Friday, May 04, 2018

இருவர் அறுவரானது எப்படி? (@அமெரிக்கா.... கனடா 33)

நிதானமா எழுந்துக்கலாமுன்னு இருக்கும் நாள்தான் ஊருக்குமுந்தித் தூக்கம் கலைஞ்சுருது இல்லே?  இன்றைக்கு இங்கிருந்து கிளம்பறோம் என்பதால்... மனசு ஓய்வெடுக்காமல்  அடுத்து நிக்கும் வேலைகளை நினைக்க வைக்குது....

குளிச்சு முடிச்சு, பேக்கிங் எல்லாம் சரிப்படுத்திட்டு,  கைவசம் இருக்கும் தீனிகள் என்னன்னு பார்த்தால்  கொஞ்சம் பிஸ்கெட்ஸ் பாக்கி. அதையே  ப்ரேக்ஃபாஸ்ட்டா வச்சுக்கிட்டால் தப்பா?
ஒன்பதரைக்குக் கீழே வந்து  ரிஸப்ஷனில் 'செக்கவுட் செஞ்சதும் பெட்டிகளை வச்சுட்டுப் போக வசதி இருக்கா'ன்னு கேட்டுக்கிட்டுப் பின்பக்கத்தோட்டத்தைக் கொஞ்சம் சுத்தி வந்தோம்.


இதுக்கிடையில்  அண்ணன் மகள் வீட்டுக்குப் ஃபோன்போட்டு அவுங்க எல்லோரும் பத்திரமா வந்து சேர்ந்ததைத்  தெரிஞ்சுக்கிட்டு, நாமும் இன்றைக்குக் கிளம்பும் தகவலையும் சொல்லி  ஹை அண்ட் பை ஆச்சு.
பதினொன்னரைக்கு வரேன்னு சேதி அனுப்பின பத்மா  அஞ்சு நிமிட் முன்னாலேயே வந்தாங்க. கையில்  பெரூசா ஒரு பை!  நமக்குப் பரிசுப் பொருட்கள்.  தனித்தனியா பொதிஞ்சு வச்சுருக்கும் விக்கிரஹங்கள் நாலு!  ஐயோ.... எதாவது ஒன்னு  கொடுத்தால் போதுமேன்னதுக்கு  அது ஒன்னுதானாம். ஒரு செட்!  இவுங்களைப் பிரிக்கவே கூடாதாம்!  ராமர் அண்ட் கம்பெனி :-)  ரெண்டடி உயரம்!

அட ராமான்னு  பெட்டிகளைத் திறந்து, இடம் பண்ணி  ரெவ்வெண்டா வச்சு மூடும்போது இன்னொரு சின்னப்பொதியை எடுத்துக் கொடுக்கறாங்க.  செப்பு டம்ப்ளர்.  நாம் வாங்குன செப்பு ப்ளாஸ்க்குக்கு ஜோடி.

 "இன்னும் ஏதாவது இருக்கான்னு இப்பவே பொட்டியை மூடறதுக்கு முன்னாலே சொல்லிடுங்க....பத்மா ! "

பனிரெண்டு மணிக்கு எல்லாப் பொட்டிகளையும் இழுத்துக்கிட்டுப்போய் செக்கவுட் பண்ணிட்டு, க்ளோக்ரூமில் பொட்டிகளை வச்சுட்டு, நாங்க பத்மா கூடவே கிளம்பறோம்.
இந்த எடிஸன் பயணத்துலே ஒருநாளைத் தவிர மற்ற நாட்களெல்லாம் நமக்கு சாப்பாடு போட்ட அன்னதாதா இவுங்கதான்! இந்த லஞ்ச்தான் இப்போதைக்குக் கடைசி!


ஷுகர் ட்ரீ ப்ளாஸாவில் இருக்கும் ஸ்வாகத்  ரெஸ்ட்டாரண்டுக்குக் கூட்டிப் போனாங்க.
ஓனர், ரொம்பத் தெரிஞ்சவர் அவுங்களுக்கு!  வந்து  நலம் விசாரிச்சார். நம்மையும் அறிமுகப்படுத்தி வச்சாங்க !  மூணுபேரும் அவரவர் தேவைக்கு ஆர்டர் கொடுத்தாச்சு.  தோசை, பூரி,  மினி தாலி மீல்ஸ்.

