Friday, May 20, 2022

கொண்டாட்ட மனநிலையில்.....

பூக்களுக்குக் கொண்டாட்டமுன்னா அது டிசம்பர் மாசம்தான். ஏற்கெனவே நாமும் கொண்டாட்ட மனநிலையில்தான் இருக்கோம்.  

க்றிஸ்மஸ் பண்டிகைக்கான  விருந்துகள் எல்லாம்  டிசம்பர் முதல் வாரத்துலேயே ஆரம்பிச்சுரும். உண்மையான பண்டிகை சமயம்தான் எங்களுக்குக் கோடை விடுமுறை என்பதால் பள்ளிக்கூடங்கள், ஆஃபீஸ்கள், தொழிற்சாலைகள், இன்னும் மற்ற தனிப்பட்ட வகுப்புகள் (நம்ம யோகா வகுப்புகள் போல ) எல்லோரும் குறைஞ்சது மூணு வார விடுமுறை விட்டுரும். அதிகபட்சமுன்னா   ஏழு வாரங்கள். வருஷக்கடைசி வேற இல்லையோ ! 

நம்ம யோகா வகுப்பு  ஒருங்கிணைப்பாளரும் வேற வேலைக்குப் போறாங்க என்பதால் அவுங்களுக்கு ஒரு பிரியாவிடை கொடுத்தலும், அடுத்து வரப்போறவங்களுக்கு ஒரு வரவேற்புமாக  யோகா வகுப்புநாளிலேயே ஆச்சு. என்ன ஸ்பெஷலா இருக்கும் ? வேறென்ன ஃபுட் யோகாதான் :-)  சாப்பாடில்லாத கொண்டாட்டம் உண்டோ ?

நம்ம கேரளா க்ளப்பில்  க்றிஸ்மஸ் விழா. எப்பவும் நடத்தறதுதான். ஓணமும் க்றிஸ்மஸும் முக்கிய விழாக்களாகவும்,  ஈஸ்டர் விஷூ  எல்லாம் சுமாரான  சின்ன விழாக்களாகவும் கொண்டாடிக்குவோம்.  கொரோனா காரணம்  போனவருஷம்  லாக்டௌன் என்பதால் கொண்டாடலை. இந்த வருஷம் லாக்டௌன் இல்லைன்னாலும்,  கூட்டம் கூட நிறைய கெடுபிடி இருந்தது.  நூறு பேருக்குமேல் ஒரு இடத்தில் கூடக்கூடாதுன்னு கடைசியில் சொன்னதால்....  முதலிலேயே டிக்கெட் விற்பனை செஞ்சு நூறோடு நிறுத்திக்கிட்டோம்.  ஹால் கிடைக்கத்தான்  கஷ்டமாப் போச்சு. கொஞ்சம் சுமாரா இருக்கும் பழைய ஹாலை ஏற்பாடு பண்ணி... அங்கேதான் கொண்டாட்டம். பாவம்... சாண்டாவுக்குக் கூடக் காத்து போயிருச்சு.....






மறுநாள் எங்க யோகா குழுவில் க்றிஸ்மஸ் பார்ட்டி.   நம்ம ஊரில் சின்னதும் பெருசுமா ஆயிரத்து இருநூறு தோட்டங்கள் உண்டு. பிக்னிக் நடத்திக்க சகல ஏற்பாடுகளுடன் பதினொரு பெரிய தோட்டங்கள். அதுலே ஒன்னைத் தெரிஞ்செடுத்து புக் பண்ணிக்கலாம். தனியார் சமாச்சாரமுன்னா... கவுன்ஸிலுக்கு ஒரு குறிப்பிட்ட சார்ஜ் கொடுக்கணும்.  பொதுக்குழு என்றால் இலவசமே! 

