Saturday, September 08, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 19

21/10
இன்னைக்கு யாருமே வேலைக்கு வரலே. எல்லாம் திருப்பதி அம்பட்ட(ன்)ர் கதைதான்! வெள்ளைக்காரன் என்னமோ ரொம்ப நியாயம்னு சொல்றோமே, இந்த ஆளுங்க போன ஜென்மத்துலே இந்தியாவுலெ பிறந்திருப்பாங்க போல!

22/10
இன்னைக்கு செங்கல் வைக்கறவுங்க வந்திருந்தாங்களாம். சாயந்திரம் வழக்கம் போலப் போனா ஒரு 'ஷாக்!'

'ஸிடி கவுன்சில் இன்ஸ்பெக்ஷன்' வந்துட்டு 'ஃபெயிலர் நோட்டீஸ் ஒட்டிட்டுப் போயிருக்காங்க! இன்ஸுலேஷன் சரியில்லையாம். அப்புறம் ஏதோ ஒரு போல்ட்டு(!) சரியில்லையாம்!


பில்டர்க்கு ஃபோன் அடிச்சா யாரும் எடுக்கலே. மெஸ்ஸேஜ் விட்டாச்சு. இந்த வாரம் லாங் வீக் எண்ட் வேற! என்ன நடக்குதுன்னு புரியலை!
அப்புறம் 'பில்டரே' ஃபோன் செஞ்சார். ஏற்கெனவே இன்ஸ்பெக்ஷன் வந்துட்டு பாஸ் ஆயிடுச்சாம். இப்ப இது என்ன இன்ஸ்பெக்ஷன்? எங்களையே கேக்கறார்.



மகள் கிட்டே சொல்லி மீதி இருக்கற பிங்க் பேட்ஸ் பையிலே போட்டு இங்கே நம்ம வீட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடு செஞ்சிருந்தோம். தேவைக்கும்
அதிகமா வாங்கி வச்சுருக்கார் க்ரேக். தேவை? அப்புறம் ஒரு பாட்டம் அழறேன் இதைப் பத்தி...................

இப்ப பேட்ஸ் மூட்டையை எடுக்க வேணாம். இன்ஸுலேஷன் மறுபடி போடணும்ன்னா அது வேணுமே! மகளுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லியாச்சு. இந்த 'வீடு' வேலைகளில் மாட்டிக்கிட்டதாலே இந்த வருஷம் கொலு ரொம்ப சிம்பிளா வச்சாச்சு ( இல்லேன்னா மட்டும்? ) நாளைக்கு 'விஜய தசமிக்கு'ச் சின்னப் பூஜை அங்கே செய்யலாம்ன்னு இருக்கோம். பூஜைக்கு வரமாட்டேன்னு மகள் சொல்லிட்டா!


23/10
மத்தியானம் போய் 'விஷ்ணு சஹஸ்ரநாமம்' மட்டும் சொல்லி பூஜையை முடிச்சோம். பிரசாதம்? இருக்கவே இருக்கு நமக்கு ஆகிவந்த கேசரி.




24/10
எங்கெங்கே என்ன கலர்ன்னு முடிவு செஞ்சோம். அதுக்கே 2 மணி நேரமாயிருச்சு! கலர்ஸ் கைடு, இன்னும் கலர்ச்சார்ட்ன்னு பெயிண்ட் கடை, பில்டிங் சாமான்கள் விற்கும் கடை, ஹார்டுவேர் ஸ்டோர்ஸ்ன்னு பல இடங்களில் வகைவகையான விளம்பரங்கள் கொட்டிக்கிடக்கு. என்ன தரத்தில் வேணும், வாஷபிள் பெயிண்ட்டா, வெளிப்புறத்துக்கா,உள்ப்புறத்துக்கா, மரத்துக்கா, சுவத்துக்கா, வெயில் வரும் இடமா, வராத இடமான்னு நூறு கேள்விகள். நிதானமாஒவ்வொண்ணும் கவனிக்கணும். கண்ணுக்கு உறுத்தல் இல்லாத நிறம் முக்கியம். அந்த நிறத்துக்கு ஏத்தமாதிரி,திரைச்சீலை, கார்பெட் இத்தியாதிகள் வாங்கணும். நம்ம வீட்டுலே ஜன்னல்கள் ஃப்ரேம் எல்லாம் நியூ டெனிம் ப்ளூ போட்டாச்சு. இப்ப இதுக்குப் பொருத்தமா மத்தது இருக்கணும்.


