Wednesday, May 07, 2025

தாயாரின் ப்ரம்மோத்ஸவம் (2025 இந்தியப்பயணம் பகுதி 17 )

பொதுவா ப்ரம்மோத்ஸவம்னு எப்பவாவது  தரிசனத்துக்குச் ச்சான்ஸ் கிடைச்சுருக்குதான். ஆனால் தாயாருக்குன்றது  இப்பதான்  முதல்முறையாக  நமக்குக் கிடைச்சுருக்கு.  இடம் நம்ம  ஸ்ரீ பத்மாவதி அம்மவாரு  கோவில்தான்.
வழக்கம்போல் கால்சிகிச்சை முடிச்சுக் கிளம்பும்போது மணி மூணு.  சென்னையில் நொறுக்குத்தீனி என்றது பிரச்சனையே இல்லை.  ரெண்டு நிமிட் நடையில் சுஸ்வாத்.  நியூஸியில் இப்படியா ?  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நொறுக்ஸ்தான்.  முக்காலும்  வட இந்திய சமாச்சாரங்கள்.  எல்லாத்துலேயும் லேசா புளிப்பு. ஆம்ச்சூர் சேர்ப்பாங்க போல.   தென்னிந்திய வகைகளுக்கு, அதிலும் குறிப்பாக மத்ராஸி சமாச்சாரங்களுக்குப் பழகிப்போன நாக்கில்லையோ நமது !

ஒரு காலத்துலே வீட்டுலேயே  கூடியவரை எல்லா வகைகளையும்  செஞ்சு வைப்பேன்.  மகள் ப்ரைமரியில் படிக்கும்போது  , ஸ்கூல் ஃபேருக்காக ஒரு முறை  ஒரு பெரிய இருவது லிட்டர் பக்கெட் நிறைய முறுக்கு செஞ்சு கொடுத்துருக்கேன். அதுலே என்ன விசேஷமுன்னா....  இருநூறு கிராம்  உள்ள சின்னச் சின்ன பேக்கட்டா போட மற்ற டீச்சர்ஸ் எல்லாம் உதவி செஞ்சாங்க. தேனெடுப்பவன்..... கை.... கதை தெரியும்தானே ?   கடைசியில் ஃபேர் பார்க்க வரும்  பொதுமக்களுக்கு ஒன்னுமே கிடைக்கலை. எல்லா பொதிகளையும்  டீச்சர்ஸே வாங்கித் தனியா எடுத்து வச்சுக்கிட்டாங்க.

அப்பக் கையில் பலம் இருந்தது. வயசும் குறைவு.  இப்பெல்லாம் இந்தக் கைவலியால் ஒன்னும் செஞ்சுக்க முடியறதில்லை.உள்ளுரில்  ஒரு இண்டியன் கடையில்  அரவிந்த் ப்ராண்ட்னு  நம்ம தெக்கத்திய சமாச்சாரமா  சீடை, முறுக்கு, தட்டை எல்லாம்  ஒருமுறை கிடைச்சது.  கூடுதல் கொக்கி..... செட்டிநாடு ஸ்நாக்ஸ் !!!  விலை அதிகம் என்றாலும்  கிடைப்பதே பாக்கியம் இல்லையோ !   சில சமயம் ரொம்ப பழைய ஸ்டாக்கோ என்னமோ.... ஒரு  சிக்குவாசனை. ப்ச்....  எல்லாம் கொஞ்ச நாள்தான். இப்பக் காணவே காணோம். 

இவ்ளோ புலம்பல் எதுக்குன்னா..... மாவு வீட்டுலே ரெடி பண்ணித்தரேன், பிழிய மட்டும் உதவி செய்யுங்கன்னு நம்மவரிடம் சொன்னால்..... அதெல்லாம் வேணாம். கஷ்டப்படாதே (!!!!)ன்னுட்டு தடை போட்டவர்,   நோகாமல் பிழிஞ்செடுக்க  நெட்டில் உபாயம் தேடி இருக்கார் !  அப்படி ஒன்னு  லோட்டஸுக்கு ரெண்டு தெரு  தள்ளி ராஜாபாதர் தெருவிலே கிடைக்குதுன்னு முதலில் அங்கே போனோம். இடியாப்பம் மேக்கர்னு ஒன்னு. டெமோ எல்லாம் காமிச்சாங்க.  சுலபமா பிழியுது ! 

