Monday, April 13, 2020

உள்ளூர் சமாச்சாரம்தான் இன்றைக்கு ..... முதலில்.... மசூதி (பயணத்தொடர் 2020 பகுதி 38 )

காலை ஆறரைக்குப் பார்த்தால்  நைல்நதியைக் காணோம்...ஒரே பனிமூட்டம்.....  ஒன்பது மணிக்கு ரெய்னா வருவாங்கன்றதால் நாங்களும் நிதானமாவே எழுந்து கடமைகள் முடிச்சு, லேட்டாக ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம். நேத்துமாதிரி கூட்டத்தில் ஆப்டுக்க வேணாமேன்னுதான்....
அப்படியும் கொஞ்சம் கூட்டம் இருக்கு. பஃபேயில் வேற என்ன இருக்குன்னு சுத்திப் பார்த்தால் ஒரு பக்கம் ப்ளெய்ன் ரைஸ் இருக்கு. ஓட்ஸ், ம்யூஸ்லி இருக்கும்  இன்னொரு பக்கம்  தயிர்  இருக்கு. ஆஹா.... ஹாலில் ஒரே  இடத்தில் வைக்காம இங்கே அங்கேன்னு  பல இடங்களில் வச்சால்  எப்படி ?  தச்சு மம்மு சமாச்சாரம் இவுங்களுக்குத் தெரியாது போல !
வெஜிடபிள் பகுதியில்  உருளைக்கிழங்கு. காய்களை அரைவேக்காடு  சமைக்கறதைப்போல் உருளைக்கிழங்கை செஞ்சு வச்சால் எப்படி? நேத்து லஞ்ச் சாப்பிட்ட இடத்திலும் இப்படித்தான் அரைவேக்காடு....  நறுக் நறுக்குன்னு....ப்ச்....

இதே ரெஸ்ட்டாரண்டு வாசலுக்குப் பக்கம் ஒரு இண்டியன் ரெஸ்ட்டாரண்டும் இருக்கு. மஹாராஜா.  வாசலில் யானை, உள்ளே புள்ளையார், வேணுகோபாலன் எல்லோரும் இருக்காங்க. லஞ்சும் டின்னரும்தான். என்ன ஒன்னு ... ரூம் சர்வீஸ் அனுப்பறதில்லை. இங்கே வந்து சாப்பிட்டுக்கணும். ஒருநாள் வரணும்....
அறைக்குப்போய் தண்ணீர், கேமெரா பேட்டரி, ஷால் இத்யாதிகளை எடுத்துக்கிட்டுக் கீழே வந்தோம். ரெய்னாவும் வந்துட்டாங்க. இன்றைக்கு முதலில் போற இடம் ஒரு கோட்டை.  கோட்டைன்னதும் நம்மவர் முகத்தில் ஒரு பூரிப்பு ! கோட்டைப்ரேமி !

நம்ம ஹொட்டேலில் இருந்து ஒரு அஞ்சு கிமீ தூரம்தான்.  ஒரு குன்றின் மேல் இருக்கும் கோட்டை.  Salah ad-Din என்ற சுல்தான் கட்டுனது.  இவரை Saladinனு ஆக்கிட்டாங்க. இந்தக் கோட்டைக்குப் பெயரும்  Saladin Citadel னுதான் !

வெளியே சாலையையொட்டியே நிறுத்தின வண்டியில் இருந்து இறங்கி பெரிய இரும்பு கேட்டைக் கடந்து போறோம்.  நல்ல ஏத்தம். குன்றின் மேல் இருக்குல்லே....
நல்ல கூட்டம்தான்.  உள்நாட்டுப் பயணிகளே அதிகமா இருக்காங்கன்னு ரெய்னா சொன்னாங்க. வெள்ளிக்கிழமை வேற !  வார விடுமுறை நாள் ! 

 கோட்டையில் கொடி பறக்குது. சட்னு பார்த்தால் இந்தியக்கொடிபோலவே இருந்துச்சா.... என்னன்னு திகைச்சேன்..  கண் மயக்கம்... ப்ச்....
கொஞ்சதூரம் போனதும்  செக்யூரிட்டி செக்  ஹால் தாண்டி அந்தாண்டை  டிக்கெட் ஆஃபீஸ் இருக்கு.

