Friday, August 24, 2012

தங்கப்பதக்கத்தைத் தொட்டுப் பார்த்தேன்!

எங்க நியூஸியில் எனக்கு ரொம்பப்பிடிச்ச ஒரு வழக்கம் இருக்குதுங்க. எதாவது ஒரு போட்டியில் எடுத்துக்காட்டா உலகக்கோப்பை ஆட்டத்தில் வெற்றின்னு வச்சுக்குங்க... அந்தக் கோப்பையை நாடு முழுவதும் இருக்கும் நகரங்களுக்குக் கொண்டுவந்து காமிப்பாங்க.

 மக்கள் வரிப்பணத்தில் இதுக்கும் ஒரு பகுதியை அரசு செலவழிக்குதில்லையா? அதனால் இதைப் பார்க்கும் உரிமையும் நமக்கு வந்துருது பாருங்க:-) 

நடந்து முடிஞ்ச ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் நியூஸி 13 பதக்கங்களை ஜெயிச்சுருக்கு.

 ஆறு தங்கம்

 ரெண்டு வெள்ளி

 அஞ்சு வெண்கலம்.

 உலகளவில் பதக்கப் பட்டியலில் நியூஸி பதினைஞ்சாவது இடம் பிடிச்சுருக்கு.
நாலே மில்லியன் சனம் இருக்கும் சின்ன நாட்டுக்கு இது மகத்தான வெற்றின்னே நான் நினைக்கிறேன்.

 லண்டனில் இருந்து திரும்பி வந்த விளையாட்டுக்காரகளுக்கு அரசு தரப்பில் முதல் வரவேற்பு இங்கே நம்மூரில் (கிறைஸ்ட்சர்ச்) இன்னிக்கு நடக்குது.இப்போ அதுக்குப்போய்வந்துதான் அவசர அவசரமா இந்தப்பதிவை எழுதறேன். 

சுடச்சுடத் தருவதில் உள்ள மகிழ்ச்சி எனக்கு வேணாமா? :-))))

 அதென்ன பெரிய ஊரான ஆக்லாந்தை விட்டுட்டு நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைச்சதுன்னா.... நம்மூர்தானே மெயின் லேண்ட். அதுக்காகவோ?

 ஊஹூம்..... நாம்தான் நிலநடுக்கப்புகழ் ஊரா ஆகிட்டோமே:( நடந்து போன அழிவுகளால் மனம் உடைஞ்சு இருக்கும் மக்களைக் கொஞ்சமாவது மகிழ்ச்சிப்படுத்தணுமுன்னு அரசு எடுத்த முடிவு இது.

 நகர மையம் இப்போ இல்லாததால் கொஞ்ச நாளா விசேஷங்கள், விழாக்கள் எல்லாம் கிறைஸ்ட்சர்ச் ஹேக்ளி பார்க்கில் (பொட்டானிக் கார்டன்) நடக்குது. போன வாரம் முழுக்க விடாமல் பெய்ஞ்ச மழையால் அங்கே நிறைய பகுதிகளில் தண்ணீர் சரியா வடியாமல் தேங்கி நிக்குது. நிலநடுக்கத்தில் ஊரின் வடிகால் குழாய்களுக்கும் ஆபத்து வந்துருந்துச்சே:( அவைகளைத்தான் முதலில் பழுது பார்க்கும் வேலை நடக்க ஆரம்பிச்சு இன்னும் நடந்துக்கிட்டே இருக்கு.
இதனால் ஹேக்ளி பார்க்கை ஒதுக்கிட்டு உள்ளூரில் இருக்கும் சிட்டிக்கவுன்ஸில் ஸ்போர்ட்ஸ் சென்ட்டர் ஒன்னில் விழாவை நடத்த முடிவு செஞ்சாங்க. வெள்ளிக்கிழமை (இன்னிக்குதான்) பகல் பனிரெண்டு முதல் ஒன்னரை வரை விழா.

 கட்டாயம் போய்ப் பாருன்னு மகள் சொல்லிட்டு ரெண்டு முறை மின்மடலும் அனுப்பி நினைவூட்டினாள். தாய்க்கு, மேட்டர் தேத்தித்தர எவ்வளோ ஆர்வம் பாருங்களேன்:-))))

 பதினொன்னரைக்குக் கிளம்பிப்போனோம். பக்கத்துத் தெருவிலே கிடைச்ச இடத்தில் வண்டியை நிறுத்திட்டு ஓடுனோம். அஞ்சு நிமிச நடையில் திடலில் கால் பதிச்சோம். அழகான சின்ன நீரோடைக்கரையில் அமைஞ்சுருக்கு இந்த பயோனியர் ஸ்போர்ட்ஸ் சென்ட்டர். Pioneer Recreation and Sport Centre.

பச்சைக்கார்பெட் வரவேற்பு:-)



நல்ல கூட்டம்.  இருபதாயிரம் இருக்குமுன்னார் கோபால். என் வழக்கபடி ரெண்டால் பெருக்கினேன்.  கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் எப்படியும் முப்பதாயிரம் வரும்! இன்றைய ஸ்பெஷலா வெளியே க்ரவுண்டில்  பிள்ளைகளுக்குப் பொழுது போக்க,விளையாட  ஏற்பாடுகள் செஞ்சுவச்சுருந்தாங்க.  ஓட்டம், சாக்குப்பை ரேஸ், வாலி பால், ஃபுட் பால் இப்படி.



