Friday, November 05, 2004

தீபாவளி !!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 14
**********************

தீபாவளிக்கு அரசாங்க விடுமுறை!!!! இது ஒரு பெரிய விஷயமா? ஆமாம்! வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக
வெள்ளைக்காரர்களின் தேசத்தில் வசிக்கும் நம்மவர்க்கு, தீபாவளி பண்டிகை என்றால் அதுவும், அது வார இறுதியில் இல்லாமல் சாதாரண
வேலை நாளாக இருந்துவிட்டால் அது வெறும் நாள்தான்!


தீபாவளிக்கு அரசாங்க விடுமுறை!!!! இது ஒரு பெரிய விஷயமா? ஆமாம்! வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக
வெள்ளைக்காரர்களின் தேசத்தில் வசிக்கும் நம்மவர்க்கு, தீபாவளி பண்டிகை என்றால் அதுவும், அது வார இறுதியில் இல்லாமல் சாதாரண
வேலை நாளாக இருந்துவிட்டால் அது வெறும் நாள்தான்!

சரி, வருடத்தில் ஒரு நாள்தானே என்று விடுப்பும் எடுக்க மாட்டார்கள். அன்றுதான் 'தலைபோகும்'விதமான பிளானிங் மீட்டிங், அது இது
என்று ஏதாவது முக்கியமாக(!) இருந்து தொலைக்கும்! ( அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் புரியும்!)

ஆனால் ஃபிஜியில் வம்பே இல்லை. அரசாங்க விடுமுறை! இந்தத் தீபாவளியுமே இங்குள்ள எல்லோருக்கும் மிகவும் முக்கியமான பண்டிகை!
குஜராத்திகளுக்கு இது புது வருடம்! வட இந்தியர்களுக்கு ஸ்ரீ ராமன் காட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய தினம்! நமக்கோ 'நரகாசுரன் வதம்'
தென்னிந்தியர்கள் மற்றெந்தப் பண்டிகையும் இங்கே கொண்டாடுவதில்லை! வட இந்தியர்கள் மட்டுமே ஸ்ரீராம நவமியையும், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி
யையும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்! ஆனால் ஆ என்றால் ஊ என்றால் உபவாசம் இருந்துவிடுவார்கள்!

தீபாவளிப் பண்டிகைக்கு வீடுகளில் தீப அலங்காரம் பிரதானப் பங்கு வகிக்கின்றது! மண் அகல்களில் ஏற்கெனவே மெழுகு உருக்கி
ஊற்றிய விளக்குகள் தாரளமாகக் கிடைக்கின்றன! போதாததற்கு 'கிறிஸ்மஸ் லைட்' தோரணங்களும் மலிவாகக் கிடைக்கின்றன. ஒரு விஷயம்
கவனித்தீர்களா? தீபாவளி, ரம்ஜான்,கிறிஸ்மஸ் எல்லாமே அடுத்தடுத்து இந்த நவம்பர், டிசம்பர்களில் வந்துவிடுகின்றது! கூடவே ஆங்கிலப்
புத்தாண்டும்!

எல்லா வீடுகளிலும் இந்த அலங்காரங்கள் இடம்பெறுவதோடு, ஆங்கிலப் புத்தாண்டுவரை கழற்றப்படாமல் அப்படியே இருக்கவும் செய்யும்!
அதுவரை கடைகளில் தீபாவளிப் பட்டாசுகளும் விற்பனையில் இருக்கும்.

இங்கே ஒரு விஷயம் இடைச்செருகலாக வருகிறது. நான் வசிக்கும் நியூஸிலாந்தில் பட்டாசு கிடைப்பது வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே.
அதுவும் அக்டோபர் கடைசியில் ஆரம்பித்து நவம்பர் ஐந்தாம் தேதி, மாலை ஐந்து மணிவரை மட்டுமே விற்க முடியும். ப்ரிட்டிஷ்காரர்
களின் நரகாசுரனான 'கை ஃபாக்ஸ் டே' வாண வேடிக்கை, வெடிக்கட்டு விழா ஒவ்வொரு வருடமும் நவம்பர் 5 வது நாள்
கொண்டாடப் படுகிறது. இந்த நாளோடு பட்டாசு விற்பனையை முடித்துவிடவேண்டும். அணுகுண்டு, லக்ஷ்மி வெடி என்றெல்லாம்
' டமால், டுமீல்' வெடிகள் இல்லை. எல்லாம் 'புஸ் வாணம்' வகைகள்தான்! ஆபத்தில்லாத வாணங்கள்!