https://www.facebook.com/share/v/14yCyfQm8wC/

அதுலே முறுக்குப் பிழிஞ்சால் ஆச்சுன்னு  ஒரு மெஷீன் வாங்கினார் நம்மவர்.  நியூஸி வந்த பிறகு ஒருநாள் செஞ்சு பார்த்தோம்தான்.   உள்ளே  போடும் வில்லைகள்.  எல்லாம்  இடியாப்பம், நூடுல்ஸ், தேன்குழல் செய்யும்  வகைகளே. ரிப்பன் முறுக்குக்குக்கூட ரொம்ப மெல்லிஸா ஒரு வில்லை இருக்கே தவிர, முள் முறுக்குப் பிழியும் வில்லை இல்லை ! பார்க்கலாம், நம்ம பழைய அச்சில் இருக்கும் வில்லையை, இந்த அளவுக்கு வெட்டிப்போட முடியுமான்னு.....

வீட்டு வேலைகளைச் சுலபமாச் செய்ய அருமையான  சாதனங்கள் இருக்கு !

காப்பிக்கடையில் டீ குடிச்சுட்டு பாண்டிபஸாரில் ஒரு சுத்து...... வேண்டுதல் :-)
ஒரு ஆறுமணிபோல  ஜி என் சாலை தாயார் கோவிலுக்குப் போனோம்.  அன்றைக்கு சிம்ம வாஹனம்.  மண்டபத்தில்  இருக்கும் மேடையில்  சிங்கத்தைக் கொண்டுவந்து  நிறுத்தி அலங்கார ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு.


நாங்க சந்நிதிக்குப்போய் தாயாரை தரிசனம் பண்ணிட்டு, வெளியே மண்டபத்தாண்டை வந்தப்ப, நமக்கு உக்கார இடம் கிடைச்சது.  கலைநிகழ்ச்சிகள்  ஆரம்பிச்சுருந்தது. யாரோ ஒருவர் வயலின் வாசிச்சுக்கிட்டு இருந்தார். எலெக்ட்ரிக் வயலின், புதுடிசைனில்.  ராக்பேண்ட்லே இப்படி வயலின்  இருக்குல்லே ? 

மற்ற வாகனங்கள் எல்லாம் மண்டபத்தில் வரிசைகட்டி நிக்குதுகள்.  பார்க்கவே அழகு!  அதென்னமோ அவ்வளவாக் கூட்டமில்லை. 

https://www.facebook.com/share/v/157ARQ7vo7D/
தாயார் தயாரானதும்   தீபாராதனை, உபச்சாரம் எல்லாம் ஆச்சு.  உபயதாரர்களுக்கு மரியாதை,  கலைநிகழ்ச்சிக் கலைஞர்களுக்கு  சம்பாவனைன்னு .....    நாம் இந்தப்பக்கம் கடைசியில் இருந்ததால்  எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.  திடீர்னு கூட்டம் வரத்தொடங்கியதும்,   நம்மவர்   எழுந்துபோய் ஓரமா நின்னுட்டார்.   நாமும்  கிளம்பினோம். இன்றைக்கு மூணாம்நாள்தான்.  இன்னும் ஆறுநாட்கள் இருக்கே.....  முடிஞ்சால் வந்து போகணும்.
 இன்றைக்கு  பகல் சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டதால்  டின்னரைக் கொஞ்சம் சீக்கிரமாகவே  நம்ம கீதாவில் முடிச்சுக்கிட்டு,   லோட்டஸ் திரும்பியாச்சு. 

