Monday, February 07, 2011

குழலூதி... மனமெல்லாம்..... கொள்ளை

மறு நாள் அதே இடம் அதே நேரம். அதே இருக்கைகள். டாக்டர் சகுந்தலாவைப் பார்த்துச் சின்ன தலை அசைப்பு. அதான் ரெகுலர் கஸ்டமரா ஆகிட்டோமுல்லெ? காலையில் கணினி திறந்தப்பயே அவுங்க மடல்கள் காத்து நின்னது. தினசரியில் ரெண்டு நாள்தான் விளம்பரம் இருக்கு. ஆனால் மொத்தம் 12 நாட்கள் நிகழ்ச்சிகள் இருக்கு. விட்டுடாதேன்னு அனுப்பி இருக்காங்க. நம்ம ரசிப்பு இவ்வளவு தூரமா பரவிருச்சு!!!!!

இன்னிக்குக் குழலிசை. பண்டிட் ஹரிப்ரஸாத் சௌராஸியா. (Pt. Hariprasad Chaurasia )இவருடைய ஸீடிகள் வீட்டுலே இருக்குன்னாலும் நேரில் பார்க்கவும் கிடைச்சதே! 73 வயசு. கைகளில் ரொம்ப லேசா ஒரு நடுக்கம். நம்மை மாதிரி மூட்டுவலி இருக்கு போல:( மேடையின் முன்னால் வந்து கால்களைத் தொங்கப்போட்டுக்கிட்டு உக்கார்ந்தார். அழகான ஒரு சிஷ்யப்பொண்ணு (பெயர் தேவப்ரியா) கூடவே வந்து உக்கார்ந்தாங்க. தப்லாவுக்கு பண்டிட் அனுதோஷ் திகாரியா. (Anutosh Deghariya)
வீட்டுலே நம்ம அப்பூப்பன்மார்கூட இருப்பதுபோல் ஒரு உணர்வு. அவரும் குடும்பத்துலே இருந்து வாசிக்கும் உணர்வு வருதுன்னு சொன்னார். த ஃபீலிங்ஸ் ஆர் ம்யூச்சுவல்! குழந்தைகளை சங்கீதம் கேட்கவைக்கணும். பாடவருதோ இல்லையோ காதாலே கேக்கணும். குழந்தைகள் பிறந்ததும் முதலில் கேட்பது தாயின் தாலாட்டுதானேன்னார். உண்மைதான். விருந்தாவன் என்ற பெயரில் மும்பையில் ஒரு குருகுலம் நடத்தி ஏகப்பட்டக் குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி கொடுக்கறாராம். ஆச்சு எட்டு வருசங்கள். இப்போ ஒரிஸ்ஸாவிலும் ஒரு குருகுலம் ஆரம்பமாகி இருக்காம்.
இவரோட சொந்த ஊர் அலஹாபாத். அம்மாவை நாலுவயசாகும்போதே இழந்துட்டார்:(. அப்பா ஒரு மல்யுத்த வீரர். அவர் மகனை மல்யுத்த வீரனாக ஆக்கணுமுன்னு பயிற்சி கொடுத்துக்கிட்டே இருக்கார். 15 வயசானபோது பக்கத்துவீட்டுலே இருந்த பாடகர் பண்டிட் ராஜாராம் அவர்களிடம் பாட்டு கத்துக்கிட்டு இருந்துருக்கார். அப்புறம்தான் புல்லாங்குழல் மேல் ஒரு ஆசையும் ஈர்ப்பும் வந்து பண்டிட் போலாநாத் ப்ரசன்னா அவர்களிடம் குழலூதக்கத்துக்கிட்டார். இது எல்லாமே அப்பாவுக்குத் தெரியாமலேயே நடந்துக்கிட்டு இருக்கு. அப்பாகூடவே மல்யுத்தப்பயிற்சிக்குப் போவார். அப்போ சண்டைக்காக மூச்சை அடக்கிப்பிடிச்சதெல்லாம் இவருக்கு மூச்சைப்
பிடிச்சுக் குழலூத நல்லாவே பயன்பட்டு இருக்கு. அப்பக் கிடைச்ச பயிற்சியாலேதான் இந்த வயசிலும் என்னாலே வாசிக்க முடியுதுன்றார்.
வாங்கிய விருதுகளை அடுக்கினா பதிவு ரொம்ப நீண்டு போயிரும்! முக்கியமானவைகள் கணக்கில் 1992 இல் பத்ம பூஷன், 2000 தில் பத்ம விபூஷண். ம்யூஸிக் ஆல்பங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை.

