Wednesday, May 20, 2015

நானா நானியில் மாமா மாமி! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 51)




பட்டாம்பி  பாத்திரக்கடைகளில்  செம்பு  டேக்ஸா! பார்த்தே பலகாலம் ஆச்சு.  பாலக்காடு வந்தவுடன், சீனிவாசனுக்கு ஒரு டீ ஸ்டாப்.  பேக்கரின்னு சொல்லும் கடைகளில் பாட்டில்களில் தீனிகள்.  கேரளா வந்தும் நேந்திரங்காய் சிப்ஸ்  தின்னலையேன்னு  ஒரு  அரைக்கிலோ  சிப்ஸ் வாங்கினேன். கோபாலுக்கு சக்கை  சிப்ஸ்.  தின்னு பார்த்து வாங்க சாம்பிள்  கிடைக்கலை. பல் போச்சு. நல்லாவே இல்லைன்னார்:(  எல்லாம்  அரைக்கிலோ  ஒருகிலோன்னு பொதிகள் போட்டே வச்சுருந்தாங்க.  தொங்கும் குலைகளில்   மூணு பழங்கள் எங்களுக்கு.  மொந்தன் போல குண்டா இருக்கு:-)


வாளையார் செக்போஸ்ட். வழியெங்கும் புது சாலை அமைக்கும் வேலைகளால் செம்மண் புழுதி நிரம்பிக் கிடந்துச்சு.   சட்னு காட்சி மாற்றம்.   நாம் தமிழ்நாட்டுக்குள் நுழையறோம் என்பதை உறுதிப்படுத்தும் சாலையோரக் குப்பைகள்.






கொஞ்ச தூரத்தில்  நம்ம கோவில் ஒன்னு  கோபுரத்துடன்!  பெரிய நந்தி ஒன்னு  தூரக்கே தெரிஞ்சது. திருமலையம்பாளையம் கண்ணன் ஹேண்டிக்ராஃப்ட்ஸ்!  புள்ளையாரும், சிவனும்  பெருமாளுமா.....இங்கே யார் வந்து  வாங்குவாங்க!

உக்கடம் பசுக்களை தரிசனம் செஞ்சதும்  கோவைக்குள் நுழைஞ்சோம். நம்ம கோபால் முகத்தில் ஒரு  தெளிவு.

எனக்கு  அவ்வளவா பிடிக்காமப் போயிட்ட ஊர் இது.   ஊரே ஏமாத்துதுன்னு நினைக்க வச்ச கசப்பான ஒரு சம்பவம்.  ஏற்கெனவே ரெண்டு முறை   வந்துருக்கேன்.  முதல்முறை நம்ம கேரள வாழ்க்கையில் ஒரு ரெண்டு நாள் வந்து போனோம். கோபாலுக்கு அங்கே எதோ ரெண்டு நாள்  கான்ஃபரன்ஸ். கூடவே ஒட்டிக்கிட்டு மருதமலை,பேரூர் சிற்பங்கள் பார்க்க  நானும் வந்தேன்.  அன்னபூரணாவில் சாப்பிட்ட நினைவு.

அடுத்தமுறை   குருவாயூரில் மகளுக்கு துலாபாரம் கொடுக்க வந்து  கோவையில் தமிழ்நாடு ஹொட்டேலில்  தங்கி இருந்தோம். கோவிலுக்கு உடுத்த ஒரு வேஷ்டி வேணுமேன்னு  பக்கத்தில் இருந்த கடைகள் ஒன்றில் போய் ஒரு வேஷ்டி வாங்கிட்டு அறைக்கு வந்து அதைக் கட்டிப் பார்க்கலாமுன்னு  பிரிச்சார் கோபால்.  பெருசா ஒரு கறை:(  வெளியே தெரியாதபடி  பக்குவமா மடிச்சு வச்சுருக்காங்க.  உடனே திரும்பி  அதைக் கொண்டுபோய் கடையில் கொடுத்தால் அதை வாங்கிக்க மாட்டேன் என்றார் கடைக்காரர். ஏன் இங்கேயே பிரிச்சுப் பார்க்கலைன்னு  சத்தம் போட்டார்.  எனக்கு  ரொம்பக் கோபம்.  நீயே  வச்சுக்கோன்னு அங்கேயே வீசிப்போட்டுட்டு   நாலு கடை தாண்டி இன்னொரு இடத்தில்  வேஷ்டி ஒன்னு பிரிச்சுப் பார்த்து வாங்கினோம். அந்த சம்பவம் நடந்து கால் நூற்றாண்டு  ஆனாலும்  மனசுலே பதிஞ்சு போச்சு யானைக்கு. 

