வண்டிக்குள் ஏறி உக்கார்ந்ததும் ட்ரைவருக்கான மொதக் கேள்வி.... கந்தசாமி கோவில் தெரியுமா? நல்லாத் தெரியுங்க. அப்ப காளிகாம்பாள் கோவில்? அதுவும் தெரியுங்க. சரி கிளம்புங்க. அண்ணாசாலையைத் தொட்டதும், பாரீஸ் போய் போகலாமா? இல்லை நுங்கம்பாக்கம்..... எதுலே சீக்கிரமா போகமுடியுமோ அதுலே போங்க. 'நம்பினோர் கெடுவார் ' என்ற புதுமொழிக்கேற்ப.............
சட்னு வண்டி நுங்கம்பாக்கம் கடந்து போச்சு. இன்னொரு ஆட்டோகாரரிடம் வழியைக்கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டார் ட்ரைவர். அபிராமி மெகா மால் பார்த்ததும், 'ஏன் புரிசைவாக்கம்'னு நினைச்சாலும், கோபால்கிட்டே கங்காதீஸ்வரர் கோவில் அதுதான்னு கை காமிச்சேன். பெருசா குளம் ஒன்னு இருக்குமேன்னதும் 'இந்தப்பக்கம் இருக்கும்மா'ன்றார் ட்ரைவர். அவர் காதுகள் பின்னாலயே(தான்) இருக்குன்றதைக் கவனிக்கலை நான்:(
பதிவுலக நண்பர் இருக்கும் தெருவைக் கடக்கும்போது அவர் நினைவு. சூளை, வேப்பேரின்னு போய்க்கிட்டே இருக்கோம். ஒரு இடத்தில் பிரியும் பாதைக்கு அலங்கார வாசல் மாதிரி ரயில்பெட்டி ஒன்னு குறுக்கே உசரத்துலே நிக்குது. ஐசிஎஃப் க்கு போற பாதையா? ' பேஷ் பேஷ். வாட் அ நீட் ஐடியா'ன்னு பாராட்டறேன். வால்டாக்ஸ் ரோடு முழுசும் கடந்தாச்சு. மிண்ட் ஐப் பார்த்ததும் 'காசடிக்கிற இடம். இந்தியாவில் நாலு இடங்களில் காசு அடிக்கிறாங்க. அதுலே இது ஒன்னு. எங்க சித்தப்பா ஒருத்தர் இங்கே வேலை செஞ்சாரு'ன்னு குடும்பக்கதைகளை கோபாலுக்குச் சொல்லிக்கிட்டே.... போறோம் போறோம் போய்க்கிட்டே இருக்கோம்.சர்ர்ரக்ன்னு வண்டி நின்ன இடம் ஒரு தெருமுக்குக் கோவில். மஞ்சப்பெயிண்ட் அடிச்சு ,அங்காள பரமேஸ்வரின்னு எழுதிவச்சுருக்கு. ட்ரைவர் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகையுடன் 'இதாங்க நீங்க சொன்ன காளி கோவில்'.
'இருக்கவே இருக்காது. பக்கத்தில் நின்ன பெரியவரைக் கேளுங்க'.
' யோவ்.... அது எம்மாம் பெரிய கோவில்! இங்கெ வந்து நிக்குறே? இந்தப் பக்கம் போக முடியாது......பீச்சாங்கைப்பக்கம் திரும்பி நேராப்போ' பெரியவர் வாக்கு.
சின்னத் திருட்டு முழியுடன். 'நீங்க மிண்ட்ன்னு சொன்னீங்க அதான் இந்தக் கோவில்'ன்னு நினைச்சுக்கிட்டேன்.
"காளிகாம்பாள் கோவில் தெரியுமான்னு முதல்லே கேட்டதுக்கு நல்லாத் தெரியுமுன்னு சொன்னீங்க?"
"இல்லீங்க நீங்க மிண்ட்ன்னு......."
கோபம் எட்டிப்பார்க்குது. பல்லைக்கடி. பல்லைக்கடி
"மிண்ட்ன்னு சொன்னீங்களேன்னுதான் இந்தக்கோவிலுக்கு கொண்டுபோனேன்......"
அட ராவணா............ பிபி எகுறுதே..........
ஸ்டான்லி .ஆஸ்பத்திரி தாண்டறோம். 'இங்கேதான் எங்க அம்மா' ன்னு ஆரம்பிச்சவ சட்னு வாயை மூடிக்கிட்டேன். இந்த ஆள் வேற, காதை நம்மபக்கம் வச்சுக்கிட்டு சடார்னு ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டுட்டா?
துறைமுகத்தை மேம்பாலத்தில் இருந்து பார்த்துக்கிட்டே பீச் ஸ்டேஷனைக் கடந்து பாரிமுனை தொட்டு கோட்டை ஸ்டேஷனைக் கடந்து பல்லாஸ்பத்திரி பக்கம் போறோம். இந்த ஆள் வழியைக் கோட்டை விட்டுருக்கார். இடப்பக்கம் போனால் செண்ட்ரல். வலப்பக்கம்தான் போகணும். ஆனால் நோ எண்ட்ரி போர்டு. ஒரு யூ டர்ன் எடுத்து இன்னும் சில இடங்களில் திரும்பி கரெக்டா அதே இடத்துக்கு வந்தார். அதே நோ எண்ட்ரி.
