இன்னும் 260 பேரைக் காணவில்லை. நிலநடுக்கம் மனநடுக்கத்தைக் கொண்டாந்து போட்டுருக்கு. செவ்வாய்க் கிழமை பகல் 12.54 ( நியூஸி டைம்) ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3 MAGNITUDE. வேலைநாள்.
நகரமையத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம். இப்போ கோடைகாலம் என்றபடியால் பயணிகள் எண்ணிக்கை வழக்கம்போல் கூடுதல். சம்பவம் நடந்தநாள் மகள், தன்னுடைய நெருங்கிய தோழியின் தாத்தாவின் சவ அடக்கத்துக்குப் போயிருக்கிறாள். ஃப்யூனரல் பார்லரில் இருந்து வெளியேறி வீட்டுக்குள் நுழைந்த போது நிலம் நடுங்கி இருக்கு.
உடனே அப்பா அம்மாவுக்கு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பி இருக்காள். அது என்னவோ நமக்குக் கிடைக்கலை. நாங்க சிங்கப்பூரில் இருந்தோம் அந்த சமயம். எழுத்தாளர் தோழி ஜெயந்தி சங்கர் நம்மைப் பார்க்க அறைக்கு வந்துருந்தாங்க. மடிக்கணினியை மூடி எடுத்து வைக்கப் போகுமுன் வழக்கம் போல் நியூஸி நியூஸ் ஒரு வினாடி பார்க்கும் பழக்கம் உண்டு. அதிர்ச்சியான சேதி! உடனே மகளுக்குத் தொலைபேசினால்...... அவள் நலம். குடும்ப நலன் தெரிஞ்சதும் நண்பர்கள் நலனைப் பற்றிய கவலை.
யாரையும் தொடர்பு கொள்ள முடியலை. ஃபேஸ்புக்லே போய்ப் பார்க்கலாமுன்னா..... உன் பெயரில் யாரோ லாகின் செய்ய முயற்சிக்கிறாங்கன்னு எங்கிட்டேயே சொல்லுது. 'அது நாந்தாய்யா'ன்னு விளக்கி நண்பர்களுக்கு சேதி விட்டேன்.
பஸ் பயணிகள் யாரும் பிழைக்கலை:(
ஆஸ்ட்ராலியன் தொலைக்காட்சியில் விஸ்தாரமான தகவல் கிடைச்சது. அதுக்குள்ளே 65 மரணம். 300 மிஸ்ஸிங்:(
நிறைய நட்புகள் நம்ம வீட்டுக்கு தொலைபேச முயன்று, பதில் இல்லைன்னு கவலைப்பட்டாங்களாம். நாம்தான் ஊரில் இல்லையே!
கிறைஸ்ட்சர்ச் கதீட்ரல் மணிக்கூண்டு இடிஞ்சு 22 பேர் மரணம். பொதுவாக மேலே ஏறிப்போய்ப் பார்க்கப் பயணிகள் விரும்புவாங்க. பார்த்துவிட்டுத் திரும்பினால் இத்தனை படிகள் ஏறிப்போய்ப் பார்த்தோமுன்னு ஒரு சான்றிதழ் கொடுப்பாங்க. ரொம்ப குறுகலான சுழற்படிகள். நல்ல கருங்கல் கட்டிடம்.
உள்ளூர் தொலைகாட்சி CTV கட்டிடம் முழுசுமா விழுந்து நொறுங்கிப் போயிருச்சு. இன்னொரு நாலுமாடிக் கட்டிடம் நொறுங்கியாச்சு. நியூஸிக்கு ஆங்கிலம் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் முக்கியமாக ஜப்பான் நாட்டு மாணவர்களின் பள்ளிக்கூடம் இந்தக் கட்டிடத்தில் செயல்படுது. இது இல்லாமல் நாலைஞ்சு வெவ்வேறு அலுவலகங்கள் இதில் உண்டு.
