Wednesday, July 23, 2025

அட ! இங்கேயுமா ????? (2025 இந்தியப்பயணம் பகுதி 49 )

காலையில்  மண்பானையில் கூழ் பார்த்தவுடன்  மனசு கூல் ஆனது உண்மை.  கொஞ்சமா ஒரு கரண்டி மட்டும் எடுத்துக்குடிச்சுப் பார்த்தேன். ராகி போரிட்ஜ் :-)  பானைதான் ரொம்பவே க்யூட்டா இருந்துச்சு.  இடியாப்பம், வடை (இதென்ன காம்பிநேஷன்? )கொஞ்சம் பழங்கள் (தக்காளி, வெள்ளரி & கொய்யாப்பழம் ) எனக்கானது.
நம்மவருக்கு என்னவோ தோணுச்சு.... விஜியை ஃபேக்டரிக்குக் கூட்டிப்போய்க் காமிக்கணுமுன்னு.....  கம்ப்யூட்டர் படிப்புதான். ஆனாலும்  இப்படி ட்ராவல்ஸ் வண்டி ஓட்டறது ரொம்பவே ரிலாக்ஸா, சுதந்திரமா இருக்குல்லே !  
சரிதான். ஆனால் எப்பவாவது ஒரு சமயம்.... வேற வேலைக்குப்போகத் தோணுச்சுன்னா..... வேலையிடம் எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சுக்க ஒரு ஐடியா கிடைக்குமேன்னார். அதுவும் சரிதான், இல்லே ? 

விஜியை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு ரெடியா இருக்கச் சொல்லியாச்சு. பத்துமணிக்கு நமக்கு வண்டி வந்ததும்..... நம்மைப் பின் தொடர்ந்து வரணும். ஒருநாள் முழுக்க அங்கே இருக்கணுமா என்ன ?  ஒரு சுத்து பார்த்துட்டுத் திரும்பிவந்து தன்னிஷ்டம் போல் நேரம் போக்கட்டுமே....
போறவழியில் ஒரு அழகான பெரிய புள்ளையார் ! ரெண்டு நாட்களா, நான் இந்த வழியாத்தானே போய் வரேன்.  கண்ணுலே படவே இல்லை !   அடுத்த பக்கம் உக்கார்ந்துருந்தேன் போல.....

பேக்டரிக்குப்போனதும்.....  விஜியைக்கூட்டிப்போய் சுத்திக்காமிக்க வந்தவரிடம்  ஒப்படைச்சுட்டு,  எப்பத் தோணுதோ அப்பத் திரும்பி போகலாமுன்னு விஜிகிட்டே சொல்லிட்டு நாங்கள் தோழி வீட்டுக்குப் போனோம்.

எனக்குக் கால்வலிக்கு ஒரு சிகிச்சை நடக்கப்போகுது, இங்கே ! எப்படி ? ஃபிஸியோ தெரப்பிஸ்ட் வந்துருக்கார். ஹா.....

ஒரு மெஷீன் இருக்கு.  அது மூலமா சிகிச்சை செய்தால்  குணம் கிடைக்குமாம்.  இவர் இங்கே க்ரிக்கெட் ஸ்டேடியத்துக்கான ஃபிஸியோ. விளையாடும்போதும்,  ப்ராக்டீஸ் செய்யும்போதும், கைகால், தொடைன்னு  சுளுக்குப் பிடிச்சுக்குதுல்லே..... அதுக்கு உடனே வைத்தியம் பார்க்கறவர்.  சின்னச் சின்ன விபத்துகள் சகஜமில்லையோ !

எனக்கு சுளுக்கெல்லாம் கிடையாது.  முழங்கால் முட்டி, கால் தசை பிரச்சனை. ப்ளாஸ்மா ஊசி வேற ரெண்டுமுறை போட்டுருக்கு.  இப்ப நியூஸி திரும்பினதும் இன்னொரு ஊசி போட்டுக்கணும்.  இதெல்லாம் சரிப்படாதுன்னால் கேட்டால்தானே?  நாம்தான் 'எத்தைத்தின்னால் பித்தம் போகும்'னு இருக்கோமே.....   'வலிக்காது..... எனக்குக்கூடக் காலில் கொஞ்சம் பிரச்சனை வந்தப்ப, இது வச்சுச்சரியாகிருச்சு'ன்னு தோழி வேற சொல்றாங்க. ஒரு இருவது நிமிட்தான்.  நாளுக்கு ரெண்டுமுறை....எறும்பு  ஊறுவதுபோல இருக்கும்...... ப்ளா ப்ளா.....

சரின்னதும்  முழங்காலில் கனெக்ட் பண்ணினார் ஃபிஸியோ.   இது    Muscle Stimulation தான்.  வலி குறைஞ்சால்,  ஒரு மெஷீன் வாங்கிட்டுப்போகலாம்னு முடிவு. ஏற்கெனவே  நம்மாண்டை (நியூஸியில்)  ஒரு சின்ன க்ளினிக் வைக்கும் அளவுக்கு ஆஸ்பத்ரி சமாச்சாரம்  இருக்குன்றதால்  இதுக்கும் ஒரு  இடம் கொடுத்தால் ஆச்சு ! ஹாஹா....

சிகிச்சை முடிஞ்சதும், நண்பரும், நம்மவரும் ஃபேக்டரிக்குள்ளே போயிட்டாங்க.  நாங்களும்  கிளம்பினோம்.  கார்பார்க்கில் பார்த்தால் நம்ம வண்டி இருக்கு. விஜி இன்னும் திரும்பிப்போகலை போல !