ஃபிட்னஸ் செஞ்சுக்க ரோயிங் சைக்ளிங் மெஷீன்களைப் போட்டு வருங்கால விளையாட்டுக்காரர்களை ஊக்குவிக்கும் வகை இன்னொரு இடத்தில்.


பெரிய திரை வச்சு நிகழ்ச்சிகள் ஓடிக்கிட்டு இருக்கு. உள்ளே செண்டரில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான். செண்ட்டர் உள்ளே வெறும் 700 பேர் மட்டுமே கொள்ளும் சின்ன இடம் என்பதால் இந்த ஏற்பாடு. நாம் கொஞ்சம் லேட்டாப்போயிட்டோம்:( உள்ளே ஹௌஸ் ஃபுல்!


வரும் மக்களுக்கு இலவசத்தீனி ஏற்பாடு ஒரு பக்கம். சுடச்சுட சாஸேஜ்! இன்னொரு பக்கம் ரெண்டு காஃபி வண்டிகள்.

 பள்ளிக்கூடங்கள் பல, பஸ் ஏற்பாடு செஞ்சு பிள்ளைகளைக் கூட்டி வந்துருக்காங்க. பலவகை நிறங்களில் சீருடைகள்.

பூம்பிஞ்சு முதல் மூத்தவர் வரை நிறைஞ்சு வழியும் கூட்டம். செல்லங்களுக்கும் குறைவில்லை.
 நியூஸிலாந்து ஆர்மி பேண்ட் ஒன்னு வாசிக்க ரெடியா இருக்கு. தூக்கமுடியாத அளவு பெருசா இருக்கும் ஒரு இசைக்கருவியை வாசிக்கும் பெண்கள் நம்ம கெமெராவுக்கு ஆகா போஸ் கொடுத்தாங்க. ஒரு சிறுவனுக்கு அதை எப்படித் தூக்கி வச்சு வாசிக்கணுமுன்னு தெரிஞ்சுக்கணுமாம். நோ ஒர்ரீஸ்:-))))

சரியா பனிரெண்டுக்கு செண்ட்டர் உள்ளே மவொரி வரவேற்பு கொடுத்து விளையாட்டுக் குழுவை மேடை ஏத்துனாங்க. பதக்கம் வென்றவர்கள் முன்வரிசையில் நிற்க மொத்தக்குழுவும் (சுமார் 100 பேர்) மேடையில். அஃபிஸியல் ஒலிம்பிக் ஸாங் பாடப்பட்டது. நகரத்தந்தை வரவேற்றுப் பேசுனார்.
உள்ளூர் ரேடியோக்காரர்கள் நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டும் பதக்கம் வென்றவர்களை நேர்காணல் செஞ்சுக்கிட்டும் இருந்தாங்க. முக்கிய கேள்வியா 'பதக்கம் வாங்க மேடையில் ஏறி நிற்கும்போது, நாட்டுக்கொடி கம்பத்தில் உயர்ந்து ஏறும்போதும் தேசிய கீதம் பாடும்போதும் எப்படி உணர்ந்தீங்க?'

 பதில் சொல்லிட முடியுமா? அப்போ எவ்ளோ எமோஷனலா இருந்திருக்கும்? டிவியில் மெடல் செரிமனி பார்க்கும் போதெல்லாம் நானே எப்படி உணர்ச்சிவசப்பட்டேன்! இதுக்காகவே ராத்திரி ரெண்டு மணி வரையெல்லாம் முழிச்சுருந்தோமே!

 உள்ளே நிகழ்ச்சி முடிஞ்சு வெளியே இருக்கும் நமக்காக விளையாட்டுக்காரர்கள் வெளிவரப்போவதாச் சொன்னாங்க. வாசிச்சுக்கிட்டு இருந்த நியூஸி ஆர்மி பேண்டை அம்போன்னு விட்டுட்டு இடப்பக்க வாசலுக்கு விரைந்தோம்.
போன முறையும் இந்த முறையும் வெற்றி வாகை சூடிய தங்க மங்கை வேலரி ஆடம்ஸ் (Valerie Adams shot put) இன்னும் நியூஸி திரும்பலை. ஐரோப்பாவில் நடக்கும் வேறு போட்டிகளுக்காக ஸ்விட்ஸர்லாந்தில் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களை சந்திக்க முடியலையேன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

 மார்க் டொட் (Mark James Todd,equestrian )தான் முதலில் வெளியே வந்தார். 56 வயசு. இது ஆறாவது மெடல். 1984 1988 ( லாஸ் ஏஞ்ஜலீஸ், ஸியோல்) ரெண்டு ஒலிம்பிக்ஸ்களிலும் தங்கம் வென்றவர். ரெண்டு தங்கம், ஒரு வெள்ளி, மூணு வெங்கலம் இதுவரை!
பாராட்டிட்டு மெடலைத் தொட்டுப் பார்த்தேன். வெண்கலம்!

 அடுத்து வந்தவர் முகத்தைக்கூடக் கவனிக்க முடியாமல் அப்படிக்கூட்டம். என் கண்ணு மட்டும் தங்கத்துலேயே இருந்துச்சு. தொட்டுத் தூக்கிப்பார்த்தேன். யம்மா..... நல்ல கனம் 400 grams! அம்பது பவுனா???