நிதானமா சாப்பிட்டு முடிச்சோம். அருமையான ஃபில்டர் காஃபி !  இடைக்கிடை கதை பேசவும் மறக்கலை.  பத்மாவுக்குத்தான்  செல்ஃபோனில் சேதி வந்தவண்ணமே இருக்கு! இவுங்களும் 'அதைச் செய், இதைச்செய்'ன்னு  இங்கிருந்தே வேலைகள் நடக்க  கைடு பண்ணிக்கிட்டே இருக்காங்க.
'இன்னும் கொஞ்ச நேரத்தோடு   என் சல்யம் முடிஞ்சுடும் பத்மா'ன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன். நட்புக்காக இவ்ளோ நேரம் ஒதுக்கி, உபசரிப்பாங்கன்னு நான் கனவிலும் நினைக்கலை.....!  அவுங்க நேரத்தை எடுத்துக்கறோமேன்னு  இப்பவும் கொஞ்சம் குற்ற உணர்ச்சிதான் நமக்கு.
திரும்ப எங்களை க்ரௌன் ப்ளாஸாவில் கொண்டு வந்து விட்டாங்க. சில க்ளிக்ஸ், பிரியாவிடை, பை பை எல்லாம் ஆச்சு!
கொஞ்ச நேரத்துலேயே  அஹமத் வந்துட்டார். நாங்களும் பொட்டிகளைத் திரும்ப எடுத்துக்கிட்டுத் தயாராத்தான் இருந்தோம். கிளம்பி நேரா ஜே எஃப் கே போறோம்.  ஒரு நாப்பத்தினாலு மைல் தூரம்.  ஒருமணி நேரம் ஆச்சு!


பெரியதிருவடி வந்து வழி அனுப்பறார் !

செக்கின் பண்ணிக்கிட்டு உள்ளே போயிட்டோம். இன்னும் நிறைய நேரம் இருக்கு :-)  ஒன்னும் வாங்கறதா இல்லை....  ச்சும்மா விண்டோ ஷாப்பிங் மட்டுமே !

நியூயார்க் போகவே இல்லை.  நேத்து  செப்டம்பர் 11க்கு இங்கேதானே இருந்தோம். ' ஃப்ரீடம் டவர் பார்க்கணுமா'ன்னு  பயண ஏற்பாடு நடக்கும்போதே பத்மா கேட்டுருந்தாங்க. முன்கூட்டியே டிக்கெட் புக் பண்ணலைன்னா பார்க்க முடியாதாம். எனக்குத்தான் ஏனோ போகணுமுன்னு  கடைசிவரைத் தோணவே இல்லை.  ட்வின் டவர் பார்த்த நினைவு அப்படியே மனசில் இருக்கட்டும். அது அழிஞ்சு போன நினைவு வேணாம்.....

ஆறுமணிக்கு நம்ம ஃப்ளைட். க்வான்ட்டாஸ்தான்.  ஆனால் எல் ஏ. வரை போயிட்டு அங்கே இறங்கி ஒன்னரை மணி நேரத்தில்  இதே ஃப்ளைட்டில் ஸிட்னி போகணும் என்பதால் நாட்டை விட்டு வெளியேறும்  ஃபார்மாலிட்டியை எல்லாம்  இங்கேயே முடிச்சுக்கணும்.

வழக்கமான  செக்யூரிட்டி செக்  ( செருப்பைக் கழட்டு, ஃபுல் ஸ்கேன் பண்ணனும்  இத்யாதிகள் )  எல்லாம்  முடிஞ்சு  கடைசியில் வண்டி கிளம்பிருச்சு :-)


க்வான்டாஸின் கொடுமைகள் ஆரம்பம் ஆச்சு.   வரும்போது A380 இல் கூட்டிவந்துட்டு, இப்போ 747 .....
சாப்பாடு............  கீரையை மறந்துட்டாங்க போல....  பீன்ஸ் இருக்கு.

 நியூயார்க்லே இருந்து கிளம்பின அஞ்சு மணி அம்பத்து நிமிட்லே லாஸ் ஏஞ்சலீஸில் இறங்கியாச்சு.  இங்கேயும் விண்டோ ஷாப்பிங் மட்டுமே! மேற்கு நோக்கிய பயணம் என்பதால்.....   இங்கே  மணி ராத்திரி ஒன்பதுதான். ஒரு மணி நேரம் போரடிச்சுக்கிடந்த பின்  போர்டிங் ஆச்சு.
நமக்கு வேணுங்கற ஸீட் செலக்‌ஷனுக்கு ஆளுக்கு முப்பது யூஎஸ் டாலர் அழுதுருந்தோம்.  பதினைஞ்சு மணி நேரம், கொஞ்சமாவது காலை நீட்டி உக்கார்ந்தால் நல்லதுன்னுதான்.

