Thursday, January 21, 2010

WOW......அடலாஜ் வாவ். vav.................(குஜராத் பயணத்தொடர் 5)

சொன்ன நேரத்துக்கு 'டான்'னு பப்பன் வந்ததுக்கும் நாங்களும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு ரெடியா இருந்ததுக்கும் சரியா இருந்துச்சு. பஃபேதான். என்ன இருக்குன்னு போய்ப் பார்த்தால்.......இப்பெல்லாம் 'சவுத் இண்டியன் மெனு'ன்னு வைப்பது ஒரு கலாச்சாரப் பரிமாற்றம்போலப் பெருகி வருது. இட்லி சாம்பார், தோசை, ஊத்தப்பம். எனக்கு வெஸ்ட்டர்ன் போதும். கோபால்தான் ஆசையா இட்லி சாம்பார் எடுத்துக்கிட்டு வந்தார். ரெண்டு ரூபாய் சைஸில் இட்லி!! நல்லாவே இல்லைன்னு முழிச்சதைப் பார்த்துப் பரிதாபமா இருந்துச்சு. அதுக்குப்பிறகாவது சூதானமா இருந்துருக்கலாம். ஊத்தப்பம் சொன்னதும் தேசலா ஒன்னு வந்துச்சு. ஹூம்......

செக் அவுட் பண்ணிட்டுக் கிளம்பி நேரா சபர்மதி ஆஸ்ரமம். இப்போ அங்கிருந்து கிளம்பி சுமார் 21 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அடலாஜ் வாவுக்குப் போய் இறங்குனோம். (வாவ் = கிணறு. வாவின்னு நீர்நிலைக்கு நாமும் சொல்றோமே) 1498 லே கட்டுன படிக்கிணறு. நேத்துப் பார்த்ததைப்போலத்தான். ஆனால் அதைவிடப் பெருசாவும் கலைஅழகோடும் பளிச்சுன்னும் இருந்துச்சு. (ஒருவேளை நாம் வந்த நேரமாவுமிருக்கலாம். நேத்து இருட்டுக் கவிழும் சமயமாப் போயிருச்சே) எல்லாம் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள். இதுக்கு மூணு வாசல்கள் வேற. மூணுபக்கத்தில் இருந்தும் முதல் மண்டபத்தில் இறங்கலாம். தொல்பொருள் இலாக்காவின் பொறுப்பில் இருக்கு.


மாணவர் கூட்டம் ஒன்னு அங்கங்கே உக்கார்ந்து வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கட்டிடக்கலை பயிலும் மாணவர்களாம். ஒவ்வொரு அடுக்காக இறங்கிப்போனோம். எங்கே பார்த்தாலும் யானைகள் வரிசை (என்னைச் சொல்லிக்கலை) 'எல்லாவிதமான' சிற்பங்களும் இருக்கு. கடைசி அடுக்கு வந்தவுடன் இருக்கும் கிணற்றுக்குக் கம்பிகளால் மூடிபோட்டு வச்சுருக்கு. அதுக்கு இடையில் சேர்ந்த குப்பை, மண் இவைகளை மூணு பணியாளர்கள் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. சின்னதா ஒரு வேக்குவம் க்ளீனர் இருந்தால் சுலபமா உறிஞ்சி எடுக்கலாம். ரெண்டு நாளைக்கொருமுறை சுத்தம் செய்யவேண்டி இருக்காம். சலிப்பு பேச்சிலும் முகத்திலும்.


இதைத்தாண்டியும் ஒரு சின்ன இடம் இருக்கேன்னு எட்டிப் பார்த்தால் அங்கேயும் ஒரு கிணறு இருக்கு. நீலத் தண்ணீரும், அதில் மிதக்கும் குப்பைகளுமா(-: என்ன பொறுப்புணர்வு இல்லாத மக்கள் பாருங்க! நான் மட்டும் இங்கே அதிகாரியா இருந்தால் எந்த விதமான தீனிகளும் உள்ளே கொண்டுபோக அனுமதி இல்லைன்னு கறாரா இருப்பேன். மிஞ்சிமிஞ்சிப்போனா அரைமணி நேரம் போதும் உள்ளே படிகளில் இறங்கிப் பார்த்துவர. அதுக்குள்ளே அங்கே போய் தின்னுதான் ஆகணுமா? சரி. தின்னதுதான் தின்னீங்க அதுக்காக அந்த பொருள் பொதிஞ்சுவந்த உறைகளை அங்கேயே போட்டுத்தான் ஆகணுமா? இவ்வளவு நேரம் அது உங்க பையில்தானே இருந்துச்சு. காலியானதும் மீண்டும் பையிலே வச்சுக் கொண்டுபோகவேண்டியதுதானே? குப்பைத்தொட்டியில் கொண்டு போட்டால் ஆகாதா? ப்ச்....என்னமோ போங்க(-:

இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை ஒட்டுனாப்பலெ ஒரு கோவில் இருக்கு. (கண்ணுக்கு உறுத்தலா இருந்ததுன்றது வேற) தாய் தகப்பனை மறந்துடாதேன்னு ஸ்ரவண், தன் பெற்றோர்களைக் காவடியில் கொண்டுபோகும் படம் ஒன்னு வெளிப்புறச் சுவரில். (இதேமாதிரி ஒன்னை இன்னொரு இடத்திலும் பார்த்தேன். வெளிநாடு, வெளியூர் வேலைகளுக்குப் போனவங்களுக்கு நினைவூட்டும் டெக்னிக்?) கோயில் இது சம்பந்தமானதோன்னு உள்ளே போனால்.... அது தேவி கோயில். அழகான கண்ணாடி வேலைப்பாடுகள். முன்மண்டபத்தின் ரெண்டு பக்கங்களிலும் சுவர் நிறைச்சு கண்ணாடி பதிச்ச ஓவியங்கள். கோவிலின் கதைகளைச் சொல்லுது. ஒரு அரசனுக்கு, அம்மன் தோன்றி வாழ்த்தி இருக்காங்க. சின்ன கண்ணாடி அலமாரியில் பளிங்கு அனுமார். காலின்கீழ் மனுஷி இல்லை!

வெளியில் இருக்கும் திறந்த மண்டபத்தில் அன்னாடக் கலெக்ஷனுக்காக ஒரு பண்டிட் தயார் செஞ்சுக்கிட்டு இருந்தார். கடவுளைக் குஷிப்படுத்தி மக்கள் (மனக்)குறை தீர்த்துவைப்பார் போல!

நெடுஞ்சாலை 41. மெஹ்ஸானா என்னும் ஊரை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கோம். சுங்கம் வசூலிச்சாங்க. அருமையான சாலை. போக ரெண்டு வர ரெண்டுன்னு நாலு லேன். நெடூக, நடுவிலே பூச்செடிகள் வரிசை. தண்ணீர் அவ்வளவாத் தேவைப்படாத வகைகள். போகன்வில்லா பலநிறங்களில் பூத்துக்குலுங்குது. இது இல்லாம இடது பக்கமும் வலது பக்கமும் சர்வீஸ் ரோடு போல அகலமா ஒன்னு. ரெண்டு சக்கரம், மூணு சக்கரமெல்லாம் அதுலே போகுது. இந்த ஏற்பாடு அருமையா இருக்கேன்னு நினைச்சேன். ஆபத்து இருக்காது. நெடுஞ்சாலையில் விர்ரிடும் வண்டிகள் அதுபாட்டுக்குப் போகலாம்.

குஜராத்தின் முதல் அம்யூஸ்மெண்ட் பார்க், வாட்டர் ஒர்ல்ட் ரிஸார்ட்டைக் கடந்தோம். எல்லாக் கேளிக்கைகளுக்கும் கேரண்டி என்றது போல ராட்சஸ ராட்டினமும், ரோலர்கோஸ்ட்டர் அமைப்பும் நிக்குது. நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது வந்து கொண்டிருக்கும் ஊர்களில் எல்லாம் திடுக் திடுக் என்று கோவில்களின் கோபுரங்கள். நம்ம பக்கம் இருப்பதுபோல் ஒற்றைக்கோபுரமா இல்லாமல் சின்னதும் பெருசுமா ஒரு கூட்டமா நிக்குது இங்கே.

மெஹ்ஸானா நகரம் நம்மைக் கைகூப்பி வரவேற்கிறது. அது கும்பிடுமுன்னே நாம் இடது பக்கம் திரும்பி இருக்கணும். நம்ம இலக்கு வேற! அங்கே போகும் வழியைத் தவறவிட்டுட்டோம். சரின்னு கும்பிட்ட கைகளை வலம்வந்து தவறவிட்ட பாதைக்குத் திரும்பினோம். (தவறவிட்டதுக்காக நாலைஞ்சுமுறை மன்னிப்பு கேட்டுக்கிட்டார் பப்பன்! இதெல்லாம் சகஜமப்பான்னு சொன்னோம்.)
இதுவரையில் நல்ல மனிதராகத்தான் இருக்கார் நம்ம(?) பப்பன்.


பயணம் தொடரும்..............:-)))))

பி.கு: படங்களை ஆல்பத்தில் போட்டுவைக்கவா?