முதலில் பண்டிட் பீம்ஸென் ஜோஷி மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமா ஒரு ராக ஆலாபனை. (என்ன ராகமுன்னு தெரியலை. க்கும்.... தெரிஞ்சுட்டாலும்.........) அடுத்து ஹம்ஸத்வனியில் 'வாதாபி கணபதீம் பஜேஹம் நம்மை நிமிர்ந்து உக்கார வச்சது. முத்துஸ்வாமி தீக்ஷதர் பாட்டாச்சே!

அடுத்து ஒரு மலைநாட்டு இசை. பஹாடி கீத். குருவும் சிஷ்யையுமா ரொம்ப அனுபவிச்சு வாசிச்சாங்க. அப்படியே மனசைச் சொக்க வச்சது. கண்ணன் மாடு மேய்ச்சுக்கிட்டு இருந்த காலத்தில் இப்படித்தான் வாசிச்சுக்கிட்டு இருந்துருப்பானோ!!!!
அரங்கம் முழுசும் 'முன்னாள் யூத்'களால் நிரம்பி வழிஞ்சது. சின்னப் பிள்ளைகளையும் இசை படிப்பவர்களையும் மேடையிலேயே ஒரு பக்கம் உக்கார வச்சுருந்தாங்க. அதுலே மூணு சின்னப்பிள்ளைகளைக் கூப்பிட்டுப் பக்கத்துலே உக்காரவச்சுக் குடிக்கத் தண்ணி எல்லாம் கொடுத்து ஆளுக்கொரு பாட்டு பாடுங்கன்னு பாடவச்சார். முன்னாலேயே சினிமா பாட்டு வேணாமுன்னு சொல்லிட்டதால் பசங்க கொஞ்ச நேரம் முழிச்சுக்கிட்டு இருந்து அப்புறம் நல்லாவே பாடிட்டாங்க. பள்ளிக்கூடத்துலே சொல்லித் தந்த ஆங்கிலப்பாடலை (கறுப்பு உடை) முரளிதர் பஜன் ( க்ரே ஜாக்கெட்) மா சரஸ்வதி ஷாரதா (சிகப்பு உடை) இப்படி மூணு பேரும் பாடி அசத்திட்டாங்க.
கேள்வி நேரம் ஆரம்பிச்சது. எழுந்து வர முடியாதபடி நடக்க இடைவெளி இல்லாம தரையெங்கும் மக்கள்ஸ். நம்மாட்கள் கேள்வி கேக்க அசரமாட்டாங்கன்னு ரொம்பவே புரிஞ்சு போச்சு. கேள்விக்கு முன்னுரையா அஞ்சு நிமிஷம் பேசறாங்கப்பா!!!! பேச்சோ பேச்சு! அதான் இவ்வளோ செல்ஃபோன் விக்குது:-))))))
இன்றைய முக்கிய விருந்தினரா பாட்டியாலா மகாராஜா வந்துருந்தார் ராணியுடன். இசைக் கலைஞருக்கு மாலை மரியாதைகள் ஆச்சு. ராஜா பேச ஆரம்பிக்குமுன் நாங்கள் 'எஸ்' ஆனோம். நடுவில் வந்தால் மரியாதையா இருக்குமா?

நேத்து சிதார். இன்னிக்கு செல்லோ. தினமும் போக முடியுதா? நாளைக்கு நம்ம ஸஷாங் சுப்ரமணியன் குழலிசை. அதுவும் மத்தியானம் 4 மணிக்கு. நிகழ்ச்சிகளை 'கீழே போட்டுருக்கு' பாருங்க. எது கிடைக்கணுமோ அது கிடைக்கட்டுமுன்னு இருந்தேன்.

கிடைச்சது. எல்லாம் அதே அதே ஆனால் நேரம் மட்டும் மத்தியானம் நாலு மணி. ஏற்கெனவே கர்னாடக சங்கீதமுன்னா வடக்கிகளுக்குக் கொஞ்சம் இதுதான். அதிலும் வெள்ளிக்கிழமை நாலு மணி. யாரும் வேலையை விட்டே வந்துருக்கமாட்டாங்க:( நம்ம சங்கீதத்துக்கு நாமே ஆதரவு கொடுக்கலைன்னா எப்படின்னு நாங்க அடிச்சுப்புடிச்சு ஓடுனோம். அரங்கமே காலி. எல்லா இருக்கைகளும் நமக்கே! யாரும் வரலைன்னா என்ன கதின்னு மனம் பதைபதைச்சுக்கிட்டே இருந்துச்சு. ஆர்கனைஸர் கூட ரொம்ப நேரம் கழிச்சுத்தான் வந்து மேடை அலங்காரங்களைச் சரி செஞ்சாங்க.

இம்டெக்லே வகுப்பு முடிஞ்சு கொஞ்சம் ஸ்டூடண்ட்ஸ் வந்து சேர்ந்து என் மனசில் பாலை வார்த்தாங்க. ஷஷாங்கும் அவர் கூடவே ஜெயசந்திர ராவ் அவர்களும் வந்து சேர்ந்தாங்க. கூடவே குழல்கள் அடங்கிய பையும் மிருதங்கமும். ரொம்பவும் தாமதிக்காம சட்னு ஆரம்பம் ஆச்சு. பூர்வி கல்யாணியில் ஆலாபனை ஆச்சு அப்புறம் விஸ்தாரமா இதையே முக்காமணி வாசிச்சார். தடதடன்னு ஷதாப்தி எக்ஸ்ப்ரெஸ் வேகம் கடைசியில். அடுத்து கிருஷ்ணா நீ பேகனே தொடர்ந்து ஒரு பஜன்.
எதிர்பார்ப்பு அதிகமானதாலோ என்னவோ, எனக்கு நிகழ்ச்சி ரொம்ப சுமாராத்தான் இருந்துச்சு. சண்டிகர் நியூஸ்லைனில் மனசை அப்படியே சிறகடிச்சுப் பறக்க வச்ச வாசிப்புன்னு ரெண்டு உள்ளூர் மாணவர்கள் சொன்னதாப் போட்டுருக்கு.

ரமா வைத்தியநாதனின் பரதம். சனிக்கிழமையாப் போனது சந்தோஷம். மொஹாலியில் இருக்கும் ஷிவாலிக் பப்ளிக் ஸ்கூல். இசைவிழா நிகழ்ச்சிகளை சண்டிகரின் வெவ்வேற பள்ளிக்கூடங்களில் வச்சுருக்காங்க.
நிகழ்ச்ச்சிக்குப் பாட்டு இந்து நாயர். மிருதங்கம் அருண் குமார். நட்டுவாங்கம் சிவகுமார். இவுங்க எல்லோருமே தில்லி மக்கள்ஸ்.
பரத...... என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்து வடக்கர்களுக்கு விளக்கிய ரமாவின், அஞ்சலியில் ஒரு மயில் நடந்துவந்து ஆடுச்சு பாருங்க........அற்புதம். அடுத்து முத்திரைகளைபற்றி ஒரு விளக்கம். அஞ்சு விரல்களில் என்னென்ன மாதிரி எதையெதையெல்லாம்னு படபடன்னு சொல்லிச் செஞ்சு காமிச்சது நல்லாவே இருந்துச்சு. தில்லி ஏர்போர்ட்லே பார்த்த முத்திரைகள்தான் எனக்கு உடனே நினைவு வந்துச்சு. நவரச கிருஷ்ணா என்று ஒரு அயிட்டம் செஞ்சாங்க. கண்ணன் சிறு குழந்தையா இருந்தப்ப அம்மா பறவைகள் மான்கள் எல்லாம் காட்டிச் சோறு ஊட்டும் காட்சி அப்படியே கண் முன்னால். பதினாலு வயது இளைஞனாக மதுரா நகருக்குள் நுழையறான். கண்டவர் கண்களையெல்லாம் கட்டிப்போடும் அழகு, கம்பீரம். கடைசியில் கம்ஸனைக் கொல்லுதல் யமுனை நதிக்கரையில் வந்து கைகால் முகம் கழுவி விஸ்ராந்தியாக ஓய்வெடுத்தல் இப்படி ஸீன் பை ஸீன் நம்ம மனதை அப்படியே சுருட்டி எடுத்துக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும்.
வந்தேமாதரம் பாடலுக்கு அபிநயம் அப்புறம் தில்லானா . ஒரு மணி நேரத்துலே நிகழ்ச்சி கச்சிதமா முடிஞ்சது. ஆரம்ப நடனத்துலே மணிரத்தினம் பட ஷூட்டிங்லே இருந்தோம். அப்படி ஒரு இருட்டு. விளக்கைப் போடலாமுன்னா....எது எங்கேன்னு கூடத் தெரியலை. மைக் செட்டைச் சரி பண்ணிக் கொடுத்துட்டு எலெக்ட்ரீஷியன் காணாமப் போயிருந்தார். செல்லடிச்சு அவரைப் புடிச்சாங்க.
திரும்பி வந்து சரி செய்யும்வரை பொறுமையா மேடையின் ஒரு பக்கம் காத்திருந்ததைச் சொல்லணும். அழறபிள்ளைதான் பால் குடிக்கும்! இத்தனைக்கும் அவுங்க வலைப்பக்கத்துலேயே அவுங்க நடனத்துக்குத் தேவையான மேடை, ஒலி ஒளி அமைப்பு எப்படியெல்லாம் இருக்கணுமுன்னு விலாவரியாப் போட்டு வச்சுருக்காங்களே, இங்கத்து ஆட்களுக்கு இதைச் சொல்லாம இருந்துருப்பாங்களா என்ன?