எனெக்கென்னமோ இந்த ஸீட் பிடிக்கறதில்லை.  ஒரு செக்‌ஷனில் மொதல்லே இருக்கும் இதுலே கால் நீட்டிக்கும் வசதி உண்டு.  யாரும் அவுங்க ஸீட்டைப் பின்னால் தள்ளி நம்மை அசைய விடாமச் செய்யற சங்கடம் கிடையாதுதான். ஆனால்  ட்ரே, படம் பார்த்துக்க மானிட்டர் இதையெல்லாம்  கைப்பிடிக்குள் இருந்து  எடுத்து மடக்கி, எடுத்து மடக்கின்னு சல்யம்.  கண்ணாடிக்கூடு, கேமெரா, புத்தகம் எல்லாம்  வச்சுக்கும் வலைப் பை கைக்கு எட்டாத தூரத்தில்.....  ப்ச்.... என்னவோ போங்க...... நம்மாண்டை ஒரு வார்த்தை கேட்டுட்டு புக் பண்ணி இருக்கலாம்....  கடைசியில்  இவரும் அங்கே வசதியா இல்லைன்னு ஒத்துண்டார் :-)

மறுநாள்  காலை ஸிட்னி டைம் ,  ஆறு இருவதுக்கு  ஸிட்னியில்  இறங்கியாச். இங்கே இப்போ பதினாலாம் தேதி காலை.  பதிமூணாம்தேதி ....  காக்கா ஊஷ்னு காணாமப் போயிருந்துச்சு....   மேற்கே போனால் இப்படின்றதை  நினைவு வச்சுக்கணும்.

நமக்கு நியூஸிக்குப்போக  க்வான்டாஸின் கனெக்டிங் ஃப்ளைட்   சாயங்காலம் அஞ்சே முக்காலுக்குத்தான்.  பதினொரு மணி நேரம் தேவுடு காக்க வேணும்.  இது இன்னுமொரு கஷ்டம்.  இதுக்கு முன்னால் காலையில் எமிரேட்ஸ் ஏழு அம்பதுக்கு இருக்கு.  ஒருவேளை  க்வான்டாஸ் சரியான நேரத்துக்கு வராம போயிட்டால்?  அடிக்கடி இப்படி லேட்டா வர்றது அவுங்களுக்கு வழக்கம்தான்.

ஒன்பது இருவதுக்கு  ஏர் நியூஸிலாண்ட் உண்டு.  தனி டிக்கெட் வாங்கணும். ( வாங்கி இருக்கலாமோன்னு  இப்போ தோணுது...)

அவ்ளோ நேரம்  ஏர்ப்போர்ட்லேயே  உக்கார்ந்துருக்க முடியாது. ராத்திரியெல்லாம் தூக்கமில்லாம உடம்பு  இன்னும் டயர்ட் ஆகிருமுன்னு 'நம்மவர்'  ஏர்ப்போர்ட் ஹொட்டேலில் அறை புக் பண்ணி இருந்தார். ஏர்ப்போர்ட்டுக்குள்ளேயே இருக்குன்னாலும்  1.6 கிமீ தூரம் கேபின் பேகை உருட்டிக்கிட்டு நடக்க முடியுமா? ஷட்டில்தான் எடுக்கணும். அதுக்குக் காசை கட்டிட்டு வெளியில் வந்து காத்திருந்து ஒருவழியா மெர்குரி ஹொட்டேல் போய்ச் சேர்ந்தோம். இப்பவே மணி ஏழரை. ஒரே ஒரு ஆறுதல் நம்ம பெரிய பெட்டிகள் டைரக்ட்டா நம்மூருக்குப் போகுது.
அறை  தயாரா இல்லையாம்.  கொஞ்சம் உக்கார்ந்துருங்கன்னதும்,  ஆளுக்கொரு காஃபி வாங்கிக்கிட்டு லாபியில் உக்கார்ந்துருக்கோம். நாமும் அப்பப்பப் போய் அறை ரெடியான்னு கேக்கறதும், இன்னும் ஏதும் காலி ஆகலைன்னு பதில் வர்றதுமா ஒன்பது, பத்து, பதினொன்னுன்னு நேரம் போய்க்கிட்டு இருக்கு.
கடைசியில் தாங்கமுடியாம, 'அறை வேண்டாம்.   புக்கிங் கேன்ஸல் பண்ணிருங்க'ன்னு  குரல் எழுப்புனதும் (!) அடுத்தது  உங்களுக்குத்தான்னு சொல்லி அஞ்சே நிமிட்லே அறைச்சாவி கைக்கு வந்துருச்சு.

மூணு மணிக்கு அலார்ம் வச்சுட்டுப் படுக்கையில் விழுந்தோம். நல்ல தூக்கம்.  அலார்ம் அடிச்சதும் எழுந்து சட்னு ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு, நாலுமணிக்குக் கிளம்பி  டாக்ஸியில் ஏர்ப்போர்ட்க்கு(!) வந்துட்டோம். செக்கின் ஆச்சு. வளையலைக் கழட்டு. முடியலைன்னா ஷூவைக் கழட்டுன்னு  எதாவதொன்னைக் கழட்டவச்சால்தான் செக்யூரிட்டிக்கும் சந்தோஷம்.