 தொடரும்............ :-)  

Monday, May 05, 2025

நேரத்தை நாம் எப்படித் திருப்பிக்கொடுப்பது ? (2025 இந்தியப்பயணம் பகுதி 16 )


இன்றைக்குக் கேஸரி. தினமும் எதாவது இனிப்பு வகைகள் உண்டு. ஆனாலும் குலோப்ஜாமூன்,  ரஸ்குல்லா, கேஸரி, ஸேமியா பாயஸம் அடிக்கடியும், அடப்ரதமன், சக்கரைப்பொங்கல் என்பவை அபூர்வமாகவும் இருக்கும்.  நான் ஒரு இனிப்புப் பிசாசு என்றாலும் கூட.....  காலை நேரத்தில்.... 
பகல் ரெண்டரை வரை.... சிகிச்சை. விஸ்தரிக்கப்போவதில்லை. எல்லாம் நேத்து நடந்தாப்லெதான்.  காலையில் அங்கே போக, லோட்டஸ் வாசலில் ஒரு ஆட்டோ எடுத்தோம்.  ரொம்பப் பக்கம் என்றாலும்   நொண்டிக்காலை வச்சு  விந்தி விந்தி நடக்க இயலாது இல்லையோ !  ஆட்டோக்காரர் , தன்னுடைய செல்ஃபோன் நம்பரைக்கொடுத்து, திரும்ப வரும்போது  கூப்பிட்டால்  நான் வந்து அழைத்துப் போவேன்னார், வேறெங்கேயும் சவாரி போகலைன்னால்.  நல்லது.  இப்படி அவசரத்துக்கு ஒருவர் உதவி தேவைதான்.   
என்னை மருத்துவமனையில் இறக்கி விட்டதும்,   அதே ஆட்டோவில் போய் நம்மவனுக்குத் தைக்கக்கொடுத்துருந்த   ஷர்ட்ஸ்களை,புதுசாக் கிடைச்ச டெய்லரிடம் போய் வாங்கி வந்ததாக நம்மவர் சொன்னார். ரொம்ப நல்லாவே தைச்சுருந்தார். கொஞ்சம் துணி பாக்கி இருந்ததுன்னு  ஷர்ட்க்கு மேட்ச்சா ஒரு அரை ட்ரௌஸரும் கூட !  இந்த டெய்லர் விலாசம் கூட நம்ம  குடும்பம் கார்த்திக்கின்  உபயம்தான். பெயர்தான் பீமாராவ்.  ஆனால் நேர் எதிர்ப்பதமான உடல் ! அஞ்சு பேர் இவருக்கு உதவியாளர்களா இருக்காங்க.  நாம் வழக்கமாப் போகும் முஸ்தாஃபா , லேடீஸ்  டெய்லர். முப்பத்தியொரு வருஷமா நமக்குத் தைச்சுக்கொடுக்கறார். 


பதினொன்னரைக்குப் பக்கம் மருத்துவமனைக்குத் திரும்பி வந்தவர்,  பழமுதிர்நிலையத்தில் கொஞ்சம் பழங்களும், வாசலில் பூவிற்கும் அம்மணியிடம் கொஞ்சம் பூவும் வாங்கிவந்தது எனக்குப்பிடிச்சுருந்தது.  குழந்தைக்குப் பூ மாற்றணும். எல்லாம் இங்கிருக்கும்வரைதான் இல்லே ? 
பகல் சாப்பாடு ரொம்ப லேட்டாகுதேன்னு, விஜியை சாப்பிட்டு வரச் சொல்லிட்டு,  நாங்க  இயற்கை உணவு  எடுத்துக்கிட்டோம். ஹாஹா.....  பழங்கள், வெள்ளரிக்காய். தயிர் ! 
மூணு மணிக்கு விஜி வந்ததும் பாண்டிபஸார் விஸிட்.  நேத்து மகளுக்கு வாங்கின உடைகளுக்கு மேட்ச்சான வளையல் முதலியவை.  சாயங்காலம் நம்ம கீதாவில் சுடச் சுட பஜ்ஜி. (நம்மவருக்கு ரொம்பவே பிடிச்ச சமாச்சாரம்.  சென்னையில் இருக்கும்போது அனுபவிச்சால்தான் உண்டு ! ) ரொம்பப் பழங்காலமாகவே இருக்கவேணாம். புதிய தலைமுறைக்குப் பிடிச்சதையும் கொடுக்கணுமேன்னு  கீதாவிலேயே ஒரு பக்கம்  சாட் ஐட்டம்ஸ், டீ எல்லாம்  விற்கறாங்க. சிடிக்கவுன்ஸில் நடைபாதையை விஸ்தரிச்சு  ஒன்னுரெண்டு  இருக்கைகள் போட்டு வச்சுருப்பதில் ஒன்னு கீதாவுக்கு முன்னால் ! ரொம்ப வசதியாப் போச்சு !  எனக்குமே அங்கே உக்கார்ந்து வேடிக்கை பார்க்கப்பிடிக்குதே ! 

நேரம் கிடைக்கும்போது நட்புகளையும் உறவுகளையும் போய் பார்த்து வருவதும்  முக்கியம் என்பதால் ஒரு ஆறரைக்குக் கிளம்பி சாலிக்ராமம் போனோம்.  நம்ம பூனா சொந்தம் மாமிமாமா இப்ப இந்த உலகில் இல்லைன்னாலும்  அவுங்க குடும்பம் முழுசும் நம்மை ஸ்வீகரிச்சுருக்கே ! நாப்பத்திரெண்டு வருஷ பந்தம் ! அந்த ஏரியாவில்தான் தம்பியும் இருக்கார்.  நம்ம விஜியின் வீடுகூட அதே பகுதியில்தான் என்பதால்  வாசலில் தேவுடு காக்காமல் வீட்டுக்குப் போகச் சொன்னோம். தேவையான போது கூப்பிட்டால் ஆச்சு. அதான் செல் இருக்கே! 
பேச்சு பிஸியில் நேரம் போனதே தெரியலை. ஒன்பதே காலுக்கு லோட்டஸ் திரும்பினோம். 

மறுநாளும் பகல் ரெண்டரைவரை என் நேரம்.   சிகிச்சை முடிஞ்சது.  ஒருநாள் நம்ம வீட்டு சாப்பாட்டுக்கு  விஜியும்  வரணுமுன்னு தோணியதால், அன்று  பகல் சாப்பாடு நம்மோடுன்னு விஜிக்குச் சொல்லியாச்.  இப்போதைக்கு லோட்டஸ்தான் நம்ம வீடு இல்லையோ !
நாலு மணி போல 'நம்ம குடும்பம் கார்த்திக்' உதவிக்கு வந்தார்.  நண்பர், சகபதிவர் என்பதையெல்லாம் விட இவரை மகனாக நாங்கள் மனதில் ஸ்வீகரிச்சு இருக்கோம். மகளுக்கு அனுப்ப வேண்டியவைகளை எடுத்துக்கிட்டு எல்லோருமாக் கிளம்பி கூரியர் கம்பெனிக்குப் போனோம். இந்தக் கம்பெனியும்  கார்த்திக் கண்டுபிடிச்சதுதான். ஏற்கெனவே நமக்கு சிலபல பார்ஸல்களை இதன் மூலம் அனுப்பி இருக்கார். நல்ல நம்பகமான இடம்தான். 
வளசரவாக்கம் ஏரியா.  ராகுல் என்பவர் நாம் கொண்டுபோனவைகளை  ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கி வைத்தார்.  கிட்டத்தட்டப் பத்துகிலோ எடை வந்தது. அட்டைப்பெட்டி எல்லாம் கூட நாம் கொண்டுபோகத் தேவை இல்லை. 


