Wednesday, February 09, 2011

தேரே முஸ்குரானா யாத் ஆனேகி காபில் நஹி ஹை !!!!

க்யோன்? தும் தோ ஏக் பேவஃபா ஹை.

ஓ ரியலி??

பஞ்சாப் யுனிவர்ஸிடியில் மாலைநேர வகுப்புகளுக்காக ஒரு தனிக் கட்டிடம். அதுக்குள்ளே ஒரு சின்ன ஆடிட்டோரியம். போய்ச்சேர்ந்தப்ப மேடை அலங்காரம் முடிஞ்சபாடில்லை. ஒரு இளம்பெண் அறிவிப்பாளரா இருக்கப்போறதுக்காக இன்னிக்குப் புடவைகட்டி, தலைமுடியை ஸ்டைலா அப்படியே பரத்திவிட்டு. நாஸுக்கா அப்பப்ப முடியைக் கோதிவிட்டுக்கிட்டே மைக் பிடிச்சு இன்னிக்கு என்ன ஏது ன்னு அறிவிப்பு செஞ்சு பார்த்தார். சும்மா ட்ரயல்தான். நாங்க ரெண்டு பெரும் கைதட்டி 'ஊக்கு வித்தோம்'. பாவம்..... ட்ரயல் ட்ரயலாவே நின்னுடப்போகுதுன்னு அப்போ நாங்க ஊகிக்கலை :(
இன்னிக்கு அதிசயமா ஒரு அம்மா வந்து பண்டிட் பீம்ஸென் ஜோஷி அவர்கள் படத்துக்கு ஊதுவத்தி ஏத்தி வச்சாங்க. வழக்கம்போல் 'கலைஞர்' கையால் பூச்சொரிதல் இருக்காதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சுருக்குமோ!
பூனாவில் நாம் இருந்தப்ப நம்ம வீட்டுக்கு முன்பக்கம் இருந்த கூர்க்கா ரெஜிமெண்ட் மைதானத்துக்கு அந்தப் பக்கம் ஒரு தர்கா. நம்ம வீடு இருந்த வரிசையில் பேர்பாதி வீடுகளில் இஸ்லாமியர் இருக்காங்க. நமக்கு அவுங்க எல்லோருமே பயங்கர நட்புதான். இந்து முஸ்லீம் விரோதம் ஒன்னும் அப்போ கிடையாது. எல்லோரும் தாயும் புள்ளையுமாத்தான் இருப்போம். இப்பவும் அப்படித்தான் இருக்கோம்.

நம்ம கீழ்வீட்டு உம்மா கூட நான் அந்த தர்கா போய்வருவேன். அவுங்க என் கூட கோர்புரி பஸார் அனுமனைக் கும்பிட வருவாங்க. ஒரு சமயம் தர்காவில் எதோ விழா. அங்கே கவாலி பாட ஜானி பாபு வர்றார். நிகழ்ச்சி ராத்திரி பத்து மணிக்கு. அதனால் லேடீஸ் யாரும் வரமாட்டாங்களாம். நீச்சே உப்பா நம்ம கோபாலைக் கூட்டிக்கிட்டுப் போனார்.

ரெண்டு மணிக்குத் திரும்பி வந்த கோபாலுக்கு முகமெல்லாம் தூக்கக் கலக்கத்தோடு அப்படி ஒரு மகிழ்ச்சி. நமக்கு இதுவரை கவாலின்னா அது சினிமாவில் வருவதுதான். முக்கியமா ரிஷிகபூரின் பர்தா ஹே பர்தா ஹைதான். அதான் நாம் பூனா வந்தபிறகு பார்த்த முதல் ஹிந்திப்படம்.

புத்தம்புது ஒரு ரூபா நோட்டுகளை அப்படியே சட்டைப் பாக்கெட்டில் இருந்து உருவி உருவிப் போட்டுக்கிட்டு இருந்தராம் உப்பா!!!! இதுக்குன்னே புது நோட்டுகளை பேங்கிலே போய் வாங்கிவந்துருக்கார். 70களில் ஒரு ரூபாய் கொஞ்சம் பெரிய காசுதான். நமக்கோ அப்ப கட்டை சம்பளம். அதான் வியப்பில் இவருக்குக் கண்கள் விரிஞ்சுபோயிருக்கு அங்கே!

ஆறு மணி நிகழ்ச்சிக்குப் பத்து நிமிசம் இருக்கும்போது ஏழுபேர் பரபரப்பா நுழைஞ்சாங்க. மேடையில் போட்டுவச்சுருந்த சின்ன மெத்தையில் ஆறு பேர் தப்லா, மத்தளம், ஹார்மோனியங்கள் மைன்னு பரபரன்னு செட் செஞ்சு நடுவில் ஒரு இடம்விட்டு உக்கார்ந்தாங்க. தலைவர் அதுவரை பார்வையாளர்களுக்குன்னு இருந்த இருக்கையில் உக்கார்ந்துருந்தார். முழுக்கை வச்ச பட்டு ஜிப்பா. கழுத்தில் முத்து ஆரங்கள் இப்படி......
பார்க்க ரொம்ப சாதாரணமா இருக்காரேன்னு முதலில் நினைச்சுட்டேன்.