கோவை ரொம்பவே மாறிப்போச்சுன்னு கோபால் சொல்லிக்கிட்டே வந்தார். போக்குவரத்து நெரிசலில்  சிங்காநல்லூர்  அலாஃப்ட் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தோம். பகல் ஒன்னரை.  அறை நல்லாவே இருக்கு.

அன்னபூரணா என்று ஆரம்பித்தவளிடம்,  'ஆனந்தாஸ் நல்லா இருக்கும்' என்று வரவேற்பில்  சொன்னதால் பகல் சாப்பாட்டுக்குப் போனோம். லக்ஷ்மி மில் ஜங்ஷன் கிளை.   நல்ல கூட்டம்.  இருவது நிமிசம்போல காத்திருக்க வேண்டியதாப் போச்சு.  அப்புறம்  இடம் கிடைச்சு  சாப்பாடு வரவே  மணி ரெண்டே முக்கால். ஆரோகனா மெனு ஸ்பெஷல் மீல்ஸ்  ரெண்டு.  வெவ்வேற  டிஸைன் தட்டுகளில்  வந்துச்சு. பார்த்தால் ஏனோதானோன்னு  பரிமாறின மாதிரி இருந்துச்சு. இதுலே   ஒரு தட்டில்  ஒரு கிண்ணம் எண்ணிக்கையில் குறைவு. (அதெல்லாம் சாப்பிடலைன்னாலும் வகைகளை எண்ணிருவேனே!) கடைசியில் சீஸனல் ஃப்ரூட்ன்னு  பயங்கரப் புளிப்பா  ஆரஞ்சு சுளைகள்.    மைனஸ் மார்க் போடவேண்டியதாப் போச்சு. சர்வீஸ்  கூட சரி இல்லை:(


பார்க்கிங் கிடைக்கலை .  எங்கியாவது  வண்டியை வெளியே  நிறுத்திக்கறேன்னும் வேற இடத்துலே சாப்புடறேன்னும்  சீனிவாசன் தப்பிச்சுப் போயிட்டார். எலுமிச்சம் சாதம், தயிர் சாதம் ,நாலு மெது வடை(யாம்!)

இவ்ளோ சடைச்சுக்கறவள் ஏன்  கோவைக்கு வந்தேன்னு   கேட்டால்....  மாமா, மாமியைப் பார்க்கத்தான். ஏற்கெனவே இவுங்களைப் பத்தி நிறைய எழுதி இருக்கேன். ராஜன்  அண்ட் அகிலா   தம்பதிகள்.  அன்புக்கு ரத்த உறவா இருக்கணுமா என்ன? ஒரு ஒன்பது வருசத்துக்கு முந்தி எழுதுன  துள்ளுவதோ முதுமை  இங்கே!


தொண்டமுத்தூர்  வரை போகணும்.  27 கிமீதான். நம்ம  ஹொட்டேலில் இருந்து  ஒரு மணி நேரப் பயணம்.  'சரியான விலாசத்தைக் கொண்டுவர மறந்துட்டேன்'னார் கோபால்.  ப்ருந்தாவன் பாரடைஸ் ஸீனியர் ஸிட்டிஸன் ஹோம் என்ற நினைவு.  முந்தி  மாமா அனுப்பிய மெயிலில் விலாசம் இருக்கு. செல்லில் தேட ஆரம்பிச்சார் . பிருந்தாவனத்துக்குள் நுழைஞ்சுருந்தோம்.  சொர்கத்தைத்தேடி போகும்போது ஒரு இடத்தில்  துணிகளை  இஸ்த்ரி செய்யும்  வண்டி.  இவுங்க சரியாச் சொல்லிருவாங்கன்னு  விசாரிச்சோம்.  பாரடைஸ்  போக வேறு கேட் இருக்குன்னார்.  அதுக்குள்ளே மாமாவின் செல் நம்பர்  கிடைச்சுருச்சு.  கூப்பிட்டுப் பேசினால்....  'அடடா....ப்ருந்தாவனமா போயிட்டீங்க?  நானாநானிக்கு  மாறிட்டோமே.  உங்களுக்கு மெயில்  அனுப்பி இருந்தேனே'ன்னார் மாமா.  ஓக்கே  சலோ நானா நானி.

அங்கிருந்து  கிளம்பி நரசிபுரம் ரோடில் ஒரு எட்டு கிமீ!   கேட்டில் செக்யூரிட்டியே நம்ம வரவை எதிர்பார்த்துக்கிட்டு  இருக்கார்:-) மாமா சொல்லி வச்சாராம்.  வில்லா  அமைப்பில் வரிசையா  வீடுகள்.



