Friday, February 07, 2020

ஜெய் பவானி !! ( பயணத்தொடர் 2020 பகுதி 11 )

வளாகத்துக்குள் நுழையும்போதே வாசல்  முகப்பில்  முரசொலி !  நுழைவுக்கட்டணம் அஞ்சே ரூபாய்!  மாநில அரசின் பொறுப்பில் இருக்கு.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.



பின்பக்கம் இருக்கும் தோட்டத்தைச் சுத்தியே இருக்கும் ஹால்களில்  சிவாஜி மஹாராஜ் அவர்களின்  உடை,  வாள், மற்றும்  போரில் பயன் படுத்திய ஆயுதங்கள், பொருட்கள் இப்படி......
நானும் பார்க்கிறேன்.... படம் எடுக்க, வீடியோ எடுக்க அனுமதி இல்லைன்ற இடங்களை  வலையில், இல்லே யூட்யூபில் தேடினால்  கிடைச்சுருது. அவுங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைச்சதுன்னு தெரியலையே....   அஃபிஸியல் வீடியோவோ என்னமோ?  எதாக இருந்தாலும்  வலையேத்தியவருக்கு நம் நன்றிகள் !

இப்பக்கூட சத்ரபதி சிவாஜி மஹாராஜ் அவர்களின்  ம்யூஸியம் வீடியோ க்ளிப் ஒன்னு , எட்டரை நிமிட் நம்ம பதிவில் ஷேர் பண்ணி இருக்கேன். விருப்பமும் நேரமும் இருந்தால் பார்க்கலாம்...

ரொம்பப் பெரிய ம்யூஸியம் இல்லை. ஆனால் சரித்திர முக்கியத்வம் உள்ளது.  ஒரு அரை மணி நேரத்தில்  பார்க்க முடிஞ்சது.

வாசலில் ஜிவாஜி மஹாலேவின் சிலை.... நன்றி சொல்லும்  வகையில் வச்சுருக்காங்க. இவர் ஷிவாஜி மஹாராஜாவின் மெய்க்காப்பாளர் !  ப்ரதாப்கர் போரில் அஃப்ஸல்கான் நயவஞ்சகமாக ஷிவாஜி மஹாராஜாவைக் கொல்லத் தீர்மானம்  செஞ்சு,  அவரைக் கட்டிப்பிடிச்சுத் தழுவும்போது, அதுவரை மறைச்சு வச்சுருந்த  நைஸாகப் பிச்சுவாவை எடுத்து ராஜாவைக் குத்தறான். ஏற்கெனவே அஃப்ஸல்கானை நம்ப முடியாது என்றபடியால், சந்திப்புக்குப் போகும்போது  சங்கிலிக் கவசம் போட்டுக்கிட்டு, அதுக்குமேலே உடைகளை அணிஞ்சுக்கிட்டுப்போன ஷிவாஜி மஹாராஜா,  கவசம் காரணம் தப்பியதுடன், தன் கையில் மறைச்சு மாட்டியிருந்த புலிநகத்தால்  அஃப்ஸல்கானின் வயித்தைக் கிழிச்சு அவனை சாமிகிட்டே  அனுப்பிடறார்! (இந்த அஃப்ஸல்கான், ஔரங்கஸேபின் ஆணைப்படி ஏற்கெனவே  அரசரின் மூத்த மகன் சம்பாஜியைச் சித்ரவதை செஞ்சு  கொன்றவன். ) இந்த சம்பவத்துலே  அரசரின்   முக்கிய மெய்க்காப்பாளர்தான் ஜிவாஜி மஹாலே!

சரித்திரத்துக்குள்ளே புகுந்து பார்த்தால்  எல்லாம் ரத்தக்களறிதான். 
டிசம்பர் மாசம் குளிர்காலமுன்னு சொன்னாலும்.....  நல்ல சூடுதான்.   ஊமை வெயில்தானேன்னு இருக்க முடியாது. வேர்த்து விறுவிறுத்துத்தான் போகுது.  இப்படி அலையவேணாம். பேசாம  ஹொட்டேலுக்குப்போய் ரெஸ்ட் எடுக்கலாமுன்னார் 'நம்மவர்'.  அதேபோல  திரும்பிப்போய் ட்ராவல் வண்டியைத் திருப்பி அனுப்பிட்டோம்.
கொஞ்ச நேரம் வலை மேயல், தூக்கம் இப்படிப் போயிருச்சு.  சாயங்காலம்   ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பைப் பார்க்க வேணாமா? சின்னதா ஒரு வாக் போயிட்டு, அப்படியே கீழே தோட்டத்தையும் பார்த்துட்டு வந்தால் ஆச்சுன்னு  நினைக்கும்போதே  கீழே பேண்ட் வாத்ய சத்தம். ஜன்னலில் எட்டிப் பார்த்தால் அலங்காரக்குடைகள் !  மணி ஆறரைதான் ஆகுது. அதுக்குள்ளேயான்னு கீழே போனோம்.