நம்ம நாட்டுக்கே உரித்தான அலட்சியம் அங்கங்கே எட்டிப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கு என்பது ஒரு சோகம்:(

'சிம்ரன் மாதிரி இருக்காங்கல்லே?' கோபால்.

ஆமாம்ன்னாலும் உடனே ஒத்துக்க முடியாதுல்லே? மறுநாள் 'நீங்க சொன்னது சரி. கொஞ்சம் சிம்ரன் சாயல் இருக்கு'ன்னு சொன்னேன்.


இன்னிக்கு மாலை கவாலி நிகழ்ச்சி ஒன்னு இருக்கு. கடைசிநாள் ஒரு சூஃபி மியூஸிக். முதல்முறையா இப்படி ஒரு சான்ஸ். பார்க்கலாம் நமக்குக் கிடைக்குதான்னு..........



Friday, February 04, 2011

மோகன வீணையைப் பார்க்கலாமா?

சென்னை இசைவிழாவைக் கொஞ்சம் பார்த்து ரசித்துத் திரும்பிவந்த மயக்கம் தீருமுன்னே இங்கே இசைவிழான்னு தினசரியில் ஒரு விளம்பரம்,. ஒன்பது மாசமா தினசரி வாங்குனதுக்கு இன்னிக்குத்தான் பயன்.


சண்டிகரில் (யூத்துகளுக்கு) இசைவிழா

மூணு நிகழ்ச்சிகள் வரிசை கட்டி நிக்குது. விஸ்வ மோஹன் வாசிக்கப் போறார். அவர் படத்தையும் போட்டுருந்தாங்க. அட! இவரா! நாலைஞ்சு நாளுக்கு முன் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் மடியில் கிதாரைப் போட்டுக்கிட்டு வாசிச்சவராச்சே! ஆள் கூட பார்க்க அசப்பில் சினிமாக்களில், விளம்பரங்களில் 'அந்த பணக்கார அப்பா' வேஷம் கட்டும் நடிகர் போல இருப்பார்.

தினசரி விளம்பரத்தில் இருந்த இமெயில் ஐடிக்கு ஒரு மெயில் தட்டி விட்டேன். நிகழ்ச்சிக்கு வரணும். டிக்கெட்டு எங்கே கிடைக்குமுன்னு. பழம் நழுவி அப்படியே 'தடக்'ன்னு பாலில் விழுந்துச்சு. இலவசமாம். 'கிளம்பி வா'ன்னாங்க டாக்டர் சகுந்தலா லவசா. உள்ளூர் டாக்டரம்மா.
மாலை ஆறரைக்கு நிகழ்ச்சி. இம்டெக் ஆடிட்டோரியம். சண்டிகர் செக்டர் 39 லே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மைக்ரோபயல் டெக்னாலஜி Institute of Microbial Technology (IMTECH) ( CSIR முழு செக்டரையும் வளைச்சுப் போட்டு வச்சுருக்கு. 47 ஏக்கர்!!) அழகான கட்டிடங்களில் அருமையா இருக்கு. மாணவ மாணவிகளை உதவிக்கு வச்சுக்கிட்டு டாக்டர் சகுந்தலா எல்லாம் ஒழுங்குபடுத்திக்கிட்டு இருந்தாங்க. சின்னதா அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருக்கைகளில் போய் உக்கார்ந்தோம். சகுந்தலா, அபிமன்யூன்னு கழுத்தில் தொங்கும் பெயர்களைப் பார்த்ததும் என்னடா இது... நாடகத்தனமா எல்லோருக்கும் பேர் வச்சுருக்காங்களோ.... மற்றவர்கள் பெயரை உத்துப் பார்த்தால் வாலண்டியர்னு இருந்துச்சு:-)))))

டெல்லியில் இருந்து வரும் ப்ளைட் தாமதம். காத்திருந்தோம். நேத்து கோபாலும் இதே ஃப்ளைட்டில்தான் வந்தார். தினம் இந்த ப்ளைட் இதே கதைதான்:( அதுவரை மக்களுக்குப் பொழுது போகட்டுமேன்னு SPIC MACAY டாக்குமெண்ட்ரி போட்டுவிட்டுருந்தாங்க. நம்ம டி.கே.பட்டமாள் அவர்களைப் பார்த்ததும் மனசுக்கு குஷி. இதன் ஸ்தாபகர் கிரன் சேத். 1977 இல் டெல்லியில் ஆரம்பிச்சுருக்காங்க. இந்திய பாரம்பரிய இசை, கலை & கலாச்சாரங்களைப்பற்றி நம்ம இளைஞர்களுக்கு உணர்த்த ஆரம்பிச்ச சங்கம் Society for promotion of Indian classical Music And Culture amongst Youth
ஆஹா.... அருமையா ஐடியாவா இருக்கேன்னு நம்ம ICCR (Indian council for Cultural relations) கூட்டு சேர்ந்து ஆதரவு கொடுத்துக்கிட்டு இருக்கு.

