Monday, June 08, 2020

குட்டிப்பயணமா... இதோ போய் இதோ வந்தோம் :-) (பயணத்தொடர் 2020 பகுதி 62 )

சும்மாச் சொல்லக்கூடாது...... சென்னை விமானநிலையம், அலங்காரங்களோடு ஜொலிக்குது ! காலையில்  'பெட்ரோல்' ஊத்திக்காம அப்படியே கிளம்பி வந்துட்டதால்  சங்கீதாவில் ஆச்சு.


உள்ளே நுழைஞ்சதும் பெரியதிருவடி.... வாங்கோன்னார் :-)
செக்கின் ஆனதும்  சின்னதா ஒரு சுத்து. டைம் பாஸ். அதான் இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கே..... இப்பெல்லாம் அசல் தங்கத்தைவிட  வேலைப்பாடுகள் அதிகமா இருப்பது  'மற்ற' நகைகளில்தான் இல்லை?


கேரளாக் கடையில் ரெண்டு ஐட்டம்ஸ் :-)
ஸ்பைஸ்ஜெட் விமானங்களுக்கு  ஸ்பைஸ் பெயரே வச்சுருக்காங்க. அதான் ஏகப்பட்ட மஸாலாக்கள் இருக்கே!  நாம் இப்போ ஆம்ச்சூரில் போறோம் :-)
 வழக்கம்போல் ஆடி அசைஞ்சு லேட்டாக் கிளம்பி பெங்களூருவில் இறங்கினப்போ  மணி எட்டு நாப்பது.  விறுவிறுன்னு வெளியே வந்து டாக்ஸி எடுக்க ஓலா கவுன்ட்டருக்குப் போனோம்.  நகரத்துக்குள் போக மூவாயிரம் ரூபாயாம் !  என்ன இது ஒரே கொள்ளை.....  சென்னை பெங்களூரு டிக்கெட்டே  மூவாயிரத்து இருநூறுதானே !

அப்போ ஒருத்தர் வந்து டாக்ஸி வேணுமான்னார்.  ரெண்டாயிரம் வாடகையாம்.  சரின்னதும் கொஞ்சம் இருங்க வண்டியைப் பார்க்கிங்லே இருந்து கொண்டுவரேன்னு போனார்.  பெங்களூருவிலும்  கிறிஸ்மஸ் அலங்காரங்கள்  அருமை !
டாக்ஸி வந்து நின்னதும்  ஒரு நூறு ரூ கொடுங்கன்னு நம்மாண்டை வாங்கி, பின்னாலேயே துரத்திக்கிட்டு வந்த ஆளாண்டை கொடுத்ததும், ஒரு ரசீது கொடுத்தார் அந்த ஆள்.  உள்ளே வண்டியைக் கொண்டு வந்தால்  அதுக்கு ஒரு சார்ஜ் அடைக்கணுமாம்.....  என்னவோ போங்க.....

மெயின் ரோடில் வேலை நடக்குதுன்னு குறுக்கு வழியில்  கொண்டு போய், நம்ம மச்சினர் வீட்டாண்டை போய்ச்சேர்க்க  அம்பது நிமிட் ஆச்சு.  திரும்பி ஏர்ப்போர்ட் போக நானே வரேன்னுட்டுப் போனார் ட்ரைவர்.

மச்சினர் வீட்டில் எல்லோரும் நமக்காகக் காத்திருக்காங்க. கல்யாணம் விசாரிக்க வந்துருக்கோம்.  மச்சினர் மகனுக்கு மே மாசம் கல்யாணம். வீட்டுக்கு மூத்தவர் 'நம்மவர்' என்பதால்.....   கல்யாணத்துக்கு வர்றதுக்கு டிக்கெட் போட்டு வச்சுருந்தோம். கிளம்ப ரெண்டு நாள் இருக்கும்போது, கண்ணில் பிரச்சனை. உடனடியா சர்ஜரி  செய்யணும் என்பதால்.....  டிக்கெட்டைத் தள்ளிப்போட்டோம்.

கண்டாக்டரும்   ஆறு மாசம் கழிச்சுச் செக்கப் பண்ணிட்டு, சரியா இருந்தால்  பயணம் செய்யலாமுன்னு சொன்னார்.  அந்த டிக்கெட்டை வச்சுத்தான் இந்த இந்தியப்பயணமே இப்போ !

மகன், கல்யாணம் முடிஞ்சு  வேலைக்குத் திரும்பிட்டான்.  மருமகள் , விஸாவுக்கு வெயிட்டிங்.  தலைதீபாவளி கூட தனித்தனியா வெவ்வேற நாட்டில் கொண்டாடும்படியா ஆச்சு.... ப்ச்... பாவம் பொண்ணு.  இதோ இந்த ஆறு மாசத்தில் விஸா கிடைச்சு, மனைவியைக் கூட்டிப்போக வந்துருக்கான் மகன். ஒரு வாரத்தில் கிளம்பணும்.

