Monday, November 21, 2016

அட! பரவாயில்லையே!!!! கோவில் பூனைகளுக்கு ரங்கனோடு இருக்கக் கொடுப்பினை !! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 99)

தசாவதாரக்கோவில் ஒன்னு இருக்காம். இதையும் முந்தாநாள் சந்திப்பில் நம்ம வெங்கட் நாகராஜ்தான் சொன்னார்.  அடடான்னு   யானைக்குப் போட்டுருக்கும் கண் பட்டியைக் கழட்டிவச்சேன்:-)   அரங்கத்தில் இருக்கும் வரை காலையில் உலா கண்டிப்பாப் போகணும் என்ற முடிவோடு இருப்பதால்....   கோவிலுக்குப் போகணும் என்றாலும், அங்கெ போயிட்டால்.....  அப்படியே ரெங்கன் இழுத்து உக்காரவச்சுடறானே....  நேரம் போவதே தெரியமாட்டேங்குதே.... அதனால்  தசாவதாரக்கோவிலுக்குப் போயிட்டு அங்கிருந்து பெரியகோவிலுக்குப் போகலாமேன்னு கிளம்பினோம். அதிகாலை ஏழுமணிக்கு ஹயக்ரீவா வாசலில் கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க சாந்தா.



காரில்  போறவங்களுக்குன்னே ஏகப்பட்ட ஒருவழிப் பாதைகளை ஏற்பாடு பண்ணி வச்சுருக்கு ஸ்ரீரங்கம். கோவிலுக்கே   மேலூர் ரோடில் போய் மேற்கு கோபுரவாசல் வழியாகப்போய் சுத்தோ சுத்துன்னு சுத்தித்தான்  ரங்கா கோபுரத்தாண்டை போய் இறங்கவேண்டி இருக்கு. அதே மேலூர் ரோடில் இன்னும் கொஞ்சதூரம் போனால்  தசாவதார சந்நிதிக்கு வலது பக்கம் திரும்பலாம்.  வழி இந்தப்பக்கம்னு போர்டு இருக்கு.

ஏழு  அஞ்சுக்கு   அங்கே போய்ச் சேர்ந்தோம். தெரு முடியும் இடத்தில் கோவில் மண்டபம் போல ஒன்னு. கம்பிக்கதவுகளுடன் மூடி இருக்கு.  அதுக்கு  வலதுபக்கம்  சட்னு பார்த்தால் வீடு போலவே இருக்கும்  தசாவதார சந்நிதி.   வாசக்கதவைப் பார்த்தால்தான் கோவிலாட்டம் தெரியுது.
தனிக்கோவில்தான். ஆனால் சந்நிதின்னு பெயர்!  அஹோபிலமடத்தின் பொறுப்பில் இருக்கும் கோவில்.
ஏழரைக்குத்தான் நடை திறப்பாங்களாம். அரைமணி நேரம் தேவுடு காக்க வேணாமேன்னு ரெங்கனைத் தேடிப்போயிட்டோம். கோவிலுக்குள் கலகலன்னு கூட்டம். வழக்கமான சுத்துதான் நமக்கு. சக்ரத்தாழ்வார் சந்நிதிப்பக்கம் போனால் பூனையார்  என்னமோ சாப்புடறார். என்னவா இருக்குமுன்னு கவனிச்சால்....  கேட் பிஸ்கெட்ஸ் !!!   அட!





அப்புறம் சுத்தலில்  கண்ணில் பட்ட  பூனைகள் எல்லோருமே அங்கங்கே ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. சில இடங்களில் கிண்ணங்களில் பால்வேற!  பரவாயில்லையே...    அப்புறம்தான் கண்ணில் பட்டார் கையில் கூடையோடு ஒருவர்.  கூடையில் இருந்து ப்ளாஸ்டிக் ஜாரைத் திறந்து  பிஸ்கெட்ஸ் வச்சுக்கிட்டு இருந்தார். பெடிக்ரீயாம்!!!