 ஊஹூம்....உள்ளே பூராவும் வெள்ளி. ஆறு கிராம் தங்கத்தை மேலே பூசி இருக்காங்களாம்.
வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த கோபாலிடம், மெடலைத் தொட்டுப் பாருங்கன்னேன். வாழ்க்கையில் இது போல இன்னொரு ச்சான்ஸ் கிடைக்குமா? தொட்டுப் பார்த்தார்.
எங்கூர் மக்கள்ஸ் கொஞ்சம் வெகுளிகள்தான். தங்கம் ஜெயிச்சுட்டோம் என்ற மண்டைகனம்கூட இல்லை. நான் பதக்கத்தைத் திருப்பித்திருப்பிப் பார்க்கும் வரை அப்பாவியாக் காத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி முடிவடைஞ்சதும்  வெற்றிபெற்ற ஆட்டக்காரர்களை சில குழுக்களாப் பிரிச்சு சில முதியோர் இல்லங்கள், சில பள்ளிக்கூடங்கள், எங்கூர் பொது மருத்துவமனை இங்கெல்லாம்  கூட்டிப்போறதா ஏற்பாடு.
வரமுடியாதவர்களை அப்படிக் கண்டுக்காம விட முடியுமா சொல்லுங்க? இதுகூட எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு பிடிச்சிருக்கு.


மனசு பூரா மகிழ்ச்சியா அங்கிருந்து கிளம்பினேன். நீரோடையில் ஒரு வாத்து நீந்தும்போட்டிக்குப் பயிற்சி செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஃப்ரீ ஸ்ட்ரோக். கோ ஃபார் கோல்ட் ன்னு சொல்லிட்டு வந்தேன்:-)

Wednesday, August 22, 2012

காசுச் சத்தம் கேக்குதைய்யா.... காசுச் சத்தம்.... காசுச் சத்தம்... (ப்ரிஸ்பேன் பயணம் 28)

தகதகன்னு வெளிச்சம் போட்டு மினுங்கும் செண்ட்டர் கோர்ட் முழுசும் நிறைய மக்கள்ஸ். பாட்டும் கூத்துமா இருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை லேட் நைட் ஸ்பெஷலா எதாவது இருக்குமுன்னு போய்ப் பார்த்தால் வால்லபீஸ் கூட்டம். Australian national rugby union team . Wallabies என்ற அஃபிஸியல் செல்லப்பெயர். 1883 ஆண்டு சதர்ன் ரக்பி ஃபுட்பால் யூனியன் என்ற பெயரில் ஆரம்பிச்சது.



 ஆஸியில் The Australian National Rugby League Team என்று ஒரு லீக் கங்காரூஸ் ( Kangaroos) என்ற பெயரில் இருக்கு, அவுங்க ஊரின் விசேஷ உயிரினங்கள் பெயரைப் பெருமைப்படுத்தும் விதமாத்தான் வச்சுக்கிட்டு இருக்காங்க.

 நாங்க சும்மா இருக்கமுடியுமா? NZ Rugby League என்னன்னா New Zealand Kiwis என்று வச்சுக்கிட்டு இருக்கு. 1908 ஆம் ஆண்டுமுதல் விளையாடிக்கிட்டு இருக்காங்க. NZ Rugby Unionக்கு செல்லப்பெயரா ஆல் ப்ளாக்ஸ்ன்னு இருக்கு. எங்க தேசிய நிறம் கருப்பு என்பதை இங்கே சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த ரக்பி யூனியன் எங்க ஊரான கிறைஸ்ட்சர்ச்சில்தான் முதன்முதலில் கிறைஸ்ட்சர்ச் ஃபுட்பால் க்ளப் என்ற பெயரில் 1863 ஆம் ஆரம்பிச்சுருக்கு. என்ன இருந்தாலும் இதுதானே மெயின் லேண்ட் ஆஃப் நியூஸி..

 வெள்ளையர்கள் நியூஸி வந்து குடியேறுமுன்பே உள்நாட்டு மவொரி மக்கள் பந்துபோல ஒன்னை வச்சுக்கிட்டு( ரக்பி பந்து, நீளவட்டமா ஓவல் ஷேப்பிலே இருப்பது உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே? ) கி ஓ ராஹி ki-o-rahi என்ற விளையாட்டு விளையாடிக்கிட்டு இருந்துருக்காங்க. இந்த விளையாட்டின் விதிகள் ஏறக்கொறைய அஸ்ட்ராலியன் ஃபுட் பால் விளையாட்டைப்போலவே இருந்துருக்கு. ஆனால் அப்போ அடுத்த நாட்டைப் பற்றிய விவரங்கள் இங்கே தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லைதானே?

 க்ளப் ஆரம்பிச்சு ஒரு ஏழு வருசம் போல தாங்களே சில நியமங்களை உண்டாக்கிக்கிட்டு வெள்ளையர் ஆடிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் 1870 ஆண்டுதான் ரக்பி ஃபுட்பால் நியமங்கள் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டன.

