Friday, August 09, 2019

Pankuliya அசோகரமயா (பயணத்தொடர், பகுதி 128)

நம்ம 'கதிரேசன் கோவிலில்' இருந்து ஒரு ஒன்பது கிமீ தூரம்  போகணும். சாலையில் அங்கங்கே வழிகாட்டும் விவரங்கள் எல்லாம் நல்லாவே எழுதிப்போட்டுத்தான் இருக்காங்க.   தார்போட்ட சாலையில் வந்துக்கிட்டு இருந்தோமா.... ஒரு இடத்துலே மண் சாலை  பிரிஞ்சுபோகுது.
அதுவும் முடிஞ்சு போச்சு, ஒரு  வயலுக்குப் பக்கத்துலே!  இறங்கி  வயல் நடுவில் சனம் நடந்தே போட்டுருக்கும் பாதை வழியா நாமும் நடந்தோம். நடுவில் ஒரு முட்டுக்கட்டு வேற.... உசரமான கல் படி....   எதோ தூண்னு நினைக்கிறேன். படியாய்க் கிடக்குது...
பச்சைவயலைப் பார்க்கும்போதே பரவசமாத்தான் இருக்கு!
வயல் பாதையில் நிறைய தொட்டாச்சிணுங்கிச் செடிகள். ஹைய்யோ... பார்த்தே எவ்ளோ நாளாச்சு....

தொட்டுத்தொட்டுச் சிணுங்க வச்சுட்டு மேலே நடந்தோம் :-)
'அகோகாராமய'ன்னு  போர்டு வச்சுருக்காங்க.
 அசோகாராமய, அசோகராமய  இப்படி எது சரியா இருக்குமுன்னே தெரியலை. ஆனால் 'அகோகா'வா இருக்காதுன்னுதான் நினைக்கிறேன்.  இந்த கிராமத்துக்குப்பெயர் பன்குல்ய  என்பதால் பன்குல்ய புத்தர் கோவில்னு ஒரு பெயர் இருக்கு!  (இதுவும் பண்குள்யன்னுதான் போர்டில்!) 


ஒன்பது இல்லைன்னா பத்தாம் நூற்றாண்டு சமாச்சாரமா இருக்கணுமாம்.  ஒரு மேடையில் புத்தர் சமாதிநிலையில் உக்கார்ந்துருக்கார். தலைக்கு மேலே ஒரு தகரக் கூரை.  சுத்திவர புல் வளர்ந்து காடாட்டம்  இருக்கு. அவருக்கு முன்னால்  மேடையில் நாலைஞ்சு  அகல்விளக்குகள்.  ஒன்னுமே எரியலை....  காலை நேரப்பூஜை முடிஞ்சுருக்கு. புதுசாச் சின்ன புத்தர் ஒருத்தர். யாரோ கொண்டுவந்து வச்சுட்டுப் போயிருக்காங்க.
இங்கெல்லாம் புத்தர் சந்நிதிகளில் குட்டிக்குட்டிச் சிலைகளை, பொம்மைகளை (எல்லாம் புத்தர்களே) கொண்டுவந்து வச்சுட்டுப்போவதும் ஒரு வழிபாடாக இருக்கு. சின்னச் சின்ன அரசமரம் கூட கொண்டுவந்து வச்சுட்டுப் போறாங்க.
அப்பதான் ஒருத்தர் வந்து நமக்குத் தகவல், விளக்கங்கள் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சார். இங்கே இந்தப் பகுதி, தொல்லியல் துறையின் ஆதிக்கத்தின் கீழ் வருது. அங்கங்கே  கயிறுகளால் கட்டங்கட்டித் தோண்டிப் பார்த்துக்கிட்டு இருக்காங்க ஒரு குழுவினர்.
(தோண்டிப் பார்க்கறதைப் படம் எடுக்க அனுமதி கிடைக்கலை)



அந்தக் காலத்துலே இது புத்த பிக்ஷுணிகளுக்கான  விடுதியா இருந்துருக்கு. புத்தர் சிலை வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்துருக்காங்க.   அங்கங்கே தங்கும் அறைகள், கட்டடங்கள் எல்லாமும் இருந்து.... இப்போ அஸ்திவாரம் மட்டுமே கிடக்கு.
புத்தர் சிலையில்  கண்ணை நோண்டி இருக்காங்க.  வைரமோ, நவரத்தினமோ பதிச்சு இருந்துருக்கலாம்.... அதைத்தான்... யாரோ....  ப்ச்....
சமாதி நிலையில்  ஆறேமுக்கால் அடி உயரம் .

சுண்ணாம்புக்கல் (dolomite) சிலையாம்.  இலங்கையிலேயே  அழகான புத்தர்சிலை இதுதானாம்.  காலப்போக்கில்  கொஞ்சம் கரைஞ்சுதான் போயிட்டார் புத்தர்.