அலங்கரிச்ச வெள்ளைக்குதிரை மேலே மாப்பிள்ளைப்பையர், ஒரு சின்னக்குழந்தையோடு உக்கார்ந்துருக்கார்.  ஜானவாசக்காரில் நண்டும் சிண்டுமா ஏறி மாப்பிள்ளையைச் சூழ்ந்துக்கறாப்போல.....  குதிரையில் ஏறி உக்கார்ந்துக்கறதும் வழக்கம் போல!  மாப்பிள்ளைத் தோழன் :-)

பாண்டு வாத்ய கோஷ்டியிலேயே ஒருத்தர் நடுவிலே நின்னு ஆடிக்கிட்டு இருக்கார். குதிரைக்காரப் பையர்,  வேகவச்ச மக்காச்சோளமோ என்னவோ ஒரு பேஸினில்  வச்சுக் குதிரைக்கு ஊட்டிவிட்டுக்கிட்டு இருக்கார்.  நல்லது. பசியோடு இருக்கவேணாம்.... நடக்கத்தெம்பு வேணாமா அதுக்கும்? தயிர் சேர்த்த மக்காச்சோளமா என்ன...  ஸாலட்  ?

மாப்பிள்ளை ஒரு ஓரமாத்தான் நிக்கறார்.... மத்த சனம்தான் தாளத்துக்குத் தகுந்தாப்ல  ஆடிக்கிட்டு இருக்கு.  மாப்பிள்ளை கையில்  மொய்க்கவர்களைத் திணிச்சுக்கிட்டே இருக்காங்க.  அதை அப்பப்ப, மாப்பிள்ளையின் சொந்தக்கார அம்மா பக்கத்துலே நின்னு வாங்கி வச்சுக்கறாங்க.
மாப்பிள்ளைத் தோழர் ரொம்பக் களைச்சுப் போயிட்டார் போல.... அப்பப்பத் தூங்கி விழறார்.   கூடவே வரும் இன்னொருவர், குழந்தையைத் தூக்கப்போனால். சட்னு முழிப்பு வந்துருது. 'இறங்கமாட்டேன்...போ'......  பாவம்  மாப்பிள்ளை.... குழந்தையை (விழாமல் ) பார்த்துக்கும் பொறுப்பு இப்போவே வந்துருச்சு........  :-)

ஊர்வலம்  இங்கே முன்பக்கத்தோட்டத்தைச் சுத்திதான் வருமாம். நின்னு நின்னு, சனம் ஆடி ஆடி வர எப்படியும் ஒரு ஒன்னரை மணி நேரம் ஆகுமாம்.  அலங்காரக்குடைக்குள்    சரஞ்சரமா குட்டிபல்புகள் மின்னுது.  இதுக்கெல்லாம் பவர் சப்ளைன்னு ஊர்வலத்தின் கடைசியில் ஒரு ட்ரக் மெள்ள ஊர்ந்து வருது.  பெட்ரோமாக்ஸ் லைட்டெல்லாம் போயே போச் !!!!
அவுங்க கிளம்பி வருமுன் நாங்க கொஞ்சம் முன்னாலேயே நடந்துபோய்  ஊர்வலத்தின் ஆரம்பத்தை வேடிக்கைப் பார்த்துட்டு முன்பக்கத்துலே ஹொட்டேல் வாசலுக்கு நேரா இருக்கும் பகுதிக்குள் நுழைஞ்சு திரும்ப வர்றோம். அங்கே தனியா ஒரு நாலுபேர் குழு மேளம் அடிச்சுக்கிட்டு இருக்காங்க.