மத்த நாடுகளோடு விளையாடுனாலும் எங்களுக்கு ஆஸிகளை ஜெயிப்பதுதான் வாழ்வின் நோக்கம். கேம் நடக்கும் சமயங்களில் பார்த்தீங்கன்னா.... வெறி பிடிச்சு அலையும், ஒரு கூட்டம்! ரத்த பூமி!!! ரொம்ப விஸ்தரிக்காமல்  'சுருக்'ன்னு சொல்லணுமுன்னால் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடும் க்ரிக்கெட்டை நினைச்சுக்குங்க.

 மாட்சிமை தாங்கிய மகாராணியம்மாவின் குடிகள் என்றாலும் எங்க நாட்டில் க்ரிக்கெட் & ரக்பியை ஒப்பிட்டால் ரக்பி விளையாட்டு ஒரு மாத்து அதிகம்தான். என்னதான் சொல்லுங்க இது உள்ளூர் விளையாட்டில்லையோ!!!! இந்த டீம்களில் எப்பவும் நிறைய ஐலண்டர்ஸ் இருப்பாங்க. ஆட்டத்துக்கு ஏத்த உடல்வாகு அவுங்களுக்கு இருக்கே!
 Saia Faingaaவுக்கு சின்ன வயசு விசிறிகள் ஏராளம்.



 போஸ்டர்கள் விநியோகிச்சுக்கிட்டும் ஆட்டோகிராஃப் போட்டுக்கிட்டும் இருந்த விளையாட்டு வீரர்களைக் கிளிக்கவே ஃபொட்டோக்ராஃபர்களின் பெரும் கூட்டம் படை எடுத்துருந்துச்சு. கையில் ஒன்றையணாக் கெமெராதான் இருக்குன்னு நான் சும்மா இருக்க முடியுமா? க்ளிக் க்ளிக்.



மகளுக்கு பிடிக்குமுன்னு ரெண்டு போஸ்டர்கள் வாங்கி அதைப் பத்திரமாக் கொண்டுவந்து காமிச்சவுடன், யக் 'என்றாள், அசல் கிவி!


சில ஊர்களுக்குப் போகும்போது குறிப்பிட்ட சிலதைச் செய்ஞ்சு முடிக்கலைன்னா பயணம் போன திருப்தியே எனக்கு இருக்காது. ரிச்சுவல்ஸ் முக்கியம். இங்கே அது கஸீனோ. ஒரு பயணத்துலே ஜஸ்ட் ஒரு முறைதான் . பெரிய எதிர்பார்ப்பு ஒன்னும் இல்லை. நிறைய காசும் செலவு செய்ய மாட்டேன். ஆனா...போகணும். போனேன்.

மாலின் கோடிவரை நடந்து சாலைக்கு எதிர்ப்புறம் வண்ண விளக்கொளியில் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியா இருக்கு கஸீனோ கட்டிடம். உள்ளே போனோம்.

முதல் ஹாலில் Roulette Poker Blackjack இப்படி i2 வகைகள். பெரிய மேசைகளில் ஆட்டம் நடக்க சின்னக்குன்றுகள் போல் சிப்ஸ் குவிச்சு வச்சு ஆடுறாங்க மக்கள்ஸ். நாம் என்ன பரம்பரை கேம் ப்ளேயர்ஸா என்ன? ஸ்லாட் மெஷீன்கள் இருக்கும் ஹால்கள் பகுதிக்குப்போய் மினிமம் ஒரு செண்ட் கேம் மெஷீன்களில் ரெண்டைப் பிடிச்சோம்.

 சொன்னால் நம்ப மாட்டீங்க.....எங்க கிறைஸ்ட்சர்ச் நகரில் நிலநடுக்கம் வந்து நகர மையமே அழிஞ்சு போனப்ப, தப்பிப்பிழைச்ச சில கட்டிடங்களில் எங்கூர் கஸினோவும் ஒன்னு. சின்னதா எங்கூருக்கும் ப்ரிஸ்பேனுக்கும் சின்னதா ஒரு ஒப்பீடு செய்தால் ப்ரிஸ்பேன் கஸீனோ ரொம்பப் பெருசு. எங்க ஊரில் 500 ஸ்லாட் மெஷீன்கள் இங்கே 1300. எங்கூரில் குறைஞ்சது 20 வயசு இருந்தால்தான் உள்ளே அனுமதி. இங்கே 18 வயசு.

 நான் கை பை கொண்டுவரலை. கோபாலிடம் பர்ஸ் வாங்கிப்பார்த்தால் சில்லறையா ஒரு ஒன்பது டாலர்கள்தான் இருக்கு. எப்பவும் என்னோட லிமிட் 20 என்பதால்..... நோட்டை எடுத்துக்கிட்டுப்போய் சில்லறை வாங்கிக்கணும். முதலில் இந்த ஒன்பது காலியாகட்டும். அப்புறம் சில்லறை மாத்தலாமுன்னு ஆளுக்கொரு மெஷீனில் ஆட ஆரம்பிச்சோம். சின்னச்சின்ன வெற்றியும் தோல்விகளுமா ஆடிக்கிட்டே இருக்கோம். திடீருன்னு கலகலன்னு  'காசு மழை'  கொட்டும் ஓசை! என்னதான் சொல்லுங்க பணத்தின் ஓசை ஒரு தனி இனிமைதான் இல்லையா? எனக்கு அடுத்த மெஷீனில் விளையாடும் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் மெஷீனைப் பிய்ச்சுக்கிட்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அவுங்க ரெண்டு மெஷீனைப் பிடிச்சுக்கிட்டு ரெண்டு கையாலும் பாய்ஞ்சு பாய்ஞ்சு விளையாடுறாங்க.

 அங்கங்கே காசு விழும் சத்தம் கேட்டாலும் மழை இல்லை. நாம் மட்டும் சும்மா இருக்கலாமான்னு  'கலெக்ட் கேஷ்' பட்டன் அமுக்குனதும் லொட்ன்னு ஒரு டாலர் விழுந்துச்சு:-)))) திருப்பி அதை மெஷினில் நுழைச்சேன். சரியா ஒன்னரை மணி நேரம் அதே ஒன்பது டாலரை வச்சே விளையாடினோமுன்னு வையுங்க. போய் வந்து போய்வந்து போய்வந்துன்னு பலமுறைகள் ஆகி பூஜ்யம் வந்ததோடு கிளம்பிட்டோம்.

 சிங்கையில் கஸினோவுக்குள் நுழைய உள்ளுர் வாசிகளுக்கு 100 டாலர் கட்டணம். வெளிநாட்டவர் பாஸ்போர்ட் காமிக்கணும். இங்கே எங்க பக்கங்களில் அதெல்லாம் ஒன்னும் இல்லை.

 என் மனக்குறை என்னன்னா..... கஸீனோ உள்ளே படம் பிடிக்க அனுமதி இல்லை:( ப்ச்......





வெளியே வாசல் முற்றத்தில் நிறைய சாப்பாட்டுக்கடைகளின் கூடாரங்கள்.   மும்முரமான வியாபாரத்தில் இருக்கு. நமக்கும் பசி. ஆனால் இந்தக் கூடாரங்களில் நமக்கு ஒன்னும் வாகா இல்லை என்பதால் மாலில் இருக்கும் ஏகப்பட்ட ஃபுட்கோர்ட்டுகளில்,   நமக்குக்கிட்டே இருக்கும் ஒன்னில் நுழைஞ்சோம்.

 ஹரே க்ருஷ்ணா வெஜிடேரியன் ஸ்டாலில் போண்டாமாதிரி ஒன்னை சாம்பிள் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. பரவாயில்லையே. நல்லாத்தானே இருக்குன்னு அங்கேயே சாப்பாட்டுக்கு ஆர்டர் செஞ்சோம்.

 ஐயோ..... இப்படித் தூண்டிலில் போண்டாவை வச்சுப் பிடிச்சுட்டாங்களேன்னு புலம்ப வேண்டியதாப் போச்சு. சோம்பல்படாம பக்கத்துத் தெரு இஸ்கான் கோவிந்தாசுக்கே போயிருக்கலாம். விதி யாரை விட்டது?


 கெட்டுப்போன நாக்கை பழைய நிலைக்குத் திருப்ப மாலில் இருந்த ஸ்விஸ் ஐஸ்க்ரீம் கடையில் டபுள் ஸ்கூப் ஐஸ்க்ரீம் வாங்கித்தின்னுட்டு அறைக்குப் போக பொடி நடையில் கிளம்பினோம். போற போக்கில் சாயங்காலம் பார்த்து வச்சுருந்த ஷர்ட்ஸ் வாங்கிக்கணுமேன்னு மறுபடி அந்தப் பெரிய கடைக்குள்ளே நுழைஞ்சதும் கோபாலின் கால்கள் வேகமெடுத்து ஸூட் கேஸ் மாடிக்குப் போயிருச்சு. பை வாங்கலையோ பை.. பழிக்குப்பழின்னு நானும் கிச்சன் கேட்ஜெட்ஸ் இருக்கும் மாடிக்குப் போயிட்டேன்:-)

 லேட் நைட் முடியும் சமயம் (மணி ஒன்பதாகப்போகுது) ஒருவரை ஒருவர் கண்டுபிடிச்சோம். யாரும்  எதுவும் வாங்கலை. ஆனா பார்த்து வச்சுருக்கு. நாளைக்கு சனிக்கிழமைதானே. இவருக்கு வேலை இல்லை. காலையில் வந்து வாங்கிக்கணும்.

 தொடரும்............:-)

Monday, August 20, 2012

Buy Now or Cry Later... (ப்ரிஸ்பேன் பயணம் 27)

இப்ப வாங்கு இல்லைன்னா பின்னாளில் (உக்காந்து) அழுன்னு எங்கே பார்த்தாலும் மாட்டி வச்சுருக்கு.

 "என்ன சமாச்சாரம்? எதுக்கு அப்புறமா அழணும்? இப்பவே வாங்குறதை வாங்கிக்கிட்டு அழுதால் என்ன? "

 " எதுக்கும்மா வாங்கிக்கிட்டு அழணும்? "

 "என்னைச் சொல்லலைங்க..... நான் வாங்கிக்கிட்ட பிறகு பில் வரும்போது நீங்க தான் உக்காந்து அழணும். அதைத்தான் சொல்றாங்க."

 இங்கே பெரிய ஸேல் நடக்கும் காலமாம் இது. இவுங்க வணிகத்துக்கான நிதியாண்டு ஜூனோட முடியுது. அதனால் கடையில் இருக்கும் சரக்குகளையெல்லாம் வித்துத் தொலைச்சுட்டு அடுத்த வருசம் புதுக்கணக்கு ஆரம்பிக்கவாம்!

 உண்மையைச் சொன்னால்.... கடைகளில் ஸேல் என்று போட்டுருக்கும் விலையிலேயே குறைஞ்சது நூறு சதமானம் லாபம் இருக்கத்தான் செய்யும். சீஸன் ஆரம்பிக்கும்போது புதுசா அறிமுகப்படுத்தும் பொருட்களையும் துணிமணிகளையும் குறைஞ்சபட்சம் நானூறு சதம் லாபம் வச்சுத்தான் விப்பாங்க. (எப்படித் தெரியுமுன்னு கேக்கப்பிடாது. நானும் ஒரு யாவாரத்தை ஆறு மாசம் நடத்திப்பார்த்துருக்கேனே) 

 மக்கள்ஸ்க்கு புதுசா வந்தவைகளை உடனே வாங்கிப்போட்டுக்கிட்டே ஆகணும். அதிலும் இந்த யங் பீப்பிள்ன்னு சொல்லும் இளைய சமூகம் இருக்கே.... அப்பப்பா.... வாங்கலைன்னா அந்த ஸோ கால்ட் நண்பர்கள் குழுவிலிருந்து விலக்கப்படும் அபாயம் இருக்கு(ன்னு இவுங்களாவே நினைச்சுக்கறதுதான்) 

அதனால் கடைகளில் யாவாரம் கொடிகட்டிப்பறக்கும். முதல் ஒரு சில மாசங்களிலேயே போட்ட பணத்தை எடுத்துருவாங்க. அப்புறம் வருசம் பூராவும் எதாவது ஒரு பெயரில் நடக்கும் ஸேல்களில் கொஞ்சம் கொஞ்சமா விலை குறைப்பு நடந்துக்கிட்டு இருக்கும்.

 ஃபேஷன் மாறிக்கிட்டே இருக்கு பாருங்க. கடைசியிலே ஸ்டாக் டேக்கிங் ஸேலுன்னு அடிமாட்டு விலை. பை ஒன் கெட் 2 ஃப்ரீன்னு வருமுன்னா பாருங்க.

 இங்கே புத்தகக்கடைகளிலும் இப்படித்தான். புதுப்புத்தகம் ரிலீஸ் ஆனதும் ரொம்பப்புகழ் வாய்ந்/த்த எழுத்தாளருன்னா அநியாயத்துக்கு 79.95ன்னு ஆரம்பிப்பாங்க! 99.95 எல்லாம்கூட சர்வசாதாரணம். அப்புறம்...? 

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்புதான்.... திடுக்குன்னு ஒரு நாள் பார்த்தா.... ஒரு ப்ளாஸ்டிக் பை அஞ்சு டாலருன்னு போட்டுருக்கும். அதாவது அந்தப் பையை வாங்கிக்கிட்டு, அது கொள்ளும் அளவுக்கு ஸேலில் போட்டுருக்கும் புத்தகங்களை நிறைச்சுக்கலாம். வழிய வழிய நிறைப்பது நம் சாமார்த்தியம்! நல்லநல்ல புத்தகங்களாத் தேடி நிதானமா எடுக்கலாம். ஆனா..... பையைத் தூக்க முடியாமல் சூப்பர்மார்கெட் ட்ராலியில் வச்சுத் தள்ளிக்கிட்டு(ம்) வந்திருக்கேன்

 சொன்னா நம்ப மாட்டீங்க எங்க ஊருலே தங்க நகைகூட அம்பது சதம் கழிவுன்னு அறிவிப்பாங்க. என்ன ஒன்னு, ஒம்போது காரட் என்பதால் நமக்கு அவ்வளவா ஆர்வம் இருக்காது. அப்படியும் விடமுடியுதா? வைரப்பெண்டண்ட் ஒன்னு இப்படி அரைவிலையில் வாங்குனேன். தங்கத்துக்கு மதிப்பில்லை. ஆனா வைரக்கல்லுக்கு இருக்கே! 

 இன்னொருக்கா , இந்த ஊருக்கு வந்த புதுசுலே ஒரு ஒம்பது கேரட் தங்கத்துலே கோபாலுக்கு (சர்ப்பிரைஸ்) பர்த்டே கிஃப்ட்டா இருக்கட்டுமுன்னு ஒரு ப்ரேஸ்லெட், (அப்பவும் அரைவிலைதான்) வாங்கினேன்.

 சில வருசத்துக்கு முன்னே இவர் சென்னைக்குப் போன சமயம் சரவணா தங்கநகைக்கடையில் உறவினர்களுக்கு நகை வாங்கப்போன சமயம் அவுங்க வாங்கப்போற தங்கத்தின் தரம் பார்க்க கம்ப்யூட்டர் மெஷீன் இருக்குன்னு அதுலே வச்சுப்பார்த்தப்ப, இவரும் தன்னுடைய ப்ரேஸ்லெட்டைக் கழட்டி மிஷீனுலே வச்சாராம். சீச்சீ.... வெளியே எடு. இது தங்கத்தை மட்டுமே தரம் பார்க்குமுன்னு மெஷீன் காறித்துப்பி, மானம் போச்சுன்னு சொன்னார்:-) 
ஒன்பதுக்கு நம்மூரில் இவ்ளோதான் மதிப்பு:( 