பூனைகளுக்கும் தெரிஞ்சுருக்கு எந்த ஏரியாவில் சாப்பாடு வைக்கும் இடம் எதுன்னு!  இவருக்கும் தெரிஞ்சுருக்கு பூனைகள் எங்கெங்கே  காத்திருக்குன்னு!  எல்லாம் ஒரு அண்டர் ஸ்டேண்டிங்கதான் :-)

தினம் ஒரு வேளை சாப்பாடு போடறாங்களாம், கோவில் வகையில். நம்ம ராமானுஜர்  கோவில் ஒழுகு என்று கோவில் இயங்க வேண்டிய நடைமுறையில் ஒருவேளை எழுதி வச்சுருக்காரோ என்னவோ!
ஸ்ரீராமானுஜர் சந்நிதிக்குள் போனோம். முன்மண்டபத்தில் அட்டகாசமான ஓவியங்கள். முதலில் போய் குரு வணக்கம் செஞ்சுட்டு, கருவறையை  வலம் வந்தபின் மண்டபத்துச் சித்திரங்களைக் க்ளிக்கினேன். மேல்வரிசையில் சுதைச்சிற்பங்களும், கீழே சுவரில் ஓவியங்களுமா  இருக்கு.


வலத்துக்குப் பதிலா  இன்றைக்கு  'இடம்' போய்க்கிட்டு இருக்கோம்.
சேஷராயர் மண்டபம் என்னைப்பிடிச்சு இழுத்தது. விடமுடியுதா என்ன? க்ளிக் க்ளிக்.
நேரெதிரே ஆயிரங்கால் மண்டபம்.  இந்த ரெண்டு மண்டபங்களுக்கும் இடையில் இருக்கும் மணல்வெளி எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு நிலாக்காலத்தில்  அங்கே உக்கார்ந்தால்  ஆத்தங்கரை, பீச் எஃபெக்ட் இருக்குமுல்லெ!   ஹூம்....அதுக்கெல்லாம் ஏது வாய்ப்பு? :-(
ஆயிரக்கால் மண்டபம் வழக்கம்போல் பூட்டிக்கிடக்கு.  ஆயிரம்கால்னு சொல்றோமெ தவிர உள்ளே ஆயிரம் கால் இல்லையாக்கும்! 953 கால்கள்தான்.  பாக்கி 47 தூண்களைப் பனைமரத்தை வச்சு ஆயிரம் ஆக்குவது கைசிக ஏகாதசி சமயத்தில்தான். மண்டபத்தின் ஓரமாகவே போய் யானையை இன்னொருக்காப் பார்த்தேன். தும்பிக்கையால் 'அவனை' அணைச்சுப் பிடிச்சிருக்கு!
தாயார் சந்நிதிக்குப் போகலாமுன்னு  அந்தப்பக்கம் போகும் வழியில் தன்வந்திரி சந்நிதிக்குள் போய் ஒரு கும்பிடு. அப்படியே தீர்த்தக்கரை வாசுதேவப்பெருமாள் சந்நிதிக்குப்போனால்...  அங்கே சில பெண்கள் தேங்காய் துருவுதல், கறிகாய் நறுக்குதல் போன்ற வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கோவில் மடைப்பள்ளிக்கு உபகாரமாம். எல்லாம் தன்னார்வலர்கள்!  சேவை செய்யும் எண்ணமும் ஆர்வமும் இருந்தால்  கோவிலில் வேலையா இல்லை? நல்லா இருக்கணுமுன்னு  மனசார வாழ்த்தினேன்!

