Monday, October 18, 2004

பூலா!!!!! லாக்கமாய்!!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 9



'பூலா!!! பூலா !!! லாக்கமாய் - இது என்ன?

வணக்கம்!!! வணக்கம்!!! வாங்க!!! இதுதான் அர்த்தம்!


நேடிவ் ஃபிஜியர்களின் மொழி இது! ஃபிஜியன் மொழி. இதற்கென்று தனி எழுத்துரு இல்லை. ஆகவே ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.
பிரிட்டிஷ்காரர்கள் இங்கு முதலில் வந்து குடியேறியபோது, வெறும் காட்டு ஜனங்களாக இருந்த இவர்களுக்குத் தனியாக 'மதம்' என்று ஒன்றும் இல்லையாம்! பின்னர், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மெஷினரிகள் வந்து, இவர்கள் வாழ்க்கையை 'ஒழுங்கு'படுத்தினார்களாம். அப்போது இவர்களுக்கு இருந்த 'நரமாமிசம்' சாப்பிடும் பழக்கத்தினால், சில மெஷினரிகள் 'காணாமல்' போனதும் உண்டாம்!



கொஞ்சம், கொஞ்சமாக இவர்களைத் தங்கள் மதத்துக்கு மாற்றுவதில் பெரும் வெற்றி அடைந்தனர் இந்த மெஷினரிகள். அப்போது கிறிஸ்துவ மதத்திலும் இரண்டே பிரிவுகள்தான் இருந்ததாம். ப்ராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்கப் பிரிவு.

இப்போது அவர்கள் மதத்திலும் கூட பலபிரிவுகள் வந்துவிட்டன. எப்போதும் எனக்குத் தீராத சந்தேகம் ஒன்று உண்டு. ஹிந்துக்களுக்கு பல கடவுள்கள். இதனால் பலவிதமான வழிபாட்டு முறைகளும், கோயில்களும் உருவாகிவிட்டன.

ஆனால், கிறிஸ்த்துவ மதத்தில் அவர்களுக்கு ஒரே கடவுள்தானே! அப்படி இருக்கும்போது, எத்தனை விதமான 'சர்ச்சுகள்' இருக்கின்றன! இதை, அங்கே நம் வீடுகளுக்கு வரும் 'செவந்த்டே அட்வென்டிஸ்ட்' என்னும் பிரிவைச் சேர்ந்தவர்களையும் கேட்டிருக்கிறேன். அவர்கள் கூறுவது, இவர்களின் வழிபாட்டு முறைகள் சரியில்லை. அதனால் இவர்கள் தனிப்பிரிவாக செயல்படுகின்றார்கள். எனக்கு இன்னமும் புரியவில்லைதான்!

அது போகட்டும். மதம் என்பதும் ஒரு 'சென்சிடிவ் விஷயம் அல்லவா? அதைப் பற்றிக் கூடுதலாக ஒன்றும் வேண்டாமே!

நேடிவ் ஃபிஜியர்கள் எல்லாம் ஏதாவது ஒரு 'சர்ச்சோடு இணைந்துள்ளனர். ஞாயிறன்று, சர்ச்சுக்குப் போகும்போது 'சுலு' என்னும் பாரம்பரிய உடையை அணிகின்றார்கள். ஆண்கள் அணிவது மேல் சட்டை (ஷர்ட்)யும், 'ராப் அரெளண்ட் ' போன்ற முழங்காலுக்குக் கீழே வரும் பாவாடை போன்ற சூட். பள்ளி மாணவர்களும், ராணுவத்தினர், காவல்துறையினர் அனைவருமே இதை அணிகிறார்கள். பெண்கள் இடுப்பைத் தாண்டி வரும் மேல்சட்டையும் கேரளப் பெண்கள் அணிவது போன்ற முண்டும். ஆனால் இந்தத் துணி பெரும்பாலும் 'ப்ரிண்ட்டட் டிஸைன்' உள்ளது. இதன் பெயர் 'சுலு ச்சாம்பா' 'கேசுவலாக' அணிவதற்கு, 'ஐலண்ட் ப்ரிண்ட்' எனப்படும் செம்பருத்திப் பூக்கள் டிஸைன் போட்ட துணிகள். இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது!

கிராமங்களில் இவர்கள் வசிக்கும் இடங்களுக்கு 'கோரோ' என்று பெயர். இவர்களின் வீடுகளை 'புரே' என்று அழைக்கிறார்கள். வீடுகள் பெரும்பாலும் மரவீடுகளே! தரையிலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் கழிகள் நட்டு அதன் மேல் கட்டிய மரவீடுகள். பெரும்பாலான வீடுகளில் 'ஃபர்னிச்சர்கள்'( ஆசனங்கள்) கிடையாது. கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அடுப்பில், விறகெரித்துச் சமையல்.

இவர்களின் உணவில், கப்பக் கிழங்கும் தேங்காயும் , மீனும் கட்டாயம் இடம் பெறுகின்றது. கடல் ஆமைகள் இவர்களுக்கு மிகவும் பிடித்த உணவாம்!