இப்ப இருக்கும் பழைய வீட்டை அஞ்சு வருசத்துக்கு முன் புதுப்பிச்சப்ப, வீட்டுக்குள்ளெ இருந்த 'ஹானஸ்டி' கலரை மாத்தினோம். இந்த வீடு வாங்குனப்ப இருந்தக் கலரைப் பார்த்திருந்தால் நீங்க பயந்து நடுங்கி இருப்பீங்க. 'டார்க் ஆலிவ் க்ரீன்' அடிச்சு வச்சுருந்தாங்க. ஒரே இருட்டா இருக்கும். நாலுமாசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்துட்டு, இந்த ஹானஸ்டிக்கு மாத்துனோம்.அப்பெல்லாம் காசு கொடுத்து ஆள் வைக்க முடியாத நிலை. நாங்களே பெயிண்ட் அடிச்சோம். முன் அனுபவமுன்னு ஒண்ணுமே இல்லைதானே? ஒரு நாள் வேலையை நாலு நாள் செய்யறது என்னும் கணக்கில் போச்சு. மூணு கோட்டிங் அடிக்கவேண்டியதாப் போச்சு, அந்த்ப் பச்சையை மறைக்க. பெயிண்ட் அடிக்கத் தெரியாததால், நல்லா வராத இடங்களில் ரோலரைக் குறை சொல்லிக்கிட்டு, வெவ்வேற ரோலர்களை வாங்கியே கொஞ்சம் ரோலர் விற்பனையை ஏத்தினோம். ஆடமாட்டாதவ கூடம் கோணல்ன்னு சொன்னாளாம்....................


அடுத்த பத்துவருசத்துலே பெயிண்ட் அடிக்கறதுலே கைதேர்ந்தவங்களா ஆனது தனிக்கதை. ஹான்ஸ்டியை மாத்துனது வீடு ரினொவேஷன் செஞ்சப்ப. அப்ப Highland morning கலர் சுவத்துக்கு, Maffra Green கலர் கார்னீஸ். sage brush கலர் ஸ்கிட்(skirt/skit?) போர்டுக்கும் அடிச்சோம். கண்ணுக்கு இதமா இருப்பதா ஒரு உணர்வு. அதனால் இந்த வீட்டுக்கும் இதுவேதான்னு முடிவு ஏற்கெனவே மனசுலே ஒருபக்கம் இருந்துச்சு. இங்கே ஃபீச்சர் வால் ஒண்ணு வருதே. அதுவுமில்லாம மற்ற ரெண்டு படுக்கை அறைகளில் க்ரீம் மேங்கோ கலர், மாஸ்டர் பெட்ரூமுக்கு இளநீலம், அங்கே ஃபீச்சர் வாலுக்குக் கருநீலம். பொதுவா இங்கே சீலிங் மட்டும் வெள்ளையாவே விட்டுரும் வழக்கம் இருக்கு. அதையும் மாத்தி, எங்கே எந்த நிறம் அடிக்குறோமோ, அங்கே இருக்கும் ஸிலிங் அதே நிறத்தில் ஒரு ஷேடு கம்மியா இருக்கறதாப் போட்டுக்கணுமுன்னு முடிவு. லிவிங் ஏரியாவில் வரும் ஃபீச்சர் வால் கத்தரிக்காய்க் கலர்:-)



அப்படியே லாண்டரி சிங்க் பார்த்துட்டு வந்தோம்.இங்கே ஹோம் ஐடியாஸ்ன்னு ஒரு ஷோரூம் இருக்கு. பாத்ரூம், கிச்சன், வெளி & உள்ப்புற அலங்காரமுன்னு எல்லா விஷயத்துக்கும் அந்தந்த நிறுவனத்தைச் சேர்ந்தவங்க அவுங்க பொருட்களை டிஸ்ப்ளே பண்ணி வச்சுருக்காங்க.எல்லாத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்துருக்கு. இந்தக் கட்டிடத்துக்குள்ளெ நுழைஞ்சவுடன், வரவேற்பில் இருக்கும் நபர் நம் கையில் ஒரு பென்சிலும், ஒரு படிவமும் தருவாங்க. நமக்கு எந்தெந்தப் பொருட்கள் விவரம் தெரியணுமோ,அந்த நம்பர்களை எழுதிக்கிட்டு வந்து அவுங்ககிட்டே கொடுத்துட்டாப் போதும். சம்பந்தப்பட்டப் பொருட்களின் ஏஜெண்டுகள் நம்மோடு தொலைபேசி மேல்விவரமெல்லாம் தருவாங்க. வீட்டுக்கு வந்து பார்த்து விவரம் சொல்றொமுன்னும் சொல்வாங்க. எல்லாம் நோ ஆப்ளிகேஷந்தான். இதுவரை ஒரு அம்பது அறுபது தடவை இங்கே வந்து பார்த்தாச்சு. பிடிச்சது நாலு தேர்ந்தெடுத்து விலையெல்லாம் நம்ம பட்ஜெட்டுக்குள்ளே வர்றதா வாங்கிக்கலாம்.