அப்புறம் வலையில் தேடுனா ............. (இதுக்குத்தான் தாடி சொல்லி இருக்கார் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று) தலையில் ஒரு குட்டு வச்சுக்கிட்டேன்.

உஸ்தாத் காதர் நியாஸி ( Qadar Niazi )அண்ட் பார்ட்டி இன்னிக்குப் பாடப்போறாங்க. உஸ்தாத் காதர் அவர்கள் கவாலி ஸாம்ராட் என்ற பட்டத்தை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஸெயில் ஸிங்கிடம் பெற்றவர். அவர் மகன்கள் ரெண்டுபேரும் ஹைதர் & ஹஸன், அப்பாகூடவே பாடறாங்க இப்போ. சுமார் 700 வருசங்களா இவரோட முன்னோர்கள் பரம்பரையாவே கவ்வாலி பாடகர்கள்தானாம். சூஃபி ஞானி ஹஸ்ரத் நிஸாமுதீன் ஆவ்லியாவின் பரம்பரையில் வந்தவர் இவர்.


கவ்வாலி இசைக்கு நல்ல பாரம்பரியம் இருக்கு. கிட்டத்தட்ட 1200 வருசங்களுக்கு முற்பட்டது. பெர்ஸியாவிலே ஆரம்பிச்சதுன்னு சொல்றாங்க. உருது, ஹிந்தி, பஞ்சாபின்னு பல மொழிகளில் கவ்வாலி பாட்டுகள் இருக்கு. (தமிழில் இருக்கான்னு தெரியலை)


கவாலின்னதும் நமக்கு நினைவுக்கு வரும் பாடகர் நம்ம நுஸ்ரத் ஃபடே அலி கான் அவர்கள்தான். நிறைய ஸீடீக்கள் கேட்டிருக்கேன். 49 வயசுலேயே போயிட்டார்:(


இந்த வகைப் பாடல்களுக்குன்னு சில நியமங்கள் இருக்கு. லீட் சிங்கரா ஒருத்தர். அவர்கூடவே சேர்ந்து பாட பக்கத்துக்கொன்னா ரெண்டு பாடகர்கள். பலசமயங்களில் இவுங்களே ஹார்மோனியம் வாசிச்சுக்கிட்டே பாடுவாங்க. சில சமயங்களில் ஹார்மோனியம் வாசிக்கத் தனி ஆட்கள். அப்புறம் பின்பாட்டுக்கு ரெண்டு பேர். தப்லா, டோலக் வாசிக்க ரெண்டு பேர் இப்படி சின்னக் குழுன்னாக்கூட 7 பேர் வேணும். இன்னும்கூட விதி முறைகள் இருக்கலாம். எனக்குத்தான் சரியாத் தெரியலை:(

ஹார்மோனியம் ஒலிக்க ஆரம்பிச்ச சமயம் திடீர்னு மின்சாரம் போயிருச்சு. வரும் வருமுன்னு இருந்தால்......ஊஹூம். ஏற்கெனவே சுமார் வெளிச்சம்தான். இந்த அழகில் உள்ளதும் போச்சுரா..... கதை:( இப்போ மட்டும் நம்ம விஜயகாந்த் இருக்கணும், மொபைல்ஃபோன் வெளிச்சம் போட்டுருப்பார்னு என் மனசுலே தோணுச்சு பாருங்க...... இதைப் படிச்சதுபோல் சட்னு நாலைஞ்சு செல்போன் ஒளி அங்கங்கே இருந்து வந்துச்சு.

அங்கங்கே ஒன்னு ரெண்டு மெழுகுவத்திகள் கொண்டு வந்து ஏத்தி வச்சாங்க. அப்ப திடீர்னு 'இப்போ நிறைய டீ கேண்டில்ஸ் ஏத்திவச்சுப் பாடுனா எவ்வளோ நல்லா இருக்கும் இல்லே?ன்னு கோபாலிடம் கிசுகிசுத்தேன். 'கேண்டில் லைட் கவ்வாலி' ன்றார் அவர். என் மனசில் தோணியதை யார் கண்டுபிடிச்சாங்களோ தெரியலை, ஒரு பெரிய பாக்கெட் மெழுகுவத்திகளைக் கொண்டுவந்து வரிசையா மேடையின் முன்பக்கத்துலே ஏத்தி வச்சாங்க.