 கடந்த பல வருசங்களில் கவனிச்சது என்னன்னா..... ஃபேஷன் ஃபேஷன்னு ஆண்களுக்குள்ள உடுப்பு வகைகள் ஏராளமா வர்றதும். பெண்களைவிட ஆண்கள் இதுலே கிறங்கிப் போயிருப்பதுமா இருக்கு! உடுப்புன்னு இல்லை அலங்காரச்சாமான்களும் ஆம்பிளைகளுக்கு இப்போ எக்கச்சக்கம். நான் சம்பாரிக்கிறதையெல்லாம் மனைவிக்கும் பிள்ளைகளுக்குமே செலவு செய்யும் தியாகியா இருக்கேன்னு ஒரு காலத்துலே ஃப்லிம் காமிச்சுக்கிட்டு இருந்தவங்க எல்லாம் இப்ப வரம்பு மீறி தங்களுக்காகவும் செலவு செஞ்சுக்கிட்டு இருக்காங்க என்பதுதான்.

 இதுலே என்ன ஆறுதல்ன்னா.... நாளை மறுநாள் க்ரெடிட் கார்ட் பில் வந்தவுடன் மனைவிமேல் மட்டும் குற்றம் சாட்டமுடியாது என்பதே:-)))))

 சொல்லிவச்ச மாதிரி எல்லா பெரிய கடைகளிலும் உள்ளே நுழைஞ்சவுடன் தரைத்தளத்துலே  மேக்கப் சாமான்கள்தான்.  விதவிதமான பெயர்களில்  அழகுசாதனத் தயாரிப்பாளர்களின் தனித்தனி கவுன்ட்டர்கள்.   ஒவ்வொன்னிலும் யாரையாவது உக்காரவச்சு அழகுபடுத்திக்கிட்டே இருக்காங்க.  துல்லியமா முகம் பார்க்க  பெரிய உருப்பெருக்கும் கண்ணாடி.  எப்பேர்ப்பட்டவர்களுக்கும்  அதுலே பார்க்கும்போது கட்டாயம் ஏதோ  தன் முகத்துலே குறை இருப்பதாத் தோணிப்போகும்!

இந்தக் கடைகள் எல்லாம் குறைஞ்சது  ஏழெட்டு மாடிகளில் இருக்கு. ஒவ்வொரு தளமும்  அலங்காரம், ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், வீட்டு அலங்காரம், கட்டில்மெத்தை படுக்கைவிரிப்புகள், பாத்திர பண்டங்கள்.,  டிவி , கெமெரா, கம்ப்யூட்டர்ன்னு எலெக்ட்ரானிக்ஸ்,  ஸூட் கேஸ்கள்ன்னு  தனித்தனி தளத்தில் வச்சுடறாங்க.  கஷ்டமில்லாமல்  ஏறிப்போக எஸ்கலேட்டர்ஸ்.

சென்னையில்கூட லைஃப் ஸ்டைல் கடை ரெண்டு மூணு மாடிகளில் இருக்குல்லே? 

ஏகப்பட்ட விற்பனையாட்கள், உதவியாளர்கள்ன்னு பெரும்படை.  இம்மாம் பெரிய அடுக்கு மாடிகளை ஒரே சீதோஷ்ணத்தில் வச்சுக்கணுமுன்னா பவர் பில் எவ்ளோ ஆகுமுன்னு நினைச்சுக்குவேன்.  அதையெல்லாம் யாரு கட்டுவாங்க?  வாடிக்கையாளர்கள் தலையில்தான் இல்லே? அதான் எல்லா சாமான்களும் யானை விலை!


அம்பது டாலருக்கு மூணு அரைக்கை ஷர்ட். நூறு டாலருக்கு மூணு முழுக்கை பிஸினெஸ் ஷர்ட்டுன்னு கொட்டி வச்சுருக்கு. கடைக்குள் ஒரு மாடி முழுசும் ஆண்களுக்கான ஆடைஅலங்காரங்கள். நிறைய mannequins புது உடைகளைப்போட்டு மினுக்கிக்கிட்டு இருக்குதுங்க. இந்த மாடல்கள் எல்லோருக்கும் 100% பெர்ஃபெக்ட் பாடி! நல்ல உயரமா, தொப்பை இல்லாமல் கச்சிதமா மிடுக்கா நிக்கறாங்க. முந்தி எல்லாம் வெள்ளை இனத்து மாடலாகவே இருந்தது போய் இப்போ கலர்களுக்கு ஆதரவா கருப்பு நிற மாடல்களும் வச்சுருக்காங்க.

 ஆதிகாலத்துலேயே ( 15 ஆம் நூற்றாண்டு) மாடல் பொம்மைகள் செய்வது வழக்கத்துக்கு வர ஆரம்பிச்சுருக்கு. ஃப்ரான்ஸ் நாட்டிலே உடுப்புகள் டிஸ்ப்ளே செய்ய மாடல்கள் உண்டாக்குனப்ப நார் , மெல்லிய பிரம்பு எல்லாம் வச்சு உண்டாக்குனாங்க. 1835 லே கம்பி சுத்தி வச்சு பொம்மைகள், அதுக்கப்புறம் காகிதக்கூழாலேதான் செஞ்சாங்களாம். அப்புறம் நல்ல வழுவழுப்பு, ஷார்ப் ஃபீச்சர் இருக்கணுமுன்னு மெழுகுலே செய்ய ஆரம்பிச்சு, இப்ப ப்ளாஸ்டிக், லேடக்ஸ்ன்னு வந்து நிக்குது.