Wednesday, January 20, 2010

சாந்தி நிலவ வேண்டும், ஆத்மசக்தி ஓங்க வேண்டும் உலகிலே..............(குஜராத் பயணத்தொடர் 4)

சபர்மதி நதிக்கரையில், அமைஞ்ச ஆசிரமத் தோட்டத்தில் அமைதியா உட்கார்ந்துருக்கார் காந்திஜி.. இங்கே நுழைஞ்சதும் வெளி உலகத்து ஓசைகள் எல்லாம் ஒடுங்கிப்போச்சு. சதுரவடிவ நாலுபுறமும் திறந்த மண்டபங்களில் சிலதை, ஒன்னோடொன்னு சேர்த்து அடுக்கிவச்சதுபோல் இடமும்வலதுமாகப் போகுது. அங்கங்கே காந்திஜியின் படங்கள், சரித்திர சம்பவங்கள், விளக்கங்கள்ன்னு இருக்கு. எங்கேயும் 'சைலன்ஸ் ப்ளீஸ் ஸைன் இல்லாமலேயே சைலன்ஸ் இயற்கையா அமைஞ்சுருக்கு. நமக்குமே குரலெடுத்துப் பேச ஒரு தயக்கம் வந்துருதுன்னா பாருங்க. அப்பா.....என்ன ஒரு அமைதி. அங்கங்கே சிலர் வாசிப்பும் எழுத்துமா இருந்தாங்க.

ஆற்றங்கரைக்குப் பக்கம் போனோம். தண்ணிக்குப் பக்கத்தில் போக ஒரு படித்துறையும் இருக்கு. குட்டியாச் சின்னதா ஒரு கோவில். உள்ளெ சிவன். சுத்தமாகப் பராமரிக்கும் தோட்டங்கள். மரத்தடியில் வச்சுருக்கும் தானியங்களையும் பழங்களையும் தின்னவரும் அணில், கிளி, புறா, குருவிகள். கிட்டே போனால் ஓடிருமோன்னு தூரக்க நின்னு நாலு க்ளிக்.
1917 இல் கட்டப்பட்டது. சத்யாகிரஹ ஆஸ்ரமம். உள்ளே நுழையும்போதே வரவேற்கும் அசோகமரம் 1963-இல் அப்போதையப் பிரதமர் நேரு நட்டதாம். அங்கிருந்தே ஆற்றங்கரை வரை நீண்டு போகும் இடத்தில்தான் கடவுள் வணக்கத்துக்கு எல்லோரும் கூடுவாங்களாம். நடுநடுவில் மரங்களோடு இதமா இருக்கு. ஒரு தினசரி நிகழ்ச்சியா இருக்கும்போல! ப்ரார்த்தனா பூமி. இந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு 'உபாசனா மந்திர்'ன்னு தகவல் பலகை சொல்லுது.

'ஹ்ருதயகுஞ்' என்ற பெயரில் காந்தியும் கஸ்தூர்பாவும் வசித்த வீடு. பெரிய அகலமான முன் வெராந்தா, ஒரு சின்ன ஹாலின் அளவுலே இருக்கு. நமக்கு இடதுபுறம் வெராந்தாவையொட்டிய அறை காந்திஜியின் தனியறை. கண் எதிரே ரெண்டு வாசல்கள். முதல் வாசல் வீட்டுக்குள்ளே போக. அதுக்கு வலப்பக்கம் உள்ளது. சமையல் அறைக்கானது. வீட்டுக்கு யார் வர்றாங்கன்னு சமைச்சுக்கிட்டே நோட்டம் விடலாம். அந்த வாசலுக்கு அருகிலே சுவர் ஓரமா ஒரு ராட்டையும், ஒரு சர்க்காவும். இந்தப் பக்கம் கணக்குப்பிள்ளை டெஸ்க். உக்கார்ந்து எழுத ஒரு மெத்தை இருக்கை.