நம்மவருக்கு ஒரே பசியாம்.  தாய் ரெஸ்ட்டாரண்டில் ரைஸ் வித் க்ரீன்கறின்னு  வாங்கிக்கிட்டு, நல்லாவே இல்லைன்னு பேய்முழி முழிச்சார்!. நல்லவேளை நான் தப்பிச்சேன். எனக்கு நல்லதா ஒரு கப்புச்சீனோ :-)



சோறு..............

அஞ்சே முக்காலுக்குக் கிளம்பி ஊர் வந்து சேரும்போது  பத்தே முக்கால். பொட்டிகள் வந்து அதை எடுத்துக்கிட்டு நேரா க்ரீன் சேனல்தான். நம்மகிட்டேதான் டிக்ளேர் பண்ணும் வகையில் ஒரு ஐட்டமும் இல்லையே....  இந்தியாவில் இருந்தா வர்றோம்?
எங்க ஊர் பயோ செக்யூரிட்டி கொஞ்சம் பயங்கரமானதுதான். பழமோ, விதையோ, பூவோ இப்படி எதுவும் நாட்டுக்குள் நுழையப்டாது. உணவுப்பொருட்கள் கொண்டு வந்தால் அதை டிக்ளேர் செஞ்சுட்டு பொட்டியைத் தொறந்து  காமிச்சால் எல்லாத்தையும்  எடுத்துப் பார்த்துட்டு, 'அபாயம்' என்று தோணுவதைக் கடாசிடுவாங்க. நார்த்தங்காய் உப்பிலிட்டது,  சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் எல்லாம்  அதிர்ஷ்டம் இருந்தால்தான் நம்ம அடுப்புக்கு வரும். பலமுறை குப்பைத் தொட்டிக்குத்தான் போயிருக்கு.  அதன் விதி அப்படி. உணவுப்பொருட்களை டிக்ளேர் பண்ணாம விட்டுருந்தோமுன்னு  தெரிஞ்சால் பத்தாயிரம் டாலர் வரை தண்டம் கட்டணும்.


ப்ளேன் லேண்டிங் ஆகுமுன்னேயே  ஸ்க்ரீனில்  அறிவிப்பு வந்துரும்.  ப்ளேனை விட்டிறங்கி  இமிக்ரேஷன் வரும் வழியில் எல்லாம் பத்தடிக்கு ஒரு குப்பைத் தொட்டியும் அறிவிப்புமாக இருக்கும்.  நீயே கடாசிட்டால் உனக்கு நன்மை :-)

போன வாரம் ஆஸியில் இருந்து  இங்கே திரும்பி வந்த தோழியின் பையில் மறந்துபோய் தங்கிட்ட ஒரு ஆப்பிள், நானூறு டாலர் கட்டவச்சுருச்சுன்னு புலம்பிக்கிட்டு இருக்காங்க.
டாக்ஸி பிடிச்சு வீடு வந்தபோது  பதினொன்னரை.  வீடு பாவமா நின்னுருந்தது.
உள்ளே போய்  ஸ்வாமி லைட் போட்டு  நல்லபடி வந்துசேர வச்சதுக்கு நன்றி சொல்லிக் கும்பிடு போட்டுட்டுத் தூங்க ஆரம்பிக்கும்போது  மறுநாள் ஆகி இருந்தது :-)

காலையில் கடமைகளை முடிச்சுக்கிட்டு  கேட்டரி ஒன்பதுக்குத் திறக்கும்போது, ரஜ்ஜுவை கூட்டிக்கிட்டு வரணும். அன்பேக் எல்லாம் அப்புறம்தான். அதுவரை  அறுவரில் நால்வர் ஓய்வெடுக்கட்டும் !

இப்படியாக நம்ம அமெரிக்க, கனடாப் பயணம்  முடிஞ்சது:-)

இதுவரை கூடவே வந்த வாசக நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்!

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!

Wednesday, May 02, 2018

பாண்டாவும் 'பாண்டவ தூதனும்'........ சீனதேசம் - 7

மொதல்லே பாண்டா பார்க்கப்போறோம்னு சொன்னார் மைக்கேல்!  இன்னிக்கு(ம்) ஒரு முழுநாள்  டூர் போறோம். அதுலே முதல் ஐட்டம் நம்ம பாண்டாதான் :-)  பாண்டாவுக்கு முன்னுரிமை !