பண்டிட் விஸ்வ மோஹன் பட். ( Pt. Viswa Mohan Bhatt) பண்டிட் ரவிஷங்கரின் சிஷ்யப்பிள்ளை. நரம்பு வாத்தியங்களில் பரிசோதனைன்னு ஆரம்பிச்சுக் கடைசியில் ' ஹவாயன் கிடார்' இருக்கு பாருங்க அதில் இன்னும் 14 கூடுதல் கம்பிகளைச் சேர்த்து தன் கண்டுபிடிப்பா ஒரு இசைக்கருவியை உண்டாக்கிக்கிட்டார் இந்த புதுமையான இசைக்கருவியை. கைப்பிடிக்குப் பக்கத்தில் வீணையில் இருப்பது போல சின்னதா ஒரு குடம். நல்லாத்தான் உக்காந்து யோசிச்சு இருக்கார்!!!! மோஹன் கண்டுபிடிச்சது மோஹன வீணை! குழந்தையைப்போல மடியில் போட்டுக்கிட்டு ரெண்டு கைகளும் மேற்புறமாவே வச்சு வாசிக்கிறார்.

இந்த உருவாக்கம் 1967 வருசம். கடந்த 43 வருசமா கச்சேரிகள் ஏராளம். பல வெளிநாடுகளில் போய் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கார். 1970 இல் 'சூர் மணி' (Sur Mani) என்ற முதல் பட்டம். அதுக்குப்பிறகு 17 முறை வெவ்வேற ஊர்களில் நாடுகளில் வெவ்வேற பட்டங்கள் வாங்கிக் குவிச்சாச்சு. முக்கியமாச் சொல்ல வேண்டியது கிராமி அவார்டும், பத்மஸ்ரீயும்.

ரெண்டு பள்ளிகூடங்களில் இருந்து மாணவர்கள் கூட்டமா வந்து அரங்கை நிறைச்சாங்க.

"ஆடியன்ஸுக்காகவா?"

"ஆமாம். சபை நிறைஞ்சாத்தானே நிகழ்ச்சி கொடுக்கறவங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும். கூட்டம் முக்கியம். நேத்து நீங்க டெல்லி ஏர்ப்போர்ட்லே கழகக்கண்மணிகள் கூட்டம் கருப்பு சிவப்பு கட்சிக்கொடியோடு குழுமி இருந்தாங்கன்னு சொன்னீங்கல்லே? வரவேற்க செஞ்ச ஏற்பாடு. அப்படி இல்லைன்னா 'முதல்வர்' நொந்துறமாட்டாரா? வாடகைக்குன்னாலுமே.........கூட்டம் அதி முக்கியம். நார்த் இண்டியாவுலே பிரியாணி நல்லாவே இருக்கும். இல்லை?"

" ஓ..... எதுக்கு வந்தாராம் திடீர்ன்னு? முக்கிய விஷயமா? "

"இல்லையா பின்னே? ரொம்ப முக்கியமான விஷயம் இல்லைன்னா வருவாரா? தொகுதிப் பங்கீடு பத்தி கேட்டுக்கிட்டுப் போக வந்துருக்காரு"
பண்டிட்ஜி ஆரஞ்சு குர்தாவும் கழுத்தில் மின்னும் ஸ்படிக மாலையுமா ( இது தங்கமுன்னு கோபால் சாதிச்சார். பாவம். தங்கம் நினைவில்லை போல! நாளைக்கு ஒரு நகைக்கடைக்குக் கூட்டிட்டுப்போய் காமிக்கணும்.அப்படியே தனிஷ்கில் எதாவது........) அவசர அவசரமா ஆறே முக்காலுக்கு வந்து சேர்ந்தார். பின்னாலேயே அவருடைய 'வீணை'வந்து சேர்ந்துச்சு. சின்னதா இருந்த பொட்டியைத் திறந்து 'பௌலிங் பால்' போல ஒன்னு எடுத்து அந்த கிடாரில் இணைச்சதும் வீணை தயார்!

ட்யூன் செய்ய ஆரம்பிச்ச பதினைஞ்சாவது நிமிசம் ஓடி வந்தார் பண்டிட் ராம்குமார் மிஷ்ரா. தப்லாக்காரர். உள்நாடு & வெளிநாடுன்னு ஏகப்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர். இந்த வருசம் கிராமி அவார்ட் வாங்கி இருக்கார். பனாரஸ் சொந்த ஊர். சின்ன ஸூட்கேஸில் இருந்து தப்லாக்களும் பிரிமணைகளும் வெளியில் வந்தன.
இந்த வருச விழா சமீபத்தில் மறைந்த திரு பீம்ஸென் ஜோஷி அவர்களுக்கு சமர்ப்பணம் என்பதால் அவருடைய படத்தை மேடையில் வச்சுருந்தாங்க. மலர்தூவி Mile sur mera tumhaaraa to sur bane hamaaraa பின்னணியில் ஒலிக்க
வழிபாடு செஞ்சு நிகழ்ச்சி ஆரம்பமாச்சு.

