Monday, June 27, 2016

திருத்தெற்றியம்பலம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 52)

சொன்னால் நம்பமாட்டீங்க.  குடமாடு கூத்தனிடம் இருந்து கிளம்பின ரெண்டாவது நிமிஷம் இன்னொரு திவ்யதேசக் கோவிலின் வாசலில் இருந்தோம்! திருத்தெற்றியம்பலம்!  ஜஸ்ட் 500 மீட்டர்தான்! ஊருக்கும் கோவிலுக்கும்  ஒரே பெயர்!   இந்த 108 வைணவ திவ்யதேசங்களில் அம்பலம் என்று பெயருள்ளது இது மட்டும்தானாம்!   உடனே     கோவில்கள் லிஸ்ட் பார்த்தேன்.  அட! ஆமாம்லெ.  கேரள நாட்டு திய்வதேசங்கள்னு பதிமூணு அம்பலங்கள்   போய் வந்தோமே....  அங்கே கூட  அம்பலமுன்னு  பெயருள்ள எதுவும் இல்லையே!

கோயில்வாசல் முகப்பு உள்ளே இருக்கும் சாமியின் ப்ரீவ்யூ காமிச்சது. ஸ்ரீ பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோவில்.
வாசல் கடந்து வெளி( முற்றம்)பிரகாரத்தில் பலிபீடம், பெரிய திருவடி கடந்தால் குட்டியா ஒரு மூணு நிலையுள்ள ராஜகோபுரம். கொடிமரம் இல்லை.
ரொம்பப் பெரிய கோவில் கிடையாது. மூலவர் செங்கண்மால் என்ற ரங்கநாதர். பாம்புப் படுக்கையில் நான்கு கைகளுடன்  கிடப்பில்.  கூடவே ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள். (நம்ம ஒரிஜினல் ஸ்ரீரங்கத்து ரங்கநாதருக்கு  ரெண்டே கைகள்தான். தேவியரும் அருகில் கிடையாது)  உற்சவர்கள், சந்தான கோபாலகிருஷ்ணன், சக்கரத்தாழ்வார் எல்லாம் பஞ்சலோக விக்ரஹமா இருக்காங்க.
முன்மண்டபத்திலேயே  ஆழ்வார்கள் பன்னிருவர், ஆஞ்சி எல்லோருமொரு வரிசையில்.


தாயாருக்குத் தனி சந்நிதி. செங்கமலவல்லித் தாயார்.
அப்புறம்.... ? அப்புறம் ஏது? அவ்வளவுதான் சந்நிதிகளே!   இருக்கும் ஒரே வெளிப்பிரகாரத்தில் பின்பக்கத்தில்  பத்துப்பனிரெண்டு  வாழை மரங்கள்.  நாலைஞ்சு செடிகள்.  பக்கவாட்டில் ரெட்டைக் கிணறு. எட்டிப் பார்த்தேன்.  ஒன்றின் உள்ளே ஒரு செடி முளைச்சுக்கிடக்கு!

அடுத்ததிலும் தண்ணீர் இருக்கு. ராட்டினமும் தாம்புக்கயிறும் குடங்களுமா....    இதுதான் அபிஷேக ஆராதனைகளுக்குன்னு  சொல்லும்வகையில்:-)


மண்டபம், தூண்கள்,  சிற்பங்கள் இப்படி ஒன்னும் இல்லை பார்த்து ரசிக்கவோ க்ளிக்கவோ.....
ஹிரண்யாக்ஷன், பூமிதேவியை அப்படியே பாய் போலச் சுருட்டிக்கிட்டு  பாதாளலோகத்துக்குள் கொண்டு போய் ஒளிச்சு வச்சுடறான். இவன் நம்ம பிரஹலாதனின்  தந்தை  ஹிரண்யகசிபுவின் அண்ணன்.  தேவர்கள் எல்லோரும் பெருமாளிடத்தில் போய் இந்த அக்கிரமத்தைச் சொல்றாங்க.  பெருமாள்  வராஹ அவதாரம் எடுத்துக் கிளம்பறார்.