இன்னுமொரு வேடிக்கை, பட்டாசு வாங்க குறைந்த பட்ச வயது 14 ! சின்னப்புள்ளைங்களுக்குத் 'தடா!' ஆனால் அன்று கடற்கரையில்
நகராட்சி மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் வாண வேடிக்கையைக் காண ஊரே திரண்டுவரும்! ( இது இன்று தான். இரவு நாங்களும்
போவோம்!)

மேற்படி எந்தவிதமான கட்டுத்திட்டங்களும் ஃபிஜியில் கிடையாது! அது ஓர் இந்தியா அவே ஃப்ரம் இந்தியா! தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு
முன்பிருந்தே 'டப், டுப்' என்று சின்ன சின்ன சப்தங்களாக பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கி, தீபாவளிக் களைகட்ட ஆரம்பித்துவிடும்!

பலகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதிலும் அனைவரும் பங்கு கொள்வார்கள். ஒவ்வொரு நாள் ஒரு வீடு என்று ஆரம்பித்து வேலை
நடக்கும்!

'லக்கடி மிட்டாய்' என்ற ஒன்றைக் கட்டாயம் செய்வார்கள். நம் நாட்டில் கிடைக்கும் சக்கரை சேவு ஞாபகம் இருக்கிறதா? அதுதான் இது!
ஆனால் மைதா மாவில் செய்து, முதிர்ந்த பாகில் போட்டுக் கலந்துவிடுவார்கள். ஆறியவுடன், வெண்மையாக பனி போர்த்தியதுபோல
இருக்கும்! 'ஸைனா' என்றொரு காரவகை. இங்கே 'டாரோ' என்னும் கிழங்குவகைகள் ஏராளம் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்
அல்லவா? இந்த்க் கிழங்கின் இலைகள் நம் நாட்டு சேப்பங்கிழங்கின் இலைகள் போல பெரிய அளவில் இருக்கும்.
பருப்பு வகைகளை, மிளகாய், உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பதுபோல அரைத்து, இந்த இலைகளைப் பரத்தி அதன் பின்னே கனமாகத்
தடவி விடுவார்கள். ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு அல்லது மூன்று இலைகளில் இப்படித் தடவி, அவைகளை ஒன்று சேர்த்து சுருட்டுவார்கள்.
நீளமாக சிலிண்டர் போல இருக்கும் இவைகளை ஆவியில் வேகவைத்து, ஆறியவுடன் வட்ட வில்லைகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தால்
ஆச்சு இந்த 'ஸைனா!'

இன்னும் பலவிதமான பலகாரங்கள். இதை எழுதும்போதே, அவைகளையெல்லாம் 'மிஸ்' செய்த உணர்வு வருகின்றது! குஜராத்திகளால்
நடத்தப் பெறும் 'மிட்டாய்க் கடை'களிலும் பலவிதமான 'தீபாவளி ஸ்பெஷல்'கள். 'ஹரே கிருஷ்ணா இயக்கம்' நடத்தும் உணவுக்கடை
களிலும் பாலினால் செய்யப்பட்ட பலவகை இனிப்புகளை இப்போதெல்லாம் ஒரு கிலோ, அரைக் கிலோ பாக்கெட்டுகளில் வீற்பனை
செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தீபாவளிதினம் வந்தாச்சா? ஆரம்பித்துவிடும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று விஜயங்கள்! காலை முதல் கார்கள் ஓடிக்கொண்டேயிருக்கும்.
(அதுதான் நல்ல நாளிலேயே யாரும் நடக்க மாட்டார்களே!) பலகாரம் 'டிஸ்ட்ரிப்யூஷன்' நடந்துகொண்டே இருக்கும்! அநேகமாக ஒரே
ரெஸிபிதானே! செய்ததும் ஒரே கூட்டம் தானே! ஆனாலும், போய்வந்து போய்வந்து உடலே தளர்ந்துவிடும்!

