Wednesday, August 06, 2025

கொத்தவால் சாவடி வரை போய் வரலாமா ? (2025 இந்தியப்பயணம் பகுதி 55 )

அப்பெல்லாம்.... (மத்ராஸ்  ) பட்டணத்துக்குச் சுத்திப்பார்க்க   வர்ற   மக்கள்ஸ் எல்லோரும் ரெண்டு காலேஜுகளுக்குக் கட்டாயம் போவாங்க.  படிக்கறதுக்கா ?  ஹாஹா..... வேடிக்கை பார்க்கத்தான். ஒன்னு உயிர்க்காலேஜ் இன்னொன்னு செத்த காலேஜ். ஏன் இப்படி ஒரு பெயர் ? கீழே படம் பாருங்க..... அதேதான் காரணம் ! (படம் , வலையில் இருந்து !நன்றி !)  
ரொம்பப்பாவம் செஞ்சவங்களைக் கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரையில் போட்டு  பொரிச்சு எடுப்பாங்களாம். எனெக்கெப்படித் தெரியும் ?  மெட்ராஸ் செத்தகாலேஜுலே எமலோகம் சீன் ஒன்னு  இருக்கும். பார்த்துருக்கேன்.  நரகத்துக்குப் பயந்தே சனம் பாவம் செய்யறதைக் குறைச்சுக்கிட்டு இருந்தது !
மேலே படம்....  வலையில் இருந்து, நன்றி !

 ஒரு பத்துப்பதினைஞ்சு வருசங்களுக்கு முன், மகளின் இந்தியப்பயணத்தில்,  இதைக் காமிக்கறதுக்குன்னே அந்த செத்த காலேஜுக்குப் போனால் நரக ஸீனைக் காணோம்.  எடுத்துட்டாங்க போல !  அதான் குளிரு விட்டுப்போயிருக்கு !  நரகமே இல்லையேன்ற  நெனப்பில்.... என்னென்னெவோ நடந்துக்கிட்டு இருக்குல்லே ? 


லோட்டஸில் இருந்தால்...   காலை எட்டரைக்குப்போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்குவோம். ( இப்பவும் நான் ரொம்ப மிஸ் செய்வது லோட்டஸின் ப்ரேக்ஃபாஸ்ட்தான். ) 
பத்து மணிக்கு என் டைம், ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் சாந்தா ஹாஸ்பிடலில்.  இடையில் ரெண்டு வாரம் லீவில் கோவில்கள் சுத்திட்டு வந்துருக்கேன் .  வழக்கம்போல் முதலில் ரத்த அழுத்தம் பார்ப்பாங்க. டென்ஸி, செக் பண்ணி முடிச்சதும், 'எத்தரையா ? 'ன்னு நான் கேட்பதும், 'நோர்மல்தன்னே... குழப்பமொன்னும் இல்லா' ன்ற பதிலும்  வழக்கம்போல். சிகிச்சை முடிஞ்சு வெளியில் வந்ததும் திரும்ப ஒருமுறை ரத்த அழுத்தம் பரிசோதிப்பது பதிவு. 
(மகளிர் தினத்துக்கு  டிஸ்கவுண்ட் கூப்பான் எல்லாம் போட்டுருக்காங்க !) 

லோட்டஸுக்குப் பக்கம்தான் (வெறும் 350 மீட்டர்) என்றாலும்  நடக்க முடியாதுன்னு ஒரு ஆட்டோ எடுத்துக்குவோம்.  நம்மவர், அங்கே வரவேற்பில் உக்கார்ந்து லோட்டஸில் இருந்து கொண்டுவந்த தினசரியைப் படிச்சுக்கிட்டே ஒரு மணி நேரம் போக்கிருவார். 'அறைக்குப் போயிட்டு  நிதானமா வாங்க'ன்னாலும்...... கேக்கறதில்லை. சில சமயம் வாசலையொட்டி இருக்கும் பழமுதிர் நிலையத்து ஷாப்பிங் முடிச்சுக்குவார்.  முக்கியமாத் தயிர், வாழைப்பழம், வெள்ளரிக்காய் இப்படி.....
சிகிச்சை அறைக்குள் போனால்....  சின்ன சைஸ் எண்ணெய்க்கொப்பரையில் எனக்கான தைலம் காய்ச்சிக்கிட்டு   இருக்காங்க.  கொஞ்சமாத்தான் பாவம் பண்ணியிருக்கேன் போல !