அரை இருட்டுலே பந்தா ஏதுமில்லாம தலைமைப்பாடகர் காதர் நியாஸி மேடைக்குப்போய் நடுவில் உட்கார்ந்தார். 'அல்லா ஹூ' பாடலைக்கடவுள் வாழ்த்தா ஆரம்பிச்சார். பாட்டுப் பட்டையைக் கிளப்புது. மக்கள்ஸ் எல்லாம் இசையின் தாளத்துக்கேத்தபடி கைதட்டிக்கிட்டே கேக்கறோம். பாடல் முடிவுறும் சமயம் பளிச்ன்னு விளக்குகள் எரிய ஆரம்பிச்சது. யா அல்லா உன் கருணையே கருணை! ( இன்னிக்கு முழுசும் பயங்கரமாக் காத்து வீசுனதுலே உடைஞ்ச மரக்கிளை பவர் லைன் மேல் விழுந்துருச்சாம். மறுநாள் காலை தினசரியில் போட்டுருக்கு) பெரிய பெரிய கேமெராக்களுடன் அப்பப்ப சிலர் வந்து நாலு ஷாட் எடுத்துக்கிட்டுப் போயிடறாங்க. செய்தித்தாள்களுக்கு சப்ளை?? யாரும் உக்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தமாதிரித் தெரியலை.
அடுத்து 'நய்னா மிலாயே கே' ( Chhap tilak sab chheeni re osey naina milayee ke) ( அடுத்து பஞ்சாபியில் 'ஸஜ்னா தேரே பினா' ( Saanu ik pal chein na aavee sajna tere bina ) அப்புறம்....'பேவஃபா தேரா முஸ்குரானா யாத் ஆனேகி காபில் நஹி ஹை (Bewafa yoon tera muskurana yaad aane ke kabil nahin hai)

பாட்டின் இடையில் அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் நாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் சட்னு இட்டுக்கட்டிப் பாடும்போது முதலில் நாம் திகைச்சாலும் ஜோக் பிடிபட்டதும் ஆரவாரமும் கைதட்டலும்தான். மொழி அறிவு கொஞ்சம் கூடத்தான் வேணும் இந்நிகழ்ச்சிகளுக்கு. மற்ற கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதம் போல இசையைச் சும்மா ரசிக்க முடியாது.

மாணவர்கள் கூட்டம் ஒன்னு.... பின் வரிசைகளில். ஏகப்பட்ட விஸில் சப்தமும் இரைச்சலும். முன்னாலயோ இந்த இரைச்சலை அடக்கன்னு மைக்கின் வால்யூமைக் கூட்டிக்கிட்டே போறாங்க. காது நமக்குப் பழுக்குது:(

இதுக்குமேலேயும் இருந்தா காபில் நஹின் ஹை ன்னு கிளம்பிட்டோம்.

கடைசிப் பாட்டாக 'தமாதம் மஸ்த் கலந்தர்' பாடினாராம்.




Monday, February 07, 2011

குழலூதி... மனமெல்லாம்..... கொள்ளை

மறு நாள் அதே இடம் அதே நேரம். அதே இருக்கைகள். டாக்டர் சகுந்தலாவைப் பார்த்துச் சின்ன தலை அசைப்பு. அதான் ரெகுலர் கஸ்டமரா ஆகிட்டோமுல்லெ? காலையில் கணினி திறந்தப்பயே அவுங்க மடல்கள் காத்து நின்னது. தினசரியில் ரெண்டு நாள்தான் விளம்பரம் இருக்கு. ஆனால் மொத்தம் 12 நாட்கள் நிகழ்ச்சிகள் இருக்கு. விட்டுடாதேன்னு அனுப்பி இருக்காங்க. நம்ம ரசிப்பு இவ்வளவு தூரமா பரவிருச்சு!!!!!