வீட்டுக்குள்ளே போனால் 'ப'வடிவில் வெராந்தா. ஒரு படி இறங்கினால் திறந்த முற்றம். ஹைய்யோ..... இது நான் மனசுலே வச்சுருந்த இடம். முற்றத்தில் நின்னால் மூணுபுறமும் உள்ள வெராந்தா, திண்ணையாகிரும். ஆஹா...... முற்றத்தின் முடிவில் சின்னதா ஃபென்ஸ் உள்ள தோட்டக் கதவு.
இடது பக்கம் ரெண்டு அறைகள். முதல் அறைவாசி கஸ்தூர்பா. அதை அடுத்து உள்ளது விருந்தினருக்கு. வலது பக்கம் ஒரே ஒரு வாசல். அதுக்குள்ளே நுழைஞ்சால் சமையலறை. இந்த அறைக்குமட்டும் ரெண்டு வாசல். அதில் ஒன்று தெருவைப் பார்த்து. இந்த அறைக்குள்ளேயே ஒரு சின்ன அறை ஸ்டோர் ரூம். அடுப்புக்கு ஒரு சின்ன மேடை. அங்கே ஒரு ஜன்னல். வேர்க்காம சமைக்க நல்ல ஏற்பாடு. அதே சமயம் கொஞ்சம் வேடிக்கையும் பார்த்துக்கலாம்.. அலமாரிகளில் வீட்டம்மா பயன்படுத்திய சில பண்டபாத்திரங்கள் நம் பார்வைக்கு.

உள்வெராந்தா மூலையில் தானியங்களைக் குத்தும் உரல் குழி. தரையோடு தரையாக. சிம்பிள் லிவிங். அங்கே இருந்து வாழ்ந்து பார்த்தேன் மனக்கண்ணால். ஓடுகள் வழியாக மழைத்தண்ணீர் சரசரவென்று இறங்கி முற்றம் நனைக்கும் மழைக்காலம். லேசான குளிருக்கு இதமா, சூடான வறுத்த (காந்திஜிக்குப் பிடிச்ச) வேர்க்கடலையுடன் வெராந்தா மூலையில் ஒடுங்கி உக்கார்ந்து மழையை ரசிக்கிறேன். ஹைய்யோ!!!!

ஆசிரமவாசியாக ஒரு தன்னார்வலர் அங்கே இருந்தாங்க. பெயர் லதா. விருந்தினர் புத்தகத்தில் எழுதுவீர்களான்னு கேட்டாங்க. (பதிவு எழுதி நாளாச்சு பாருங்க) அந்த கணக்குப்பிள்ளை மேசை, உக்கார்ந்து எழுத ரொம்பவே வசதியா இருக்கு. சரசரன்னு அரைப்பக்கத்துக்கு எழுதிட்டொம்லெ:-) அங்கே இருந்த சர்க்காவில் நூற்கலாமான்னு கேட்டதுக்கு தாராளமான்னு பதில் வந்துச்சு.
இதையெல்லாம் பார்த்தே கனகாலமாச்சு. வருமோ வராதோன்னு ஒரு உதறலோடுதான் ஆரம்பிச்சேன். என்ன மாயம் பாருங்கள். அழகா மெலீசா நூல் சரசரன்னு பஞ்சில் இருந்து பிரியுது. என்னவோ தினமும் செய்யும் காரியம்போல நூற்றுக்கிட்டே போறேன். கோபாலுக்கு ஒரே ஆச்சரியம்! இதுக்குள்ளே பார்வையாளர்கள் கூட்டம் ஒன்னு வந்துருச்சு. அவுங்களுக்கும் இந்த நூல் விஷயம் ஆச்சரியமா இருக்காம். அதுலே ஒருத்தர் ஜப்பான்காரர். வெறும் பஞ்சில் இருந்து நூல் எப்படி வருதுன்னு நூறு கேள்வி. நம்மால் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியுதா? (ஆங்கிலம் அவுங்களுக்கு மட்டும்)

இது ரொம்பவே லாங் ப்ராஸஸ். முதலில் செடியில் இருந்து பருத்தியைப் பிரிச்செடுத்து நல்லா காயவைக்கணும். அதுலே ஒட்டி இருக்கும் தூசு தும்பையெல்லாம் சுத்தப்படுத்தினபிறகு, பருத்திக் கொட்டையைப் பிரிச்செடுக்கும் சின்ன கை மெஷீன் ஒன்னு இருக்கு, அதுக்கு ஜின்னிங் மெஷீன்னு பெயர்.(இன்றைய இளைஞர்கள், பாஸ்தா மேக்கரை நினைவுபடுத்திக்கலாம்) வலதுபக்கம் இருக்கும் பிடியைச் சுத்திக்கிட்டே அதுலே பூரிக்கட்டை மாதிரி இருக்கும் ரெண்டு சின்ன மர உருளைக்கு நடுவில் பருத்தியைச் செலுத்தணும். கொட்டையெல்லாம் பிரிஞ்சு இந்தப் பக்கம் விழுந்திரும்.