அப்பதான் நினைவுக்கு வந்தது....நேத்து ராத்ரி    கண்ணாடி ஆண்டாள் பார்க்க வந்துட்டு ஏமாந்து போனது.  முதலில் அங்கே போகலாம்....  சந்திரப்புஷ்கரணி வழியா வந்து கோதண்டராமரை தரிசனம் பண்ணிக்கிட்டுப் பரவாசுதேவர் சந்நிதிக்குள் போனால்.... இடதுபக்கம் கண்ணாடிக்கு முன்னால்  மடிசாரும், நீண்ட பின்னலும்,  ஜடைவில்லையுமா, அலங்காரத்தோடு நிற்கும் ஆண்டாளைக் காணோம் :-(  உலோகச்சிலை  மட்டும்தான்  இருக்கு !  விசாரிச்சால்....   வேற ஏற்பாடு நடக்குதாம். அதுவரை கண்ணாடி அலங்காரமெல்லாம் கிடையாதுன்னு பதில்.  பரவாசுதேவர் மட்டும் தேவிகளோடு  வைகுண்டவாசனா உக்கார்ந்துருக்கார்.
சொன்னவண்ணம் செய்த பெருமாள் சந்நிதிக்குப் போகும் வழியில் இன்னொரு மணல்வெளி இருக்கு.  அங்கே  மணல்வெளி சீனிவாசப்பெருமாள் சந்நிதி,  ஸ்ரீபோஜராமர் சந்நிதி, ஸ்ரீவேணுகோபாலன் சந்நிதி, சமய நூலகம் எல்லாம் இருக்குன்னாலும்   பெரும்பாலும் மூடித்தான் இருக்கும். எந்த சந்நிதி திறந்துருக்கோ அங்கே போய் ஸேவிச்சுக்கணும்.
நம்ம பார்த்தஸாரதி சந்நிதிகூடத் திறந்துருந்தது. தேர்த்தட்டின் மேலே நிற்கும் அர்ஜுனனுக்கு,   திரும்பி உக்கார்ந்து உபதேசிக்கிறார் தேரோட்டி. அந்த பீடத்தை மூடி இருக்கும் திரையை உயர்த்திக் காமிச்சார் பட்டர்.  கீழே   தேர்ச் சக்கரங்கள் இருக்கு!!!!

 காலை வெறும் வயத்தோடே  நடையா இங்கேயும் அங்கேயும் போனதுலே லேசா ஒரு பசி.  இப்ப பிரஸாத ஸ்டாலுக்குப் பக்கம் வந்துருந்தோம். ஒருவேளை  வாசனை... பசியைத் தூண்டி இருக்கலாம்.  ஒரு சக்கரைப் பொங்கல் மட்டும் வாங்கி, நம்மாழ்வார் சந்நிதிக்குப் பக்கம் உக்கார்ந்து  ஷேர் பண்ணிக்கிட்டோம்.

சரி  கிளம்பலாம்னு  ரங்கா கோபுரம் வழியாக வெளியே வர்றோம், கீரை மூட்டை மாதிரி துளசி மூட்டை!
தசாவதார சந்நிதி (கோவில்)  போகணும் இப்போ. போனோம்.  கோவில் திறந்து இருக்கு.  உள்ளே  பத்து மூலவர்களுடன் லக்ஷ்மிநாராயணப்பெருமாள்  உற்சவராக இருக்கார் !


நம்ம திருமங்கை ஆழ்வார் இருக்காரே....  அவர் ரங்கனுக்காக    கோவில் வேலைகளை எல்லாம்  இழுத்துப் போட்டுக்கிட்டு ஏகப்பட்ட சேவை செஞ்சுக்கிட்டு இருந்தார்.  கோவில் வேலைகளுக்கும், தினம் ஆயிரம் வைணவர்களுக்கு விருந்து வைப்பதற்கும் தேவையான காசு சம்பாதிக்கக் கொள்ளை அடிக்கவும் தயங்காதவர் இவர், இல்லையோ!

இவருடைய பக்தியை மெச்சி , தனக்கு சேவை செய்தவருக்கு ஸேவை சாதிச்சுருக்கார் பெருமாள். அதுவுமெப்படி? தசாவதாரம் உருவங்களைக் காமிச்சுருக்கார். இங்கே இதே இடத்தில் கொள்ளிடக்கரையில்!  அந்தக் காலத்தில் இவ்ளோ வீடுகளும் இத்தனை தெருக்களுமாவா இருந்துருக்கும்?  ஆற்றுக்குப் பக்கத்தில்  ஜிலோன்னு வெற்றிடமாத் தானே இருந்துருக்கணும்!
மஹாவிஷ்ணுவின் ஏகப்பட்ட அவதாரங்களில்  இந்த தசாவதாரம்னு பத்து அவதாரங்கள்தான்  முன்னிலையில் இருக்கு!  இங்கே  அதற்கான கோவிலும்  ஆச்சு. ரொம்பப்  பழமையான கோவில்னுதான் சொல்றாங்க. நம்ம திருமங்கை ஆழ்வாருக்கும் தனியா ஒரு சந்நிதி உண்டு.
அஹோபில மடத்து  ஜீயர் 41 ஆம் பட்டம்  ஸ்ரீவண் சடகோப ஸ்ரீலக்ஷ்மிந்ருஸிம்ஹ யதீந்த்ர மஹாதேசிகன், 44 வது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக  யதீந்த்ர மஹாதேசிகன் ஆகியோரின் பிருந்தாவனம் தனிச்சந்நிதியாக  இங்கே இருக்கு!