இன்னிக்குக் குழலிசை. பண்டிட் ஹரிப்ரஸாத் சௌராஸியா. (Pt. Hariprasad Chaurasia )இவருடைய ஸீடிகள் வீட்டுலே இருக்குன்னாலும் நேரில் பார்க்கவும் கிடைச்சதே! 73 வயசு. கைகளில் ரொம்ப லேசா ஒரு நடுக்கம். நம்மை மாதிரி மூட்டுவலி இருக்கு போல:( மேடையின் முன்னால் வந்து கால்களைத் தொங்கப்போட்டுக்கிட்டு உக்கார்ந்தார். அழகான ஒரு சிஷ்யப்பொண்ணு (பெயர் தேவப்ரியா) கூடவே வந்து உக்கார்ந்தாங்க. தப்லாவுக்கு பண்டிட் அனுதோஷ் திகாரியா. (Anutosh Deghariya)
வீட்டுலே நம்ம அப்பூப்பன்மார்கூட இருப்பதுபோல் ஒரு உணர்வு. அவரும் குடும்பத்துலே இருந்து வாசிக்கும் உணர்வு வருதுன்னு சொன்னார். த ஃபீலிங்ஸ் ஆர் ம்யூச்சுவல்! குழந்தைகளை சங்கீதம் கேட்கவைக்கணும். பாடவருதோ இல்லையோ காதாலே கேக்கணும். குழந்தைகள் பிறந்ததும் முதலில் கேட்பது தாயின் தாலாட்டுதானேன்னார். உண்மைதான். விருந்தாவன் என்ற பெயரில் மும்பையில் ஒரு குருகுலம் நடத்தி ஏகப்பட்டக் குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி கொடுக்கறாராம். ஆச்சு எட்டு வருசங்கள். இப்போ ஒரிஸ்ஸாவிலும் ஒரு குருகுலம் ஆரம்பமாகி இருக்காம்.
இவரோட சொந்த ஊர் அலஹாபாத். அம்மாவை நாலுவயசாகும்போதே இழந்துட்டார்:(. அப்பா ஒரு மல்யுத்த வீரர். அவர் மகனை மல்யுத்த வீரனாக ஆக்கணுமுன்னு பயிற்சி கொடுத்துக்கிட்டே இருக்கார். 15 வயசானபோது பக்கத்துவீட்டுலே இருந்த பாடகர் பண்டிட் ராஜாராம் அவர்களிடம் பாட்டு கத்துக்கிட்டு இருந்துருக்கார். அப்புறம்தான் புல்லாங்குழல் மேல் ஒரு ஆசையும் ஈர்ப்பும் வந்து பண்டிட் போலாநாத் ப்ரசன்னா அவர்களிடம் குழலூதக்கத்துக்கிட்டார். இது எல்லாமே அப்பாவுக்குத் தெரியாமலேயே நடந்துக்கிட்டு இருக்கு. அப்பாகூடவே மல்யுத்தப்பயிற்சிக்குப் போவார். அப்போ சண்டைக்காக மூச்சை அடக்கிப்பிடிச்சதெல்லாம் இவருக்கு மூச்சைப்
பிடிச்சுக் குழலூத நல்லாவே பயன்பட்டு இருக்கு. அப்பக் கிடைச்ச பயிற்சியாலேதான் இந்த வயசிலும் என்னாலே வாசிக்க முடியுதுன்றார்.
வாங்கிய விருதுகளை அடுக்கினா பதிவு ரொம்ப நீண்டு போயிரும்! முக்கியமானவைகள் கணக்கில் 1992 இல் பத்ம பூஷன், 2000 தில் பத்ம விபூஷண். ம்யூஸிக் ஆல்பங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை.

முதலில் பண்டிட் பீம்ஸென் ஜோஷி மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமா ஒரு ராக ஆலாபனை. (என்ன ராகமுன்னு தெரியலை. க்கும்.... தெரிஞ்சுட்டாலும்.........) அடுத்து ஹம்ஸத்வனியில் 'வாதாபி கணபதீம் பஜேஹம் நம்மை நிமிர்ந்து உக்கார வச்சது. முத்துஸ்வாமி தீக்ஷதர் பாட்டாச்சே!

அடுத்து ஒரு மலைநாட்டு இசை. பஹாடி கீத். குருவும் சிஷ்யையுமா ரொம்ப அனுபவிச்சு வாசிச்சாங்க. அப்படியே மனசைச் சொக்க வச்சது. கண்ணன் மாடு மேய்ச்சுக்கிட்டு இருந்த காலத்தில் இப்படித்தான் வாசிச்சுக்கிட்டு இருந்துருப்பானோ!!!!
அரங்கம் முழுசும் 'முன்னாள் யூத்'களால் நிரம்பி வழிஞ்சது. சின்னப் பிள்ளைகளையும் இசை படிப்பவர்களையும் மேடையிலேயே ஒரு பக்கம் உக்கார வச்சுருந்தாங்க. அதுலே மூணு சின்னப்பிள்ளைகளைக் கூப்பிட்டுப் பக்கத்துலே உக்காரவச்சுக் குடிக்கத் தண்ணி எல்லாம் கொடுத்து ஆளுக்கொரு பாட்டு பாடுங்கன்னு பாடவச்சார். முன்னாலேயே சினிமா பாட்டு வேணாமுன்னு சொல்லிட்டதால் பசங்க கொஞ்ச நேரம் முழிச்சுக்கிட்டு இருந்து அப்புறம் நல்லாவே பாடிட்டாங்க. பள்ளிக்கூடத்துலே சொல்லித் தந்த ஆங்கிலப்பாடலை (கறுப்பு உடை) முரளிதர் பஜன் ( க்ரே ஜாக்கெட்) மா சரஸ்வதி ஷாரதா (சிகப்பு உடை) இப்படி மூணு பேரும் பாடி அசத்திட்டாங்க.
கேள்வி நேரம் ஆரம்பிச்சது. எழுந்து வர முடியாதபடி நடக்க இடைவெளி இல்லாம தரையெங்கும் மக்கள்ஸ். நம்மாட்கள் கேள்வி கேக்க அசரமாட்டாங்கன்னு ரொம்பவே புரிஞ்சு போச்சு. கேள்விக்கு முன்னுரையா அஞ்சு நிமிஷம் பேசறாங்கப்பா!!!! பேச்சோ பேச்சு! அதான் இவ்வளோ செல்ஃபோன் விக்குது:-))))))
இன்றைய முக்கிய விருந்தினரா பாட்டியாலா மகாராஜா வந்துருந்தார் ராணியுடன். இசைக் கலைஞருக்கு மாலை மரியாதைகள் ஆச்சு. ராஜா பேச ஆரம்பிக்குமுன் நாங்கள் 'எஸ்' ஆனோம். நடுவில் வந்தால் மரியாதையா இருக்குமா?