இந்தக் கல்யாணத்துக்கு இல்லையாம்.... வேறொரு விழாவாம்.  அதுக்குத்தான்னு சொன்னாங்க.
நீரூற்று அலங்காரம் பார்த்துட்டுத் திரும்பி வந்தால்  ஹொட்டேல் வரவேற்பில் திரும்ப ஒரே கூட்டம்.ரெண்டு பொட்டி நிறைய  ரோஸ் கலர்த்துணிகளை வச்சுக்கிட்டு,  வர்ற ஆண்களுக்கெல்லாம் பகடி கட்டிவிட்டுக்கிட்டு இருக்காங்க. விழாநாயகனோ என்னவோ, அவருக்கு மட்டும் ஜிலுஜிலுத் துணியில் !
என்ன விசேஷமுன்னு பார்த்தால் கல்யாணநாள் கொண்டாட்டமாம்.  எத்தனையாவது? நாலாவது !  ஹா............  முகத்தைத் திருப்பி  'நம்மவரை'ப் பார்த்தேன். நாப்பத்தியஞ்சு வருஷம் கடந்து ஆறு மாசம் கூடவே ஆகி இருக்கு.....  இந்த அளவுக்கு இல்லைன்னாலும்  சின்னதா கொண்டாடி இருக்கலாமுல்லே......
கீழ்தளத்தில் அந்தாண்டை இருக்கும் ஹாலில் விழா நடக்குதாம். இவுங்களோட விருந்தினர்களை வரவேற்க தனி மேசை, அலங்காரம், பூக்கள் இப்படி.....   வாவ்.....

நாஞ்சொல்லலை.... இந்த ஹொட்டேலில்  நம்மைப்போல் இருக்கும் மக்கள் தங்கி அதில் வரும் வருமானத்தை விட,  கல்யாணம் காட்சின்னு வாடகைக்கு விடுவதில்தான்  எக்கச்சக்க வருமானம் வருது !
பின்பக்கத்தோட்டத்தில் கல்யாணப்பந்தல் ஜிலுஜிலுன்னு அலங்காரத்தில் மின்னுது. அங்கேயும் விருந்தினர் கூட்டம்தான். பொண்ணு வீட்டுக்காரங்க போல! மாப்பிள்ளை வீட்டு மனுஷாள் எல்லாம்  இன்னும்  பராத்தில் ஆடிக்கிட்டு இருக்காங்க.

அறைக்குத் திரும்பிப்போய் கைவசம் இருந்த பழங்களையும், கொஞ்சம் தீனிகளையும் முடிச்சுட்டு சுமையைக் குறைத்தோம்.  நாளைக்குக் காலை செக்கவுட் செய்யறோமே....

எட்டரை மணி போல கீழே வாத்ய சப்தம் பலமாக் கேட்டதும் ஜன்னல் வழி பார்த்தால்  பராத் முடிஞ்சு திரும்பிட்டார் மாப்பிள்ளை.

கல்யாணவீட்டு சமாச்சாரத்தை விடமுடியலை. நாம் பக்கத்தில் இருந்து பார்த்ததைச் சொல்ல வேணாமோ?

எல்லாம் நல்லபடி நடக்கட்டும். நாம் கொஞ்சம் சீக்கிரம் தூங்கலாம்.  நாளைக்கு ஒரு பயணம் இருக்கே...
பொழுது விடிஞ்சது.  'த சொஸைட்டி' காலையில் ஆறேமுக்காலுக்கே  திறந்துடறாங்க!  இட்லி வடை கிடைச்சது.  முடிச்சுட்டு வந்து  மூட்டைமுடிச்சுக்களை எடுத்துக்கிட்டு அறையைக் காலி பண்ணறோம்.  வரவேற்பில் இருந்த அஷ்வினி, இந்த மூணு நாட்களில் நமக்கு ரொம்பவே ஃப்ரெண்ட் ஆயாச்சு.  தனி செல்நம்பர் கொடுத்து என்ன உதவி வேணுமுன்னாலும் கூப்பிடச் சொன்னாங்க.