கல்கி தவிர (இன்னும் அவதாரம் எடுக்கலை பாருங்க!) மற்ற ஒன்பது அவதாரங்களும் ஒன்பது கிரகங்களுக்கு அதிபதியா இருந்து  கிரகதோஷம் போக்குவதாக பட்டர் ஸ்வாமிகள் சொன்னார். ராமன் -  சூரியன், க்ருஷ்ணன் - சந்திரன் இப்படி. சனி  யாருன்னு மட்டும் கேட்டுக்கிட்டேன்.... கூர்மமாம்!  ஆமை போல மெல்லவே வரட்டும். ஆனால்.... முயல் போல  சீக்கிரம் போகப்டாதோ? ஏழரை வருசம்  எடுத்துக்கிட்டா எப்படி?
41 ஆம் பட்டம் ஜீயர் காலத்தில் சம்ரோக்‌ஷணம் நடந்துருக்குன்னு கல்வெட்டு சொல்லுது.  6- 9.1940 !  ஆச்சே 76 வருசம். ....   இன்னொரு கல்வெட்டில் ரெண்டு லக்ஷம் ரூபாய்கள் செலவில் புனருத்தாரணம் செஞ்சதாப் போட்டுருக்கு. வாசக்கதவு அப்பதான் புதுப்பிச்சு இருப்பாங்க போல.
நாங்கள் உள்ளே போய்  வணங்கிட்டுக் கிளம்பினோம்.  நேரா ஹயக்ரீவா பாலாஜி பவன்தான்.  மினி டிஃபன் ரெடியாம்.  எனக்கு அதே ஆகட்டும்! சாம்பார் பக்கெட் சூப்பர்!  நம்ம வீட்டு சுண்டல் வாளியை விடப் பெருசு :-)
 ஒரு  அரைமணி நேரம் ரெஸ்ட் என்ற பெயரில் வலை வீசி, மெயில் பார்த்துட்டு, மகளுக்கு  மெயில் அனுப்பிட்டுக் கிளம்பணும்!

தொடரும்........  :-)

16 comments:

said...

ரசித்தேன்.

said...

//சக்கரைப் பொங்கல்// நன்றி
//மினி டிஃபன்// நன்றி

தொடர்ந்தும் வருகிறேன். நன்றி

said...

உங்கள் எழுத்துகளில் ஸ்ரீரங்கனிடம் ஒரு bias தெரிகிறது வாழ்க வளமுடன்

said...

பூனைகள் என்றாலே உங்களுக்கு கொள்ளைப் பிரியம். சொல்லவும் வேண்டுமோ?

said...

நம்ம பக்கங்கள்ல அதிகாலையை இன்னும் சுகானுபவமாக்குவதே கோலமிடுதல்தான். என்ன அழகா போட்டிருக்காங்க அந்தம்மா!!!

said...

என்ன ஒரு நேர்த்தியான இழைகள்.. கோணாமானா என்று இழையாமல் பிசகாத அழகிய கோடுகளாக விழுந்திருக்கும் இழைகள்.. கோலம் சூப்பர்.

பூனைகள் விஷயமும் சுவாரஸ்யம்.

said...

அட.. பூனைக்கெல்லாம் சாப்பாடு போடுறாங்களே. கோயில் நிர்வாகமே அதைச் செய்யுதுன்னா ஆச்சரியமாத்தான் இருக்கு.

தன்வந்திரி கோயில் நினைவிருக்கு. மேல ஏறிப் போகனும்னு நெனைக்கிறேன். சரியா?