உள்ளே முதல் 'தெரு'விலேயே  மாமாமாமி வீடு!  வீடுகளின் வரிசைக்கு எதிரில் அவரவர்களுக்கான கார் நிறுத்துமிடம்.  வியப்பால் விரிந்த என் கண்களைப் பார்த்த மாமா,  'முதலில் வீடு பார்க்க வந்தவுடன், கார் பார்க் பார்த்துட்டு இங்கே வந்துரணுமுன்னு  முடிவெடுத்துட்டேன்' என்றார்.  அவசர முடிவில்லை, அவசியமான முடிவு.


மாமி வீட்டுத் திண்ணை!

ட்யூப்லெக்ஸ் வீடுகள் போல  ரெவ்வெண்டு படுக்கையறைகள் உள்ள  அமைப்பு. இடம் போதாதுன்னா  ரெண்டையும் சேர்த்துக்கூட வாங்கிக்கலாம்.  அப்படியும் சிலர் வாங்கி இருக்காங்க. அடுக்களைதான்  சின்னதா இருக்கு. ஆனால் இங்கேதான்  சமைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

துணி துவைக்க வாஷின் மெஷின்.  துவைத்த துணிகளை  வெளியில்  கொடியில் காயவைக்கும் வேலை  மாமாவோடது:-)  கைகள்,தோள்பட்டைக்கான  எக்ஸர்சைஸ்!

காலையில்  6 மணிக்கு  காஃபி.  ஏழரைக்கு  ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி.  ஒரு பதினொரு மணி போல  எதாவது ஜூஸ். பகல் பனிரெண்டரைக்கு  லஞ்ச்.  மாலை  மூணு மணிக்கு  காஃபி. அப்புறம்  இரவு டின்னர்  ஒரு ஏழரை முதல்.  ரெண்டு பந்திகள்  எப்பவும்.

இடையில் கொறிக்க எதாவது வேணுமுன்னால் நாம் வாங்கி வச்சுக்கலாம்தானே!  முதல்கட்ட பேச்சுக்குப்பிறகு சுடச்சுட காஃபியும் ஸ்நாக்ஸ்ம்  கொடுத்தாங்க மாமி. நாங்க வர்றோமுன்னு தெரிஞ்சதும், ஃப்ளாஸ்க்கில்   கூடுதல் காஃபி வாங்கிவந்து வச்சுருந்தாங்க.

ப்ருந்தாவன் அவ்வளவா சரி இல்லையாம். இங்கே வந்தே இது மூணாவது வருசம். இடம் நல்லா இருக்குன்றது  இவுங்க ரெண்டு பேரையும் பார்த்தவுடனே புரிஞ்சது. வேலையில் இருந்து ஓய்வு  கிடைச்சப்புறமும்  மகிழ்சியான  வாழ்க்கையா அமைச்சுக்கறதுதானே முக்கியம், இல்லையா?
'எதுக்கு ஹொட்டேலில் தங்கறே? இங்கேயே நம்மோடு இருந்துருக்கலாம்.  வேணுமுன்னா இங்கேயே கெஸ்ட் ரூம்ஸ் இருக்கு'. அப்பா, அம்மான்னு  குடும்பத்தினரைப் பார்க்க வரும்  பிள்ளைகள் குடும்பம்  சிலசமயம் ஒருசில  மாதங்கள் வரைகூட தங்கிக்க முடியுமாம்.

காஃபி ஆனதும்  நானா நானியைச் சுத்திக் காமிக்கறேன் ,வான்னு கூட்டிக்கிட்டுப் போனாங்க.  வீடுகளுக்கு நடுவில்  பொதுக் கட்டிடம் ஒன்னு கம்பீரமா நிக்குது.  முகப்பு அலங்காரம் சூப்பர்!

கீழ்தளத்தில் சமையல் அறை, டைனிங் ஹால். சகல வசதிகளுடன்  மாடர்னா  இருக்கு சமைக்குமிடம். அன்றைய தினம்  மெனு போர்டில் எழுதிப் போட்டுருந்தாங்க.  கோவையில் காய்கறிகள் ஃப்ரெஷாவும் ரொம்ப நல்லாவும் கிடைக்குமுன்னு கேள்வி. அது நெசம்தான் என்றன அங்கே மறுநாள் சமையலுக்குக் காத்திருந்த முருங்கைக்காயும் கத்தரிக்காயும்:-)

 சாப்பாட்டுக்கு  மாசம் ஒரு தொகை கட்டணும்.  வீட்டு வேலைகள் பெருக்கித் துடைப்பது, வெளியே வாசல் சுத்தம் செய்வது, தோட்டம் பராமரிப்பு இப்படி  ஒரு தொகை  மாசாமாசம் உண்டு.  கணக்குப் போட்டுப் பார்த்தால் எல்லாம் நியாயமாத்தான் எனக்குத் தெரியுது. வெளியூர் போகும் சமயங்களில்  குறைஞ்சது ஐந்து நாட்கள்  இருக்கமாட்டோமுன்னால்  அந்த நாட்களுக்கு  உணவுக்கான கட்டணம்  கழிவு.