எண்ணெய் நல்லாச் சூடானதும் மருந்து  மூட்டைகளை அதில் முக்கி எடுத்து ஆளுக்கு ஒருபக்கமா நின்னு நம்ம கால்களில்  தேய்க்கறாங்க. முதலிலேயே சூடு ரொம்ப இருந்தால் சொல்லுங்கன்னதால், அப்பப்ப 'ஐயோ சூடு சூடு' ன்னு சின்னதாக் கத்திக்கிட்டு இருப்பேன். அவுங்க சொல்றபடி நேராகப்படுத்தும், குப்புறப்படுத்தும், ஒருக்களிச்சுப்படுத்துமா, என் கால்களை சூட்டுக்கு ஒப்புக்கொடுத்துட்டேன். சுருக்கமாச் சொன்னா  காலை பார்பக்யூ பண்ணிருவாங்க.  இதுலே எண்ணெய்  வழிஞ்சு,  அந்த தோல்மெத்தையில் பரவி நம்ம உடம்பை நனைச்சுக்கிட்டு இருக்கும்.  எந்தொரு ஸல்யம்? 
மொத்தம் ஒரு மணி நேரம் கால்களுக்கு ஆயில்  மஸாஜ். அப்புறம்  ஒரு மருந்துப்பொடியை ஆப்பிள் ஸைடர் வினிகரில் கலக்கிக் கொதிக்கவச்சு முழங்கால்களுக்குப் பத்துப்போட்டு விடுவாங்க.  ஆச்சு.  ஆட்டோவில் அறைக்குத் திரும்பிருவோம்.  ரெண்டு மணி நேரம்  கட்டோடு இருக்கணும். அப்புறம் எல்லாத்தையும் சுத்தம் செய்து கழுவிட்டு, ஒரு குளியல் போட்டால் அன்றைய சிகிச்சை முடிஞ்சது.   எப்படியும்  பகல் ரெண்டு  மணி ஆகும்.  அதுவரை   வலை மேய்தல்.  படுக்கையில்  எண்ணெய்க்கறை படியாமல் இருக்க செய்தித்தாள்  போட்டுக்குவேன்.  ஹௌஸ் கீப்பிங் மேனேஜரும்,  அவருடைய உதவியாளர்களுமா வந்து அறையைச் சுத்தம் செஞ்சுட்டுப்போறதும் உண்டு.   மணி ரெண்டு ஆச்சா ? இனி நம்ம வேலைகளைப் பார்க்கலாம். 
பகல் லஞ்சுக்குத்தான் வெளியே போக முடியறதில்லை.  பழங்களும், காய்களுமா இயற்கை உணவு !!!  சில நாட்கள். ரூம் சர்வீஸில் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து  சௌத் இண்டியன் தாலி மீல்ஸ்  வாங்கிக்கறதும் உண்டு.  நம்ம தேவை அனுசரிச்சு விஜியைக் கூப்பிட்டுக்கறோம். 

இந்த முறை பயணத்தில்  எனக்கு சிங்கையில் தங்கல் இல்லை. வழக்கமாச் சில மளிகை சாமான்களை (!) சிங்கை முஸ்தாஃபாவில் வாங்கிப்போவேன். அதனால்.... இங்கே சென்னையில்  வாங்கிக்கலாமுன்னு நம்மவர் வலையில் தேடிக் 'கொத்தவால் சாவடியில் கிடைக்கிறது. போய் வாங்கிக்கலாம்'னு சொன்னார்.....  நான் முதலில் கொஞ்சம் நடுங்கிப்போயிட்டேன்.  அகலமே இல்லாத சின்னத்தெருக்களில்  அலைஞ்சு திரிஞ்சு காளிகாம்பாள் கோவில் போன அனுபவம் எல்லாம் நமக்கு இருக்குல்லே ? 