ராகம் ஸ்ரீரஞ்சனியும் மதுவந்தியும் கலந்து இவரே உண்டாக்குன புது ராகமான விஸ்வரஞ்சனியில் முதல் ஐட்டம். (கொஞ்சம் வலையேத்தி இருக்கேன். கேளுங்க)

அப்புறம் அவரே ஒரு பாடலைப் பாடிக் காட்டி எங்களையும் அவரோடு சேர்ந்து பாடச்சொன்னார். ராஜஸ்தானி நாட்டுப்புறப்பாடல் வகையாம். 'ஆவோஜி.....பதாரோ மாரி தேஷ்...' சின்னதா ஒரு ஹரி பஜன், கடைசியா அவரோட தாயார் பாடும் தாலாட்டுன்னு கச்சிதமா எல்லாம் ஒன்னேகால் மணி நேரத்துக்குள்ளே அடங்கிருச்சு.
கேள்வி நேரம் ஆரம்பமாச்சு நமக்கு நேரம் ஆகிருச்சுன்னு கிளம்பி வந்துட்டோம். எனக்கும் ஒரு கேள்வி இருந்துச்சுதான்.............. அது தங்கமா கிறிஸ்டலான்னு............. :-)

PIN குறிப்பு: புது வீணைக் கண்டுபிடிப்புகளில் ரஞ்சன் வீணைன்னு ஒன்னு இருக்கு. பார்க்கலாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குதான்னு!

Wednesday, February 02, 2011

கேபின் பேகில் புளிக்காய்ச்சல் வேண்டாமே ப்ளீஸ்:-)))))

Bபர்கிட் ரோடைத் தாண்டி நிக்குது வால் பகுதி. நாம் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டே ஆட்டோவில் போறோம். வெங்கடநாராயணா சாலை திரும்பி நேராப் போகும்போது சவுக்கு கட்டைகள் வச்சுக் கட்டுன வரிசைக்குள் மனிதர்கள். வருசப்பிறப்புக்குப் பெருமாளின் பார்வைக்காக நிக்கறாங்க. நேத்து இரவு முழுசும் கோவிலை மூடவே இல்லையாம்.

நமக்கு சனிக்கிழமைப் பெருமாள்தான் எப்பவும் என்றபடியால் வேற எங்கே பார்த்தாலும் சரின்னு சிவா விஷ்ணு கோவிலுக்குப் போய்கிட்டு இருக்கோம். மஹாலக்ஷ்மி தெரு உஸ்மான் சாலை சந்திப்பில் இறங்கி சாலையைக் கடந்தால் கோவில். மணி பத்தாகப் போகுது. ரெண்டு முழம் 'துளசி'யோடு பெருமாளை சேவிச்சாச்சு. தொட்டடுத்த சந்நிதியில் தாயார். எதிரில் தனிச்சந்நிதியில் ஹனுமன். அடுத்து ஸ்ரீ ராமர் அண்ட் கோ. இங்கேயும் வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகம்தான். ஆனாலும் தரிசனம் அஞ்சு நிமிசத்தில் ஆச்சு. பெருமாளுக்கு இடப்புறத்தில் இருக்கும் இடத்தில் யாக குண்டமும் ஆண்டாள் படமும்தான். சின்னதாகவேனும் ஆண்டாளுக்கு ஒரு சந்நிதி கட்டி இருக்கலாமோ? . தனியா வச்சு அடைக்காமல் திறந்த வெளியில் எல்லோரையும் பார்த்தபடி இருப்பதுகூட ஒருவேளை நல்லதாப்போச்சோ?

போனமுறை பார்த்தப்ப, கோவிலில் தரை எல்லாம் பெயர்த்து பளிங்குக்கல் போடும் வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்போ எல்லா வேலைகளும் முடிஞ்சு கோபுரங்கள் புது வர்ணம் அடிச்சு ரொம்ப நல்லா இருக்கு.