முதல்மாடியில் விஸ்தாரமான  வழிபாட்டுக்கூடம். சுவரிலிருக்கும் க்ருஷ்ணன்கள் அபாரம். எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு. உள்ளே நுழையும் கதவில் மயில்பீலிகள்:-)   நல்ல பெரிய சைஸில் விக்ரஹங்கள்.   முக்கிய பண்டிகைகள் எல்லாம் ஜோராக் கொண்டாடுறாங்க.  வெள்ளிகளில்  லலிதா  சகஸ்ரநாமம், சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம்,  மற்ற நாட்களில்  திருப்புகழ் பஜன் இப்படி  எதாவது  ஒரு  வழிபாடு. விருப்பம் இருக்கும்  எல்லோருமா வந்து   கூடி இருந்து  கும்பிட்டாறது.

இந்த பூஜைகளுக்கு இன்சார்ஜ் நம்ம மாமிதான்.  சென்னை திருப்புகழ் பஜனை கோஷ்டியின் தலையாக  பலவருசங்கள் இருந்த அனுபவம் இப்போ ரொம்பவே  பயன்படுது!   எதுக்கெடுத்தாலும்  'மாமியைக்  கூப்பிடு, மாமிகிட்டே கேட்டுக்கோ' என்று மாமிக்கு பயங்கர டிமாண்ட்.

'இப்பக்கூட கந்த சஷ்டிக்கு  ஒரு வாரம் சென்னைக்குப்போயிருந்தோம். முதல் நாள்  அடையாறு  அனந்தபத்மநாபசாமி கோவிலில்தான்' என்று மாமி சொன்னதும் திகைச்சேன்.  கந்த சஷ்டி முதல் தினம்  நம்ம அடையாறு  அனந்தபத்மநாபன்  கோவிலுக்குப் போனப்ப, ஹாலில்  நடந்துக்கிட்டு இருந்த விழாவுக்கும் போய் கொஞ்சநேரம் இருந்தேனே! கெமெராவில் இருந்த படத்தைக் காமிச்சால்....  ரொம்ப தூரத்தில் மாமி  முதல் வரிசையில்   முருகன் படத்துக்குக்கிட்டே இருந்தாங்களாம்!

அடுத்தாப்போல் ஒரு  லைப்ரரி/ ரீடிங் ரூம்

ரெண்டாம் மாடியில்  ஜிம்! ஜம்முன்னு இருக்கு!  அங்கிருந்து மொட்டை மாடிக்குப்போகலாம்.  விழாக்கள், ஒன்று கூடல் எல்லாம் நடத்திக்கொள்ளும் வசதி அங்கே!  கட்டிட முகப்புப் பகுதியில்  அழகான மர  ஊஞ்சல். ஸாலிட்டா இருக்கு !  க்ரேட்!  முதுமை ஊஞ்சலாடுகிறது .

எனக்கு' பேசாம  இங்கே வந்துறலாம் ' என்றே இருக்கு.  வாடகைக்கும்  இங்கே சில சமயம் வீடு கிடைக்குமாம். ஒரு மாசம் இருந்து பார்த்துட்டு முடிவு செய்யலாம், இல்லையா? வர்றதா இருந்தால் முன்கூட்டியே எனக்குச் சொல்லிடு. ஏற்பாடு செய்யறேன்னார் மாமி.

இங்கே நியூஸியிலும்  65 வயசானதும்  ரிட்டயர்மெண்ட் ஹோம்ஸ் என்ற  அமைப்புக்குள் நாம் போகும் வசதி உண்டு.  கட்டணம்தான் ரொம்பவே அதிகம். நம்  வாழ்நாள்  சேமிப்பையெல்லாம்  அங்கேயே கொட்ட வேண்டி இருக்கும். தொலையட்டுமுன்னு  பார்த்தால்..... சாப்பாடுதான்  நமக்கு சரி வராது.  ஒருவேளை, ரெண்டு நாள் சமாளிக்கலாம்.  ஆனால்  தின்னு ருசி கண்ட நம்ம நாக்கு, வெள்ளைக்காரர் சாப்பாட்டுக்கு  அடங்குமா?

