Monday, May 13, 2024

ஆற்றாமைகளைப் புலம்பல்கள்னு சொல்லலாமோ !

இந்த வருஷத்து வீட்டுப்பராமரிப்பு வேலை நம்ம முன்வாசலுக்குத்தான்.  ஸ்டாம்ப்டு காங்ரீட் போட்டுருந்தோம் இல்லையா? ஆச்சே 19 வருஷம்! நடுவிலே ரெண்டு மூணு முறை வார்னிஷ் போல ஒன்னு அடிச்சுருந்தாலும் கூட, சரியாகலைன்னார் நம்மவர். புதுசா பெயின்ட் அடிக்கலாமுன்னார். 
நம்ம ஃபிஜி நண்பர் ஒருவர், இந்த வேலைகள் எல்லாம் செய்யறார்னு தெரிஞ்சதும் அவராண்டை வேலையை ஒப்படைச்சாச்சு. என்ன நிறம்னு நாம் தெரிஞ்செடுத்து வாங்கித்தந்தால் போதும்.  அவர் ஒருநாள் வந்து தரையை அளந்துக்கிட்டுப்போனார். 

பெயின்ட் கடைக்குப்போய் விவரம் சொல்லி, ஏற்கெனவே  இருக்கும் அதே நிறம் கேட்டப்ப , இப்ப  அது வர்றதில்லைன்னு  சொன்னதால் வேற ஒன்னு நாந்தாந்தேர்வு செஞ்சேன். ஏறக்கொறைய அதே நிறம் இருந்தால் நல்லதுன்னு.....
 
அங்கேயே  நிபுணர்கள் ஆலோசனையெல்லாம்  சொல்லுவாங்க. அதன்படி,  முதலில் தரையைச் சுத்தம் செஞ்சுட்டு, அதுக்கப்புறம் என்னவோ ஒரு க்ளீனிங் ஆஸிட்னு ஒன்னு, பூவாளியில் தெளிச்சுட்டு பவர் வாஷ் பண்ணிட்டுத் தரை காய்ஞ்சதும்  ப்ரைமர்  அடிக்கணும். அப்புறமாத்தான்நாம் தெரிவு செஞ்ச நிறத்துலேயே ஸீலன்ட் (பெயின்ட்)னு ஒன்னு  ரெண்டு கோட்  அடிச்சால் போதுமுன்னு  சொன்னதால்  ப்ரைமர் மட்டும் வாங்கி வந்தோம்.  மொத்தம் மூணு நிலைகள் வேலை.   முதல் முறையாக  பெயின்ட் செய்யும்போதுதான்  நிறைய  சம்ப்ரதாயங்கள் இருக்கும். நம்மது ரீபெயின்ட்டிங்தான். 

இப்போ வெயில் வரும்நாள் எப்பன்னு பார்த்து வேலையை ஆரம்பிக்கணும். அதே போல் வெயில் வந்த ஒருநாள்  நண்பர் தன் மகனோடு வந்தார்.   தகப்பனுக்கு உதவி . யுனிவர்ஸிட்டி மாணவர், அதான் இப்ப அவுங்களுக்கு விடுமுறைதானே !  


நண்பர் வேலைக்கு வந்து முதலில்   ப்ளோயரால் தரையைப் பெருக்கிட்டு ஆஸிட் க்ளீனர் தெளிப்பு   ஆனதும், வாட்டர் ப்ளாஸ்டிங் செஞ்சு தரையைச் சுத்தப்படுத்தினார். இடையிடையே இருந்த இடைவெளிக்கு ஃபில்லிங் போட்டு நிரப்பியாச்சு.  மறுநாள் ப்ரைமர் பெயின்ட் அடிப்பாராம். அதே போல் ஆச்சு. நம்ம மாக்கோலம் எல்லாம் போச்சு :-(தினமும் காலநிலை பார்த்துதான்  வேலை ஆரம்பிக்கணும். ஒருநாள்  மழை இல்லைன்னதும் வந்தாங்க.   நாம் தெரிவு செஞ்ச பெயின்டை, ஏற்கெனவே  கடையில் சொல்லி வச்சதால், 'நம்மவர்' மட்டும் போய் வாங்கிவந்தார்.   பப்பத்து லிட்டரா  ரெண்டு டின். வீட்டுக்கு வந்து திறந்து பார்த்தால்...........  ஐயோ.... இது அது இல்லை !   