ஒரு அரை மணி நேரத்தில்  திருவக்கரை என்னும் இடத்துக்குப்போய்ச் சேர்ந்து கோவில்வாசலில் இறங்கினோம். சிவன் கோவில்தான். அருள்மிகு வடிவாம்பிகை உடனுறை சந்திரமௌளீஸ்வரர் ! ஆனால் இங்கே குடிகொண்டுள்ள  வக்ரகாளியம்மனுக்குத்தான் பெயரும் புகழுமாம்.  நான் இதுவரை போகாத கோவில் என்பதால் கொஞ்சம் ஆர்வத்தோடுதான் இருந்தேன்.  இந்தக்கோவில்கள் எல்லாம் புதுச்சேரி மாநிலத்துக்குப் பக்கமா இருக்கே தவிர  தமிழ்நாடு மாநிலத்துக்குள்ளேதான் இருக்கு !  

                                 
முகப்புலேயே பெரிய விஸ்தாரமான மண்டபம்.  வாசலில் பூ, பழம், தேங்காய், நெய்(!) விளக்குகள்னு விற்பனை. இந்த விளக்குகளில் கூட எண்ணிக்கைக்கு ஏத்தபடிதான் பலன் ! லிஸ்ட் போட்டு வச்சுருக்காங்க.  தோழி விளக்கு, பூ சமாச்சாரங்கள் வாங்கினாங்க. மண்டபம் கடந்து கோவில் முற்றத்தில் இறங்கினதும்,  ராஜகோபுர வாசலுக்கு வலதுபக்கம் வக்ரகாளியம்மன் சந்நிதி. தனியா துவாரபாலிகைகள் இருக்கும் வாசல். பக்கவாட்டில்  இருக்கும் கம்பித்தடுப்பு கடந்து.....  உள்ளே கூட்டிப்போனாங்க தோழி. அவுங்க அடிக்கடி வரும் கோவிலாம் ! 
                                 
பெரிய அளவில் புடைப்புச் சிற்பம் போல  இருக்கிறாள் காளி !   வக்ராசுரனை வதம்  செய்ய, விஷ்ணு  வந்தப்ப..... கூடவே வந்து வக்ராசுரனுடைய தங்கையை வதம் செய்தாளாம் !  கொல்லுமுன் தெரிஞ்சுருக்கு, அரக்கி ஒரு கர்ப்பிணின்னு !  குழந்தையைக் கொல்வது தர்மம் இல்லைன்னு  கருவில் இருக்கும் குழந்தையைக் காதுலே குண்டலமா மாட்டிக்கிட்டு,  அரக்கியை வதம் செஞ்சுருக்காள். அதனால்தான் வக்ராகாளின்னு பெயர் வந்துருக்கு !  
 தோழிக்கும் எனக்குமா ஆளுக்கொரு எலுமிச்சம்பழம் ப்ரஸாதமாக் கொடுத்தார் அர்ச்சகர்.  அடுத்துக் கோவிலின்  மற்றபகுதிகளைத் தேடிப் போனப்ப..... முதலில் கண்ணில்பட்டவர் நந்திதேவர்.  அதென்ன 'கதை'ன்னு தெரியலை..... இந்தப்பக்கங்களில்  பாதி புதையுண்ட நந்திதேவர் சந்நிதிகள் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு ! 
அந்தாண்டை....ஒரு ஓப்பன் ஷெட் மாதிரி கொட்டகை போட்டுருக்கும் இடத்தில் நாகர் சந்நிதி !  ஏராளமான நாகர்கள். நடுநாயகமா  அம்மன் சிலை.  எல்லோரும் மஞ்சளும் குங்குமமா இருக்காங்க.  பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அதிகம்.  வாசலில் விற்பனைக்கு இருக்கும் விளக்குகள் எல்லாம்  இங்கேதான்  ஏத்தறாங்க போல ! 
தோழியின் கையில் இருந்த விளக்குகளை வாங்கிப்போய் ஏத்தறதுக்கு உதவி செஞ்சாங்க ஒரு பெண்மணி.  கொஞ்சம் குங்குமம் கொண்டுவந்து தோழியின் நெற்றியில்  வச்சதும், பத்து நொடிகள் தோழியின் முகத்தைக் கூர்ந்து கவனிச்சுட்டு, ஒரு பாட்டுபோல சொல்லி (உடுக்கை அடிச்சுக்கிட்டுப் பாடுவாங்களே அதைப்போல ), 'அம்மன்  அருள் உனக்கு இருக்கும்மா. ஏதோ மனக்குறையில் இருக்கே.... உன் குறையெல்லாம் சீக்கிரமே  தீரப்போகுது..... ' ன்னதும்  தோழியின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. 

இது கொஞ்சம் உளவியல் சம்பந்தமானது. பொதுவாவே....  மனிதர்களுக்கு ஏதாவது மனக்குறை இருக்கத்தான் செய்யும். அதிலும்  பெண்கள் மனக்குறையைக் கேக்கவே வேணாம். வெளியே சொல்லமுடியாதவை பலதும்..... போதாக்குறைக்கு இரக்ககுணம் ஆண்களைவிடக் கொஞ்சம் அதிகம்தான்.  இளகிய மனசு..... அதுலே கோவில் சந்நிதிகளில் வச்சு, உனக்கு மனக்குறை இருக்குன்னா.....  ப்ச்..... அப்புறமும் என்னென்னவோ தோழிக்குச் சொன்னாங்க.  ஏதோ பரிகாரம்னு ..... சொல்லி முடிச்சுட்டு.....  பகல் உணவுக்கு தர்மம் செய்யச் சொன்னதும் தோழி கொடுத்தாங்க. 