அந்தக் காலத்தில்  சாயுங்காலம் ஆனா, கையில் ஒரு கிண்ணத்தில்  கொஞ்சம் எண்ணெயுடன்  தெருமுனையில் இருக்கும்  உள்ளூர்கோவிலுக்குப் போகும் பெண்களைப் பார்த்துருக்கலாம் நீங்க. அதுதான் அன்றையக் காலக்கட்ட லேடீஸ் க்ளப். அதைப்போல இங்கே  மாலை அஞ்சு அஞ்சே கால் ஆனதும்  பெண்மணிகள்  ஒவ்வொருத்தராக் கிளம்பி   மாமி வீடு இருக்கும் 'தெரு' முனையில் இருக்கும் ஒரு இடத்தில் வந்து சேர்ந்துடறாங்க. அதற்கான  பெஞ்சுகள் எல்லாம்  அங்கே  போட்டு வச்சுருக்காங்க.
அப்புறம்?   வேறென்ன  பேச்சு எங்கள் மூச்சு:-)
வீட்டில்  வேலைகள்  அதிலும் முக்கியமா சமையல் வேலை  இல்லாத காரணத்தால் எல்லோரும்  குளிச்சு ஃப்ரெஷா உடுத்தி நாள் பூராவும் வளைய வர்றாங்க(என் நினைப்பு) ஏறக்கொறைய  ஒரே வயசு போல ஒரு தோற்றம்.  "அட!  இது புதுப்புடவையா?  எங்கே வாங்கினீங்க?  இந்தக் கலர் உனக்கு நல்லா ஸூட் ஆகுது! " இப்படி லேசான சின்னப்பேச்சில் ஆரம்பிக்கும்  பேச்சு வேறே  எங்கெல்லாமோ சுத்தி வருது ஒரு  ஆறரை ஏழுவரை. இருட்ட ஆரம்பிச்சதும்  வந்ததைப்போலவே ஒவ்வொருவரா  நழுவக்  கூட்டம் இனிதே  கலைந்ததுன்னு தினமும் இப்படித்தானாம்.

அன்றைக்கு மட்டும் வெரி ஸ்பெஷல் டே!  நியூஸித் தோழியின் விஜயம்:-)

 "நான் சொல்லலே  நியூஸிலாண்டில்  எனக்கொரு  மருமாள் இருக்கான்னு!  என்னப் பார்க்கன்னே  இத்தனை தூரம் வந்துருக்காள். ஷீ இஸ் அ ரைட்டர் யூ நோ!  என்னமா எழுதறாள் தெரியுமோ? "




"வாங்கோ. வாங்கோ. நமஸ்காரம்.  எதுலே எழுதறீங்க?  விகடனா? கல்கியா?"

எழுதணும், எழுதறாள்  என்றால் இதுலேதான்னு  ஒரு தீர்மானம்.... அட ராமா.....

" ஐயோ!  அதெல்லாம் இல்லை. இண்டர்நெட்டில் எழுதறேன்...."

'ஏழெட்டு புக்ஸ் எல்லாம் போட்டுருக்காள். என்னன்னு சொல்லேன்'   இது மாமி.

மாமிக்கு  ரெண்டாம் வாய்ப்பாடு நல்லாவே வருது:-))))

கொஞ்சம் சுயப்ரதாபம் சொல்லி,  சிரிச்சு  மகிழ்ந்து  கலகலன்னு இருந்த அந்த நாளை மறக்க முடியாது.  இதுக்காகவாவது ஒரு மாசம் இங்கே வந்து தங்கிப் பார்க்கணும்.

மாமாவும் கோபாலும்   அவர்கள் உலகில்.  மென் ஃப்ரம்  மார்ஸ் :-)

ஒரு ட்ரைவ் போகலாமான்னு மாமா கார் சாவியை எடுத்தார்.  'இப்ப வேணாம். அடுத்த முறை வரும்போது' என்றேன்.

ஐ ஆம் எயிட்டி த்ரீ அன்ட்  ஐ ரிட்டயர்ட் இன் எயிட்டி த்ரீ  இவரது ஃபேமஸ் பஞ்ச் டயலாக் ஒரு காலத்தில்:-)


 ஏர் இண்டியா, இண்டியன் ஏர்லைன்ஸ் இதிலெல்லாம் சீஃப் எஞ்சீனியரா இருந்து  1983 இல் வேலையில் ஓய்வு பெற்ற பின் ஏர் நவ்ருவில் சீஃப் எஞ்சினியர் 1990 வரை.  அதன்பிறகு சென்னையிலேயே வேலை. ரஷ்ய இளைஞிகளுக்கு  ஏர்ஹோஸ்ட்டஸ் ட்ரெய்னிங் கொடுக்கும்  ஏவியேஷன் நிறுவனத்தின்  ஜிஎம் ஆக  இருந்தார்  ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்புவரை!


ஒன்னரை மணி நேரம்தான்  அங்கே இருக்க முடிஞ்சது.  அதுக்குள்ளே  நிறைய மகிழ்ச்சியான  நினைவுகளை  மனசில் பூட்டி வச்சுக்கிட்டேன்.

90  வயசு இளைஞரும் 85   வயசு இளைஞியும் நல்லா இருக்கட்டுமுன்னு பெருமாளை வேண்டிக்கறேன்.

மரண பயம் இல்லாததால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போறதுன்னு மாமா அடிக்கடி சொல்வார்!

புது ஊரில் இருட்டுக்குப்பின் வண்டி ஓட்டும் கஷ்டம் வேணாமேன்னு கிளம்பி  ஆறேமுக்காலுக்கு அலொஃப்ட் வந்து சேர்ந்தோம்.  ரூம் சர்வீஸில் எதையாவது  சாப்பிட்டுக்கலாம்.


நாளை  ஒரு முக்கியமான  வேலை கோபாலுக்காக:-)  அதன் பின் எனக்காக ஒரு  பதிவர்&எழுத்தாளர்  சந்திப்பு ,ஒன் டு ஒன்!

தொடரும்............:-)




27 comments:

said...

இந்தப் பதிவு எனக்கு ரொம்பவே புடுச்சுருக்கு. எல்லாமே பளீச். உண்மைதான் மரண பயம் இல்லாமல் வாழ்ந்தாலே முக்கால்வாசி ஆரோக்கியம் நம்மிடம் இருக்கும்.

said...

என்னே அழகான படங்கள்...! பேசும் படங்களும் உங்களுக்கு மூச்சு தான் அம்மா...

கோவை குசும்பும் பிரசித்தம்...!

மாமா மாமிக்கு வாழ்த்துக்கள்...

said...

அருமை. பதிவும் படங்களும் கருத்தும் மனதை அள்ளுகின்றன.

said...

வாங்க ஜோதிஜி.

100 ஆயுசு உங்களுக்கு!

said...

அருமையான பதிவு. நானா நானி பற்றி முன்னரே எங்கோ படித்திருக்கிறேன்.

சிறப்பான தம்பதிகளைச் சந்தித்து அது பற்றி எங்களுக்கும் விவரங்கள் தந்தமைக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

மாமா மாமி இந்தப் பதிவைக் கட்டாயம் படிப்பாங்க. அவுங்க தவறவிட்டாலும், அமெரிகாவில் இருந்து சேதி போயிரும்:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

நானா நானியிலும் நமக்கு இப்போ மூணு வாசகர்கள் சேர்ந்துட்டாங்க லேடீஸ் க்ளப் மூலமாக:-)

said...

வாங்க செந்தில் குமார்.

மனம் குளிரச்செய்த பின்னூட்டம். மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பேசாம பதிவர் வில்லேஜ் ஒன்னு கட்டிவிடலாமான்னு இருக்கு! பதிவர் ரிட்டயர்மெண்ட் வில்லா !

தினமும் பதிவர் சந்திப்பு அமர்க்களமா இருக்காது!!!!

சும்மாச் சொல்லக்கூடாது. நல்ல வசதிகளோடு இருக்கு இந்த இடம்!

said...

நானா நானி. தனியா இருக்கிற வயசானவங்களையும் """ என்னை மாதிரி}}}}}சேத்துப்பாங்களா.
எத்தனை அழகா இருக்காங்க மாமாவும் மாமியு,ம். சென்னையில் பார்த்ததற்கு இப்ப நல்ல ஹெல்த்தியா இருக்காங்க

ரொம்ப நல்ல இடமா இருக்கே..துளசி இதைப் பற்றி மேற்கொண்டு
பண விஷயம் இதெல்லாம் தெரிந்தால் நல்லா இருக்கும் அந்த ஒரு மாசமாவது இருந்து பார்க்கலாமே.
நன்றிப்பா.

said...

அருமையான retirement வாழ்கை . நீங்க சொன்னது போல் இப்பவே reserve பண்ணி வெச்சுக்கலாம்னு தோணுது . கடமைகள் முடிந்ததும் அங்க போய்டலாம் . குழந்தைகளும் வேணும் போது வந்து தங்கிக்க வசதி added attraction .

பதிவர் வில்லேஜில் வாசகர்களுக்கும் இடம் ஒதுக்கிடுங்க துளசி .

said...

நேந்திர சிப்ஸோ பலாச் சிப்ஸோ கேரளத்தில் இருப்பதை விட கோவையில் நன்றாக இருக்கும்

said...

இந்த மாதிரியான குடியிருப்புகள் தேவையான்னு கேட்டா.. இன்னைக்குத் தேவைப்படுதுங்குறதுதான் உண்மை.

எடங்கள்ளாம் பாக்க ரொம்ப அழகா துப்புரவா இருக்கு.

அங்கு அவங்களோட சந்திச்ச அனுபவங்களை நீங்க சொல்றப்பவே அந்த ஒன்னரை மணி நேரமும் சொர்க்கம்னு புரிஞ்சது.

இதுல எப்படி? வீடுன்னு வாங்கிக்கனுமா? அது நமக்குச் சொந்தமாகுமா? ஒருவருடைய காலத்துக்குப் பிறகு அந்த வீடு யாருக்கு உரிமையாகும்? என்னடா சந்தேகம் கேக்குறானேன்னு தப்பா நெனைக்காதீங்க. இது மாதிரி புதிய விஷயங்கள் வரும் போது தெரிஞ்சிக்கிறது நல்லதுதானே.

said...

வழக்கம் போல அருமை. படங்கள் அது போல.... நானா நானி பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம். பார்த்தும் இருக்கின்றோம்...அருமையான மாமா மாமி! அவர்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்!

சிப்ஸ் எல்லாம் கேரளத்தில் கிடைப்பதை விட கோவையில் மிக நன்றாகக் கிடைக்கின்றது மட்டுமல்ல மிகச் சுவையுடன். கேரளத்தில் நேந்திரபழம் சிப்ஸ், மற்ற சிப்ஸும் கேரள நிலம்பூரில் நன்றாக இருக்கின்றது.

said...

வணக்கம் டீச்சர். நான் இப்பயே ரிட்டயர் ஆகி நானா நானி போயிடலாம்னு பாக்கறேன். ஒரு இடத்துல கர்ச்சீப் போட்டு வையுங்க...

ஏன் தமிழ்நாட்ல போயி நானா நானின்னு பேர் வக்கறாங்க? நீயா நானா மாதிரி இருக்கு....

அந்த Aloft படம் பார்த்தேன். அச்சு அசலா இங்க இருக்கற மாதிரியே இருக்கு கட்டிடம். அவங்க ப்ராண்ட் டிசைன் போல...

படங்களும், ஊடால கமெண்டும் அப்படியே உங்க பக்கத்துல உக்காந்து பயணம் பண்ணின மாதிரி இருந்தது...

said...

நானா நானி தகவலுக்கு நன்றீஸ்.

தனியா சுதந்திரமா இருந்துக்கலாம். முக்கியமா கிச்சனுக்கு லீவு விடலாம் பாருங்க.

said...

நானா நானி நன்றாக இருக்கு. நீங்கள் வேறு இடம் அருமை என்று சொல்கிறீர்கள். சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதில் ஒரு சிறிய கலக்கம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை.

said...

வாங்க வல்லி.

http://www.ananyashelters.com/index.php

இந்தச் சுட்டியில் பாருங்க. தேவையான விவரங்கள் இருக்கு.

said...

வாங்க சசி கலா.

நோ ஒர்ரீஸ்! ஒரு ஆயிரம் வீடுகள் போதாது நமக்கு? கட்டிடலாம்:-)

தினமும் பதிவர் வாசகர் சந்திப்புதான். உங்களுக்குப் போர் அடிக்காமல் இருக்கணும்:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கோவையில் கடைகளுக்குப் போகவே இல்லை. தெரிஞ்சுருந்தால் வாங்கி இருப்பேன்!
போனோம் வந்தோமுன்னு போயிருச்சு:(

said...

வாங்க ஜிரா.

தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதே.

அவுங்க வெப்சைட்டில் எல்லா விவரமும் இருக்கு. தொலைபேசி எண் கொடுத்துருக்காங்க. இல்லைன்னா மெயிலிலும் விசாரிச்சுக்கலாம்.

http://www.ananyashelters.com/index.php

said...

வாங்க நாகு.

நலம்தானே?

தமிழ்ப்படங்களில் எப்படி ஹிந்தி கதாநாயகிகள் தேவைப்படுதோ அதே போலதான்:-)

தாத்தா பாட்டின்னு வச்சால் தமிழர் மட்டுமேல்ல வருவாங்கன்னும் இருக்கலாம்!

said...

வாங்க துளசிதரன்.

ஐ விட்னஸா இருக்கீங்க! மகிழ்ச்சி!

கொஞ்சம் டீஸன்ட்டான இடங்கள் அமைவது கஷ்டம் என்ற வகையில் எனக்கு இது ரொம்பப் பிடிச்சுருக்கு!

கேரளப்பயணத்திலும் கடைகளுக்கு அதிகம் போகலை. கடைசிநாளில் வாங்குனது சகிக்கலை. நேந்த்ரங்காய் சிப்ஸ் பரவாயில்லை.

சக்கதான்... கோபாலின் பல்லுக்கு என்ன ஆகுமோன்னு கவலையாப்போச்சு:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

எனக்கும் 'சமையல் இல்லை'ன்னது பரம சந்தோஷம்!
போதும்ப்பா... 42 வருசமா சமைச்சு போரடிச்சுப் போச்சு.

அதுவுமில்லாமல் ஒரே ஏஜ் க்ரூப்பில் இருக்கும் மக்கள் என்பதால் அதுவும் நல்லாவே இருக்கு!
அமைதியான வாழ்க்கை!

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

எதுக்கு கலக்கம்? முதியோர் இல்லத்தையும், அதுலே பெற்றோர்களை வைத்துப் பராமரிக்கும் பிள்ளைகளையும் உண்மையில் பாராட்டத்தான் வேணும். அதென்னமோ தெரியலை இதெல்லாம் கேவலம் என்ற மனநிலை நிறையப்பேருக்கு மனசில் பதிஞ்சு போய் இருக்கு.

கூட்டுக்குடும்ப முறை காணாமப் போனதும் இப்படி ஒரு அமைப்பு உருவாகும் நிலை வந்ததுக்குக் காரணம்.

அப்பா அம்மா தனி வீடுகளில் இருந்து அன்றாட வேலைகள் செய்ய முடியாமப்போய் வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் ஆள் போட்டுக்கறதை விட ஒத்த வயதினருடன் கடைசி காலங்களை மகிழ்வா கழிப்பதில் என்ன தவறு இருக்குன்னே எனக்குப் புரியலை:(

இந்தக் காலத்தில் வீட்டில் நமக்கு உதவியாளர்களை வச்சுக்கறதும் கொஞ்சம் ரிஸ்க்தான். யாரை நம்ப முடியுது சொல்லுங்க?

பாதுகாப்பா இருக்கணுமுன்னா இனி இதுதான் தீர்வு.

said...

நானா, நானி நல்லா இருக்குனு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷம். நம்ம விசாலம் ராமன் கூட அங்கே தான் இருந்தாங்க. அவங்களுக்கு என்னமோ தெரியலை ஒத்துக்கலை. திரும்பச் சென்னைக்கே சொந்த வீட்டுக்குப் போய் இப்போ ஆளும் போய்ச் சேர்ந்தாச்சு! கோவை சீதோஷ்ணம் ஒத்துக்கலைனு கேள்வி. :)))

said...

பார்க்க நல்லாவே இருக்கு. ஒரு மாசம் இருந்து பார்க்கவே குறைந்தது 2 லட்சம் கட்டணுமே! அதான் யோசனை! அதோடு பையர் அனுமதி வேறே கிடைக்கலை!:) நாங்களும் நானா, நானி தவிர தபோவனம், பெங்களூரில் ஶ்ரீஶ்ரீரவிசங்கரோட ஹோம் எல்லாமும் பார்த்து வைச்சிருந்தோம். கடைசியிலே இந்த வீட்டை வாங்கிக் கொடுத்துட்டார் பையர். இப்போ வாயே திறக்க முடியாது! :)

said...

தெரியாதவங்களுக்காக நான் கேட்டுத் தெரிந்துகொண்டது.
இங்கு ஃப்ளாட் அல்லது தனி வீடு 42 லட்சத்திலிருந்து 80 வரை இருக்கிறது. (இப்போதைய விலையில்). நம் சமையலறையில் சமைத்துக்கொள்ளலாம் அல்லது பொதுவான சமையல் அறையில் (மெஸ்) சாப்பிட்டுக்கொள்ளலாம். சைவ உணவுதான். மாதம் ஒருவருக்கு சுமார் 4000 ரூ. வீட்டு மெயின்டனன்ஸுக்கு இன்னொரு 4000 ரூ. நல்ல காற்று. சுகாதாரம். தண்ணீர் மின்சாரம், உபயோகத்தைப் பொறுத்து சார்ஜ். யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் தங்கமுடியும். உறவினர்கள் அல்லது விருந்தினர்கள் அதிகபட்சம் 2 மாதங்கள் வரை கூடத் தங்கிக்கொள்ளலாம்.

எனக்கு இது நல்ல ஏற்பாடாகப் படுகிறது. செக்யூரிட்டி இருப்பதால்.