இந்த ஹொட்டேலில் மரச்சாமான்கள், மரச்சிற்பங்கள்  எல்லாம் ரொம்பவே அழகு! நம்ம கார்த்திக்ஸ்வாமி கூட இருக்கார்!
ஏழே முக்காலுக்குச் சொன்ன வண்டி கொஞ்சம் லேட்டா வந்து, கிளம்பிப்போறோம். நம்ம நதீம்தான் டிரைவர்.  ஔரங்காபாதில் இருந்து ஒரு நூத்தியொரு கிமீதூரம்தான்.  மூணரை மணி நேரமாகுமுன்னு கூகுள்  சொன்னதால்,  கூட ஒரு மணி நேரம் கூட்டிக்கணும்தான். இந்தியச் சாலைகளும் போக்குவரத்தும் அந்தப்படிக்கு இருக்கே....

போற வழியெல்லாம்   அங்கங்கே  கூம்பு கோபுரத்தோடு சின்னச் சின்னக்கோவில்கள், புத்தர் சிலை, நம்ம ஆஞ்சின்னு  கண்ணில் பட்டுக்கிட்டே வருது.  யோசிச்சு அங்கெ ஒன்னும், இங்கெ ஒன்னுமா க்ளிக்கறேன்.

சிக்கனம் தேவை. ரெண்டு பவர் பேங்க் வச்சுருந்தும்  பயனில்லை. முந்தாநாள் எல்லோரா குகைகளைப் பார்த்து முடிச்சுட்டுக் கிளம்பும்போது  செல்லில் பேட்டரி காலி.  அதான் அந்த எல்லோரா ரிஸார்ட்டில் படங்கள் எடுக்க முடியலை.  பவர்பேங்க்தான் இருக்கேன்னா.... அதை வண்டியில் வச்சுட்டு வந்துருந்தார் 'நம்மவர்'.
புடவைக்கடையில் படம் எடுக்க பவர்பேங்கை இணைச்சால் சுத்தம்.... ரெண்டும் சரி இல்லை...ப்ச்.  என்னவோ போங்க......  புதுசுபுதுசா வாங்கிக்கிட்டே இருக்கணும் போல்....

இதெல்லாம் நாயர் பிடிச்ச புலிவால்......  இப்ப ரெண்டையும் ஃபுல்லா சார்ஜ் பண்ணித்தான் கொண்டு வந்துருக்கோம் என்றாலும்கூட.... நம்பமுடியாது....  அதிலும் இப்போப் போற இடம் என்  வாழ்நாள் ஆசைகளில் ஒன்னு!

தொடரும்......... :-)

Wednesday, February 05, 2020

பொண்ணழைப்பும் போஜனமும் !(பயணத்தொடர் 2020 பகுதி 10 )

நம்ம நதீம் கொடுத்த லிஸ்ட்லே நாலு இடம் ஆச்சு.  சித்தார்த் கார்டன் & Zoo போகும் ஐடியா இல்லை.  அப்ப ம்யூஸியம்  மட்டும்தான்.  போய் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டால்  நிதானமா ம்யூஸியம் சுத்தலாமேன்னு  நம்ம ஹொட்டேலுக்கு திரும்பினோம்.  கேட்டுக்குள் நுழையும்போதே கோலாகலமா இருக்கு. பாண்டு வாத்ய கோஷ்டி  முழங்கிக்கிட்டு இருக்காங்க.  என்னன்னு பார்த்தால் பாராத்!   இது எனக்குப் புதுசு. ஏன்?  பொண்ணு அழைப்பு!

அந்தக் காலத்துலே பிள்ளை வீட்டுக் கல்யாணமுன்னா, பொண்ணு அந்த ஊருக்குள் நுழையும்போது பெண்ணழைப்புன்னு  ஒன்னு இருக்கும். ஜானவாசம் போல ஜானகி வாசம் :-)எங்க பெரியக்கா கல்யாணம் மாப்பிள்ளை வீட்டுலேதான் ! வட இந்தியாவில் பொண்ணழைப்பு இருக்காதுன்னு ஒரு நெனப்புதான்........
அப்ப மாப்பிள்ளை அழைப்பு இல்லையான்னு கல்யாணவீட்டுக்காரர்களைக் கேட்டால், சாயங்காலம் ஏழு மணிக்காம். இங்கெயேதான்னார்.
டாப் திறந்த காரில் பொண்ணு ஊர்வலம்.  அதீத மேக்கப் ஒன்னும் இல்லாம ரொம்ப சாதாரணமா இருந்தாங்க. காரில் உக்கார்ந்து வர்றதைப் பார்க்காம இருந்துருந்தா....  அவுங்கதான் கல்யாணப்பொண்ணுன்னு நம்பி இருக்கமாட்டேன்.....   ரொம்பப் பெரிய இடம் போல.....   அதான் சிம்பிளா இருக்காங்க.  ஹொட்டேல் வாசலில் வண்டி நின்னதும் பொண்ணு இறங்கி, தோழிகள், உறவினர்களோடு சேர்ந்து ஆடறாங்க.  நின்னு ரசிச்சு, க்ளிக்கின்னு எல்லாம் ஆச்சு.