குமுறும் எரிமலை லேசாய்......வாய் திறக்குதோ.........
"ஏன்ப்பா.... தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லக்கூடாதா? இங்கே நிக்கறவர்கிட்டே வழி கேட்கலாமுல்லே?"
அந்தப்பக்கம் வந்துக்கிட்டு இருந்த ஒரு பெண்மணியிடம் 'யக்கா இந்த கன்சாமி கொய்லு எங்கெருக்கு?'
பெண்மணி கை காட்டிய திக்கில் 'நோ எண்ட்ரி' யைக் கொஞ்சம்கூடக் கண்டுக்காம குறுக்குசால் ஓட்டிப்போய் அந்தம்மா சொன்ன சந்தைவிட்டு முன்னாடி இருந்ததில் திரும்பினதும்......... கால்வைக்க இடமில்லாமல் இரும்புச்சாமான்கள் விற்கும் கடைகள்.. மெள்ளமெள்ள முன்னேறுனதில் இரண்டுபக்கமும் இரும்போட பித்தளையும் இருக்கு. திருவாச்சிகள் பல அளவுகளில். நாம கோவில் கட்டும்போது இங்கே வந்து வாங்கிக்கணும்.இதுக்குமேல் வண்டி போக துளியும் வழி இல்லைன்னு ஆனதும் வலப்பக்கச்சந்தில் திரும்பினார். ' நிப்பாட்டுங்க. நாங்க இறங்கிப்போய் பார்க்கிறோம். நீங்க வண்டியை எங்கியாவது (?) பார்க் பண்ணிட்டு இருங்க'.
சந்துமுனையில் விசாரிச்சால் 'தோ'ன்னு கையை உசரத்தூக்கிக் காமிச்சார். அட! ஆமாம். கட்டிடங்களுக்கிடையில் எட்டிப்பார்க்கும் கோபுரம்.
அம்மம்மாவுக்கு வருசத்துக்கொரு தரம் இந்தப் பக்கம் ஒன்னு ரெண்டு விஸிட் இருக்கும். டவுனுக்குப் போகணுமுன்னு சொன்னதும் அது பெரிய ஊர்ப்பயணமா இருக்கும் எங்களுக்கெல்லாம். நாலு பேராப்போய் வரணும் என்பது ஒரு கணக்கு, மூணு ஆவாதுல்லே? நான் அம்மம்மா வீட்டில் இருந்தால் அந்த நாலில் ஒன்னு நான். மற்ற சித்திகள் மாமாக்கள் வீட்டுப் பிரதிநிதியாய் யாராவது ஒரு பொடியன். அதானே....ஆம்பளைத் துணை இல்லாம அம்மாந்தூரம் போறதா? அம்மம்மா கூடவே வசிக்கும் மூணாம் சித்தி ரெகுலர் துணை. நகைநட்டுன்னா மட்டும் ஓசைப்படாமக் காதும்காதும் வச்சதுமாதிரி அம்மம்மாவும் சித்தியும் கிளம்பிருவாங்க. சைனா பஜார்லே புது வீகம்ஸீஸ் கடை திறந்துருந்த சமயம். அங்கெ போய் சித்திக்கு ரவக் கம்மல் வாங்குன சரித்திர நிகழ்வு ரொம்ப நாள் கழிச்சுதான் எனக்குத் தெரிஞ்சதுன்னா பாருங்களேன்!
ரயில் வண்டி பிடிச்சு செண்ட்ரல் வந்து இறங்கி குதிரை வண்டி வச்சுக்குவோம். வீட்டுக்கு வேண்டிய இரும்பு வாணலிகள். சட்டுவம், தோசைக்கல்லு இப்படிப்பட்ட பர்ச்சேஸ்தான் முக்காலும். பெரிய குடும்பம் உள்ளூர்லேயே அங்கங்கே இருந்தாலும் எல்லாருக்கும் இரும்பு பர்ச்சேஸ் அம்மம்மாதான் செஞ்சு தருவாங்க. அப்போ இந்தப்பக்கம் வரும்போது கோவில் கோபுரம் பளிச்சுன்னு தனியாத் தெரியும். இவ்வளவு கூட்டமாக் கடைகளும் இல்லை. ஆனாலும் கோவிலுக்குள்ளே எல்லாம் கொண்டுபோக மாட்டாங்க. வந்த வேலையை முடிச்சுக்கிட்டு அதே குதிரைவண்டியில் நேரா அம்பீஸ் கஃபே. நெய் தோசை. பெரியங்களுக்கு காஃபி. சின்னதுகளுக்கு கூல்ட்ரிங். நான் எப்பவும் ரோஸ் மில்க்தான். இன்னொன்னு யாரா இருந்தாலும் எப்பவும் என்னைப் பார்த்தே காப்பி அடிக்கும். குதிரைவண்டி, திரும்பி செண்ட்ரல் கொணாந்து விட்டுறணும். அப்படித்தான் கூலி பேசிக்குவாங்க.