https://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_19.html

கூகுள் மேப் வழிகாட்ட,  கொத்தவால் சாவடிக்குப் போறோம்.  நம்ம விஜி , இளங்கன்று என்பதால் பயமில்லாமல் ஓட்டிக்கிட்டுப்போறார். எதிரில் சாமான்கள் ஏற்றி இறக்கும் ட்ரக் வகை வண்டிகள்  வரும்போது சர்க்கஸ்தான் ! இந்தக் கோயம்பேடு மார்கெட் வருமுன் கொத்தவால் சாவடிதான்  மெட்ராஸின் முக்கிய சந்தை.  வெளியூர்களில் இருந்து சரக்கு கொண்டுவரும் லாரிகளின் நடமாட்டம் எக்கச்சக்கம். மற்ற சிறு வியாபாரிகள் எல்லாம் இங்கே வந்துதான் பொருட்களை வாங்கிப்போய் விற்பனை செய்வார்கள். 



இப்பவும் அந்த ஏரியாவில் மொத்தவிற்பனை வியாபாரம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு போல ! காய்கறிக் கடைகள் அங்கங்கே...... நாம் தேடிப்போன கடையின் பெயர் ஸாஃப்ரான் ஹோம்.....   கிரானா  பவன், ஆதியப்ப நாய்க்கன் தெரு, சௌகார்பேட்டை.
தேடிவந்தது கிடைச்சது. குங்குமப்பூ ! கூடவே கொஞ்சம் நட்ஸ் வகைகள். நல்ல பெரிய சைஸ் பிஸ்தாவும் கிடைச்சது.  முக்கால் மணி நேரத்துக்குள் இந்தப்பகுதியில் நுழைஞ்சு, போன வேலையை முடிச்சுக்கிட்டு வெளியே  வந்துருக்கோம் !  பெரிய சாதனைதான் இது !  விஜியைப் பாராட்டினேன் !

சென்ட்ரலாண்டைப் பொதுமருத்துவமனை அலங்கார முகப்போடு இருக்கு !  இதே அளவு முன்னேற்றம் உள்ளேயும் இருக்குமுன்னு நினைக்கிறேன்.
நாம் நியூஸிக்குத் திரும்பும் நாள் நெருங்கிக்கிட்டு  இருக்கு. இன்னும் ஒரே ஒருவாரம் தான் இங்கே என்பதால்.....  வாங்கிப்போகும் பொருட்களுக்கானக் கடைகளுக்குப் போகத்தான் வேணும். ஷாப்பிங் ஓரளவுக்கு முடிஞ்சால்தான் லக்கேஜ் எடை பார்த்து ஆவன செய்யவேணும்.  எல்லாம் ஒன்னோட ஒன்னு தொடர்பில் இருக்கும் வேலைகள்தான்.  இதுலே பகல் ரெண்டு வரை சிகிச்சை என்பதால்  தினமும் கிடைக்கும் அரை  நாளில் சோம்பல் படாமல் இருக்கவேணும்.....  ப்ச்.....
சலோ  மயிலை.... விஜயா ஸ்டோர்ஸ். நமக்கு ஆகி வந்த இடம்.  கொஞ்சம் சாமி சமாச்சாரங்கள்  (அலங்காரம் ! ) வாங்கினதும், நம்ம காப்பிக்கடையில் டீ குடிச்சுட்டு, லோட்டஸ் திரும்பினோம்.  கொஞ்சநேர ஓய்வுக்குப்பின்  டின்னருக்கு எங்கே போகலாமுன்னு சின்னதா யோசனை செஞ்சு கீதம் போனோம். 
                
இந்த வாரம் தோசை வாரமாம் ! நமக்கு தோசையே போதும். விஜி, சப்பாத்தின்னார் !
கீதம் வாசலில் நம்ம சென்னை !

லோட்டஸ் திரும்பியபோது மணி ஒன்பது. 

இனி தினமும் அநேகமா இப்படித்தான் இருக்கப்போகுது......
     