இந்த இடத்தைத் தேடித் தொல்லியல்துறை மக்கள்ஸ் வந்தப்போ இப்படி இருந்துருக்கு.  ஒரு சில வருஷங்களுக்கு முன் மேற்கூரை  யாரோ எப்பவோ  போட்டுருந்தாங்களாம்.
இவுங்க கைக்கு வந்த பின் தரையைச் சீர்செய்து, சுத்திவர இருந்த கல் தூண்களில் சிலதை வெட்டிட்டுப் புதுக்கூரை (தகரம்) போட்டு,  புத்தரின்  காங்க்ரீட் பீடத்துக்குமுன் ஒரு பெஞ்சுமேடையும் போட்டுருக்காங்க. படிகளும் அமைச்சு அதுக்கு முன்னால் ஒரு சந்திரவட்டக்கல், ரெண்டு பக்கமும் நாகராஜன் என்ற சம்ப்ரதாயமுறைப்படி ஓரளவு நல்லாத்தான் இருக்கு. ஆனாலும்  கூரை சரி இல்லை.  கொஞ்சம் நல்லதாக் கட்டினால் தேவலை.
இன்னொரு மேடையில் வட்டவடிவ அமைப்பு... தாது பகோடாவாம்.  அந்தக் காலச் செங்கல் மேடை!  நாலுபக்கங்களிலும் படிகள் வேற !  தொல்லியல்துறை சீர் செஞ்சுருக்கு.  சனம் விளக்கு வச்சுட்டுப்போகுது போல.....   தெரிஞ்சுருந்தா....  நாமும் கொஞ்சம் எண்ணெய் வாங்கி வந்துருக்கலாம்.



பெரிய இடம்தான்.  எங்கே பார்த்தாலும் கற்றூண்கள்!   இவ்ளோ தூண்களுக்கு என்ன வேலை?  எந்தமாதிரி கட்டுமானம்?  மேலே கூரையோ தளமோ இருந்துருக்குமா? இல்லை.... பந்தல் போட்டுருப்பாங்களா?

புத்தர் சந்நிதியைக் கூட்டிப்பெருக்கி முடிச்சுட்டு, மற்ற இடங்களைப் பெருக்கிச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க நிமாரி! என்னதான் சம்பளம் கிடைக்குதுன்னாலும் இவ்ளோ பெரிய இடத்தைச் சுத்தம் செஞ்சா இடுப்பு விட்டுப்போயிடாதோ? ப்ச்...

நானும் தகவல் சொன்னவர், தொல்லியல்துறை மேலாளருன்னு நினைச்சேன். இல்லையாம்.....  செல்ஃப் அப்பாய்ன்டட் கைடு !  நமக்கு வேணுங்கற சமாச்சாரம் சொல்லப் பெருமாளே அனுப்புனவர்தான் :-)


இவுங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் அன்பளிப்பு கொடுத்தோம். (இங்கே வந்தபின் கொடுத்த முதல் அன்பளிப்பு இதுவே!)





திரும்பவும் வந்த வழியே போய் வண்டியில் ஏறியாச்சு. சலசலன்னு ஒரு கால்வாய் ஓடிக்கிட்டு இருக்கு வளாகத்தின் வாசலில் !
பழைய அனுராதபுரம் வழியேதான் திரும்பிப்போகும் பாதை. அந்த ரெட்டைக்குளத்தாண்டை இருக்கும் கடைகளைத் திறந்துக்கிட்டு இருந்தாங்க.
நாம் வேறெங்கேயும் நிறுத்தாம, புது டவுன் கடைவீதிக்குப் போயிட்டோம். நாஞ்சொல்லலை.... அரசமரம் வேணுமுன்னு....
தெருமுக்கில் ஒரு மாறுதலுக்குப் புள்ளையார் :-)
ஒரு கடையில் இருப்பதுலேயே சின்னதாக் குட்டியா இருக்கும்  'தங்கமரம்' ஒன்னு வாங்கியாச். நியூஸி கொண்டுவர பிரச்சனை இருக்காது :-)
'ஷாப்பிங்' முடிச்சுட்டு ஹொட்டேலுக்கு வந்து செக்கவுட்டும் ஆச்சு.
பைபை அநுராதபுரான்னு  துட்டகெமுனுவின் யானைக்கும்  மணிக்கூண்டுக்கும் சொல்லிட்டுப் புத்தளம் நோக்கிப் போறோம் !


தொடரும்........ :-)


6 comments:

said...

தன்கச்செடி அழகா இருக்கு.

வயல்களுக்கு நடுவே புத்தர். அழிவுகளைப் பார்த்து மனதுக்குக் கஷ்டம்.

said...

சிலாபம் முனீஸ்வரம் போனீர்களா? அல்லது மன்னார் திருக்கேதீஸ்வரமா?
பொறுத்திருப்போம் ..

said...

அசோகாராமய....காட்டிற்குள் இருக்கார் இலங்கையிலேயே அழகான புத்தர்சிலை ....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அழிவுகள் மனசுக்குக் கஷ்டம்தான். ஆனால் அரசு இப்பெல்லாம் இதைக் கவனிச்சுக் கொஞ்சமாவது சரி செஞ்சுக்கிட்டு இருப்பது மகிழ்ச்சியே!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் செய்த அற்புதங்கள் இல்லையோ !

said...

வாங்க மாதேவி,

முன்னேஸ்வரர்தான் கூப்பிட்டு தரிசனம் கொடுத்தார் !

said...

வாங்க அனுப்ரேம்,

காலம் கொஞ்சம் சிதைச்சுருக்கே தவிர, உண்மையில் அழகான சிலைதான்!