நம்ம யோகா குழுவில்  பேல்பூரி எல்லோருக்கும் விருப்பம் என்பதால் வெளியிடங்களில் ஒன்று கூடும்போது  முக்கிய ஐட்டமா வச்சுக்குவோம். தேவையான சமாச்சாரங்களை ஆளுக்கொன்னுன்னு கொண்டு போயிருவோம். மற்ற கூடுதல் தீனிகள் அவரவர் விருப்பம் போல!   இப்படியான நிகழ்ச்சிகளில் பேப்பர் ப்ளேட், கிண்ணம்,  எல்லாம்  இனிமே வேணாமுன்னு 'நானே' உக்கார்ந்து யோசிச்சு ஐடியாக் கொடுத்தேன். எல்லோரும் சம்மதிச்சுட்டாங்க.  அவரவருக்குத் தேவையான தட்டு/ கிண்ணம், ஸ்பூன், டம்ப்ளர் ஆகியவற்றை அவரவரே கொண்டு வரணும். பயன்படுத்திட்டு  வீட்டுக்கொண்டு போயிட்டால்  குப்பை சேராதுதானே ? அதே போல்  இருக்கைகளும். பிக்னிக் சேர்கள்  கூடவே கொண்டு போயிடணும்.  கார்தானே சுமக்கப்போகுது ? 




அன்றைக்கு குழு மக்களில் ஒருவருக்குப் பொறந்த நாள் வேற ! கேக் வெட்டிக் கொண்டாடியாச்சு.  சாப்பிட்டது செரிக்கத்  தோட்டத்துக்குள்ளே நடை, ஒரு சில விளையாட்டுகள் இப்படி.......

நம்மூரில் பிகானிர்வாலா ரெஸ்ட்டாரண்ட் இருக்கு.  நடத்தறவர் நம்ம நண்பர்தான்.  அப்பப்ப  எதாவது புதுமை செய்யறேன்னு  மஹாராஷ்ட்ரியன், கேரளா, குஜராத்தி, ராஜஸ்தானின்னு தாலிகள் அறிவிச்சுருவார்.  அதது அந்த வாரம் மட்டும் ஆறுநாட்கள்!  டிசம்பர்மாசம்  ஸ்பெஷலா.... மத்ராஸிதாலி. இதுலே முக்கியமா ஒன்னு.... மதுரை ஜிகர்தண்டா நியூஸியில் முதல்முறையாகவாம்.  ச்சும்மா இருக்கவிடறாங்களா ?  கிளம்பிப்போனோம்...... 

ஆவலுடன் காத்திருந்த ஜிகர்தண்டா  பார்த்ததும்..... திக்னு ஆகிப்போச்சு.  இதுவாய்யா எங்க மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா ? இது ஃபலூடா இல்லையோ....  நண்பர் சொல்றார்,  இதெல்லாம் நேரடியா பிகானிர்  சென்ட்ரல் கிச்சனில் இருந்தே வந்துருது..... 

மதுரைக்காரிகிட்டேயே  இப்படிச் சொன்னா எப்படி? பொருமலோடு வீட்டுக்கு வந்தது முதல் அசல் ஜிகர்தண்டா குடிச்சே ஆகணுமுன்னு ஒரு வெறி.... பாதாம் பிசினு வாங்கிக்க  இண்டியன் கடைகளுக்குப் படை எடுத்தும், கிடைக்காமக்  கடைசியில்  கேரளாக் கடையைத் தேடிப்போனால்........   கடை, பஞ்சாப்காரருக்குக் கைமாறியிருக்கு.  இன்றைக்குத்தான்  கடைமாற்ற விழா ! ஓனர் ரொம்ப சந்தோஷமா வரவேற்கிறார். நோகாம ஒரு பிஸினஸ் கிடைச்சுருக்கே !  ஜலேபி, பக்கோரா, ச்சாயான்னு  உபசாரம் வேற ! 
பதாம் பிசின் இருக்கான்னா பஞ்சாபி முழிக்கிறார்.  அதைத் தண்ணீரில் போட்டால் என்ன ஆகுமுன்னு விவரிச்சதும் அடடா.... இதுவான்னு எடுத்துக் காமிச்சார்.  இதுக்கு பஞ்சாபுலே வேற பெயர் இருக்கு ! 
வாங்கிவந்து 'அசல்' ஜிகர்தண்டா செஞ்சு குடிச்சதுக்கு அப்புறம்தான் வெறி அடங்குச்சு. படத்தை நண்பருக்கு அனுப்பி வச்சேன்:-) எனக்கில்லையான்னு கேட்கிறார் !
இந்த வருஷத்துக்கான யோகா வகுப்பின் கடைசிநாள்.  சாக்லேட் க்ரீம் ஃபிங்கர் பன் தின்னு  கொண்டாட்டம் நிறைவு. அடுத்த வகுப்பு, அடுத்த வருஷம் ஃபிப்ரவரி முதல் வாரத்தில்.   ஒன்னரை மாசம் லீவு.