காலை ஏழே முக்காலுக்கு நம்மை பிக்கப் பண்ணுவாராம். அதே போல சரியான நேரத்துக்கு வந்தார்!  வாசலில் ஒரு வேன். ஃபோர்ட்டீன் ஸீட்டர்னு நினைக்கிறேன். அதுலே ஏற்கெனவே மூணு பேர் (ரெண்டு ஆண்களும் ஒரு பெண்ணும்) இருந்தாங்க.  நான் உள்ளே ஏறிப்போனதும், முன் ஸீட்டுலே இருந்த ஜோடி, நமக்கு இடம் விட்டுட்டுப் பின் ஸீட்டுக்குப் போயிட்டாங்க :-)

மைக்கேலிடம், இன்றைக்கு இன்னும் எத்தனை பேர் நம்ம  கூடன்னா.... நீங்க அஞ்சு பேர்தான்னுட்டார்!

ஒரு பதினாறு கிமீ தூரத்துலே இருநூத்தி இருபது ஏக்கர் பரப்பளவில் பதினாலாயிரத்து ஐநூறு செல்லங்களுடன்  (தொளாயிரத்து அம்பது  இனம்!) இருக்கும் இந்த ஜூவில் நாம் அஞ்சே அஞ்சுபேரைத்தான் பார்க்கப்போறோமுன்னு சொன்னால்.... நம்புவீங்களா?
சீனதேசத்தில் மிகப்பழமையான Zoo !    Qing Dynasty   காலத்துலே 1906  இல் தொடங்குனதாம்!  வாசலில்  வண்டி நின்னதும்,  மைக்கேல் போய் டிக்கெட் வாங்கிட்டு வந்தார்.


பாண்டா ஹௌஸ் முன்னாலேயே இருக்கு!  பெரிய சைஸ் வகை!  ஜயன்ட் பாண்டா!  மொத்தம் அஞ்சு பேர்தான். ஆனாத் தனித்தனி  இடத்தில்.   காலை ப்ரேக்ஃபாஸ்ட் டைம் என்றதால்  நிம்மதியாக் காலை நீட்டி உக்கார்ந்து  மூங்கில் கிளைகளில் இருந்து  இளசா இருக்கும் இலைகளைத் தின்னுக்கிட்டு இருந்தார்  ஒருவர்.
'குழந்தைகள் இருக்காங்களா, இங்கே'ன்னு ஆசை ஆசையாக் கேட்டேன்.  தூக்கிக் கொஞ்ச விடுவாங்களோ?  ஊஹூம்.....



சரி போகட்டும். ஏன் இப்படித் தனித்தனி இடத்தில் வச்சுருக்காங்க?  .....   கூடி இருந்தால் சண்டையாம். ஐயோ.....  ஒன்னை ஒன்னு அடிச்சுக்கிட்டுக் கொன்னுகூடப் போட்டுருமாம்!   அடடா....ஏன் இந்தக் கொலை வெறி?

நமக்குத்தான் பார்க்க ஒன்னுபோலவே இருக்காங்க. ஆனால் தனித்தனிப் பெயரோடு  தனித்தனி வீட்டில்  'எல்லா வசதிகளோடும் ' இருக்காங்கன்னாலும்..... தனியாவே ஒரு  வாழ்க்கை போரடிக்காதா?  சுத்திச் சுத்தி நடந்து வந்துக்கிட்டு இருப்பதைப் பார்த்தால் எனக்குப் பாவமாத்தான் இருந்துச்சு  :-(
சீனதேசத்தில்   1990 இல் நடந்த ஏஷியன் கேம்ஸ் சமயம்தான்  முதல் பாண்டா ஹௌஸ் கட்டுனாங்க.  அப்புறம் சமீபத்தில்  2008 இல் (அட! அதுக்குள்ளே பத்து வருசம் ஆகிருச்சா!!!) நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டி சமயத்தில்  இன்னொரு  பெரிய அமைப்பைக் கட்டி ரெண்டையும் ஒன்னா இணைச்சுட்டாங்க. ரெண்டு விளையாட்டுகளிலும் பாண்டாதான் Mascot.


கொஞ்சம் க்ளிக்ஸ், சின்னச்சின்ன வீடியோ க்ளிப்ஸ்ன்னு எடுத்துக்கிட்டு இங்கெ இதே கட்டடத்தில் இருக்கும் பாண்டா ஹௌஸ் நினைவுப்பொருள்  கடைக்குள் போனால்....  எக்கச்சக்கமான பாண்டாஸ். பொம்மை அழகாத்தான் இருக்குன்னாலும்.... நம்மகிட்டே ஏற்கெனவே இருக்கறதால்  ('சின்னதா ஒன்னு வாங்கிக்க'ன்னார்! க்கும்....  சின்னது.... அதுக்கு வாங்காம இருக்கலாம்....) மகளுக்காக ஒரு  சீட்டுக்கட்டு வாங்கினேன். மகள் சீட்டுக்கட்டுக் கலெக்‌ஷன் வச்சுருக்காள்.

