Tuesday, December 18, 2012

இனிமேல் வருசத்துக்கு மூணு.!!!



கண்ணைப்பறிக்கும் கொள்ளை அழகில் ஏகப்பட்ட வகைகள் குமிஞ்சு  நிக்கும்போது   எதை எடுக்கன்னு முடிவு செய்ய மக்கள்ஸ் படும்பாடு இருக்கே.... அப்பப்பா....  ஆனாலும் ஒரு சிலர்  கடுமையான பார்வையுடன், உதட்டைப்பிதுக்கி வேணாம் இது வேணாமுன்னு    அழகையெல்லாம் ஒதுக்கித்தள்ளும் போது , இவுங்களால் மட்டும் எப்படி முடியுதுன்னு எனக்கு வியப்புதான்.

இந்த வருசத்துக்கு  இந்த இனத்துலே புதுவரவாக  லவ்விங் மெமொரி, ப்ளூ ஸ்கை, ப்ராஸ்பெரோ  என்று வாங்கிவந்தோம். இதுலே இந்த ப்ராஸ்பெரோதான் போன பதிவின் புதிரில் வந்துச்சு:-)

பர்ப்பிள் கலரும்  க்ரிம்ஸன் கலரும் கலந்த ஒரு கலவையான நிறம்.  அடுக்குச் செம்பருத்திபோல அடர்த்தியான இதழ்கள். நுனி ஓரத்தில் நெளிநெளியா இருக்கு.  மொட்டாக இருக்கும்போது பார்த்தால் எல்லா நெளிகளும் ஒன்று சேர்ந்து  அழகோ அழகு! கரும்சிகப்பு நுனிகள் சட்னு பார்த்தால் என்னமோ காய்ஞ்சுபோன பூவோன்னு நினைக்க வைக்கும். வித்தியாசமா இருந்தாக்கா எனக்கு உடனே பிடிச்சுரும் அந்தக் கணக்கில்தான் இது வூட்டுக்கு வந்துருக்கு.


எங்கூர்லே  ஞாயித்துக்கிழமைகளில் சண்டே மார்கெட்டுன்னு ஒரு சந்தை கூடும்.  அங்கேதான்  ஒரு ரோசாச்செடி  விற்பனையாளர் வாரந்தவறாமக் கடை போட்டுருவார். அவர் ப்ரீடரா இருக்கச் சான்ஸே இல்லைன்னு நான் நினைக்கிறேன். ப்ரீடர்கிட்டே இருந்து வாங்கி விற்கறாருன்னு என் நினைப்பு.
பொதுவா இங்கே பூச்செடிகள் விற்கும் கார்டன் செண்டர்ஸ்களைவிட இங்கே ஒன்னு ரெண்டு டாலர் விலை மலிவு. முக்கியமா நமக்கு ச்சாய்ஸ் அதிகம்.  ஒரு  அம்பதறுபது வகைகள் இருக்கலாம். பொதுவா ரோஜாக்களில் நூத்துக்கு மேலே வகைகள் இருக்கு. எங்கூர்  தாவரவியல் பூங்காவிலேயே 104 வகை இருக்குன்னா பாருங்க.


அடிப்படை நிறங்கள்  ஏழுதான்னு சொன்னாலும்.....அதுலெ கலப்படம் பண்ணியே  நூத்திநாலு செஞ்சுட்டாங்க இல்லே!!!!  செடிகளை ஒன்னோடொன்னு  ஒட்டவச்சே புதுவகைகளை உருவாக்கி அதுகளுக்கு ஒரு பெயரும் கொடுத்து  அந்தப்பூக்களுக்கு  காப்புரிமை வாங்கிக்கிட்ட  பெரிய புகழ்பெற்ற  ப்ரீடர்களிலே  (இனவிருத்தியாளர்?)  டேவிட் ஆஸ்டின்  ஒருவர். இங்கிலாந்துக்காரர். 1928 இல்  இவர் ஜனனம். தன்னுடைய 37 வயசில் முதல் ரோஜாவை ரிலீஸ் செஞ்சுருக்கார்.  இவர் கண்டுபிடிச்ச (!) இந்த ப்ராஸ்பெரோவின் ஜனனம் 1982.  சுமார் நாற்பது இதழ்களுக்குக் கேரண்டீ! இங்கிலீஷ் ரோஸ்  ஷ்ரப் வகை.  ஷேக்ஸ்பியரின்  ஒரு நாடக (டெம்பஸ்ட்) கதாபாத்திரத்தின்  பெயரைத்தான் இதுக்கும் வச்சுருக்காராம். இவரது சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு கௌரவிச்சு இருக்கு.  கடந்த ரெண்டு வருசங்களா   "Great Rosarian of the World" என்ற பட்டமும் கிடைச்சுருக்கு.


  Blue Sky கண்டுபிடிச்சவர் ஜப்பான்காரர்.  இவர் பெயர் Seizo Suzuki. 1973யில் பிறந்த நீலவானத்துக்கு நல்ல அருமையான மணம் இருக்கு. லேவண்டர், க்ரே, கொஞ்சூண்டு பிங்க் நிறக்கலவை. ஒரு கோணத்தில் பார்த்தால் இதழ் நுனிகளில் லேசான நீலநிறம் உண்டு.


லவ்விங் மெமொரி பொறந்தது 1981 இல். வடக்கு ஜெர்மனியில் உள்ள  Kordes Roses International b.v. என்ற கம்பெனியின் தயாரிப்பு. 120 வருச அனுபவம் உள்ளவர்களாம். கென்யா, நெதர்லாந்துன்னு பல நாடுகளில் கிளைகள் வளர்ந்துள்ள வியாபாரம்.


நல்ல அழுத்தமான சிகப்பு நிறத்தில் மணம் உள்ள வகை இந்த லவ்விங் மெமொரி.  பூக்களும் பெரிய சைஸில் இருக்குதுகள். நிறைய நாட்களுக்கு  தொடர்ந்து  பூக்கும் வகை.


வெறும் ரோஜாக்குச்சிகளை அதில் வரப்போகும் பூவின் படத்தோடு  குறைந்த விலையில் குளிர்கால நடுவில் விக்கறாங்க இங்கே.  படத்தை நம்பி வாங்கலாமான்னு லேசா ஒரு தயக்கம். குச்சி பிழைக்கலைன்னா போட்ட காசு, கயா:( அதனால்  செடிகள்  ஒரு ரெண்டடி உசரம் வரை வளர்ந்து பூக்கத்தொடங்கியவுடன் கண்முன்னால் தெரியும் பூக்களைப்பார்த்து எது வாங்கலாம் எது நம்மிடம் ஏற்கெனவே இருக்குன்னு முடிவு செய்வது சுலபமுன்னு எனக்குத் தோணல்.


போன வருசம் வாங்குன மூணும் இந்தவருசம் நல்லாவே பூத்துக்குலுங்குது.

இது கோல்ட்  மெடல்

இது டான்ஸிங் பிங்க்


இது ஃபெல்லோஷிப்  1992 பிறந்தாள்.

சில வருசங்களுக்கு முன்னே   வேற இடங்களில் இருந்து  வாங்கி வச்சவைகளில் பிழைச்சுக்கிடப்பது,   பீச் கலர் ரோஸும்  சிகப்பு நிறமுள்ள ஒன்னும்தான். இந்த சிகப்புப்பூவிலும் இதழ்கள்  உட்புறம் மட்டுமே சிகப்பாகவும் இதழ்களின் பின்புறம்  வெள்ளி நிறத்திலும் உள்ளது.  இந்தவகைக்கு ரோனால்ட் ரீகன்  என்ற  பெயர்.  இந்த ரெண்டும்  ஒன்றுக்கொன்று அருகிலேயே இருக்கு. இந்த பீச் கலர் ரோஸுக்கு என்ன பெயர்ன்னு தெரிஞ்சதும்   ஆச்சரியம் வந்தது  உண்மை. நான்ஸி ரீகனாம்!!!!
ரோனால்ட் ரீகன்


நான்ஸி ரீகன்!


இந்த லேவண்டர் நிறமுள்ளதும்  கொஞ்சம் பழசுதான்.'Lagerfeld' என்று பெயர்.  சீஸன் ஆரம்பிச்சதும் ஒரே ஒருமுறை மட்டுமே பூக்கும்.  மூணு நாலு மொட்டு வந்து மலர்ந்துட்டால் அப்புறம் அப்படியே ச்சும்மாவே நிக்கும்:(

இந்த டபுள் டிலைட் மட்டுமே வீடு கட்டி குடிவந்த நாள்  நட்டுவச்சது.  பழைய வீட்டில் இருந்து  குச்சிகளை வெட்டிக் கொண்டுவந்து நட்டேன்.  அதுபாட்டுக்கு விடாமல் பூத்துக்குலுங்கும் ஒரு மூணு மாசத்துக்கு!

இந்த  ரோஸ் இண்டஸ்ட்ரீ  ரொம்பப்பெருசா விஸ்தாரமா இருக்கும்போல.  நூத்திநாலு வகைகளுக்கு ஆயிரத்தெட்டு பெயர்கள்.  ஒவ்வொரு ப்ரீடரும் வெவ்வேற பெயர் வச்சுருக்காங்க போல! எனக்கு இப்பதான் ரோஜாவில் கவனம் கூடி இருப்பதால்  மார்கெட்டுக்குப்போகும்போது தேடிப்பார்க்கணும்.

எல்லாத்துலேயும்  வந்தமாதிரி இதிலும் ஹைப்ரிட் வகைகள் ஏராளமா வந்துஇருக்கு.  ஹைப்ரிட் டீ ரோஸ் என்று இருக்கும் வகைகள் எல்லாமே  ஒரு ஒழுங்கு முறையோடு இருக்கு:-)))) வெரி பாப்புலர். பராமரிப்பு வேலைகளும் குறைவு என்பது முக்கிய காரணம்.


இனிமே வருசத்துக்கு மூணு என்ற வகையில் கட்டாயம் வாங்கணும்.  அதென்ன மூணு? மூணா வாங்கினா விலை மலிவு:-)))


39 comments:

said...

வகை வகையாய் மலர்ந்து மணம் பரப்பும் ரோஜாப்பூக்களின் பகிர்வுக்கு மனம் மலர்ந்த வாழ்த்துகள்..!

said...

மலர்கள் தான் எத்தனை வகை , மலர்கள் சிரித்து நம்மை மகிழ்விக்கிறது,பகிர்வுக்கு நன்றி.

said...

ரோஜாக்கூட்டம் அழகா இருக்கு :))


said...

கொள்ளை அழகு மலர்கள். படமெல்லாம் அருமை:)!

புதிர்ப்பூ பெயரைத் தெரிந்து கொண்டோம்.

அடடா, ரோஜாக்களுக்கு எப்படியெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள். நல்ல ரசனை:)!

பகிர்வுக்கு நன்றி.

said...

நன்கு பராமரிக்கப்படும் பூங்காவினுள்
நுழைந்த சுகம்
மனம் கொள்ளை கொண்ட பதிவுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

said...

ரீகன் ரொம்ப அழகு

said...

romba azhagaa irukku

said...

ரோஜாக்களின் அணிவகுப்பு அருமை.

said...

வண்ணமயமான மலர்கள் கண்ணைப் பறிக்கின்றன. எங்களது தில்லியிலும் ஒரு இடத்தில் நிறைய ரோஜா மலர்கள் இருக்கின்றன! ஆனால் வருடத்திற்கு ஒரு முறை தான் உள்ளே விடுவார்கள் - அப்போதும் காமிரா நாட் அலௌவுட்... கண்ணாலே மட்டுமே ரசிக்க வேண்டும்! - ராஷ்ட்ரபதி பவனைத் தான் சொல்கிறேன்! :)

said...

ரோஜாக்கள் அழகு. பார்த்தாலே மனம் லேசாகி அழுத்தங்கள் குறைந்து விடும்.

said...

***இனிமே வருசத்துக்கு மூணு என்ற வகையில் கட்டாயம் வாங்கணும். அதென்ன மூணு? மூணா வாங்கினா விலை மலிவு:-)))***

இங்கேயும் பல வகை விக்கிறாங்க. 5 டாருக்கு ஆரம்பிச்சு சம்மர் முடியும்போது 2 டாலருக்கு கெடைக்கும். இது பெரிய செடியில்லை, ஒரு மாதிரி வேறோட கொஞ்சம் இலை இருக்கும். வாங்கி பாட் ல இல்ல நிலத்தி நட்டு வச்சா ஈசியா வளந்துடும். ஆரம்பத்தில் இந்த முயல்கள்/அணில்கள் எல்லாம் அந்த இலையை திண்ணுடாம பார்த்துக்கணும். அது இளம் இலையை கடிச்சு திண்ணுடுச்சுனா அம்புட்டுத்தான்! :)

ஒரு முறை ஒரு செடியிலே ஒரு ஸ்டெம் ஒடஞ்சிருச்சு, அதை பக்கதிலே நட்டு வச்சா அதுவும் செடியாயிருச்சு. ரோஜாவை ஈஸியா மல்ட்டிப்ளை பண்ண முடியுது. தக்காளி செடி மாரி இதுவும் ஒரு கொப்பை ஒடச்சு வச்சா எளிதாக இன்னொரு செடியாயிடுது.

ஆனா அதே மாதிரி மல்லிகை செடி ஸ்டம்மை ஒடச்சு வச்சா அது மாரி வளர மாட்டேன்கிது. :(

ரோஜா குளிர் தேசங்களில் எளிதாக வளர்க்கலாம்னு நெனைக்கிறேன்.

பார்த்து டீச்சர், பூப்பறிக்கும்போது முள் இல்லாத ஏரியாவே இருக்காது. :)

said...

பட்டு வண்ண ரோஜாவாம். பார்த்த கண்ணு மூடாதாம்....ரோஜாவே அழகு. அதில எத்தனை வண்ணம். செழிப்பா நிக்கிறதைப் பார்த்தால் வண்டுக்கூட்டம் நிறைய வருமே. குளிர்ச்சியான படங்களைப் பர்க்கும்போதே பாட்டு வருதே.

said...

அடடா
ரொம்ப அழகா இருக்கு எல்லா பூக்களும்,இதை பார்த்துகிட்டு இருந்தாலே பொழுது போய்டுமே ,அந்த லவேந்தர் நிற ரோஜா கொள்ளை அழகு.அந்த த்ரீ ரெட் ரோசெஸ் உம சூப்பர்.

said...

சும்மாப் பூத்துக்குலுங்குது துள்சிக்கா தோட்டத்தில். பார்க்கவே அசத்தலாருக்கு.

said...

கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் உள்ள அழகான ரோஜா பூக்களும் அவைகளுக்கு தந்த தங்களது விளக்கமும் அருமை. ரோஜா ரோஜாதான்!

said...

"பூப் பூவாப் பூத்திருக்கு பதிவினிலே 1000 பூ..."

said...

வாவ்!இங்கு மாடியில் தொட்டியில் வளர்க்கிறோம் ஆனால் முழுவதுமாக பூ வரமாட்டேன் என்கிறது. வெய்யிலில் கருகுகிறதோ என்று தோனுகிறது.

said...

அப்பப்பா...படங்கள் கண்களை பறிக்குதே.என்ன அழகு !பார்வையை படத்தில் இருந்து எடுக்கவே மனதில்லை..

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

ரோஜாவுக்கு சமர்ப்பிச்சேன்.

said...

வாங்க கோமதி அரசு.

//மலர்கள் தான் எத்தனை வகை ...//

உண்மைதான். களை என்று இங்கே சொல்லும் வகையில் கூட என்ன ஒரு அருமையான பூக்கள் என்று வியப்புதான் வருகிறது.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அழகோ அழகு!!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பூந்தோட்ட நகரில் இருந்து வரும் பின்னூட்டத்துக்கு மணமும் குணமும் கூடுதல்!!!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரமணி.

பராமரிப்புன்னு எடுத்துக்கிட்டால் நமக்கு அவ்வளவா போதாது:( அதுக்காக விட்டுடமுடியுதா? கலர் கிறுக்குப் பிடிச்சுக்கிடக்கேன் இப்போ! ( அட! இதையே ஒரு பதிவுக்கு தலைப்பாக்கலாம் இல்லே!)

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க தருமி.

ரீகன் அழகு மட்டுமில்லை ரொம்ப கொயட் கூட.

நம்ம எம் ஜி ஆர் மாதிரி அரசியலிலும் சரி பொது வாழ்விலும் சரி நல்ல பெயரையே வாங்கிக்கிட்டார், இல்லை:-)))

said...

வாங்க சசிகலா.

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க முரளிதரன்.

ரோஜாவை ரசிக்காதவரும் உண்டோ?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தில்லித் தோட்டத்துக்கு நானும் வந்து ரசித்தேனே உங்கள் பதிவின் மூலம்!

நம்மூர் பொட்டானிக்கல் கார்டன் ரோஜாத் தோட்டத்துக்கு வருசம் முழுசும் இலவச அனுமதி. படங்கள் எடுக்கத் தடையும் இல்லை.

said...

வாங்க அமர பாரதி.

உண்மைதான். அடுத்தவர் தோட்டமென்றால் பார்த்து ரசிக்கலாம். நம்முடையது என்று வரும்போது அதுக்குப் பணிவிடை செய்யணும். அப்பதான் பலனும் கிடைக்கும்:-)

said...

வாங்க வருண்.

ரோஜாவுக்கு பணிவிடை செய்ய தனி கத்திரி எல்லாம் வாங்கிக்கணும். இல்லேன்னா முள் நம்மைப் பதம் பார்த்துருதே:-(

சில வகை ரோஜாக்கள் எளிதா வளர்ந்துருது. சிலது....ஊஹூம்.....

தக்காளியை ஒடிச்சு வச்சா இன்னொரு புதுச்செடி என்பது எனக்குப் புதுத் தகவல். நன்றி.

said...

வாங்க வல்லி.

பாடுங்க பாடுங்க பாடிக்கிட்டே இருங்க!!!!

சி சென்னையில் சிங்காரத்தோட்டம் வச்சுருக்கற நீங்க சொன்னது அத்தனையும் உண்மை!!!

said...

வாங்க விஜி.

இதையே பார்த்துக்கிட்டே பதிவும் எழுதுனா இன்னும் பொழுது ஜோராப் போயிரும்:-))))

வருகைக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா.... சும்மாக்கிடந்த யானையை உசுப்பி விட்டுட்டீங்களே!

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க நடனசபாபதி ஐயா.

உங்க பின்னூட்டம் மனமகிழ்ச்சியைத் தருது. இன்னும் ஒரு மூணு வாங்கித்தான் ஆகணும்போல இருக்கே:-)))

said...

வாங்க ஸ்ரீராம்.

வருது வருது ஆயிரம் பூ!!!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க குமார்.

ஒரு நாளைக்கு குறைஞ்சது அஞ்சு மணி நேர சூரிய வெளிச்சம் இருந்தால் போதும். கொஞ்சம் ஷேடு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் நேரடி வெளிச்சம் அதிகமாக வேண்டாம்.

குட்லக்.

said...

வாங்க ஸாதிகா.

ரசனைக்கு நன்றிப்பா.

said...

Wow! what a lot of Roses. I am amazed at your detailed description of varieties, Madam.

Beautiful photographs and catchy narrative. Thanks.

said...

வணக்கம்...

உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

said...

ரோசாப்பூவெல்லாம் வளர்க்க முடியாது. படம் பார்த்து வச்சிக்கிறோம்.