மார்கழி மாசம் பொறந்தாச். நம்ம ஜன்னுதான் வீட்டு ஆண்டாள் !  அவள் விருப்பம்போலவே 'மூடநெய் பெய்து முழங்கை வடிவார'  ஒரு நிவேத்யமும் ஆச்சு. 

வாசலில் வருஷாவருஷம் டிசம்பருக்கு மாட்டும்  ரீத் இந்த வருஷம் ரொம்பச் சின்னதாத் தெரியுது. நம்ம பார்வை பயங்கர விசாலமா ஆகிருக்கு போல.  கொஞ்சம் பெருசா இருந்தால் தேவலை. ஆனால் காசு செலவு செய்ய மனஸ் வரலை. அப்பப்பக் கொஞ்சம் கருமித்தனம் காமிச்சுக்குவேன். நம்மவருக்கு ஒரு மனநிறைவு வரட்டுமேன்னுதான் :-)  மனைவி, அநாவசியச் செலவு செய்யறதில்லை என்ற நிம்மதி ஒரு மனுஷருக்கு வேணுமில்லையோ? 
ஆனால் ஒன்னு,  ஆன்னா ஊன்னா கடைக்குக் கிளம்பிருவேன்.  அங்கே போய் பார்த்தால்தான்  வீட்டுலே  இருப்பவைகளைக் கொண்டு என்ன செஞ்சுக்கலாம் என்ற ஐடியா வரும் :-) கார் ஸ்டீரிங் கவர் வந்த அட்டை இருக்குல்லெ ? அது போதும். 

க்ராஃப்ட்  ஹாபி தொடங்குனது முதல்..... குப்பை சேர்க்கிறதே வழக்கமாப் போயிருக்கு:-)

நம்ம பக்கம்தான் ரீத் /மலர்வளையம்  என்பது வேற சமாச்சாரத்துக்கு....




13 comments:

said...

மூடநெய் பெய்து முழங்கை வழிவார - என் கண்ணுக்குத்தான் தெரியலையா? இல்லை டிசம்பர் குளிரில் உறைந்துவிட்டதா?

படங்களும் நிகழ்வுகளும் அருமை

said...

படங்கள் கொண்டாட்டம் எலலம் சூப்பர் போங்க

ஜிகிர்தண்டா ஆஹா...அக்கா ஹிந்தில அதுக்கு கோந்த் நு தானே சொல்றாங்க மராட்டி லட்டுல இதை போடுவாங்களே. Gond ki laddu னு செய்வாங்களே..

உங்க ஐடியா சூப்பர் தட்டு டம்ப்ளர் எல்லாம் அவங்கவங்க கொண்டு வரது. குப்பை சேராது.

வாத்து எல்லாமே நல்லாருக்கு. ஜன்னு ஆண்டாள் வேஷம்...சூப்பர்.

கீதா

said...

பழைய பதிவுகளும் வாசிக்கறேன்

கீதா

said...

விழாக்கள் உணவு வகைகள் எனஅசத்தலான பகிர்வு.

said...

கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு. படங்கள் நன்று.

said...

அழகான படங்கள். அருமையான கொண்டாட்டங்கள்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

இங்கத்துக் குளிருக்கு உருகி ஓடும் நெய் என்று பார்த்ததே இல்லை. வெண்ணெய் காய்ச்சி எடுத்து பாத்திரத்தில் ஊற்றும் போதுமட்டுமே காட்சி தரும் ....

said...

வாங்க கீதா,

ரசித்துப் பார்த்த உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி ! ஜன்னுக்கென்னப்பா..... கொடுத்துவச்ச மகராசி :-)

said...

வாங்க மாதேவி,

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் போலத்தான் உணவில்லாத பதிவும் என்றாகி இருக்கு :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரசனைக்கு நன்றி ! மகள் பள்ளி விடுமுறையில், திருவரங்கம் வந்தது மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்கி இருக்குமே !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

ரசித்தமைக்கு நன்றி !

said...

ரீச்சர்,

இருப்பவைகளை இல்லை, இருப்பவற்றை

இவை ப்ளூரல். இவைகள்ன்னு அதுக்கு ஒரு கொக்கி எதுக்கு

said...

வாங்க கொத்ஸ்,

அப்டீன்னாச் சரி....