அடுத்து என்னப் பார்த்ததும்.... நான் அவுங்களைப்பற்றிக் கேட்டேன். பெயர் பரிமளம். இந்தக் கோவிலில்தான் அம்மன் சேவையை பலவருஷங்களாச் செய்யறாங்களாம்.  இங்கே இருக்கும் நாகர்கள் எல்லாம் வேண்டுதல் நிறைவேறின பக்தர்கள் கொண்டு வந்து வச்சதுதானாம்.  ரொம்ப சக்தியான அம்மன். வேண்டியவரம் வேண்டியபடி கிடைச்சுரும்.


 அவுங்ககிட்டே அனுமதி வாங்கிக்கிட்டுக் கொஞ்சம் படங்களை எடுத்துக்கிட்டேன்.  குழந்தை தவழ்ந்து போவதுபோல ஒரு சிலை, கவனத்தை ஈர்த்தது.  குழந்தைவரம் வேண்டிய யாரோ  கொண்டு வந்தாங்களாம். 
இந்தியாவைப்பொறுத்தவரை.... மக்கள்  தொகை எப்படிக் கட்டுக்கு அடங்காமல் பெருகி வருதோ..... அதுக்குக் கொஞ்சம் கூடக்குறைவில்லாமல்....  பிள்ளைவரம் வேண்டி ஏங்கி நிற்கும் மக்களும் உண்டு.  கோவில்களில் வேண்டிக்கிட்டுத் தொங்கவிடும் சின்னத் தொட்டில்களைப்  பார்த்துருப்பீங்கதானே ? 

அப்புறம் கொஞ்சநேரம் பரிமளத்துடன் பேசிக்கிட்டு இருந்தேன்.  பேச்சுவாக்கில் உங்க மனசிலும் ஏதாவது குறை இருக்கத்தானே செய்யும்னு சொன்னதும்.... அழுதுட்டாங்க.  

"வெளியில் சொல்ல முடிஞ்சதை மட்டும் , வெளியில் நம்பகமானவங்களிடம்  சொன்னால் கொஞ்சம் பாரம் குறையும். அதுக்காக எல்லோரிடமும் நம்பிக்கை வைக்க முடியாது..... என்னை பொறுத்தவரை.... எங்க பெருமாள்தான் என் புலம்பலைக் கேக்கறவர்.  சந்தோஷமோ கஷ்டமோ, ரகசியமோ  அவராண்டை போய்ச் சொல்லிருவேன்.  பதில் பேசாமக் கேட்டுக்குவார்.  அக்கம்பக்கத்துலே போய் பத்தவைக்கவும் மாட்டார். தினமும் அவருக்கு மண்டகப்படிதான். நீங்களும் உங்க அம்மனிடம் எதுவேணுமுன்னாலும் சொல்லிருங்க. மனசின் பாரம் குறையும்"

பையனுக்கு வயசாகிக்கிட்டே போகுது. இன்னும்  கல்யாணம் கைகூடலைன்னு  சொன்னாங்க.  "அடராமா.... இதுக்கு நீங்க ஏன் கவலைப்படறீங்க ?  வேளை வரலை, அம்புட்டுதான்.  எல்லாத்துக்கும் 'அவன்' கணக்கு ஒண்ணு இருக்குல்லே ?  குருபலன் வந்துருச்சுன்னா...... சட்னு கல்யாணம் நடந்துரும்.  என் பொண்ணுக்கும்  லேட்டாத்தான் கல்யாணம் ஆச்சு.  பையனுக்குக் கல்யாணம் பண்ணிவச்ச அம்மாக்களைப் பாருங்க....  மருமகள் மேல் ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. குறைஞ்சபட்சம்.....  முந்தியெல்லாம் அம்மா அம்மான்னு ரொம்பப் பாசமா இருப்பான்.... இப்பெல்லாம் ....ப்ச்...  அடியோடு மாறிட்டான்....."

பரிமளத்தின் முகத்தில் புன்னகை வந்துருச்சு.  உங்க ஃபோன் நம்பர் கொடுங்கம்மா....   உங்ககிட்டே பேசுனா நல்லா இருக்குன்னாங்க.  என் நம்பர் வெளிநாட்டுதுங்க.  ஃபோன் செஞ்சீங்கன்னா..... ரொம்ப செலவாகிரும்.  நமக்குத்தான் சாமி இருக்குல்லே, அதாண்டை சொன்னாப் போதாதான்னேன்.

 எந்த ஊர்மா ? மலேசியாவா ? இல்லைங்க.... நியூஸிலாந்து. கொஞ்சம் தூரம் அதிகம்தான்.  நினைச்சா, சட்னு வரமுடியாது..........  

   'நீங்க கடவுள் மேல் பாரத்தைப் போட்டுட்டு, சந்தோஷமா இருங்க.  நம்ம வாழ்க்கையை அவர் பார்த்துக்குவார்.  அதைவிட அவருக்கு வேறென்ன வேலை ?  இன்னும் ரெண்டுமூணு பேருக்கு லஞ்சு வாங்கிக்கொடுங்க'ன்னு கொஞ்சம் காசு கொடுத்துட்டுக் கோவிலைச் சுத்திவரத் தொடங்கினோம். 
அப்பதான்.... இன்னொரு சமாச்சாரம் தெரிஞ்சது... அட.... இங்கேயுமா ?