நாமும் இப்போ இந்தியா வந்துருப்பதால்....  கல்யாணம் விசாரிச்சுட்டு, அப்படியே பொண்ணையும் பார்த்துப் பேசுனமாதிரியும் ஆச்சுன்னு.....    பார்த்தவுடனே மருமகளை எனக்குப் பிடிச்சுப்போச்சு !  நல்ல பொண்ணா இருக்காள்.  இது காதல் கல்யாணம் என்பதால்....  பொண்ணுடன்  எனக்குக் கூடுதல் அன்பு :-)  (இனம்... இனத்தை....  )

பேசிக்கிட்டே காலை டிஃபனை முடிச்சோம். லட்டு,  குழிப்பணியாரம், இட்லி, சட்னி, சாம்பார்ன்னு முழுங்கினதும், சூடான ஃபில்ட்டர் காஃபியைக் குடிச்சுட்டு,  கல்யாண ஆல்பத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.  அட்டகாசமா இருக்கு. உறவுகளின் கல்யாணங்களுக்குப் போனால்.... ரொம்ப அலைச்சல் இல்லாம சொந்தக்காரர்கள்  அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்துக்கலாம்.  நாம்தான் மிஸ் பண்ணியிருந்தோம்.....
ஏற்கெனவே முக்கியமான படங்களை மெஸஞ்சரில்  அனுப்பியிருந்தாங்கதான். மற்ற புது முகங்களை யாரு என்னன்னு விளக்கிச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க மச்சினர் மனைவி.







க்ளிக்ஸ் எல்லாம்  முடிச்சுட்டு,  கல்யாணப்பரிசாக நமக்குன்னு எடுத்துவச்சுருந்தவைகளை வாங்கிக்கிட்டு, மணமக்களுக்கு ஆசி வழங்கும்போதே டிரைவர் மணி, வந்துட்டார்.  ரெண்டரை மணி நேரம் இருந்துருக்கோம். இன்னும் அரைமணிகூட இருந்துருக்கலாம். ஆனாலும் ட்ராஃபிக் எப்படி இருக்குமோன்னு  கிளம்பவேண்டியதாப் போயிருச்சு.
பகல் ஒருமணிக்கு ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்தாச்சு.  வர்றவழியில்  பார்த்தால் பெங்களூருவின் முகமே முழுசா மாறிப்போய்த்தான் இருக்கு! (நாப்பத்திநாலு வருஷங்களுக்கு முன் பெங்களூரில் கொஞ்சநாள் குப்பைகொட்டிக்கிட்டு இருந்தோம் என்று சொல்லிக்கொண்டு......... )



மூணு மணிக்கு நமக்கு ஃப்ளைட். மஸாலாதான்.  செக்கின் ஆச்சு... க்றிஸ்மஸ் லீவில்  கூட்டம் இருக்காதுன்னு  நினைச்சால், பயங்கரக்கூட்டம்.   பசிக்கிறமாதிரி இருக்குன்னு  ரெண்டு வாழைப்பழம் வாங்கி உள்ளே தள்ளிட்டு, வண்டி வந்ததும்  போய் உக்கார்ந்து, சென்னை வந்து சேரும்போது நாலே கால்.  ஒரு டாக்ஸியில்  வேளச்சேரி மச்சினர் வீட்டுக்குப் போனோம். அதுக்குள்ளே நாம் பெங்களூரு போய் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு வந்த விவரம்  இங்கே வந்துருச்சு:-)
சின்ன மச்சினருக்குக் கண் சர்ஜரி நடந்துருக்கு.  நாலுநாளாச்சாம்.  ரெண்டு கண்களிலும் ஒரே சமயத்தில் ஐஓஎல் பொருத்தி இருக்காங்க.  நம்மை சந்திக்க நாத்தனார் மகனும் வந்துட்டார். மலைக்குப் போறதால் சாமி மாலை போட்டுருக்கு ! கொஞ்சநேரம் வீட்டுச்சமாச்சாரங்கள் பேசிட்டு, அப்படியே  ஜின்னாவுக்குத் தலையைக் கொடுத்துட்டு, காஃபி டிஃபனை முடிச்சதும்  ஒரு ஓலாவை வரவழைச்சு லோட்டஸுக்குத் திரும்பினோம்.

இனியும் தாங்காதுன்னு உடல் கெஞ்சுது......    ஒரு மணி நேர ஓய்வு. டின்னருக்கு நம்ம கீதாவுக்குப்போய்  நம்ம பெயர் எழுதி இருந்த ரெண்டு இட்லிகளைச் சாப்பிட்டோம்.

நாளைக்குக் கதை நாளைக்கு......

குட்நைட்...

தொடரும்...... :-)


8 comments:

said...

//பெங்களூரில் கொஞ்சநாள் குப்பைகொட்டிக்கிட்டு இருந்தோம்//

கேரளா, பூனா, சண்டிகர், பெங்களூர் ... அருமை;

said...

குடும்ப உறவுகள் சந்திப்பு .மகிழ்ச்சியான பயணம் .
புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

said...

இனிமையான சந்திப்புகள்....

தொடரட்டும் பயணம்.

said...

ஓ... எங்க ஊருக்கு வந்துட்டுத்தான் போயிருக்கீங்களா?

said...

வாங்க விஸ்வநாத்,

ஆஹா..... இன்னும் சில மாநிலத்தை விட்டுட்டீங்களே...

முதலில் விசாகப்பட்டினம், அப்புறம் தமிழ்நாடு, மூணாவதா பெங்களூரு, நாலாவதா கேரளா, அஞ்சாவதா பூனா...... அப்புறம் ஃபிஜி, இப்போ நியூஸி. இதுக்கிடையில் சண்டிகர் வேற !

தென்னிந்தியாவில் நாலு மாநிலங்களும் முடிச்சுட்டு, வடக்கே மஹாராஷ்ட்ரான்னு ஆரம்பிச்சு ஒவ்வொன்னாப் போகலாமுன்னு பார்த்தால் இடையில் ஃபிஜி வந்து நம்மை அங்கே கொண்டுபோயிருச்சே :-)

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

கல்யாண சமயம் வந்துருந்தால் ஒரு வாரம் அங்கே தங்கல் ஏற்பாடு. அதான் வரமுடியாமல் போயிருச்சே.... ப்ச்...