Monday, March 12, 2012

இந்தியாவைக் காணோம்............

இந்த ஊரில் நூத்தியம்பது மனித இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 12 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்?

நம்மூர் நூலகமும், சிட்டிக்கவுன்ஸிலும், ரேஸ் ரிலேஷன்ஸ் அலுவலகமும், எத்னிக் கவுன்ஸிலும் ஒன்னு சேர்ந்து நடத்தும் விழா. உலகின் பலவேறு பகுதிகளில் இருந்தும் வந்து இங்கே வாழ்க்கை நடத்தும் மக்கள் தங்கள் கலை, கலாச்சாரம், உணவு, உடை, விளையாட்டு இப்படி இருக்கும் சமாச்சாரங்களை மற்ற இனங்களுக்கு எடுத்துக்காட்ட இதை விட வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?
ஊருக்குள்ளில் அஞ்சு ஹெக்டேர் அளவில் இருக்கும் ஒரு விளையாட்டுத் திடலில் நடப்பதால் பார்க்கிங், ஸ்டால்ஸ், மேடை நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் வசதிதான். (நம்ம பக்கத்துப் பேட்டை என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.அஞ்சே நிமிச ட்ரைவ்) பொதுமக்களுக்கும் நுழைவுக்கட்டணம், பார்க்கிங் சார்ஜ் இப்படி ஒன்னும் இல்லை. முற்றிலும் இலவசம்.
மேடை நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்புச் செலவா ஒரு குழுவிற்கு 100 டாலர் மான்யமும் கொடுக்கறாங்க பத்து நிமிசத்துக்கு மேற்படாமல் இருக்கணும்.
மதியம் 12 முதல் நாலுமணி வரை நடக்கும் விழா என்பதால் ஒரு சுத்துச் சுத்திப் பார்த்துட்டு அங்கேயே ஸ்டால்களில் விற்பனைக்கு இருக்கும் சாப்பாடுகளில் பிடிச்ச ஐட்டங்களை வாங்கிக்கிட்டு மேடைக்கு முன்னால் உக்கார்ந்துக்கிட்டால் ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிச்சுக்கிட்டே உணவை உள்ளே தள்ளலாம்.
ஒரு பனிரெண்டரைக்குப் போய்ச்சேர்ந்தோம். கூடாரங்களும் மக்கள் கூட்டமுமா கலகலன்னு இருக்கு. பார்க்கிங் வார்டன் வரும் வண்டிகளின் எண்களைப் பதிஞ்சுக்கிட்டே சக்கரநாற்காலியில் இங்கும் அங்குமா பரபரப்பாப் போய்க்கிட்டு இருந்தார்.