இந்தக் 'கோரோ'க்களுக்கு, ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைவர் இருப்பார். அரசாங்கம் அளிக்கும் உதவிகளை, அவருடைய 'குடிமக்களு'க்குப் பிரித்துக் கொடுத்து, எல்லோரையும் 'காப்பாற்றும்' பொறுப்பு இவருக்கு உண்டு! இந்தக் கோரோக்களின் தலைவர்கள் ஏறக்குறைய சிற்றரசர் போல. இவர்களை 'ராத்தூ' என்ற அடைமொழி சேர்த்துச் சொல்கிறார்கள். இதுபோன்ற பல குடியிருப்புகளுக்கு ஒரு 'சீஃப்' இருப்பார்! இவர்களை 'பாரமவுண்ட் சீஃப்' என்று குறிப்பிடுகின்றனர். அரசாங்கத்தில் இவர்களுக்குப் பெரும் மதிப்பு உண்டு! எந்தப் புதியசட்டங்கள் கொண்டுவந்தாலும், ஏதாவது மாற்றங்கள் செய்வதென்றாலும் இவர்களின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும்!

மந்திரிசபை இவர்களுக்குக் கட்டுப்பட்டதே! நம் இந்தியாவில் 'ராஜ்ய சபா' போன்று இவர்களுக்கும் ' கவுன்சில் ஆஃப் த சீஃப்' என்று ஒரு தனி அமைப்பு உண்டு! நேடிவ் ஃபிஜியன்களைப் பாதிக்கும் அல்லது ஃபிஜியன்கள் சம்பந்தம் உள்ள எந்த விஷயமானாலும் இவர்கள் அனுமதி இன்றி ஏதும் செய்ய முடியாது!

வீடுகளைச் சுற்றியே கப்பக்கிழங்கு, டாலோ எனப்படும் மற்றொரு கிழங்கு வகை, பப்பாளி மரங்கள் இவைகளைப் பயிர் செய்து கொள்கின்றனர். இதற்கென்று தனியான பராமரிப்பு இல்லையென்றே சொல்ல வேண்டும். மண்வளம் மிகுந்துள்ளதால், ச்சும்மா நட்டுவைத்தாலே போதும். தண்ணீர்கூட ஊற்றவேண்டாம்! அதுதான், மழை பொழிந்துகொண்டே இருக்குமே!

இப்போதெல்லாம், அவர்களும் தங்களது விளைபொருள்களைச் சந்தைக்குக் கொண்டுவந்து விற்று, மற்ற பொருட்களை வாங்குகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உணவுப் பழக்கமும் மாறிவருகின்றது! பருப்பு சமைக்க ஆரம்பித்துள்ளனர்!

சராசரி இந்தியர்கலைவிட வலுவான உடலமைப்பைக் கொண்டவர்கள் இவர்கள். உயரமாகவும், அகன்ற தோள்களுடனும், சுருட்டைத் தலைமுடியுடனும் இருப்பார்கள். நான் இங்கே வந்த புதிதில், ஊருக்குக் கடிதம் எழுதும்போது, இவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள்? இவர்களுடைய தலைமுடி எப்படி இருக்கும் என்று வர்ணித்து எழுதியது இன்னும் ஞாபகம் இருக்கிறது! 'சாய் பாபா'வின் தலைபோல இருக்கும் என்று எழுதியிருந்தேன்!

இங்கே பலதீவுகள் இருந்தாலும், 'ரோத்தமன் தீவு'களில் வசிக்கும் ஃபிஜியன்கள் கொஞ்சம் மாறுபட்டத் தோற்றம் உடையவர்கள். இவர்களில் பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள்! நல்ல பொன்னிற மேனியெழில்! ( வெள்ளைக்காரர்களின் சோகை வெளுப்பு இல்லை)ஆண்களும், மற்ற ஃபிஜி ஆண்களை விடவுமே 'ஹேண்ட்சம்!'

எங்கள் குழந்தைக்கு ஆறு மாதமானபோது, மாடிவீட்டில் இருக்கப் பயந்துகொண்டு ( குழந்தை நடக்க ஆரம்பித்தால், எங்கே மாடிப்படியில் விழுந்துவிடுமோ என்ற பயம்தான்!) வீடு மாறி ஒரு வீட்டின் கீழ்த் தளத்துக்குப் போய்விட்டோம். அந்த வீட்டின் மாடியில் ஒரு ரோத்தமன் தீவைச் செர்ந்த ஃபிஜியன் குடும்பம் இருந்தார்கள். அவர் பெயர் பென்னி ரம்பூக்கா. அரசாங்க உத்தியோகம் வகிப்பவர்! அவர மனைவி மிகவும் அழகாக இருப்பார்கள். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவர்களுட்ன், நான்கு வருடங்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது!