சின்னவளா இருந்தப்பப் பெருசாத் தெரிஞ்ச கோவில் இப்போ சட்னு மினியேச்சர் ஆனமாதிரி இருக்கு. ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் பக்கத்தில் மொய்ச்சுக்கிட்டு(!) இருக்கும் இரும்புக்கடைகளோடு இன்னொரு இரும்புக்கடை போல கம்பி அடைப்புகள்.வழக்கம்போல் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. இருந்துட்டாலும்.......... அடைசலான இருட்டில் என்னத்தைன்னு எடுப்பதாம்:( கோவிலைச்சுத்தி நெருக்கமா உசரமா இருக்கும் கட்டிடங்கள் எல்லாம் சேர்ந்து கோவிலுக்குள் வெளிச்சம் வராமப் பண்ணி இருக்கு.
பூட்டிடப்போறாங்களேன்னு அவசர அவசரமா உள்ளே நுழைஞ்சேன். பிரகாரத்தில் வலப்பக்கம் போனதும் மண்டபத்துலே ஒரு பக்கம் ரெண்டு மாடுகளைக் கட்டி வச்சுருக்காங்க. தரையெல்லாம் நசநசன்னு கோமியம். எதிர்ப்பக்க மூலையில் நாகஸ்வரம் தவில்காரர்கள் பிராக்டீஸ் செய்யறாங்க போல.... ஒரே ப்பீப்பீஈஈஈ டும்டும். ட்யூனிங் நடக்குது. முத்துக்குமரன் தன் தேவியருடன் உற்சவரா நிற்கும் ஒரு சந்நிதி, பூக்களும் மாலைகளுமா அலங்காரம் பிரமாதம். குருக்கள் வாங்கன்னு கூப்பிட்டு தீபாரதனை காமிச்சார்.
வலத்தைத் தொடர்ந்ததில் மூலவர் நிற்கும் கருவறை மண்டபம். நிக்கறார். அதுவும் மேடையோ, பீடமோ ஒன்னுமில்லாமல் ச்சும்மா தரையில். நடந்து போய்க்கிட்டு இருக்கும்போதே என்னவோ தோணி அப்படியே நின்னுட்டாராம். அவருக்கு இரண்டு பக்கமும் தனித்தனிச் சந்நிதிகளில் தெய்வானையும் வள்ளியும். கிழக்குப் பார்த்த சந்நிதி. ஆனால் கோவிலுக்குள் நாம் நுழையும் வாசல் வடக்கு பார்த்திருக்கு
பிரகாரம் ஒன்னே ஒன்னுதானான்னு தெரியலை. குளத்துக்குப்போகும் வழியில் கட்டைகளைப்போட்டு என்னவோ மரவேலைகள் நடக்குது.
விசாரித்தவரை கோவிலின் வயசு யாருக்கும் சரியாத் தெரியலை. ஐநூறு, ஆயிரமுன்னு சொல்றாங்க. கோபுரம் பலமுறை புதுப்பிக்கப்பட்டு இருக்கணும். குமரகுருபரர், பாம்பன் ஸ்வாமிகள் எல்லாரும் வந்து தரிசனம் செஞ்சு பாடி வச்சுருக்காங்க.
சென்னைக்கு வயசு முன்னூத்துச்சொச்சம் என்ற கணக்கில் ஆயிரம் வருசக்கோவிலா இருந்தால் பெருசுபெருசா கூடுதலா ரெண்டு மூணு பிரகாரங்கள் இருந்துருக்காதோ? இடத்துக்கு என்ன தட்டுப்பாடு அந்தக் காலத்தில்? இல்லே........ நகரம் ஆனதும் கோவிலுக்கான இடத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுட்டாங்களா?
அங்கே இருந்து பேசிக்கிட்டு இருந்த பூஜாரிகள் (சிவாச்சாரியார்கள்?)கிட்டே காளிகாம்பாள் கோவில் எங்கே இருக்குன்னதும், நேராத் தம்புச்செட்டித் தெருவுக்குள்ளே போயிருங்கோ. கடைசியில் வந்துரும். இன்னும் கோவில் பூட்டி இருக்கமாட்டாங்க. சீக்கிரமாப் போனால் தரிசனம் கிடைச்சுரும். வண்டி இருக்கா'ன்னார். இருக்குன்னு வெளியில் ஓடி வந்தோம்.
நம்ம வண்டி எங்கே போய் நிக்குதோன்னு முழிச்சு நின்னு நாம் இறங்குன இடத்துக்குப்போய் தேடி, செல்லடிச்சா, பக்கத்துத் திருப்பத்துலே கார் பார்க்கு ஒன்னுலே இருந்து வண்டியை எடுக்கறார் ட்ரைவர். பெரிய அகலமான தெருவா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே அங்கே நின்ன ரெண்டு பேர்கிட்டே 'பாரீஸ் கார்னர் எந்தப் பக்கமு'ன்னு கேட்டேன். 'இதே ரோடுதான் நேராப் போங்க'ன்றார்.
கொஞ்ச தூரத்துலே பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் கண்ணில் பட்டது. அடராமா............ நாம் ராட்டன் பஸார் வழியாவா வந்துக்கிட்டு இருக்கோம்? வலப்பக்கம் திரும்பிப்போங்கன்னு ஹைகோர்ட் நோக்கிப் போறோம்.
இந்த சமயத்துலே நம்ம ட்ரைவருக்கு வேண்டாத ஒரு சந்தேகம் முளைச்சுருக்கு. போக்குவரத்து நெரிசலில் வண்டி நிக்கும்போது.... பக்கத்தில் மோட்டர்சைக்கிளில் இருந்தவங்ககிட்டே 'தம்புச்செட்டித் தெரு எங்கே'ன்னு கேட்க 'இன்னும் நாலு தெரு கடந்தா லெஃப்ட்லே வருமு' ன்னு பதில். ' இவன் சொல்லி நானென்ன கேக்கறது?'ன்னு தோணுச்சோ என்னமோ அடுத்த லெஃப்டுலே நுழைஞ்சுட்டார். அதுவும் சரியான கீக்கிடமா உள்ள தெருவில். அங்கே நின்னுக்கிட்டு இருந்த சின்னப்பையன்கள்கிட்டே தம்புச்செட்டியான்னு விசாரணை வேற! அந்தப் பொடியன்களும் பாதி சரின்றாப்பல தலையை ஆட்டுனாங்க. அந்த சரி...'செட்டி'க்கு! கடையில் இருந்த பெயர்பலகைகளில் கண்ணு நட்டுருந்த நான் இது கொண்டிச்செட்டின்னு அப்புறமாக் கண்டுபிடிச்சேன்.
மெயின் சாலையில் இருந்து பிரியும் எந்தத் தெருக்களுக்கும் பெயர்பலகைகளோ விவரங்களோ இல்லை. தப்பித்தவறி மாநரகாட்சி (எழுத்துப்பிழை இல்லை) வைக்கும் தெருப்பெயர் கல்லில், ஊருலே இருக்கும் எல்லா விளம்பர நோட்டீஸையும் ஒட்டி தெருப்பெயர்களை உள்ளே பத்திரமா ஒழிச்சு (எழுத்துப்பிழை இல்லை) வச்சுருக்காங்க.
கொஞ்சம் அடங்குன ரத்தக்கொதிப்பு திரும்ப ஏற ஆரம்பிச்சுருச்சு. கோவில் பூட்டிருவாங்களே...... இந்தத் தெருக்களில் எல்லாம் உள்ளே போயிட்டோமுன்னா அவ்ளோதான். திரும்பி வர நோ ச்சான்ஸ். போற போக்கில் போய் கிடைச்ச சந்தில் திரும்பி .......'இது மூக்கர் நல்லமுத்துத் தெரு............இன்னும் நாலு இடத்தில் நகரமுடியாமல் நின்னு இன்னும் நாலுபேரைக்கேட்டு தம்புச்செட்டித் தெருவில் புகுந்து கோவிலுக்கு முன்னால் வந்தோம். காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம் என்ற பெயரோடு அழகா சின்னதா ஒரு அஞ்சுநிலைக் கோபுரம். வாசல் திறந்து இருக்கு. ஓடினால் சந்நிதி மூடி இருக்கு. திரை போட்டு வச்ச மூலவர், முன்மண்டபக் கம்பிக்கிராதி வழியா வலக்கையை மட்டும் காமிச்சார், .
பிரகாரம் இங்கே ஒன்னே ஒன்னுதான். சுத்திவந்தோம். ஒரு பிரகாரத்தில் குட்டிக்குட்டியா நிறைய சந்நிதிகள். பிள்ளையாருக்கும் முருகருக்கும் கொஞ்சம் பெருசா சந்நிதிகள். விஸ்வகர்மாவுக்கும் ஒரு சந்நிதி இருக்கு. இந்தக் கோவிலையே விஸ்வகர்மா இனத்தினர் சேர்ந்து கட்டுனதாகச் சொல்றாங்க. கோவிலுக்கு வயசு நானூத்திச் சொச்சமாம்.