இப்ப, அந்தப் பஞ்சை ஒரு வில்லால் அடிக்கணும். தலையெல்லாம் பஞ்சுபஞ்சா ஆகிரும். தலையை ஒரு துணியால் மூடிக்கணும். காந்திக்குல்லாய் இருந்தாலும் போட்டுக்கலாம்:-) வில்? ஒரு சின்ன மூங்கில் பட்டையை எடுத்து அதன் ரெண்டு ஓரத்தையும் முறுக்கின கயிறால் இணைச்சுட்டால் ஆச்சு. பஞ்சைத் தொட்டாப்புலே மேலே இந்த வில்லின் நாண் படுமாறு வச்சு நாணை இழுத்து விட்டால் அது பஞ்சின்மேல் பட்டு, தெறிச்சு பஞ்சு, பஞ்சுபஞ்சா ஆகிரும். நல்லா அடிக்கணும்.

அப்புறம் பட்டை போடன்னு ஒரு கருவி இருக்கு. கருவின்னா சின்னதா ஒரு பலகையும், சொப் ஸ்டிக் போல ஒரு குச்சியும்தான். கூடவே கட்டிடவேலை செய்யும் கொத்தனார்கள் சமன்படுத்த வச்சுருப்பதைப்போல் ஒரு சின்னப் பலகை கைப்பிடியோடு இருக்கும் கொஞ்சம் பஞ்சை எடுத்து பலகையில் பரவினார்போல வச்சு, அந்தக் குச்சியை பஞ்சில் வச்சு இடதுகையால் ஒருமுனையைப் பிடிச்சுக்கிட்டு, கைப்பிடி உள்ள பலகையால் அதன்மீது உருட்டணும் நாலைஞ்சு வாட்டி உருட்டுனால் சின்ன குழல்போல வரும். குச்சியை உருவி எடுத்துறலாம். இதுக்குப் பெயர்தான் பட்டை (இது தமிழ்மணம் பட்டை அல்ல)

குழல்குழலாச் செஞ்சு ஒரு அட்டைப்பெட்டியிலோ அலங்காரமான நகைப்பெட்டியிலோகூட அடுக்கி வச்சுக்கலாம். பஞ்சு ப்ராஸஸிங் இதோடு முடியுது.

சர்க்காவில் ஸ்பிண்டிலை இணைச்சு, பட்டையில் இருந்து ஒரு முனையில் லேசாகக் கையால் இழுத்தால் வரும் நூலை ஸ்பிண்டிலில் சுத்திட்டு வலது கையால் சர்க்காவின் சக்கரத்தைச் சுத்திக்கிட்டே இடது கையால் பஞ்சை லேசாக கட்டைவிரலால் அழுத்திக்கிட்டே இழுத்துக்கொண்டு போனால் நூல் வந்துரும். (இவ்வளவு முடியாதுன்னா ஏற்கெனவே நூத்த நூலில் இருந்து ஒரு முழம் ஸ்பிண்டிலில் சுத்திக்கிட்டு வேலையை ஆரம்பிக்கலாம்) நமது இடதுகையை மேலே சுலபமாத் தூக்கும் அளவுக்கு நூலை இழுத்ததும், கையை அப்படியே வச்சுக்கிட்டு மூணு விநாடி, பஞ்சை இழுக்காமல் சர்க்காவை சுத்தணும். இது, நூல் கொஞ்சம் முறுக்கேறுவதற்கு.
அடுத்து ஸ்பிண்டிலை லேசா உள்டாவா சுத்தவைக்கணும். சர்க்காவின் பிடியை (அப்ரதட்ஷணமா) லேசா இடது பக்கம் கொண்டுவந்தாலே ஸ்பிண்டில் முனையில் இருந்து நூல் பிரியும். இப்போ இடக்கையை மடக்காமல் முன்னுக்குக் கொண்டுவந்து ஸ்பிண்டிலின் தலைப்பக்கத்துக்கு நேரா வச்சு சர்க்காவின் பிடியை வலப்பக்கம் மெதுவாச் சுத்துனால் நாம் நூத்த நூல் ஸ்பிண்டிலில் சேகரம் ஆகும். அரைமுழம் நூல் பாக்கி இருக்கும் வரை பார்த்துக்குங்க. இப்ப முதலில் சொன்னதுபோல வலதுகையால் ராட்டினத்தைச் சுத்திக்கிட்டே இடதுகையால் பஞ்சை இழுத்துக்கிட்டே போங்க.