பதிவின் நீளம் கருதி...... இங்கே நிறுத்தறேன்.  அடுத்தபகுதியில் மீதி....
தொடரும்......... :-)

Monday, July 21, 2025

ஆஹா...... ஆஹா..... பதினாறு கைகளாமே !!!!! (2025 இந்தியப்பயணம் பகுதி 48 )

ஒரு மூணரை மணியாகும்போது, எங்கே போகலாமுன்னு ஒரு இடத்தைத் தீர்மானிச்சு, உள்ளூர் ட்ரைவர் இருந்தால் நல்லதுன்னு..... தோழி அவுங்க காரை வரச் சொன்னாங்க. நானும் விஜிக்கு ஃபோன் செஞ்சு,  அவருக்கு விருப்பமானமுறையில் நேரம் செலவழிக்கச் சொல்லிட்டேன்.
அக்கார்டில் இருந்து சுமார் பனிரெண்டு கிமீ தூரத்தில் இருக்கும் சிங்கிரிகுடி பெருமாள் கோவில் வாசலில் போய் இறங்கினப்ப மணி ஏறக்கொறைய நாலே கால்.  கோவில் திறக்கும் நேரம் நாலரையாம்.  ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ம சுவாமி திருக்கோவில், சிங்கிரிக்கோவில் னு போர்டு இருக்கும்   ராஜகோபுரவாசல் கடந்து உள்ளே போனால் பெரிய வெளிப்ரகாரத்தின்  ரெண்டுபக்கங்களிலும் சந்நிதிகள்.  அப்ப அந்த குடி ... Gudi யோ ?  வாசலில் இருந்த கடையில் நெய் (!) விளக்குகளும், பூவும் வாங்கினாங்க தோழி.  (நான் பொதுவா ஒன்னும் வாங்கிப்போறதில்லை.  எப்பவாவது தோணியால் துளசி. இல்லைன்னால் பெருமாளுக்கு இந்த  மனுஷத் துளசிமட்டும்தான்.)
ராஜகோபுரத்துக்கு  நேராக் கொஞ்ச தூரத்தில் பெரிய திருவடியின் சந்நிதி , கொடிமரம் பலிபீடம் எல்லாம் கண்ணில்பட்டது. இதோ இங்கிருக்கும் சந்நிதிகளைத் தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு இடப்பக்கம் இருக்கும் சந்நிதிக்குப்போனோம்.  ரொம்ப அழகாச் சின்ன முன்மண்டபத்தோடு இருக்கு. துர்கை !  விஷ்ணுதுர்கை !  சந்நிதிக்கதவு மூடி இருந்தாலும் கம்பித்தடுப்பு வழியா தரிசனம் ஆச்சு.  கதவுக்குமுன் நிறைய நெய்விளக்குகள்  ! தோழியும் ஜோதியில் கலந்தாங்க.  வலப்பக்கம் இருக்கும் சந்நிதிக்குப்போனால்......      புடவை கட்டிய நாகம்மாள்.  
முன்மண்டபம் எல்லாம் எடுத்துக்கட்டாத சிம்பிள் சந்நிதி. கதவு கூட இல்லை ! (நம்மவர் வீட்டுக்குலதெய்வம் நாகம்மாள் என்பதால்.... கோபால் சார்பில் இன்னும் நாலு கும்பிடு ஆச்சு)
பெரிய திருவடியை வணங்கி உள்ளே போறோம். ஜயவிஜயர்கள் உள்ள  ஒரு அலங்கார வாசல் கடந்தால் பலிபீடமும் கொடிமரமும்.   கம்பித்தடுப்புகள் போட்ட முன்மண்டபத்துக்குள் பெரிய திருவடிக்கு முன் நேரெதிராக் கருவறை ! உக்ரநரஸிம்மர் சந்நிதி !

நாலரை மணிக்குக் கோவில் திறந்து, பக்தர்கள் தரிசனம் வேண்டி கருவறைக்கு வெளியே காத்துருக்காங்க.  உள்ளே சந்நிதியில் திரை போட்டுட்டு, நித்ய பூஜை சம்ப்ரதாயங்கள் நடக்குது. சாயரக்ஷை.....     மண்டபத்தில்  நாதஸ்வரமும் தவிலுமா.....  
ஃபேஸ்புக்கில்  ரெண்டு பகுதியா ஒரு வீடியோ க்ளிப் போட்டு வச்சேன். ரொம்பப் ப்ரமாத வாசிப்பு இல்லையென்றாலும் கூட..... அந்த சூழலில், கோவில் மண்டபத்தில் இசையைக் கேக்கும்போது.... மனம் நிறைவது உண்மைதான் !

https://www.facebook.com/share/v/1AyJDMRGu9/

https://www.facebook.com/share/v/1CW3X5NyRB/

அஷ்ட நரசிம்மர் கோவில்கள்னு ஒரு எட்டுக்கோவில்களைச் சொல்றாங்க.   சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கப்பெருமாள் கோவில்,  சோளிங்கர், நாமக்கல், அந்திலி,  & சித்தனைவாடி.  