விஸ்வகர்மாவுக்கு அன்னபட்சி வாகனம் அவர் காலருகில் நிக்குது.. இங்கே வட இந்தியாவில் அநேக கோவில்களில் விஸ்வகர்மாவுக்குத் தனிச்சந்நிதிகள் இருப்பதைக் கவனிச்சுருக்கேன். அதே அன்ன வாகனம்தான். முதலில் வெண்தாடிவச்ச வயசான பெரியவரின் சிற்பங்களையும் படங்களையும் பார்த்து பிரம்மாவாத்தான் இருக்கணும் என்று நினைச்சதுண்டு. ப்ரம்மான்னா கிள்ளுன தலையைக் கணக்கில் எடுக்கலைன்னாலும் பாக்கி மூணு இருக்கணுமே.........இந்தக் காளிகாம்பாள் கோவில் கோபுரவாசலில் 'ஸ்ரீ மத் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ'னு இருக்கே............ அப்ப இந்த விஸ்வகர்மாதான் பிரம்மனோ? ரெண்டு பேருக்குமே படைக்கும் தொழில்தானே?
இன்னொரு மண்டபத்தில் காளியின் பெரிய சிலை ஒன்னு சுவரோரமா நிக்க, மக்கள் எண்ணெய் விளக்குகளைக் கொண்டுவந்து ஏத்தி வைக்கிறாங்க.
கோவிலுக்கு வந்து வழிபட்ட விவிஐபிக்கள் லிஸ்ட்டில் நம்ம ஆதி சங்கரர் வந்து அம்மனுக்கு முன்னால் அர்த்தமேருவை ஸ்தாபிச்சு ஸ்ரீ சக்கரப் பிரதிஷ்டை செஞ்சார்ன்னு குறிப்பு. மராட்டிய மன்னர் வீரசிவாஜி 1667 இல் இங்கே வந்து வழிபட்டுருக்கார். நம்ம முண்டாசு அடிக்கடி வந்து போன கோவில் இது. யாதுமாகி நின்றாய் காளின்னு பரவசத்தோடு பாடுனவைகள் எல்லாமே இந்தக் காளியைப்பற்றித்தானாம்.
நவராத்திரி விழா இங்கே ரொம்ப விசேஷம். கோவிலைப்பற்றி இன்னும் எதாவது விவரம் கிடைக்குமான்னு வலையில் தேடுனப்ப பொக்கிஷம் ஒன்னு கண்ணில் பட்டது. நம்ம கைலாஷி அருமையான படங்களுடன் காளிகாம்பாளைப் பற்றி அருமையா பக்திப்பரவசத்தோடு எழுதி இருக்கார். அவர் பதிவைப் படிச்சதும்தான் சரியா சுத்திப்பார்க்காம வந்துட்டோமோன்னு ...........
சரி(ய்)யா..........கோவிலைப்பூட்டும் நேரத்துக்குப்போனால் இப்படித்தான் ஆகும்:(கோவில் கடைகளில் வழக்கம்போல் மூலவர் படங்களும் சாமி பாட்டு ஆடியோ வீடியோ சிடிக்களுமா ரொம்பி வழியுது. பெரிய படம் ஒன்னு ரொம்ப அழகா ப்ரேம் போட்டு விற்பனைக்கு இருக்கு. ரொம்பவே பெருசு....... ச்சீச்சீ....இந்தப் பழம் புளிக்குதே............
திரும்பி வரும் வழியில் ஒரு 'கோடி அர்ச்சனை' நடத்துனேன் நம்ம ட்ரைவருக்கு. ரிசர்வ் பேங்க், கோட்டை, புது சட்டசபை(பிரமாண்டமா இருக்கே தவிர பார்க்க அம்சமா இல்லை. தமிழ்நாட்டுப் பாரம்பரியக் கட்டிடக்கலை எங்கே போச்சு?) அண்ணாசாலை வழியா இருவதே நிமிசத்துலே திநகர் அறைக்குக் கொண்டு வந்து சேர்த்துட்டார். போகும்போதே இப்படிப் போயிருந்தா நின்னு நிதானமா சாமி தரிசனம் செஞ்சுருக்கலாம்.ஆமாம்.... தெரியாமத்தான் கேக்குறேன்.... ஒரு விஷயம் தெரியலைன்னா தெரியலைன்னு சொல்றதுக்கு ஏன் தயக்கம்? எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரன்களா தங்களைக் காமிச்சுக்க வேண்டிய அவசியம் என்ன? சினிமா ஹீரோக்களா,. எல்லாக் கலைகளும் அத்துப்படியாய் இருக்க?
ட்ராவல்ஸ் வண்டிகளில் காரோட்டும் வேலைக்கு வர்றவங்களுக்கு ஸ்டியரிங் பிடிக்கவும், ப்ரேக் அழுத்தவும் தெரிஞ்சால் மட்டும் போதுமா? எந்த நகரத்தில் வண்டி ஓட்டறாங்களோ அதைபற்றிய பொது விவரங்கள் எதுவுமே தெரிய வேண்டாமா? (நம்ம அதிர்ஷ்டம் பாருங்க...வர்றவங்க எல்லாம் அன்னிக்குத்தான் வேலையில் சேர்ந்துருக்காங்க)
'வாயிலே இருக்கு வழி'ன்றதைச் சொல்லிக் கொடுத்தாலும், யாருக்கு வழி தெரியாதோ, அவுங்களைக் கரெக்ட்டாக் கண்டு பிடிச்சு அவுங்ககிட்டே மட்டும் வழியைக் கேக்கறாங்க இந்த ஏகாம்பரன்கள்.
