Monday, October 25, 2004

மேலிடத்து ஊறுகாய் !!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 11
***********************

நான் ஏற்கெனவே எழுதுனமாதிரி, இங்கே இந்தியக் காய்கறிகளுக்கும், மாமரம் புளியமரம் போன்றவைகளுக்கும் பஞ்சமே இல்லை!


நான் ஏற்கெனவே எழுதுனமாதிரி, இங்கே இந்தியக் காய்கறிகளுக்கும், மாமரம் புளியமரம் போன்றவைகளுக்கும் பஞ்சமே இல்லை!



ஏற்கெனவே எழுதுனமாதிரி, இங்கே இந்தியக் காய்கறிகளுக்கும், மாமரம் புளியமரம் போன்றவைகளுக்கும் பஞ்சமே இல்லை!

நாங்க இங்கே வருவதற்கு முன், இங்கிருந்து ஒருவர் ( நமக்கு வரப்போகிற முதலாளியின் மருமகன்!) இந்தியாவில் நம் வீட்டிற்கே
வந்து, இங்கே அமையப்போகும் ஃபேக்டரியைப் பற்றியும் எந்த விதமான மெஷீன்கள் வரப்போகின்றன என்றும் என் கணவரிடம்
விவாதித்துக்கொண்டு இருந்தார்.

என் கணவருக்கு உணவு வகைகளில் மிகவும் விருப்பமானது ரசம்! எனக்கு ரசம் பிடிக்குமென்றாலும் அதை செய்வதற்குப் பிடிக்காது
இவரோ எப்போதாவது மரணத்தைப் பற்றிப் பேச்சு வரும்போது இப்படிச் சொல்வார். "நீ சாகறதுக்கு முன்னாலே ஒரு பெரிய
பாத்திரத்துலெ நிறைய ரசம் வச்சிட்டுப் போயிடு" அநியாயம் பாருங்க! நான் செத்தாலும் இவர் ரசம் ஊற்றிக்கொண்டு சாப்பிடணுமாம்!
'பேய்க்கு வாழ்க்கைப்பட்டா கதை தெரியுமா?'அதை நினைத்துக் கொண்டு ரசம் செய்வேன்.

இப்போது ஃபிஜிக்கு போகணுமே. அங்கே எப்படி இருக்கும் என்றெல்லாம் தெரியாதே என்று கவலையாக இருந்தது. அப்போது
இது போன்ற இணையம் வசதிகள், அவ்வளவு ஏன்? கணினி கூடக் கிடையாதே ( 22 வருடங்களுக்கு முன்) பூனாவில் ஏதாவது
தகவல் கிடைக்குமா என்று தேடினோம். பம்பாயில் உள்ள 'பிரிட்டிஷ் நூலகத்தில்' கிடைக்கலாம் என்றார்கள்.

நல்லவேளையாக இப்போது அங்கிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அவரிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தேன்.

"ஃபிஜியில் புளி கிடக்குமா?"

"தாராளமாகக் கிடைக்கும். அதுவும் இனாமாக! நிறைய புளிய மரங்கள் இருக்கிறது"

" இன்னும் ஏதாவது விவரங்கள் வேண்டுமா?"

" புளி இருக்கு என்று சொன்னதே போதும். மாமரங்கள் உண்டா? மாங்காய் கிடைக்குமா?"
( இவருக்கு ஊறுகாயும் இஷ்டமாச்சே!)

இது எப்படி இருக்கு? வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

" கவலைப் படாதீர்கள். இந்தியாவில் கிடைப்பது எல்லாம் கிடைக்கும்!நாங்கள் எல்லாம் அங்கே இருக்கிறோம்.
தைரியமாக வாருங்கள். அங்கே சந்திக்கலாம்"

ஃபிஜி வந்தபிறகு தெரிந்துகொண்டது நாம் தனியாக இல்லை என்பது! எல்லோரும் தான் அன்பாகப் பழகுகின்றனரே!

இந்த நாட்டின் தலைநகர் சுவா என்னும் ஊர். இங்கேதான் நமது இந்தியத் தூதரகம் உள்ளது. நாங்கள் அங்கிருந்தபோது,
இந்தியத் தூதராக இருந்தவர் ஒரு 'சேட்டன்' அவரும் அவர் துணைவியாரும் மிகுந்த நட்புடன் பழகுவார்கள்.

நாங்களிருந்த ஊரில் மொத்தமே மூன்று குடும்பங்கள்தான் N.R.I. நிலமையில் இருந்தோம்.

குஜராத்திகள் இங்கே வந்தவுடனே அவர்கள் வங்கியான 'பேங்க் ஆஃப் பரோடா' வந்துவிட்டிருந்தது! அதில் வேலை செய்பவர்கள்
உள்நாட்டு ஆட்கள் என்றாலும், மேலதிகாரிகள் மட்டும் இந்தியாவிலிருந்து வருவார்கள். மூன்று வருடம் 'போஸ்ட்டிங்'
அப்படி வந்திருந்தவர்களின் குடும்பம் ஒன்று, எங்கள் குடும்பம் ஒன்று. மூன்றாவது நபர், இங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தின்
பாதிரியார். கத்தோலிக்கரான படியால் அவருக்கு குடும்பம் இல்லை( அவர்கள்தான் மணம் செய்து கொள்ளக் கூடாது அல்லவா?)
தனி மனிதராக இருந்தார். அவரும் 'கேரளா'வைச் சேர்ந்தவர்.

