Wednesday, March 26, 2014

நவநாராயணர் ஒரே இடத்தில்!


முப்பத்தியேழு கிலோ மீட்டர் பயணம். முக்கால்மணி நேரத்தில் வந்து சேர்ந்தோம். மணி இப்போ மூணேகால்தான்.கோவில்திறக்க இன்னும் முக்கால்மணி காத்திருக்கணும். அவசரப்பட்டுட்டோமோ? இன்னும் அரைமணி புடவை செலக்‌ஷனில் இருந்துருக்கலாம் இல்லே:-)

ஊருக்குள் நுழைஞ்சு  கலகலன்னு இருக்கும் கடைவீதிகளைக் கடந்து கோவிலை நோக்கிப்போறோம்.  ஏழு நிலைக்கோபுரம்!

தாழ் திறவாய் .......  மணிக்கதவே  தாழ்திறவாய்!

அருமையான கதவு.  புதுக்கருக்கோடு இருக்கு.


கோபுரவாசலுக்கு முன்னால்  குறுக்கே போகும்  ரோடு. வாசலுக்கு   இந்தாண்டை கோபுரவாசலை நேராப் பார்த்தபடி அனுமன் சந்நிதி.சின்னக்கோவில் என்றே சொல்லணும்.


அவரைத் தாண்டி  இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போக இடம் விட்டு நிக்கிறார்.

கோவில் மதிலை அடுத்த நிழலில் வண்டியை நிறுத்திட்டு  மெள்ள நடந்து  வந்தோம்.  கள்ளிக்கோட்டை ஓடு வேய்ஞ்ச  கூரைகள்  கொசுவத்தி ஏத்துனது உண்மை:-) கிராமத்து மணம் இன்னும் அழியாமல் இருக்கே!

 மூடியிருந்த கம்பிக்கதவு வழியே அனுமனுக்கு ஒரு கும்பிடு.  கொஞ்சம் அந்தாண்டை கோவில் குளம். சந்நிதித்தெருதானே இது? அகலமானதெருவும் ரெண்டு பக்கமும் திண்ணைகள் வச்ச வீடுமா  அருமை!


 கொஞ்சம் பூச்செடிகளையும் (எல்லாம் ரோஜா)  அலங்காரப்பனை வகைகளையும் விற்பனைக்கு  வச்சுருக்காங்க. பக்கத்தில் எதோ இலைத் தண்டை ,ஒரு அடி நீளத்துக்கு வெட்டி வச்சுக்கிட்டு இருக்கும் நர்ஸரி உடமையாளர்.அவரோட ரெண்டு குழந்தைகளும்  அங்கேயே சுத்திச் சுத்தி வந்து விளையாடிக்கிட்டு இருக்காங்க.  பெரிய நகரத்துக்குழந்தைகளுக்கு  இந்த அதிர்ஷ்டமும் சுதந்திரமும் இல்லை:(

 இந்த இலைகள் சர்க்கரை நோய்க்கு  சிறந்த மருந்தாம் .அந்தத் தண்டுகளை  நட்டு அதுக்கு உயிர்வந்து  முளைத்துச் செடியானதும் விற்பனை செய்வாங்களாம். பெயர்தான் தெரியலைன்னு சொன்னாங்க.

அகலமான திண்ணையில்   தோழிகளோடு உக்கார்ந்து  ஜாலியா பல்லாங்குழியோ, தாயக்கட்டமோ  விளையாடினால் எவ்வளவு ஜோரா இருக்கும்!  ஹூம்..........  காலம்,   கடந்த காலம்.

கதவைத் திறந்து வெளியில் வந்த  பெண்மணியிடம், உங்க திண்ணையை ரசிச்சுக்கிட்டு இருக்கோம் என்றேன்.  முகமலர்ச்சியுடன், உள்ளே வந்து உக்காருங்கன்னு உபசரிச்சாங்க. ஆஹா....கரும்பு தின்னக்கூலியா?

ரொம்பவே வயசான வீடு. பராமரிப்பு அறவே இல்லை:(

வாடகைக்குத்தான்  இவுங்க இருக்காங்களாம்.  கோவில் பட்டர்களின்  குடும்பம்.  கணவர்கள்  இப்போ  பூவுலகில் இல்லையாம். கோவில்நிர்வாகம் புதுசாக் கட்டி இருக்கும் இடத்தில்  இவுங்களுக்கு  வசிக்க இடம் தருவதாச் சொல்லி இருக்காம். ஆனால் அங்கே இன்னும் தண்ணீர் வசதி வரலை. வேலை முடிக்க  இன்னும்  நிதி தேவை என்பதால் தள்ளிப்போய்க்கிட்டே இருக்குன்னு  கவலையோடு சொன்னாங்க.

திண்ணைக்கெதிரில் போட்டுருக்கும் ஆட்டுக்கல் 'அந்தக்காலத்து  எக்ஸஸைஸ் மெஷீன்'  குழவியை  வீட்டுக்குள்ளே கொண்டு போய் வச்சுருக்காங்களாம். இல்லைன்னா குழவியோடு கல்லும் அபேஸ் ஆகிருமாம்:(

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர் இது.  பல்லவன் நந்திவர்மன் காலத்தில் கட்டி எழுப்பப்பட்டதாம். அப்புறம் சோழர் ,பாண்டியர், சம்புவராயர்கள் (பொன்னியின் செல்வனை ஞாபகப்படுத்திக்குங்க)ஆட்சி  எல்லாம்  நடந்துருக்கு. குடவோலை முறையில்  கிராமத்  தலைவனைத் தேர்ந்தெடுக்கும் முறைகள், விதிகள்  பற்றிய கல்வெட்டு இங்கேதான்  கிடைச்சதுன்னு சரித்திரக்காரர்கள் சொல்றாங்க.

அது என்ன முறையும் விதியும்? தேர்தலில் நிற்பவரின் தகுதிகளாச் சொல்லி இருப்பது  ரொம்பவே சிம்பிளா ஆறே ஆறு சமாச்சாரம்தான்.
 இந்தக் காலத்துக்குப் பொருந்தி வருமா? வரவிடமாட்டாங்க நம்ம அரசியல் வியாதிகள் !

1 சொந்தமா கால் வேலி நிலம் வச்சுருக்கணும். ( இக்கால அளவில் சொன்னால்  கிட்டத்தட்ட  ஒன்னரை ஏக்கர்)


2  தன்னுடைய மனையிலேயே சொந்த வீடு(ம்) இருக்கணும்

3  வயசு 35 க்கு மேல் 70 வரை தான்.  (எழுபத்தியோரு வயசு தாத்தா தலைவனாக முடியாது!)

4  வேதபாஷ்யங்கள், மந்திரப்ரமாணங்கள் எல்லாம் விளக்கி எடுத்துச்சொல்லும் புலமை வேணும்.

5  ஆச்சாரமா இருக்கணும்.

6  முக்கியமா முதல் மூணுவருசம் இந்தப்பதவியில்  இருந்திருக்கக் கூடாது

ஹைய்யோ.....  எல்லாம் அடிபட்டுப்போச்சு!

இப்போதைய  தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரா இருக்கும்  கணேசன் அவர்கள்  அருமையான வலைப்பக்கம் வச்சுருக்கார். அதில் இருந்து கிடைத்த தகவலின் ஒரு பகுதியே மேலே  சொல்லி இருப்பது.   அழகழகான படங்களும் சேதிகளும் நிறைஞ்சிருக்கு. தன்னுடைய ஊரைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லும்  நல்ல மனிதராக(!)  எனக்குத் தெரிகிறார். (அம்மா கட்சி!)
அவரை வாசிக்க இங்கே க்ளிக்கலாம்


ஒவ்வொரு சட்டமன்ற அங்கமும் இவருடைய முறையைப் பின்பற்றினால்  மக்களுக்கு  நன்மையா இருக்கும். செய்வாங்களான்னு தெரியலை. அதான் அம்மா எல்லா எம் எல் ஏக்களுக்கும் லேப்டாப் கொடுத்துருக்காங்கல்லெ!


ஊர்க்கதைகள் பேசிக்கிட்டு  மணியைப் பார்த்தபடி இருந்தோம். நாலு மணிக்கு இல்லை நாலரைக்குக் கோவில் திறந்துருவாங்களாம். அதென்ன ன்னு  கேட்டால் மூணாவது வீடு பட்டர் வீடுதான்.  அவரே சுத்துபட்ட பதினெட்டு பட்டிக்கும் பத்திரம் எழுதும் 'கைங்கர்யமும்' செய்வதால்  கோவில் திறப்பது கொஞ்சம் ஏறத்தாழத்தான் இருக்குமாம்.  போகட்டும்..........மக்கள் சேவை மகேசன் சேவை இல்லையோ!

நாலரை மணிக்குச் சமீபம் கோவிலை நோக்கி வேகமா நடந்து போன ஒருவரைக் காமிச்சு அதோ பட்டர் போறார் என்றார்கள். இருக்க இடம் கொடுத்தவங்களுக்கு நன்றி சொல்லிட்டுப் பின்னாலேயே நாங்களும் ஓடுனோம்.


சுந்தரவரதராஜப்பெருமாள்.  உத்திரமேரூர்.






அழகான கோபுரவாசல் கதவைக் கடந்து உள்ளே அடியெடுத்து வச்சால் பரந்த வெளிப்ரகாரம். எதிரில் கொடிமரமும் பலிபீடமும்.  ஒரு ஏழெட்டுப்படிகள் மேலேறி முன்புற மேடையின் வழியாக் கருவறை முன்மண்டபத்துக்குப் போறோம். மேடையின் ஒருபக்கம் கொடிமரத்தையொட்டிய சின்ன சந்நிதியில் பெரிய திருவடி.


கருவறைக்கு முன் இருக்கும் திரைக்குள் பட்டர் நுழைஞ்சார்.  'இது நம்ம   பெஸண்ட் நகர் மஹாலக்ஷ்மி கோவில் டிஸைன் மாதிரியே  இருக்குமு'ன்னு  கோபாலிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன்.  சத்தமாச் சொல்லிட்டேனோ என்னவோ?   சட்னு திரையைத் திறந்து  முகம் நீட்டிய பட்டர்,  'இந்தக்கோவில் கட்டி 1250 வருசமாச்சும்மா. உங்க கோவில்(?!) கட்டி இப்பதான்  25 வருசமாச்சு. இதைப் பார்த்துதான் அதைக் கட்டுனாங்க'ன்னார்.

உண்மைதான்.  இந்த மாடக்கோவில் டிஸைன்தான்  அந்த மாடக்கோவில்.

ஒன்பது பெருமாள். 'உலகத்துலேயே  இப்படி ஒன்பது பெருமாள்  ஒரே இடத்தில் இருப்பது இங்கே மட்டும்தான்'னு உபரித்தகவல் கொடுத்தார் பட்டர்.

மூலவர் சுந்தரவரதர். தாயார் ஆனந்தவல்லி.

உட்ப்ரகாரத்துக்கு  நாலு படி இறங்கணும்.  மூலவரைச் சுற்றி கருவறைக்கு வெளியே மூணு பக்கங்களிலும்  அச்சுதவரதர், அநிருத்தவரதர்  கல்யாணவரதர் என்று தனிச்சந்நிதிகள் . அஞ்சாறுபடி மேலேறி ஒவ்வொருவரையும் கம்பிக் கதவின் வழியா  தரிசிச்சுக்கலாம்.



கருவறையை ஒட்டி மாடிக்குப்போய் கருவறை விமானத்தின் மேல் நாலு புறமும்  இருக்கும் நர நாராயணர் (கிருஷ்ணனும் அர்ஜுனனும்)  வைகுண்ட வரதர், யோக நரசிம்மர்,  லக்ஷ்மிவராஹர்  சந்நிதிகளைச் சுத்தி வந்து ஸேவிச்சுக்கிட்டு  இன்னுமொரு மாடி ஏறிப்போனால்  ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்ட  ரங்கநாதரை தரிசிக்கலாம்.  எங்களுக்கு ரங்கனை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கலை:(  மார்கழி எண்ணெய்க்காப்பில் இருக்காராம்.




 மேலே:  எம் எல் ஏ விடம்  சுட்ட  இரண்டு  படங்கள். திரு.கணேசனுக்கு நன்றி..

போகட்டும்.  நின்றும் இருந்தும்  கிடந்தும்  அருள்புரியும் ஒன்பதில், எட்டு தரிசிக்க முடிஞ்சதே,  அதிர்ஷ்டம் இல்லையோ?

இனி மார்கழியில் நோ பெருமாள் என்பதை நினைவு வச்சுக்கணும். நமக்கு  விடுமுறைகாலம் மார்கழி என்பதால்........... அப்பதானே  ஊருக்கு வரமுடியுது:(

வெளிப்ரகாரத்தில் அழகான மண்டபங்கள். ஆனால் பராமரிப்பு போதாது:(

ஆழ்வார்கள் வந்து தரிசனம் செஞ்சு, பெருமாளை வாழ்த்திப்பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கும் இந்தக்கோவில் ஏன் 'அந்த நூற்றியெட்டில் ' வரலைன்னு எனக்கு ஒரேகுழப்பம் கேட்டோ!!!!

தரிசனம் முடிச்ச கையோடு கிளம்பி நேராச் சென்னைதான்.







9 comments:

said...

விதிகள் பற்றி நினைக்கும் போது... ம்... இன்றைக்கு தலை"விதி"...

அருமையான பல படங்கள் மூலம் நாங்களும் ஒருமுறை சுற்றி விட்டோம் அம்மா... நன்றி...

இன்னும் அரைமணி நேரமா...? மனசெல்லாம் அங்கே தானோ...? ஹிஹி...

said...

பழமையான கோவில்.

பராமரிப்பு - பெரும்பாலான கோவில்களில் இல்லாதிருப்பது..... வருத்தம் தருவது!

said...

திண்ணையை பார்த்ததும் உங்களிருவரின் முகத்தில் என்ன ஒரு சந்தோசம் !! :)))
அதை கண்டு எங்களுக்கும் சந்தோசம் :))
அந்த ஆண் குழந்தையின் முகத்தில் இருக்கும் expression அழகு. (அது என்ன தண்டு )
அனுமன் , கோவில்கதவு, குளம் , மண்டபங்கள் அனைத்தையும் நாங்களும் தரிசித்தோம் .

said...

நின்றும் இருந்தும் கிடந்தும் அருள்புரியும் ஒன்பதில், எட்டு தரிசிக்க முடிஞ்சதே, அதிர்ஷ்டம் இல்லையோ?//

ஆம், அதிர்ஷ்டம் தான்.
அருமையான பகிர்வு.
படங்கள் அழகு.
திண்ணை அமர்வு படம் ஜோர்.

said...

பெரிய அழகான கதவுகள். நர்சரியில் குழந்தைப் பூக்களும் கொள்ளை அழகு. குறிப்பாய் அந்த பையன் கொடுக்கும் போஸ்:). திண்ணை வீடு அருமை. ஆட்டுக்கல்லையும் குழவியையும் பிரித்து வைத்திருப்பது போல.., இங்கே சில சிறிய கோவில்களில் வெளியே கழட்டிவிடும் செருப்புகள் தொலைந்திடமால் இருக்க, கவனமாய் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பக்கம் கழட்டி விட்டுச் செல்வார்கள்.

படங்களும் பகிர்வும் நன்று.

said...

சுந்தரவரதன் அழகு பெயர். ஏன் இன்னும் பாடல் பெறவில்லை. ஐ மீன் 108க்குப் போகலை. திண்ணையும் ஜோடியும் பிரமாதம். இந்த பட்டர் குடும்பங்கள் இன்னும் பரிதாபம். அந்தக் கீரையின் பெயர் என்னவெனப் பார்க்கணும்.

said...


இந்த செடியின் தாவர இயல் பெயர் காஸ்டஸ்பிகடஸ்


இனிய இன்சுலின் செடி
http://jaghamani.blogspot.com/2012/09/blog-post_22.html

said...

காஞ்சீவரம் போனால் உத்திரமேரூரையும் சேவிக்கணும் - குறித்துக் கொண்டாயிற்று!
என்ன கோவில்கள்! குளமும் ஊரும் கண்ணைக் கட்டுகின்றன!

said...

கோவில்தர்சனம். காற்றாட கால்ஆற :) திண்ணை.