 மருத்துவத்துறை, ராணுவத்துறை, உடுப்புத்தயாரிக்கும் தொழில்துறைன்னு இப்ப ஏகப்பட்ட இடங்களில் இந்த mannequins பயன்படுத்தறாங்க.

 இன்னொரு விஷயம் நான் கவனிச்சது ...பத்திரிக்கைகளில் விளம்பரத்துக்கு உண்மை மனிதர்களை மாடலாப் பயன்படுத்திப் படம் எடுக்கும்போது பெண்கள் என்றால் குழைவு, சிரிப்புன்னு உணர்ச்சிக்குவியலான முகங்களும் ஆண்கள் மாடலாக இருக்கும்போது ஒரு அலட்சியமா நிற்பது போலவும் இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் கோபமான உணர்வைக் காமிச்சு ரூடா நிற்பதுபோலவும்தான் போடறாங்க. எதுக்கு இந்த ஆள் இவ்ளோ கோபமா பார்க்கறாருன்னு நினைச்சுக்குவேன். அப்படி இருந்தால்தான் ஆண்மைன்னு இருக்கோ என்னவோ?


 இங்கே பல பொம்மைகளுக்கு முகமே இல்லை. வெறும் தலை மட்டும் உடம்போடு இருக்கு! அப்பாடா.... கோபம் இல்லைன்னா மூஞ்சே இல்லை:-))))) இதுவும் நல்லாத்தான் இருக்கு. நமக்குப்பிடிச்ச முகத்தை வச்சுப் பார்த்துக்கலாம்,இல்லை!

 விதவிதமான எண்கள் போட்டுக் குமிஞ்சு கிடக்கும் ஷர்ட் மலைகளில் நமக்கு வேண்டியதைத் தேடிக்கிட்டு இருந்தோம். நீங்க என்ன வேணா சொல்லுங்க..... ஆண்களுக்குக் கலர் ச்சாய்ஸ் ரொம்பக் கம்மிதான். அழுக்குக்கலர்தான் அதிகம். இல்லைன்னா ஒரே சோகையான நிறம். அதுவும் இல்லைன்னா கட்டம், கோடு. இப்படி ....... ஆஃபீஸுக்குப் போடறதுன்னா வெள்ளை இல்லாட்டா நீலம்.

 நமக்கு வேணும் என்ற அளவுன்னு நினைச்ச ஒரு சட்டையை எடுத்துக்கிட்டுப் போட்டுப் பார்க்கணுமுன்னு கேட்டால், அதே அளவுள்ள (போட்டுப் பார்க்கறதுக்குன்னே வச்சுருக்கும் ) ஒரு சட்டையைக் கொடுத்தாங்க. இவர் ட்ரெஸ்ஸிங் ரூமில் போய் போட்டுவந்து காமிச்சப்ப,   'தெனாலி ஆலங்கட்டி மழை கமல்'  ஞாபகம்தான் வந்துச்சு. கைவிரல் நுனியில் இருந்து ஒரு முழம் ஸ்லீவ் கீழே தொங்குது:-))))))))))))))

 மார்பளவு கொஞ்சம் லூஸா இருக்கட்டுமேன்னுதான்....

 நிறைய ஆண்களுக்கு, மறுபாதி அப்ரூவ் பண்ணாதான் திருப்தி போல! ட்ரெயல் ரூம் வாசலில் மறுபாதிகள் காத்துக்கிட்டு இருந்தோம்.

 எப்பவும் பயணசமயத்துலே கைப்பையில் வச்சுருக்கும் இஞ்சு டேப் (அதெல்லாம் நான் ரெண்டாயிரம் துணி கெடுத்த முழு டைலராக்கும் கேட்டோ!! ) எடுத்துக் கையை அளந்தால்..... நம்மளவர் கை சின்னதா போச்சா என்ன? கடையில் உதவியாளரிடம் சொன்னால்..... காலர் சைஸும் ஸ்லீவ் சைஸும்தான் ஷர்ட்ஸ்லே பார்க்கணுமாம்.

 எப்பப்பார்த்தாலும் ரெடிமேட் வகைகளில் ஸ்மால் மீடியம் லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜுன்னே வாங்கிப் பழக்கப்பட்டுட்டோம் நியூஸியில். இதே மாதிரி சீனாவில் லார்ஜ் வாங்கினால் தொலைஞ்சோம். அது குழந்தைப்பிள்ளை போடுவதா இருக்கும். அங்கே வாங்கினால் ஏழெட்டு எக்ஸ் சைஸு வாங்கிக்கணும்:-))))) 

 அதுவும் ஸ்லீவ் அளக்கும்போது தோள்ப்பட்டையில் இருந்து விரல் நுனிவரை அளக்காமல் பின்னங்கழுத்து நடுவில் (தண்டுவட முதல் எலும்பில்) இருந்து கைவிரல் நுனி வரையாம்!

 அடராமா..... இந்த விஷயம் தெரியாமலே டெய்லரா இருந்துருக்கேனே:( பரவாயில்லை. இப்பத் தெரிஞ்சு போச்சுல்லே.... இனி லேடீஸ் அண்ட் ஜென்ட்ஸ் டெய்லர்ன்னு போட்டுக்கலாம்:-)))))

 தொடரும்............:-))))