தொடரும்........... :-)



Monday, August 04, 2025

என்ன ஸ்டைலுமா............... (2025 இந்தியப்பயணம் பகுதி 54 )

புள்ளையார் மாதிரி  மனுஷனுக்கு இணக்கமான ஒரு சாமி இல்லவே இல்லைன்னு எனக்குத் தோணும்.  என்ன வேஷம் கட்டினாலும் 'நான் ரெடி'ன்னுருவார்.  மனுஷனின் கற்பனைக்கு  ஈடு கொடுக்கும் கில்லாடி ! 
 ஊரைச்சுத்திவந்ததில் ஏகப்பட்ட சிற்பங்கள் செய்யும்/ விற்பனை  நிலையங்கள்.  புள்ளையார் விதவிதமா இருக்கார்.  கருங்கல் சிலை என்றாலும்  உடலில் அங்கங்கே கரும்பளிங்கு மினுமினுப்பை எப்படிக்கொண்டு வர்றாங்கன்னு தெரியலை.   எனக்கு ஒன்னு வாங்கிக்கணும் என்ற தீராத ஆசை நடக்கச் சான்ஸே இல்லை.....  ஹூம்...


பழைய  கலங்கரை விளக்கத்துக்குப்பக்கம் இருக்கும் பகீரதன் தவத்தின் மாதிரியைப் பார்த்த கையோடு,  'அர்ஜுனன் தபஸ்' ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்  முழுசுமாய் செதுக்கி முடிக்கப்பட்டப் பெரும்பாறை சிற்பங்களையும் ( இது கோவிலுக்குப் பக்கம்தான். ஏகப்பட்ட தீனி வண்டிகள் நின்னதால்.... நம்மவர் இறங்கிப்போய் க்ளிக்கிட்டு வந்தார்) பார்த்துட்டுக் காரில் இருந்தே சிலபல க்ளிக்ஸ் ஆனதும் சலோ சென்னைன்னு கிளம்பிட்டோம்......


கிழக்குக்கடற்கரைச் சாலை அருமை! ஆனால் எல்லாம்  சென்னையைச் சமீபிக்கும் வரைதான்.... ஆர் கே கன்வென்ஷன் சென்டரைத் தாண்டியவுடன் கூட்டமும் நெரிசலும் ஆரம்பம். மத்யான நேரம் என்பதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லைன்னு விஜி சொல்லிக்கிட்டு வந்தார்.
சென்னை/ மெட்ராஸ் பொறுத்தவரை எனக்கென்னமோ லவ் & ஹேட் உணர்வுதான்.  ஆனால் தெரியாத தேவதைகளை விடத் தெரிஞ்ச பேய்கள் பரவாயில்லை, கொஞ்சம்  ஒத்துப்போகலாம் என்பதுதான் உண்மை.

லோடஸ் வந்து சேரும்போது மணி ஒன்னு அம்பது.  அறைச் சாவி நம்மிடமே நின்னுபோச்சுன்றது ஞாபகப்படுத்தப்பட்டது..... அதையே திரும்பச் செயல்படவச்சுக் கொடுத்தாங்க.  பெட்டிகளை வச்சுட்டுக் கிளம்பிப் பகல் சாப்பாடு,  ஜி என் சாலை சங்கீதாவில்.  பார்க்கிங் தேடவேணாம்.  அவுங்களே கொண்டுபோய் நிறுத்திட்டு, நாம் சொன்னதும் திரும்பக்கொண்டு வந்துடறாங்க. 


நம்மவருக்கும் விஜிக்கும் தாலி. எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம்.  லோட்டஸ் திரும்பி வந்ததும்  விஜியை வீட்டுப்போகச் சொன்னோம். அம்மா அப்பா காத்திருப்பாங்கதானே ? சாயங்காலம் வெளியே போக ஒரு  ஆட்டோ பிடிச்சால் ஆச்சு.  ஆனால்.....  விஜிக்கு சம்மதம் இல்லை.  ஃபோன் பண்ணுங்கம்மா  .....  வந்துடறேன்னுட்டார்.