பெயின்ட் டப்பாக்களைத் தூக்கிக்கிட்டுத் திரும்பக் கடைக்கு ஓடினோம்.  பெயின்ட்டில் நிறம் சேர்ப்பதெல்லாம் கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்குது என்பதால்  அதுலே ஏதோ குழப்பமுன்னு சொல்லி, வேறொரு  புது டப்பாவில்  கலந்து கொடுத்தாங்க.  அங்கேயே திறந்து காண்பிக்கச் சொல்லி ,  அது நாம் தெரிவு செஞ்ச நிறம்தான்  என்றதும் இன்னொரு டப்பாவிலும் அதே போல் கலந்து கொடுத்தாங்க.   இதுலேயே நேரம் ரொம்ப ஆனதால்  அன்றைக்கு வேலை ஒன்னும் ஆகலை.
இன்னொருநாள் பெயின்ட் முதல் கோட் வேலை ஆச்சு.  ரொம்ப வெளிர்நிறமா இருக்குன்னு எனக்கு நினைப்பு. எப்படியும் ரெண்டாவது கோட் அடிச்சால் சரியாகும்னு  இருந்தேன்.  நம்ம 20 லிட்டர் பத்தலைன்னு ஓடிப்போய் இன்னொரு பத்து லிட்டர் வாங்கும்படியாச்சு.  கலர் கன்ஃபர்ம் செய்யக் கூடவே நானும் கடைக்கு ஓடிக்கிட்டு இருந்தேன். 
ரெண்டரை நாளில் முடிய வேண்டியது  அப்படி இப்படின்னு ஒரு வாரத்தை இழுத்துருச்சு போங்க.  எப்படியோ வேலை முடிஞ்சாச் சரின்னு இருக்கவேண்டியதுதான். பொழுதன்னிக்கும் டெக்னாலஜி மாறிப்போச்சுன்னு  சொல்லிக்கிட்டே இருக்காங்க. வீட்டுலே  இப்ப இருக்கும்  எலெக்ட்ரிக் பல்புகள் கூட மண்டையைப் போட்டால்   அதே வகைப் புதுசு கிடைக்கறதில்லை.  ஸாக்கெட் ஃபிட்டிங் எல்லாமே  மாத்தணுமுன்னா செலவு  இழுத்துறாது ? சும்மா இருக்க  விட மாட்டாங்க...... அடுக்களை சிங்குலே இருக்கும் குழாய் லேசாய் சொட்டிக்கிட்டு இருக்கு.  வாஷர் போயிருக்கும். மாத்திக்கலாமுன்னு பார்த்தால்..... எங்கே.... அதுக்குள்ளே மாத்தும்படியான வாஷர் எல்லாம் கிடையாதாம். தூக்கிப்போட்டுட்டு மொத்தமா அந்த யூனிட்டையே வாங்கிப்போடணுமாம்.  ப்ளம்பரைக்கூப்பிட்டுப் போட்டோம் !  வேற வழி ?

 நம்ம வீட்டுக்கும் இப்போ  19 வயசாயிருச்சே... இனி அப்படித்தான்னு சொல்றார் 'நம்மவர்' . 

இவ்வளவு ஏன்..... தையல் மெஷீன் ..... அதுக்கு எண்ணெய் போடுவோமா இல்லையா?  அதுக்குன்னு ரெண்டு மூணு இடத்துலே சின்ன துளைகள் இருக்கும்தானே ?  நம்ம மெஷீன் வாங்கியே  வருஷம் பத்தாச்சே.....  ஏதோ பிடிக்கிறமாதிரி இருக்கே.... சொட்டெண்ணெய் விடலாமுன்னா.... எங்கே விடணுமாம்?  மெஷீன்கூட வர்ற மேன்யுவல் கூட புத்தகமா  வர்றதில்லை. ஸிடியாக் கொடுத்ததுதான். இப்ப என்னன்னா..... ஸிடி ப்ளேயர் இல்லவே இல்லை. கம்ப்யூட்டரில் இருந்ததையும் எடுத்துட்டாங்க ? கையில் இருக்கும் ஸிடியை வச்சுக்கிட்டு வேடிக்கைதான் பார்க்க முடியும்.     

வலையைக்குடைஞ்சு பார்த்தால்.....  எண்ணெய் விடவே வேணாமாம்.  அதற்கான எந்தப் பகுதியும் இல்லையாம்.  மெஷீன் வேலை செய்யலைன்னா... தூக்கிப்போட்டுட்டுப் புதுசு வாங்கிக்கோன்னு உபதேசம்.


என்னவோ போங்க...... 0 comments: