Tuesday, November 23, 2004

'சன் டே' யும் சண்டையும்!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 19
**********************

ஞாயிற்றுக் கிழமைக்கெனவே சில சம்பிரதாயங்கள் உண்டல்லவா? சிலருக்கு அது தூங்கும் நாள். துணி துவைக்க, நண்பர்களைச் சந்திக்க,
புத்தகம் படிக்க, பிக்னிக் போக, நான்வெஜ் ஐட்டங்களை ஒரு கை பார்க்க, சர்ச்சுக்குப் போக,


ஞாயிற்றுக் கிழமைக்கெனவே சில சம்பிரதாயங்கள் உண்டல்லவா? சிலருக்கு அது தூங்கும் நாள். துணி துவைக்க, நண்பர்களைச் சந்திக்க,
புத்தகம் படிக்க, பிக்னிக் போக, நான்வெஜ் ஐட்டங்களை ஒரு கை பார்க்க, சர்ச்சுக்குப் போக, எதுவுமே இல்லையென்றால் ச்சும்மா
ஒரு லாங் ட்ரைவ் இப்படி ஏதாவது ஒன்று!

மற்ற நாட்களில் வேலையால் உண்டாகிய அலுப்பைப் போக்கும் நாள்! எந்தக் காரியமாக இருந்தாலும், இந்த 'சன் டே' கட்டாயம் செஞ்சிடணும்
என்றிருந்த காலம்!

இதெல்லாம் கூட அவ்வளவு முக்கியமில்லை. இங்கே ஜனங்களின் வசதியை முன்னிட்டு, திருமணம், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகள்
சனி, ஞாயிறு ( வீக் எண்ட் இல்லையா?)களிலே நடக்கும். திருமணங்கள் அநேகமாக சனிக்கிழமையன்றுதான். ஆனால் அதை ஒட்டி, நடக்கும்
பல்வேறு வைபவங்கள் பெண்ணும், மாப்பிள்ளையும் 'மறுவீடு புகுதல்' , மாப்பிள்ளை வீட்டு வரவேற்பு ( திருமணம் எப்போதும்
மணப்பெண் வீட்டிலேயே நடைபெறும்)போன்றவைகள் மறுநாளான ஞாயிறன்றே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இது, இன்று நேற்று வந்த
பழக்கம் அல்ல. பல ஆண்டுகளாகவே இப்படித்தான்!

அதற்கும் வந்ததே ஆபத்து! நம் ராணுவத்தலைவர், நாட்டை ஒரு 'கிறிஸ்டியன் ஸ்டேட்' ஆக அறிவித்தார்! ( அப்பப்ப இப்படி ஏதாவது
ஸ்டண்ட் அடிக்கலேன்னா அவருக்கு ஆகாது!)

அறிவிச்சுக்கட்டும். அதனாலே என்ன என்று எல்லோரும் ச்சும்மா இருந்தோம். ஏனெனில் 'கிறிஸ்டியன் ஸ்டேட்' என்றால் என்ன என்று
தெரிந்தால் தானே?

'சர்ச்சு'க்கு மட்டும் போக முடியும். மற்ற விஷயங்களுக்கெல்லாம் 'தடா!' போலீஸ்காரர்களுக்கு இதுவே முக்கிய வேலையாகப் போனது!
போற வர்ற காருங்களை நிறுத்தி விசாரிக்கறது! அவரவர் வீட்டிலே 'கப் சுப்'என்று உட்கார்ந்திருக்கணும்!

இந்தியர்கள் சம்பந்தமுள்ள விழாக்கள் எல்லாம் ஞாயிறு தவிர மற்ற நாட்கள் மட்டுமே என்பதால், நம்மவர்க்கு இடைஞ்சலாக இருந்தது!
இதுநாள்வரை, ஒருவித வேற்றுமையும் பாராட்டாமல் ' எல்லாரும், எல்லாத்துக்கும் போய் வந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்' எல்லாம்
புது வர்ணம் பூசிக்கொள்ளத் தொடங்கியதுபோல இருந்தன! இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே 'மோதல்' ஏற்படத் தொடங்கியிருந்தது!


'இது என்ன புது வம்பு' என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்தனர்!

அதே சமயம் 'காமன்வெல்த் அணி'யிலிருந்து ஃபிஜியை நீக்கிவிட்டதாக அறிக்கை வெளிவந்தது!

தலைவர் ச்சும்மா இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்பாரா என்ன? அவரும் பதில் அறிக்கை விடுத்தார். 'நீங்கள் என்ன எங்களை
நீக்கறது? நாங்களே விலகுகிறோம்!'

'சபாஷ்! சரியான போட்டி' என்று 'நடிகர் வீரப்பா, வஞ்சிக்கோட்டை வாலிபனில்' சொன்ன மாதிரி நாங்களும் புது சுறுசுறுப்புடன்
நிமிர்ந்து உட்கார்ந்தோம்!

இதற்குள் என் கணவரும் நியூஸிலாந்து போய் அங்கே உள்ள ஃபேக்டரியைப் பார்வையிட்டு(!) திரும்பி வந்தார். அது கொஞ்சம் பெரிய
அளவில் ( 300 பேர் வேலை செய்கிறார்கள்) நடந்து கொண்டிருந்தது. யூனிட் பெருசு என்பதால், வசதிகளும், இன்னும் மேலே உயரக்கூடிய
வாய்ப்புகளும் இருந்தன! இங்கேயோ 15 ஆட்கள் மட்டுமே உள்ள சிறிய யூனிட்.

அங்கே போனால், புது 'ப்ராடக்ட் டெவலெப்' செய்து ஆராயவும் வசதிகள் இருந்தன! வளர வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இதையெல்லாம்
நினைவில் கொள்ளவேண்டுமல்லவா? ஆகவே 'ச்சலோ நியூஸிலாண்ட்' என்று தீர்மானித்தோம்.

வேலைக்கான அனுமதியில் போகவேண்டாம் என்றும், நிரந்தர வசிப்பு என்ற தகுதியில் போகலாம் என்றும் நினைத்ததால், உடனே இங்குள்ள
தூதரகத்தில், 'பெர்மெனண்ட் ரெஸிடென்ஸ்' தகுதிக்கு விண்ணப்பித்தோம். அதே சமயம், அங்கே நியூஸியில் நம் வருகைக்கான அவசியத்தை(!)
குறிப்பிட்டு, கம்பெனியும் குடியுரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது!

'இரண்டு கல்லில் ஒரே மாங்காய்!!'

நான் எழுதிய அனுப்பிய லிஸ்ட்டில் இருந்த சாமான்கள் கிடைப்பது, நாங்கள் இருக்கப் போகும் நகரத்தில் கொஞ்சம் கஷ்டம் என்றாலும், ஆக்லாந்து
என்னும் பெரிய நகரத்தில் இவை கிடைக்கும் என்ற விவரமும் கொண்டுவந்தார். ஆனால் 'அரிசி' கிடைக்கிறதென்று சொன்னார்!

இன்னும் ஒரு முக்கியமான(!) விஷயத்தையும் கவனித்து வந்திருந்தார்.

'வைர மோதிரம்'

இதுவரை, இந்தியக் கலாச்சாரத்தை (தாலி செண்டிமென்ட் போன்றவை ) மற்றுமே அறிந்து வாழ்ந்துவந்த எங்களுக்கு, இது ஒரு புது
விஷயமாக இருந்தது. நம் ஊர்க் கல்யாணங்களிலும் மோதிரம் என்பது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும் 'வைரம்' என்பது மிகவும்
வசதியானவர்களுக்கு என்ற நிலமை இருந்துவந்த காலம்! ஆனால் இங்கே 'வெள்ளையர்கள்' திருமணச் சடங்குகளுக்கு முக்கியமாகக்
கருதியது இந்த வைர மோதிரம்! அதுவும் ஒரு பெரிய வைரக் கல்லாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு 'எறும்புத் தலை'யின்
அளவிருந்தாலும் போதும்! வைரம் வைரம்தான்! மற்றபடி அவர்கள் நம்மைப் போல் தங்க நகைகள் அணிவது அநேகமாக இல்லை என்றே
சொல்லலாம்!

எங்கே, எனக்குத் தாழ்மைஉணர்வு வந்துவிடுமோ என்று 'இவராகவே எண்ணிக் கொண்டு' எனக்கு ஒரு 'வைர மோதிரம்' வாங்கித் தந்தார்!
அடிச்சது பிரைஸ்! நல்லதாகவே பார்த்து வாங்கிக் கொண்டேன்! ( நியூஸி போன பின்புதான் இந்த 'வைர விவகாரம்' இவர் நினைத்தது
போல இல்லையென்பதும், பலர் வெறும் தங்க மோதிரமே அணிகிறார்கள் என்பதும், சிலர் ஒன்றும் அணியாமலேயே இருக்கிறார்கள் என்றும்
தெரிந்தது) ஏதோ நம் அதிருஷ்டம், இவர் வைரமோதிரம் உள்ளவர்களை மட்டுமே பார்த்திருக்கிறார்!! வெல்டன்!!!!

இப்போது 'காத்திருப்பு காலம்'. நமக்குத் தூதரகத்திலிருந்து அழைப்பு வரும் என்று சொல்லியிருந்தார்கள்.

நம் ராணுவத்தலைவர் இன்னோரு அறிக்கை வெளியிட்டார். இது மிகவும் முக்கியமானது! எங்கள் நாடு இனி ஆங்கிலேயரின் ஆட்சிக்கு
உட்படப் போவதில்லை. இதை ஒரு 'குடியரசு நாடு' என்று பிரகடனம் செய்தார்! இதனால், இங்கிலாந்தின் அதிகாரத்தில் இருந்து முழுமையாக
விடுபட்டாயிற்று. இனி 'நோ கவர்னர் ஜெனரல்!' நானே பிரதம மந்திரி! நானே எல்லாம்!!!!!!!

இங்கிலாந்து அரசுக்கும் 'விட்டது ஒரு தொல்லை!' அவர்களும் இந்த நாட்டுப் பராமரிப்புக்கென்று இனி செலவு செய்ய வேண்டாமே! இனி எல்லாம்
உங்கள் பாடு என்று 'நைஸா'கக் கைகழுவி விட்டனர்!

நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த நம் ராணுவத்தலைவர்......இல்லையில்லை, நம் புதிய பிரதமர் தனக்குத் தெரிந்த வழியை மீண்டும்
செயல்படுத்தினார்.

இந்தா பிடி, இன்னொரு 20 சதம் நாணய மதிப்புக் குறைவு!

இப்போது ஃப்ஜி டாலர் மொத்தம் 34% மதிப்பை இழந்துவிட்டது!

வியாபாரிகளுக்கு பயங்கர இடி!

குரங்கு அப்பம் பிட்ட கதையாக ஆனது எங்கள் சேமிப்பு!


இன்னும் வரும்
************

0 comments: