். பகல் மணி மூணரை! நல்லவேளை மாலைநேர ட்ராஃபிக்கில் மாட்டிக்கலை:-)
எங்கே மகளைக் காணோமுன்னு ஒரு குரல்! எனக்கொரு சர்ப்ரைஸ் கிடைச்சது அங்கே!
தொடரும்................:-)