நேத்து சிதார். இன்னிக்கு செல்லோ. தினமும் போக முடியுதா? நாளைக்கு நம்ம ஸஷாங் சுப்ரமணியன் குழலிசை. அதுவும் மத்தியானம் 4 மணிக்கு. நிகழ்ச்சிகளை 'கீழே போட்டுருக்கு' பாருங்க. எது கிடைக்கணுமோ அது கிடைக்கட்டுமுன்னு இருந்தேன்.

கிடைச்சது. எல்லாம் அதே அதே ஆனால் நேரம் மட்டும் மத்தியானம் நாலு மணி. ஏற்கெனவே கர்னாடக சங்கீதமுன்னா வடக்கிகளுக்குக் கொஞ்சம் இதுதான். அதிலும் வெள்ளிக்கிழமை நாலு மணி. யாரும் வேலையை விட்டே வந்துருக்கமாட்டாங்க:( நம்ம சங்கீதத்துக்கு நாமே ஆதரவு கொடுக்கலைன்னா எப்படின்னு நாங்க அடிச்சுப்புடிச்சு ஓடுனோம். அரங்கமே காலி. எல்லா இருக்கைகளும் நமக்கே! யாரும் வரலைன்னா என்ன கதின்னு மனம் பதைபதைச்சுக்கிட்டே இருந்துச்சு. ஆர்கனைஸர் கூட ரொம்ப நேரம் கழிச்சுத்தான் வந்து மேடை அலங்காரங்களைச் சரி செஞ்சாங்க.

இம்டெக்லே வகுப்பு முடிஞ்சு கொஞ்சம் ஸ்டூடண்ட்ஸ் வந்து சேர்ந்து என் மனசில் பாலை வார்த்தாங்க. ஷஷாங்கும் அவர் கூடவே ஜெயசந்திர ராவ் அவர்களும் வந்து சேர்ந்தாங்க. கூடவே குழல்கள் அடங்கிய பையும் மிருதங்கமும். ரொம்பவும் தாமதிக்காம சட்னு ஆரம்பம் ஆச்சு. பூர்வி கல்யாணியில் ஆலாபனை ஆச்சு அப்புறம் விஸ்தாரமா இதையே முக்காமணி வாசிச்சார். தடதடன்னு ஷதாப்தி எக்ஸ்ப்ரெஸ் வேகம் கடைசியில். அடுத்து கிருஷ்ணா நீ பேகனே தொடர்ந்து ஒரு பஜன்.
எதிர்பார்ப்பு அதிகமானதாலோ என்னவோ, எனக்கு நிகழ்ச்சி ரொம்ப சுமாராத்தான் இருந்துச்சு. சண்டிகர் நியூஸ்லைனில் மனசை அப்படியே சிறகடிச்சுப் பறக்க வச்ச வாசிப்புன்னு ரெண்டு உள்ளூர் மாணவர்கள் சொன்னதாப் போட்டுருக்கு.