ஹை கமிஷனர் குடும்பத்திற்கு உதவ இந்தியாவிலிருந்தே வேலையாட்களை அழைத்துவரும் உரிமை இருந்ததால், அவர்கள் ஒரு
நல்ல சமையலில் நிபுணராக உள்ள ஒரு உதவியாளரைக் கொண்டுவந்திருந்தனர்.

தூதரகத்தின் வளாகத்தில் எக்கச் சக்க மாமரங்கள் வேறு! வகைவகையான ஊறுகாய்கள் தயாரிப்பார்கள். தூதரும் அவர் மனைவியும்
அடிக்கடி இந்தத்தீவைச் சுற்றி வந்து நம்மையெல்லாம் நலம் விசாரிப்பார்கள். அப்போது நமக்குத் தேவையான ஊறுகாய்களும்
கொண்டுவந்து தருவார்கள். பெரிய பதவி என்ற 'பந்தா'வெல்லாம் கிடையாது! சேட்டனும் சேச்சியும் நல்லபோல சம்சாரிப்பார்கள்!
அவர்களுக்கு வரும் மலையாளத் திரைப்படங்களின் காஸட்டுகளையும் நமக்குக் கொண்டுவந்து தருவார்கள்.

நம் ஊருக்கு வரும்போது, நம் வீட்டில் பகலுணவுக்கு ஏற்பாடு செய்வோம். மற்ற என். ஆர்.ஐ. களும் வந்து கலந்து கொள்வார்கள்.

இங்கிருந்து ஒரு 44 மைல் தூரத்தில் நாண்டி என்ற ஊர் உள்ளது. இதுதான் பன்னாட்டு விமான தளம் இருக்குமிடம். இங்கேயும்
ஒரு கேரளக்குடும்பம் இருக்கிறது. வார இறுதிகளில் நாங்கள் அங்கே போவதும், அவர்கள் இங்கே வருவதுமாக நாட்கள் போனது!

அப்போது அங்கே தொலைக்காட்சி வந்திருக்கவில்லை! எங்களது ஒரே பொழுது போக்குத் திரைப்படம் காணுதல்! குஜராத்திகள்
நடத்தும் கடைகளில் வீடியோ காஸட்டும் வாடகைக்குக் கிடைக்கும். ஹிந்திப் படங்கள். இந்தியாவில் 'ரிலீஸ்' செய்யும் தினமே
இங்கேயும் கிடைக்கும். வாடகை ஒரு நாளைக்கு ஒரு டாலர்தான்!

அநேகமாக எல்லாப் படங்களையும் முதல்நாள் முதல் ஷோ என்று பார்த்துக் கொண்டிருந்தோம்! இந்தியாவுக்கு ஃபோன் செய்யும்போது
இன்ன படம் பார்த்தோம் என்று சொன்னால், அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! இங்கே ஹவுஸ் ஃபுல். டிக்கெட்டே கிடைக்கவில்லை'
என்பார்கள். நாங்கள் ஹாயாக வீட்டில் உட்கார்ந்துகொண்டே பார்த்துவிடுவோம்!

அப்போது தமிழ்ப் படங்கள் சில சமயம் நாண்டியில் கிடைக்கும். அந்த வீடியோக் கடைக்காரர், ஏதாவது தமிழ்ப் படம் வந்தால் எங்களுக்குத்
தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர்கள் 'குஜ்ஜு' அனதால், அந்தப் படத்தின் பெயரையும் 'கொலை' செய்து சொல்வார்கள்.
ஸ்பெல்லிங் என்ன என்று கேட்டு, அதை வாங்குவதற்காக 44 மைல் தூரம் போவோம்! ஒரு படத்துக்கு 88 மைல் பிரயாணம் செய்தது
அக்கிரமம் என்று இப்போது தோன்றுகிறது!


இன்னும் வரும்
***************


3 comments:

said...

ஒர் அவஸ்தை..ஊறுகாய் விஷயத்திற்கு வந்தபோது எச்சி ஊறி..ஊறி...

said...
This comment has been removed by a blog administrator.
said...

///////////////////நான் ஏற்கெனவே எழுதுனமாதிரி, இங்கே இந்தியக் காய்கறிகளுக்கும், மாமரம் புளியமரம் போன்றவைகளுக்கும் பஞ்சமே இல்லை! /////////////////
அதென்ன இதையே திரும்ப திரும்ப 3 வாட்டி சொல்லியிருக்கீங்க??
////'பேய்க்கு வாழ்க்கைப்பட்டா கதை தெரியுமா?'அதை நினைத்துக் கொண்டு ரசம் செய்வேன். /////
ஹா ஹா ஹா... பேய்க்க்கு வாழ்க்கைபட்டாதானே?? நீங்க திரு கோபாலுக்கு தானே வாழ்க்கை பட்டிருக்கீங்க?????? :) :)
வீ எம்