இதுலே சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் இந்த மூணு கோவில்களும் ஒரே நேர்கோட்டில் இருக்குன்னும் 'ஒரே நாளில்' இந்த மூன்று கோவில்களுக்கும் போய் தரிசனம்  செஞ்சால் ரொம்பவே  விசேஷம்னு.....   (யார் இப்படிக் கிளப்பிவிட்டாங்கன்னு தெரியலை...  எப்படிப் பார்த்தாலும்.... சுமார் எழுபத்தியஞ்சு கிமீ பயணம் போகணும். இப்ப மாதிரி அந்தக் காலங்களில் வாகனவசதிகள் (மாட்டு வண்டி தவிர) இருந்ததா என்ன ? ஓடியோடிப் போக முடியுமோ ?  மூணு கோவில், அஞ்சு கோவில், சிவாலய ஓட்டம்னு  ஏராளமான வகைகள் இருக்கேப்பா ! )

போகட்டும், இந்த எட்டு நரசிம்ஹர் கோவில்களில்  அஞ்சு கோவில்களுக்கு நாம் ஏற்கெனவே போயிருக்கோம். ஆறாவதா இப்போ சிங்கிரிகுடியில் நிக்கறோம். இன்னும் ரெண்டு கோவில்கள்தான் பாக்கி , இல்லே ? கூப்பிடுவான், கூப்பிடுவான்....பொறுமை காக்கலாம்.     

கீழே படம் :  வலையில் அகப்பட்டது. கர்நாடகா கோவில் சிற்பமுன்னு நினைக்கிறேன்.                                                 
திரை விலகியது !   உக்ரநரசிம்ஹர், பதினாறு கைகளுடன் இருக்கிறார். மடியில்  ஹிரண்யகசிபு ! ரெண்டு தொடைகளின் மேலும்....(எவ்ளோ கொடுப்பினை பாருங்க ! ) ப்ரஹலாதனும், லக்ஷ்மியுமே  ஏதாவது ஒரு தொடையில்தான்  உக்கார்ந்துருப்பாங்க. ஆனால் இவன்.....  ஹைய்யோ !!!!
பதினாறு கைகளும் எப்படி ஆக்குபைடுன்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு இந்தக் கோவிலில் !
 
இன்னுமொரு முக்கியமான தகவல்..... இந்தியாவிலேயே ரெண்டே ரெண்டு கோவில்களில்தான் இப்படிப் பதினாறு கைகளுடன் நரசிம்ஹர் இருக்கார். தென் இந்தியாவில் இவர். வட இந்தியாவுக்கு  ராஜஸ்தான் மாநிலத்தில் (Narsinghji Temple at Hindaun in Rajasthan) ஒரு குகைக்கோவிலில் இருப்பதாகக் கேள்வி !

மற்றபடி  உலோகச் சிலைகளில்  பதினாறு கைகளுடன் நரசிம்மர் (நிற்கும் போஸ் ) கிடைக்கிறார்தான்.  பார்க்கலாம்.... நமக்கு அதிர்ஷ்டம் இருக்கான்னு.....

இங்கே கருவறையில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா........    ஹிரண்யகசிபுவின் மனைவி நீலாவதியும், மகன் ப்ரஹலாதனும் ! (என்னதான் கொடுமைக்காரப் புருஷன் என்றாலுமே,  அவனைக் கொல்லும்போது நேரில் நின்னு பார்த்தால்..... பாவம்.... அந்தப் பெண்மனசு எப்படித் துடிச்சுருக்கும்! இல்லே.... ப்ச் ........)

இந்தப்பக்கம்  வசிஷ்டரும், சுக்ரனும், இன்னும் நாலு அசுரர்களும் !  (இந்த ஸீனுக்குக் காரணமே மகரிஷி வசிஷ்டர் தான் ) 

ஹிரண்யவதம் முடிஞ்சதுன்னு கேள்விப்பட்டபின்,   தேவர்களுக்கும் ரிஷிமுனிவர்களுக்கும் நிம்மதியாச்சு இல்லையா!  அப்போ தன் பாவங்களை (!) போக்க இங்கே  இந்த ஏரியாவில் தவம் செஞ்சுக்கிட்டு இருந்த மகரிஷி வசிஷ்டர் , நரசிம்மரை மனசில் நிறுத்தி,  (சிங்கமும் மனுஷனுமாமே...!!! எப்படி இருந்துருக்கும் ? ) அந்தக் கோலம் காண்பிக்க வேணுமுன்னு பணிவாகக் கேட்டதும்,  இதோன்னு காமிச்சுருக்கார் !  

விஷ்ணுவின்  தச அவதாரங்களில் .... முன்கூட்டிய திட்டம்னு பொறந்து வளர்ந்துன்னு எல்லாம் இல்லாமல்  நினைச்ச நொடியில்  எடுத்த அவதாரம் இந்த நரசிம்ஹ அவதாரம் மட்டுமே!  குழந்தை ப்ரஹலாதன்.... எந்தத் தூணைக் காட்டுவானோன்னு தெரியாததால்..... அங்கிருந்த எல்லாத் தூண்களிலுமே இருந்தானாம் !!!!  அட... ராமா...... (நாளை என்பது நரசிம்ஹருக்கு இல்லை ! ) 

அருமையான தரிசனம் நமக்கும் கிடைச்சது. கருவறையில் சின்ன மூர்த்திகளா யோக நரசிம்ஹர் ஒருவரும்  பாலநரசிம்ஹர் ஒருவரும் கூட இருக்காங்க. பூக்கள் அலங்காரத்துக்குள் இருந்ததால் சரியாப் பார்க்கமுடியலை.  குழந்தை சிங்கம் எப்படி இருந்துருக்கும் !!!!  மொத்தம் மூணு நரசிம்ஹர்கள் கருவறையில் !  பட்டர்ஸ்வாமிகள் ரொம்ப  நல்லமாதிரி, விளக்கமாச் சொல்லி தரிசனம் செஞ்சு வைச்சார்.   ஓரமாய் நிற்கும் உற்சவர்,  ப்ரஹலாதவரதர் !