ரமா வைத்தியநாதனின் பரதம். சனிக்கிழமையாப் போனது சந்தோஷம். மொஹாலியில் இருக்கும் ஷிவாலிக் பப்ளிக் ஸ்கூல். இசைவிழா நிகழ்ச்சிகளை சண்டிகரின் வெவ்வேற பள்ளிக்கூடங்களில் வச்சுருக்காங்க.
நிகழ்ச்ச்சிக்குப் பாட்டு இந்து நாயர். மிருதங்கம் அருண் குமார். நட்டுவாங்கம் சிவகுமார். இவுங்க எல்லோருமே தில்லி மக்கள்ஸ்.
பரத...... என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்து வடக்கர்களுக்கு விளக்கிய ரமாவின், அஞ்சலியில் ஒரு மயில் நடந்துவந்து ஆடுச்சு பாருங்க........அற்புதம். அடுத்து முத்திரைகளைபற்றி ஒரு விளக்கம். அஞ்சு விரல்களில் என்னென்ன மாதிரி எதையெதையெல்லாம்னு படபடன்னு சொல்லிச் செஞ்சு காமிச்சது நல்லாவே இருந்துச்சு. தில்லி ஏர்போர்ட்லே பார்த்த முத்திரைகள்தான் எனக்கு உடனே நினைவு வந்துச்சு. நவரச கிருஷ்ணா என்று ஒரு அயிட்டம் செஞ்சாங்க. கண்ணன் சிறு குழந்தையா இருந்தப்ப அம்மா பறவைகள் மான்கள் எல்லாம் காட்டிச் சோறு ஊட்டும் காட்சி அப்படியே கண் முன்னால். பதினாலு வயது இளைஞனாக மதுரா நகருக்குள் நுழையறான். கண்டவர் கண்களையெல்லாம் கட்டிப்போடும் அழகு, கம்பீரம். கடைசியில் கம்ஸனைக் கொல்லுதல் யமுனை நதிக்கரையில் வந்து கைகால் முகம் கழுவி விஸ்ராந்தியாக ஓய்வெடுத்தல் இப்படி ஸீன் பை ஸீன் நம்ம மனதை அப்படியே சுருட்டி எடுத்துக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும்.
வந்தேமாதரம் பாடலுக்கு அபிநயம் அப்புறம் தில்லானா . ஒரு மணி நேரத்துலே நிகழ்ச்சி கச்சிதமா முடிஞ்சது. ஆரம்ப நடனத்துலே மணிரத்தினம் பட ஷூட்டிங்லே இருந்தோம். அப்படி ஒரு இருட்டு. விளக்கைப் போடலாமுன்னா....எது எங்கேன்னு கூடத் தெரியலை. மைக் செட்டைச் சரி பண்ணிக் கொடுத்துட்டு எலெக்ட்ரீஷியன் காணாமப் போயிருந்தார். செல்லடிச்சு அவரைப் புடிச்சாங்க.
திரும்பி வந்து சரி செய்யும்வரை பொறுமையா மேடையின் ஒரு பக்கம் காத்திருந்ததைச் சொல்லணும். அழறபிள்ளைதான் பால் குடிக்கும்! இத்தனைக்கும் அவுங்க வலைப்பக்கத்துலேயே அவுங்க நடனத்துக்குத் தேவையான மேடை, ஒலி ஒளி அமைப்பு எப்படியெல்லாம் இருக்கணுமுன்னு விலாவரியாப் போட்டு வச்சுருக்காங்களே, இங்கத்து ஆட்களுக்கு இதைச் சொல்லாம இருந்துருப்பாங்களா என்ன?


நம்ம நாட்டுக்கே உரித்தான அலட்சியம் அங்கங்கே எட்டிப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கு என்பது ஒரு சோகம்:(

'சிம்ரன் மாதிரி இருக்காங்கல்லே?' கோபால்.

ஆமாம்ன்னாலும் உடனே ஒத்துக்க முடியாதுல்லே? மறுநாள் 'நீங்க சொன்னது சரி. கொஞ்சம் சிம்ரன் சாயல் இருக்கு'ன்னு சொன்னேன்.


இன்னிக்கு மாலை கவாலி நிகழ்ச்சி ஒன்னு இருக்கு. கடைசிநாள் ஒரு சூஃபி மியூஸிக். முதல்முறையா இப்படி ஒரு சான்ஸ். பார்க்கலாம் நமக்குக் கிடைக்குதான்னு..........



Friday, February 04, 2011

மோகன வீணையைப் பார்க்கலாமா?

சென்னை இசைவிழாவைக் கொஞ்சம் பார்த்து ரசித்துத் திரும்பிவந்த மயக்கம் தீருமுன்னே இங்கே இசைவிழான்னு தினசரியில் ஒரு விளம்பரம்,. ஒன்பது மாசமா தினசரி வாங்குனதுக்கு இன்னிக்குத்தான் பயன்.


சண்டிகரில் (யூத்துகளுக்கு) இசைவிழா

மூணு நிகழ்ச்சிகள் வரிசை கட்டி நிக்குது. விஸ்வ மோஹன் வாசிக்கப் போறார். அவர் படத்தையும் போட்டுருந்தாங்க. அட! இவரா! நாலைஞ்சு நாளுக்கு முன் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் மடியில் கிதாரைப் போட்டுக்கிட்டு வாசிச்சவராச்சே! ஆள் கூட பார்க்க அசப்பில் சினிமாக்களில், விளம்பரங்களில் 'அந்த பணக்கார அப்பா' வேஷம் கட்டும் நடிகர் போல இருப்பார்.

தினசரி விளம்பரத்தில் இருந்த இமெயில் ஐடிக்கு ஒரு மெயில் தட்டி விட்டேன். நிகழ்ச்சிக்கு வரணும். டிக்கெட்டு எங்கே கிடைக்குமுன்னு. பழம் நழுவி அப்படியே 'தடக்'ன்னு பாலில் விழுந்துச்சு. இலவசமாம். 'கிளம்பி வா'ன்னாங்க டாக்டர் சகுந்தலா லவசா. உள்ளூர் டாக்டரம்மா.
மாலை ஆறரைக்கு நிகழ்ச்சி. இம்டெக் ஆடிட்டோரியம். சண்டிகர் செக்டர் 39 லே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மைக்ரோபயல் டெக்னாலஜி Institute of Microbial Technology (IMTECH) ( CSIR முழு செக்டரையும் வளைச்சுப் போட்டு வச்சுருக்கு. 47 ஏக்கர்!!) அழகான கட்டிடங்களில் அருமையா இருக்கு. மாணவ மாணவிகளை உதவிக்கு வச்சுக்கிட்டு டாக்டர் சகுந்தலா எல்லாம் ஒழுங்குபடுத்திக்கிட்டு இருந்தாங்க. சின்னதா அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருக்கைகளில் போய் உக்கார்ந்தோம். சகுந்தலா, அபிமன்யூன்னு கழுத்தில் தொங்கும் பெயர்களைப் பார்த்ததும் என்னடா இது... நாடகத்தனமா எல்லோருக்கும் பேர் வச்சுருக்காங்களோ.... மற்றவர்கள் பெயரை உத்துப் பார்த்தால் வாலண்டியர்னு இருந்துச்சு:-)))))

டெல்லியில் இருந்து வரும் ப்ளைட் தாமதம். காத்திருந்தோம். நேத்து கோபாலும் இதே ஃப்ளைட்டில்தான் வந்தார். தினம் இந்த ப்ளைட் இதே கதைதான்:( அதுவரை மக்களுக்குப் பொழுது போகட்டுமேன்னு SPIC MACAY டாக்குமெண்ட்ரி போட்டுவிட்டுருந்தாங்க. நம்ம டி.கே.பட்டமாள் அவர்களைப் பார்த்ததும் மனசுக்கு குஷி. இதன் ஸ்தாபகர் கிரன் சேத். 1977 இல் டெல்லியில் ஆரம்பிச்சுருக்காங்க. இந்திய பாரம்பரிய இசை, கலை & கலாச்சாரங்களைப்பற்றி நம்ம இளைஞர்களுக்கு உணர்த்த ஆரம்பிச்ச சங்கம் Society for promotion of Indian classical Music And Culture amongst Youth
ஆஹா.... அருமையா ஐடியாவா இருக்கேன்னு நம்ம ICCR (Indian council for Cultural relations) கூட்டு சேர்ந்து ஆதரவு கொடுத்துக்கிட்டு இருக்கு.

பண்டிட் விஸ்வ மோஹன் பட். ( Pt. Viswa Mohan Bhatt) பண்டிட் ரவிஷங்கரின் சிஷ்யப்பிள்ளை. நரம்பு வாத்தியங்களில் பரிசோதனைன்னு ஆரம்பிச்சுக் கடைசியில் ' ஹவாயன் கிடார்' இருக்கு பாருங்க அதில் இன்னும் 14 கூடுதல் கம்பிகளைச் சேர்த்து தன் கண்டுபிடிப்பா ஒரு இசைக்கருவியை உண்டாக்கிக்கிட்டார் இந்த புதுமையான இசைக்கருவியை. கைப்பிடிக்குப் பக்கத்தில் வீணையில் இருப்பது போல சின்னதா ஒரு குடம். நல்லாத்தான் உக்காந்து யோசிச்சு இருக்கார்!!!! மோஹன் கண்டுபிடிச்சது மோஹன வீணை! குழந்தையைப்போல மடியில் போட்டுக்கிட்டு ரெண்டு கைகளும் மேற்புறமாவே வச்சு வாசிக்கிறார்.

இந்த உருவாக்கம் 1967 வருசம். கடந்த 43 வருசமா கச்சேரிகள் ஏராளம். பல வெளிநாடுகளில் போய் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கார். 1970 இல் 'சூர் மணி' (Sur Mani) என்ற முதல் பட்டம். அதுக்குப்பிறகு 17 முறை வெவ்வேற ஊர்களில் நாடுகளில் வெவ்வேற பட்டங்கள் வாங்கிக் குவிச்சாச்சு. முக்கியமாச் சொல்ல வேண்டியது கிராமி அவார்டும், பத்மஸ்ரீயும்.