கல்யாணமே கொண்டாட்டம் இல்லையோ!   நேரம் போனதே தெரியலை. அப்புறம் பார்த்தால் மணி ரெண்டாகப்போகுது.  (பேசாமக் கல்யாணக்கும்பலோடு போய் சாப்புட்டுருக்கலாமோ !  ஹாஹா)
வலையில் பார்த்துவச்ச  இடத்துக்குச் சாப்பிடப்போனோம். சையது வேற இடத்தில் சாப்புடுவாராம். ரெஸ்ட்டாரண்டுக்குப் பெயர் போஜ்.  இது அந்த போஜ் (சுமை) இல்லை  போஜனம் என்பதன் சுருக். 
முகப்புலே புள்ளையார் அன்றைய தின போஜனத்தை ரசிச்சுக்கிட்டு இருந்தார்.  இத்தனை வகையை எப்படி முழுங்கறதுன்னு மலைப்பு   (எனக்கும்தான்!)
முதலில் ஒரு ஹாலில்  வடக்கர்கள் சம்ப்ரதாயமா உக்கார்ந்து சாப்பிடும் வகையில்  இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. அநேகமா ராஜஸ்தான் மக்களுக்காக இருக்குமோ?  பகடிகளைப் பார்த்தால் அப்படித் தோணுச்சு. எதாவது பார்ட்டி/ தனியார் விழாவுக்காக இருக்கலாம்.

அடுத்த பெரிய ஹாலில்  மேஜைகளும் நாற்காலிகளுமா டைனிங்! பெரிய தட்டும், ஏகப்பட்டக் குட்டிக்கிண்ணங்களுமா பரபரன்னு பரிமாற ஆரம்பிச்சாங்க.




என்ன ஒரு நல்ல விஷயமுன்னா.... எல்லாம் சின்னச் சின்ன போர்ஷன். பிடிச்சுருந்தா இன்னும் வாங்கிக்கலாம்.
அன்லிமிட்டட் மீல்ஸ்தான். பஞ்சாபி, குஜராத்தி, ராஜஸ்தானி வகை சமையல்களாம். மராட்டி இல்லை போல.....
இதுதான் மெனு.... நீங்களே பாருங்க.....
இது மொத்தத்துலேயும் எனக்கானவை ரொம்பக் குறைவான ஐட்டங்களே.....  ஆனால் கண்ணால் நிறைய சாப்பிட்டேன்.

சாப்பிடும்போது படம் எடுக்க முடியாமல் போச்சுன்ற குறை இருந்தது.....   கடைசியில் 'பான்' வந்தது. க்ளிக் ! போதும்.  வாயில் போட்டுக்க வேணாம்.
இங்கே பார்ஸல் கூட வாங்கிக்கலாமாம். ஐ மீன் சாப்பாடு ! பரவாயில்லையே......
சாப்பாடு ஆனதும்,  அஞ்சு நிமிட் ரெஸ்ட். இதோ   கிளம்பி நேரா ம்யூஸியம் போறோம்.

தொடரும்........ :-)


Monday, February 03, 2020

திருகைக்கல்லில் மாவு அரைக்கணுமா? (பயணத்தொடர் 2020 பகுதி 9 )