குறைஞ்சபட்சம் ஒரு சிட்டி மேப், தெருக்கள் விவரம் அடங்கிய கைடு ட்ராவல்ஸ் வண்டியில் கட்டாயம் வச்சுருக்க வேணாமா? என்னவோ போங்க. இதையெல்லாம் விட்டுட்டு காலண்டர் அடிச்சு வச்சுக்கராங்க. நமக்கும் கொடுத்து அனுப்பி இருந்தார் ட்ராவல்ஸ் ஓனர்.
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த அரைநாளைப் பார்க்கலாம்.
Wednesday, January 19, 2011
காளிகாம்பாளும் கந்தசாமியும்
Posted by
துளசி கோபால்
at
1/19/2011 07:55:00 PM
32
comments
Labels: Kalikambal temple, Kanthaswamy Temple, அனுபவம், அனுபவம் Bharathi Memorial Chennai
Wednesday, January 05, 2011
சாரதியும் பாரதியும்!!
ஆர்ப்பாட்டம் அதிகம் இல்லாமல் நாள் எங்காவது கடக்குமா? காலையில் எழும்போதே கோபாலுக்குக் காய்ச்சல். ஒருவேளை நேற்றைய ஷாப்பிங் அதிர்ச்சியோ என்னவோ..............
டாக்டரைப் பார்த்தோம். ஊசி அண்ட் மருந்து. அதென்னமோ எல்லா வியாதியும் டாக்டர் முகம் பார்த்ததும் சட்னு ஒரு பத்து சதவீதம் குறையுமுன்னாலும் கோபாலுக்கு வீத விகிதம் வேற! அவருக்கு 50 சதம்., பாதி போயே போச்! இட்ஸ் கான்!
அறையிலே அவரைவிட்டுட்டு ஒரு விஷயமா பதிப்பாளரைப் பார்க்கப் போனேன். அவர் கேட்ட முதல்கேள்வி. "நீங்க வீட்டுலே சமைக்கறதே இல்லையா?"
"ஏன் இல்லாம? ரெண்டு மாசத்துக்கு ஒரு நாள் சமைக்கத் தோணும். அப்போதான்............உடம்பைப் பார்த்தா அப்படியா இருக்கு:-))))))"
அறைக்கு வந்தால் இவர் தூங்கி எழுந்து ஃப்ரெஷா இருந்தார். மீதமிருந்த 50 சதம் போயே போயிந்தி! ஊசியின் மகிமை. நியூஸியில் ஊசி என்பது கட்டக்கடைசி மருத்துவமுறை!
தாம்பரத்துக்குக் கிளம்பிப்போனோம் உறவினர்கள் சந்திப்பு. ரசம் அருமை. வீட்டுச் சாப்பாட்டுக்கு இணை இல்லைதான். 81 வயதான அத்தையுடன் ஆன்மீகப்பேச்சு. இந்த வயசிலும் கோவில் விவரங்களை நாக்கு நுனியில் வச்சுருப்பாங்க., சுருக்கத்தில் சொன்னால் 'எங்காத்து வேளுக்குடி' அவுங்கதான். திரும்பும் வழியில், பார்க்கும்போதெல்லாம் போகணும் என்று நினைக்கும் ஸ்ரீ ராமாஞ்சநேயர் கோவிலுக்கு வண்டியைத் திருப்பினால்..... மூடி இருக்கு. நான் பார்க்கலைன்னா என்ன ....'அவன்' பார்த்திருப்பான்! அழகான க்ரீம் கலர் கோபுரம்!
சென்னை விமான நிலையக் கட்டிட வேலைகள் நடப்பதைப் பகல் வெளிச்சத்தில் பார்த்தோம். காஃபிக்குப்போன தி,நகர் வெங்கட்நாராயணா சாலை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் நீராவியில் அவிச்ச வேர்க்கடலை ஸ்டால். முந்தி திரைஅரங்குகளில் இருந்தது இப்போ தெருவுக்கு வந்திருக்காம். பாத்திரத்தை ரெண்டாத்தடுத்து வெந்ததும் வேகாததும்:-) ஆரோக்கிய உணவு. ஆனால் அதில் தூவ ஏகப்பட்ட ஆரோக்கியக் கேடான சமாச்சாரங்கள்:( தமிழருக்கு உப்பு ரொம்பவே பிடிக்குமாம்:( Bபட் நோ குட்.