நல்ல பெரிய கோட்டை வளாகம்தான். Saladin  அவர்கள்தான் ஈஜிப்ட், சிரியா நாடுகளின் முதல்  சுல்தான்.  1137 இன் ஜனனம். சுல்தானாகி ஆட்சிக்கு வந்தது 1174 இல். மன்னர் ஆகிட்டதால்  நாட்டின் பாதுகாப்புக்குக் கட்டின கோட்டைதான் இது. இடம் தேர்வு பண்ணி ஏற்பாடு செய்யவே  ரெண்டு வருஷம் ஆகி, 1176 இல் கோட்டை கட்ட ஆரம்பிச்சு 1183 இல் முடிச்சுட்டாங்க.
அரச குடும்பத்துக்கான தங்குமிடம், அரண்மனை அலுவல் பார்க்க தர்பார், தொழுகைக்கான மசூதி, படைவீரர்கள் தங்க இடம் இப்படி  எல்லாமும்  கோட்டைக்குள்ளே அங்கங்கே அமைச்சாச்சு.

அரசன் ஆனதும் அடுத்த  வேலையா அக்கம்பக்கம் நாடுகள் மேல் படையெடுக்கறது ஆரம்பிச்சது. ஒரு சமயம் ஜெரூஸலேம் பகுதியும் பிடிச்சுக்கிட்டாங்க. ஐயோ அது எங்க சாமியோட இடம்னு இன்னொரு மதத்துப் பெருந்தலைகள்  குய்யோ முறையோன்னதும்....   இதுதான்  சமயமுன்னு நாட்டாமைகள் புகுந்து ஒப்பந்தம் போட்டதெல்லாம் தனிக்கதை.

சரித்திரமுன்னாலே சண்டையும் ரத்தமும்தான்.... அந்தக் காலத்துலே இருந்து இந்தக் காலம் வரையிலும் இப்படியேதான் போகுது. அப்போ கத்தியைக் கையில் எடுத்தால் இப்போ  ஏவுகணை.  ரத்தம் ரத்தம்தானே?

இந்தக்  கோட்டையில்  ஆரம்பிச்ச  Saladin அரசு...  இவர் மறைவுக்குப்பின்  (1193 )இவர் மகனின் தலைமையில் ஆட்சின்னு  தொடர்ந்து நடந்துருக்கு.   அரசவம்சமும்  இதே கோட்டையில்தான் இருக்காங்க. இப்படியே சிலபல தலைமுறைகள் வரை எல்லோரும் இங்கேதான். 1848 வரை கோட்டையில் குடியிருப்பு.  அந்தந்த காலக்கட்டங்களில்  கொஞ்சம் கொஞ்சமா புதுப்பிக்கறதும், புதுக்கட்டடங்கள் கட்டிக்கிறதுமாவும் இருந்துருக்கு.

என்னமோ உதவி, உபகாரம் செய்யறதைப்போல ஓசைப்படாம உள்ளே நுழைஞ்ச ப்ரிட்டிஷ்காரன், மெள்ள மெள்ள  நாட்டின் ஆட்சியைத் தன்வசப்படுத்திக்கிட்டான். இதேதான் வழக்கம் இல்லையோ.....   அப்படியே வந்து பிடிச்சுக்கிட்டு உக்கார்ந்துடறதுதான். அதிகாரப்பூர்வமா ஒன்னும் இல்லை.  ஊசி முனை இடம் கேட்டுக் கூடாரத்துக்குள் தலையை விட்ட ஒட்டகத்தின் கதை . 

வியாபாரத்துக்குச் சுலபம்னு  பிரிட்டிஷாரும் ஃப்ரெஞ்சுக்காரர்களும் சேர்ந்து சூயஸ்கால்வாய் கம்பெனின்னு ஆரம்பிச்சு   சூயஸ் கால்வாய் வெட்ட ஆரம்பிச்சு பத்து வருச வேலை முடிஞ்சது 1869 லே. இந்தியாவுக்கு வர்றது அப்போ ரொம்பவே ஈஸியாப் போயிருச்சு.

ஈஸ்ட் இண்டியா கம்பெனின்னு ஆரம்பிச்சு இந்தியாவுக்கு வியாபாரம் பண்ண வந்த ப்ரிட்டிஷார்....  நைஸா நாட்டையே பிடிச்சுக்கிட்டு இருந்தாங்கதானே....  1858 லே ப்ரிட்டிஷ்ராஜ்னு இந்தியாவை அதிகாரப்பூர்வமா ஆள ஆரம்பிச்சாங்க.  அடுத்து அடுத்த வருஷமே  குறுக்கு வழிக்காக சூயஸ் கால்வாய் வெட்ட ஆரம்பிக்கறாங்க. வேலை முடிஞ்சது. வரப்போக சுலபம். கடைசியில் நமக்கு சுதந்திரம் கிடைச்சது (கொடுத்தது) 1947 இல்.  அதே கால்வாய் மூலம்தான் திரும்பிப்போனதும் கூட :-)

இதெல்லாம் நடக்கும்போது ஈஜிப்ட்  வெள்ளையர் ஆட்சிதான்.  அரசியல்வாதிகள் சும்மா இருப்பாங்களா? அப்புறம்  அங்கேயும்  மக்கள் முழிச்சுக்கிட்டாங்க. 1953 லே சுதந்திரம் கிடைச்சது. எல்லாம்  சொல்லப்போனால்....   சொல்லிக்கிட்டேதான் இருக்கணும்... அவ்ளோ ராமாயணம்....

இப்ப கோட்டைக்கு வரலாம். ப்ரிட்டிஷார் புடிச்சுக்கிட்டவுடன், கோட்டையில்  அவுங்க ராணுவப்பிரிவு குடி வந்துருச்சு. சுதந்திரத்துக்குப்பின் அவுங்க கோட்டையைக் காலி பண்ணிட்டு போனாங்க.  அவுங்க போனாட்டு, ஈஜிப்ட் ஆர்மி அங்கே இடம் புடிச்சது.  உலகப்பாரம்பரிய கட்டடங்கள் இடங்கள்னு யுனெஸ்கோ இதை அறிவிச்சது 1976 இல்.
எல்லாத்தையும் சீர்படுத்தி, பொதுமக்களும் பார்க்கும் வகையில்  செஞ்சது 1983 லேதான். அங்கெதான் இப்போ நாம்  நிக்கறோம்.  வாங்க உள்ளே போய்ப் பார்க்கலாம்.  உள்ளே போக கட்டணம் 180 ஈஜிப்ஷியன் பவுண்ட்.
டிக்கெட்டைக் காமிச்சுட்டு  உள்ளே போனால்... பாதை இன்னும் உசரமாப் போகுது.  ஏறணுமான்னு மலைக்கும்போதே..... பேட்டரி கார் இருக்கு. அதுலே போகலாமுன்னு சொல்லி  இன்னொரு டிக்கெட்டோட வந்தாங்க ரெய்னா. ஆளுக்குப் பத்து.




ஒரு நாலைஞ்சு நிமிட்டுலே மேலே வந்துட்டோம். ஒரு பெரிய கட்டட வாசலில் வண்டி நின்னதும் இறங்கிப்போறோம்.   நீண்டு போகும் வெராந்தாவில் இருக்கும்  வாசலுக்குள் நுழைஞ்சால்...... பிரமாண்டமான முற்றம்.

உள்ளே போகுமுன் காலணிகளைக் கழட்டிடணும். நான் வேற லேஸ் முடிச்சு ஷூஸ் போட்டுருக்கேனா.... கழட்டணுமுன்னா எங்கியாவது  உக்காரணும்.... வாசலில் இருந்த காவல்காரர், அவருடைய  நாற்காலியில் உக்கார்ந்துக்கச் சொன்னாரா.... அதுக்குள்ளே  நம்ம காலணிக்கு மேலேயே போட்டும் உறைகளைக் கொண்டுவந்து கொடுத்தாங்க ரெய்னா. ஸோ ஸ்வீட்.  எனக்கொரு கஷ்டமான வேலை மிச்சம் !

முற்றத்துக்குள் அடி எடுத்து வச்சால்...  நடுவிலே இன்னொரு சின்ன மண்டபம். சுத்திவர ஏகப்பட்டத்தூண்களுடன் வெராந்தா. இடதுபக்க வாசலுக்குள் நுழையறோம்.  இது மசூதி ! ( ஓ ... அதுதான் காலணி கழட்டும்படியாச்சு !)

ரொம்பவே பெரூசா, ஏகப்பட்ட தொங்கும் விளக்குகளோடு இருக்கு!  மேலே விதானங்களின் கிண்ணக்கூரைக்குள்ளே  அழகான டிஸைன்களில் வரைஞ்சுருக்காங்க.  அதுலே  அரபிக் எழுத்துகளிலும்  என்னவோ எழுதி இருக்காங்க. ரொம்ப உயரத்தில் இருந்ததால் படங்கள் சுமாராத்தான் வந்துருக்கு.






தரைத்தளம் இல்லாமல் மேலே இன்னும் ரெண்டுமூணு மாடி இருக்காம்.  மாடிக்குப்போகும் படிகட்டு கூட அழகு!  ஆனால்  அங்கெல்லாம் ஏறிப்போக யாருக்கும் அனுமதி இல்லையாம்.
தொழுகை சமயத்தில்  மசூதியின் தலைவர்  (இமாம் ? ) பக்தர்களிடம் பேச ஒரு அமைப்பு!
இந்தக் கோட்டையில் இருந்து அரசாட்சி செஞ்ச கடைசி மன்னரான Muhammad Ali Pashaவின் காலத்தில்  (1805 - 1848) கோட்டையின் பல பகுதிகளை இடிச்சு, வேற மாதிரி (இப்ப நாம் பார்க்கிறது) கட்டுனாராம். Ottoman Style Architecture !அல்பேனியாப் பகுதியில் இவர் கவர்னரா இருந்துருக்கார். அதான் அந்த ஸ்டைல் பிடிச்சுப்போச்சு போல !

 


இவருக்கு பனிரெண்டு மனைவிகள் என்பது கூடுதல் தகவல் !
மசூதியை விட்டு வேற வாசல் வழியா வெளியே போனால்.... இஸ்லாமிக் புத்தகங்கள்  வச்சுருக்காங்க. இலவசம்தான் !  கொஞ்சம் இந்தாண்டை நினைவுப்பொருட்கள் கடைகள் ஒரு ஏழெட்டு.   இன்னும் கொஞ்சம் அந்தாண்டை போனால் கய்ரோ நகரைப் பார்க்கலாம்.  பனிமூட்டம் இன்னும் விலகலை. பளிச்னு வெயில் இருந்தால் பெரிய பிரமிட்Giza தலை தெரியுமாம்!




 இன்னும் கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு, மசூதியின் முன்பக்கத்துக்கு வந்துருந்தோம்.
இன்னும் மூணு  மசூதிகளும் இதே வளாகத்தில் இருக்கு.  ஆனால் நாம் போகலை.


கோட்டை வளாகத்தில்  பொலீஸ், ஆர்மி,  Royal Carriage, Palace னு நாலு ம்யூஸியம் இருக்கு.  இதுலே ரெண்டு திறந்துருக்குதான். நாம்தான் போகலை. அங்கங்கே பழுதுபார்க்கும் வேலைகள் நடப்பதால்  நிறைய இடங்கள் மூடித்தான் இருந்துச்சு.




கோட்டை ம்யாவ்ஸ் நிறைய. அதுலே ஒருத்தர் நமக்கு வழி காமிச்சுக்கிட்டுப் போனார் :-)

இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தால் மற்ற இடங்களைக் 'கோட்டை' விட்டுருவோம் என்பதால் கிளம்பி வெளியே வந்தோம்.

தொடரும்........ :-)


Friday, April 10, 2020

ஸ்பிங்ஸ் ஒரு கதை சொல்லி ! (பயணத்தொடர் 2020 பகுதி 38 )

'சாயங்காலம்  பெரிய பிரமிடுலே சவுண்ட் அண்ட் லைட் ஷோ இருக்கு. அங்கே போறோம். ஆனால் நான் கூட இருக்கமாட்டேன். இன்னொரு இளைஞர் வருவார்'னு ரெய்னா சொல்லிட்டுத்தான் போனாங்க. குடும்பத்தையும் கவனிக்க வேணுமா இல்லையா?

பாலைவனம் என்றதால், குளிர் அதிகமா இருக்கும்.  அதுக்கேத்தமாதிரி உடைகள் போட்டுக்கணுமாம். இப்ப குளிர்காலம் வேற அங்கே!  என்ன பெரிய குளிர்.... நாம் பார்க்காததான்னு இருந்தேன்.  நம்ம பயணம்  இந்தியா மட்டுமேன்னு ஆரம்பத்திட்டத்தில் இருந்ததால்  குளிருக்குத் தேவையான உடைகள் ஒன்னும் கொண்டும்போகலை. ப்ளைட்லே சில சமயம் வேண்டி இருக்குமுன்னு ஆளுக்கொரு லைட் வெயிட் ஸ்வெட்டர் மட்டும்தான்.  அதெல்லாம் போதாதுன்னு கீழே ஹொட்டேல் ஹௌஸ் கீப்பிங்கைக் கூப்பிட்டு, ஒரு கம்பளிப்போர்வை வேணுமுன்னதும் கொண்டு வந்து கொடுத்தாங்க. அதைத் தூக்கிக்கிட்டுப் போகணுமாம். 'நம்மவர்' கட்டளை.

அறையில் இருந்தவைகளைக் கொண்டு காஃபி போட்டுக் கொடுத்தார்.  சூடாக் குடிச்சதும்  களைப்பு போனமாதிரி இருக்கு.  ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பிக் கீழே லாபிக்குப் போனோம்.  நல்ல கூட்டம். கலகலன்னு இருக்கு!

ஆறுமணிக்கு, அஸீஸ் என்ற இளைஞர்வந்து அறிமுகப்படுத்திக்கிட்டார்.  அவர்தான் இப்ப நமக்குக் கைடு.  சுருக்கமாச் சொன்னா அப்துல் அஸீஸ்.  வாசலுக்கு   இஸ்லாம் வண்டியைக் கொண்டு வந்ததும் புறப்பட்டோம். ஆறுமணிக்கே இங்கெல்லாம் நல்ல இருட்டு!  கய்ரோ ஸிட்டியில்  வேலைக்கு வந்துட்டு  கார்களில் வீடு திரும்பும் கூட்டம் நைல் நதிப் பாலத்தில் நெருக்கிப்பிடிச்சு அடைச்சு நிக்குது! 

ஒரு வழியா  பெரிய பிரமிடாண்டை இந்த ஷோ நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அஸீஸ் போய் டிக்கெட் வாங்கிவந்து கொடுத்தார். எவ்ளோன்னு தெரியலை.
காலத்துக்கேத்தாப்படி  விலை ஏறுமோன்னு பார்த்தால்.... இங்கே இங்லிஷ் மட்டுமில்லாமல் இன்னும் சில மொழிகளில் இதே ஷோ நடத்துறாங்களாம். ப்ரெஞ்சு, ஸ்பானிஷ், சைனீஸ்  மொழிகளிலும் ஷோ நடக்குது. தினமும் மாலை ஏழு மணிக்கு இங்லிஷ். அப்புறம் எட்டு மணி ஷோவில்  மேலே சொன்ன மொழிகளில் வெவ்வேற நாட்களில்.  வியாழக்கிழமை மட்டும் ராத்ரி ஒன்பது மணி ஷோ அரபிக்கில். ஞாயித்துக்கிழமை சீனருக்கு !அதான் எல்லாத்துக்குமா ஒரே டிக்கெட்:-)
இப்பக் குளிர் காலம் (அக்டோபர் முதல் ஏப்ரல் வரை)என்றதால் ஏழு மணிக்கு நடக்கும் இந்த ஷோ கோடை காலத்தில் (மே முதல் செப்டம்பர் வரை) ஏழரைக்காம். இஸ்லாமியர்களின் நோன்பான ரம்ஸான் மாசத்தில் மட்டும்  எட்டுமணிக்குத்தான் ஷோவே ஆரம்பம். போக விரும்புறவுங்க பார்த்துக்குங்க.
இங்கே இந்த நாட்டில்   அஞ்சு  ஊர்களில்  இப்படி  சவுண்ட் அண்ட் லைட் ஷோ நடக்குதுன்னாலும்  இங்கே பெரிய பிரமிட்தான் இவைகளிலும் மூத்தது.  ஜனாதிபதி Gamal Abd El-Naser  காலத்துலே 1960 இல் தான்  அவரே வந்து ஆரம்பிச்சுருக்கார். ஆச்சு 59 வருஷம். இந்தப்பதிவு எழுதும் சமயம் அறுபது ஆச்சு :-)
ஒரு வெட்டவெளியில் நிறைய ஸ்டீல் சேர்கள் போட்டு வச்சுருக்காங்க.  நிறைய டூர் க்ரூப் மக்களும்  வந்து சேர்ந்துக்கிட்டாங்க. உள்ளே வரும் வழியில் கம்பளி சப்ளை நடக்கறதை அப்புறம் தெரிஞ்சுக்கிட்டோம். ஒரே நிறம். நாங்க மட்டும்தான்  வேற நிறம் :-)
சரியா ஏழு மணிக்கு விளக்குகளை அணைச்சதும் ஸ்பிங்க்ஸ் பேச ஆரம்பிச்சது !   ஈஜிப்ட் மன்னர்கள் சரித்திரம், பெரிய பிரமிட் கட்டுன மகன் சரித்திரம், எப்படி அவர் தனக்கான பிரமிட்டையும் கட்டினார் என்பதையெல்லாம்  ஒலியில் கேக்கறோம். 
 மூணு பிரமிட் மேலேயும்  வெவ்வேற நிறத்தில் ஒளி வந்து போகுது. இதெல்லாம் நல்லாத்தான் இருந்தாலும்....  கதை சொல்லிக்கிட்டு இருக்கும்  வெள்ளைக்காரக்குரல் என்னவோ கரகரன்னு கேக்குது.  ஆரம்பகாலத்துக் குரலை இன்னும் அப்படியே வச்சுருந்தால் எப்படி? இப்பத்தான் இந்த அறுபது வருஷங்களில்  டெக்னிக்கலா வீடியோ ஆடியோவில் எவ்வளவு முன்னேற்றம் வந்துருக்கு. அதைச் சரி செய்யக்கூடாதோ? கொஞ்சம் போராக இருந்தது உண்மை.

நாங்க இதுவரை ரெண்டு மூணு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிகள் பார்த்துருக்கோம். அதுலே எனக்குப் பிடிச்சது என்னன்னா..... குஜராத் பயணத்தில் சோம்நாத் கோவிலில் பார்த்ததுதான். அம்ரிஷ்புரி கதை சொன்னார்.  நல்ல கம்பீரமான குரல் ! அருமை ! 

'நம்மவர்' வேற குளிர் அதிகமா இருக்குன்னு கம்பளிக்குள்ளே என்னை மூடியே வச்சுட்டார். கைகள் உள்ளே மாட்டிக்கிச்சு. கொஞ்சம் அசைஞ்சால் கம்பளி நழுவிருது.  'உனக்கு ஆஸ்த்மா  இருக்குன்றதை மறந்துடாதே.... அப்புறம் இழுத்துக்கிட்டுப் போகப்போகுது'ன்னு மிரட்டல் வேற ! அதனால் வீடியோ க்ளிப் ஒன்னும் எடுக்கலை. (எனக்குத்தான் கை இல்லையே... அப்ப எப்படி எடுப்பேன்? ) மிரட்டலையும் மீறி அப்பப்பக் கொஞ்சம் படங்கள் மட்டும் எடுத்தேன். 'நம்மவரும்'  கொஞ்சம் படங்கள் எடுத்தார்.





இதுக்குள்ளே  ஒரு செல்லம்  அரங்கத்தில் நுழைஞ்சு  இங்கேயும் அங்கேயுமா குறுக்கே நெடுக்கே ஓடி முடிச்சு, கடைசியில் என் பக்கத்துலே வந்து உக்கார்ந்துக்கிச்சு. க்ளியோவைத் தேடிக் கண்டு பிடிச்சுருச்சோ !  ஹாஹா... கம்பளிக்கடியில் கையை நீட்டிக் கொஞ்சம் தலையைத் தடவிக்கொடுத்தேன். அவ்ளோதான் காலடியில் படுத்து ஒரே தூக்கம்.


சுமார் ஒரு மணி நேரம் நடந்தது இந்த ஷோ! அது முடிஞ்சாட்டுக் கிளம்பினோம். அங்கேயே ஒரு கூடாரம் போட்டு சாப்பாடு விளம்புறாங்க. அதுக்குத் தனியா டிக்கெட் வாங்கி இருக்கணும்.  என்ன சாப்பாடுன்னு வேற தெரியலை....     எதுக்கு வம்புன்னுட்டு போகலை. நேரா ஹொட்டேலுக்கே வந்துட்டோம்.  இங்கேயே ரூம் சர்வீஸில் சாப்பாடு ஆச்சு.  இங்கே என்ன ஆர்டர் செஞ்சாலும் ஒரு கூடை நிறைய ஈஜிப்ஷியன் ப்ரெட்ன்னு கூடவே அனுப்பி வச்சுடறாங்க.  எல்லாம் அட்டை போல இருக்கு. நாமும் அதை அப்படியே திருப்பி அனுப்பிக்கிட்டு இருந்தோம்.
ஈஜிப்டில் எக்கச்சக்கமான பிரமிடுகள் இருந்தாலும் ஒரு எம்பது பிரமிட்கள் மட்டும் கொஞ்சம் உருப்படியா  இருக்குன்னு  சொல்றாங்க. நாம் அதுலே ஒரு ஏழெட்டைத்தான் பார்த்தோம்.  அதுவே யதேஷ்டம்.... ஒரு பானை சோத்துக்கு... ஒரு சோறு.. பதம், போதாது?

தொடரும்........ :-)