எதிர்ப்புறம் இன்னொரு கட்டைச்சுவர் அருகில் போகும் ஒத்தையடிப் பாதை வழியாகப்போய் அரங்கில் நுழைஞ்சோம். சிமெண்டு தரை நடுவிலொரு கல் நிலவிளக்கு . சுத்திவர மேலேறிப்போகும் இருக்கை வரிசைகள். ஆம்பி தியேட்டர்!
நாம் சீக்கிரம் போயிட்டோமுன்னு நினைச்சால் ஏற்கெனவே அங்கே நல்லகூட்டம். கீழிருந்து ரெண்டாவது வரிசையில் இடம் கிடைச்சது. கல்விளக்குக்கு ஒரு தலைப்பா கட்டுனவர், எண்ணெய் கொண்டு வந்து ஊற்றினார். திரியும் போட்டார். நாம் இங்கொரு கண்ணும் அந்திவானத்தில் ஒரு கண்ணுமாக இருந்தோம். கொஞ்சம் பிரசாதத் தட்டுகளுடன் பூஜாரிஒருவர் வந்து கல் விளக்கு முன்னே உட்காந்து பூஜை செய்தார். தீபமும் ஏற்றினார். தீவட்டி போல எரிய ஆரம்பிச்சது.
இங்கே நாம் பார்க்கப்போவது கீச்சக் அண்ட் ஃபயர் டான்ஸ் ( KECAK & FIRE DANCE)
இன்னும் திமுதிமுன்னு கூட்டம் வந்துக்கிட்டேஇருக்கு. நமக்கு முன் வரிசையும் நிறைஞ்சு அதுக்குக் கீழே தரையிலொரு வரிசையும் ஆச்சு. அப்படியும் மக்கள்ஸ் வந்துக்கிட்டேதான் இருக்காங்க. ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் கொண்டு வந்து வாசலுக்கு எதிரிலும் கட்டைச்சுவர் அருகிலுமா போட்டுக்கிட்டேஇருக்காங்க.
அறிவிப்பாளர் ஒருவர் அனைவரையும் வரவேற்ற பின் நிகழ்ச்சி ஆரம்பிச்சது. கீச்சக் கீச்சக் கீச்சக் என்ற குரல்கள் மட்டும் மெள்ள ஆரம்பிச்சு , பலமா ஒலிக்க ஆரம்பிச்சது. சாமித்துணியை இடுப்போடு கட்டுன சுமார் அறுபது பேர் அரங்குக்குள் வந்து விளக்கை சுத்தி உக்கார்ந்தாங்க.
இந்த நடனம் பாலிமக்கள் , கெட்ட தேவதைகளைத் துரத்தும் நடனமா நெடுங்காலமாக ஆடிக்கிட்டு இருந்ததுதான். கொள்ளை நோய்களில் இருந்து விடுபடவும், அசம்பாவிதம் நடந்த கிராமத்தைச் சுத்திகரிச்சுப் பரிகாரம் பண்ணுவதுமா ஏற்பட்ட சடங்குகளில் ஒன்னு. Sanghyang என்ற பெயராம் அந்த சடங்கு முறைகளுக்கு.
1930 ஆண்டு Walter Spies என்ற ஓவியரும் இசைக் கலைஞருமான ஜெர்மானிய பயணி ஒருவர் இதை கொஞ்சம் ஒழுங்கு செஞ்சு இப்போதைய வடிவில் ஆக்கிக் கொடுத்துருக்கார். பாலித் தீவு முழுசும் வெவ்வேற ஊர்களில் வெவ்வேறு குழுக்கள் இதை ஆடிக்கிட்டு இருக்காங்க. சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுது போக்கு. உள்ளூர் மக்களுக்கு நல்ல வருமானம்.
இசைக்கருவிகள் ஒன்னுமே இல்லை இந்த நடனத்துக்கு. அந்த அறுபது நபர்கள் சொல்லும் கீச்சக் கீச்சக் தான் இசை. வெவ்வேற தாளக்கட்டில் வெவ்வேற ஸ்தாயிகளில் ஆரம்பம் முதல்கடைசிவரை சுமார் ஒரு மணி நேரம் கீச்சக் தவிர வேறொன்னுமில்லை. வெறும் கீச்சக்கா இல்லாமல் குழுவின் நடுவில் ராமாயணமும் நடனமாகவே நடக்குது.
சீதையும் ராமனும் வந்து ஆடுறாங்க . பொன்மான் வந்து இவர்கள் முன்னால் நின்னு துள்ளி ஆடிட்டு ஓடுது. மான் வேணுமுன்னு சீதை கேட்க , லக்ஷ்மணனை காவல் வச்சுட்டு ராமர் மானைப் பிடிக்கப் போயிட்டார்.
ராமர் அலறல் கேட்ட சீதை , லக்ஷ்மணனைப் போய் பார்த்து வரச் சொல்லும்போது 'வேணாம் தேவை இல்லை'ன்னு அவன் ஆட.... இவள் கட்டாயம் போய் பார்க்கத்தான் வேணுமுன்னு ஆடி அடம்பிடிக்க அவன் கீச்சக் வட்டத்துக்குள் அவளை விட்டுட்டுப்போறான்.
ராவணன் வந்தான். கீச்சக்கைத் தாண்டி உள்ளே வர முடியலை. திரும்பிப்போய் சந்நியாசி வேஷம் கட்டிக்கிட்டு வர்றான். குடிக்கத்தண்ணி வேணுமுன்னு சீதையிடம் கேக்க, அவள் வட்டம் தாண்டிப்போய் தண்ணீர் கொடுக்க, அவளைப்பிடிச்சு இழுத்து தோளில் தூக்கிவச்சுக்கிட்டு வட்டத்துக்குள் வந்து ஆடோ ஆடுன்னு ஆடறான்.
தோளில் சீதையோடு புறப்பட்டுப்போகும்போது ஜடாயு வந்து எதிர்க்க அதனோடு சண்டைபோட்டு வெட்டி வீழ்த்திட்டுப் போயிட்டான்.
ராமனும் லக்ஷ்மணனும் திரும்பி வந்து பார்த்தால் சீதையைக் காணோம்! புலம்பிக்கிட்டே ஆடித் தீர்த்தாங்க. அப்ப Twalen என்ற தேவதை வந்து ஆறுதல் சொல்லி சீதையைக் கண்டுபிடிக்க உதவறேன்னு சொல்லுது.
கூட்டத்தில் ஒரு சலசலப்பும் கீச்சக் குழுவின் ஒலியில் ஒரு மாறுதலும்..... வெள்ளைக் குரங்கொன்னு கட்டை சுவர் ஏறிக் குதிச்சிருக்கு. அங்கங்கே கைக்கு வாகா இருக்கும் பார்வையாளர் தலையில் பேன் பார்த்துகிட்டே அங்கிட்டு இங்கிட்டுமா தாவி ஓடுச்சு. அனோமேன் (ANOMAN)வந்துட்டாரு!!!
. கீச்சக் குழுவினரோடு கலந்து ஒரே ஆட்டம். ராமர் தன் முன் மண்டியிட்ட அனோமேனுக்கு மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்து ஆசீர்வதிச்சார்.
அஸ்தமன சமயம் நடனம் ஆரம்பிச்சது. முக்கிய ஸீன்கள் வரவர கும்மிருட்டு. கல்விளக்கின் ஒளி மட்டுமே! இப்படி இருக்கக் கல்விளக்கு காணாமப்போனது இப்போதான்! Alengka Scene.
ஸீன் மாற்றம். அசோகவனத்தில் சீதையும் திரிஜடையும். நளினமான விரல் அசைவுகளுடன் வழக்கம்போல் ஆடறாங்க. நாட்டிய நாடகம் என்பதால் எல்லோரும் ஆடத்தான் வேணும். ஆனால் எந்த முக்கிய நடிகருக்கும் (ராமர் சீதை லக்ஷ்மணன்) Bபாவம் துளி இல்லை முகத்தில் . ப்ளாஸ்டிக் முகமோன்னு சந்தேகம் வந்துரும் நமக்கு. ஆனால்.... ரியல் முகம்தான்.
இதுக்குள்ளே சீதையைத் தேடிக்கிட்டு வந்த அனோமேன் சீதையிடம் கணையாழியைக் கொடுத்தார். கொடுத்துட்டு ஆடுனவரை அரக்கர்கள் சண்டை போட்டுப் பிடிச்சுக்கிட்டுப்போய் கையைப் பின்னால் கட்டிட்டாங்க. அனோமேனை உக்கார்த்தி வச்சு பூஜை செஞ்சார் பூசாரி.
தேங்காய் நார் பிரி போல் ஒன்னு கொண்டுவந்து அனுமோனைச் சுத்தி வட்டம் போட்டாங்க. தீ வச்சதும் துள்ளிக் குதிச்சு எழுந்தார். தீக்குள்ளேயும் வெளியேயுமுன்னு லங்கா தகனம் ஆரம்பிச்சது. எட்டி எட்டி உதைக்கும்போது எரியும் நார் பறந்து இங்கேயும் அங்கேயும் விழுந்து சட்னு அணைஞ்சும் போச்சு.
ராமலக்ஷ்மணர்கள் வந்தாங்க ராவணனுடன் போர். ராவணன் மாண்டான். எல்லாம் சுபம்.
மொத்த கீச்சக் குழுவும் அரங்கத்தை விட்டு ஒரு கணம் கூட அகலாமல் ஆரம்பம் முதல் கடைசிவரை சக் சக் சக் சக் சொல்லிக்கிட்டே , ஸீனுக்கு ஏத்தாப்போல ரெண்டா, மூணா, நாலாப் பிரிஞ்சும் சேர்ந்தும் நின்னும் இருந்தும் கிடந்தும் ஒரு லயத்தோடு இருந்தாங்க!