ஔரங்காபாத் நகரை நிர்மாணிச்சப்ப, ஊருக்குள் வர்றதுக்கு  எத்தனை நுழைவு வாசல் (Gate)கட்டி விட்டுருந்தாங்கன்னு  தெரியுமோ?  ஒன்னு ரெண்டு இல்லை.....  கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்....   மொத்தம் அம்பத்திரெண்டு !
அம்மாடியோ.......  எதிரி படையெடுத்து வரும்போது, 'கோட்டை வாயிலை மூடுங்கள்'னு உத்தரவு போடுவாரே அரசர்.....   இங்கே அம்பத்திரெண்டு வாசலை  மூடணுமுன்னா பாருங்க.... விடிஞ்சுரும்.......  இல்லே?  இந்த ஊருக்கே 'சிடி ஆஃப் கேட்ஸ்' னு  ஒரு பெயர் இருக்காம்!
அப்படி ஒரு கேட்டாண்டை வந்துருக்கோம் இப்போ.  கேட்டுக்கு முன்னால் ஒரு பாலம். பாலத்தையொட்டி இருக்குமிடம் சரித்திரப்புகழ் வாய்ந்தது!  பன்சக்கி!
தண்ணீரின் விசையால் மாவு அரைக்கும் இடம்.  பானி ன்னா தண்ணீர், சக்கி..ன்னா. அரைக்கும் இயந்திரம் (திருகைக்கல்)  அதான் பானி கா சக்கி என்றது பன்சக்கின்னு  ஆகி இருக்கு.

சொனேரி மஹலில் இருந்து  மூணு கிமீ தூரத்துக்கும் குறைவுதான்.  ஊருக்குள்ளே கம்நதின்னு ஒரு ஆறு ஓடுது. அதன் கரையில் இருக்குமிடம் இது.  உள்ளே போகப் பத்து ரூ கட்டணம் உண்டு.
சின்னதா ஒரு கேட் போட்டு வச்சுருக்காங்க. உள்ளே நுழைஞ்சதும்.... நமக்கிடதுபக்கம் ஆறும், வலதுபக்கம்  பெரிய குளம் போல ஒன்னும்... தண்ணீர் நிரம்பி வழிஞ்சுக்கிட்டு இருக்கு.  மேலே கட்டட அமைப்பில் இருந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் தபதபன்னு கொட்டிக்கிட்டு இருக்கு!
அகலமான பாதையின் ஒரு பக்கம் கடைகளோ கடைகள்.  மார்கெட் ஏரியாவுக்குள்ளே வந்துட்டோமா என்ன?  புடவைக்கடை முதல், கைவினைப்பொருட்கள் விற்கும் கடை வரை.....  சுடச்சுட 'பஜ்ஜியா' போட்டு  வச்சுக்கிட்டு இருக்காங்க. எண்ணெய்க் கடாயை எட்டிப் பார்த்தேன்.........  ஐயோ..........  இத்தனை கருப்பா, ஒரு எண்ணெயைப் பார்த்ததே இல்லை.......
இங்கே ஒரு பெரிய ஆலமரம்,இருக்கு. வயசு அறுநூறு !  இந்த மரத்தையும் , குளக்கரையில் இது நிற்கறதையும் பார்த்து, எனக்கென்னமோ நம்ம 'ஜ்யோதீசர்'  (கீதை சொல்லப்பட்ட இடம், குருக்ஷேத்ரம்) ஞாபகம் வந்தது உண்மை !
மரத்துக்கு அந்தாண்டை நமக்கிடதுபக்கம் இருக்கும் வாசல் வழியாப் போனால்,  அங்கே ஒரு தர்கா இருக்கு!  ஒரு மசூதியும்.  தொழுகைக்கு முன்னால் சுத்தப்படுத்திக்க ஒரு சின்னக்குளம் வச்சுருக்காங்க.  நம்ம செல்லங்கள்  ஏராளமா அங்கே சுத்திக்கிட்டு இருந்தாங்க. அழகான தோட்டம் வேற !





என்னன்னு பார்த்தால் முஸாஃபிர் பாபாவின் தர்காவாம். முன்ஹாலைக் கடந்துபோனால் அந்தாண்டை இன்னொரு ஹாலில் ரெண்டு சமாதிகள். சத்தர் விரிப்பு போர்த்தி இருக்காங்க. இதுக்குள்ளே போக பெண்களுக்கு அனுமதி இல்லைன்னு சொன்னதால் 'நம்மவர்' மட்டும் உள்ளே போயிட்டு வந்தார்.
அந்தக் காலத்துலே  ருஷ்யாவின் ஏதோ கிராமத்தில் இருந்து வந்த சூஃபி ஞானியின் சமாதியாம். ரொம்ப நல்ல அறிவுரைகளும் ஆலோசனைகளும்  சொல்லி, அது மக்களுக்குப் பிடிச்சுப்போய் அவரை குருவாக ஏத்துக்கிட்டுப் பலர் சிஷ்யப்பிள்ளைகளா ஆகி இருக்காங்க.  உள்ளூர் வெளியூர் மக்கள் பலர் இவர் தரிசனத்துக்காகவும், அறிவுரை, ஆலோசனைக்குமா வந்து குவிஞ்சுருக்காங்க.  இப்படி வந்தவங்களுக்குச் சாப்பாடு போடணுமே.... அதுக்கான மாவு அரைக்கத்தான் நீர்சக்தியைப் பயன்படுத்தியிருக்காங்க !  அப்புறம் ஔரங்கஸேபின் படை வீரர்களுக்கும்  இது பயனாகி இருக்கு!
மூணேமுக்கால்மைல் தூரத்துலே ஓடும் ஆற்றுத்தண்ணீரை, சுட்டகளிமண் (டெர்ரகோட்டா) குழாய்கள் வழியா இங்கே கொண்டுவந்து, அது மேலிருந்து கீழே விழும்போது, ஒரு ஃபேன் விசிறியைச் சுத்திவிட, அது சுழலும்போது திருகைக்கல் சுத்தும் விதம் அமைச்சுருக்காங்க. அந்தக் காலத்துலே எவ்ளோ அற்புதமான யோசனை பாருங்க ! வில்லேஜ் விஞ்ஞானம்! ( இதே போல  தண்ணீரின் விசையால் சுழலும் ப்ரேயர் வீல்ஸ் முக்திநாத் கோவிலில் பார்த்தமே நினைவிருக்கோ? )
இங்கே இருக்கும் திருகைக்கல்லைப் போய்ப் பார்க்க முடியுமாம்.  தனிப்பட்ட ஆளுக்குக் காசு கொடுத்தால் கூட்டிப்போய் காட்டுவாராம்.  ஆனால் அதுக்கான விவரம் ஒன்னும் அப்போ  நமக்குத் தெரியாமப் போச்சே.... அதனால் பார்க்கலை. அதுக்காக விடமுடியுமோ?   புண்ணியவான் யாரோ இங்கே யூட்யூபில் போட்டுவச்சது  இருக்கு.  ஒரு ஆறு நிமிட் வீடியோ க்ளிப். அதையே நாமும் பார்க்கலாம் ! அன்னாருக்கு நன்றி !

அதுக்கான சுட்டி ஒன்னும் கீழே கொடுத்துருக்கேன். எது வேலை செய்யுதோ அது !

https://www.youtube.com/embed/l--fCNJ94Dg

முஸாஃபிர் பாபாவுடைய சமாதியும் (Hazrat Mohammed Saeed. Musafir Baba) அவருடைய சிஷ்யப்பிள்ளை  Mohammed Ashur (also called Baba shah) சமாதியும்தான் உள்ளே இருக்கு!  இப்பவும் நிறையப்பேர் இங்கே வேண்டிக்கறதாகவும்,  அந்த வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும்  சொல்றாங்க.  நம்பிக்கை வச்சாத்தான் கடவுள் என்பது ரொம்பச் சரி, இல்லையோ?   இந்த சூஃபி ஞானிகள் நம்ம சித்தர்கள் போலன்னு  நினைக்கிறேன்.

மறுபடி ஆலமரம் வழியாக் கடைகளைக் கடந்து வெளியே போகும்போது, ஒரு கடையில் வச்சுருந்த வளைகள் கண்ணை  இழுத்தது.  மகளுக்காக   ஒரு ஜோடி வாங்கினேன். உண்மையில் இது ஒன்னு மட்டும் போட்டால் போதும்தான். ஆனால் தனி வளையல் விக்கறதில்லையாம்.  அப்ப வேறொரு  டிஸைன் மிக்ஸ் &  மேட்ச்சா  வாங்கலாமுன்னா அதுவும் முடியாதாம்.  போகட்டும், ஆளுக்கு ஒன்னு ஆச்சு :-)
விலைகூட அதிகமில்லை.....   ஜோடி நூத்தியம்பது ரூதான்.  பொதுவா நான் வாங்குற சமாச்சாரங்களை எங்கூர் டாலரில் மாத்திக் கணக்குப் பார்த்துக்குவேன். சின்ன எண்ணாக வருமே,  அதுக்குத்தான்! ஜஸ்டிஃபை பண்ணனுமா இல்லையா ?  ஹாஹா
தொடரும்.... ..  :-)