25/10
ஃபார்மர்ஸ் கடையிலெ சேல் இருக்குன்னு 'டிஷ் வாஷர்' வாங்கப் போனா ஃப்ரிட்ஜ் நல்ல டீல் இருந்துச்சு. அதுக்கு 600$ கழிவு! அதுக்குக் காசு கட்டிட்டு, டிஸம்பர் மாதம் டெலிவரி கொடுக்கச் சொல்லிட்டோம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃப்ரிட்ஜ் வாங்கலாமுன்னுதான் நினைச்சது. ஆனா இப்ப இங்கே இருடியம் கலர் (Iridium embossed stainless steel exterior )வந்துக்கிட்டு இருக்கு. நம்ம கையில் இருக்கும் எண்ணெய்ப் பசையெல்லாம் (fingermarks)அதுலே ஒட்டாதாம். என்னதான் பொழுதன்னிக்கும் கை கழுவிக்கிட்டே இருந்தாலும் ஃப்ரிட்ஜ், லைட் ஸ்விட்ச் எல்லாம் நம்ம கை பட்டே அதைச் சுத்தி ஒரு பிசுக் வந்துருதில்லையா? ஒரு ஆங்கிளில் பார்த்தா, இது பளிச்சுன்னு தெரியும். 'சோம்பேறிக்கு இப்ப வாழைப்பழத்தை உரிச்சுத் தரேன்'னு சொல்றப்ப வேணாமுன்னு இருக்கலாமா?



'டிஷ் வாஷர்' சேல் இப்பச் சரியில்லையாம். இன்னையோடு இந்த டீல் முடியுது. நாளைக்கு வேற புது சேல். கொஞ்சம் மலிவா வருமாம். அந்த டீல் ரெண்டு வாரம் வரை இருக்கும்னு அங்கே சேல்ஸில் இருந்தவர் சொன்னார்.அது பாக்கணும். புது சேல் வருதுன்னு தெரியாம வாங்கிட்டாலும் பெரிய பிரச்சனை இல்லை. மறு வாரத்துக்குள்ளே புது சேல் வந்துருச்சுன்னா, நாம வாங்குனதைத் திருப்பிக் கொடுத்துத் திரும்ப வாங்கிக்கலாம். Buy back:-)


26/10
இன்னைக்கு முன் வாசக் கதவுக்கு க்ளாஸ் டிஸைன் முடிவு பண்ண 'லெட் லைட் கம்பெனி பேட் (patrishia)' நம்ம ஸைட்டுக்கு வரேன்னதாலெ பகல்1.30 மணிக்குப் போனா,
'ப்ரிக் ஆளுங்க லவுஞ்சிலே உக்காந்து லஞ்ச் சாப்புடறாங்க. ரெண்டு மூணுநாளா இங்கே பழம் தோலு, தின்னது மிச்சம்ன்னு குப்பை போட்டுட்டு போற ஆளுங்க இவுங்கதான்னு தெரிஞ்சது. இந்தக் கூட்டத்துலெ 'க்ளிண்டன்' ஒரு சேர்லே உக்காந்துகிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். கண்ணை மூடித் தவம் இருக்கறமாதிரி போஸ் குடுக்கறான். கையிலெ பாதி கடிச்ச சாண்ட்விச். ரேடியோல பாட்டு சத்தமா முழங்கிகிட்டு இருக்கு. ஆமாம்......... இவனுக்கு ஏது நாற்காலி?

வீட்டுலே இருந்து கொண்டு வந்துருக்கானாம்!

தொடரும்.....................

Wednesday, September 05, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 18

17/10
ஒரு 10 மணிக்குப் போனோம். நம்ம ' (skip) ரப்பிஷ் பின்'னுக்குள்ளே ஒரு ஆள் அவரோட 'ட்ரையிலர்'லே இருக்கற குப்பையை யெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கார்! யாருன்னு கேட்டா, அவர்தான் திங்கட்கிழமை செங்கல் வைக்கப் போறவறாம்! எங்கேயோ இருக்கற குப்பையைக் கொண்டுவந்து நம்ம தொட்டியிலே போடறார். கண்டிக்க முடியாத நிலமை! அவர் தயவு வேணுமே. அவர்தானே செங்கல் வைக்கப்போறவர்! வாயைக் கஷ்டப்பட்டு மூடிக்கிட்டு இருந்தோம்! ரெண்டு நாளைக்கு ஒரு முறை இந்த ஸ்கிப் கொண்டுவந்து வச்சு, இங்கே வேலை நடக்கும்போது வரும் குப்பைகளை வாரிக்கிட்டு போற ஏற்பாடு. இதுக்கு பயங்கரக் காசு வேற. சிட்டிக் கவுன்ஸில் குப்பையில் இதைச் சேர்க்க முடியாது. ரொம்ப தூரம் கொண்டுபோய் அதுக்குன்னு இருக்கும் இடத்தில் டம்ப் செய்யணுமாம். இந்த செலவெல்லாம் நாம்தானே செய்யணும்? வீடு நம்மதாச்சே.


18/10
வரப்போகுதுன்னு சொன்ன செங்கல்லும் வரலே கருங்கல்லும் வரலே. நம்ம எலெக்ட்ரீஷியந்தான் ரொம்ப 'சின்சியரா' வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. பசங்க 'பிங்க் பேட்ஸ் Pink Batts' போட்டுக்கிட்டு இருக்குங்க! கருப்பு பேட்ஸ்ம் போட்டிருக்கு. இது சத்தத்தைக் கட்டுப் படுத்தறதுக்கு! இதை, குளியலறைக்கு ரெண்டு பக்கமும் இருக்கற அறைகளிலேயும் போடணும். அப்பத்தான் அங்கே தங்கறவங்களுக்குத் தண்ணீர் சத்தம் கேக்காது! நம்ம லிவிங் ஏரியாவிலிருந்து மற்ற ரெண்டு படுக்கை அறையைப் பிரிக்கும் சுவருக்கும் இந்தக் கறுப்புபேட்ஸ் போடறோம். இங்கே இருக்கும் டிவி சத்தம் அங்கே தூங்கறவங்களுக்குக் கேக்கக்கூடாது.