முழு நடனத்தையும் ஒரு புண்ணியவான் வீடியோ எடுத்து யூ ட்யூபில் போட்டு வச்சுருக்கார். அவர் நல்லா இருக்கணும்! நேரம் இருப்பவர்கள் பார்த்து மகிழலாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். நாம் எடுத்த வீடியோ துணுக்குகளை விட இது நல்லாவே வந்துருக்கு. க்ளிக்கலாம். அன்னாருக்கு எம் நன்றிகள். Thank you funkyluke2009.
முழு நடனமும் இயற்கை ஒளியில் என்பதால் மணிரத்தினம் படம் பார்த்த எஃபெக்ட் நமக்கு. கொஞ்சம் விளக்குகள் போட்டுருக்கலாம். நிகழ்ச்சி முடிஞ்சதும் சின்னதா கொஞ்சம் வெளிச்சம். அட! லைட் போட்டுட்டாங்கப்பா!!!
அரங்கைவிட்டு வெளியேறுவது கஷ்டமாப்போச்சு. பாதை சுத்தமாக் கண்ணுக்குத் தெரியலை. போதாக்குறைக்கு 'பேர் சொல்லாதது ' நடமாடும் இடமாம். டார்ச் வச்சுக்கிட்டு நடந்த ஒரு ஜோடியை விடாமல் தொடர்ந்தோம். பாவம் அவரே சமதரை இல்லாமல் இருந்த ஒரு இடத்தில் விழத்தெரிஞ்சார்.
குறைஞ்சபட்சம் நம்ம வீட்டுத் தோட்டத்தில் இருப்பது போல் ஸோலார் விளக்குகளை பாதையின் ஓரத்தில் நட்டு வைக்கப்டாதோ? குரங்கன்ஸ் எல்லோரும் தூங்கிட்டாங்க போல! நடமாட்டம் இல்லை:-)
ஆமாம்... நம்ம டார்ச் எங்கேன்னு கோபாலைக் கேட்டதுக்கு ஹொட்டேல் ரூமிலே வச்சுருக்கேன்னார்:-))))
கல்பாவிய தரை வரும்வரை தட்டுத் தடுமாறல்தான்:(
கேட்டுக்கு அருகில் நமக்குக் கொடுத்த 'ஒட்டியாணத்தையும் ' ஸராங்கையும் திருப்பி வாங்கிக்க சிலர் நின்னுருந்தாங்க. ந்யோமேன் கேட்டருகில் நமக்காகக் காத்திருந்தார். நேரம் ஒன்னும் அதிகமில்லை. ஏழரைதான். ஆனால் எங்கும் கும்மிருட்டு!
நடனம் பார்க்க எப்படி இவ்ளோ கூட்டமுன்னு யோசிச்சவளுக்குக் கார்பார்க்கில் விடை கிடைச்சது. எக்கச்சக்கமான டூரிஸ்ட் பஸ்கள். மக்களைச் சரியா நடன நேரத்துக்குக் கொண்டு வந்து இறக்கி இருக்காங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லோரும் ஜிம்பாரன் ஸீ ஃபுட் ரெஸ்ட்டாரண்ட் போவாங்க. சாப்பாடு நல்லா இருக்கும். உங்களை அங்கே கொண்டுபோறேன்னு சொன்ன ந்யோமேனுக்கு கும்பிடு போட்டுட்டு ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். நாளைக்கும் வண்டி காலை எட்டரைக்கு வேணுமுன்னு சொல்லியாச்சு.
மூணுமாடிகளேறி அறைக்கு வரும்போதே பயங்கர ஆயாசம். இனி ஒருமுறை சாப்பாட்டுக்குக் கீழே போகணுமான்னு கால் கெஞ்சுது. மணி வேற இரவு ஒன்பது. கெமெரா பாட்டரியைச் சார்ஜரில் போட்டுட்டு, ஒரு பீட்ஸா, ரூம் சர்வீஸ்க்குச் சொல்லிட்டு உடல்வலி போக சூடா ஒரு ஷவர்.
ஒன்பதே முக்காலுக்கு சாப்பாடு வருது. கொண்டு வந்த இளம்பெண் மஹி, ஹிந்துவான்னு கேட்டாங்க. ஆமான்னதும்...... ரொம்ப சந்தோஷமா முணுமுணுன்னு என்னவோ நீளமாச் சொன்னாங்களா.... அவ்வை ஷண்முகியில் பிறவி ஊமை நாஸர் சொன்ன ருத்திரம் மாதிரின்னா இருக்கு!
தெரிஞ்ச ட்யூனா இருக்கே......
அட நாராயணா!!!!! இது காயத்ரி இல்லையோ!!! புரிஞ்சுண்டதும் சும்மா விடலாமோ?
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
ஆரம்பிச்சு வச்சேன். மஹியின் மதிவதனம் பூராவும் விகசிப்பு! ரெண்டாம் முறை கூடவே சேர்ந்து சொன்னாங்க. நம்ம கோபால் மட்டும் மனசுக்குள்ளேயே சொல்லி இருப்பார்!
பீட்ஸா சாப்பிடுமுன் காயத்ரி சொல்றது நம்ம வழக்கம் கேட்டோ:-)))))
தொடரும்.........:-)