நம்ம கூடவே வந்த மைக்கேல் பாண்டா பார்த்து முடிச்சதும் நம்மையெல்லாம் ஓட்டிக்கிட்டு வெளியே வந்துட்டார். யானை எல்லாம் இருக்குன்னாலும்....  இன்றைக்கு இன்னும் நிறைய இடங்கள் போறதால் நாம்  இதுவரை பார்க்காத   பாண்டாவுக்கு மட்டுமே முன்னுரிமையாம்.  ஒருமணி நேரம்தான் இங்கேன்னதில்  எனக்குக் கொஞ்சம்.....  ப்ச்...  :-(

எந்த முன்முடிவும், கருத்தும் இல்லாமத்தான்  லாமா கோவிலுக்குள் நுழைஞ்சேன்.  வண்டியை வெளியில் நிறுத்தும்போதே  ஒரு புறாக்கூட்டம்  ஜிவ்ன்னு  எழுந்து வானத்தில் பறந்து வட்டமடிச்சது சுவாரஸ்யம்!

தெரு அவ்ளோ ஒன்னும் பெருசு இல்லை.... பயங்கர ட்ராஃபிக்.  கடந்துபோக வரிக்குதிரை இருந்தாலும்.... இங்கெ சீனதேசத்தில் யாரும்  நடக்கற சனத்துக்கு வழிவிட்டு வண்டியை நிறுத்த வழக்கம் இல்லை போல....  அதுக்காக நாம் நின்னுக்கிட்டே இருக்கப்டாதாம்.  எந்தப் பக்கமும் தலையைத் திருப்பாமல்  ஈஸ்வரோ ரக்ஷதுன்னு  சாலையில் இறங்கிப் போகணுமாம்.   போக்குவரத்து  நெளிஞ்சு சுழிஞ்சு நமக்கு வழி விடுமாம்!  மைக்கேலைப் பின்தொடர்ந்து போனோம் நாங்கள் ஐவரும்!   அந்த மூவர் அமெரிக்கர், இந்த இருவர் கிவிக்கள்.  ஏன் தயங்கி நின்னோமுன்னு இப்போப் புரிஞ்சுருக்குமே!  ஹிஹி...
பெரிய கேட் கடந்து முற்றத்தில் போய் நின்னா.... அங்கே கார்பார்க் இருக்கு.  டிக்கெட் வாங்கிட்டு வரேன்னு மைக்கேல் போனார்.  கோவிலுக்குமான்னு தோணுச்சு.....
முற்றத்தில்  ஒருபக்கம் உள்ளே போகும் நுழைவு வாசல்.  கைப்பை எல்லாம் ஸ்கேன் ஆச்சு.  அந்தாண்டை போனதும்  ரெண்டு பக்கமும்  நிறைய மரங்களும் நடுவில் அழகான அகலமான கல்பாவிய  பாதையும்.  பாதையின் ஆரம்பத்தில்  ஊதுவத்தி சர்வீஸ்னு  போட்டுருந்தது.  இன்னொரு போர்டில் ஒரு வரைபடம்.
அடுக்கடுக்கா முற்றங்களும் கட்டடங்களும் ஒன்னுக்குப் பின்னால் ஒன்னா போய்க்கிட்டே இருக்கு!
எண்ணிப்பார்த்தால்  எட்டடுக்கு! ஒருகாலத்துலே அரண்மனையா இருந்த இடம். பதினேழரை ஏக்கர் பரப்பளவு.
மைக்கேலின் வழிகாட்டலில் உள்ளே போறோம். முதல் வாசலுக்கு ரெண்டு பக்கமும் ஊதுபத்தி சர்வீஸ் கவுன்ட்டர்.   ஆளுக்கு ஒரு பேக்கட் ஊதுவத்தி இலவசமாவே கொடுக்கறாங்க. ஒவ்வொரு முறையும் மூணு குச்சிகளை ஏத்தணுமுன்னு  எழுதி இருக்கும் வாசகம் சொல்லுது!