புது உடைகள் கூட முக்கியமில்லை! பலகாரங்கள்தான் முக்கியம்! வீடு முழுக்கப் பலகாரங்கள்தான்! கெட்டதில், நல்லது என்னவென்றால்
தனித்தனியாகத் தட்டுத்தட்டாக எடுத்து வைக்கவேண்டாம்! அந்தந்த வகைகளை மட்டும் தனியாக ஒவ்வொரு பாத்திரத்தில் போட்டுவிடலாம்!

நேடிவ் ஃபிஜியர்கள் இந்த தீபாவளியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பலகாரங்கள் எல்லாம் ரொம்பவே
பிடிக்கும்! நம்மைவிட நன்றாக 'அனுபவித்து, ரஸித்து' உண்பார்கள்!

மாலை ஆனவுடன், ஊரே கடைத்தெருவில்தான் இருக்கும். குஜராத்திகளுக்கு இது புதுக் கணக்கு எழுதும் புது வருட விழாவல்லவா?
அவர்களும் கடைவாசலில் இனிப்பு விநியோகித்துக் கொண்டும், பெட்டி பெட்டியாக பட்டாசு வெடித்துக்கொண்டும் இருப்பார்கள். எல்லாம்
முடிந்ததும் கார்களின் ஊர்வலம் தொடங்கிவிடும்! எல்லாப் பகுதிகளுக்கும் ஒரு 'ட்ரைவ்' போய் வீடுகளில் போடப்பட்டுள்ள தீப
அலங்காரங்களைப் பார்ப்பது ஒரு கட்டாயக் கடமை!

கிறிஸ்மஸ் முடியும்வரை, இருட்டியவுடன் இதே மாதிரி அவ்வப்போது நகர்வலங்கள் தொடரும். டிஸம்பர் 22 'நீண்ட பகல் பொழுது' உள்ள
தினமல்லவா? அன்று 'படா தின்' கொண்டாட்டங்கள். இதில் நேடிவ் ஃபிஜியர்களும் 'ஹாங்கி' என்று செய்வார்கள். பெரிய பள்ளம் தோண்டி,
அதில் அடுப்புக் கரிகள் போட்டு அதன் மேல் பெரிய வாழை இலைகளில் இறைச்சி, உருளைக் கிழங்கு, இன்னும் காய் கறிகள் எல்லாம்
பொதிந்து பொட்டலமாக செய்து அடுக்கி விட்டு, அதன்மேல் இன்னும் பல வாழை இலைகளைக் கொண்டு மூடி விடுவார்கள். இன்னும் சில
கட்டைகளையும், அடுப்புத் தணலையும் அதன் மேல் போட்டு, மண்ணால் நன்றாக மூடிவிடுவார்கள். அது ஒரு 3 மணிநேரம் புகைந்து
கொண்டே இருக்கும். அப்புறம் அந்தக் குழியைத் தோண்டி அதிலுள்ள ஆகார வகைகளை வெளியே எடுத்தால் எல்லாம் நன்றாக வெந்து
போயிருக்கும். பெரிய கூட்டமாக சுற்றி அமர்ந்து உண்பார்கள். கூடவே 'யக்கோனா'! இந்தியர்களையும் இந்த 'ஹாங்கி விருந்து'க்கு
அழைத்து மகிழ்வார்கள்.


ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் சரியாக டிசம்பர் 31 இரவு 12 மணி அடித்தவுடன் ஆரம்பித்துவிடும்.
எல்லா வீடுகளிலிருந்தும் ( ஒன்றுவிடாமல் எல்லா வீடுகளும்) கார்கள் புறப்படும்.
'கழுதை வாலில் பட்டாசு கட்டிவிடுவது போல' பழைய தகர டப்பாக்களைத் துளை போட்டு, காரின் பின்னே கட்டிவிடுவார்கள். அது
'டர்ர, டக டக,'வென்று நாராசமாக ஒலி எழுப்பிக் கொண்டே வரும். அந்தச் சத்தத்துடன் ஊர் முழுதும் வலம் வந்த பின் தான், தூங்கவே
போவார்கள்! கெட்ட ஆவிகளைப் பயப்படுத்தி ஓட்டுவதற்காம் இந்தச் சத்தம்!

இந்த விழாக்களில் எல்லாம் அநேக ஆடுகளுக்கு 'மோட்சம்'தான்! இந்த இடத்தில் ஒன்று குறிப்பிடவேண்டும். வீட்டு வேலை என்று வரும்போது,
இறைச்சி, மீன் வகைகள் சுத்தம் செய்து தருவது 'ஆண்கள்' வேலை. 'பார் பெக்யூ' செய்வதற்கு இறைச்சியில் மசாலா கலப்பது மட்டும்
பெண்கள். அவற்றைச் சுட்டு எடுப்பது ஆண்கள்! துணிமணிகளைத் துவைப்பதும், முக்கியமாக அவைகளை 'அயர்ன்' செய்வதும்
கட்டாயம் பெண்கள் வேலையாம்! எப்போதாவது என் கணவர் அவசரத்துக்கென்று ஒரு ஷர்ட்டை அயர்ன் செய்வதைப் பார்த்தால்கூடப்
போதும் நம் உதவியாளர் பெண்ணுக்கு பதற்றம் வந்துவிடும். ஓடிவந்து அதைக் கையிலிருந்து பிடுங்கி, தானே அயர்ன் செய்து கொடுத்தால்தான்
அந்தப் பதற்றம் நீங்கும்!

இதில் என்ன இருக்கு என்று எனக்கு இன்னமும் புரியவில்லை!


இன்னும் வரும்!
******************

3 comments:

said...

இன்றைய பதிவு தீபாவளி பலகாரம், கொண்டாட்டம் என்றே பேசியதால் ரொம்ப சந்தோசமாய் இருந்தது. சிங்கையிலும் தீபாவளிக்கு விடுமுறை. 11 தீபாவளி, 15ல் ரம்ஜான் (ஹரி ராய பூசா) வருவாதால் இடையில் 12-வெள்ளி விடுப்பு எடுத்தால் ஒரு நீண்டவிடுமுறை. எனக்கு அதுவசதிப்படவில்லை. மற்றப்படி இங்கும் வெறும் மத்தாப்புதான். தேசியதினம் அன்று மட்டும் அரசு வெடித்து வந்த வெடி, கடந்த வருடம் சீனப்புத்தாண்டின் போது அரசு சார்பில் 'சைனா டவுன்'-ல் வெடித்தது. அதுபோல் ஒருவேளை 'லிட்டில் இண்டியா'வில் வருங்காலத்தில் வெடிக்கப்படலாம்! ஓ... உங்களுக்கு சர்க்கரை சேவு தெரியுமா? அப்போ கருப்பட்டி மிட்டாய் சுடச்சுட தின்றால் அதன் சுவையே அபாரம்... எங்கள் கிராமத்தின் படைப்பு அது.

என்ன இதில என்ன இருக்குன்னு முடிச்சிட்டீங்க: இங்க உள்ளதுல கடினமான வேலையே அயர்ன் பண்றதுதான்... அச்சச்சோ இதுக்காகவே ஃபிஜி சட்டத்தை குறைந்தபட்சம் எங்க வீட்டிலாவது நடைமுறைப்படுத்தணும்.

said...

Dear Thulasi,
Wish you and your family..a great and happy Diwali!!!
Regards,Arun Vaidyanathan

said...

என் பதிவுக்கு வந்து வாழ்த்திய உங்களுக்கு என் நன்றிகள்.

வீரமணி இளங்கோ