ரெண்டு பள்ளிகூடங்களில் இருந்து மாணவர்கள் கூட்டமா வந்து அரங்கை நிறைச்சாங்க.

"ஆடியன்ஸுக்காகவா?"

"ஆமாம். சபை நிறைஞ்சாத்தானே நிகழ்ச்சி கொடுக்கறவங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும். கூட்டம் முக்கியம். நேத்து நீங்க டெல்லி ஏர்ப்போர்ட்லே கழகக்கண்மணிகள் கூட்டம் கருப்பு சிவப்பு கட்சிக்கொடியோடு குழுமி இருந்தாங்கன்னு சொன்னீங்கல்லே? வரவேற்க செஞ்ச ஏற்பாடு. அப்படி இல்லைன்னா 'முதல்வர்' நொந்துறமாட்டாரா? வாடகைக்குன்னாலுமே.........கூட்டம் அதி முக்கியம். நார்த் இண்டியாவுலே பிரியாணி நல்லாவே இருக்கும். இல்லை?"

" ஓ..... எதுக்கு வந்தாராம் திடீர்ன்னு? முக்கிய விஷயமா? "

"இல்லையா பின்னே? ரொம்ப முக்கியமான விஷயம் இல்லைன்னா வருவாரா? தொகுதிப் பங்கீடு பத்தி கேட்டுக்கிட்டுப் போக வந்துருக்காரு"
பண்டிட்ஜி ஆரஞ்சு குர்தாவும் கழுத்தில் மின்னும் ஸ்படிக மாலையுமா ( இது தங்கமுன்னு கோபால் சாதிச்சார். பாவம். தங்கம் நினைவில்லை போல! நாளைக்கு ஒரு நகைக்கடைக்குக் கூட்டிட்டுப்போய் காமிக்கணும்.அப்படியே தனிஷ்கில் எதாவது........) அவசர அவசரமா ஆறே முக்காலுக்கு வந்து சேர்ந்தார். பின்னாலேயே அவருடைய 'வீணை'வந்து சேர்ந்துச்சு. சின்னதா இருந்த பொட்டியைத் திறந்து 'பௌலிங் பால்' போல ஒன்னு எடுத்து அந்த கிடாரில் இணைச்சதும் வீணை தயார்!

ட்யூன் செய்ய ஆரம்பிச்ச பதினைஞ்சாவது நிமிசம் ஓடி வந்தார் பண்டிட் ராம்குமார் மிஷ்ரா. தப்லாக்காரர். உள்நாடு & வெளிநாடுன்னு ஏகப்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர். இந்த வருசம் கிராமி அவார்ட் வாங்கி இருக்கார். பனாரஸ் சொந்த ஊர். சின்ன ஸூட்கேஸில் இருந்து தப்லாக்களும் பிரிமணைகளும் வெளியில் வந்தன.
இந்த வருச விழா சமீபத்தில் மறைந்த திரு பீம்ஸென் ஜோஷி அவர்களுக்கு சமர்ப்பணம் என்பதால் அவருடைய படத்தை மேடையில் வச்சுருந்தாங்க. மலர்தூவி Mile sur mera tumhaaraa to sur bane hamaaraa பின்னணியில் ஒலிக்க
வழிபாடு செஞ்சு நிகழ்ச்சி ஆரம்பமாச்சு.

ராகம் ஸ்ரீரஞ்சனியும் மதுவந்தியும் கலந்து இவரே உண்டாக்குன புது ராகமான விஸ்வரஞ்சனியில் முதல் ஐட்டம். (கொஞ்சம் வலையேத்தி இருக்கேன். கேளுங்க)

அப்புறம் அவரே ஒரு பாடலைப் பாடிக் காட்டி எங்களையும் அவரோடு சேர்ந்து பாடச்சொன்னார். ராஜஸ்தானி நாட்டுப்புறப்பாடல் வகையாம். 'ஆவோஜி.....பதாரோ மாரி தேஷ்...' சின்னதா ஒரு ஹரி பஜன், கடைசியா அவரோட தாயார் பாடும் தாலாட்டுன்னு கச்சிதமா எல்லாம் ஒன்னேகால் மணி நேரத்துக்குள்ளே அடங்கிருச்சு.
கேள்வி நேரம் ஆரம்பமாச்சு நமக்கு நேரம் ஆகிருச்சுன்னு கிளம்பி வந்துட்டோம். எனக்கும் ஒரு கேள்வி இருந்துச்சுதான்.............. அது தங்கமா கிறிஸ்டலான்னு............. :-)

PIN குறிப்பு: புது வீணைக் கண்டுபிடிப்புகளில் ரஞ்சன் வீணைன்னு ஒன்னு இருக்கு. பார்க்கலாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குதான்னு!