அறைக்குப்போய் முதல் வேலையா, பாலராமரை வெளியில் எடுத்து அலமாரியில் வச்சதும், சிரிச்சமாதிரி தோணுச்சு.  ரெண்டு வாரமா பபுள்ராப்லே கட்டிவச்சுருந்ததுக்கு..... மன்னிப்பு கேட்டுக்கிட்டேன். சாயங்காலம் வெளியே போகும்போது கொஞ்சம் பூ வாங்கிவந்து சமர்ப்பிக்கணும்.  எல்லாம்  இங்கே இருக்கும்வரைதான். நியூஸி போனால்.....  மல்லிகை எல்லாம் இல்லையாக்கும்.....
சாயங்காலம், ஆறுமணிக்குக் கிளம்பிப்போய் டெய்லர்  கடை. பேரனுக்குத் தைக்கக் கொடுத்துருந்தவை எல்லாம் தயார். இந்த டெய்லர் நல்லாவே தைக்கிறார். ஜெண்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட்.  நியூ ஸ்டைல் டெய்லர்ஸ்னு கடைப்பெயர். சௌத் உஸ்மான் ரோடு. ஹொட்டேல் அருணாவுக்கு எதிர்வாடை.  லேடீஸுக்குத் தைக்கறீங்களான்னு கேட்டால்..... ஆமாம்ன்னார்.  சரி ஒரு செட் கொடுத்துப்பார்க்கலாம்.     
நாம் ஏற்கெனவே சிலமுறை வந்துருந்தாலும்,  டெய்லர் கடைக்குப்பக்கம்  இருந்த  ஒரு சமாச்சாரத்தைக் கவனிக்கலை. அப்படிக் கவனிக்க முடியாத வகை இல்லைதான்.  மூடி இருந்துருக்கு போல !  பழக்கமான சத்தம்..... சின்ன வயசு நினைவுகளை மீட்டெடுத்தது.  
இந்த முறை  எனக்குக் கைராசியில்தான் அமைஞ்சது என்பதால்  பாண்டி பஸாருக்கு வந்து ஒரு செட் துணிகள் வாங்கினேன். நாளைக்குப் புது டெய்லரிடம் கொடுத்துப் பார்க்கலாம்.  வாசலில் வா வா என்று கூப்பிட்டது மாம்பழம். சீஸன் இல்லைன்னாலும் ஆசை விடுதா என்ன ? 

கொஞ்சம் பூவும் பழமுமா வாங்கிவந்து குழந்தைக்குக் கொடுத்தாச்சு. ராச்சாப்பாட்டுக்கு வெளியே போகலை.  

நாளை முதல் ஆயுர்வேத சிகிச்சைக்கு மீண்டும் போகவேணும். 

தொடரும்........... :-)

Friday, August 01, 2025

திருக்கடல் மல்லை..........(2025 இந்தியப்பயணம் பகுதி 53 )

இன்றைக்குப் புதுவையிலிருந்து கிளம்பறோம். நண்பர் 'போகும் வழியில் வந்துட்டு போங்க.....  ஃபிஸியோ தெரபிஸ்ட்டை  வரச் சொல்றேன்'னார்.   ஐயோ..... வேணாம்னு தோணுச்சு.  தோழியும், வந்துட்டுப்போங்கன்னு கூப்பிட்டாங்க.  அடுத்தமுறைனு சொன்னேன்.

இதோ ரெடியாகி, பொட்டிகளை மூட்டை கட்டிட்டு,  ப்ரேக்ஃபாஸ்டுக்கு ரெஸ்ட்டாரண்ட் போனோம்.  வழக்கம்போல் பஃபேதான்.  காலையில் விஸ்தாரமா சாப்பிட என்னால் முடியாது.   என்னோட இட்லி & வடை போதும்.  கூடவே கொஞ்சம்  சுண்டல் & உருளை. 

அக்கார்ட்   அதிகாரிகளில் ஒருவர்  வந்து  கொஞ்சநேரம் குசலவிசாரிப்பு.  இன்றைக்கு நாம் செக்கவுட் என்ற விவரம்  அவுங்களுக்குத் தெரிஞ்சுருக்காதா என்ன ?  ரெஸ்ட்டாரண்ட்  மேனேஜர் 'வசீகரன்' வந்து பேசிட்டு, நான் சரியாவே சாப்பிடறதில்லைன்னார் !  அடராமா.....  பயணம் பத்திரமாக இருக்கட்டுமுன்னு சொல்லி,  ஒரு பெரிய கண்டெய்னரில் குக்கீஸ்  கொண்டுவந்து கொடுத்தார்.   ஒரு முக்காக் கிலோ தேறும். 

பத்துமணிக்குக் கிளம்பிட்டோம்.  பாலராமர் இருக்கும் ஷோல்டர்பேகை,  கவனமா எடுத்துக்கிட்டோம்.  ராமர் இருக்கார்னதும்   பையைத் தொட்டுக் கும்பிட்டாங்க  சில பணியாளர்கள்.    சமீபத்தில்  ட்ராஃபிக் போலிஸ் யூனிஃபார்ம் மாத்தியிருக்காங்க போல !  மாநில எல்லையைக் கடக்க அரைமணி ஆகி  இருக்கு !
மாமல்லபுரம் நோக்கி, வண்டி பாயுது. நல்ல தரமான சாலைதான். ஆனாலும்  விரிவாக்க வேலைகள் அங்கங்கே......  மரக்காணம் வருது போல..... உப்பு கண்ணில் பட்டது.  
ஊருக்கு ஓரு கிமீ தூரம் இருக்கும்போதே சிற்பக்கலைத்தூண் நம்மை வரவேற்கிறது....  நேரம் பனிரெண்டடிக்க எழு நிமிட்.....  கோவில் மூடிடப்போறாங்களேன்னு  கொஞ்சம் பதைச்சது மனம்.....
அடுத்த அஞ்சாவது நிமிட்லே கோவில் வளாகத்துக்குள் போய்  வண்டியை நிறுத்தினார் விஜி.  வழக்கம்போல்  க்ளிக்க நிக்காமல் உள்ளே ஓடினேன் நொண்டிக்காலோடு !  நல்லவேளை நடை சாத்தலை..... உச்சிகாலபூஜைக்கான   கோவில்மணி ஓங்கி ஒலிக்குது !  கயிற்றை நல்லா இழுத்து அடிக்கிறார் கோவில் ஊழியர்.

https://www.facebook.com/share/v/1C8AwCiU2m/

வெறும் தரையில் கிடக்கிறான்,  நம்ம பெரும் ஆள் !  

ஒரு சமயம்....  இங்கே தாமரைப்பூக்கள்  ஏராளமாப் பூத்து நிற்கும் பொய்கை இருந்தது. இங்கே ஆசிரமக்குடில் ஒன்னு கட்டி தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார்  புண்டரீக மகரிஷி.  புண்டரீகம் என்ற சொல்லுக்கே  தாமரை என்றுதான் பொருள்!  தாமரைக் குளத்தாண்டை  குடில் இருந்ததால் கூட இவருக்குப் புண்டரீக மகரிஷி என்ற பெயர் வந்துருக்கலாம்!   

தாமரையின் அழகைப் பார்த்தவர், இவையெல்லாம் எம்பெருமாளுக்கேன்னு நினைச்சு  பூக்களைப் பறிச்சு ஒரு கூடையில் எடுத்துக்கிட்டுப் பாற்கடலில் பள்ளிகொண்டவனைத் தேடிப்போறார்.  குறுக்கே வந்தது   வெறுங்கடல். இதைத் தாண்டினால்தான் பாற்கடல் வரும் போல!  எப்படித் தாண்டிப்போறது?  யோசிச்சார். ஐடியா கிடைச்சிருச்சு.

பேசாம, இந்தக்  கடல் தண்ணீரைக் கோரி அப்பாலிக்கா ஊத்திட்டா  கடலின் அடியில் தரை தெரியும். அதன் வழியே நடந்தால் பாற்கடல் போய்ச்  சேர்ந்துடலாமே!  ஆஹான்னு  ஒரு ஓரமா உக்கார்ந்து தன் கைகளால் கடல் தண்ணீரை  அள்ளி இந்தாண்டை ஊத்த ஆரம்பிச்சார்.