இந்தப் பெண்கள் கோயில் வேலைகளில் உதவி செய்றாங்களே... எந்தப் பெண்கள் வேணும்னாலும் செய்யலாமா? இல்லை, குறிப்பிட்ட இன்ன பெண்கள்தான் செய்யனுமா?

திருவரங்கம் போய் புளியோதரை சாப்பிடலையா? சர்க்கரைப் பொங்கல் மட்டும் வாங்கியிருக்கீங்களே? ஆனா ஒன்னு.. முன்னப் போல இல்ல. எல்லாமே சுமார் தான்.

தசாவதாரக் கோயில் இப்பத்தான் கேள்விப்படுறேன். வண்ணத்துப்பூச்சி பூங்கா வேற பக்கத்துலயே இருக்கு போல.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் வருகைக்கு நன்றி! மீண்டும் வருக :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஐயோ..... அப்படியா சொல்றீங்க!!!!

said...

வாங்க தமிழ் இளங்கோ.

யானையும் பூனையும்தான் என் ஐஸ்வர்யங்கள் :-)

said...

வாங்க சாந்தி.

அழகுக்கோலத்தின் கைகளுக்குச் சொந்தக்காரரும் ஒரு 'சாந்தி' தான் !!!!

said...

வாங்க ஸ்ரீராம்.

மார்கழியானால் காலை அஞ்சரைக்கெல்லாம் அக்கா எழுப்பி விட்டுருவாங்க. நம்ம வீட்டு கோலம் ஸ்பெஷலிஸ்ட் நாந்தான் அந்தக் காலத்தில்!

அதுவும் எட்டாப்பு படிக்கும் காலம், அந்த ஊரில் பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கான ஒரே ஒரு பொழுதுபோக்கு கோலம்தான். எந்த நோட் புக்கின் கடைசிப்பக்கத்தைத் திருப்பினாலும் கோலமே கோலம்தான் :-)

இந்த நினைப்பில்தான் இங்கே பரீட்சார்த்தமா வச்சு நடத்திய இண்டியன் கலைப்பொருட்கள் கடைக்கு 'கோலம்' என்று பெயர் வைத்தேன் :-)

said...

வாங்க ஜிரா.

இந்தியாவில் இப்படி என்பதுதான் ஆச்சரியம்! பூனை சாப்பாட்டைச் சொல்றேன்! சமீபத்தில் மயிலையின் கயிலையை தரிசிக்கப்போனப்ப, அங்கே ஒரு பெண்மணி பாட்டிலில் பால் கொண்டுவந்து அங்கே இருக்கும் பூனைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் ஊத்திக்கிட்டு இருந்தாங்க. இதுதான் உண்மையான சேவை! பாராட்டிட்டு வந்தேன்.

உண்மையான வைஷ்ணவனுக்கு சாதி வேற்றுமை இருக்கா என்ன? கோவில் வாலண்டியர்களும் அப்படித்தான்னு நினைக்கிறேன். ராமானுஜரே அப்படித்தானே இருந்தார்!

தன்வந்த்ரி கோவிலுக்கு ஒரு ஏழெட்டுப் படி ஏறித்தான் போகணும்.

said...

// உண்மையான வைஷ்ணவனுக்கு சாதி வேற்றுமை இருக்கா என்ன? கோவில் வாலண்டியர்களும் அப்படித்தான்னு நினைக்கிறேன். ராமானுஜரே அப்படித்தானே இருந்தார்! //

நல்ல கருத்து டீச்சர். அப்படியே இருந்தால் மகிழ்ச்சி.

இராமானுசரைப் போல ஆண்டவன் மேல் அன்பு வைத்திருக்கும் யாருக்கும் சாதி மத வேற்றுமைகள் கிடையாது. அப்படி சாதி மத வேற்றுமைகள் வெளியில் தெரியாவிட்டாலும் மனதுக்குள் இருந்தால் அவர்கள் அன்பு ஆண்டவன் மேல் அல்ல என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

said...

"தசாவதாரகோவில்" தமிழகத்தில் எத்தனை கோவில்கள்.அருமை.