இந்தப் 'பிங் பேட்ஸ்'ன்றது பார்க்கறதுக்குப் பஞ்சுமிட்டாய் கலரில் அச்சுஅசலாய் அப்படியே பஞ்சுமிட்டாய் போலவே இருக்கு. இதுலே 80% கண்ணாடி இழைகள். மறுசுழற்சிக்குப்போற கண்ணாடிகளில் இருந்து செய்யறாங்க. இது குளிர்காலத்தில் சூட்டைத் தக்க வைக்கும். வெயில் காலத்தில் வீட்டின் உள்புறத்தைக் குளிர்ச்சியா வச்சிருக்குமாம். நியூஸியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இதை அனுமதிச்சிருக்கு.(Pink Batts Ultra thermal insulation is made from up to 80% recycled glass and is the only insulation in New Zealand to receive the “Big Tick” from Environmental Choice New Zealand) இது இப்ப ஒரு ரெண்டுமூணு வருசமாத்தான் இங்கே பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. நம்ம பழைய வீட்டில் இது கிடையாது. அங்கே நாங்க வீட்டைப் புதுப்பிச்சப்ப, மேலே சீலிங்குக்கு மட்டும் போட்டோம்.







சாயங்காலம் நம்ம கிச்சன் கிங் வந்து 'லாண்டரி டிஸைன்' காமிச்சு அதுக்கு 'பேரம்' பேசிட்டுப் போனார். நுழையறப்பயே சொல்லிட்டார் இதுலே ஒண்ணும் குறைக்கவே முடியாது, 1700 டாலர்தான். சரின்னு சொல்லிட்டு நாங்க அதை 1550 ஆக ஆக்கினோம்:-) ஊஞ்சப் பலகையும், இதுவும் சேர்த்து 2100 முடிவாச்சு!

19/10
காலையிலேயே இவர் போய் முன்வாசக் கதவுக்குள்ள பூட்டு, கைப்பிடி கொண்டுவந்தார். நாம இதையெல்லாம் ஆர்டர் கொடுத்தது 'நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ்' கடையிலே. இவர் கொண்டு வந்தது ( அவுங்க கொடுத்தது) பாக்கறதுக்கே நல்லா இல்லே. இவ்வளவு செலவு செஞ்சு கட்டற வீட்டுக்கு முன்கதவுலே பொருத்தறதுக்கு ஒரு அழகு வேண்டாமா? உடனே ·போன் செஞ்சு, 'எனக்குப் பிடிக்கலே. நேரிலே மத்தியானம் வரேன்'ன்னு சொன்னேன்.

மத்தியானம் லைப்ரரி ட்யூட்டி முடிச்ச பிறகு, போனோம். நாம கேக்கற கலருலே (Iridium) இல்லையாம். சரின்னு, தங்க நிறத்துலே ( பித்தளைதான்! ஆனா கருக்காம இருக்குமாம், ஆயுள்காலம் வரை! யாருடைய ஆயுள்காலம்ன்னு தெரியலை?) தேர்ந்தெடுத்தோம். அதுக்கு 'மேட்ச்சிங்'காக ஸ்டடி ரூமுக்கும் எடுத்தோம். தங்கமாச்சே. எல்லா இடத்துக்கும் பொருந்துமே என்ற எண்ணம்தான்!

மத்தியானம் 1.30க்கு குளியலறைச் சுவத்துலே 'டைல்ஸ்' பதிக்கறவர் வந்து பாக்கிறேன்னு சொல்லியிருந்தார். வந்தார். எல்லாத்தையும் பார்த்துட்டு,அளந்து என்ன செலவு ஆகும்ன்னு சொல்வார்.


இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவராம்! நம்ம பேங்க்லே இருக்கற ஒருத்தரோட கணவர். அவர்கிட்டே எங்கே இதெல்லாம் செய்யப் படிச்சாருன்னு கேட்டோம்.
எனக்கு ஒரு தோணல் என்னன்னா, ஈரான் நாட்டு ஆளுங்க தானே நம்ம 'தாஜ்மஹால்' கட்ட வேலை செஞ்சாங்க. எத்தனை அருமையான கட்டிட வேலைப்பாடுகள் உள்ள 'மசூதிகள்' பார்த்திருக்கோம். இந்த கல் பதிக்கற வேலைகளிலே இவுங்க கில்லாடிகளாச்சே!