ஒரு பக்கம் முழுசும் சாப்பாடுகள். இரான், எகிப்து, சீனா, தென் ஆஃப்ரிகா, ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்துன்னு வகைவகையா. இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் காலியா அம்போன்னு கிடந்துச்சு. கடந்த சிலவருசங்களா இந்தியன் க்ளப் செயல்படாம முடங்கிக் கிடக்காம். தலைமை சரி இல்லை. கவுன்ஸில் கொடுக்கும் 'நிதி உதவியை எதாவது ஒரு ரூபத்தில் தானே அமுக்கணும்' என்ற அட்டூழியம்தான் காரணமாம். இந்த க்ளப்பை ஆரம்பிச்சவர் ( எல்லாம் நம்ம கோபால்தான்) மனசொடைஞ்சு வெத்து இடத்தைப் பார்த்தப்ப எனக்கு ரொம்பப் பாவமா இருந்துச்சு:(
ஒரு ஆறுதலான விஷயம் கோபியோ ( GOPIO : GLOBAL ORGANIZATION OF PEOPLE OF INDIAN ORIGIN)ஸ்டால் போட்டுருக்காங்க. அதே சமோஸா, பகோரா, நான், பட்டர் சிக்கன்,தால் மக்கானி, ரோகன் ஜோஷ், மட்டர் பனீர், மேங்கோ லஸ்ஸி வகைகள். இந்தியான்னாவே 'இந்த சாப்பாடு'ன்னு ஆகி கிடக்கு:(
எகிப்து நாட்டு ஸ்டாலில் உணவு வகைகள் ஏராளம். அதுலே நம்மூர் 'ஜாங்கிரிக்கு ஒன்னுவிட்ட தங்கை பேத்தி' மாதிரி ஒன்னு. அதுக்கு 'மெஷபெக்'ன்னு பெயர்!
இரான் ஸ்டாலில் கேசரி மாதிரி ரவையில் செஞ்சது ஒன்னும், இன்னும் ரெண்டு இனிப்புகளும் செஞ்சு வச்சு இலவசமா உபசரிச்சுக்கிட்டு இருந்தாங்க. கூடவே சின்ன கண்ணாடிக் கப்பில் சாயா! அந்தக் கெட்டில் ரொம்ப அழகா இருந்துச்சு. கையில் எடுத்து ரசித்தபோது, 'அழகா இருக்கா'ன்னு கேட்டுட்டு சவூதி அரேபியாவில் வாங்குனதுன்னாங்க:-)
ஜப்பான் பாரம்பரிய உடைகளில் சில சிறுசுகள் பசங்களுக்குப் போரடிக்காமல் இருக்க ராக் க்ளேய்ம்பிங், ஒரு வகையான Bபஞ்சி ஜம்பிங், இப்படி சில. காவல்துறை, நூலகம், ரேடியோ ஒலிபரப்பு இப்படி வழக்கமான கம்யூனிட்டி சேவைகளுக்கான கூடாரங்கள்.
மவோரிகளுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் நடந்த ஒப்பந்தத்தின் விளக்கம், போஸ்டர்கள், புத்தகங்கள் இவையெல்லாம் ஒரு மேசை, இந்த ஊருக்குக் குடியேறும் நபர்களுக்கான விவரம் அடங்கிய எத்னிக் மைக்ரண்ட்ஸ் செண்டர் விபரங்கள் ஒரு மேசை, யுனைட்டட் நேஷன்ஸ் அசோஸியேஷன்ஸ் ஆஃப் நியூஸிலேண்ட், கிறைஸ்ட்சர்ச் மல்ட்டி கல்ச்சுரல் கவுன்ஸில் இப்படி ஒவ்வொன்னும் ஒரு மேசை போட்டு விவரங்களை அடுக்கி வச்சு விளக்கிச் சொல்ல ரெவ்வெண்டு ஆட்களுடன் ஒரு பெரிய கூடாரத்துலே இருந்தாங்க.
அலங்காரச்சாமான்கள், நகைநட்டுகள் கொஞ்சம் துணிமணிகள் இப்படி எகிப்து நாட்டுப்பொருட்கள் இருந்துச்சு. மொத்ததுலேயும் எகிப்தியர்கள்தான் நல்ல ஆக்டிவா இருக்காங்க போல!
மினி ஆப்பம்
இந்தோனேஷியாவுக்கான கூடாரப்பகுதியில் மினி ஆப்பம் போல ஒன்னு அடுக்கிவச்சுத் தின்னு பார்க்கச் சொன்னாங்க. அரிசி மாவுதானாம். பக்கத்துலே ஒரு சின்னக்கண்ணாடி டம்ப்ளரில் தேங்காய்ப்பால். இதை எடுத்து அதில் தொட்டு வாயில் போட்டுக்கணுமாம்! ம்ம்ம்ம் இருக்கட்டும்
ஷெட்லேண்ட் சொஸைட்டியில் கொம்பு ஆப்ட்டது. மனிதனும் மிருகமும் சேர்ந்த கலவை! இந்த மாச 'பிட்'க்கு அனுப்பி இருக்கலாம்:-)))
மவொரிகள் கலையான ஃப்ளாக்ஸ் செடியின் ஓலைகளைப் பின்னுதல், சேண்ட் ஸ்டோனில் சிற்பம் செதுக்குவது எல்லாம் முதல்முறையா இங்கே காட்சிக்கு வந்துருக்கு. சின்னக் கற்களை வச்சு செதுக்கி எடுக்க ஒரு ஒர்க்ஷாப் போல பயிற்சி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மணல்துகள் கண்களில் தெறிக்காமல் இருக்க பாதுகாப்புக் கவசம் போட்டுக்கிட்டுப் பசங்க இழைச்சுப்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.
ஓலை முடைதல் இன்னொரு ஷெட்டில். அங்கேயே ஸோப் கட்டிகளில் வளைவு நெளிவுகளோடு மவொரி கலை அம்சங்களைச் செதுக்கச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒருத்தர். நம்ம கோல டிஸைன்களைப்போலத்தான் மவொரி கலைகளில் வளைவும் நெளிவுகளும் ஏராளம். கேமெராப் பார்த்தவுடன், ஐயோ மேக்கப் போட்டுக்கலையேன்னு கவலைப்பட்டார்.:-))))
காதுக்குள்ளே பழக்கப்பட்ட இசை விழுந்ததும் என்ன ஏதுன்னு பாய்ஞ்சேன். மேடையில் ரெண்டு பெண்கள் 'கதக்' ஆடிக்கிட்டு இருந்தாங்க. இங்கே தெரிஞ்சவங்க ஒருத்தர் நடத்தும் கதக் பள்ளியின் மாணவிகள். அநேகமா பள்ளியின் மொத்த மாணவிகளுமே அவ்ளோதான்!
தாய்லாந்து, சமோவா, பிலிப்பைன்ஸ், நடனங்கள் நடந்து முடிஞ்சதும் உள்ளூர் பரதநாட்டியப்பள்ளியின் மாணவிகள் டீச்சருடன் சேர்ந்து 'ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காணக் கண்' ஆயிரம் வேண்டாமோ'க்கு ஆடுனாங்க. நிகழ்ச்சி அறிவிப்பாளர் பார்வையாளர்களுக்கு இந்தக் கலையின் பெயரை 'பர தன டியம்' என்று சொல்லிக்கொடுக்க ஜனம் அதை ரிப்பீட் செஞ்சது. சுக்குமி ளகுதி ப்பிலி !!!!! லாடின் அமெரிக்கா, நடனம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிப்பிள்ளைகள் கோ ரைட் கோ லெஃப்ட்ன்னு ஸ்டெப்ஸ் போட்டுக் காமிச்சாங்க. பெரியவர்கள் மூணு ஜோடி ஸம்பா, ச்ச ச்ச ச்ச ஆடுனாங்க.
சமோவா குழு

சீனப்பிள்ளைகள் மார்ஷியல் ஆர்ட் செஞ்சு காமிச்சாங்க. பிள்ளைகளின் தந்தை இங்கே இந்தக் கலையைச் சொல்லிக்கொடுக்கும் பள்ளி நடத்தறார். பள்ளி பள்ளின்னா ரெகுலர் பள்ளிக்கூடம் இல்லை. வார இறுதிகளில் வகுப்பு நடத்தித்தான் மக்கள் அவுங்கவுங்க கலைகளை வளர்த்துக்கிட்டு இருக்காங்களாக்கும் கேட்டோ!
கொரியா