வாசல் கடந்து உள்ளே போனால் பெரிய முற்றம். எதுத்தாப்போல் ஒரு அகலக்கட்டடம். முழங்காலில் நின்னு சாமி கும்பிட மெத்தை வச்ச மணைகள், ஊதுபத்திக் கொளுத்திக்க விளக்கு,  அடிக்கும் காத்துலே அது அணையாமல் இருக்க சுத்தி ஒரு தகரக் காப்பு, கொளுத்தின ஊதுபத்தியைச் செருகி வைக்க ஒரபெரிய  தொட்டி (அரிசி போட்டு வச்சுருக்காங்க. அதுலே குத்தி இறக்கினால் ஆச்சு) இப்படி ஏற்பாடுகள்.
சனம் ஊதுவத்தியை விளக்கில் காமிச்சுக் கொளுத்திக் கையில் தூக்கிப்பிடிச்சுக் கண்ணைமூடி சாமியைக் கும்பிட்டுக்கிட்டு ஊதுவத்தி ஸ்டேண்டா இருக்கும் அரிசித்தொட்டியில் குத்தி வச்சுட்டுப் போறாங்க. மூணு குச்சிகள் எடுத்துக் கொளுத்திக்கணும். சிலர் முழங்காலிட்டும், பலர் அப்படியே நின்னவாக்கிலுமா கும்பிடறாங்க. நாமும் கும்பிட்டு முடிச்சு எதிரே தெரியும்  ஹாலுக்குள்  (சந்நிதி ) போறோம்.
வெளியே  ஹாலுக்கு ரெண்டு பக்கமும் உயரமான பீடத்தில் சிங்கங்கள்!  ஹைய்யோ!!
அந்தக் காலத்துலே விளக்கு  ஏத்தி வைக்கும் பீடம் இது!
ஹேப்பி புத்தா, ஹெல்த்துக்கான புத்தா,  அமைதிக்கான புத்தா,  இறந்தகால, நிகழ்கால, எதிர்காலமுன்னு முக்காலத்து புத்தாக்கள்,  இந்தக் கோவிலின் முதல்  லாமா, இப்படி  ஒவ்வொரு முற்றத்தோடு சேர்ந்த சந்நிதிகளைக் கடந்து போய்க்கிட்டு இருக்கோம்.  சந்நிதிகளுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லைன்னு மைக்கேல் சொன்னார்.

இங்கே போட்டுருக்கும் சில புத்தர் படங்கள் நம்ம கூகுளாண்டவர் அருளிச் செய்தவை:  நன்றிகள்!


ஒவ்வொரு முற்றத்திலும்  மும்மூணு பத்திகளைக் கொளுத்திக்கிட்டு இருக்கேன். 'நம்மவர்' வந்து எல்லாத்தையும் சேர்த்துக் கொளுத்திருன்னு சொல்றார். ஏனாம்?  வேறயாரோ மொத்தத்தையும் கொளுத்துனதைப் பார்த்துட்டு, இவரும் அப்படியே செஞ்சுட்டு வந்துருக்கார்.  பொறுமைத் திலகங்கள் !
அஞ்சாவதா இருக்கும் கடைசி சந்நிதிக்குள் போறோம். மைத்ரேயா புத்தா!  விக்கிச்சு நின்னேன்,  விஸ்வரூபம் காமிக்கிறான் எம்பெருமாள்!  என் கண்ணுக்கு இவன் பெருமாளேதான்!  அதே முகம். நெடுநெடுன்னு  பதினெட்டு மீட்டர் உயரம்.  பூமிக்கடியில் இன்னும் எட்டு மீட்டர் இருக்காம். மொத்தம் இருபத்தியாறு மீட்டர்!  அஞ்சாறு மாடி உயரம்!

காஞ்சிபுரம்  பாண்டவ தூதனை முதல்முதல் தரிசனம் செஞ்சப்ப எப்படி உணர்ந்தேனோ அதே, மறுபடியும் ரிப்பீட் இங்கே!   கண்ணீர் வழிஞ்சு ஓடுவதைத் தடுத்தும் பயன் இல்லை.....  பரவசமா என்னன்னு தெரியலை.....   தடக் தடக்குன்னு   வேகமா இதயம் துடிக்கிறது என் காதுக்கே நல்லாக் கேக்குது!   பெருமாளே.... பெருமாளே...........

கின்னஸ் புத்தகத்துலே இவரைப் பதிஞ்சுட்டாங்க. வெள்ளைச் சந்தன மரம். அதுவும் ஒரே மரத்தில் செதுக்குன சிலையாம்!  'திபெத்துலே இருந்து  இவரைத் திருடிக்கிட்டு வந்துட்டாங்க'ன்னு  மைக்கேல் சொன்னார். சின்னப் பொருளா என்ன? சட்டைப்பைக்குள் வச்சுக் கொண்டு வர்றதுக்கு?  இருபத்தியாறு மீட்டரையா?  ஒருவேளை திபெத்தைச் சீனா பிடிச்சுக்கிட்டப்பக்  கொண்டு வந்துருப்பாங்களோ?

ஆனால் கோவில்  பதினேழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில்  வந்துருச்சாமே.... அப்பவா படையெடுப்பு நடந்தது?  ஙே......