அடைமழை வேறு வந்துருச்சுன்னு மீட்புப்பணிகள் தாமதமாகி இருக்கு. நகரில் முக்கால் வாசிக்கு மேல் மின்சாரமோ, தண்ணீரோ, இல்லை. கடற்கரைக்கு அருகில் இருக்கும் குன்றுகளின் மேல் உள்ள வீடுகள் பலவும் இடிந்து விழுந்துவிட்டன. அந்த ஏரியாவில் மட்டும் 12 தெருக்களைக் காலி செய்யச்சொல்லி மக்களை வேறு இடத்தில் பாதுகாப்பாக வச்சுருக்காங்க. பல இடங்களில் சாலைகள் எல்லாம் பழுதாகிப் போச்சு. பல சாலைகளில் நிலத்தடி நீர் நிறைஞ்சுப் போய்க்கிடக்காம்.
சாலையின் நிலை
ஸ்டேட் எமர்ஜென்ஸி டிக்ளேர் செஞ்சுருக்காங்க. பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடியாச்சு. காயம் அடைஞ்சவர்கள் பொது மருத்துவர்களை அணுகி மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம். இந்த GP சர்வீஸுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று அறிவிச்சுருக்கு அரசு.
சேதி தெரிஞ்சதும் ஆஸ்ட்ராலியாவில் இருந்து மீட்புப் பணிகளுக்கான நிபுணர்கள் வந்து சேர்ந்துட்டாங்க.
அஞ்சு மாசத்துக்கு முன்னேதான் (செப்டம்பர் 4)ஒரு நிலநடுக்கம் 7.1 Magnitude ஏற்பட்டது. அது பின்னிரவு என்றதால் உயிர்ச்சேதம் ஒன்னுமில்லை. ஒரே ஒருத்தருக்குத்தான் அடிபட்டது. அதுவும் அவர் வீட்டு புகைபோக்கியின் மூடி கழண்டு விழுந்ததால்.
தேவாலயத்தின் மணிக்கூண்டுக்குள் புதையுண்டவர்கள் உடல்களை மீட்கும் பணி இப்போ கொஞ்சநேரமுன்புதான் தொடங்கி இருக்காங்க.
தேவாலயம் அன்றும் இன்றும்
செவ்வாய் பகல் முதல் கிடைத்த உடல்களை தாற்காலிகமாக ஒரு இடத்தில் வச்சுருக்காங்க. உடல்களை அடையாளம் காணும் பணியும் ஆரம்பிச்சு இருக்கு. இதுவரை 113 சடலங்கள்.
ஒவ்வொருமுறையும் புதுச்சேதிகளைத் தெரிஞ்சுக்கும்போது பகீர்னு இருக்கு. ஒரு சில செய்தித்தளங்கள் ஒவ்வொரு பத்து நிமிசத்துக்கும் புதுச்செய்திகளைச் சேர்த்துக்கிட்டே இருக்காங்க.
நகரத்தைச் சீரமைக்கும் பணி நெடுநாட்களுக்கு நடக்கும். அதற்கான திட்டங்கள் ஒரு பக்கம் தயாராகுது.
ஊரைவிட்டுப் போய்விட விரும்பும் மக்கள் ஒரு பக்கம் கிளம்பிக்கொண்டே இருக்கிறார்களாம். விமானநிலையம் படு நெரிசலா இருக்காம்.
டைம்பால் ஸ்டேஷன்
தகவல் தெரிந்தவுடன் தனி மடலிலும் பின்னூட்டங்களின் மூலமும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மனசளவில் நொறுங்கிப் போயிருக்கும் எங்கூர் மக்களுக்கு உங்கள் பிரார்த்தனைகளின் தேவை அதிகமா இருக்கு. உங்கள் அன்பையும் ஆதரவையும் எங்களுக்கான பிரார்த்தனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.
என்றும் அன்புடன்
துளசி ( கிறைஸ்சர்ச் நகர மக்கள் சார்பில்)
Showing posts with label அனுபவம் Christchurch NZ Earth Quake. Show all posts
Showing posts with label அனுபவம் Christchurch NZ Earth Quake. Show all posts
Friday, February 25, 2011
எங்கூரின் இன்றைய நிலை:(
Posted by
துளசி கோபால்
at
2/25/2011 06:38:00 PM
44
comments
Subscribe to:
Posts (Atom)