இவருடைய முன்னோர்கள் யாரோதான் 'தாஜ்மஹால்' கட்டறப்ப வேலை செஞ்சார்' அப்படின்னு சொல்வார்ன்ற நப்பாசைதான்:-)


இங்கே நியூஸிலாந்துலேதான் இந்த வேலைக்குப் படிச்சாராம்! இதுக்கு முன்னாலே ஈரான்லே என்ன தொழில் செஞ்சாருன்னு கேட்டேன். தங்கநகைக் கடை வச்சிருந்தாராம்! துபாய்லேயும் 10 வருசம் நகைக்கடைத் தொழில் தானாம்.

பொன்னைக் கையாண்டவர் இப்ப டைல்ஸ் கையாள்கிறார்! தங்கக் கை! என்ன கூலி சொல்றாருன்னு பார்க்கலாம்!


வீட்டு முகப்புலே வர்ற வளைவு வேலை நடக்குது. ப்ளைபோர்டுலே வளைச்சுப் பாத்தாங்களாம். வளைவு சரியா வராம உடையுதாம்!இதெல்லாமே மொத மொத நம்ம வீட்டுலெதான் வேலை செஞ்சு கத்துக்கறாங்க! இதுவரை இப்படி யாருமே இந்த டிஸைனு எல்லாம் போடலையாமே! இந்தியர்களுக்கு முதல்முதலா வீடு கட்டறாங்களாம்.

அப்படியே அங்கேயிருந்து 'ஹேக்ளி அலுமினியம்' போனோம். சாமியறைக்குக் கதவு போடறதுலே ஒரு ப்ரச்சனை இருக்கு! முதல்லே.......... போடணுமா வேண்டாமான்னே விவாதம்! எனக்குப் போடணும். 'காசு குடுக்கற மவராசனுக்கு' வேணாமாம்!

என் கட்சியை விலாவரியா எடுத்துச் சொல்லி ( காதுலே விழுந்ததான்னே தெரியாது!) போடணும்னு 'முடிவு' செஞ்( சேன்)சோம்!


மேலே மட்டும் கண்ணாடி, கீழே மரம் என்று சொல்லி ஒரு பை ஃபோல்ட் எட்டுப் பகுதி போட, விலை சொல்றேன்னு சொல்லியிருக்காரு 'ப்ரெண்டன்'. நாலு மீட்டர் நீளம். அரை மீட்டர் அகலமா எட்டு மடிப்பு வரணும்.


சாயந்திரம் பெயிண்டர் வரேன்னு சொன்னதாலெ நான் அங்கே 5 மணிக்குப் போனேன். அஞ்சேகாலுக்கு இவரும் வந்தார். ஆனா பெயிண்டர்தான் வரலே. அவுங்க வீட்டுக்கு ஃபோன் செஞ்சு விஷயத்தைச் சொல்லிட்டு அஞ்சரைவரை காத்திருந்துட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.


எனக்கு ஒரே கவலையா இருக்கு, இந்த புது வீட்டிலே 'வெயில்' சரியா வரலையேன்னு! இதுவரை ஒரு நாளின் பலநேரங்களில் போய்ப் பார்த்துட்டேன். சாயங்காலம் வெயிலு வீட்டுக்கு முன்னாலே இருக்கற ஃபோயர் பகுதிக்கு வருது. வீட்டுக்குள்ளே 'நோ வே' (-:


ஆறரைக்கு ஃபோன் வருது, அவரு மறந்துட்டாராம்! மன்னிப்பு கேட்டுகிட்டார்! இப்ப ஏழு மணிக்கு வரேன்னு சொன்னதாலே மறுபடி போனோம். வந்தார். எல்லாம் சுத்திப் பார்த்தார். கொஞ்சம் நடுவயது ஆள். பொறுப்பா செய்வாருன்னு நினைக்கிறேன்.கோபால் அவர்கிட்டேயும் ஒரு 'ப்ளான்' கொடுத்தார். இதுவரைக்கும் நம்ம வீட்டு 'ப்ளான்' கிடைக்காத ஆளுங்களை விரல்விட்டு எண்ணிரலாம்!


இந்த வாரம் இங்கத்து பிரதம மந்திரி இந்தியா விஸிட் போயிருக்காங்க! மொதல்லேயே தெரிஞ்சிருந்தா, நம்ம வீட்டுப் ப்ளானை ச்சும்மா ஒரு பில்லியன் ப்ரிண்ட் எடுத்து, இந்தியாவுலே எல்லோருக்கும் விநியோகம் செஞ்சிருக்கலாம்! நல்ல சான்ஸைக் கோட்டை விட்டுட்டோம்! :-)

'மிட்லேண்ட் ப்ரிக்' செங்கல்லுங்க வந்து இறங்கியிருக்கு. நடுவுலே ஓட்டை ( வெற்றிடம்) உள்ள பெரிய கல்லுங்க. ஒரு பெரீஈஈஈஈய்ய்ய'ட்ரக்' லே வந்து இறங்கியதாம். இவரு சொன்னாரு!


20/10
இன்னைக்கு 'ஹீட் பம்ப்' போடறதுக்கு பைப் லைன் போட ஆளுங்க வராங்க! அஞ்சாறு 'ப்ரிக் லேயர்'ங்க வந்தாங்களாம்!வேலை பரபரன்னு நடக்குதுன்னு இவர் வந்து சொன்னாரு.