ஆண்டாள் இருக்குமிடத்தில் இடப்புறமா முருகனுக்குத் தனிச்சந்நிதி. அப்புறம் அப்பா அம்மாவுக்குத் தனித்தனியா சந்நிதிகள். கடந்து போனால் நவகிரகம். தெருவைப் பார்த்த மாதிரி புள்ளையார் சந்நிதி. நவகிரகத்துக்கு அந்தப் பக்கம் காசி விஸ்வநாதர். விஷ்ணுவுக்கு ஒன்னு, சிவனுக்கு ஒன்னு புள்ளையாருக்கு ஒன்னுன்னு தெருவைப் பார்த்தமாதிரி மூணு வாசல்களும் மூணு சின்னக் கோபுரங்களுமா இருக்கு இந்தக் கோவில். இங்கேயும் ஸ்ரீநிவாசப்பெருமாள்தான் நின்ற கோலம்.. தரிசனம் முடிஞ்சதும் கோபாலுக்கு ஒரு வேஷ்டி வாங்கித்தரலாமேன்னு (புது வருசத்துக்கு ஒரு புதுத்துணி இருக்கட்டுமே) பாண்டி பஸார் ராம்ராஜ் ஷோ ரூம் போனோம்.
அதிகாலை பத்தரை மணிக்கு வாசலில் கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க பக்கத்துக் கடையில்.. ரங்கோலி. கடைக்குள்ளே போனால் ஷர்ட் எல்லாம் மாடியில் இருக்குன்னதும் வேட்டியை விட்டுட்டு சட்டைக்குத் தாவினோம். நல்ல பெரிய கடைதான். ரெண்டரை வருசமா இங்கே இருக்காமே! நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்:( மூணு ஷர்ட் (அதுலே ஒன்னு பட்டு) எனக்கு ஒரு நைட்டி வாங்கியாச்சு. பெண்களுக்கான உடைகள் செக்ஷன், சின்னதா ஒரு மூலையில்!
வெளியே வந்தால் கோலம் அநேகமா முடியும் நிலையில். அழகா இருக்குன்னு பாராட்டிட்டு பக்கத்துலே இருக்கும் நரசூஸ் போய் காப்பிப்பொடி வாங்கிக்கிட்டேன். ஒரு மூணு மாசம் தாங்கும். இப்ப நரசூஸ் இன்ஸ்டண்ட் காஃபி வேற போடறாங்க. அதுலேயும் சின்னப் பாக்கெட்டா ( 50 கிராம்) வெவ்வேற சிக்கிரி அளவில். 30% கூட இருக்கு. ரொம்ப மோசம்:(

உன் ஷாப்பிங் அவ்ளோதானே? இனிமேல் வாங்க ஒன்னும் இல்லைதானே? இப்படியே பலமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கிட்டே இருந்தார் கோபால். யாருக்குத் தெரியும்? திடீர்னு கண்ணுலே பட்டா வாங்கிக்கணும். அது என்னன்னு எனக்கே தெரியாது. இன்ஸ்டண்ட் பதில் கொடுக்க நமக்குத் தெரியாதா:-))))
சரியா ஒரு மணிக்குச் சாப்பாடு. எங்கே? அதே ஞானாம்பிகா! வாணி மஹால். இனிப்புக்கு ரஸகுல்லா. மெனு இங்கே படத்தில்.
சாப்பாட்டை முடிச்சுட்டு இந்த ஆண்டுக்கான முதல் பதிவர் சந்திப்பை பதிவர் வல்லி சிம்ஹன் வீட்டில் நடத்திட்டு, நம்ம கபாலியைக் கண்டுக்கலாமேன்னு போனால்........எள் போட்டால் எண்ணெய் விழுமுன்னு சொல்வாங்க பாருங்க அப்படி ஒரு கூட்டம். நெரிசல். தாங்காதுன்னு அப்படியே ஜகா வாங்கிக்கினோம்.

ஆறு மணிக்கு துயில் வெளியீடு. சரியான நேரத்துக்குக் கட்டிடத்தின் உள்ளே நுழைஞ்சால் , முன்னால் டாக்டர் ருத்ரன். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லிட்டு 'புத்தக வெளியீடு எங்கே'ன்னு கேட்டவரிடம் மாடின்னு கைகாமிச்சு மேலே போனால் ரசிகர்கள் கூட்டத்துடன் எஸ்.ரா. பேசிக்கிட்டு இருக்கார். ரசிகையின் வணக்கம் ஒன்னு. ரெண்டு க்ளிக்ஸ்.

கொஞ்ச நேரத்துலே பரபரன்னு ஹால் நிறைஞ்சுருச்சு. மேடையிலும் நல்ல கூட்டம். நம்ம கிருஷ்ணப்பிரபு வந்து கண்டுக்கிட்டுப் போனார். கவிதாயினி மதுமிதா வந்து பக்கத்துலே உக்கார்ந்தாங்க. வெளியீடு நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சது. வழக்கம்போல் மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை. துயிலின் 'முதல்' பிரதியை இந்திரா பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். அவர் பேச்சு கச்சிதமா இருந்துச்சு. நாவலுக்கு அறிமுக உரையாக சித்ரா ரொம்ப நல்லாப் பேசுனாங்க.
சுத்துமுத்தும் பார்வையை ஓட்டிக்கிட்டு இருந்த கோபால், ஒரு பொன்மொழியைக் கவனிச்சுப் பார்த்துட்டு எனக்கும் காமிச்சார். அட!!!!!!!!!!!!!!!!!!!!!

விழாவை சில பகுதிகளாப் பிரிச்சு நிகழ்ச்சிகளைத் தொகுத்து இருந்தாங்க. இயக்குனர்கள் ஒரு ஏழெட்டுப்பேர் 'பேசி' முடிச்சதும் ஈரோடுலே புத்தகக் கண்காட்சி அமைக்கும் பொறுப்பாளரா இருக்கும் குணசேகரன் பேசி 'முடிச்சதும்' அடுத்த பகுதிக்குச் சின்ன இடைவெளி. நமக்கு நேரமாயிருச்சுன்னு கிளம்பிட்டோம்.

நம்ம பாரதி மணி ஐயாவுடன் நாலு வார்த்தை. எப்ப வந்தீங்கன்னார். விடியக் காலையில் கிளம்பறேன்னேன்.
தெரிஞ்ச முகங்களா நம்ம இவுங்களுக்கு, ஒரு Hi & bye.


விழாவின் மற்ற விவரங்களை 'ச்சும்மா' நம்ம கார்த்திக்கின் பதிவில் இருந்து இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.

எனக்குக் கடைசிவரை இருந்து எஸ்ரா பேச்சைக் கேக்க ஆசைதான். ஆனால் காலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். மறுநாள் நீஈஈஈஈண்ட பகலாக இருக்கப்போகுதேன்னு ............

அரைத்தூக்கத்தோடு குளிச்சு முடிச்சு ரெடியாகும்போது ஃப்ளைட் கேன்ஸலாயிருச்சுன்னார் கோபால். சென்னை விமானநிலையப் பக்கத்தில் போட்டிருக்காம். தொலை பேசலாமுன்னா யாராவது ஃபோனை எடுத்தால்தானே? கிங்ஃபிஷருக்கு போன் அடிச்சா......... இல்லையே சரியான நேரத்துக்குக் கிளம்புதுன்றாங்க. மறுபடி சென்னை விமானநிலையத்தை வலையில் பார்த்தால்............. கேன்சல்டு.. மறுபடி கிங் ஃபிஷரைக் கேட்டால் நேத்து அந்த ஃப்ளைட் கேன்ஸலாச்சுன்றாங்க. நேத்து விவரம் அப்படியே கிடக்கு. இதுபோல முக்கிய விஷயத்தை உடனுக்குடன் அப்டேட் பண்ண வேணாமா? இதை நம்பி தூங்கப்போயிருந்தா என்ன கதி?

அஞ்சு மணிக்கு வண்டி வந்துருச்சு. லோடஸ்ஸில் கணக்கை செட்டில் செஞ்சுட்டு விமானநிலையம் போய்ச் சேர்ந்து அங்கேயே ஒரு காஃபி (யக்) குடிச்சுட்டு செக் இன் பண்ணி உள்ளே போனால் ........... கேபின்பேக் லே இருந்த பருப்புப் பொடி துரோகம் செஞ்சு புளிக் காய்ச்சலைக் காட்டிக்கொடுத்துருச்சு. தூக்கி எல்லாம் எறிய முடியாதுன்னு அந்தப் பெட்டியையும் திரும்பிக் கொண்டுபோய் 'உள்ளே' அனுப்பிட்டு வந்தார்.
டெல்லி வந்து சேர்ந்து அஞ்சு மணி நேரம் தேவுடு காத்து, நாலரை மணி சண்டிகர் ஃப்ளைட்டில் ஏறி வீடு வந்தப்ப மணி ஆறு. டெல்லி விமான நிலையம் எங்கே பார்த்தாலும் அபிநய முத்திரைகளோடு (ராரா.... ) அலங்காரமாத்தான் இருக்கு.

உள்ளே அசப்பில் பார்த்தால் கொஞ்சம் சிங்கை விமானநிலையத்தின் சாயல். நிறைய ட்ராவலேட்டர்ஸ் போட்டு வச்சுருக்காங்க. கிறிஸ்மஸ் & பனிமனிதர்கள் பொம்மை அலங்காரம். எல்லாம் ஓக்கே. கார்பெட்டின் தரம்தான் சரியா இல்லைன்னு கேட் கிட்டே நம்ம பக்கத்துலே உக்கார்ந்துருந்த கொரியன்களுக்கு ஒரே கவலை. தொட்டுத் தொட்டுப் பார்த்து மாய்ஞ்சு போயிட்டாங்க.
அடுத்தமுறை புதுப்பிக்கும்போது நல்லது கிடைக்கட்டுமுன்னு வேண்டிக்கலாமா?

பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!