மூத்தமகனின் பெயர் என்ன தெரியுமா? 'ச்சோ' ! அடுத்த பெண் குழந்தை 'வூக்கி' அப்புறம் 'கிரேக்' ( இவனும் என் மகளும் ஒரேவயது) அப்புறம் 'சகியூஸா'. இவர்கள் தாயின் பெயர் 'ஆலா' என் நெருங்கிய தோழி ஆகிவிட்டார்கள்.

கொஞ்சம் படித்த அனைவரும் ஆங்கிலமும் பேசுகிறார்கள். மற்ற படிப்பறிவு இல்லாத ஆட்கள், நம் ஹிந்தி மொழியை நன்றாகவே பேசுகிறார்கள். நம் மாடிவீட்டுக் குழந்தைகள் எல்லாம் எப்போதும் நம் வீட்டில்தான் 'டேரா' அதிலும் மூத்த இரண்டும் பள்ளிக்குப் போய்விட்டால் என் மகள் வயசுள்ள குழந்தை 'கிரேக்' எங்களுடனே இருப்பான். அவனும் 'பப்பு மம்மு, தச்சு மம்மு' எல்லாம் சாப்பிட நன்கு பழகிவிட்டான்.சில தமிழ் வார்த்தைகளும் அவனுக்குப் புரியும்! இங்கே வா, அம்லு ( என் மகள்)வுடன் விளையாடு என்றெல்லாம் ஃபிஜியனில் சொல்ல நானும் கற்றுக் கொண்டேன்.

'க்ரேகா, லாக்கமாய், கீதோவாதோ அம்லு'

அவனுடைய கால்கள் கொஞ்சம் வளைந்திருந்ததால்,' தங்கமலை ரகசியம்'
படத்தில் வரும் சிவாஜி போல நடப்பான். நாங்கள் அவனைத் தங்கமலை என்றும் கூப்பிடுவோம்!

'பஷே கூஷி' இது 'கிரேக்' பேசும் தமிழ். பச்சைக் குச்சி!


நகரங்களில் வசிக்கும் ஃபிஜியர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களே! பெண்கள் பெரும் அளவில் மருத்துவத் துறைகளில் நர்ஸ் வேலைசெய்கிறார்கள்.

ஃபிஜியன்களின் வாழ்வில் 'பாய்'க்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது! என்ன பாயா? நாம தூங்கற பாய்தாங்க! ஒரு விதமான மெல்லிய ஓலைகளால் முடையப்பட்டிருக்கும் இந்தப் பாய்களுக்குச் சுற்றிலும் வர்ண நூல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்! அநேகமாக எல்லாஃபிஜியன்களுக்கும் இதை முடைவது தெரிந்திருக்கிறது! இவர்கள் கல்யாணங்களில், இந்தப் பாய்தான் ரொம்பவே முக்கியமான 'சீர்'. இதுவேதான் கல்யாணத்துக்கு கிடைக்கிற அன்பளிப்பும்!

பாய்ன்னா நம்ம ஊர்ப் பாய் மாதிரி சுருட்டி வச்சிக்கறது இல்லே! கல்யாணச் சத்திரங்களிலே விரிக்கிற 'பவானி ஜமக்காளம்' மாதிரி பெரீஈஈஈய்ய சைஸ்! மடிச்சு வைக்கலாம்.

இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இன்னொரு சுவையான(!) விஷயம்.இவர்கள் குடும்பங்களில் யாருக்காவது பணக்கஷ்டம், உணவுப் பற்றாக்குறை ஏதாவது ஏற்பட்டால், ஒரு பாயை எடுத்துக்கொண்டு, தெரிந்த உறவினர் வீட்டுக்குப் போய்விடுவார்கள். அவ்வளவுதான்! வீட்டுக்காரர்களும் இவர்களை எப்போது திரும்பப் போகப் போகிறார்கள் என்று கேட்கக்கூடாதாம்! அங்கேயே அவர்களில் ஒருவராக இருந்து விடுவார்கள். கூடமாட வீட்டுவேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

நம்ம தமிழ்ப் பத்திரிக்கைகளில் வரும் 'விருந்தாளி ஜோக்' ஞாபகம் வருகிறதா?

இன்னும் வரும்.


2 comments:

said...

ரொம்ப சுவாரசியமா இருக்குதுங்க உங்க ஃபிஜி அனுபவங்கள். ஆனால், அவங்களுடைய பின்ணணியை நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்குது. அதெல்லாம் இருக்கட்டும், 'நீங்க எப்படி அங்க போனீங்க, அங்க பிஜியில் என்ன பண்றீங்கன்னு முன்னமேயே சொல்லீட்டீங்களா?' அல்லது சொல்லுங்களேன் please'.

said...

அன்பு, கிறிஸ்டோபர்

உங்க பின்னூட்டங்களுக்கு நன்றி.

அன்பு ,
நாங்க போனது பற்றி முதலிலேயெ சொல்லியிருக்கிறேன்.

கிறிஸ்டோபர்,

இன்னும் நர மாமிசம் சாப்பிடறவுங்க இருந்தாங்கன்னா, இதை எழுத நான் இருந்திருப்பேனா?

அன்புடன்,
துளசி.