சாயந்திரம் போனா, சில இடத்துலெ ரெண்டு மீட்டர் உயரத்துக்கும், சில இடங்களிலெ அதுக்கும் கூடுதலாவும் செங்கல்லை வச்சுப் பூசியிருக்காங்க!இந்த வேகத்துலெ போனா 3 நாளுலே முடிஞ்சிரும்னு நினைக்கிறேன். நம்ம பில்டரும் கராஜ்க்கு மேல வர்ற வளைவை செஞ்சுகிட்டு இருக்கார்.


கீழே உள்ள படம் கேவிட்டி ஸ்லைடிங் கதவு. நம்ம கொத்ஸ்க்கான ஸ்பெஷல்:-)


தொடரும்.......................


Monday, September 03, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 17

12/10
இன்னைக்குப் போயி அடுக்களை கேபினெட்க்கு கைப்பிடியெல்லாம் முடிவு செஞ்சாச்சு. பார்க்க ரொம்ப ப்ளெயினா, லேசா ஒரு கர்வ் இருக்கும் கைப்பிடிகள். அழுக்கு சேராது. துடைக்கறதும் சுலபம். அந்தக் கடை இருக்கறதே நமக்குத் தெரியாது! 'கிங்'தான் கூட்டிட்டுப் போனார். விதவிதமான நல்ல சாமான்கள் அங்கே இருக்கு!

பூட்டுகள் தயார்ன்னு ·போன் வந்ததாம். இவர் போய் வாங்கிகிட்டு வந்தார். அந்தம்மா 'தப்புத்தப்பா'க் கொடுத்திருக்காங்க. அதை திருப்பிட்டு வந்தோம். நல்லது வந்ததும் ஃபோன் பண்ணுவாங்களாம்! இவங்க வேற, ஏதாவது கொஞ்சம் மாத்தணும்னு சொன்னாலும் பயந்திருவாங்க!


எலக்ட்ரீஷியன் தான் பொறுப்பா வேலை செஞ்சுகிட்டு இருக்கார். இன்னும் கொஞ்சம் ஒயர் வேணுமாம். வாங்கிக் கொடுத்தாச்சு!



கதவுங்க எல்லாம் 'ஹேக்ளி'யிலேயிருந்து வந்திருச்சாம். பாத்தோம். நல்லாதான் செஞ்சிருக்காங்க. நிலைப்படியோடவே வருது! கொஞ்சம் வேலை தெரிஞ்சிருந்தா, நாம வீடு கட்டறது இங்கே சுலபம்தான்:-) அதுக்குள்ளே சில கதவைப் போட்டுட்டேன்னு பெருமையாச் சொல்லிக்கிட்டுக் கூட்டிட்டுப்போய் காமிச்சார் க்ரேக். எனக்கு ரெண்டு கைகள் போதுமா, தலையில் அடிச்சுக்க? பாருங்க, கண்ணாடிக் கதவை ரெண்டு 'பெட் ரூமுக்கு' போட்டு வச்சிருக்காரு! யாராவது, கண்ணாடிக் கதவைப் படுக்கை அறைக்குப் போடுவாங்களா? இங்கே என்ன லைவ் ஷோவா நடக்குது? :-) இந்தச் சின்ன விஷயம் கூடவா மனசுக்குத் தெரியாது? அசடு வழியறார் க்ரேக்:-)






'க்ளிண்டன்' அவனோட 'முதல் கதவு' போட்டுட்டானாம். சந்தோஷமா இருந்தான். அந்தக் கதவுகூட அவனை ஒரு ·போட்டோ எடுத்தேன். சின்னப் பையந்தானே! 17 வயசுதான். தொழில் படிப்புன்னு நம்ம வீட்டுலே அவன் 'வேலை கத்துக்கறான்.' இது பாத்ரூம் கதவு. நல்லவேளை இதையும் ஸீ த்ரூவா போடலை:-)




சாயந்திரம் போனப்ப எல்லாக் கதவுகளும் போட்டிருந்தாங்க. ஆனா, கேவிட்டி ஸ்லைடர்' கதவுகளையேக் காணோம். அப்புறம் 'பில்டருக்கு' ஃபோன் செஞ்சு மெஸ்ஸேஜ் விட்டிருக்கு!

கோட் கப்போர்டுக்கு ஒரு இடத்துலே 'பை ஃபோல்ட்' சொல்லிட்டு, இங்கே ஏற்கனவே ஆர்டர் செஞ்சதை கேன்ஸல் செய்யலே. இப்பப் பார்த்தா இது வந்திருக்கு! உடனே இன்னொரு இடத்துலே செய்யச் சொன்ன ரெண்டு கதவுலே ( பை·போல்ட்) ஒண்ணைக் கேன்ஸல் செஞ்சோம்!

