Monday, August 05, 2019

ஜய சிரி மஹாபோதி (பயணத்தொடர், பகுதி 126 )

அடுத்த அஞ்சு நிமிஷத்துலே மஹா போதி விஹாரை வந்துட்டோம். இங்கே இருக்கும் போதி மரம்தான், அசோகரின் மகள் சங்கமித்திரை போதி கயாவில் இருந்து, BCE 288 ஆண்டு, கப்பல் பயணத்தின் மூலம்  கொண்டு வந்து நட்டது.  இங்கே  கோவிலுக்குள் போகத் தனிக் கட்டணம். ஆளுக்கு இருநூறு.

இந்தக் கோவிலுக்கு வரும்பாதையே  ரெண்டு பக்கமும்  கொடிகளால் அலங்கரிச்சு நம்மை வரவேற்கிறது !
ரொம்பவே புனிதமான இடம் என்பதால்  படு சுத்தம் !  வளாகமே ரொம்பப்பெருசு. கார்பார்க்கில் இருந்தே முகப்பு வாசலுக்கு ரொம்ப தூரம் நடக்கணும்.


உள் முற்றத்தில் மணல் பரப்பி, பச்சை விரிப்பு போட்டு வச்சுருக்காங்க.

போதி மரம் இருக்கும் மேடைக்கே ஒரு இருபது படிகள்  உயரே ஏறிப்போகணும். பக்தர்கள் கூட்டம் நிறைய !

படிகளின் ஆரம்பத்தில் ரெண்டு பக்கங்களிலும் நாகராஜன் அமுதகலசம் (!) ஏந்தி நிக்கறார் ! படியேறும்போது  சட்னு பார்த்தால் எதிரில் யானை !  ஆனால் அது யானை இல்லை. அந்தாண்டை இருக்கும் போதிமர மேடையின் கம்பித்தடுப்பு வரிசை யானைக்கோலம் காமிச்சுருச்சு !!   என் கண் என்னையே ஏமாத்தப் பார்க்குது பாருங்க :-)


இங்கே புத்தர் சிலைகள் வச்சு வழிபாடு நடத்திக்கிட்டு இருந்தாலும் போதி மரம்தான் ப்ரதானம் என்பதால்  மக்கள் கூட்டம் கூட்டமாகக் குழுக் குழுக்களாக  அங்கங்கே போதியைப் பார்த்தபடி  உக்கார்ந்துருந்தாங்க.

புத்தர் சந்நிதியிலும் தங்க புத்தர்களும், சின்னச் சின்ன புத்தர் சிலைகளும் கூடவே 'அந்த தங்க போதி மரங்களுமா'   ஏராளம் !

எனக்கொரு  தங்கமரம் வேணும் என்ற 'பேராசை'யைப் பெருக்கிவிட்டார் புத்தர் !


இந்த போதிமரம் தவிர கீழே வளாகத்தின் உள்முற்றத்தில்  அங்கங்கே சாதாரண மேடைகளில் அரசமரங்கள் நிறைய ! 

பிரார்த்தனைக்கொடிகள் கட்டி விட்டுருக்காங்க.
இந்தக் கோவிலிலும் சந்திர வட்டக் கல் இருக்கு!
அங்கங்கெ அரசமரக்கிளைகளை புதுசா நட்டு வச்சுருக்காங்க. சில வருஷங்களில் பெரிய மரம் ஆகிரும்!

இலங்கையின் புத்தர் விஹாரைகளில் இருக்கும்  போதிமரங்கள் எல்லாமே இந்த மஹாபோதியின்  மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி எள்ளுப்பேத்தின்னு நீண்டு போகும் பரம்பரைதான். ஒரு எட்டு வருஷங்களுக்கு முன்னே இங்கத்து மஹாபோதியின் ஒரு சிறுகிளை நம்ம இந்தியாவின் புத்தகயாவுக்கு இலங்கை விமானப்படை விமானத்தின் மூலம் கொண்டு போகப்பட்டுருக்கு!  தாய்வீடு விஸிட் !!!

சங்கமித்திரை கொண்டுவந்து நட்ட  போதிமரம் பல நூற்றாண்டுகளுக்குப்பின் இயற்கையாவே  மரணிச்சதுன்னும், இப்போ இருப்பது அதே மரத்தின் புதிய கிளைதான்னும் சொல்றாங்க. ரெண்டாயிரத்து முன்னூத்திப் பதினேழு வருஷம் ஜீவிச்சு இருப்பது கஷ்டம் இல்லையோ....    கோவில்களில் அகண்ட தீபம் பல நூற்றாண்டுகளா எரியுதுன்னு சொல்றதும் இப்படித்தானே.... அந்த விளக்கில் இருந்து புது விளக்குக்கு பற்ற வைச்ச ஜோதி? 

இந்தக் கோவிலில் இருக்கும் ம்யூஸியம் அண்ட் லைப்ரரிக்குள் போகவும் நாம் வாங்கின டிக்கெட்டுலே அனுமதி இருக்குன்னாலும், இப்பவே மணி அஞ்சே முக்கால் ஆகுது... இருட்டுமுன் கிளம்ப வேணாமான்னு போகலை.
வயது முதிர்ந்த பிக்ஷுவுக்கு வணக்கம் சொல்லி வந்தேன்.
அடுத்த கொஞ்ச தூரத்தில் ஜேதவன விஹார மாவத்தைனு பார்த்தோம்.  அபயகிரி விஹாரை போலவேதான் அசப்புலே இருக்கு. ஆனால் மேலே கோபுரம் பழுதாகிக்கிடக்கு.மூணாம் நூற்றாண்டுலே மன்னர் மஹாசேனா   கட்டியது.  பின்னே மன்னர்  பராக்ரமபாஹு ஆண்ட காலத்தில் (கிபி 1153 முதல் 1186 வரை) புதுப்பிச்சு இருக்கார்.

அவருக்குப்பின் இந்த  அரசாட்சி  (ராஜரட நாகரிகம்) பதிமூணாம் நூறாண்டில்  முடிவுக்கு வந்துருக்கு. மண்மேடா அழிஞ்சு போன  இந்த சைத்யாவை, ப்ரிட்டிஷார் ஆட்சியில்  மீட்டெடுக்க முன்வந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில்  கொஞ்சம் வேலைகள்  நடந்துருக்கு.  அப்புறம்  1948 இல் சுதந்திர நாடானபிறகு தொல்லியல்துறை  இதை  1981 இல் ஏற்றெடுத்துருக்காம்.  இதை சரிப்படுத்த ஏராளமான பொருட்செலவு ஆகும் என்பதால் அதுக்குண்டான வழியைப் பார்த்துக்கிட்டு இருக்காங்களாம்.
அநேகமா முக்கியமானவைகளைப் பார்த்தாச்சு என்பதால்  பழைய அநுராதபுரத்தில் இருந்து புது அநுராதபுரம் நோக்கிப் போறோம். ரெண்டு நகரங்களுக்கும் இடையில் இருக்கும்  பகுதியில்  ஒரு உணவுக்கடை கண்ணில் பட்டது. 
ஒரு டீ குடிச்சால் தேவலைன்னு அங்கே போனோம்.

எல்லா மேஜைக்குப் பக்கத்திலும் ஒரு குப்பைக்கூடை !  பிடிக்கலைன்னா அதுக்குள்ளே போட்டுடலாமோ?

 இப்படிக் குப்பைக்கூடைகளைச் சாப்பிடும் மேஜையின் பக்கத்தில்  வைப்பது என்னமாதிரி டிஸைன்னு தெரியலை.  குப்பைத்தொட்டியாண்டை உக்கார்ந்து சாப்பிட்டால் நல்லவா இருக்கும்?

சாப்பாடு தயார் என்றாலும்  இப்போ மணி ஆறேகால்தான். இதுக்குள்ளே சாப்பிட வேணாம். ஒரு டீ மட்டும்  போதும்.
குடிச்சுட்டு ஆறரைக்கு அறைக்கு வந்து சேர்ந்தோம்.முக்கியமான PIN குறிப்பு:  நண்பர்கள் முதல்முறையாக  அநுராதபுரம் பழைய நகரைப் பார்க்கப்போகணுமுன்னா.... கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பிப்போங்க. காலை ஏழு முதல் மாலை அஞ்சரைவரை நாம் வாங்கும் டிக்கெட் செல்லுபடி ஆகும். நின்னு நிதானமா எல்லாத்தையும்  பார்க்க எப்படியும் ஒரு அஞ்சாறு மணி நேரமாவது வேண்டி இருக்கும்.. நாம் இங்கேதான் தப்பு பண்ணிட்டோம். நாலு மணிக்குப் போய்ச் சேர்ந்ததால் ஒன்னரை மணி நேரத்தில் ஒரே ஓட்டம்தான்.....


தொடரும்............  :-)


5 comments:

said...

"எனக்கொரு தங்கமரம் வேண்டும் என்ற பேராசையை பெருக்கி விட்டார்" ஹா...ஹா.. இங்கிருக்கும் பிரமாண்டமான புத்தகோவில்களை பார்த்தால் எல்லோருக்குமே ஆசை பெருகும்தான்.
நாங்கள் மிகிந்தலையும் சென்றதால் இம்முறை அநுராதபுரத்தில் இரண்டு நாட்கள் தங்கிநின்று பார்த்தோம்.

said...

அழகான இடம்...

உடைந்திருக்கும் விஹாரை :(((

தொடர்கிறேன்...

said...

அருமை சிறப்பு நன்றி

said...

போதிமரம்....அழகு

போன பதிவில் பார்த்ததால் இப்போ பார்வை தானாவே சந்திர வட்டக் கல்லை தேடி பார்த்துச்சு

said...

சில கருத்துக்கள்

பண்டார நாயக்க என்றே உச்சரிக்க வேண்டும்

கிரி பத் என்றால் பால் சோறு என்று அர்த்தம்
(கிரி என்றால் பால் , பத் என்றால் சோறு )
கிரி பத் தொட்டு கொள்ள கார சட்னி அல்லது வெல்லம் சிறந்தது

மண் சட்டியில் விறகு அடுப்பிலேயே சமைப்பார்கள் . உண்மையில் அப்படி சமைக்கும் பல உணவகங்கள் உண்டு
விலை அதிகம் . நீங்கள் உண்டதும் அதே வகையான உணவகம் என்றே நினைக்கின்றேன்