வேலை உண்டு
ஏகப்பட்ட மசாலாஅவிச்சதும் அவிக்காததும்
வேலைக்கு ஆட்கள் தேவையாம். போலாமான்னு ஒரு யோசனை. மழை வேறு லேசாத் தூற ஆரம்பிச்சது. நல்லார் ஒருவர் உளரே/றேல் அவர் பொருட்டாக இருக்கலாம்:-) கிரி ட்ரேடிங். புத்தகம் (எல்லாம் ஆன்மீகப்பா) தேடும்போது விளக்கு போய்வந்துச்சு. ச்சேச்சே......நேரம் சரி இல்லை. வாசலில் ஒரு பக்கம் சின்னதா ஒரு மேடை. இசைவிழா. குட்டி நட்சத்திரங்கள் ஜொலிப்பு. ஒரு பனிரெண்டு பதிமூணு வயசுச் சிறுமி பாட. இன்னொரு சிறுவன் மிருதங்கம். ஊக்குவிக்கத்தான் வேணும்.கிரி விழா
பெட்ரோல் விலை ஏறிப்போச்சு. இப்பெல்லாம் மினிமம் முப்பது கேட்பது வழக்கமாம் ஆட்டோவுக்கு. கொஞ்சம் தூரமுன்னா 120. பேரத்தில் 100 படியலாம்! ஆட்டோ ஓட்டுனர் மலைக்கு மாலை போட்டுருந்தால் மினிமம் அம்பது. கொஞ்ச தூரம் அதிகமுன்னால் இருநூறு:( கடவுளுடன் சேர்ந்து கூட்டுக்கொள்ளை! அதனால் 'சாமி ஓட்டும் வண்டி வேணாம். நானென்ன அர்ஜுனனா? சாமி ஓட்டும் வண்டியில் ஏற? இன்னிக்கு இதுக்குப் பொருத்தமா பாரதிக்கும் பாசாதிக்கும் ஒதுக்கிய நாள். கோவில் முன் இறங்கி வழக்கம்போல் மண்டபத் தூண்களை ரசிச்சுட்டுக் கோவிலுக்குள் நுழைஞ்சோம். இன்னிக்கு இங்கே உண்டியல் எண்ணும் நாள்! அதென்ன போற இடத்தில் எல்லாம் காசைக் கொட்டிவச்சுக் காமிக்கிறான்!!!! காசே தான் கடவுளடா..............ன்னு சூசகமான அறிவிப்போ? முன் மண்டபத் தூண்களில்
சிம்சுபா விருட்சத்தின் கீழ் சீதை. (கீதா சரியான உச்சரிப்பா? ) மரம் கொஞ்சம் புள்ளையார் மாதிரி இருக்கே!!!!
தர்மதரிசனம் போதும். பிரகாரம் வலம் வந்தபோது மேற்குவாசல் வந்ததும் வெளியே போய் எட்டிப் பார்த்தேன். 'பாரதி வீடு இங்கே இருக்கு'ன்னு நம்ம அதியமான் சொல்லி இருந்தார். எங்கேன்னு வாசலில் நின்னவரிடம் கேட்டால் அவர் அதோன்னு கை காட்டினார். எதிர் வரிசையில் நாலைஞ்சு வீடு தள்ளி! அட! இவ்வளவு பக்கத்திலா? எத்தனை முறை 'தில்லக்கேணி' பார்த்தசாரதி தரிசனத்துக்கு வந்துருக்கோம். பின்வாசல் எட்டிப்பார்க்கத் தோணலையே............
கோவில் வாசலில் இருந்து பாரதி வாழ்ந்த வீடு.எதிர்ப்புறம் வலக்கோடி.
பாரதி வீட்டில் இருந்து கோவில் வாசல்.
வலத்தைப் பாதியில் விட்டு வாசல் வழியா அப்படியே அங்கே போனோம். வீட்டின் முன் வெராந்தாவில் சுவரில் இருந்த அந்தக் காலப் புகைப்படங்களை க்ளிக்கினேன். படம் எடுக்கத் தடையாம்! போகட்டும். அறியாமல் செஞ்சதை மன்னிச்சுக்கலாம். பதிவில் போட்டுட்டால் எல்லோருமா அந்தஒ பிழையைப்' பகிர்ந்துண்ட மாதிரியும் ஆச்சு:-))))) ரெண்டு மூணு மேசைகள் போட்டு தினசரிகளை வச்சுருக்காங்க. சிலர் வந்து வாசிச்சுக்கிட்டும் இருந்தாங்க.
பழைய வீடுஇடைப்பட்ட காலத்தில் முன்பக்கம் மாத்தி இருக்காங்க.
வீட்டினுள் நுழைஞ்சதும் இடைக்கழி மேடையில் பாரதியின் மார்பளவு உருவச்சிலை. பின்பக்கம் முப்புறமும் ஓடும் தாழ்வார நடுவில் சின்னதான திறந்தவெளி முற்றம். 'விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப்போல.....' இங்கேதானோ? வலப்பக்கம் கூடம். அதனுள் ஒரு அறை. சுவரெங்கும் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு நட்புகளுடன், விருந்தினருடன் பாரதி. பெண்விடுதலை (மாதர்களின் சுதந்திரங்கள்) விரும்பியவனின் பாடல்கள் சுவரில் சட்டம் போட்டு மாட்டிய கண்ணாடிச் சிறையில். 'இனி ஒரு விதி செய்வோம், மனதில் உறுதி வேண்டும், நல்லதோர் வீணை செய்தே, ஆசை முகம் மறந்து போச்சே........' கையெழுத்து நல்லாவே இருக்கு. ஆனால்.........