13/10
இன்னைக்கும் எலக்ட்ரீஷியன் தான் வேலை செய்யறார். இன்னும் ஒயர் வேணுமாம். வலைப்பின்னல் மாதிரி ஒயருங்க கண்டமேனிக்கு இழுத்துருக்கு. இதுலே வீடு முழுக்க பாட்டு கேக்கலாமுன்ற ஆசையில் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர்ன்னு வேற ஏற்பாடு. இப்பவே ஒயர் இழுத்து வச்சுட்டா, வேணுங்கறபோது சுலபமாப் போட்டுக்கலாமாம். எல்லா அறைகளிலும் ரெவ்வெண்டு டெலிபோன் ஜாக், டிவி ஆண்டெனா, நாலு சுவத்துக்கும் ப்ளக் பாய்ண்ட்ஸ்ன்னு களேபரமா இருக்கு. மத்தியானம் மூணேமுக்காலுக்கு ஜன்னல் வருதாம். நான் போகணும்! ஒரு நாலேமுக்காலுக்குப் போனா, ஜன்னல் வந்து அதை சரியான இடத்தில் வச்சிருந்தாங்க! வாசக்கதவும் வந்து அதையும் பொருத்தியாச்சு.ஆனா, ஜன்னலுங்க எல்லாம் தப்பான டிசைன்!




ஒரு படுக்கை அறையோட ஜன்னல், முதல்லே பெருசா செஞ்சுட்டு திருப்பி எடுத்துகிட்டுப் போனது வந்திருச்சு, ஆனா அதையும் சரியாச் செய்யலெ! எத்தனைதடவைதான் திருப்பித் திருப்பி எடுத்துகிட்டுப் போவாங்களோ?
நாளைக்கு காலையிலே 11 மணிக்கு வராங்களாம். தப்பான ஜன்னலுங்களை என்ன செய்யலாம்னு யோசிக்கறதுக்கு! இந்தக் கம்பெனியைப் பத்தி ஒரு தகவல் இப்ப சொல்லப்போறேன் உங்களுக்கு.



இந்தக் கம்பெனிக்கு முதல் முதல்லே போனப்ப, நமக்குக் கொடேஷன் கொடுத்து நம்ம வேலைக்குப் பொறுப்பு எடுத்துக்கிட்டார் ஒருத்தர். தேவைக்கு ஆறுவாரம் இருக்கும்போது ரிமைண்டர் கொடுக்கலாமுன்னு இருந்தோம். இதுக்கு அடுத்தவாரமே இந்தக் கம்பெனியை மூடப்போறாங்கன்னு பேப்பரில் செய்தி வந்துச்சு. சரி, அப்ப இன்னொரு இடத்துலே கொடேஷன் வாங்கலாமுன்னு இருந்தோம். அப்ப இந்தப் பொண்ணு 'லிஸா', ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வந்து, 'எங்கப்பாவோட கம்பெனிதான் இது. பார்ட்னர்ஸ் கூடத் தகராறு ஆகிப் போய்த்தான் மூடும்படியான நிலை வந்துருச்சு. இப்ப தகராறை ஒருமாதிரி சரி செஞ்சுட்டோம். இனிமே நாந்தான் இந்த பிஸினெஸைப் பார்த்துக்கப் போறேன். நான் பொறுப்பு எடுத்துக்கிட்டதும் செய்யப்போற முதல் வேலை உங்களுதுதான். எனக்கு நீங்க சப்போர்ட் செய்யுங்க. நல்லபடியா ஜன்னல்களைச் செஞ்சுதரேன்'னு சொன்னாங்க. எங்க வேலைப் பொறுப்பை ஏத்துக்கிட்டவர் இப்ப வேலையை விட்டுட்டுப் போயிட்டாராம். அவுங்கத் தொழிற்சாலைக்கு நேர் எதிரா இருக்கும் இன்னொரு இடத்துக்குத்தான் போயிருக்கார். எதாவது வெரிஃபை பண்ணணுமுன்னா நாங்க அவர்கிட்டேக் கேட்டுக்கிட்டுச் சரியா செஞ்சு தரோமுன்னு சொன்னாங்க.

எனக்கும் ஒரு கடை நடத்தி( மூடு)ன அனுபவம் இருந்ததாலே, 'பாவம். ச்சின்னப் பொண்ணு'. (என் மகளைவிட ரெண்டு மூணு வயசுதான் அதிகம் இருக்கும்.) அழமாட்டாக் குறையாக் கேக்குது. ஒரு ச்சான்ஸ் கொடுக்கலாமுன்னு கொஞ்சம் இரங்கிட்டேன். பெண் என்றால் பேயும் இரங்குமாமே............ இந்த விஷயத்தி (லும்)ல் கோபாலைப் பேசவே விடலை(-:



பொய்டு ஃபோன் செஞ்சாரு. க்ளாஸ் ப்ரிக் விஷயம் சொன்னேன். 'அது சரியான அளவு இடம்தான் விட்டுருந்தேன் ப்ளானில். நான் 'பில்டர்'கிட்டே பேசறேன்'னு சொன்னாரு!