கோவில் சந்நிதிகளிலும் முற்றங்களிலும் நல்ல கூட்டம்.  ஊதுவத்திப் புகை  மண்டிக்கிடக்கு!   கொஞ்சம்கூட வாசனையே இல்லாத  ஊதுவத்தி இது.... வெறும் புகை...

எல்லா சந்நிதிகளுக்கும் குறைஞ்சது மூணு வாசல். எந்த வாசலில் வேணுமானாலும் நுழைஞ்சுபோய்க்கலாம்.  வரிசை, காத்திருப்புன்னு ஒன்னும்  கிடையாது.


 'சீனமக்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்.  சாமி எல்லாம் கும்பிடமாட்டாங்க'ன்னு என் மனசுக்குள் இருந்த நினைப்பெல்லாம் அப்படியே மாறிப்போச்சு.  சந்நிதிகளிலும் மெத்தை போட்ட மணைகள் இருக்கு. அதில் முட்டிபோட்டு, விழுந்து விழுந்து கும்பிடுது சனம்!
நல்ல பெரிய பெரிய தங்க வண்ணச் சிலைகள்!
இந்தக் கோவிலின் ஸ்தாபகர். இவுங்களோட முதல் லாமா

உலோகச்சிலையா என்னன்னு தெரியலை....   மேடைகளில் சிலைகள், சுத்திவர பூக்கள் அலங்காரம் எல்லாம் பளபளன்னு....  ஒவ்வொரு சந்நிதியிலும் புத்த பிக்ஷுக்கள்  ஒரு ஓரமா உக்கார்ந்துருக்காங்க. அப்புறம் விசாரிச்சதில் எல்லாம் வெங்கலச்சிலைகளாம்,  விஸ்வரூபம் காமிக்கும் பெருமானைத் தவிர !  இவரைப்பத்தி இன்னும் கொஞ்சம் நல்லா விசாரிக்கணும்,  மூளையில் முடிச்சு :-)

இந்த அஞ்சு முக்கிய சந்நிதிகளைத் தவிர  ரெண்டு பக்கங்களிலும் ஏகப்பட்ட சந்நிதிகள். சில இடங்களில் ப்ரேயர் வீல்ஸ். ஓம் மணி பத்மேஹம்..... சொல்லிக்கிட்டுச் சுத்தி விட்டோம்.

நம்ம குழுவில் இருக்கும் பெண்கள் மட்டுமே க்ளிக்க்கிட்டு இருந்தாங்க. அதுலே அந்த அமெரிக்கர், அருமையான பெரிய கேமெராவால். அந்தக் கிவியோ.... கைக்கடக்கமான சின்னக் கெமெராவில் 'வர்றது வரட்டுமு'ன்னு க்ளிக்கறதுதான். அந்தப் படங்களைத்தான் நீங்க பதிவில் பார்த்துக்கிட்டு இருக்கீங்க :-)

இங்கேயும் ஒரு மணி நேரத்துக்குள் நம்மை இழுத்துப்போய்ச் சுத்திக் காட்டிட்டார் மைக்கேல்.  உண்மையைச் சொன்னால் ஒரு முழுநாள் இருந்து பார்க்கவேண்டிய சமாச்சாரம் இது!

போனவழியாவே திரும்பி  வாசலுக்கு  வர்றோம். கடைசி முற்றம் கடக்குமிடத்தில் கழிவறைகள்.  இந்தக் கோடியில் இலவச ஊதுபத்திக்குப் பக்கத்தில்  நினைவுப்பொருட்கள், புத்தர் சிலைகள் எல்லாம் விற்கும் ஒரு கடை!  எல்லா புத்தரும் பொட்டு வைத்த முகங்களில் !
வெளியே கடைவீதியைச் சட்னு பார்க்கும்போது நேப்பாள் நாட்டுத் தெரு மாதிரியே தோணுச்சு. கடைகளில் இருக்கும் பெரிய பித்தளை, வெண்கலச் சிலைகள் காரணமா இருக்கலாம்.....

மைக்கேலைப் பின்தொடர்ந்து தெருவைக் கடந்து எதிர்ப்பக்கத் தெருவுக்குள் போறோம்.   பாதி தூரம் போனதும் கன்ஃப்யூஸியஸ் கோவில்ன்னு  இருக்கு!  'அங்கே போறோமா'ன்னதுக்கு  இல்லைன்னார் மைக்கேல். வேன் இங்கே வருமாம். அதுக்காத்தான் போறோம்னு சொன்னார்.

கோவிலை வெளியே இருந்து ரெண்டு க்ளிக்ஸ் மட்டும்.

வண்டி வந்தது. நாங்களும் ஏறினோம்.  அடுத்து என்னவாம்?

தொடரும்........:-)