திரு அவதாரம் எடுத்தநாள் (நரசிம்ஹ ஜயந்தி ) சித்திரை மாசம் , ஸ்வாதி நக்ஷத்திரம் என்பதால் எல்லா மாசமும் வரும் ஸ்வாதி நக்ஷத்திரநாட்களில் விசேஷ பூஜை உண்டு! ஸ்வாதித்திருநாள் ! போர்டில் பார்த்தேன் ! 
  
தாயார் கனகவல்லிக்கும் நம்ம ஆண்டாளம்மாவுக்கும் தனிச்சந்நிதிகள் !
பழைய கோவில்தான். ராஜராஜசோழன் திருப்பணி செஞ்சுருக்கார்னா பார்த்துக்குங்க.  அவருக்குப்பின் க்ருஷ்ணதேவராயரும் திருப்பணி செஞ்சுருக்கார்.   ப்ரெஞ்சு அதிகாரிகளும், ஆற்காட்டு நவாபும் கூட  நகையும் நட்டுமா நம்ம நரசிம்ஹருக்குக் கொடுத்துருக்காங்கன்னு கோவில் வரலாறு சொல்லுது !

அப்புறம்...... ஆங்.....சொல்ல மறந்துட்டேனே..... செவ்வாய்க்கிழமைகளில் இவரை தரிசிப்பது சிறப்பாம். அப்படியான்னு செல்லில் இருக்கும் காலண்டரைப் பார்த்தால்.... அன்றைக்குச் செவ்வாயேதான் !  எம்பெருமாளே.... பெருமாளே.....  (பயணங்களில் பொதுவா நாளும் நக்ஷத்திரமும், திதியும் எல்லாம் நினைவில் வர்றதே இல்லை....  தேதியே குழப்பம்தான்..... )

கோவில்குளம் சின்னதா இருந்தாலும் சுத்தமா இருக்கு !  வாத்ஸ் ஓய்வெடுக்கும் படிகள்! 
நிறைவான தரிசனம். இந்தக்கோவில் இருக்கும் விவரமே நீங்க சொன்னபிறகுதான் தெரியும். மனம் நிறைந்த நன்றின்னு தோழிக்குச் சொன்னேன். மணி வேற அஞ்சேமுக்கால்..... நேரா  தோழி வீட்டுக்குப்போய் ஃபேக்டரி வேலை முடிச்சுட்டு வரும்  கோபாலைக் கூட்டிக்கிட்டு அக்கார்ட் திரும்பணும்னு மனசில் எண்ணம் ஓடிக்கிட்டு இருக்கு !
ஆனால் அடுத்ததாக வண்டி போய் நின்ன இடம் க்ரிக்கெட் ஸ்டேடியம்  !  தோழிதான் ஓனர். அசந்து போய் நின்னது நிஜம்.  சொந்தமா ஒரு க்ரிக்கெட் டீம் கூட இருக்கு !  எனக்குக் கால்வலி என்பதால் இறங்கி நடக்காமல் காரிலேயே ஒரு சுத்து கூட்டிப் போய் பார்க்க வச்சாங்க.  ப்ரமாண்டம் !  

சுத்து முடிஞ்சு வந்தால் மாலைநேரத்துக்கான டீயும், சுடச் சுட வெங்காயப்பக்கோடாவும் வண்டிக்கு வருது !  இங்கே  சமையலுக்கான எல்லா ஏற்பாடுகளும் இருக்குன்னும், க்ரௌண்ட் பராமரிப்பு, அது இது ன்னு ஒரு நூறுபேர் வேலை செய்வதால்  எல்லோருக்கும் சாப்பாடு இங்கேதான் தயாரிக்கறாங்கன்னும் சொன்னாங்க. இங்கே மட்டுமில்லாமல் ஃபேக்டரி மக்களுக்கும் உணவுத் தயாரிப்பு இங்கேதானாம் ! 

அப்பதான் நம்மவர் செல்லில் கூப்பிட்டு என்ன செய்யறீங்கன்னார்.  பக்கோடா தின்னுக்கிட்டு இருக்கேன்னேன் :-)

அப்புறமா வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம். ராத்ரி சமையல்,  எனக்காகக் காரமே இல்லாமல்  நெய்ச்சோறு. ஸ்டேடியம் அடுக்களையில் இருந்து வந்த கறிவகைகள் ஏகப்பட்டவை இருந்தன. 

ஒன்பதுமணி வரை பேசிக்கிட்டு இருந்தோம்.  மறுநாளைக்கான எங்கள் திட்டம் ஓரளவு தீர்மானிச்சாச்சு.  அப்புறம்  நண்பரும் தோழியுமா நம்மோடு கிளம்பி, ஹொட்டேலில் விட்டுட்டுப் போனாங்க. 

தொடரும்........ :-)




Friday, July 18, 2025

கேட்டது கேட்டபடி வரம் தரும் வரதரும், புள்ளையாரும்...... (2025 இந்தியப்பயணம் பகுதி 47)

பரபரன்னு கூட்டமா இருக்கும் ரொம்பவே பிஸியான சாலையில்  கட்டடங்களோடு கட்டடமாத் தோளை ஈஷிக்கிட்டு நிக்கறதுபோல்தான் ராஜகோபுரமும் கோவிலுமா  ம்காத்மா காந்தி ரோடில் நிக்குது ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்.  பக்கவாட்டுத் தெருமுனையில் வண்டியை நிறுத்திட்டு  வந்தார் விஜி. 
ஒரு எட்டு வருஷங்களுக்கு முன்னே முதல்முதலா இங்கே வந்து,  கோவில் ஆபீஸில் அனுமதி வாங்கிப் படங்களா எடுத்துத் தள்ளினேன்தான்.  அதுக்கப்புறம் எப்போ புதுச்சேரி வந்தாலும் இந்தக் கோவில் விஸிட் கட்டாயம்னு ஆகியிருந்தாலும்கூட  ஒன்னுரெண்டு படங்களோடு நிறுத்திக்குவேன். புதுசா எடுக்கவேண்டிய அவசியமே இல்லை..... எல்லாமே புதுக்கருக்கழியாமல் அன்றுபோலவே இன்றும் !!!!  ஊஞ்சல் மண்டபம் அழகோ அழகு !!!!

http://thulasidhalam.blogspot.com/2017/12/85.html

ரொம்பப்பெரிய கோவில் இல்லை. மீடியம் சைஸ்தான். நகருக்கு நடுவில் இவ்வளவு இடம் கிடைச்சதுகூட...... வியப்பே ! இங்கே மூலவர் சந்நிதியை வணங்கிட்டுக் கருவறையைச் சுற்றி வந்தால் போதும்......... நீங்கள் நூற்றியெட்டு திவ்யதேசப் பெருமாட்களையும் தரிசனம் செஞ்சாச்சு !  கண் நிறைஞ்சு வழிய அப்படியொரு அழகான ஓவியங்கள் !  ரொம்பவே பிடிச்ச இடமுன்னு தனியாச் சொல்லவேணாம்தானே ?

நம்ம வரதராஜர்....  மரச்சிலை !!!!
மூலவர் படம் : கூகுளார் உதவி.

தரிசனம் முடிச்சு, தீர்த்தம் சடாரி ஸேவிச்சபின்  சுற்றி வரும்போது, கைப்பையில் இருந்த  செல் கொஞ்சம் நடுங்கியது.  பொதுவா என் செல்ஃபோன் எப்போதும் ம்யூட் மோடில்தான். !!  ஃபோனில் பேச விருப்பம் இல்லை.  நம்மவர்தான், நான்  தனியாக இப்படி ஊர்சுற்றும்போது,  ம்யூட்டை எடுத்துருன்னுவார். பெல் அடிச்சால் எனக்கு ஆகாதுன்னுருவேன். அப்புறம் தான் சமரசவழி ஒன்னு  இருக்கட்டுமேன்னு.... தனியாச் சுத்தும்போது மட்டும்   வைப்ரேஷன் மோட்  வச்சுக்கறது.  யார் ஃபோன் செய்யறதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத் தேவைன்னா பேசலாம்தானே!

இப்ப செல்நடுங்கியதும் எடுத்துப்பார்த்தால்.... ஏதோ புது எண்... இருக்கட்டுமுன்னு விட்டுட்டு நூற்றியெட்டைத் தொடர்ந்தேன்.  அடுத்து வெளிப்ரகாரச் சுற்றில்  வலம்....  தாயார்சந்நிதியில் வணங்கி, திருக்குளத்தாண்டை போய் கம்பிவழியாப் பார்த்துட்டு, அப்படியே அடுத்த மூலையில் நம்ம ஆண்டாளம்மாவை வணங்கி,  கண்மூடி,  மனசுக்குள் தூமணிமாடத்து முடிச்சுட்டுக் கண்களைத் திறந்தால்  என் எதிரில்...... தோழி !  இந்தப் பக்கம் நம்ம விஜி !

அட ! எப்படி ? 

காலையில் நம்மவர் ஃபேக்டரிக்குப் போனாரில்லையா.... அவராண்டை என் ப்ரோக்ராம் என்னன்னு கேட்டுருக்காங்க.  கோவில்களுக்குப் போறதா ஐடியான்னதும், சட்னு அவுங்க வீட்டுக்கடமைகளை (!!! )முடிச்சுட்டு,  நம்மவரிடன் என் செல் நம்பரைக் கேட்டு, ஃபோன் செஞ்சுருக்காங்க.  ஆஹா.... அந்த நடுக்கம்..... இவுங்கதான் ! 

நான்  எடுக்கலைன்னதும்,  விஜியின்  செல்நம்பரைக் கேட்டு  அவருக்குப் போன் செஞ்சதும்,   அவர் நாமிருக்கும் கோவிலைச் சொல்லி இருக்கார்.  உடனே கிளம்பிவந்து  என்னைப் பிடிச்சுட்டாங்க!   இருக்கும் நாலைஞ்சு சந்நிதிகளுக்கிடையில்  கஷ்டமா என்ன ?  ஆஹா....
மூலவரை ஸேவிச்சுட்டு வாங்கன்னேன்.  வரும்போதே தரிசனம் ஆச்சுன்னாங்க.   அவுங்க டிரைவரைத் திருப்பிப்போகச் சொல்லிட்டு , நாங்க  அடுத்த (வழக்கமான) கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  லக்ஷ்மி இருக்குமிடம் வெறிச்.  ப்ச்.... பாவம் குழந்தை ! காலை காமிக்குடான்னால் கொலுசு போட்ட பாதங்களைத் திருப்பிக் காண்பிப்பாள், என் செல்லம்.
அவள் மறைவுக்குப்பின் இப்பதான் முதல்முறையாக வர்றேன்.
இந்தக் கோவிலுக்குள் எல்லோருமே வரலாம் என்றபடியால்  நிறைய வெளிநாட்டினர்  வந்து போவாங்க. பக்கத்துலே அர்விந்தர் ஆஷ்ரம் இருக்கு என்பதால்  கூட்டத்திற்குக் குறைவில்லை. 
நாங்களும் உள்ளே போய் புள்ளையாரை தரிசித்தோம்.  இந்த  மூலவர் மணக்குள விநாயகர்  அமர்ந்திருக்கும் பீடம், ஒரு நீர்நிலையின் மேலே என்பது ஒரு விசேஷம் ! கோவில் கட்டுமுன் அங்கே ஒரு குளமோ இல்லை கிணறோ இருந்துருக்கு.  அதுக்கு மேலேதான்  பீடம், கருவறை எல்லாம் கட்டிக் கோவில் வந்துருக்குன்னு .....  புள்ளையார் பீடத்துக்குப் பக்கம் ஒரு அரையடி விட்டத்தில் குழி ஒன்னு இருக்குன்னும், அதில் எப்போதும் வற்றாத தீர்த்தம் இருக்குன்னும் , குழியில் ஆழத்தைக் கண்டுபிடிக்கவே முடியலைன்னும் சொல்றாங்க.  கோவில் குருக்களாண்டைதான் கேட்கணும்.....  உண்மையாகத்தான் இருக்கவேணும்.  நம்பினால்தான் தெய்வமே !

இன்னொரு  வகையில்,  கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையில் தூரம் அதிகமில்லை. ஒரு குளம் வேற இருந்துருக்கு. கடற்கரை ரொம்பப்பக்கம் (வெறும் முன்னூறு மீட்டர்) என்பதால் குளத்திலே  மணல் அதிகம்.  மணல் குளம். இதன் கரையில்தான் கோவில் என்பதால்  மணல்குளம்/ மணற்குளம் விநாயகர்னு சொல்லப்போய், இப்போ மணக்குள விநாயகராகிட்டார்.  ஆஹா..... அதுதான் 'மணக்குளம்' பெயர்க்காரணம் போல ! 

இங்கேயும் அந்நியர் ஆட்சி காலத்தில்  அவர்களால்  கோவிலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்துருக்கு என்பது வரலாறு. 

கோவிலின் உட்புறச் சுவர்களில்  உலகநாடுகள் பலவற்றிலும்  இருக்கும் புள்ளையார் உருவங்கள் புடைப்புச்சிற்பமாக அமைச்சுருக்காங்க. பார்க்கவே அருமை !

மூலவர் மண்டபத்தையொட்டியே இன்னொரு மண்டபமும் இருக்கு. வலம் வரும்போது நாம் இந்த ரெண்டு மண்டபங்களையும் சேர்த்தேதான் சுற்றி வருவோம்.   எதோ கல்யாண வீடுபோல அங்கே  மக்கள்  குடும்பம் குடும்பமாக் குவியல் குவியலா உக்கார்ந்துருக்காங்க. 

அந்தாண்டைச் சுவரையொட்டியே இன்னும் சில சந்நிதிகள். பள்ளியறை கூட இருக்கு !  நம்ம பக்கங்களில் புள்ளையார், ப்ரம்மச்சாரின்னு பொதுவா சொல்றாங்க இல்லையா....    ( திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் மட்டும் இரு தேவியருடன் இருக்கார், பார்த்துக்குங்க ) 


இங்கே  புள்ளையாருக்குத் திருக்கல்யாண உற்சவம் கூட நடத்தறாங்க. சித்தி & புத்தின்னு தேவியர் இருவர் !  கேட்டவரம் கிடைப்பதால்......  உள்ளுர் மக்களுக்கும் இவர் இஷ்டதெய்வமா இருந்து அருள் பாலிக்கிறார். 
வெளியில் கோவில் கடைகளில் அழகழகான அலங்காரப்பொருட்கள்.  தேங்காய்நார் சமாச்சாரம் என்பதால்.... க்ளிக்கோடு  திருப்திப்பட வேண்டியதாப் போச்சு.

மதியம் சாப்பாட்டு நேரம் வந்துருச்சுன்னு, அதே பகுதியில் கூப்பிடு தூரத்தில் இருக்கும் அடையார் ஆனந்தபவன் போனோம்.  அவரவருக்கு வேண்டியதை வாங்கியாச்சு. செல்ஃப் சர்வீஸ்தான். எனக்கு மினி இட்லி.  சாம்பார் தனியா வேணுமுன்னு சொல்லி வாங்கிக்கிட்டேன். 
கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் ஆச்சு அக்கார்ட் திரும்ப.  விஜியை  ரெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுப்பிட்டு, நானும் தோழியுமா அறைக்குப் போய்ப் பேசிக்கிட்டு இருந்தோம்.  எல்லாம் குடும்ப விஷயங்கள்தான்.   அப்படியே சாயங்காலம் வேறெங்காவது போவது பற்றியும் .......!     

தொடரும்....... :-)