செங்கல் வைக்கப்போற ஆளு ஃபோன் செஞ்சு, நாளைக்கு கொஞ்சம் அட்வான்ஸ் வேணும்னு சொன்னாரு!. என்னவோ எல்லாம் ஒரே குழறுபடியா இருக்கு.
பிங்க்பேட்ஸ் வந்து இறங்கியிருக்கு. சனிக்கிழமை போடறாங்களாம்!

14/10
காலையிலே 11 மணிக்கு லிஸா & க்ரூப் 'டாண்'ணு வந்துட்டாங்க! நம்ம 'ப்ளான்'லே இருக்கறதும் அவுங்க சப்ளை செஞ்சதும் வேற வேற டிஸைன்! மன்னிப்பெல்லாம் கேட்டாங்க. அதையெல்லாம் சரி செஞ்சு தரேன்னு சொன்னாங்க. ஆனா ரெண்டு வாரம் ஆகுமாம்! கண்ணாடி போடற ஜன்னலுங்களையெல்லாம் கணக்கெடுத்துக்கிட்டுப் போனாங்க! '

லிஸா'கிட்டே 'நான் உங்க கம்பெனியை மத்தவுங்களுக்கு ரெகமண்ட் செய்யமாட்டேன்னு சொல்லிட்டேன். அவுங்க எல்லாம் போன பிறகு, 'நீ என்னாத்துக்கு இப்படி முகத்துக்கெதிராச் சொன்னே? உன் மனசுலே போட்டு வச்சுருக்கலாமுல்லே'ன்னு இவர்தான் கத்துனார். உண்மையைச் சொன்னாத் தப்புங்களா?


15/10இன்னைக்கும் எலக்ட்ரீஷியன்தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தார்! சில அறைகளில் பிங்க் பேட்ஸ் போட ஆரம்பிச்சாச்சு! கராஜ்லே அடுக்கி இருக்கற பேட்ஸ்ங்களை வேற இடத்துக்கு மாத்தச் சொன்னோம். கராஜ்லேதான் மழைத் தண்ணி வந்திருதே. பில்லர்ங்க வந்து இறங்கியிருக்கு. பாலிகட் ஆளுங்க வந்து மறுபடியும் பாத்துட்டுப் போனாங்க!





16/10
காலையிலே கோயிலுக்குப் போறமுந்திப் போனோம். ரெண்டு பசங்க, நம்ம க்ளிண்டனும், அவன் ஃப்ரெண்ட் ஃப்லிப்பும் பிங்க் பேட்ஸ் போட்டுக்கிட்டு இருந்தாங்க! கிரேக் கதவுங்களையெல்லாம் சரியாப் போட்டுக்கிட்டு இருந்தார். 'ஸ்லைடிங் கதவு' நல்லா சுலபமா சாத்துது! கொஞ்சம் பிரவுண் பேப்பர் கொண்டுபோய் முன்கதவு கண்ணாடி வரப்போற இடத்துலே ஒட்டுனோம்!




தூண் கராஜ் பக்கம் வர்றதை ஒருத்தர் வந்து 'செட்' பண்ணிக்கிட்டு இருந்தார். அடி வட்டத்தை நல்லா மழ மழன்னு ஆக்கி அதும்மேலே ரெண்டு பாகமா வர்ற தூணை ஒருவிதமான பசை போட்டு ஒட்டினார்.



நம்ம மஹா விஷ்ணு 'நரசிம்ம அவதாரம்' எடுத்தப்ப, ஹிரண்யனைக் கொல்ல தூணை ரெண்டாப் பிளந்துகிட்டு வந்ததாச் சொல்வாங்க பாருங்க. இப்போ அப்படி வந்தார்னா சரி பாதியா பிளக்கலாம்!




மத்தியானமா மறுபடிப் போய்ப் பார்த்தோம். வேலை நடந்துகிட்டு இருந்துச்சு! கராஜ் முன்பக்கம் ரெண்டு தூணையும் வச்சாச்சு. பசை ஒட்டிக்கறதுக்காகக் கயிறுபோட்டு கட்டி இருந்தாங்க!



அப்பப் பாத்து, நம்ம மலேசிய நண்பர்கள் ரேச்சலும் விஜயனும் வந்தாங்க. அவுங்களுக்குச் சுத்திக் காமிச்சோம்!
இன்னைக்கு ராத்திரி தமிழ்ச் சங்க நவராத்திரி விழா முடிஞ்சு வெளியே வந்து பாத்தா, பயங்கர மழை பேய்ஞ்சிருக்கு. வீட்டுக்கு வரும்போதேமணி 10 ஆயிருச்சு. வீட்டுலே ஏதாவது ஒழுகி இருக்குமோன்னு ஒரே கவலையா இருக்கு.



சங்க நிகழ்ச்சிங்கவேற ரொம்ப நல்லா அமைஞ்சுடுச்சு! அதுலே என் மனசுக்கு ரொம்பத் திருப்தி. நாந்தானே கலை & கலாச்சார ஒருங்கிணைப்பாளர். மனசு நிறைஞ்சதாலேயும், வீட்டுக் கவலையாலேயும் சரியாத் தூக்கமே வரலை!



தொடரும்................