எட்டையபுரம் சமஸ்தானத்தில் பாரதி என்ற பட்டம் கிடைச்சதுன்னு எங்கியோ படிச்ச நினைவு. இந்த பட்டம் சிவஞானி யோகிகளால் வழங்கப்பட்டதுன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.
மனசில் ஊறிப்போனதை எடுத்துக் கடாசணும் போல !
காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்.னு பாடினாராம், காந்திமதி நாதனை வெறுப்பேத்த..... பொல்லாத புலவன்:-))))
குறுகலான படிகளில் ஏறிப்போனால்....மாடியில் நூலகம் ஒன்னு, யாரும் இல்லாமல் ஜிலோ ன்னு இருக்கு. விளக்குமாற்றால் சுத்தம் செய்யும் பெண்மணி (யசோதா) ரெக்கார்ட் ரூம் க்ளர்க்.. பத்துப்பேர் வேலை செய்த இடத்தில் இப்போது மூன்றே பேராம். அதிலும் இன்னிக்குத் துப்புரவாளர் வரலையாம்:(
மாடியில் இருந்து முற்றத்தைப் பார்த்தபோது...... மனசில் ஒரு சின்ன வலி செல்லம்மா அந்தக்கூடத்தின் தூணைப் பிடிச்சுக்கிட்டு கலங்கிய கண்ணுடன் நிற்பதும் பாரதி, முறத்தில் இருக்கும் அரிசியை வாரிச் சிட்டுகளுக்குத் தூவி விடுவதுமா......... குழந்தைகளின் பசியை நினைத்து வருந்தும் ஒரு குடும்பத்தலைவி:( ப்ச்..........போங்கப்பா...................
வெறும் முப்பத்தியொன்பதே வருட வாழ்க்கை. நாப்பதில் நாய்க்குணம் வந்துருமோன்னு சீக்கிரம் ஏறக்கட்டிட்டார் போல:(நினைவு இல்லம்
ரொம்ப அழகான முறையில் கட்டிடத்தைப் புதுப்பித்து இருக்காங்க. 1993 வது ஆண்டு புரட்டாசிமாதம் 16 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுன்னு 'கல்வெட்டு 'சொல்லுது. வாசலில் ஒரு பக்கம் கரும்பளிங்குப்பலகையில் பாரதிக்கு ஒரு கல்வெட்டு..
மறுபடி கோவிலுக்குள்ளே நுழையும்போது யோகநரசிம்மன் திரை போட்டுச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். ஒரு ரெண்டு மூணு நிமிசம் காத்திருந்தோம். திரை விலக புன்சிரிப்புடன் சிங்கம். விட்ட வலம் தொடர்ந்தால்.....ஆண்டாள் சந்நிதி திறந்திருக்கு! மார்கழியில்லையோ? மஞ்சள் காப்பு மஞ்சளை நீங்களே எடுத்துக்கலாம்ன்னார் பட்டர். மனசுக்குள் தூமணி ஆச்சு. பிரசாத ஸ்டாலில் ரெண்டே ரெண்டு அதிரசம். கோபால் அவரோடதை சாப்பிட்டார். நான் அப்புறமுன்னு எடுத்துக் கைப்பைக்குள் வச்சேன்.
வெளியே மண்டபத்தினருகில் இளநீர் கிடைச்சது. 20 ரூ முழு இளநி. எனக்கு வழுக்கை வேணாம். மொட்டைத்தலை எனக்கு ஆகாது:-) கொஞ்சம் தேங்காயும் வேணும். குடிச்சு முடிச்சு தேங்காய் கிடைச்சப்ப 'அண்ணாமலை' வந்தான். தேங்காய் பிடிக்குமான்னா ஆமாவாம். ஆளுக்குப் பாதி. அவன் முடிச்சதும் அங்கே வந்த சின்னப் பையன் ஒருவனுக்கு தின்ன எதாவது வேணுமாம். அதான் அதிரசம் இருக்கே! 'தானே தானே பர் லிக்கா ஹை கானே வாலா கா நாம்'. ரொம்பச்சரி.
தனி ஒருவனுக்காக என்னால் ஜெகத்தை எல்லாம் அழிக்க முடியாது:(
நம்ம கோபாலுக்குக் காய்ச்சல் என்ற விவரம் அறிஞ்ச கவிஞர் மதுமிதா நாலைஞ்சு முறை செல்லில் கூப்பிட்டு அவுங்க வீட்டில்தான் பகலுணவுன்னதும் போய் வெட்டினோம்.
அப்புறம்?
இருங்க, சொல்றேன்.
Posted by
துளசி கோபால்
at
1/05/2011 02:31:00 AM
38
comments