 மஹாலக்ஷ்மித் தாயாரும், ஆதிசேஷனும் , 'நீங்க இல்லாத இடத்தில் எங்களுக்கு என்னவேலை? நாங்களும் கூடவே வர்றோமு'ன்னு சொல்ல,  'அங்கெல்லாம் வரப்டாது. ஆபத்து நிறைஞ்ச இடம். நீங்க போய் பலாசவனத்தில் தவம்செஞ்சு எனக்காகக் காத்திருங்கோ. நான் போன வேலையை முடிச்சுட்டு அங்கே வந்துடறேன்'னார்.

இவுங்க இங்கிருந்து கிளம்பிப்போறதுக்குள்ளே  வேலை முடிஞ்சு பூமியை அதன் இருப்பிடத்துக்கு கொண்டுவந்தாச்சு. ஆக்ரோஷமாக ஹிரண்யாக்ஷகனோடு போர் செஞ்சதால் கண்ணேல்லாம் சிவந்து போன கோலத்தில் ரொம்பக் களைப்பா வந்தவர், படுக்கை அங்கே வந்தாச்சுன்னதும் கிடந்துட்டார்! செங்கண்மால். சரியான பெயர்தான்:-)

திருமங்கை ஆழ்வார் வந்து தரிசனம் செஞ்சு, பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.  இங்கேயும் பத்துப் பாசுரங்கள்.  ( 1238 -1247 - 10 பாசுரங்கள்.)
மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார்குழையும், தந்தை
கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,
நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,
சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.


காலை 6 முதல் 11, மாலை 5 முதல் 8 வரை கோவில் 'திறந்திருக்கும் ' நேரம். ஆனால் நீங்க  இதை அப்படியே நம்பிப்  போகக்கூடாது. கம்பி வழியா மூலவரைப்பார்க்கலாம் என்றால் சரி. தீபாராதனை வேணுமுன்னால் பட்டர்ஸ்வாமிகள் இருக்காரான்னு தெரிஞ்சுக்கிட்டுப் போகணும்.

சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி
 யம்பலத்தென் செங்கண் மாலை,
கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் கொடிமாட
மங்கையர்கோன் குறைய லாளி
பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன
 பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்,
சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் சேண்விசும்பில்
வானவராய்த் திகழ்வர் தாமே.

திருமங்கை ஆழ்வார் வந்தகாலத்தில் இங்கே வரிசைவரிசையா மலைபோல் உயர்ந்த மாடங்கள் நிறைந்திருக்கும் தெருக்களாக இருந்துருக்கு!  

இப்போ........  ப்ச்....  ஒன்னும் சொல்றதுக்கில்லை :-(தொடரும்...........  :-)
10 comments:

said...

சின்ன கோயில்கள் எப்பவுமே நல்லது. கூட்டம் தொந்தரவு செய்யாம சாமியைப் பாக்கலாம். படங்களைப் பாத்தா கோயில் ஓரளவு துப்புரவா இருக்குற மாதிரி இருக்கு. போன கோயில் பட்டர் தான் இந்தக் கோயில் பட்டராவும் இருப்பார்னு நெனைக்கிறேன்.

said...

வாங்க ஜிரா.

நிம்மதியான தரிசனம்தான்.

அதே பட்டர்தான் என்பதால் இன்னும் நல்லதாவே ஆச்சு :-)

said...

தமிழ் புகுந்து விளையாடுற பெயர்களா இருக்கே அருமை !!!!! ஊர் பெயர் காரணம் என்னவோ ???

said...

சிறிய கோவிலாக இருக்கிறது.

தொடர்ந்து வருகிறேன்.

said...

இன்னும் எத்தனை கோவில்கள் இருக்கிறது.?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்த ஏரியாவில் மட்டும் மொத்தம் 13 கோவில்கள் இருக்கின்றன. இவை 108 வைணவ திவ்யதேசக் கோவில்கள் வகை. இதைத்தவிர ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்தியாவில் கோவில்கள் எண்ணிக்கைக்குப் பஞ்சமா என்ன?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆமாம். ரெண்டே ரெண்டு சந்நிதிகள்தான். புள்ளையார் கோவிலைவிடக்கொஞ்சம் பெருசு!

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

ஒருவேளை.... அப்போ இங்கே வந்த சேரநாட்டுக்காரர் வச்ச பெயராக இருக்குமோ?

said...

சிறிய கோவில் தான்...செங்கண்மால் நல்ல பெயர்..தொடர்கிறேன்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

வருகைக்கு நன்றி.