பக்தி மனசுக்கு,   இது நடக்கற வேலையான்னு கூட  சந்தேகம் துளிகூட வரலை.  நாட்கள், மாதங்கள், வருசங்கள்ன்னு கடந்து போய்க்கிட்டே இருக்கு. வேற ஒரு கவனமும் இல்லை.... இவருக்கு.  ஒருநாள் கை வலி பொறுக்கமுடியாமல் போய் ஒரு  நிமிசம்  தண்ணி அள்ளப்போன கைகள் அப்படியே நின்னுச்சு.

அப்ப அங்கே ஒரு  கிழவர் வந்தார். 'கடலாண்டை உக்காந்துக்கிட்டு என்ன செய்யறீர்'னு  ரிஷியைக் கேட்க,  'கடல்தண்ணியை இறைச்சு  ஊத்திட்டு,  கடல்தரையில் நடந்துபோய்  பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளை ஸேவிச்சு  இந்தத் தாமரைப் பூக்களை  அவருக்குச் சமர்ப்பிக்கணும். அதான்.......'

"அதுவரைக்கும் இந்த பூக்கள் வாடாம இருக்குமா என்ன?"

"அதெல்லாம் பெருமாள் பார்த்துக்குவார். பறிக்கும்போதே இது பெருமாளுக்குன்னு சொல்லிட்டேன். இனி அவர் பொறுப்பு."

"ஓ....   அதுவும் சரிதான்.  ஆமாம்....தனியா உக்கார்ந்து  சிரமப்படுகின்றீரே  ஐயா. நான் வேணுமுன்னா கூடச்சேர்ந்து தண்ணியை இறைக்கவா?"

"இது என்ன கேள்வி?  கமான் ஹெல்ப் மீ."

"ஆனால் எனக்கு இப்போ பசி அதிகமா இருக்கே. மயக்கம் வர்றது .....  எனக்கு எதாவது  சாப்பாடு கொடுத்தால்  அதை உள்ளே தள்ளிட்டு உமக்கு உதவுவேன்..."

"முதல்லே இந்த வேலை முடியட்டும்...  உமக்கு சோறு  போடறேன்."

"அப்படிச் சட்னு முடியுமா? கொலைப் பசி வேற.  இந்த பாவம் உமக்கு வந்துடப் போகுது...."

"அப்டீங்கறீர்?  சரி. இந்த பூக்கூடையைப் பத்திரமாப் பார்த்துக்கும். நான் போய் உமக்கு எதாவது கொண்டு வரேன்...."

கிளம்பி ஊருக்குள் போய்  கொஞ்சம் சாப்பாடு வாங்கி வர்றார். வந்து பார்த்தால்....  பூக்கூடையையும் கிழவரையும் காணோம். அப்புறம்?  கடலில் தண்ணியைக்கூடக்  காணோம். ஹா....  தரை பளிச்ன்னு  கிடக்கு.
அதுலே இறங்கி விடுவிடுன்னு நடந்து போறார்.  தூரக்கே  பாற்கடல் வெள்ளையாத் தெரிஞ்சது.  அதில்....

அதில்?

கிழவர்  ஒய்யாரமாப் படுத்திருக்க, அவரை அலங்கரிக்கும் கூடைத் தாமரைப் பூக்கள்!

"பெருமாளே.... நீரா?  நீரா?"

இதே போல  அனைவருக்கும் எப்போதும் சிம்பிளாக ஸேவை சாதிக்கணும் என்று கேட்டுக்கிட்டார்.  அதே போல் ஆச்சு.