கலர்ஃபுல்லா கொரியன் நடனம். நம்ம ஹரே க்ருஷ்ணா பிள்ளைங்க மூவர் (சிஸ்டர்ஸ்) கோபிகைகளும் கிருஷ்ணாவுமா ஆடினாங்க. இந்தப் பிள்ளைகள் இந்த கல்ச்சுரல் விழாவைத் தவறவிட்டதே இல்லை. சீனியர் மோஸ்ட்:-))))

வயிறு கிள்ளுதே...பார்த்தவரை போதுமுன்னு 'சபை'யை விட்டு எழுந்து வந்தோம். இந்தியன் க்ளப் அடையாளமே இல்லை. தோழி இது ஹோலி சீஸனா இருக்கேன்னு மசாலா டப்பாவில் ஏழு கலர்ப்பொடிகளுடன் காத்திருந்தாங்க. நெற்றியில் நாமம் வாங்கிக்கிட்டு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் 'இந்தியா காணாமப் போயிருச்சே'ன்ற கவலையுடன் வீட்டுக்குப் போய் சாப்பிட்டோம்.

Monday, March 05, 2012

மனைவியுடன் குழந்தையையும்.... ஒருவனாக சுமக்கின்றேன்.....

ஆஃப்ரிக்க நாட்டுலே இருந்து வந்த 'க்யூட் பசங்களை' முதல்முதலா எங்கூரு டெலிகாம் விளம்பரத்துலேதான் பார்த்தேன். கண்டவுடன் காதலில் விழுந்தேன். எங்கூரில் இறக்குமதி செஞ்சுக் கொஞ்சநாளா அதுக்கேற்ற எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்து உள்ளூர் காலநிலைக்கு அதுகளைப் பழக்கப்படுத்தியாச்சுன்னும் குறிப்பிட்ட ஒரு தேதியில் இருந்து பொதுமக்கள் பார்வையிடலாமுன்னு அறிவிப்பு வந்ததுதான் தாமதம், கிளம்பிட்டோம்.

ஒரானா பார்க் என்ற பெயரில் எங்கூர் மிருகக்காட்சி சாலை இயங்குது. இதை ஆரம்பிச்சது 25 செப்டம்பர் 1976. குட்டி ஆஃப்ரிக்கா என்று சொல்லும் வகையில் சிங்கம், சிறுத்தை, காண்டா மிருகம், நீர்யானை, சிங்கவால் குரங்கு, ஒட்டச்சிவிங்கி, வரிக்குதிரை, கழுதைப்புலி, நெருப்புக்கோழின்னு வச்சு வளர்க்கறாங்க. சின்னக்கூண்டுகளில் வைக்கறதில்லை. திறந்த வெளியில் ஒவ்வொரு வகைக்கும் ஏராளமான இடங்கள். கூடியவரை அதனதன் இயற்கைச்சூழலில் நாம் பார்த்து ரசிக்க ஏற்பாடு. இப்ப 80 ஹெக்டர் நிலத்தில் சுமார் 400 செல்லங்கள்(!!!) 70 வகைகளில். செரங்கேட்டி என்ற பெயரில் ஒரு ரெண்ட்டாரண்டு. மாலை வேளைகளில் டின்னர் இங்கே விசேஷம். இங்கே ஒரு நாள் முழு வாடகை கட்டிட்டுக் கல்யாணம் கூட செஞ்சுக்கலாம். இப்பெல்லாம் பிறந்த நாள் பார்ட்டிகள் கூட நடத்தறாங்களாம். கிறிஸ்மஸ் தினத்தைத்தவிர வருசம் முழுசும் பார்வைக்குத் திறந்திருக்கும் இடம். எல்லா வெளிநாடுகளையும் போல உள்ளே போகும் டிக்கெட் விலை அதிகம்தான் என்றாலும் உள்ளூர் மக்கள் வசதிக்காக 'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஒரானா வொய்ல்ட் லைஃப்'ன்னு இருக்கும் அமைப்பில் சேர்ந்துக்கிட்டால் ஒரு வருசம் வரை இலவசமாப் போய் வரலாம். ரெண்டு தடவைப் போய் வரும் டிக்கெட்காசு தான் இதுக்கு. ஒரு பேட்ஜ் கொடுப்பாங்க. கம்பீரமாச் சட்டையில் குத்தி வச்சுக்கிட்டுக் கெத்தா உள்ளே நுழையலாம். இங்கே நடக்கும் விஷயங்களையெல்லாம் மாசம் தவறாமல் நியூஸ் லெட்டரில் அறிக்கை நம்ம வீட்டுக்கு அனுப்புவாங்க, நாங்களும் முந்தைய நண்பர்கள்தான்.

இதுதவிர இங்கேயுள்ள செல்லங்களை நாம் தத்து எடுக்கும் வசதியும் இருக்கு. அதுக்காக ஒரு நீர்யானையையோ, சிங்கத்தையோ வீட்டுக்குக் கூட்டிவந்து வச்சுக்கெல்லாம் முடியாது:-)))) நம்ம தத்துப்பிள்ளைகளை ஒரானா பார்க் ஹாஸ்டலில் வச்சு வளர்க்கலாம்:-))))

எங்க ஒரானா பார்க்குலே அழியப்போகும் ஆபத்தில் இருக்கும் இனங்களுக்கான விசேஷ' Bப்ரீடிங்' பிரிவுகூட இருக்கு. Zooவில் ஒரு குழந்தை பிறந்தால்கூட உள்ளூர் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் சொல்லிருவாங்க:-) இந்தப் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கவும் ஒரு போட்டி நடத்துவாங்க. தேர்ந்தெடுத்த பெயருக்கு உரியவருக்கு பார்க் விஸிட் டிக்கெட் டீ ஷர்ட்ன்னு பரிசுகளும் கிடைக்கும். எதாவது ஒன்னு மண்டையைப் போட்டாலும் ஊரே கூடி துக்கம் கொண்டாடும்.

ஆஃப்ரிக்க நாடுகளைத்தவிர, தென் அமெரிக்க வகைகளான லாமா, மெக்ஸிகன் ஸ்பைடர் மங்கிஸ், அண்டைநாடான அஸ்ட்ராலியா வகைகளில் ஈமு, கருப்பு அன்னம், சிகப்பு கங்காரு, மஞ்சள் தலை காக்கட்டூ, செதில் முதுகுள்ள பல்லிகள் இப்படி சிலபல. நியூஸி ஸ்பெஷலான கிவிப்பறவைக்குத் தனியா ஒரு கிவி ஹவுஸ், காகாரிகி என்ற கிளி வகைகள், கெரெரூ என்ற காட்டுப் புறாவகைகள், டுவாடாரா என்ற ஓணான் வகைகள் உண்டு.

மிருகங்களை கூடியவரையில் அண்மையில் பார்க்கும் வசதிகளும் சாப்பாட்டு நேரத்தில் போய் உணவு அளிப்பதைப் பார்க்கவும் ஏற்பாடுகள் உண்டு.

நாங்க நியூஸி வந்த புதுசில்(1988) இங்கே லயன் சஃபாரின்னு இருந்துச்சு. உசரமாக் கம்பவேலி போட்ட சின்னக் காட்டுக்குள்ளில் ஒரு காலி இடத்தில் வண்டிகளை வட்டமாகப் பார்க் பண்ணிக்கிட்டு, நாம் நம்முடைய கார்களில் இருந்து காட்டரசனையும் அந்தப்புர அழகிகளையும் பார்க்கலாம். வண்டியைக் கண்ட இடத்தில் நிறுத்தாமல் நமக்கு முன்னே கட்டியம் சொல்லிப்போகும் காரைப் பின்பற்றியே போய் வரணும். கார் கண்ணாடிகளை இறக்கக்கூடாது. கதவைத்திறக்காமல் உள்ளே நல்லாப்பூட்டி வைக்கணும், சத்தம் போடக்கூடாது இப்படி ஏராளமான கூடாதுகள்.

அதிலும் சிங்கங்களுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரம்தான் நம்மைக் கூட்டிப்போவாங்க:-) பெரிய கூண்டுபோல் இருக்கும் வண்டிக்குள் சிங்கப் பணியாளர் ஒருத்தர் பெரிய இறைச்சித் துண்டங்களை வச்சுருந்து அங்கங்கே இருக்கும் சிங்கங்களுக்கு உணவு கொடுப்பார். சாப்பாட்டு நேரத்துக்குக் காத்திருக்கும் பசங்க தாவி வந்து இறைச்சியைக் கவ்விப்போகும். சிலது வண்டி கூடவே பிடிச்சுக்கிட்டு நடக்கும். சிலது கூண்டுக்கு மேலே ஏறி நின்னு 'தா தா ' ன்னு கேக்கும்.
அதுக்கப்புறம் ஒருசமயம் போனபோது சிங்கங்களுக்கு வேற அமைப்பு ஒன்னு செய்யறோமுன்னு சொல்லி இதுகளை ஒரு பெரிய இடத்தில் கம்பி வேலிக்குள்ளில் வச்சுருந்தாங்க. அங்கங்கே கம்பி ஓரமா சிலது படுத்துருக்குது. சாப்பாட்டு நேரம் வந்ததும் என்ன செய்யப்போறாங்கன்னு காத்திருந்து பார்த்தால்.....கம்பி வேலியில் அங்கங்கே சரிவா வச்சுருக்கும் ஒரு அடி நீளக்குழாய் அமைப்பில் வெளிப்பக்கமிருந்து இறைச்சித் துண்டுகளைப்போட்டு உள்ளெ தள்ளி விடறாங்க. எனக்குச் சீன்னு போச்சு. ஏதோ நாய்க்குப் போடுறதைப்போல..... அரசனுக்குக் காட்டும் மரியாதை இதுதானா? அப்பத்தான் கவனிக்கிறேன் இதுகளும் அந்தக் குழாய்க்கு அடியில்தான் படுத்துருக்குங்க. இறைச்சி வாளியைப் பார்த்ததும் எழுந்து நின்னு குழாயில் வாய் வச்சுப் பார்க்குது ஒன்னு.

நல்ல பெருசா இருக்கும் முழுத்தொடையோ, இல்லை அரை ஆடோ, மாடோ போட்டால்தானே அதுங்களுக்கும் பசி அடங்கும். மனத்திருப்தியாக் கடிச்சு சாப்பிடவும் செய்யும் இல்லையா? தாங்க முடியாமல் அப்புறம் அந்த சாப்பாடு பரிமாறினவரிடம் கேட்டதுக்கு 'இது ச்சும்மா ஒரு ஸ்நாக் போலதான். பார்வையாளர்கள் பார்க்க ஒரு ஃபீடிங். சாயந்திரமா பெரிய துண்டுகள் கொடுப்போம்'ன்னு சொன்னார்.

சிங்கங்களுக்கான புது அமைப்பை இப்போ கட்டி முடிச்சு போனவருசம் திறந்துட்டாங்களாம். ஆன செலவைச் சரிக்கட்டவோ என்னவோ இப்ப சிங்கம் என்க்ளோஸர்'' போய்ப் பார்க்க தனிச்சார்ஜ் கொடுக்கணும். அதுவும் ஆளுக்கு 30 டாலர். பார்க் உள்ளே வரக் கட்டணம் 25. சிங்கம் வேணுமுன்னா குடு முப்பது! (எனெக்கென்னமோ இது கொஞ்சம் அநியாயமாத் தோணுது) நம்மை கூண்டுக்குள்ளே வச்சு சிங்க ராஜ்யத்துக்குள்ளே கொண்டு போய்க் காட்டுவாங்களாம் அதுகளுக்கு!!!! . படம் பார்க்க:-)இது மட்டுமில்லாம சிறுத்தைகளையும் கிட்டப்பார்க்க ஒரு திட்டம் இருக்கு. இந்த சிறுத்தைகள் இங்கேயே பிறந்து மனிதர்களால் வளர்க்கப்பட்டவை. ஆனாலும் மிருகம் மிருகம்தானே? எப்ப எப்படி நடந்துக்குமுன்னு சொல்ல முடியாதுதான். எனக்கு என்னமாவது ஆச்சுன்னா அதுக்கு யாரும் பொறுப்பல்லன்னு ஒப்புதல் படிவம் எல்லாம் நிரப்பித்தரணும்ஒரு நாளைக்கு நாலே பேர் மட்டும் இந்தத்திட்டத்தின்படி கிட்டக்கப்போலாம். இதுக்கு ஆளுக்கு 100 டாலர். புக் பண்ணும்போதே காசைக் கட்டிடணும் ( அதானே.... உள்ளே போனபிறகு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் காசை யார் கட்டுவா?) சீட்டா கீப்பரோடு போய் அவர் சொல்லும் பேச்சைக் கேட்டுக்கிட்டு கையைக் காலை ஆட்டாம 'ச்சுப்'ன்னு இருக்கணும். சிறுத்தை நம்மை கவனமா அப்ஸர்வ் செஞ்சுட்டு அதுக்குத் தோணினால் அதுவாவே வந்து நம்ம பக்கத்தில் உக்கார்ந்துக்கும். அப்போ தடவிக்கொடுக்கலாம். நாம் நம்பிக்கையானவர்கள்தான்னு அதுக்குப் புரிஞ்சால் நம்ம மேல் கை எல்லாம் வச்சுக்குமாம்!!!! (ஆ...... நம்ம கோகியைத் தடவிக்கொடுத்த அனுபவமே நமக்குப்போதும்)
Lemur Ring Tails


ருசி கண்ட பூனைகளைப்போல் ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனியா என்கவுண்ட்டர் வச்சுட்டாங்க. முப்பது டாலர் செலவழிக்க நீங்க ரெடின்னா, Lemurக்கு வாழைப்பழம் ஊட்டிவிடலாம். இருக்கறதுலேயே 'மலிவு' புலிகள்தான். 20 டிக்கெட் ஒரு நாளைக்கு. ஆளுக்கு 20 டாலர். சுமத்திராப் புலிகள்

மீர்கேட் தரிசனம் கிடைச்சது. இதைச்சொல்ல வந்தவள்தான் பார்க்குக்குள் நுழைஞ்சதும் உங்களை வேற எங்கெல்லாமோ கூட்டிக்கிட்டுப் போயிட்டேன். கீரி போல ஒரு தோற்றம். கூட்டுக்குடும்ப வாழ்க்கை. குழி தோண்டுவதில் நிபுணத்துவம். பொந்து பொந்தாத் தோண்டி உள்ளே போய் ஒரு நிமிசம் உக்கார்ந்துட்டு வந்துரும். ஆனால்.... வெளி உலகத்தில் என்ன நடக்குதோ என்ற ஆர்வம். எட்டிஎட்டிப் பார்க்க தீராத ஆசை. பின்னங்கால் ரெண்டில் எழுந்து நின்னு பார்க்கும்போது நம்ம மனசை அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!! ச்சோ.... ச்வீட்:-)

ஒருநாள் 'கடை வாக்' போனப்பக் கண்ணில் பட்டதை வாங்கியாந்துட்டேன். கூர்மையான பார்வையுடன் அடடடா..... பார்க்கப் பார்க்க மனசுலே

மனைவியுடன் குழந்தையையும் ஒருவனாக சுமக்கின்றேன்
சுமப்பதுதான் சுகம் என்று மனதுக்குள்ளே....நினைக்கிறேன்.

பாட்டின் வரிகள் ஓடுவதைத் தவிர்க்கமுடியலை:-))))

Friday, March 02, 2012

'வேணு'வை எங்கே தொலைத்தாய் 'கோபாலா'?.

அசந்து தூங்கிட்டேன்போல. கண் விழிக்கும்போது மணி ஏழரை. ராத்திரியெல்லாம் சரியாத் தூக்கம் வராமப் புரண்டுக்கிட்டே இருந்தேன். எல்லாம் பசிதான். தாளமுடியாத ஒரு கட்டத்தில் எழுந்து நாலு பிஸ்கெட்டைப் பிச்சுப் போட்டுக்கிட்டு ரெண்டு க்ளாஸ் தண்ணி அடிச்சதும் வயிறு கொஞ்சம் சமாதானமாச்சு.

கல்யாணவீட்டுலே இருந்து வரும்போதே ..... அறைக்குப்போய் புளியோதரையை வெட்டணுமுன்னு நினைப்பு. நம்ம மோட்டலுக்குள்ளே வண்டியைத் திருப்பும் இடத்தில்தான் லிட்டில் இண்டியா என்னும் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. மத்தியானம் பார்த்துவச்சுக்கிட்டதுதான். (பழைய க்ரிக்கெட்காரர் 'க்ளெண் டர்னர்' யாருக்காவது நினைவிருக்கா? அவர் ஒரு பஞ்சாபியைத்தான் கலியாணம் கட்டினார். அவுங்க பெயர் சுகிந்தர் கௌர். இங்கே வந்து டனேடின் என்ற ஊரில் செட்டிலானாங்க. அங்கே ஒரு ஃபிஷ் அண்ட் சிப் கடையை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு இருந்த சமயம் சுகியின் தாயும் தந்தையும் மகளைப்பார்க்க நியூசி வந்தாங்க. அப்பதான் இந்தக் கடையில் சில இந்தியச் சாப்பாட்டையும் செஞ்சு வித்துப்பார்க்கலாமுன்னு ஐடியா வந்துருக்கு. ஊர் ஜனங்களுக்குப் புது ருசி பிடிச்சுப்போய் கடையில் கூட்டம் வர ஆரம்பிச்சது. ஒத்தை அடுப்பை வச்சு மாரடிக்காம பெரிய அளவில் நடத்தலாமேன்னு 1991 இல் அவுங்க குடும்பம் ஆரம்பிச்சதுதான் இந்த இண்டியன் ரெஸ்ட்டாரண்ட். அப்புறம் இந்த 21 வருசங்களில் இது 13 கிளைகள் பரப்பி முக்கிய ஊர்களில் இடம்பிடிச்சுருக்கு. எங்கூர்லேயே மூணு. அதுலே ஒன்னு நிலநடுக்கத்தில் போயிருச்சு:( இந்த சுகி(ந்தர் கௌர்) டர்னர் ஒன்பது வருசங்கள் (மூணுமுறை) டனேடின் மேயரா இருந்தாங்க. நியூஸியில் மேயரான முதல் இந்தியர் என்ற பெருமை இவுங்களுக்குத்தான்.) அங்கே போய் எதாவது சாப்பிட்டுக்கலாமான்னா..... நம்ம அதிர்ஷ்டம் பாருங்க .... சாத்தி இருக்கு. மணி இரவு ஒன்பதரைதான். இங்கெல்லாம் கொஞ்சம் சீக்கிரமாவே மூடிருவாங்க போல:(

மூடுன கதவைப் பார்த்ததும் பசி சட்ன்னு அடங்கிருச்சு. மறுநாள் சீக்கிரமாக் கிளம்பிடலாமுன்னு திட்டம். காலை எட்டுக்குப் போனால் சரியா இருக்கும். அரக்கப்பரக்க எழுந்து பல்லைத் தேய்ச்சுட்டு நேத்து மோட்டல்காரர் கொடுத்த பாலை மைக்ரோவேவில் சூடாக்கி ஆளுக்குப் பாதின்னு குடிச்சுட்டு அறையைக் காலி செஞ்சுட்டுப் புறப்பட்டோம். ஊர் இன்னும் விழிக்கலை.
அதிகாலை டிமரு


நாம் தங்கிய மோட்டல்
டிமருவில் கோடைகாலக் கொண்டாட்டம்


இங்கே மோட்டல்களில் நாமே சமைச்சுக்கும் வசதிகள் இருக்கு. மைக்ரோவேவ், மின்சார அடுப்பு, நாலைஞ்சு சமையல் பாத்திரங்கள், கத்தி, ஸ்பூன், ஃபோர்க், தட்டு, டப்ளர், காஃபி மக், ப்ரெட் டோஸ்ட்டர், எலெக்ட்ரிக் கெட்டில் இப்படி பேஸிக் அயிட்டங்கள் இருக்கும். பயன்படுத்திய பாத்திரங்களைக் கழுவி வைக்கத் தேவையான ஸோப், ஸ்பாஞ்ச், கிச்சன் டவல் இப்படி சகலமும். அவசரத்துக்குன்னு கொஞ்சம் காஃபித்தூள், டீத்தூள், சக்கரை வச்சுருப்பாங்க.
உள்நாட்டுப் பயணம் போகும்போது காரில் லக்கேஜோடு லக்கேஜா நமக்கு வேண்டிய அரிசி, மசாலா, பருப்புன்னு மளிகைச் சாமான்களைக் கொஞ்சம் எடுத்துக்கிட்டுப் போனால் அந்தந்த ஊர்களில் இருக்கும் சூப்பர்மார்கெட்டுகளில் ப்ரெஷ் காய்கறிகளையும் உறைஞ்ச காய்களையும், தயிரையும் வாங்கிக்கிட்டு வயிறு வாடாமல் பயணத்தை அனுபவிக்கலாம். இதுக்குன்னே சின்னதா ஒரு ரைஸ் குக்கர் வாங்கி வச்சுருக்கேன். பக்கத்து நாடான அஸ்ட்ராலியா போனாலும் கையோடு குக்கரை எடுத்துக்கிட்டுப் போவேன்.

பொதுவா சனி ஞாயிறுகளில் வேலை நேரம் பத்துமணிக்கு என்றதால் சாலையில் போக்குவரத்து ஒன்னும் இல்லை. போற வழியில் எங்காவது சூப்பர்மார்கெட் திறந்துருந்தால் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எதாவது வாங்கிக்கணும். சூப்பர்மார்கெட்டுகளும் பெரிய கடைகளும் நாடு முழுசும் செயின் ஸ்டோர் வகையில் இருக்கு. அந்தந்த ஊருக்குன்னு ஸ்பெஷலா கிடைக்கும் சமாச்சாரங்கள் என்று ஒன்னும் கிடையாது இங்கே. நாடு முழுக்க ஒரே சாமான்கள். ஒரே விலை.

நூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் சாலை. ஊர்கள் இடையில் வரும்போது மட்டும் அந்த எல்லைக்குள் அம்பது கிமீ வேகம். மாடுகள் எல்லாம் வெள்ளெனவே எழுந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டு இருக்குதுகள். ரங்கிட்டாடா நதிப்பாலமும் ரக்கியா நதிப்பாலமும் ரொம்ப நீளமா இருக்கு! அகலமான நதிகள். ஆனா...இப்போ தண்ணி கொஞ்சமா ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருக்கு. ட்ரௌட் வகை நன்னீர் மீன்கள் நிறைய இந்த ஆறுகளில் கிடைக்கும்.
தூரத்துலே ' எங்க கைலாசம்' (மவுண்ட் குக்)கண்ணில் பட்டுச்சு. கோடைகாலம் என்றபடியால் மலைமுகட்டில் மட்டும் கொஞ்சம் பனி. மவொரி மக்களுக்கு இது புனிதமான மலை.

ஆஷ்பர்ட்டன் நகர் கவுண்ட்டவுன் சூப்பர்மார்கெட்டில் க்ரீம் பன், வாழைப்பழம், சனிக்கிழமை பேப்பர்( வாரம் ஒருநாள்தான் தினசரி வாங்குவோம். மற்ற நாட்களில் இலவசப்பேப்பர் வீட்டு மெயில் பாக்ஸ்க்கு வந்துரும்) வாங்கினோம். காரில் இருந்தபடியே காலை உணவை முழுங்கிட்டு வீட்டை நோக்கி வண்டியை விரட்டுனதில் பத்தேகாலுக்கு வாசலை மிதிச்சாச்சு.

புழக்கடையில் குருவிகள் கூட்டம் ப்ரெட் எங்கேன்னு கேட்டுக் கூச்சல் போடுதுங்க. ரொட்டித்துண்டுகளைக் கிள்ளித் தூவிட்டு குளிச்சுட்டு ஒரு நல்ல காஃபி. உயிர் வந்துச்சு.

இன்னிக்கு நம்ம ஸ்வாமிநாராயண் கோவிலில் சாமிச்சிலைகளை பிரதிஷ்டை செய்யறாங்க. மூணுநாள் விழா. அழைப்பிதழ் அனுப்பி இருந்தாங்க. நேற்று 'ஜல்யாத்ரா' கடலுக்குள்ளே படகுலே போய் கடலம்மாவுக்குப் பூஜை செஞ்சு அபிஷேகத்துக்குத் தண்ணீர் கொண்டு வருவாங்களாம். நாம்தான் கல்யாணத்துக்குப் போறோமேன்னு படகு சவாரிக்குப் பெயர் கொடுக்கலை.

இன்று காலை ஒன்பதுமுதல் பனிரெண்டரை வரை சாமிகள் நிர்மாணம். அந்தத் தெரு முழுசும் ரெண்டு பக்கமும் வண்டிகள் நிறுத்தியிருக்கு. பயங்கரக்கூட்டம்தான் போல! கோவில் வாசலில் என்னை இறங்கச் சொல்லிட்டு எப்படியும் தனியாத்தான் இருக்கப்போறே. அதனால் நீ போய்க்கிட்டே இருன்னார். அதுசரி., அதுவரை கூடவே இருக்கேன்னு சொன்னதும் அடுத்த தெரு முனையில் வண்டியை நிறுத்திட்டு வந்தார் கோபால்.

வழக்கமா ஒரே வாசலில் நுழைஞ்சு நீயாரோ நான் யாரோன்னு இருக்கணும். இன்னிக்கு வாசலே தனித்தனியா ஆகிப்போச்சு.! பெண்கள் பக்கவாட்டு வழியில் நுழைஞ்சு சாப்பாட்டுக்கூடம் கதவு வழியா உள்ளே போகணுமாம். கூடத்தில் எட்டிப்பார்த்தேன். ஸ்வாமி சிலைகள் அலங்காரமா நிக்க மக்கள் கூட்டம் அலைமோதுது. இனங்களைப் பிரிக்கும் லக்ஷ்மண ரேகா! பிரசங்கம் நடந்துக்கிட்டு இருந்துச்சு.
போனவாரம் ஆக்லாந்து நகரின் ஸ்வாமிநாராயண் கோவில் கட்டி பத்து வருசமானதுக்கு ஒரு விழா நடத்துனாங்க. அந்த விழாவை நடத்திவச்சுட்டு அப்படியே எங்கூர் புதுக்கோவிலுக்கு ஸ்வாமி சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீட்சை வாங்கி அம்பது வருசமான சாது த்யாகவல்லப்ஜி தலைமையில் ஏழு சாதுக்கள் வந்துருக்காங்க.
முதியசாது த்யாகவல்லப்ஜி


வரும் திங்கள் செவ்வாய் இரண்டு தினங்களில் இந்த ஊரிலேயே தங்கப்போகும் சாதுக்களை நமக்கு விருப்பமானால் நம்ம வீட்டில் அவர்களை வரவழைத்து ஆசிகள் பெற்றுக் கொள்ளலாமாம். ஐயோ!!!!! பெண்கள் எல்லோரும் முன்னுக்கே வரக்கூடாது என்ற இவுங்க சட்டதிட்டங்களுக்கு நம்மாலே சமாளிக்க முடியாது.

அந்த 'ஜல்யாத்ரா'வுக்கே ஆண்களுக்கு, பெண்களுக்குன்னு ரெண்டு தனித் தனிப்படகுகள். பெண்கள் படகை ஓட்டுனது(ம்) பெண்ணான்னு விசாரிக்கணும்.

சரியா பனிரெண்டே முக்காலுக்கு பிரஸாதம் பரிமாறல். சாப்பாட்டுக்கூடம் பெண்களுக்காகவும் கட்டிடத்தின் புழக்கடைப்பகுதியில் பந்தல் போட்டு ஆண்களுக்காகவும் உணவு ஏற்பாடு. கருவறை ஹாலில் பூஜைகள் முடிஞ்சபிறகு பெண்களோ ஆண்களோ எல்லோரும் போய் மூர்த்திகளைப்பார்க்கலாம். படங்கள் எடுக்கவும் தடை ஏதும் இல்லை. பூஜை சமயத்தில் மட்டுமே லக்ஷ்மண ரேகா. ஆரம்பகாலத்தில் செய்த நியமங்களை விடாமல் காப்பாத்திக்கிட்டே இருக்காங்க போல. போகட்டும் அவரவர் நியாயங்கள்.
கோவிலே இல்லாத ஊருக்கு ஒரு கோவில் வந்துருக்கு. அதுக்காக சந்தோஷப்படாம....... குற்றம் கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணுமா?

அழகா அஞ்சு மாடங்களில் சின்னச்சின்ன சந்நிதிகள். முதலில் ராமனும் சீதையும் அவர்கள் காலடியில் ஹனுமனும்.
அடுத்து ராதையும் க்ருஷ்ணனும். அபிநயித்துக்கொண்டிருந்த க்ருஷ்ணனிடம்,
;பாஸூரி கஹா(ங்)?' என்று கேட்டேன். பதில் ஒன்னும் சொல்லம மௌனமா இருந்தான்:-)))) காக்கா....ஊஷ்.....
நடுநாயகமா நாராயணனும் நரனும்.
நான்காவதில் ஸ்வாமிநாராயண் இயக்கத்தின் இந்த BAPS ( Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha) பிரிவின் ஆரம்பகாலத் தலைவர்கள் முதல் தற்போதைய தலைவர் வரை உள்ள சாதுக்கள். (1907 -2012) நால்வர்.
அஞ்சாவது பரமசிவனும் பார்வதியும் பிள்ளையாரும். கார்த்திகேயனைக் காணோம்:(
சிவன் மனுஷ்யரூபத்தில்! ரொம்ப அழகான திருமுகம். இங்கே பிரதிஷ்ட்டை செய்த மூர்த்தங்களிலேயே அபார அழகு முகம் இந்த சிவனுக்குத்தான்.!
நாட்டுலே எல்லா விசேஷங்களுக்கும் கேக் வெட்டும் சம்ப்ரதாயம் அனுசரிச்சு இங்கேயும் ப்ரதிஷ்ட்டைக்கான கேக் செஞ்சு ரெடியா இருக்கு. அன்னக்கூட் உற்சவத்துக்கு வைப்பதுபோல் மூர்த்திகளுக்கு முன் விதவிதமான இனிப்பு வகைகளின் கொலு!
மறுநாள் ஞாயிறு பக்திபஜனை விழா. உள்ளூர் பள்ளிக்கூட ஹாலில் ஏற்பாடு. மாலை நாலரை முதல். சாதுக்களில் ஒருவர் தப்லாவும் இன்னொருவர் பாட்டுமா ஜமாய்ச்சுட்டாங்க. ரெண்டுபேரும் ஐ டி ஆட்கள். வந்த சாதுக்கள் அனைவருமே டாக்டர், எஞ்சிநீயர், விஞ்ஞானி என்று மெத்தப் படித்தவர்கள். அஞ்ஞானத்தைவிட்டு மெய்ஞானம் தேடிவந்தவங்க!
பக குங்குரூ பாந்த் மீரா நாச்சி ரே (Pag ghungaroo baandh meera nachi re nachi re) என்ற மீரா பஜன் பாடல்தான் மாஸ்டர் பீஸ்! பெண் இயற்றிய பாடலாச்சேன்னு ...எப்படின்னு...நினைச்சேன்:-) நல்லவேளை ஸ்வாமி சிலைகளில் பெண் சாமிகளுக்கு சம இடம் இருக்கு:-)

மூத்த ஸாது மேடையில் இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்தக் கோவில் சம்பந்தமான விஷயங்களில் ஆதரவுடன் 'நிதி' அளித்த மக்களை, தனித்தனியாகப் பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து மூத்தவர் கையால் மலர்க்கொத்து கொடுத்து மரியாதை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு நம்ம 'கோபால் bhai பெயர் வந்ததும் திகைச்சுப் போயிட்டேன். பெரியவரின் ஆசிகள் நம்ம கோபால் ,மூலம் துள்சி Bhenனுக்கு வந்து இப்போ உங்களுக்கெல்லாம் விநியோகிக்கப்படுகிறது.

ஆரத்தி முடிஞ்சு மஹா பிரஸாதமா சாப்பாடு. நேத்து சாமிக்கு வச்சுருந்த இனிப்புகளும் கேக்கும், காரவகைகளும் துணைக்கு வர பூரி, சன்னா மசாலா, சாதம், பருப்பு, பப்படம், ஸாலட்! வேணாமுன்னு சொல்லப்பிடாது சாமி கொடுக்கும் சாப்பாட்டை, இல்லையா?
கட்டுச்சோறில் ஆரம்பிச்சது கடவுள் போட்ட சாப்பாட்டில் வந்து முடிஞ்சது.

அனைவருக்கும் நீங்கள் ' நம்பும்' இறைவனின் அருள் கிடைக்கட்டும்.

என்றும் அன்புடன்,
துளசி
.