பதிவில் விலாசம் படம் சேர்த்திருக்கேன், தேவைப்படும் நண்பர்களுக்காக !  அனுப்பிய பத்தாம் நாள் பார்ஸல் வந்து சேர்ந்த விவரம் மகளின் செய்தியில்  பார்த்ததும்  நிம்மதியாச்சு.  நமக்கும்  கொஞ்சம் அனுப்பணும்தான்.  நாட்டைவிட்டுக்கிளம்புமுன் அனுப்பவேணும். 
திரும்பி வரும் வழியில்  நம்ம டீக்கடையில்  நாலு டீ.  அப்படியே  மௌண்ட்ரோட்  ரமீ மால் போய்  நம்மவருக்கு டெக்கத்லான் வாக்கிங் ஷூஸ் வாங்கியாச்.  கார்த்திக் தினமும் குறைஞ்சபட்சம் அஞ்சு கிமீ நடக்கிறார். இந்தவகை காலணிகள்  நடப்பதற்கு வசதியாக இருக்கிறதென்று பலபதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்தான்.   இதை மனசில் வச்சுப் போன பயணத்தில்   இதே கடைக்குப்போய்  இதே ஷூஸ்  போட்டுப்பார்த்தும்கூட நம்மவர், கடைசி நிமிட்டில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வாங்கினால் தினமும் நடக்கச் சொல்வேன் என்ற பயமாக இருக்கணும்.  இந்த முறை கட்டாயம் வாங்க வச்சாச்சு.   
வயசாகிக்கிட்டு இருக்கும்போதாவது தினமும் கொஞ்சம் நடைப்பயிற்சி வேணும்தானே ?  அவரையும் முழுசாக் குற்றம் சொல்ல முடியாது..... நியூஸியில் நம்ம ஊரின் காலநிலை...ப்ச்.....  குளிரில் வெளியே போகவே தோணாது. அதில் ஏகப்பட்ட குளிர்கால உடுப்புகளுடன்  நடக்கப்போவதும் கஷ்டம்தான்.  இன்னொன்னு...... தனியாகத்தான் நடக்கப்போகணும்.  முன்புபோல் என்னால் கூட நடக்க முடியாது. கால் சரியில்லையே....
கார்த்திக் போன்ற ஒரு பரோபகாரியை நான்  என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை.  எதையும்  எதிர்பாராமல் ஒடோடி வந்து  உதவும் நல்ல குணத்தை என்னன்னு சொல்றது.....    இப்படி ஒரு  அன்பான மனம் இருப்பவரை நமக்குக் காட்டியது கூட எம்பெருமாளின் அருளின்றி வேறெது ?   பெருமாளின் ஆசிகளோடு அவரும் குடும்பமும் நல்லா இருக்கணுமுன்னு  மனம் நிறைஞ்சு வாழ்த்துகிறோம்! நமக்காக செலவளித்த நேரத்தை  எப்படித் திருப்பிக்கொடுப்பது ?       
தொடரும்........... :-)

Friday, May 02, 2025

அடுப்பிலே ச்சீனிச்சட்டி (2025 இந்தியப்பயணம் பகுதி 15 )

விநோதமா இருக்கும் கட்டிலுக்கு அந்தாண்டை அடுப்பில் சீனிச்சட்டி.....  என்னன்னு பார்க்கலாம், வாங்க.  காலையில் கண் திறக்கும்போதே  இன்றைக்குச் சிகிச்சை ஆரம்பம் என்ற நினைவுடன், என்ன செய்யப்போறாங்களோன்னு  லேசா ஒரு ஆர்வமும் பதற்றமும் வந்தது உண்மை.
காலைக்கடமைகளை முடிச்சுட்டு, கனகாம்பரமாலை சூட்டிக் குழந்தையைக் கும்பிட்டதும்  ப்ரேக்ஃபாஸ்டுக்குக் கீழே போறோம். லிஃப்ட்க்குப் பக்கம்தான் ஒரு வட்டக் கண்ணாடி இருக்கு. அங்கே ஒரு க்ளிக். நாள் அப்பதான் ஆரம்பமாகும் எனக்கு. அதே போல ப்ரேக்ஃபாஸ்ட் படமும் எடுப்பேன்.  தினம் மகளுக்கு அனுப்பணும்.  லோட்டஸில் எனக்குப் பிடிச்ச அம்சமும் இந்த ப்ரேக்ஃபாஸ்ட்தான். 

ஒன்பதே முக்காலுக்குக் கிளம்பியாச்சு.  கமீஸும்,ஸல்வாருக்குப் பதிலா ஒரு ஸ்கர்ட்டும் உடை. விஜி நம்மைக்கொண்டுபோய் மருத்துவமனையில் விட்டார். ஒரு நிமிட் ரைடுதான். ஆனால் நார்த் போக் க்ராஸ் செய்ய  ஒரு ரெண்டுமூணு நிமிட் நிற்கணும். வாசல் புள்ளையாரைக் கும்பிட்டுக்கிட்டு உள்ளே போனேன்.
நமக்குத் தேவையான மருந்தெண்ணெய் சமாச்சாரங்களையெல்லாம்  வாசல் பக்கம் இருக்கும்  பார்மஸியில் இருந்து வாங்கி ஒரு பக்கம் வச்சுட்டு,  நம்மாண்டை வந்து எனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவுன்னு பார்த்தாங்க.  எவ்ளோன்னு கேட்டேன்....... நார்மலாம் !!!!
என்னை மட்டும் உள்ளே கூட்டிப்போகும்போது கூடவே வந்த இன்னொருவர் மருந்துகளையெல்லாம் வாரி எடுத்துக்கிட்டு வந்தாங்க.  எவ்ளோ நேரம் ஆகுமுன்னு கேட்டதுக்கு , பதில்  ஒரு ஒன்னரை மணிக்கூறு. நம்மவரிடம் ஒன்னரை மணி நேரமாகுமாம். நீங்க இங்கேயே இருந்து என்ன பண்ணப்போறீங்க.  லோட்டஸ் போயிட்டு அப்புறமா வந்தால் போதுமுன்னேன். 

அறைக்குள் போனால்.... அந்த விநோதமான கட்டிலும்  ச்சீனிச்சட்டியும்.  
அறைக்குள்ளே ஒரு பக்கம் குளிமுரி.  சிகிச்சை முடிஞ்சதும் குளிச்சுட்டுக் கிளம்பலாம்.  ரெண்டு மூணு பாட்டிகளைத் திறந்து சீனிச்சட்டியில் ஊத்திட்டு அடுப்பில் ஏத்தினாங்க.  இன்னொரு ரெண்டு மூணு பாக்கெட்டில் இருந்த சூரணங்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்துட்டு, ரெண்டு துணி மூட்டைகளாக் கட்டுனாங்க.  இதுக்குப்பெயர் கிழி. பொற்கிழின்னா.... தங்கக்காசு இருக்கும் மூட்டை. இது வெறும்  மருந்துன்றதால் வெறும் கிழி ! 

(என்ன செய்யறாங்கன்னு பார்த்துக்கிட்டு நின்னேனே தவிர படம் எடுக்கத் தோணலை. அப்புறமா நினைவுக்கு வந்து க்ளிக்கினவைகளே இவை.  சிகிச்சை நடக்கும்போதும்  க்ளிக்க முடியாதில்லையா.......  அதனால் கூகுளாண்டவர் அருளிய படமும் பதிவில் உண்டு )

நல்ல உயரமான கட்டில் என்பதால் ஏறி உக்கார ரெண்டு படிகளும் உண்டு கேட்டோ !   ஸ்கர்ட்டைத் தொடைவரை உயர்த்திட்டுப் படுக்கணும். ரெண்டு கால்களுக்குமே வைத்தியம் !

எண்ணெய் நல்லாச் சூடானதும்  மூட்டைகளை அதில் முக்கி எடுத்து ஆளுக்கு ஒருபக்கமா நின்னு நம்ம கால்களில்  தேய்க்கறாங்க. முதலிலேயே சூடு ரொம்ப இருந்தால் சொல்லுங்கன்னதால், அப்பப்ப 'ஐயோ சூடு சூடு' ன்னு சின்னதாக் கத்திக்கிட்டு இருந்தேன். அவுங்க சொல்றபடி நேராகப்படுத்தும், குப்புறப்படுத்தும், ஒருக்களிச்சுப்படுத்துமா, என் கால்களை சூட்டுக்கு ஒப்புக்கொடுத்துட்டேன். சுருக்கமாச் சொன்னா  காலை பார்பக்யூ பண்ணிட்டாங்க.  இதுலே எண்ணெய்  வழிஞ்சு,  அந்த தோல்மெத்தையில் பரவி நம்ம உடம்பை நனைச்சுக்கிட்டு இருக்கு.  எந்தொரு ஸல்யம்? 

கைதானே சிகிழ்ச்சிக்குது.... வாயுமா ?  'சூடு சூடு'ன்னு கத்துற நேரம் தவிர நம்ம வாயும் சும்மாத்தானே கிடக்கு, இல்லையோ! 

இருவரில் ஒருவர் கேரளமங்கை. இன்னொருவர் தமிழ்நாடு.  முன்னவர் கேரளாவில் கோட்டக்கல் தலைமை மருத்துவ மனையில் பயிற்சி பெற்றவர்.  பின்னவர், இங்கே சென்னையில் பயிற்சி. முன்னவர் அஞ்சாறு கொல்லம் எக்ஸ்பீரியன்ஸுடு.  பின்னவர் ரெண்டு  வருஷம். முன்னவருக்குத் தமிழ் கொஞ்சூண்டு தெரியும். பின்னவருக்கு மலையாளம் கொஞ்சூண்டு புரியும் !

ஒத்தடம் (! )கொடுப்பது நின்னப்போ சரியா ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.  வழுக்கும் மெத்தையிலிருந்து எழுந்து உக்காரவே  உதவி வேண்டியிருக்கு.  தோர்த்து ரெண்டு எடுத்து  உடலில் இருக்கும் எண்ணெயை எல்லாம்  துடைக்கணும். சதசதன்னு உள்ளங்காலில் இருக்கும் எண்ணெயைத் துடைச்செடுக்கலைன்னா நடக்கும்போது வழுக்கி விழுவது உறுதி ! 
ஒரு பத்து நிமிட் இந்தத் துடைக்கும் படலம்.  இப்ப ஒரு ஸ்டூல் மேலே உக்கார்ந்துக்கலாம்.  ஒரு சின்ன  தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வச்சு அதில் ஆப்பிள்ஸைடரை ஊத்தி, அதில் வேறெ ரெண்டு சின்னப்பேக்கில் இருக்கும்  சூரணத்தைப்போட்டுக் கலக்கிக் காய்ச்சி எடுத்தாங்க. களிம்புப் பதத்தில் இருப்பதை நம்ம முழங்கால்களில் பத்துப்போட்டு விட்டு,  இதுக்குன்னே வச்சுருக்கும் துணிகளால்  கட்டுப்போட்டு விட்டாங்க.  ஆச்சு ! 

ஒரு ரெண்டு மணிநேரம் அப்படியே 'பத்தோடு' இருக்கணும்.  அப்புறம், கட்டைக் கழட்டி எடுத்துட்டுச் சுத்தம் செஞ்சுடலாம்.  இங்கேயே குளிச்சுட்டும் போகலாம். 

இங்கே ரெண்டு மணி நேரம்  ச்சும்மா உக்கார வேணாம். லோட்டஸுக்குப் போயிடலாமுன்னேன்.  பாக்கி எண்ணெய், சூரணங்கள், கிழிப்பொதிகள்னு நம்ம மருந்துவகையறாக்களை ஒரு பையில்  போட்டு நம்மாண்டை கொடுத்தாங்க.  மறுநாள் சிகிச்சைக்கு வரும்போது கொண்டு வரணும்.  இப்போ இன்னொரு முறை ரத்த அழுத்தம் பார்த்தாங்க.  

எத்ர ? 

நோர்மலா !

இப்போத்  தெரிஞ்சு போச்சு, இந்த  சிகிச்சை எப்படி இருக்கப்போகுதுன்னு, இல்லே ?  லோட்டஸுக்கு வந்துட்டோம். அறைக்குப்போய் சேரில் உக்கார்ந்துக் கட்டிலில் கால்களைத் தூக்கி வச்சுக்கணும். நிறைய பேப்பர்களைக் கட்டிலில் பரத்திவிட மறக்கக்கூடாது.  பகல் ஒன்னரை மணி வரை  இப்படியே.....  நேரம் போக்க நமக்குத்தான்  வலை இருக்கே !
அப்புறம் கட்டைக் கழட்டிக் காய்ஞ்சு ஒட்டிப்பிடிச்சுருக்கும் பத்து மருந்தைச் சுத்தம் செஞ்சு குளிச்சுட்டு வர ரெண்டரை மணி ஆகிருச்சு.   ரெண்டே முக்காலுக்குக்கிளம்பி சாப்பிடப் போறோம்.  நேத்து ராத்ரி சங்கீதாவிலிருந்து திரும்பும்போது ' அருவி' கண்ணில் பட்டது.  அங்கேயே போய்ப் பார்க்கலாமுன்னு.......  அவரவருக்கு வேண்டியதை வாங்கியாச்.  எனக்கொரு ஜீரா ரைஸ்.


ருசி சுமாராத்தான் இருக்கு.  சாப்பிட்டு முடிக்கும்போது மணி மூணே முக்கால்.  பாவம், நம்மவரும் , விஜியும். என்னால்தான் இப்படி வேளை தவறி சாப்பிடவேண்டியதாப் போச்சு.  வேற வழி உண்டான்னு பார்க்கணும்.    

மகளிடமிருந்து 'விஷ்லிஸ்ட்' வந்துருக்குன்னு, திரும்பவும் போத்தீஸ் போனோம்.  ஷாப்பிங் ஆச்சு.  முந்திமாதிரி இல்லாமல் கட்டைப்பைகளைத் தாராளமாத் தர்றாங்க. ஆனால் இதிலும் தரம் கிடையாது. முந்தியெல்லாம் சணல் நாரில் இருந்த  பைகள், இப்போ ப்ளாஸ்டிக் நாராக மாறியிருக்கு. 

லோட்டஸ் திரும்பும் வழியில் காப்பிரெடியில் டீ !  அரைமணி நேர ஓய்வுக்குப்பின்  அடையார் அநந்தபதுமனை ஸேவிக்கப்போனோம். வழக்கம்போல் அருமையான தரிசனம். ஒரு தள்ளுமுள்ளு கிடையாது.  என்ன ஒன்னு.... சந்நிதி முன்னால் போட்டுருக்கும்  படிவரிசைகளில் உக்கார்ந்து நிம்மதியா   திருமுகம், திருப் பாதம் ஸேவிக்க  முடியாது. ஒரு மணைப்பலகை உயரம்தான்  இருக்கும். நம்ம முழங்காலுக்குச் சரிப்படாதே.....  சிவன் சந்நிதிக்குப்போகும் வழியில் போட்டுவச்சுருக்கும் பெஞ்சில் போய் உக்கார்ந்திருந்தோம்.          
அடுத்தமாசம் நாலாம் தேதி ப்ரம்மோத்ஸவம் ஆரம்பம். அதுக்கு வேண்டிய டொனேஷன் கலெக்‌ஷன் ஆரம்பிச்சுருக்கு ! நாமும் ஒரு தொகை கொடுத்தாச்சு.  லிஸ்டுலே  இருபது  கிலோ கு  மிளகாய்னு பார்த்ததும் திக் னு ஆச்சு எனக்கு......  ஏற்கெனவே மிளகாய் வற்றல் இருபது கிலோ வேற இருக்கு !

எட்டு மணிக்கெல்லாம் லோட்டஸ் வந்தாச்சு.  ராத்ரி டின்னர்னதும், எனக்குப் பசி இல்லைன்னுட்டேன். விஜியும்  பசி இல்லைன்னதும்...... தேவைப்பட்டா ஏதாவது  லோட்டஸிலேயே வாங்கினால் ஆச்சு, இல்லே?

இப்பதான் சிகிச்சை முறை, நேரம் எல்லாம் தெரிஞ்சு போச்சே.  எதுக்காக விஜியைக் காலையிலே வரவழைச்சு தேவுடு காக்க வைக்கணும்?  மறுநாள்  பகல் ரெண்டரைக்கு வரச் சொல்லிட்டு அறைக்குப் போனோம். 

ராத்ரி ஒன்பது மணிக்கு மேலே..... ஒரு ப்ளேட் இட்லி கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து.  வெறும் வயித்துலே படுக்கக்கூடாதில்லையா ?

தொடரும்........... :-)