சுற்றுலாவந்த மக்களுக்கு அருமையான டெமோ கிடைச்சதாம். ஏன் உங்களுக்கும்தானே? படிக்கும்போதுதான் இவ்வளோ வேலை இருப்பதுபோல் தோணுதே தவிர நூற்கும்போது ஒருவகை தியானம் மாதிரி பரபரன்னு இழுத்தலும் சுற்றலும் நடக்குது. ஒரு சர்க்கா (சின்ன ப்ரீஃப் கேஸ் மாதிரி) கிடைக்குது. ஒன்னு வாங்கிவந்துருக்கலாமோ! அடடா...விட்டுட்டேனே. போகட்டும், இங்கே காதி கிராம உத்யோகில் கிடைக்குதான்னு பார்க்கலாம். ரெடிமேட் பட்டைகளும்கூட கிடைக்கலாம். ' லோகமந்த்தா ஸ்பீட் காதா? .அன்னி ரெடிமேட்'

இத்தனையும் பார்த்து மெய் மறந்த கோபால் பயணிகளுக்கு எடுத்த வகுப்பை க்ளிக்காமக் கோட்டை விட்டுட்டார். நம்ம விளக்கத்தைக்கேட்டு லதா அப்படியே ஆடிப்போயிட்டாங்க போல! ரொம்ப மெலிசா நூற்கிறேன்னு பாராட்டுனாங்க. கித்து ஃபைன் ச்சே:-))))

வினோபாஜியும் அவர் மனைவியும் தங்குன ஒற்றை அறை வீடு ஒன்னு அங்கே இருக்கு. பூனாவில் இந்த சைஸ் வீடு ஒன்னில் நாங்க இருந்துருக்கோம். கொசுவத்தி ஏற்றுதுப்பா இங்கே பலவிஷயங்கள்.

படங்களைத் தனியாக ஆல்பத்தில் போட்டுருக்கேன் பாருங்க.

என்னவோ சொல்லத் தெரியாத மனநிறைவோடு அங்கிருந்து புறப்பட்டேன்.
என் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியுதுன்னு கோபால் சொன்னார். நானும் நம்பிட்டேன்:-))))



பயணம் தொடரும்..............:-)))))

Tuesday, January 19, 2010

எங்கெங்கும் காணினும்..........(குஜராத் பயணத்தொடர் 3)

இருட்டு மசமசன்னு வந்துருச்சு. ஆனாலும் காலம் பொன்போன்றது. இதைவிட்டாக் கிடைக்காதுன்னு இன்னொரு பழங்காலக்கோவிலுக்குப் போனோம். 1848இல் கட்டப்பட்ட ஹதீசிங் ஜெயின் மந்திர். அப்போ இதுக்கான செலவு பத்து லக்ஷம் ரூபாய்கள். ஹதீசிங் பெரிய செல்வந்தரா இருந்துருக்கார். தன்னுடைய இஷ்ட தெய்வமான தீர்த்தங்கரர் வரிசையில் பதினைஞ்சாவதா இருந்த தர்மநாதருக்கு இதை சமர்ப்பிச்சு இருக்கார்.
வளாகத்துக்குள் நுழைஞ்சதும் மகாவீரருக்கு ஒரு ஸ்தூபி இருக்கு. 78 அடி உசரம். பத்துப்படி ஏறிப்போனால் உள்ளே மகாவீரரின் பளிங்குச்சிலை. அங்கே ஒரு கும்பிடு போட்டுட்டு, வளாகத்தின் அடுத்தபகுதிக்குப் போனால் ப்ரமாண்டமான கிண்ணக்கோபுரங்களுடன் அட்டகாசமான ஒரு ரெண்டு நிலைக் கோவில். முன்மண்டபத்துலே பனிரெண்டு அலங்காரத்தூண்கள். இங்கேயும் தர்மநாதரைத் தரிசிச்சுட்டுக் கோவிலைச் சுற்றிப்பார்க்கப்போனால் 'ப' வடிவில் மூணு பக்கமும் நல்ல அகலமான வெராண்டாகள். தூண்வரிசைகள். சுவரை ஒட்டிய பக்கத்தில் அங்கங்கே சின்னச் சின்ன அலங்காரக்கதவுகளும், கதவுகளுக்கு உட்புறம் சமண தீர்த்தங்கரர்களில் ஒருவர் சிலையுமா மொத்தம் 52 பெரிய சிலைகளும், ஒவ்வொரு பெரிய சிலைக்கு ரெண்டு பக்கமும் குட்டிக்குட்டியாச் சில சிலைகளுமா இருக்கு. (குஜராத் முழுக்க இந்தப் பனிரெண்டும் அம்பத்திரெண்டும் எண்ணிக்கைகள் பல இடங்களில் இருக்கு. இதை அப்புறம் இந்தப் பயணத்துலேயே பார்க்கலாம்)

ஹத்தீசிங் ஜெயின் மந்திர்
வராந்தாவில் பார்த்தால்தான் கதவுகளும் சந்நிதியுமா தனித்தனியாத் தெரியுதே தவிர , ஒரு சந்நிதிக்குள்ளே நுழைஞ்சால் சுத்திவரப்போகும்படியான ஏற்பாடு. பூஜை செய்பவர் எதாவது ஒரு மூலையில் புகுந்தால் போதும். பூஜிச்சு முடிச்சு அடுத்த மூணாவது வராந்தா மூலைச்சந்நிதிவரை உள்ளேயே நடந்து வரலாம். இந்த வராந்தாவே அட்டகாசமான மேல்வளைவு அலங்காரங்களுடன் போய்க்கிட்டே இருக்கு. படம் எடுக்க இங்கே தடை(யாம்). விவரம் நம்ம காதில் விழறதுக்குள்ளே சிலதைத் தெரியாத்தனமாக் கிளிக்கிட்டோம்(:
தாய்லாந்து கோவிலின் புத்தர்சிலைகளைப்போல இங்கே எங்கெங்கு காணினும் தீர்த்தங்கரர்கள்தான்.

மூணு பக்கமும் இப்படி வெராந்தா
அஹமதாபாத் நகருக்குள்ளே நுழைய 12 வாசல்கள் இருக்குன்னு சொன்னேன் பாருங்க. அதுலே டெல்லி வாசலுக்கு அருகில் இந்தக் கோவில் இருக்கு. பகல் நேரத்தில் போயிருந்தால் கலையழகை இன்னும் நல்லாக் கவனிச்சு இருக்கலாம். கோவில் இருந்த தெருவில் எதிர்ப்பக்கமா நிறைய ட்ராவல் கம்பெனிகள் இருக்கு. பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும் கூட. நாளைமுதல் மற்ற இடங்களுக்குப் போக வண்டி ஒன்னு ஏற்பாடு செஞ்சுக்கணுமே. நம்ம கவலை நமக்கு. நாமாக ஒரு பயணத்திட்டம் போட்டு, அங்கங்கே தங்க ஹொட்டேல் புக் பண்ணி வச்சுருக்கோமே. விஷயத்தைக் கேட்ட மோஷின், அதெல்லாம் பஸ் டூர் ஏற்பாடு செய்யறவங்கன்னார். அப்போ எங்கியாவது நல்ல வண்டியும் ட்ரைவருமாக் கிடைக்குமான்னதும், அவுங்க ட்ராவல் கம்பெனியேகூட இருக்காம். முதலில் ட்ராவல் கம்பெனிக்குப் போய்ப் பார்க்கலாமுன்னு புறப்பட்டோம். வண்டியைவிட ட்ரைவர் அனுபவசாலியா இருக்கணுமே!

போகும் வழியிலேயே ராணி ரூப்மதி மஸ்ஜித் இருக்கேன்னு அங்கேயும் நுழைஞ்சோம். சுல்தான் மொஹ்முட் பெகாரா (Sultan Mehmud Beghara.) தன் இந்து மனைவியின் நினைவுக்காகக் கட்டியது. காலம் 1430 - 1440. இந்துக் கலைகளும் இஸ்லாமியக் கலைகளுமா இணைஞ்சு ஜொலிக்கும் 12 அலங்காரத்தூண்கள். அழகான தோட்டத்துக்குள்ளே அமைஞ்சுருக்கு. ஒருத்தர் மட்டும் தொழுகையில் இருந்தார். (யாரிடம் அனுமதி வாங்கணுமுன்னு தெரியலை. அதனால் நோ படம்)
கருப்புச்சட்டை மோஷீன் & வெள்ளைச்சட்டை (B)பப்பன்


இன்னொரு இன்னோவா வண்டியே கிடைச்சது. ட்ரைவர் பெயர் (B)பப்பன். சில வெள்ளைக்காரர்களை டூருக்கு அழைச்சுக்கிட்டுப் போனவர், முந்தாநாள்தான் திரும்பிவந்துருக்கார். அவர்கள் இவருக்குக் கொடுத்த பாராட்டுக் கடிதத்தைக் காமிச்சார். நேரம் தவறமாட்டாராம். ஒம்போது மணிக்கு வரச்சொன்னால் எட்டரைக்கே வந்துருவார்ன்னு மோஷின் சர்ட்டிஃபிகேட்வேற தந்தார். பார்த்தால் நல்ல மனுஷராத்தான் தெரிஞ்சார். இந்தப் பக்கம் வந்து நில்லுங்க, ஒரு படம் எடுக்கணுமுன்னதும், வாயைத் திறக்காம வந்து நின்னாங்க மோஷினும் பப்பனும். ட்ராவல்ஸ் முதலாளியுடன் பேசி ஒரு தொகைக்குச் சம்மதிச்சோம். அதே பரோடா ரேட் தான். ஆறுநாளைக்கு எடுத்தாச்சு. காலை ஒம்போது மணிக்கு வரச்சொல்லிட்டு மோஷினின் வண்டியில் கிளம்பிச் சாப்பிடப்போனோம். பகலில் சாப்பாடு சரியில்லை. நல்ல குஜராத்தி தாலிமீல்ஸ் வேணுமுன்னா அருமையான இடம் ஒன்னு இருக்குன்னு மோஷின் சொன்னார்.