பாம்புப் படுக்கை இல்லாமல் வெறும் தரையில்  கிழக்கு நோக்கிக் கிடந்த கோலம்! உச்சிகால பூஜையும் முடிஞ்சது.  கோவிலை வலம் வரணும். ரொம்பப்பெரிய கோவில்னு சொல்ல முடியாதுகொஞ்சம் மீடியம் சைஸ்தான். 
மேலே படம்:  வலையில் இருந்து !  நன்றி 

தல சயனப்பெருமாள் என்றுதான்  பெயர்!  ஆழ்வாரே அப்படித்தான் சொல்லியிருக்கார்.  எப்போ இப்படி ஸ்தல சயனப்பெருமாள்  ஆனாருன்னே தெரியலை!  உற்சவருக்கு இங்கே உலகுய்யநின்றான்  என்று நாமம்.  கையில் ஒரு தாமரைப்பூவுடன் நிக்கறார். இந்த நூற்றியெட்டு திவ்யதேசங்களில் கையில் தாமரையுடன் நிற்பவர் இவர் மட்டும்தானாம்!   ரொம்ப விசேஷமாச் சொல்றாங்க.  தாயார் நிலமங்கை என்ற பெயருடன்!  பூதேவி!
நூற்றியெட்டு திவ்யதேசக்கோவில்களில் இதுவும் ஒன்னு !  யார் வந்து மங்களாசாஸனம் செஞ்சுருப்பாங்கன்னு நினைக்கிறீங்க ?

எங்கே போனாலும் பத்துப்பாட்டுக்குக் குறைவில்லாமல் பாடிப்போவது யாரோ அவரேதான் !  நம்ம திருமங்கை ! (இவர் அபூர்வமாக ஒரு பெருமாள் மீது ஒரே ஒரு பாசுரம் பாடியதும் உண்டு. அதுவும்......  பின்னாடியே ஓடிவந்த பெருமாளே கேட்டுக்கிட்ட பின்னேதான் ! எங்கே ?  ஹாஹா.... இதே  சந்நிதியில்தான்....) 

விவரம் இங்கே ! நேரம் இருந்தால் பாருங்கள்.

https://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_11.html

ஆதியில் ஒன்பதாம் நூற்றாண்டில் கடற்கரையிலேயே பல்லவர்கள் கட்டிய கோவில் இருந்ததாகவும்,  அதன்பின் இப்போ இருக்கும் கோவில் பதினாலாம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் பராங்குசன் என்பவரால் கட்டப்பட்டு, பிள்ளை லோகாச்சாரியார் முன்னிலையில் பெருமாளை இங்கே ப்ரதிஷ்டை  செஞ்சதாயும் கோவில் வரலாறு  சொல்கிறது.

நம்ம பூதத்தாழ்வார் அவதாரம் இங்கேதான். தனிச்சந்நிதியில் இருக்கார்.  நம்ம ஆண்டாள் சந்நிதி.... வழக்கம்போல். மார்கழி ஸ்பெஷல்.....
வெளியே மண்டபம் கடக்கும்போது..... கையில் மணிமாலைகளுடன்  ஒரு  பெண் விற்பனையாளர். ஒரு அஞ்சு  மாலைகளில் என் பெயர் இருந்துருக்கு ! (இங்கே நியூஸிக்கு மட்டும் இவுங்க வந்தாங்கன்னா....  கொஞ்சநாளிலேயே கோடீஸ்வரி ஆகிறலாம் ! )
எப்படியும் பகல்சாப்பாட்டுக்கு நேரம் ஆச்சேன்னு  நம்ம இன்டீக்கோ ரெஸ்ட்டாரண்டைத்தேடிப்  போனால்.....   அதை எப்பவோ மூடிட்டாங்களாம்.  அடராமா......

பேசாம சென்னைக்கே போயிடலாமே....  அதிக தூரமோன்னு பார்த்தால் வெறும் அம்பத்தியிரண்டு கிமீதானாம் !  இடைவேளை நேரம்னு  வசீகரன் கொடுத்த குக்கீஸ் கொஞ்சம் உள்ளே தள்ளித் தண்ணீரும் குடிச்சதும்..... புத்துயிர் வந்துருச்சு.  வழக்கம் போல் ரதங்கள் பார்ப்பதெல்லாம்  இந்தமுறை கிடையாது.  கால்வலி...... ப்ச்.....  காரிலேயே ச்சும்மா ஒரு சுத்துச் சுத்திட்டுக் கிளம்பினால் போதாதா ?
தொடரும்........ :-)