இந்தத் தாலிக்கு நம்மபக்கம் என்னென்னவோ அர்த்தம் பண்ணிக்கிட்டுச் சில இடங்களில் 'தாளி' மீல்ஸ்ன்னு எழுதிவச்சுருப்பதைப் பார்த்திருக்கேன். தாலி என்றது தால் என்ற சொல்லில் இருந்து வந்துருக்கு. தால்= தட்டு. நாமும் தாலம் என்றால் தட்டுன்னுதானே தெரிஞ்சுவச்சுருக்கோம்.

கோபி டைனிங் ஹால். அட! நம்ம கோபி. சொல்லவேயில்லெ!!!! ஒரு பெரிய ஹாலில் வரிசையா நாற்காலிகளைப்போட்டு வச்சுருந்தாங்க. சுவர்களில் அருமையான துணி ஓவியங்கள்.(யானைகள் கூட இருக்கு) டிவி ஒன்னு ஓடிக்கிட்டே இருக்கு. மக்கள் சாவகாசமா உக்கார்ந்து அதுலே கண் நட்டு இருக்காங்க. இந்த ஹாலை அடுத்து ஒரு ஏஸி டைனிங் ஹால். பாரம்பரிய உடைகளில் பணியாட்கள்.

பெரிய துண்டங்களா வெட்டுன வெங்காயம், இதே போல வெட்டி வச்ச எலுமிச்சம்பழம், உப்பு, ஊறுகாய், இன்னும் என்னவோ பொடின்னு ஸ்டேண்டர்டு அயிட்டமா இந்தப் பக்கங்களில் கொண்டுவந்து முதலில் வைக்கறாங்க. கூடவே எண்ணெயில் வதக்குன முழு பச்சை மிளகாய்கள். அரிசி அப்பளம் வகைகள். தாகத்துக்குடிக்க மோர், பெரிய தட்டுகளில் அஞ்சாறு சின்னக் கிண்ணங்களில் கறிவகைகள், kadhiன்னு ஒருமோர்க்குழம்பு (இனிப்பு & காரமுன்னு ரெண்டு வகை.) டோக்ளா, சின்னதும் பெருசுமா பூரி வகைகள், பிஸ்கட் போல தடியா ஒரு சமாச்சாரம், ரோட்லி (சப்பாத்திதான்) கச்சோரி, வெள்ளைப்பூசணிக்காய்த் துண்டங்களை சக்கரைப்பாகில் ஊறவச்சு ஒன்னு இருக்கே அது (பெயர் மறந்து போச்சு!) இதுக்குப்பிறகு கிச்சடின்னு அரிசியும் பருப்புமாச் சேர்த்து வேகவச்சது. கடைசியா ஃபிர்னி ன்னு அரிசிமாவுப் பாயசம், கேரட் ஹல்வா. மீட்டா பான் (குல்கந்து வச்ச வெத்தலைபாக்கு பீடா (இன்னும் ஒன்னுரெண்டு விட்டுப்போயிருக்கு)
சமையல் பிரமாதமுன்னா அதைக் கொண்டுவந்து பரிமாறும்விதம் அதி சூப்பர். ஊட்டிவிடாத குறையா, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோன்னு சுடச்சுடக் கொண்டுவந்து......போதுமுன்னு சொன்னாலும் விடற எண்ணமே இல்லை அவுங்களுக்கு!

கடைசியா அவுங்க விஸிட்டர்ஸ் புத்தகம் கொண்டுவந்து நம்ம கருத்துக்களைப் பதியச் சொன்னாங்க. ஆஹா....அதெல்லாம் பின்னூட்டிட்டொம்லெ:-))


அறைக்கு வந்து சேர்ந்தோம். புது ஹோட்டேல். ஆறுமாசம்தான் ஆச்சாம். பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் எல்லாம் தரமானதா இருக்கு. காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் நமக்கு ரூம்வாடகையுடன் சேர்ந்தே இருக்கு. நாளைக்குக் கதையை நாளைக்குப் பார்க்கலாமுன்னு.......................


பயணம் தொடரும்..............:-)))))